Tuesday, November 15, 2005

தலைவர்

கொஞ்ச நாளாகவே (வீ.எம் "பாவம் அவரை விட்டுவிடுவோமே" பதிவு போட்டதிலிருந்து) தலைவரைப் (ரஜினிகாந்த் @ சிவாஜி ராவ் கெய்க்வாட்) பற்றி பதிவிடணும்னு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த பதிவு. இந்த பதிவு நம்ம ரஜினி ராம்கியை பனிக்கட்டி மழையில் நனைக்கணும்னோ அல்லது அடுத்த தலைவர் படத்துக்கு (சிவாஜி) முதல் ஷோ டிக்கட் வாங்கணும்னோ எழுதப்பட்டதல்ல. மேலும் இந்த பதிவு எந்தளவிற்கு தேவை, தேவையில்லை, உபயோகமானது, உபயோகமில்லாதது ஆகிய கருத்தாய்வுகளை உங்களது கண்ணோட்டத்திற்கே விட்டு விடுகிறேன். இது என் எண்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவு தான்.

ரஜினி சாரை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிவிட்டதால் கட்டுரையில் ரஜினி என்று ஒருமையிலேயே அழைக்கிறேன். ரசிகன் என்ற தகுதியில் அவரிடம் கேட்காமலேயே அவரிடம் நான் எடுத்துக்கொள்ளும் உரிமை இது.

நான் சிறுவனாக இருந்த பொழுது என் வீட்டினருகே ஒரு அண்ணன் வசித்து வந்தார். பெயர் அந்தோணி. தீவிர ரஜினி ரசிகர். அவரிடம் எப்பொழுது பேசினாலும் ரஜினி ரஜினி ரஜினி தான். "அவன் இப்படி அடிப்பான் அப்படி அடிப்பான் அவன் ஸ்டைலே ஸ்டைலப்பா" ஆகிய புகழாரங்கள் தான் எப்போதும். போதாக்குறைக்கு வீட்டு எதிர்ப்புறமிருக்கும் மின்கம்பத்திலிருந்து முச்சந்தி விநாயகர் கோயில் சுவர் வரை "ரஜினி" தான். எனக்கு அப்போ வயசு எட்டு. அந்தோணி அண்ணன் என்னை விட ஒரு எட்டு வயது மூத்தவர். தளபதி படம் பத்து நாளில் ரிலீஸ் ஆகயிருந்தது. வழக்கம் போல் அந்தோணி அண்ணனின் ப்ரிரிலீஸ் (pre-release) வேலைகளும் ஆரம்பித்தன. தட்டி போர்டு, கலர் பெயிண்டு என மும்முரமானார். சும்மா ஐந்து நாள் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்தார். விளைவு எங்க ஏரியாவுல இருக்கிற தென்னை மரம், பஞ்சாயத்து அடி பம்பு என எல்லா இடங்களிலும் தளபதி என்ற வாசகம்.


அவர்கிட்ட போய் கேட்டேன். எண்ணன்னே வேலை எல்லாம் முடிஞ்சாதுன்னு. ஆமாம்பா முடிஞ்சது ஒரு ரெண்டு நாள் ரெஸ்டெடுத்திட்டு தலைவர் படம் முதல் ஷோ பார்த்துற வேண்டியது தான். "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" அவர் ஆர்வம் எனக்கு தொற்றிக் கொண்டது. என்னைப் பார்த்து சிரித்தவர் சரியென்று சொல்லிவிட்டு தளபதி போஸ்டர் ஒன்றை காண்பித்தார். தளபதி படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட்டிற்காக ரஜினி தலை முடியைக் கொண்டை போட்டிருப்பார் அந்த கெட்டப்பில் இருந்த போஸ்டர். தட்டி போர்டுக்காக வைத்திருந்த பெரிய சைஸ் போஸ்டர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் மனதில் பதித்த முதல் ரஜினி போஸ்டர் அதுதான். அன்றிலிருந்து பசையிடாத போஸ்டர் ஒன்றும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதிலும் ரஜினிதான். அந்தோணி அண்ணன் தந்த ஊக்கம் அடம்பிடித்து அப்பாவுடன் சென்று தளபதி முதல் ஷோ பார்த்தேன். புரியாத விஷயங்களை அப்பா விளக்கினார். இப்படியாக விவரம் தெரிந்து நான் புரிந்து பார்த்த படம் "தளபதி". மகாபாரதக் கதையென்பதால் சீக்கிரமே பிடித்துக் கொண்டேன் போல. அன்றிலிருந்து நான் ரஜினி ரசிகன்.

