Tuesday, November 15, 2005

தலைவர்

கொஞ்ச நாளாகவே (வீ.எம் "பாவம் அவரை விட்டுவிடுவோமே" பதிவு போட்டதிலிருந்து) தலைவரைப் (ரஜினிகாந்த் @ சிவாஜி ராவ் கெய்க்வாட்) பற்றி பதிவிடணும்னு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த பதிவு. இந்த பதிவு நம்ம ரஜினி ராம்கியை பனிக்கட்டி மழையில் நனைக்கணும்னோ அல்லது அடுத்த தலைவர் படத்துக்கு (சிவாஜி) முதல் ஷோ டிக்கட் வாங்கணும்னோ எழுதப்பட்டதல்ல. மேலும் இந்த பதிவு எந்தளவிற்கு தேவை, தேவையில்லை, உபயோகமானது, உபயோகமில்லாதது ஆகிய கருத்தாய்வுகளை உங்களது கண்ணோட்டத்திற்கே விட்டு விடுகிறேன். இது என் எண்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவு தான்.

ரஜினி சாரை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிவிட்டதால் கட்டுரையில் ரஜினி என்று ஒருமையிலேயே அழைக்கிறேன். ரசிகன் என்ற தகுதியில் அவரிடம் கேட்காமலேயே அவரிடம் நான் எடுத்துக்கொள்ளும் உரிமை இது.

நான் சிறுவனாக இருந்த பொழுது என் வீட்டினருகே ஒரு அண்ணன் வசித்து வந்தார். பெயர் அந்தோணி. தீவிர ரஜினி ரசிகர். அவரிடம் எப்பொழுது பேசினாலும் ரஜினி ரஜினி ரஜினி தான். "அவன் இப்படி அடிப்பான் அப்படி அடிப்பான் அவன் ஸ்டைலே ஸ்டைலப்பா" ஆகிய புகழாரங்கள் தான் எப்போதும். போதாக்குறைக்கு வீட்டு எதிர்ப்புறமிருக்கும் மின்கம்பத்திலிருந்து முச்சந்தி விநாயகர் கோயில் சுவர் வரை "ரஜினி" தான். எனக்கு அப்போ வயசு எட்டு. அந்தோணி அண்ணன் என்னை விட ஒரு எட்டு வயது மூத்தவர். தளபதி படம் பத்து நாளில் ரிலீஸ் ஆகயிருந்தது. வழக்கம் போல் அந்தோணி அண்ணனின் ப்ரிரிலீஸ் (pre-release) வேலைகளும் ஆரம்பித்தன. தட்டி போர்டு, கலர் பெயிண்டு என மும்முரமானார். சும்மா ஐந்து நாள் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்தார். விளைவு எங்க ஏரியாவுல இருக்கிற தென்னை மரம், பஞ்சாயத்து அடி பம்பு என எல்லா இடங்களிலும் தளபதி என்ற வாசகம்.


அவர்கிட்ட போய் கேட்டேன். எண்ணன்னே வேலை எல்லாம் முடிஞ்சாதுன்னு. ஆமாம்பா முடிஞ்சது ஒரு ரெண்டு நாள் ரெஸ்டெடுத்திட்டு தலைவர் படம் முதல் ஷோ பார்த்துற வேண்டியது தான். "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" அவர் ஆர்வம் எனக்கு தொற்றிக் கொண்டது. என்னைப் பார்த்து சிரித்தவர் சரியென்று சொல்லிவிட்டு தளபதி போஸ்டர் ஒன்றை காண்பித்தார். தளபதி படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட்டிற்காக ரஜினி தலை முடியைக் கொண்டை போட்டிருப்பார் அந்த கெட்டப்பில் இருந்த போஸ்டர். தட்டி போர்டுக்காக வைத்திருந்த பெரிய சைஸ் போஸ்டர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் மனதில் பதித்த முதல் ரஜினி போஸ்டர் அதுதான். அன்றிலிருந்து பசையிடாத போஸ்டர் ஒன்றும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதிலும் ரஜினிதான். அந்தோணி அண்ணன் தந்த ஊக்கம் அடம்பிடித்து அப்பாவுடன் சென்று தளபதி முதல் ஷோ பார்த்தேன். புரியாத விஷயங்களை அப்பா விளக்கினார். இப்படியாக விவரம் தெரிந்து நான் புரிந்து பார்த்த படம் "தளபதி". மகாபாரதக் கதையென்பதால் சீக்கிரமே பிடித்துக் கொண்டேன் போல. அன்றிலிருந்து நான் ரஜினி ரசிகன்.

