Friday, September 02, 2005

டிவியும் அலுவலக நண்பரும்

நேற்று என் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பரென்றால் சமவயதுக்காரர் அல்ல. இரண்டு குழந்தைகளின் அப்பா. நன்கு பழகக்கூடியவர். ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். அவருடன் பேசினாலே ஒருவித பரவசமும் ஆர்வமும் நமக்கும் தொற்றிக்கொள்ளும். அலுவலகத்திலும் சரி வெளியிலும் சரி அவருக்கு நல்ல பெயர். எப்பொழுதும் யாராவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். நேற்று அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் டிவி தேவையா இல்லையா என்பது பற்றிய ஒரு பேச்சு எழுந்தது. மகளிர் சமாச்சாரமாதலால் (என்னங்க !! யாரும் அடிக்க வந்திராதீங்க.. டிவில இப்ப எல்லாமே தாய்க்குலங்கள்தான்) அவங்க மனைவியும் சேர்ந்துகிட்டாங்க.

பேச்சு சுவாரஸ்யமாக போச்சு. அவர் வீட்டில் டிவி கிடையாது. தினமும் ஒரு ரஜினி படம் போட்டாலும் டிவி வாங்கக் கூடாதுங்கிறதுல அவர் ரொம்ப கண்டிப்பாகவே இருந்தார். மனுஷன் இருந்தாலும் இவ்வளவு கராறாக இருக்கக்கூடாதுன்னு நானும் அப்பப்போ நினைத்துக் கொள்வேன். சில சமயம் அவரிடமும் சொன்னதுண்டு. ஆனா இதுவரையிலும் அவரிடமும் அவர் கண்ணொட்டத்திலும் மாற்றம் வந்ததாக தெரியவில்லை. அவர் மனைவியும் வேரொரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அதனால் மனைவியிடமிருந்தும் பெரிய அளவில் ஒன்றும் வற்புறுத்தல் இருந்ததாக தெரியவில்லை.

டிவி இல்லாம ஒரு வீட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதெப்படிங்க ஒரு சீரியல் பார்க்காம, ஒரு திரைவிமர்சனம் கேட்காம இவங்களால இருக்க முடியும்? உலக நடப்புல ஏதாச்சும் ஒரு விஷயம் என் மண்டைல ஏறுதுன்னா அதுக்கு டிவி தான் முழுமுதற் காரணம். ரசனை சார்ந்த புத்தகங்களைத் தவிர்த்துப் பார்த்தால் என்னிடமிருப்பது மிகச்சொற்பமே. புத்தகங்கள் மூலம் படிக்கிறத விட டிவி மூலம் பார்க்கிறது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம். பிபிசி, டிஸ்கவரின்னு புதுப்புது விஷயங்கள் தெரிஞ்சுக்கறது டிவினால தான். சரி சரி போது டிவி புராணம்... விஷயத்துக்கு வர்றேன்.

நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் அவரிடம் விவாதித்தேன். நாங்க பேசும் பொழுதெல்லாம் டிவி பத்தின விவாதங்கள் வருவதுண்டு அவை எல்லாம் சும்மா பத்தோட பதிணொன்னு அத்தோட இதுவொண்ணுன்னு தான் வந்து போகும். அப்படியில்லாமல் நேற்றுதான் டிவியைப் பற்றி மட்டுமே பேசினோம். நான் அவர்முன் வைத்த முக்கியமான வாதங்கள்

டிவி இல்லாமல் உலக செய்திகளும் பொது அறிவும் கிடைப்பதில்லை
டிவி என்பது நம்முடைய பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று

பட்டிமன்றத்தில பேசற மாதிரி பாயிண்டுகள அள்ளி வீசிட்டு அவர் பதிலுக்காக காத்திருந்தேன். ரொம்ப ஆழமாக யோசித்தவர் பதிலளிக்களானார்.