அன்றைக்கு எனக்கிருந்த மனவளர்ச்சியில் ரஜினி யார்? அவனது பின்புலம் என்ன? நன்றாக நடிப்பானா? என்றெல்லாம் எனக்கு கேட்கத் தெரியவில்லை. அப்பொழுதிருந்து அநேகமாக ரஜினியின் அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறேன். ரஜினி திரையில் வில்லனை அடித்தால் இங்கே எனது உள்மனம் வீறு கொண்டெழும். இந்த மாதிரி உணர்ச்சிகளை திரைப்படம் பார்க்கும் அனைவரும் ஏதேனும் ஒரு வயதில் அனுபவித்திருப்பார்கள். அதே உணர்வு தான் எனக்கும்.
அவ்வப்போது அந்தோணி அண்ணனுடன் போஸ்டர் வேலை அப்படி இப்படியென்று நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

பின்னர் வயது ஏற ஏற பக்குவம் வந்தது. சினிமாவை அலசி ஆராயும் தெளிவும் வந்தது. ஆனால் இந்த பக்குவமும் தெளிவும் மற்ற நடிகர்களின் படங்களிற்கு மட்டும் தான். ரஜினி படங்களை அலசிப்பார்க்க ஆராய என்னால் முடியவில்லை. எனக்கு ஆங்கிலத்திற்கு ABCD போல சினிமாவுக்கு ரஜினி. ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் ஆரம்பிக்கும் இந்த உணர்ச்சி மழை முதல் நாள் முதல் ஷோ படம் முடிந்ததும் குறைந்து விடும். பின்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். இன்று வரை இப்படித்தான் செல்கிறது. ஒவ்வொரு முறை ரஜினி படம் பார்க்கையிலும் அதே பழைய சிந்தனைகள் தான். தன்னிலை உணராமல் என்னை மறந்த நிலையிலேயே இன்றும் ரஜினி படங்களைப் பார்த்து வருகிறேன். இதில் பகுத்தறிவை என்னால் புகுத்த முடியாது. அப்படி புகுத்துகிறேன் என்றால் நான் திரும்பவும் ABCD படிக்க ஆரம்பிக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.

டெல்லியில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவது அரிது. அதனால் பெரும்பாலும் திருட்டு சிடிக்களிலேயே படங்கள் பார்ப்பதுண்டு. (யாரும் போட்டுக்கொடுத்துறாதீங்க சாமி...) சந்திரமுகி ரிலீஸ் ஆகும் பொழுது என்னையும் அறியாமல் ஒருவித ஏமாற்றம் முதல் ஷோ பார்க்கமுடியவில்லையே என்று. ஆனால் தியேட்டருக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டேன். என் ஆசை வீண் போகவில்லை. டெல்லியில் சந்திரமுகி திரையிடப்பட்டது. போய் பார்த்துவிட்டு வந்து நான் எழுதிய பதிவுதான் "ரசிகனின் ஆட்டோகிராஃப்". அன்றும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன் "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" என்று அந்தோணி அண்ணனிடம் கேட்டதை.

தமிழ்மணத்திற்கு வரும் வரை ரஜினி என்பவன் நான் செய்ய முடியாததைத் திரையில் செய்யும் ஒரு பெரிய சக்தி அவ்வளவு தான். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்த பிறகு ரஜினி என்னும் அந்த திரை சக்தியின் சில பரிணாமங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. சந்திரமுகி விமர்சனம் எழுதிய அல்வாசிட்டி அண்ணாவின் வலைப்பதிவை ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். இதெப்படி சாத்தியமாயிற்று. ஒவ்வொரு வலைப்பதிவரும் பார்த்தார் என்றால் எண்ணிக்கை 800ஐத் தாண்டியிருக்க முடியாது. இதில் பகுத்தறிவுவாதிகள் பாதி பேர். (எழுத்தாளர்கள் அல்லவா...). நான் இப்படி சொல்கிறேனே என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் இருந்தாலும் எனக்கு பெரிய புதிராகவே உள்ளது. ஒருவேளை என்னிடம் இருக்கும் அந்த "தளபதி" மனம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது போல.