அன்றைக்கு எனக்கிருந்த மனவளர்ச்சியில் ரஜினி யார்? அவனது பின்புலம் என்ன? நன்றாக நடிப்பானா? என்றெல்லாம் எனக்கு கேட்கத் தெரியவில்லை. அப்பொழுதிருந்து அநேகமாக ரஜினியின் அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறேன். ரஜினி திரையில் வில்லனை அடித்தால் இங்கே எனது உள்மனம் வீறு கொண்டெழும். இந்த மாதிரி உணர்ச்சிகளை திரைப்படம் பார்க்கும் அனைவரும் ஏதேனும் ஒரு வயதில் அனுபவித்திருப்பார்கள். அதே உணர்வு தான் எனக்கும்.
அவ்வப்போது அந்தோணி அண்ணனுடன் போஸ்டர் வேலை அப்படி இப்படியென்று நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

பின்னர் வயது ஏற ஏற பக்குவம் வந்தது. சினிமாவை அலசி ஆராயும் தெளிவும் வந்தது. ஆனால் இந்த பக்குவமும் தெளிவும் மற்ற நடிகர்களின் படங்களிற்கு மட்டும் தான். ரஜினி படங்களை அலசிப்பார்க்க ஆராய என்னால் முடியவில்லை. எனக்கு ஆங்கிலத்திற்கு ABCD போல சினிமாவுக்கு ரஜினி. ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் ஆரம்பிக்கும் இந்த உணர்ச்சி மழை முதல் நாள் முதல் ஷோ படம் முடிந்ததும் குறைந்து விடும். பின்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். இன்று வரை இப்படித்தான் செல்கிறது. ஒவ்வொரு முறை ரஜினி படம் பார்க்கையிலும் அதே பழைய சிந்தனைகள் தான். தன்னிலை உணராமல் என்னை மறந்த நிலையிலேயே இன்றும் ரஜினி படங்களைப் பார்த்து வருகிறேன். இதில் பகுத்தறிவை என்னால் புகுத்த முடியாது. அப்படி புகுத்துகிறேன் என்றால் நான் திரும்பவும் ABCD படிக்க ஆரம்பிக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.

டெல்லியில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவது அரிது. அதனால் பெரும்பாலும் திருட்டு சிடிக்களிலேயே படங்கள் பார்ப்பதுண்டு. (யாரும் போட்டுக்கொடுத்துறாதீங்க சாமி...) சந்திரமுகி ரிலீஸ் ஆகும் பொழுது என்னையும் அறியாமல் ஒருவித ஏமாற்றம் முதல் ஷோ பார்க்கமுடியவில்லையே என்று. ஆனால் தியேட்டருக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டேன். என் ஆசை வீண் போகவில்லை. டெல்லியில் சந்திரமுகி திரையிடப்பட்டது. போய் பார்த்துவிட்டு வந்து நான் எழுதிய பதிவுதான் "ரசிகனின் ஆட்டோகிராஃப்". அன்றும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன் "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" என்று அந்தோணி அண்ணனிடம் கேட்டதை.

தமிழ்மணத்திற்கு வரும் வரை ரஜினி என்பவன் நான் செய்ய முடியாததைத் திரையில் செய்யும் ஒரு பெரிய சக்தி அவ்வளவு தான். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்த பிறகு ரஜினி என்னும் அந்த திரை சக்தியின் சில பரிணாமங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. சந்திரமுகி விமர்சனம் எழுதிய அல்வாசிட்டி அண்ணாவின் வலைப்பதிவை ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். இதெப்படி சாத்தியமாயிற்று. ஒவ்வொரு வலைப்பதிவரும் பார்த்தார் என்றால் எண்ணிக்கை 800ஐத் தாண்டியிருக்க முடியாது. இதில் பகுத்தறிவுவாதிகள் பாதி பேர். (எழுத்தாளர்கள் அல்லவா...). நான் இப்படி சொல்கிறேனே என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் இருந்தாலும் எனக்கு பெரிய புதிராகவே உள்ளது. ஒருவேளை என்னிடம் இருக்கும் அந்த "தளபதி" மனம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது போல.

