Monday, September 05, 2005

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

நெற்று டெல்லியிலிருக்கும் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். டெல்லியில் R.K.புரத்தில் உத்தரசுவாமி மலையில் சுவாமிநாதசுவாமி எழுந்தருளியிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜூன் 13ம் நாள் இந்த கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அழகான கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டமைப்பு பக்தர்களை வெகுவாக கவரக்கூடியது.

நேற்று நான் சென்ற நேரத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தேறின. முதலில் கற்பக விநாயகரை வணங்கி விட்டு மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை கும்பிட போனேன். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஆண்கள் வலதுபுறமும் (சன்னதிக்கு வலதுபுறம்) பெண்கள் இடது புறமுமிருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும். வலதுபுறம் ஆங்கிலத்தில் GENTS என்றும் இடதுபுறத்தில் LADIES என்றும் எழுதி வைத்திருப்பது இது கட்டாயமாக்கப்பட்ட விதி என்றே எண்ண வைத்தது. மற்ற கோயில்களில் பொதுவாக இது நடைமுறையிலிருந்தாலும் இப்படி எழுதி வைத்திருக்க மாட்டார்கள்.

ஒரு சிறுமி GENTS பகுதியில் நின்று கொண்டிருந்தாள். வயது ஒரு பத்திலிருந்து பதினைந்திற்க்குள் இருக்கலாம். திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள். நான் சீக்கிரமே சென்று விட்டதால் (சுமார் ஒரு நாலே முக்கால் மணியிருக்கும்) அர்ச்சகர் வந்திருக்கவில்லை. அதனால் தரிசனம் முடித்து சன்னதியைச் சுற்றி வரலானேன். சுற்றி வரும் இடத்தில் தான் திருக்கோயிலைப் பற்றின செய்திகள் அடங்கிய கல் இருந்தது. அதனால் அதனைப் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சத்தம். அர்ச்சகர் அந்த சிறுமியை அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தார். என்னவென்று போய் விசாரித்ததில் அந்த சிறுமி கையிலிருந்து 500ரூபாய் நோட்டை அர்ச்சகர் பறிமுதல் செய்திருக்கிறார். சீக்கிரமே வந்த யாரோ உண்டியலில் போடாமல் சன்னதிக்கு முன் இருந்த தாம்பாளத்தில் 500ரூபாயை வைத்து விட்டு போயிருக்கின்றனர். அதை இந்த சிறுமி கவனித்திருக்கிறாள். யாருமில்லாத நேரம் அதனை எடுத்து செல்லப் பார்த்திருக்கிறாள். அப்பொழுதுதான் புரிந்தது அவள் திருதிருவென்று முழித்ததன் ரகசியம். பின்பு அர்ச்சகரிடம் பேசி அவளை விட்டுவிட சொன்னேன்.

பின்பு மலையிலிருக்கும் சுவாமிநாதசுவாமி சன்னதிக்கு சென்றேன். போகும் வழியில் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது வயதான பெரியவர் ஒருவர் சிவன் சிலையை கழுவிக் கொண்டிருந்தார். அந்த இடமே நல்ல சுத்தமாக காட்சியளித்தது. அவரின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும். போய் சுவாமிநாதசுவாமியைத் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் அந்த பெரியவர் கீழேயிருக்கும் மண்டபத்தின் வாசலைத் துடைத்துக் கொண்டிருந்தார். மண்டபத்தினுள் சென்றேன். ஒரு 60, 70 பேர் ஏதோ பாட்டுக் கச்சேரிக்கு ரெடியாகிக்கொண்டிருந்தார்கள். ஒரு இரண்டு நிமிடத்தில் கச்சேரி ஆரம்பமானது. நினதுதிருவடி என்ற ஒரு முருகன் பாடலை பாடினர்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்களுள் சிலருக்கு மின்விசிறி பற்றின கவலை. விளக்கணைந்தாலும் பரவாயில்லை என்று சிலர் மின்விசிறியை சுழற்றி விட்டனர். சில பெண்மணிகளுக்கு அடுத்தவர்களின் ஆடை அலங்காரத்தில் நாட்டம். அதென்னவோ எனக்கு இன்னும் புரியவில்லை கோயிலுக்கு வரும் பொழுது ஏன் சாரை சாரையாக நகை அணிந்து வருகிறார்களென்று. அவர்கள் ஒரு ஐந்தாறு பாடலைப் பாடிமுடித்திருப்பார்கள், ஒரு புறா மண்டபத்திலுள்ள மின்விசிறியில் அடிபட்டு கீழே விழுந்தது. (புறாக்கள் இந்த கோயிலில் அதிகமாக காணப்படுகின்றன). உடனே ஒருவர் அங்கு வேலை பார்க்கும் ஒருவரை கூட்டி வந்து அடிபட்ட புறாவை வெளியேற்றச் சொன்னார். அவரும் கருணையுடன் புறாவை மெல்லப் பற்றி வெளியேற்றினார்.

எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாள் தன் மகள் தண்ணீர் பாட்டிலை எச்சில் வைத்துக் குடித்ததற்காய் கடிந்து கொண்டிருந்தார். அவரருகில் இருந்த அம்மாள் மணிபர்ஸில் வைத்திருந்த கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பதினைந்து பேர் பாடிக்கொண்டிருக்க மற்றவர் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். பார்த்தவுடனேயே நம்ம சிந்து பைரவி சுஹாசினி மாதிரி பாடறவங்கள நிறுத்திவிட்டு நாம கச்சேரியை ஆரம்பிச்சுரலாமா என்று யோசித்தேன். ஆண்டவன் அந்த அளவிற்கு எனக்கு சங்கீத ஞானத்தைக் கொடுக்காதலால் நினைப்போடு அது நின்றுவிட்டது. ஒரு வழியாக கச்சேரி முடிந்து விட்டிருந்தது. வெளியில் வந்தேன். அந்த பெரியவர் இப்பொழுது குடிநீர் வைத்திருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

இப்பொழுது தான் ஒன்று புரிந்தது. எதற்க்காக பாடுகிறோம் எதற்க்காக உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உள்ளே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அடிபட்ட புறாவிற்கு இவர்களால் உதவ முடிவதில்லை. இவர்களின் மேக் அப்பும், எச்சிலும் தான் இவர்கள் கண் முன் தெரிகிறது. மனமுருகி பாடினவர்களும் புறாவிற்கு உதவ முன்வரவில்லை. இவர்கள் முருகனைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் அந்த வயதான பெரியவர் இவர்களுக்கான இடங்களை மட்டுமில்லாமல் ஆண்டவனையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். புரிந்து விட்டது எனக்கு புறாவிற்கு உதவியவருக்கும் பெரியவருக்கும் கிடைக்காத கடவுள் பாடியவர்களுக்கும் கிடைக்கப்போவதில்லை. என்ன செய்ய "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே". எங்க அம்மா சொன்னது ஞாபகம் வந்தது, "கோவிலுக்கு அடிக்கடி போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வாய்!!". சரி தானே.

12 comments:

துளசி கோபால் said...

மெத்தச் சரி.

rv said...

நல்ல பதிவு go.ganesh

இந்த மாதிரி பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒன்றும் செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது தான் அதிகம்.

இந்த தடவை கூட திருச்சியிலிருந்து தஞ்சை வந்து கொண்டிருந்தபோது அப்போது சில நிமிடங்களுக்கு முன்னரே விபத்தில் சிக்கிய கார் ஒன்று ரோட்டிலிருந்து கீழே விழுந்து இருந்தது. அதனை சுற்றிப் பெருங்கூட்டம். நாங்களோ நிறுத்தாமல் வந்துவிட்டோம். வருத்தமாகத்தான் இருக்கிறது. சந்தர்ப்பங்கள் அந்த மாதிரி. நிறுத்தாதற்கு பல காரணங்களை சமாதானாமாய் சொல்லிக்கொண்டாலும், அவையெல்லாம் வெறும் நொண்டிச் சாக்குகள் தான்.

அடுத்த நாள் பத்திரிகையில் அந்த விபத்தில் ஒருவருக்கும் அடியில்லை என்று வந்தது ஒருவிதத்தில் நிம்மதியளித்தது என்றாலும், இந்த மாதிரி உயிருக்கு ஆபத்தான சமயங்களில் கூட உதவ முடியாமல்போனது குறித்து எனக்கு இன்னும் உறுத்துகிறது.

உங்கள் பதிவில் உள்ளது போல் ஒருசில பெரியவர்கள் தான் அந்த காரில் பயணித்தவர்களுக்கும் உதவி செய்திருந்திருக்க வேண்டும்.