"எவ்வளவு நேரம் நீங்க உலக செய்திகளும் பொது அறிவு நிகழ்ச்சிகளையும் பாப்பீங்க?", "தினமும் ஒரு மணி நேரம்". இது நான்.

"ஒரு நாளில் எவ்வளவு நேரம் வெட்டியா பொழுது போக்கலாம்நு நினைக்கிறீங்க?".
வெட்டியான்னு கேட்டதுமே கொஞ்சம் நெருடலாத்தான் இருந்தது. உண்மை கசக்கத்தான செய்யும். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு "அதுவும் ஒரு மணி நேரம்" என்றேன்.

"வார விடுமுறைகளைத் தவிர்த்து, இப்போ தினசரி எவ்வளவு நேரம் டிவி பார்க்கறீங்க?", நம்ம திருவிளையாடல் தருமிக்கு அண்ணன் மாதிரி கேள்விகளா கேட்டிக்கிட்டே போறாரு.

"ஒரு இரண்டரை மணி நேரம்".

"இது போக பாட்டு கேட்பது, ஊர் சுத்துவது, என் போல நண்பர் கூட அரட்டைன்னு எவ்வளவு நேரம் செலவழிப்பீங்க?"

வந்த கடுப்பில எந்திருச்சு போயிரலாம்னு நினைச்சேன். ஏண்டா இவன்கூடவெல்லாம் பேசினோம்னு அப்ப தோணிச்சு. என்னால் இந்த முறை பதிலளிக்க முடியவில்லை.

என்னுடைய மெளனத்தைப் புரிந்துகொண்டவராக "என்னடா இப்படியெல்லாம் கேட்கிறான்னு தப்பா நினைக்காதீங்க, இப்ப சொல்லுங்க டிவி மட்டும் தான் பொது அறிவு வளர காரணமா? என் கூட பேசிட்டிருக்கீங்க உங்களுக்கு ஏதாச்சும் விஷயம் கிடைக்கலையா? டிவி மூலம் கிடைப்பது கொஞ்சம் தான். நாமா வெளியுலகத்துல தெரிஞ்சுக்கற விஷயம் தான் மீதி. வெளியுலகத்தில இல்லாத விஷயங்களும் இல்லை. செய்தித்தாள் தராத உலக அறிவும் இல்லை. செய்தித்தாள்கள் பாருங்க. படிக்கிற பழக்கமும் கூடும் நீங்க தேடுற விஷயங்களும் கிடைக்கும். அத விட்டுட்டு டிவில ஏங்க நேரத்த விரயமாக்கணும். உங்க டைட் செட்யூலிலேயே நீங்க இரண்டரை மணி நேரம் டிவில செலவழிக்கறீங்க, சின்ன பசங்களுக்கு கட்டுப்பாடுகள் கம்மி அவங்க எவ்வளவு நேரம் செலவழிப்பாங்க? அவங்களுக்கு இந்த வயசில தேவைப்படற விஷயங்கள சொல்றத விட தேவையில்லாத விஷயங்களத்தான் டிவி நிறைய தருது. இப்ப சொல்லுங்க டிவி வேணுமா வேண்டாமா?"

அது வரை என் சார்பில அவருகூட விவாதம் பண்ணிட்டு இருந்த அவரோட மனைவியைக் காணும். இனிமே சத்தியமா வீட்டில டிவி வேணும்னு கேட்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப மறுபடியும் முதல் பத்திய படிங்க.

நம்ம இப்னு எழுதிய கவிதையும் ஞாபகம் வந்தது. சுட்டி இங்கே

பதிவு போடும் போது ஏதாச்சும் துணுக்கு எழுதினா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். எப்போதோ படித்த ஒன்று.