இன்னொரு பரிணாமம் ரஜினி ராம்கி. என்னால் ரஜினி ராம்கி போல் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு என் ஆளுமை ஒப்பவில்லை (இது தான் பகுத்தறிவு என்று சொல்பவர்களுக்கு வாயில் அவல்). ஆனால் என்று ரஜினி என்பவனுக்கு இத்தனை பெரிய ரசிகர் மன்றம் இருக்கிறதென்று தெரிந்ததோ அதில் இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறதென்று தெரிந்ததோ (பார்க்க http://rajinifans.com/activities/index.asp) அதுவும் ரஜினி ராம்கி போன்ற அன்பர்களால் நடக்கிறதென்று தெரிந்ததோ அன்றே என்னையும் அந்த குழுமத்தில் இணைத்துக் கொண்டேன் (இன்றுவரை அந்த குழுமத்திலிருந்து உபயோகமாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும்). தன்னலமில்லாமல் கட்டப்பட்ட ஒரு வீடு அது. தெரிந்தோ தெரியாமலோ என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.

பி.கு

வீ.எம் பதிவுக்கு நானளித்த பின்னூட்டத்தில் சொன்ன வரிகள் "இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் வேண்டாமென்று யோசிக்கிறான், அமைதி தேடி இமயமலை போறான், இவனிடம் அரசாங்கத்தை கொடுத்தால் "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன? ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன்."

Monday, November 14, 2005

நட்சத்திரம் வாரம் சுபமஸ்து

ஒரு வழியாக நட்சத்திர வாரம் முடிவடைந்து விட்டது. ஆறு பதிவுகள் எழுதியாச்சு. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டாச்சு. எந்த வேலையிலும் ஓய்வு வேணுமில்ல. ஆறு பதிவுகளும் ஓரளவிற்கு நன்றாக இருந்தன என்று நினைக்கிறேன்.

கட்டுரை கவிதை கதை என்று எழுதிடலாம்ணு நினைச்சேன். கதை எழுதுவது எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. எழுதிய ஒரு கதையைப் பதிவிடாமலேயே விட்டு விட்டேன். ரம்யா அக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

நான், எனக்கு வேண்டியவர்கள், சமுதாயம், கடவுள், குடும்ப வாழ்க்கை, என் ஆதர்சன் என்று இந்த வாரம் இனிதே சென்றது. எழுதிய ஆறு பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எனது ஆசிரியரைப் பற்றி எழுதிய பதிவுதான்.

அறிவியல் சார்ந்த ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து தான் ஐன்ஸ்டீனைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதுவும் ரஜினி டி.ராஜ், ரஜினி ராம்கி ஆகியோரால் பாராட்டப்பட்டது. ராஜ் நான் செய்த தவறுகளை அழகாகவும் கண்ணியமாகவும் சுட்டிக் காட்டினார். முதல் முயற்சி என்பதால் சில தவறுகள் வந்து விட்டன. எதிர்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

அடுத்த பதிவு "என் மனைவியின் டைரிக் குறிப்புகள்". ஒரு சிக்கலான பதிவாகையில் இதில் சில சர்ச்சைகளும் இருந்தன. உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே. மெளனராகம் படம் பார்த்த தாக்கத்தில் எழுதியது. அதை ஒரு பின்னூட்டத்திலும் கோடிட்டு எழுதியிருந்தேன். அதற்கு "கல்வெட்டு" தந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததாக அப்துல் ரகுமான் கவிதை. ஒவ்வொரு மனிதனும் தனித்திருக்கும் பொழுது சில மனிதர்களைப் பற்றி எண்ணுவதுண்டு. அப்படி நான் தனித்திருக்கும் பொழுது அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒரு நபர் அப்துல் ரகுமான். நான் நேசிக்கும் ஒரு கவிஞர். எனக்கு ஆதர்சனப் புருஷர். அதனால் அவரது கவிதை ஒன்றை பதிவாக்கினேன்.

அப்படி இப்படி ஒரு வாரம் முடிந்தது. சொன்னது போலவே அழகாகவும் ஆழமாகவும் எழுதினேன் என்று நினைக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிந்த அனைவருக்கும் என் நன்றி.