இன்னொரு பரிணாமம் ரஜினி ராம்கி. என்னால் ரஜினி ராம்கி போல் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு என் ஆளுமை ஒப்பவில்லை (இது தான் பகுத்தறிவு என்று சொல்பவர்களுக்கு வாயில் அவல்). ஆனால் என்று ரஜினி என்பவனுக்கு இத்தனை பெரிய ரசிகர் மன்றம் இருக்கிறதென்று தெரிந்ததோ அதில் இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறதென்று தெரிந்ததோ (பார்க்க http://rajinifans.com/activities/index.asp) அதுவும் ரஜினி ராம்கி போன்ற அன்பர்களால் நடக்கிறதென்று தெரிந்ததோ அன்றே என்னையும் அந்த குழுமத்தில் இணைத்துக் கொண்டேன் (இன்றுவரை அந்த குழுமத்திலிருந்து உபயோகமாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும்). தன்னலமில்லாமல் கட்டப்பட்ட ஒரு வீடு அது. தெரிந்தோ தெரியாமலோ என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.

பி.கு

வீ.எம் பதிவுக்கு நானளித்த பின்னூட்டத்தில் சொன்ன வரிகள் "இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் வேண்டாமென்று யோசிக்கிறான், அமைதி தேடி இமயமலை போறான், இவனிடம் அரசாங்கத்தை கொடுத்தால் "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன? ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன்."

Monday, November 14, 2005

நட்சத்திரம் வாரம் சுபமஸ்து

ஒரு வழியாக நட்சத்திர வாரம் முடிவடைந்து விட்டது. ஆறு பதிவுகள் எழுதியாச்சு. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டாச்சு. எந்த வேலையிலும் ஓய்வு வேணுமில்ல. ஆறு பதிவுகளும் ஓரளவிற்கு நன்றாக இருந்தன என்று நினைக்கிறேன்.

கட்டுரை கவிதை கதை என்று எழுதிடலாம்ணு நினைச்சேன். கதை எழுதுவது எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. எழுதிய ஒரு கதையைப் பதிவிடாமலேயே விட்டு விட்டேன். ரம்யா அக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

நான், எனக்கு வேண்டியவர்கள், சமுதாயம், கடவுள், குடும்ப வாழ்க்கை, என் ஆதர்சன் என்று இந்த வாரம் இனிதே சென்றது. எழுதிய ஆறு பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எனது ஆசிரியரைப் பற்றி எழுதிய பதிவுதான்.

அறிவியல் சார்ந்த ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து தான் ஐன்ஸ்டீனைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதுவும் ரஜினி டி.ராஜ், ரஜினி ராம்கி ஆகியோரால் பாராட்டப்பட்டது. ராஜ் நான் செய்த தவறுகளை அழகாகவும் கண்ணியமாகவும் சுட்டிக் காட்டினார். முதல் முயற்சி என்பதால் சில தவறுகள் வந்து விட்டன. எதிர்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

அடுத்த பதிவு "என் மனைவியின் டைரிக் குறிப்புகள்". ஒரு சிக்கலான பதிவாகையில் இதில் சில சர்ச்சைகளும் இருந்தன. உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே. மெளனராகம் படம் பார்த்த தாக்கத்தில் எழுதியது. அதை ஒரு பின்னூட்டத்திலும் கோடிட்டு எழுதியிருந்தேன். அதற்கு "கல்வெட்டு" தந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததாக அப்துல் ரகுமான் கவிதை. ஒவ்வொரு மனிதனும் தனித்திருக்கும் பொழுது சில மனிதர்களைப் பற்றி எண்ணுவதுண்டு. அப்படி நான் தனித்திருக்கும் பொழுது அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒரு நபர் அப்துல் ரகுமான். நான் நேசிக்கும் ஒரு கவிஞர். எனக்கு ஆதர்சனப் புருஷர். அதனால் அவரது கவிதை ஒன்றை பதிவாக்கினேன்.

அப்படி இப்படி ஒரு வாரம் முடிந்தது. சொன்னது போலவே அழகாகவும் ஆழமாகவும் எழுதினேன் என்று நினைக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிந்த அனைவருக்கும் என் நன்றி.