மூணாம் வகுப்பு கணக்கு வாத்தியார் நம்ம கணேஷ்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறாரு (கணேஷா!! அட துணுக்குல கூட நான் ஹீரோவா இருக்கக்கூடாதா??)
கணேஷ்!! 2,4,9,16 எண்கள் எல்லாம் என்ன?
"ஜெயா டிவி, விஜய் டிவி, கார்டூன் நெட்வொர்க், டென் ஸ்போர்ட்ஸ்." (சன் டிவிய கழட்டி விட்டுடோம்ல.... ஏன்னா சன் நம்பர் ஒன்னுங்க)

18 comments:

அன்பு said...

என்னைக்கேட்டால் தொலைக்காட்சி வெட்டிதான் அதிலும் கம்பிவடத் தொலைக்காட்சி. இப்போது உலகில் நடக்கும் நிகழ்வுகள் நம்வீட்டில் உடனே பார்க்கமுடிகிறது என்பது தவிர... தொலைக்காட்சியில் செலவழிக்கும் நேரம் பெரும்பாலும் வீண்தான்...(நான் பார்ப்பது 85% சன் டிவி மட்டும்தான், பெரும்பாலும் மாற்ற முடிவதில்லை :)

ஒரு வாரம் வீட்டில் கம்பிவடத்தை வெட்ட, எங்களுக்குள் பேச எவ்வளவோ இருந்தது, முடிந்தது... இருந்தாலும் எல்லாருக்கும் தொலைக்காட்சி இல்லா வெறுமை தெரிய... மீண்டும் தொ.கா பார்த்துக்கொண்டே பேசி/சாப்பிட்டு/தூங்குகிறோம். எனக்குத் தெரிந்து எங்கள் மாமா வீட்டில் அவர்கள் பிள்ளைகள் பொறியியல் கல்லூரி செல்லும்வரை தொலைக்காட்சி பெட்டி வாங்கவே இல்லை - அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை.

சுதர்சன் said...

என் வீட்டிலும் டி.வி இல்லை. :)
1. நண்பர்களோடு, சுற்றத்தோடு செலவிடும் நேரத்தை அது வெகுவாக குறைத்து விடுகிறது.
2. படிப்பதற்கான நேரத்தையும் அது விழுங்கி விடுகிறது.
3. அலுவலகத்தில் கணிணித் திரை முன் நீண்ட நேரம் செலவிட்டு சோர்ந்து போயிருக்கும் கண்களுக்கு வீட்டிலாவது விடுதலை கிடைக்கட்டும்.

இவைதான் என் காரணங்கள்.

Go.Ganesh said...

@அன்பு
// (நான் பார்ப்பது 85% சன் டிவி மட்டும்தான், பெரும்பாலும் மாற்ற முடிவதில்லை :) //
விவேக் நம்ம பா.விஜய் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னது மாதிரி. சன்னுக்கு ஏது சண்டே:-)
//பேசி/சாப்பிட்டு/தூங்குகிறோம்// வருத்தப்படக்கூடிய நிஜம்

@சுதர்சன்
// அலுவலகத்தில் கணிணித் திரை முன் நீண்ட நேரம் செலவிட்டு சோர்ந்து போயிருக்கும் கண்களுக்கு வீட்டிலாவது விடுதலை கிடைக்கட்டும். //
ம்ம். அதான் நீங்க கண்ணாடி போடலையா... எங்க வீட்ல எல்லாமே சோடாபுட்டிதான்

G.Ragavan said...

தொலைக்காட்சி....ராத்திரி தூங்குறதுக்கு முன்னால பாட்டப் போடுவாங்க.. பதினோரு மணிக்கு சன் மியூசிக்குலயும் ஜெயாவுலயும்...நல்ல மெலோடீஸ். அரமணி நேரத்துக்கு டைமர் செட் செஞ்சி வெச்சிட்டு தூங்கிர வேண்டியது. டீவி இல்லைன்னா எப்படி?

ஆனாலும் டீவி ஒரு பொழுது போக்குச் சமாச்சாரம் மட்டுமே.

Thara said...