நான் வலைப்பதிவுலகில் அதிகம் நேசிக்கும் நண்பர்கள் வீ.எம் & வா.மணிகண்டன் இங்கு வராதது வருத்தத்தைத் தந்தாலும் புதிய நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். அதற்காக மகிழ்கிறேன். மேலும் சந்திரவதனா, ரம்யா அக்கா எல்லோரும் என் பதிவுக்கு சுட்டிகளை நிறுவி தங்கள் பதிவினை ஆரம்பித்திருந்தனர். சந்தோஷமளித்த விஷயங்கள்.

நான் வலைப்பதிய ஆரம்பித்தது திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களைப் பார்த்து தான். இது வரையிலும் அவர் என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் என் வலைப்பதிவுகள் தொடரும் வழக்கம் போல உங்கள் ஆதரவுடன்

Saturday, November 12, 2005

அப்துல் ரகுமானும் புத்தகங்களும்

சமீபத்தில் ஒரு ஹைக்கூ படித்தேன்.
"புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்".

யார் எழுதியது என்று தேடிப் பார்த்ததில் கவிஞர் அப்துல் ரகுமான் எழுதியது என்று தெரிய வந்தது. சரி அப்துல் ரகுமானைப் பாராட்டி பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். சூரியனைப் பற்றி ஒரு தீக்குச்சி எழுதலாமா அல்லது எழுததான் முடியுமா? முயற்சியைக் கைவிட்டு விட்டேன். ஆனாலும் மனசு கேக்கல. நாம தான் எழுத கூடாது வேற யாராச்சும் எழுதியிருப்பாங்க அத்த எடுத்து போடலாம்னு நினைச்சேன். "பித்தன்" கவிதைத் தொகுப்பை எடுத்து படிக்கலானேன். ஆனால் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே. அவரைப் பற்றி அவரே இரு கோணங்களில் எழுதியிருந்தார். அநேகமாக எல்லோரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே இந்த பதிவு.

அவர் ஆலாபனை என்றொரு தொகுப்பும், பித்தன் என்றொரு தொகுப்பும் எழுதியிருக்கிறார். ஆலாபனையை நேர்களின் ரசிகன் என்றும் பித்தனை எதிர்களின் உபாசகன் என்றும் கூறியிருக்கிறார். பித்தன் எதனை எல்லாம் முரணாக பார்க்கிறான் என்பதை பித்தன் என்னும் தொகுப்பில் கவிதைகளாக்கியிருக்கிறார்.

உங்களுக்காக ஒரு கவிதை இங்கே. அதிலிருந்து எடுத்தது தான் மேலே சொல்லியிருந்த ஹைக்கூ.

புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

எனக்கென்னவோ முரணாக சொன்னாலும் இன்றைய தேதியில் அதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது. விளைவு பித்தன் எனக்கு சித்தனாகிப் போனான்.

Friday, November 11, 2005

என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். அடிக்கடி எழுதிய கவிதைகளை என்னிடம் படிக்க கொடுப்பார். எனது விமர்சனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். சமீபத்தில் ஒரு கவிதை எழுதி என்னிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள் என்று சொன்னேன். அவருக்கிருந்த தாழ்வு மனப்பான்மையால் அனுப்பாமல் விட்டு விட்டார். வலைப்பூ நண்பர்களுக்காக அவரிடம் அந்த கவிதையைக் கேட்டு வாங்கி இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.

நண்பர் திருமணமானவர். இந்த கவிதை எனக்கென்னவோ கற்பனையில் வந்ததாக படவில்லை. நீங்களும் படித்து விட்டு கருத்துக் கூறுங்கள்.

************************************
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

"எனக்கு திருமணமான பின்பும்
என்னை மனதில் வைத்துக்
கொண்டிருக்கும் காதலனுக்காக...


கோடி முறை யோசித்து
நீ எழுதிய எனக்கான காதல் கடிதம்
பத்திரமாக இருக்கிறது
மடித்து வைத்த
என் கூரைச் சேலை மத்தியில்

முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்
மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று..."

இப்படியாக நீள்கிறது
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

************************************

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காதலன் நினைவில் வாழும் மனைவியின் அன்பான கணவன் என வித்தியாசப்பட்ட கவிதை.
படித்து முடித்து நான் கேட்ட முதல் கேள்வி "ஏன் சார் மனைவியின் டைரியைப் படிச்சீங்க?"

நீங்களே சொல்லுங்க நான் கேட்டது தப்பா?