நான் வலைப்பதிவுலகில் அதிகம் நேசிக்கும் நண்பர்கள் வீ.எம் & வா.மணிகண்டன் இங்கு வராதது வருத்தத்தைத் தந்தாலும் புதிய நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். அதற்காக மகிழ்கிறேன். மேலும் சந்திரவதனா, ரம்யா அக்கா எல்லோரும் என் பதிவுக்கு சுட்டிகளை நிறுவி தங்கள் பதிவினை ஆரம்பித்திருந்தனர். சந்தோஷமளித்த விஷயங்கள்.

நான் வலைப்பதிய ஆரம்பித்தது திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களைப் பார்த்து தான். இது வரையிலும் அவர் என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் என் வலைப்பதிவுகள் தொடரும் வழக்கம் போல உங்கள் ஆதரவுடன்

Saturday, November 12, 2005

அப்துல் ரகுமானும் புத்தகங்களும்

சமீபத்தில் ஒரு ஹைக்கூ படித்தேன்.
"புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்".

யார் எழுதியது என்று தேடிப் பார்த்ததில் கவிஞர் அப்துல் ரகுமான் எழுதியது என்று தெரிய வந்தது. சரி அப்துல் ரகுமானைப் பாராட்டி பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். சூரியனைப் பற்றி ஒரு தீக்குச்சி எழுதலாமா அல்லது எழுததான் முடியுமா? முயற்சியைக் கைவிட்டு விட்டேன். ஆனாலும் மனசு கேக்கல. நாம தான் எழுத கூடாது வேற யாராச்சும் எழுதியிருப்பாங்க அத்த எடுத்து போடலாம்னு நினைச்சேன். "பித்தன்" கவிதைத் தொகுப்பை எடுத்து படிக்கலானேன். ஆனால் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே. அவரைப் பற்றி அவரே இரு கோணங்களில் எழுதியிருந்தார். அநேகமாக எல்லோரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே இந்த பதிவு.

அவர் ஆலாபனை என்றொரு தொகுப்பும், பித்தன் என்றொரு தொகுப்பும் எழுதியிருக்கிறார். ஆலாபனையை நேர்களின் ரசிகன் என்றும் பித்தனை எதிர்களின் உபாசகன் என்றும் கூறியிருக்கிறார். பித்தன் எதனை எல்லாம் முரணாக பார்க்கிறான் என்பதை பித்தன் என்னும் தொகுப்பில் கவிதைகளாக்கியிருக்கிறார்.

உங்களுக்காக ஒரு கவிதை இங்கே. அதிலிருந்து எடுத்தது தான் மேலே சொல்லியிருந்த ஹைக்கூ.

புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

எனக்கென்னவோ முரணாக சொன்னாலும் இன்றைய தேதியில் அதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது. விளைவு பித்தன் எனக்கு சித்தனாகிப் போனான்.

Friday, November 11, 2005

என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். அடிக்கடி எழுதிய கவிதைகளை என்னிடம் படிக்க கொடுப்பார். எனது விமர்சனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். சமீபத்தில் ஒரு கவிதை எழுதி என்னிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள் என்று சொன்னேன். அவருக்கிருந்த தாழ்வு மனப்பான்மையால் அனுப்பாமல் விட்டு விட்டார். வலைப்பூ நண்பர்களுக்காக அவரிடம் அந்த கவிதையைக் கேட்டு வாங்கி இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.

நண்பர் திருமணமானவர். இந்த கவிதை எனக்கென்னவோ கற்பனையில் வந்ததாக படவில்லை. நீங்களும் படித்து விட்டு கருத்துக் கூறுங்கள்.

************************************
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

"எனக்கு திருமணமான பின்பும்
என்னை மனதில் வைத்துக்
கொண்டிருக்கும் காதலனுக்காக...


கோடி முறை யோசித்து
நீ எழுதிய எனக்கான காதல் கடிதம்
பத்திரமாக இருக்கிறது
மடித்து வைத்த
என் கூரைச் சேலை மத்தியில்

முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்
மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று..."