கணேஷ்,

சுதர்சனுடைய கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு. இப்போதெல்லாம், புத்தகங்கள் படிப்பது, வெளியே சென்று நண்பர்களைச் சந்திப்பது, நண்பர்களை வீட்டுக்கு அழைப்பது போன்ற நல்ல விசயங்களெல்லாம் தொலைக்காட்சியினால் குறைந்துவிட்டது முக்கியமாக தமிழ் நாட்டில். அதுவும் பொங்கள், தீபாவளி, புத்தாண்டு என்றாலெ டிவியில் சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிதான் என்றாகிவிட்டது. டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் போது, யாராவது வீட்டுக்கு வந்துவிட்டால் முகம் சுளிப்பவர்களும் இருக்கிறார்கள். அதனால டிவி நம்மைக் கெடுத்து குட்டிச் சுவராக்குகிறது என்பதுதான் என் கருத்து. உங்களைப் போல் அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குக்காக சிறிது நேரம் சினிமா, பாடல்கள், சீரியல் என்று அளவாக டிவியில் நேரத்தைச் செலவிட்டால் பிரச்சினை இல்லை.

தாரா.

வீ. எம் said...

உலக விஷயங்கள் தெரிந்துக்கொள்ள தொலைக்காட்சி மட்டுமே என்பதில்லை என்றாலும் நிச்சயமாக பல தரப்பட்ட செய்திகளை தொலைக்காட்சி மூலம் தெரிந்துக்கொள்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. எழத படிக்க தெரியாதவர்கள் கூட

'என்னப்பா அமெரிக்காகாரன் சதாம் உசேன புடிச்சுட்டானாமே... '
என்னப்பா இது இந்த தங்கரு தம்பி இப்படி பேசிட்டு ... பிரிச்சனையா போயி கடைசில மன்னிப்பு கேட்டாராமே..'
அவ்ளோ பெரிய கட்டடம் எப்படி இடிஞ்சு போச்சு பாத்தியா பா அமெரிக்காவுல.. என்னமா புகை வந்தது..

இப்படி பேசிக்கறதுக்கு காரணம் டீ.வி தானே??

என்ன இப்பொ கொஞ்சம் டி வி ல அரசியல் வந்து சொதப்புது.. சேனல் மோதல் நடக்குது..

பொழுதுபோக்கு அம்சம் 75% இருந்தாலும்,. 25% உபயோகம் இருக்கு இந்த டி வி யால..

அதைவிட பெரிய சக்தி இன்டெர்னெட் ..ஆனா அது எல்லாரையும் போய் சேரும் வரை டீ வி தான்..


/// நண்பரென்றால் சமவயதுக்காரர் அல்ல. இரண்டு குழந்தைகளின் அப்பா. ///

ஓ! சமவயதுக்காரர் இல்லை.. உங்களை விட கொஞ்சம் சின்னவர்னு சொல்லுங்க.. :)

உங்க பதிலுக்கு கட் அண்ட் பேஸ்ட் செய்துக்கொள்ள வசதியாக

-- பதிவுகளுக்கு சீரியஸ் கருத்து மட்டும் போட்டா அப்புறம் தூக்கமே வராது இந்த வீ எம் க்கு --

Ramesh said...

நம்ம வீ.எம் சொன்ன மாதிரி விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்கு டீ.வி அருமையான வழி. பாருங்க, கொஞ்ச நாளா தமிழ் சானல் எதுவும் பார்க்காம இருந்ததனால தங்கர் பிரச்சினையே தெரியாமப் போச்சு. முகமூடி மற்றும் குழலியின் பதிவுகளைப் பார்த்த பிறகுதான் என்ன விஷயமுன்னு வலையை குடைஞ்சு கண்டுபிடிச்சேன். எவ்வளவு தகவல் இழப்பு :)