Thursday, November 10, 2005

பிறப்பும் இறப்பும் (God does not play dice)

நான் ஏற்கனவே கடவுளைப் பற்றிய ஒரு பதிவெழுதியிருந்தேன். ஆனால் அது முற்றிலும் சினிமாவைச் சார்ந்தது. அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் இங்கு எடுத்தாள ஆசைப்படுகிறேன்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

ஒரு ஊரில் வயதான ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக மாடியில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அவரது மனைவி கீழே ஏதோ பலகாரம் செய்து கொண்டிருக்கிறார். வாசம் அவரது மூக்கை துளைக்கிறது. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று இவருக்கு ஆசை. உடனே மனைவியைக் கூப்பிடுகிறார். மனைவியிடமிருந்து பதிலேதுமில்லை. இவரால் ஆசையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி கீழே இறங்கி சமையலறை வரை வந்து விடுகிறார்.

நோய்வாய் பட்ட கணவனை சமையலறையில் பார்த்ததும் மனைவிக்கு பதட்டம். எதற்காக கீழே இறங்கி வந்தீர்கள் எனக் கேட்கிறார். பலகாரம் சாப்பிட வந்ததாக கூறுகிறார். இந்த பலகாரம் வேறு விஷயத்திற்காக வைத்திருப்பதாகவும் அதனைத் தொடக்கூடாது என்று சொல்கிறார். வயோதிகருக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. எதற்காக வைத்திருக்கிறாய் என மனைவியிடம் கேட்கிறார். அதற்கு மனைவியும் நாளைக்கு அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர் சொன்னதாகவும் அவருக்கு இஷ்டமான பலகாரங்களை ஈமச்சடங்கில் வைக்க வேண்டுமென்பதால் இந்த பலகாரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட உடனே அந்த வயோதிகர் இறந்து விடுகிறார்.

உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை என்பதற்காக சொல்லப்பட்ட துணுக்கு. ஆனால் அதில் இன்னொரு நல்ல கருத்தும் அடங்கியிருக்கிறது. மனிதன் மரணப்படுக்கையில் இருந்தாலும் அவனது ஆசைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.

எல்லோருக்கும் ஐன்ஸ்டீனைப் பற்றி தெரியும். மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இவரும் ஒரு சராசரி மனிதனைப் போல் தன் ஆசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் இவரது ஆசை விசித்திரமானது. ஆசைப்படுவதிலும் இவருக்கு நிகர் இவரே. மரணப்படுக்கையில் இருக்கும் பொழுதும் தன் மூக்கு கண்ணாடி, தன் கருவிகள் மற்றும் தன் அண்மைக்கால சமன்பாடுகளைத் தான் இவர் கேட்டார். நினைவு வருவதும் போவதுமாக இருக்கிறது. அந்த நிலையிலும் கண்டுபிடிப்புகளில் சிறந்ததென்று இவர் நினைத்த "கடவுளின் மூளையை" வெளிப்படுத்தும் ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்.


எனக்கு கடவுளின் எண்ணங்கள் தெரிய வேண்டும் (I want to know God's thoughts). இது தான் இவரது கடைசி ஆசை. இந்த ஆசையைப் பற்றி இவர் முன்னமே சொல்லியிருந்தார். "அனைத்துமே கடவுளின் எண்ணங்கள் தான் மற்றவை எல்லாம் வெறும் விவரங்கள் தான். (I want to know God's thoughts – the rest are mere details). இந்த ஒரு ஆசையினாலே இவர் அறிவியல் அறிஞர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தார். தனக்கு 20 வயதிருக்கும் பொழுது அறிவியல் உலகில் முத்திரை பதிக்க இவர் முயற்சி செய்து கொண்டிருந்த காலம். 1905 ஆம் வருடம் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்த வருடம். இவரது ஆய்வறிக்கைகள் உலகை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு சான்றாக அமைந்தன.

சார்பியல் கோட்பாடு (Theory of relativity): E=mc2 என்பதை இவர் கண்டுபிடித்து வெளியிட்ட ஆண்டு. உலகிலுள்ள அனைத்து சடப்பொருள் எல்லாம் மூலக்கூறுகளால் ஆனவை என்று சொன்னார். (All matter is composed of molecules). அந்த காலத்தில் நேரம் என்பது வரம்பற்ற மாறாத ஒன்றாக கருதப்பட்ட காலம். அந்த காலத்தில் தான் நேரம் என்பது நாம் பயணிக்கும் வேகத்தைச் சார்ந்ததென்று E=mc2 என்னும் சமன்பாட்டினால் நிரூபித்தார். இன்றளவும் கணிதத்திலும் சரி அறிவியலிலும் சரி மிக உயர்வாக கருதப்படும் சமன்பாடு இது.

பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் பொதுப்படையான சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார் (Theory of general relativity). நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்றாலும் அதற்கு என்ன காரணம் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐன்ஸ்டீன் தனது பொதுப்படையான சார்பியல் தத்துவத்தில் புவி ஈர்ப்பு விசை என்பது நேரத்தையும் வெளியையும் பொருட்கள் வளைப்பதால் வருவது என்று கூறினார். (bending of time and space by massive objects). இது 1919ஆம் ஆண்டு வானூலார்களால் சூரிய கிரகணமன்று நிரூபிக்கப்பட்டது.

பின்னர் இவர் துளியம் விசையியல் (quantum mechanics) பற்றிய ஆய்வறிக்கைக்காக நோபல் பரிசு பெற்றதும் நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் 1920 ஆம் ஆண்டு நீல்ஸ் போர், ஸ்க்ராடிஞ்சர், ஹெய்சன்பர்க் ஆகிய ஆய்வாளர்களால் ஐன்ஸ்டீனின் துளியம் பற்றிய ஆராய்ச்சி பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அவர்கள் சொன்ன விஷயம் இது தான் உலகில் எதையுமே தீர்மானமாக சொல்ல முடியாது, ஒரு பொருளின் வேகத்தைச் சரியாக சொல்லலாமே ஒழிய அதன் நிலையை சரியாக சொல்ல முடியாது. (speed of a particle but not its position). ஐன்ஸ்டீன் "கடவுள் என்னும் ஒரு பெரிய சக்தி" தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தீர்க்கமாக நம்பினார். அதன் மூலம் உலகிலுள்ள எல்லாவற்றையும் கணித சமன்பாடுகள் மூலம் எளிதாக விளக்கி விடலாம் என்றும் பெரிதும் நம்பினார். அதனால் இவர் மற்ற கருத்தாய்வுகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டார். அதனாலேயே அடிக்கடி பல்வேறு ஆராய்ச்சியாளர்களுடன் இவருக்கு தர்க்கம் செய்ய வேண்டியதாகி விட்டது.

1920ல் சால்வே கலந்தாய்வில் இந்த தர்க்கம் முற்றியது. நீல்ஸ் போருடன் இவரது அந்த தர்க்கம் தான் இன்றளவும் ஒவ்வொரு மனிதனின் கடவுள் பற்றிய கேள்விகளின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். அதில் ஐன்ஸ்டீன் சொன்னது "கடவுள் பகடையாடுவதில்லை. அவரின் கணக்கில் எல்லாமே தீர்க்கமானது தான். அதில் வாய்ப்புகளுக்கு இடமில்லை" (God does not play dice, meaning that nothing would be left to chance in the universe). அதற்கு நீல்ஸ் போரும் அவருடன் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்களும் சொன்ன பதில் இது தான் "Einstein, stop telling God what to do with his dice".

ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தில் உலகை எப்படியும் ஊகித்து விடலாம். அதற்கு எளிய கணிதச் சமன்பாடுகள் போதுமென்று கூறினார். ஆனால் கடைசி வரை இதை இவரால் நிரூபிக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால் இன்றளவும் இயற்பியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கும் நிறைய ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கும் இந்த தத்துவமே காரணம்.

ஒரு வேளை ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை நிரூபித்திருந்தால் உலகில் இன்று எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கும். முக்கியமாக நாத்திகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் மனிதனின் தோற்றத்திற்கான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க முடியவில்லை. அந்த பதில்களுக்கு மிக அருகில் சென்று வந்தவர் என்பதால் தான் ஐன்ஸ்டீன் இன்றளவும் எல்லோராலும் போற்றப் படுகிறார். ஆசைப்படுபவர்கள் எல்லாரும் இவரைப் போல ஆசைப்பட வேண்டும். இதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை.

பி.கு.
மனிதனின் கடவுள் நம்பிக்கை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளைத் தேடியதன் விளைவு தான் இந்த பதிவு.

பார்க்க + படிக்க
'Einstein', Peter D Smith, (Life&Times series) Haus Publishing, ISBN 1-904341-15-2