இப்படியாக நீள்கிறது
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

************************************

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காதலன் நினைவில் வாழும் மனைவியின் அன்பான கணவன் என வித்தியாசப்பட்ட கவிதை.
படித்து முடித்து நான் கேட்ட முதல் கேள்வி "ஏன் சார் மனைவியின் டைரியைப் படிச்சீங்க?"

நீங்களே சொல்லுங்க நான் கேட்டது தப்பா?

Thursday, November 10, 2005

பிறப்பும் இறப்பும் (God does not play dice)

நான் ஏற்கனவே கடவுளைப் பற்றிய ஒரு பதிவெழுதியிருந்தேன். ஆனால் அது முற்றிலும் சினிமாவைச் சார்ந்தது. அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் இங்கு எடுத்தாள ஆசைப்படுகிறேன்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

ஒரு ஊரில் வயதான ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக மாடியில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அவரது மனைவி கீழே ஏதோ பலகாரம் செய்து கொண்டிருக்கிறார். வாசம் அவரது மூக்கை துளைக்கிறது. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று இவருக்கு ஆசை. உடனே மனைவியைக் கூப்பிடுகிறார். மனைவியிடமிருந்து பதிலேதுமில்லை. இவரால் ஆசையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி கீழே இறங்கி சமையலறை வரை வந்து விடுகிறார்.

நோய்வாய் பட்ட கணவனை சமையலறையில் பார்த்ததும் மனைவிக்கு பதட்டம். எதற்காக கீழே இறங்கி வந்தீர்கள் எனக் கேட்கிறார். பலகாரம் சாப்பிட வந்ததாக கூறுகிறார். இந்த பலகாரம் வேறு விஷயத்திற்காக வைத்திருப்பதாகவும் அதனைத் தொடக்கூடாது என்று சொல்கிறார். வயோதிகருக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. எதற்காக வைத்திருக்கிறாய் என மனைவியிடம் கேட்கிறார். அதற்கு மனைவியும் நாளைக்கு அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர் சொன்னதாகவும் அவருக்கு இஷ்டமான பலகாரங்களை ஈமச்சடங்கில் வைக்க வேண்டுமென்பதால் இந்த பலகாரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட உடனே அந்த வயோதிகர் இறந்து விடுகிறார்.

உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை என்பதற்காக சொல்லப்பட்ட துணுக்கு. ஆனால் அதில் இன்னொரு நல்ல கருத்தும் அடங்கியிருக்கிறது. மனிதன் மரணப்படுக்கையில் இருந்தாலும் அவனது ஆசைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.

எல்லோருக்கும் ஐன்ஸ்டீனைப் பற்றி தெரியும். மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இவரும் ஒரு சராசரி மனிதனைப் போல் தன் ஆசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் இவரது ஆசை விசித்திரமானது. ஆசைப்படுவதிலும் இவருக்கு நிகர் இவரே. மரணப்படுக்கையில் இருக்கும் பொழுதும் தன் மூக்கு கண்ணாடி, தன் கருவிகள் மற்றும் தன் அண்மைக்கால சமன்பாடுகளைத் தான் இவர் கேட்டார். நினைவு வருவதும் போவதுமாக இருக்கிறது. அந்த நிலையிலும் கண்டுபிடிப்புகளில் சிறந்ததென்று இவர் நினைத்த "கடவுளின் மூளையை" வெளிப்படுத்தும் ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்.


எனக்கு கடவுளின் எண்ணங்கள் தெரிய வேண்டும் (I want to know God's thoughts). இது தான் இவரது கடைசி ஆசை. இந்த ஆசையைப் பற்றி இவர் முன்னமே சொல்லியிருந்தார். "அனைத்துமே கடவுளின் எண்ணங்கள் தான் மற்றவை எல்லாம் வெறும் விவரங்கள் தான். (I want to know God's thoughts – the rest are mere details). இந்த ஒரு ஆசையினாலே இவர் அறிவியல் அறிஞர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தார். தனக்கு 20 வயதிருக்கும் பொழுது அறிவியல் உலகில் முத்திரை பதிக்க இவர் முயற்சி செய்து கொண்டிருந்த காலம். 1905 ஆம் வருடம் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்த வருடம். இவரது ஆய்வறிக்கைகள் உலகை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு சான்றாக அமைந்தன.