டீ.வி தனித்துவ சமுதாயங்களுக்கு வேண்டுமானால் அதிக பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம் ஆனால் உறவுகளால் அமைந்த நமது சமூகத்திற்கு ரிவிட் அடித்திருப்பது உண்மை. 10 வருடம் முன்பு பண்டிகைகள் அமர்க்களப்படும். சொந்தங்களின் வருகையும் அவர்களின் வரவு ஏற்படுத்தும் இனம் புரியாத ஆனந்தமும், ஒன்றாகச் சேர்ந்து பலகாரம் செய்வதும், பட்டாசு வெடிப்பதும், கேலிப் பேச்சுக்களும், களிப்பும் போன இடம் தெரியாமல் போய்விட்டன. அந்த மனநிறைவு வேறு எதிலுமே ஏற்படுவதில்லை.

இப்போதெல்லாம் தொலைப்பேசியில் ஊரூருக்குக் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லிவிட்டு வாயைப் பிளந்து டீ.வி பார்க்கும் நிலைதான் பெரும்பாலும்.

ஊடகங்களும், வசதிகளும் ஊர்களுக்கு இடையிலுள்ள தூரத்தை குறைத்திருக்கலாம் ஆனால் மனங்கள் தூரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

என்ன செய்வது! 'பழையன கழிதலும் புதியன புகுதலும்..' என்ற இளம்பெருவழுதியின் பாடலை சப்பைக் கட்டாக முணுமுணுத்துக்கொண்டே டீ.வீ பார்க்க வேண்டியதுதான்.

Go.Ganesh said...

நன்றி அன்பு, சுதர்சன், ராகவன், தாரா, வீ.எம் & ரமேஷ்,

@ராகவன்

//செட் செஞ்சி வெச்சிட்டு தூங்கிர வேண்டியது. டீவி இல்லைன்னா எப்படி?//
நானெல்லாம் டைமர் செட் பண்றதே கிடையாது. நைட் MP3 CD ஓடிக்கிட்டே தான் இருக்கும். இளையராஜாவும் பாடிகிட்டே தான் இருப்பார்.

@தாரா

// 1. நண்பர்களோடு, சுற்றத்தோடு செலவிடும் நேரத்தை அது வெகுவாக குறைத்து விடுகிறது. //
டிவி மூலம் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்களே. சாலமன் பாப்பையா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், பாரதி பாஸ்கர்..... ஆனா என்ன இந்த பட்டியல் ரொம்ப சிறியது.

// 2. படிப்பதற்கான நேரத்தையும் அது விழுங்கி விடுகிறது. //
இதச் சொல்லுங்க சுதர்சன்... நானெல்லாம் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு வீட்ல புத்தகத்தை எடுத்ததே இல்லை. அப்படி எடுத்தாலும் அவை கவிதை, கதை போன்ற ரசனை சார்ந்த புத்தகங்களாகத்தான் இருக்கும்.

// முக்கியமாக தமிழ் நாட்டில். அதுவும் பொங்கள், தீபாவளி, புத்தாண்டு என்றாலெ டிவியில் சினிமா நடிகர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிதான் என்றாகிவிட்டது. டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் போது, யாராவது வீட்டுக்கு வந்துவிட்டால் முகம் சுளிப்பவர்களும் இருக்கிறார்கள்.//
நம்ம அன்பு சொல்ற மாதிரி பெரும்பாலும் சன் டிவியையும் இவர்களையும் மாற்ற முடிவதில்லை....:-)

// அதனால டிவி நம்மைக் கெடுத்து குட்டிச் சுவராக்குகிறது என்பதுதான் என் கருத்து. உங்களைப் போல் அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குக்காக சிறிது நேரம் சினிமா, பாடல்கள், சீரியல் என்று அளவாக டிவியில் நேரத்தைச் செலவிட்டால் பிரச்சினை இல்லை. //
ராதிகா மேடம் இன்னும் "செல்வி"யாவே இருக்காங்களே... அவங்களும் மனசு வச்சாத்தான் முடியும் என்ன சொல்றீங்க?