---

கோயில்களுக்கு வருவதற்கு எதற்கு ஆடம்பர விஷயங்கள் என்பதும் புரியாத ஒன்று. ஆனால், டில்லியில் எப்படியோ தெரியாது. ஆனால் பல கோயில்களில் வருவோரை அளந்த பின்னர் மரியாதை மாறுபடும். திருத்தணி அர்ச்சகர்கள் இந்த விஷயத்தில் படுகெட்டி. கொஞ்சம் பணம் படைத்தவர் போலிருந்தால், தணிகை முருகனை நம் காருக்கே கொண்டு வந்து தரிசனம் செய்துவிட்டு நன்றாக கறந்து கொண்டு போய்விடுவார்கள். தணிகைவேலனும் வள்ளி தேவானையும் இந்த அக்கிரமத்தையெல்லாம் கண்டும் சும்மா தான் இருக்கிறார்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

மெத்தச் சரி.

சின்ன சந்தேகம்..பாட்டு தன்பாட்டுக்கு நடந்திருக்கும். "மக்கள்" அரட்டைக்கச்சேரி நடத்தியிருப்பார்களே! மகா எரிச்சல் தரும் விசயம். நாகரிகமாகச் சொன்னாலும் ஏதோ நாம் கதைத்தது/செய்யக்கூடாததைச் செய்வது போலப் பார்ப்பார்கள்!

G.Ragavan said...

// தணிகைவேலனும் வள்ளி தேவானையும் இந்த அக்கிரமத்தையெல்லாம் கண்டும் சும்மா தான் இருக்கிறார்கள். //

அது சரி. சும்மா இரு சொல்லற என்றவன் தானே அவன். என்ன காரணத்தினாலோ சும்மா இருக்கிறான். அது நமக்குத் தெரியுமா?

வீ. எம் said...

நல்ல பதிவு கனேஷ்,

சில நேரங்களில் மக்கள் மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் தர மறுத்துவிடுகிறார்கள்.. எங்கோ படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது.. மிக சுருக்கமாக இங்கே..

அம்மா சோறு போடும்மா - பிச்சைக்காரியின் குரல்..
ஒன்னுமில்லை போ போ விரட்டுகிறாள் வீட்டுக்காரம்மா..
கத்தி கத்தி பார்த்துவிட்டு நகர்கிறாள் பிச்சைக்காரி..
அடுத்த 2 நிமிடத்தில் , கையில் தட்டுடன் வருகிறாள் வீட்டுக்காரம்மா
தட்டில் வடை,சாம்பார் சாதம், பாயாசம்..

வாசலுக்கு வந்து குரலெடுத்து கத்துகிறாள்
கா .. கா ..கா.. கா

// அர்ச்சகரிடம் பேசி அவளை விட்டுவிட சொன்னேன்.//
அர்ச்சகர் விட்டு விட்டாரா?? விட்டுவிட்டார் என்றால் எனக்கு 2 விஷயம் தெரிகிறது..
1. அவருக்கு இருந்த நல்ல குணம், மனிதநேயம்..
2. கோ கனேஷ¤க்கு டெல்லி கோயில்களில் உள்ள செல்வாக்கு :)

// "கோவிலுக்கு அடிக்கடி போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வாய் //
பையன் இப்படி ஊர் சுத்துறானே , உருப்படியா கோயிலுக்கு போகட்டும்னு அம்மா சொல்லியிருப்பாங்...
ஒகே ஒகே புரியுது.. உடு ஜூட்

Ganesh Gopalasubramanian said...

நன்றி துளசி, ராம்நாதன், ஷ்ரேயா, ராகவன் & வீ.எம்

@துளசி
துளசி நியுசில இத மாதிரி கோயில் குளமெல்லாம் பார்க்கிறதுக்கு எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்களேன்

@ராமநாதன்
// அவையெல்லாம் வெறும் நொண்டிச் சாக்குகள் தான். //
சரியா சொன்னீங்க நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சாக்குகள் தான்.
//திருத்தணி அர்ச்சகர்கள் இந்த விஷயத்தில் படுகெட்டி.//
சமீபத்தில் திருச்செந்தூருக்கு போய் வந்தேன். இவர்களும் திருத்தணிக்கு சளைத்தவர்கள் அல்ல. மொத்தத்தில் திருச்செந்தூரிலும் திருத்தணியிலும் "மொட்டை" உறுதி போலும்.:-)

@ஷ்ரேயா
//செய்யக்கூடாததைச் செய்வது போலப் பார்ப்பார்கள்!//
பார்த்தாலும் சொல்ல முடிவதில்லை ஷ்ரேயா!! அடுத்த தபா உள்ள விட மாட்டேன்னு சொல்லிருவாங்களோன்னு பயம்...
ம் கதைக்க பயம்... இந்தியாவில் என்ன செய்வது சொல்லுங்க...