@வீ.எம்

//'என்னப்பா அமெரிக்காகாரன் சதாம் உசேன புடிச்சுட்டானாமே... '
என்னப்பா இது இந்த தங்கரு தம்பி இப்படி பேசிட்டு ... பிரிச்சனையா போயி கடைசில மன்னிப்பு கேட்டாராமே..'
அவ்ளோ பெரிய கட்டடம் எப்படி இடிஞ்சு போச்சு பாத்தியா பா அமெரிக்காவுல.. என்னமா புகை வந்தது..

இப்படி பேசிக்கறதுக்கு காரணம் டீ.வி தானே?? //

நம்மாளுகளுக்கு தினத்தந்தில மூணாம் பக்கம் பாக்கலைன்னா தூக்கமே வராது. நீங்க எத்தனை தங்கரு, சதாம் மேட்டர செய்தித்தாள்களில் பிரசுரித்தாலும் இவர்களின் கண்ணோட்டம் மூணாந்தர செய்திகளில் தான் இருக்கும். ஒரு வகையில் டிவி செய்திகளில் இந்த மாதிரி சில்லறை செய்திகள் வராதது நல்ல விஷயம்.

//இப்படி பேசிக்கறதுக்கு காரணம் டீ.வி தானே??//
உண்மைதான் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் என்ன அதோட சதவிகிதம் குறைவாக இருக்கிறது. இப்போ எல்லாம் நம்ம ஊருல சதவிகிதங்களுக்குத்தான் மதிப்பே.

/// நண்பரென்றால் சமவயதுக்காரர் அல்ல. இரண்டு குழந்தைகளின் அப்பா.
ஓ! சமவயதுக்காரர் இல்லை.. உங்களை விட கொஞ்சம் சின்னவர்னு சொல்லுங்க.. :) //
நீங்க ரஜினி ரசிகர்னு அடிக்கடி நிரூபிச்சிட்டே இருக்கீங்க :-)

// பதிவுகளுக்கு சீரியஸ் கருத்து மட்டும் போட்டா அப்புறம் தூக்கமே வராது இந்த வீ எம் க்கு //
வேலையை எளிதாக்கிய வீ.எம்மிற்கு நன்றி

@ரமேஷ்
// ஊடகங்களும், வசதிகளும் ஊர்களுக்கு இடையிலுள்ள தூரத்தை குறைத்திருக்கலாம் ஆனால் மனங்கள் தூரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. //
நல்ல கருத்து.

//'பழையன கழிதலும் புதியன புகுதலும்//
அமாங்க பள்ளி நண்பன் பள்ளியோடு..... உடன் தங்குபவன் தான் இன்றைக்கு..... மனசுக்கு தினமும் போகிப் பண்டிகை தாங்க

Vaa.Manikandan said...

//ஒரு நாளில் எவ்வளவு நேரம் வெட்டியா பொழுது போக்கலாம்நு நினைக்கிறீங்க?".//

நல்ல சேனல் நிறைய இருக்கு பா! எஃப்,எம்னு.

வீ. எம் said...

நீங்க ரஜினி ரசிகர்னு அடிக்கடி நிரூபிச்சிட்டே இருக்கீங்க :-)


Enna Artham?????????????????????????????????????????????????
Puriyalaye!

துளசி கோபால் said...

டி.வி. ஒரு தொல்லைன்னுதான் இருக்கு. நான் டிவி. பைத்தியமா இருந்து எப்படி அதுலே இருந்து விடுபட்டேன்றதை ஒரு பதிவாப் போட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை வரவழைக்கணுமா இல்லையா?

ஆனாலும் வீட்டுலே டிவி. இருக்கத்தான் வேணும். இல்லேன்னா எப்படி சினிமா பாக்குறதாம்?

இங்கே நியூஸியிலேயும் சன் டிவி. வர ஆரம்பிசிருச்சு. நான் தான் மறுபடி வலையிலே வுழக்கூடாதுன்னு வேணாமுன்னு சொல்லிட்டேன்.

இராமநாதன் said...

டிவி என்பது அவசியமான விஷயம்னு நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்கு பாடம் கெட்டுபோகுதுன்னு சொன்னாக் கூட எத்தனையோ புதுவித exposure கிடைக்குது. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாலே கொஞ்சம் யோசிச்சு பதில் சொன்ன காலம் போய், சின்ன சின்னப் பசங்களெல்லாம் எத்தனையோ விஷயங்களை தெரிஞ்சு வச்சுகிட்டு அசத்தறாங்க. அதுக்கு டீவிக்குத்தானே நன்றி சொல்லணும். படிப்பும் முக்கியம்தான் என்றாலும், வெளிவிஷயங்கள், வேறுகலாச்சார அணுகுமுறைகள் போன்றவற்றை கற்றுக்குகொடுப்பதற்கு வலையை விட குழந்தைகளுக்கு safe-ஆன ஒரு ஊடகம் டீவி. இந்த மாதிரி விஷயங்கள் முக்கியமில்லைனு சொல்ற காலமெல்லாம் மலையேறிபோச்சு. வெறும் பாடத்தையே படிச்சுவெச்சுகிட்டு என்ன செய்யறது?

வெளியே போய் ஓடி விளையாடறதுங்கறது குறைந்துதான் போச்சு. டீவீ இல்லேன்னா கம்பூயூட்டர் கேம்னு தான் இருக்காங்க சின்னபசங்க. அதுக்கு என்ன செய்யறது.

ஆனா, டிவியில் பல கெடுதல்களும் இருக்கத்தான் செய்யுது. அதற்கு வழி, தனியா சின்னவங்களுக்கு டீவி வெக்காம, பொதுவாக வைத்தால் பிரச்சனையில்லை.

தாரா அவர்கள் சொல்வது போல், ஒருவர் வீட்டுக்கு போனால், டிவீயை ஆப் செய்யாமல், அதில் ஒரு கண் வைத்துக்கொண்டே நம்முடன் பேசி எரிச்சல் மூட்டுவோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வீ. எம் said...

நீங்க ரஜினி ரசிகர்னு அடிக்கடி நிரூபிச்சிட்டே இருக்கீங்க :-)

idhukku innum answer varala.. badhil solreengala.. illai vazhakkadu mandrathula sandhikkalama?
:)

Go.Ganesh said...

@மணி
// நல்ல சேனல் நிறைய இருக்கு பா! எஃப்,எம்னு. //
அட ரொம்ப கவனமா இருக்கீங்க போல... இந்த சேனல எல்லாமா நீங்க பார்க்கறீங்கன்னு கேட்டா நான் சொன்னது "சூரியன் எஃப் எம்னு" சொல்லி தப்பிச்சுக்கலாம்னு பார்க்கறீங்களா??

@வீ.எம்
//idhukku innum answer varala.. badhil solreengala.. illai vazhakkadu mandrathula sandhikkalama?//
விட்டா விசாரணை கமிஷன் வச்சு விசாரிக்க சொல்வீங்க போல..
அத வேற ஒண்ணும் இல்லைங்க... ரஜினி சார் தான் வயச குறைச்சுகிட்டு நயந்தாரா கூட டூயட் பாடிட்டு இருக்காரு....நீங்களும் வயச குறைக்க பார்க்கறீங்கல்ல அத சொன்னேன்

@துளசி
// பதிவாப் போட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை வரவழைக்கணுமா இல்லையா? //
ஓஹோ பதிவு போடறது எப்படின்னு அடுத்த பதிவு போட்டு அதில முதல் ஐடியாவா இதை சேர்க்கலாம் போல இருக்கே

//் தான் மறுபடி வலையிலே வுழக்கூடாதுன்னு வேணாமுன்னு சொல்லிட்டேன். //
வீட்ல கோலங்கள் போடறதில்ல மெட்டி ஒலி கேட்கறதில்லைன்னு சொல்லாம சொல்றீங்களா ??