@ராகவன்
//அது சரி. சும்மா இரு சொல்லற என்றவன் தானே அவன். என்ன காரணத்தினாலோ சும்மா இருக்கிறான். அது நமக்குத் தெரியுமா?
சரியா சொன்னீங்க

@வீ.எம்
நீங்க வருத்தப்படற மாதிரி என் பதிவிலயும் ரெண்டு '-' டீஃபால்ட்டா விழுந்திருது...
//தட்டில் வடை,சாம்பார் சாதம், பாயாசம்..காகாகா//
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்..... என்ன சொல்றீங்க :-))

//1. அவருக்கு இருந்த நல்ல குணம், மனிதநேயம்..
2. கோ கனேஷ¤க்கு டெல்லி கோயில்களில் உள்ள செல்வாக்கு :)//
1. விட்டுட்டாருங்க..... என்ன தான் இருந்தாலும் சிறுமி தானுங்க தெரியாம செஞ்சுருப்பா....

2. அது செல்வாக்கு இல்லங்க சொல்வாக்கு :-) என்ன சொல்றீங்க ???

//பையன் இப்படி ஊர் சுத்துறானே , உருப்படியா கோயிலுக்கு போகட்டும்னு அம்மா சொல்லியிருப்பாங//
நாளைக்கு கேட்டு சொல்றேன்...

Alex Pandian said...

http://www.malaimandir.org/

Ganesh - you may see the special days from http://www.malaimandir.org/calendar.html and tune your visits as you wish.

தாணு said...

கோவிலுக்கு செல்ல கூடுதல் காரணம் கற்பித்திருக்கிரீர்கள். நல்ல பதிவு

துளசி கோபால் said...

//துளசி நியுசில இத மாதிரி கோயில் குளமெல்லாம் பார்க்கிறதுக்கு எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடுங்களேன்//

ஆக்லாந்துலே கோயில்கள் இருக்கு.

ஆனா நான் இருக்கற ஊருலே?

கட்டிட்டுப் பதிவு போட்டுடறேன்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி அலெக்ஸ், தாணு, துளசி

@அலெக்ஸ்
பெயருக்கும் நீங்கள் கொடுக்கும் தகவலுக்கும் சம்பந்தமில்லையே. எனினும் ரொம்ப நன்றி. இந்தியா செக்யூலர் தேசமல்லவா? அடிக்கடி கோயிலுக்குப் போவீங்களா?

@தாணு
// கோவிலுக்கு செல்ல கூடுதல் காரணம் கற்பித்திருக்கிரீர்கள். நல்ல பதிவு //
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. பாருங்க பெரியவங்க பெருமாளைத் தான் கேட்கச் சொல்லுவாங்க :-))

@துளசி
// கட்டிட்டுப் பதிவு போட்டுடறேன். //
அதான் ஏற்கனவே கோபால் சாருக்கு கட்டிட்டீங்களே. உங்க மனக்கோயிலைச் சொன்னேன்.

ilavanji said...

எங்க அம்மா சொன்னது ஞாபகம் வந்தது, "கோவிலுக்கு அடிக்கடி போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வாய்!!"

சரியாத்தான் சொல்லியிருக்காங்க!

Alex Pandian said...

கணேஷ்,

---------
@அலெக்ஸ்
பெயருக்கும் நீங்கள் கொடுக்கும் தகவலுக்கும் சம்பந்தமில்லையே.
---------

எனது வலைப்பதிவின் மாஸ்ட் ஹெட்டில் ஒரு செய்தி இருக்கிறது :-)

மலைமந்திருக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன். மிகவும் க்ளீனாக இருக்கும். ஜெ.யிடம் தமிழக தலைமைச் செயலாளராக இருந்து பின்னர் ஏதோ(?) காரணத்தால் அங்கிருந்து விடைபெற்று தற்போது இந்தியாவின் சீஃப் விஜிலன்ஸ் கமிஷனராக இருக்கும் ஷங்கர் அவர்களை அங்கு பார்க்க முடிந்தது. மிகவும் சிம்பிளான மனிதர். இன்னமும் எல்லா சனிக்கிழமை மாலைகளிலும் அவரை அங்கு பார்க்கலாம் என நினைக்கிறேன்

கோயிலின் முருகன் வடிவு மிக அழகு.

- அலெக்ஸ்