@ராமநாதன்

//தாரா அவர்கள் சொல்வது போல், ஒருவர் வீட்டுக்கு போனால், டிவீயை ஆப் செய்யாமல், அதில் ஒரு கண் வைத்துக்கொண்டே நம்முடன் பேசி எரிச்சல் மூட்டுவோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//
இன்று (செப் 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாப்பையா பட்டி மன்றம் போட்டாங்க பாத்தீங்களா... அங்கேயும் இதே தலைப்பு தான்.... அறிவியல் கண்டுபிடிப்புகளால் நெருக்கடியா நிம்மதியா??
நல்லா இருந்தது. பார்த்தீங்களா ராம்ஸ்

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

யே யப்பா நீங்கெல்லாம் டி.வீல இவ்வ்வ்வ்ளோ பாக்குறீங்களா?
அட போங்கப்பா எப்ப வீட்டுக்குப் போனாலும் Barney யும் Bob the Builder வகையறாக்கள்தான் ஓடிக்கிட்டு இருக்கு.

தத்துவம்: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
தமிழ் நாட்டில் டி.வி ஒரு கொடுமை அதை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு அமிர்தமாக்கிவிடாதீர்கள்.
அதுவும் நல்ல நாளில் திரிஷா சிம்பு அப்படீன்னு ஒரே நட்சத்திரமயம்தான். நல்லவற்றை எடுத்துச் சொல்ல ஒரு உருப்படியான டி.வி இல்லை.

இராமநாதன் said...

இல்லியே கணேஷ்
இங்க தமிழ் சானலெல்லாம் பாக்க கிடைக்கறதில்லை. கடைசில பாப்பையா என்னதான் சொன்னார்?

//நல்ல நாளில் திரிஷா சிம்பு அப்படீன்னு ஒரே நட்சத்திரமயம்தான்//

அதுதான் பிரச்சனையே. தமிழ் சானல் எல்லாத்திலேயும் சினிமா இல்லேன்ன மெகா சீரியல் தான் பெரும்பாலும் ஓடுது. தீபாவளின்னாலும், சுதந்திர தினமானாலும் எதுவானாலும் சிம்ரன், திரிஷா டான்ஸ் தான் எல்லாத்துக்கும்.அப்புறம் ரெண்டு வேலையில்லாத நடிகர்கள் பேட்டி. இதெல்லாம் யாருக்காக போடறாங்கன்னு தெரியல.

துளசி கோபால் said...

ராமனாதன்,
அச்சச்சோ!
//சிம்ரன், திரிஷா டான்ஸ் தான் எல்லாத்துக்கும்.அப்புறம் ரெண்டு வேலையில்லாத நடிகர்கள் பேட்டி. இதெல்லாம் யாருக்காக போடறாங்கன்னு தெரியல.//

அப்ப ஊருக்கு லீவுலே போறேன்னு போயிட்டு எல்லாம் வேஸ்ட் தானா?

நம்மைமாதிரி நாட்டுநடப்பைத் தெரிஞ்சுக்க ஆசைபடுற தமிழ் ஜனங்களுக்கு சினிமா நடிக/நடிகைகள் மூலம் நூஸ் சொல்றாங்களே! இந்த சேவையை மறக்க முடியுமா?

கணேஷ்,

மெய்யாலுமே கோலமும் இல்லை மெட்டி ஒலியும் இல்லை!

அன்பு said...

அட போங்கப்பா எப்ப வீட்டுக்குப் போனாலும் Barney யும் Bob the Builder வகையறாக்கள்தான் ஓடிக்கிட்டு இருக்கு.

கல்வெட்டு... உங்க ஜீனியருக்கு 4+ வயசா... அதை ஏன் கேட்கறீங்க. அப்ப அடுத்தவருஷம் டிஸ்னி ப்ளேஹவுஸ், கார்ட்டூன் நெட்வொர்க் ஓடும்:)