சார்பியல் கோட்பாடு (Theory of relativity): E=mc2 என்பதை இவர் கண்டுபிடித்து வெளியிட்ட ஆண்டு. உலகிலுள்ள அனைத்து சடப்பொருள் எல்லாம் மூலக்கூறுகளால் ஆனவை என்று சொன்னார். (All matter is composed of molecules). அந்த காலத்தில் நேரம் என்பது வரம்பற்ற மாறாத ஒன்றாக கருதப்பட்ட காலம். அந்த காலத்தில் தான் நேரம் என்பது நாம் பயணிக்கும் வேகத்தைச் சார்ந்ததென்று E=mc2 என்னும் சமன்பாட்டினால் நிரூபித்தார். இன்றளவும் கணிதத்திலும் சரி அறிவியலிலும் சரி மிக உயர்வாக கருதப்படும் சமன்பாடு இது.

பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் பொதுப்படையான சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார் (Theory of general relativity). நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்றாலும் அதற்கு என்ன காரணம் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐன்ஸ்டீன் தனது பொதுப்படையான சார்பியல் தத்துவத்தில் புவி ஈர்ப்பு விசை என்பது நேரத்தையும் வெளியையும் பொருட்கள் வளைப்பதால் வருவது என்று கூறினார். (bending of time and space by massive objects). இது 1919ஆம் ஆண்டு வானூலார்களால் சூரிய கிரகணமன்று நிரூபிக்கப்பட்டது.

பின்னர் இவர் துளியம் விசையியல் (quantum mechanics) பற்றிய ஆய்வறிக்கைக்காக நோபல் பரிசு பெற்றதும் நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் 1920 ஆம் ஆண்டு நீல்ஸ் போர், ஸ்க்ராடிஞ்சர், ஹெய்சன்பர்க் ஆகிய ஆய்வாளர்களால் ஐன்ஸ்டீனின் துளியம் பற்றிய ஆராய்ச்சி பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அவர்கள் சொன்ன விஷயம் இது தான் உலகில் எதையுமே தீர்மானமாக சொல்ல முடியாது, ஒரு பொருளின் வேகத்தைச் சரியாக சொல்லலாமே ஒழிய அதன் நிலையை சரியாக சொல்ல முடியாது. (speed of a particle but not its position). ஐன்ஸ்டீன் "கடவுள் என்னும் ஒரு பெரிய சக்தி" தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தீர்க்கமாக நம்பினார். அதன் மூலம் உலகிலுள்ள எல்லாவற்றையும் கணித சமன்பாடுகள் மூலம் எளிதாக விளக்கி விடலாம் என்றும் பெரிதும் நம்பினார். அதனால் இவர் மற்ற கருத்தாய்வுகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டார். அதனாலேயே அடிக்கடி பல்வேறு ஆராய்ச்சியாளர்களுடன் இவருக்கு தர்க்கம் செய்ய வேண்டியதாகி விட்டது.

1920ல் சால்வே கலந்தாய்வில் இந்த தர்க்கம் முற்றியது. நீல்ஸ் போருடன் இவரது அந்த தர்க்கம் தான் இன்றளவும் ஒவ்வொரு மனிதனின் கடவுள் பற்றிய கேள்விகளின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். அதில் ஐன்ஸ்டீன் சொன்னது "கடவுள் பகடையாடுவதில்லை. அவரின் கணக்கில் எல்லாமே தீர்க்கமானது தான். அதில் வாய்ப்புகளுக்கு இடமில்லை" (God does not play dice, meaning that nothing would be left to chance in the universe). அதற்கு நீல்ஸ் போரும் அவருடன் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்களும் சொன்ன பதில் இது தான் "Einstein, stop telling God what to do with his dice".

ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தில் உலகை எப்படியும் ஊகித்து விடலாம். அதற்கு எளிய கணிதச் சமன்பாடுகள் போதுமென்று கூறினார். ஆனால் கடைசி வரை இதை இவரால் நிரூபிக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால் இன்றளவும் இயற்பியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கும் நிறைய ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கும் இந்த தத்துவமே காரணம்.

ஒரு வேளை ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை நிரூபித்திருந்தால் உலகில் இன்று எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கும். முக்கியமாக நாத்திகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் மனிதனின் தோற்றத்திற்கான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க முடியவில்லை. அந்த பதில்களுக்கு மிக அருகில் சென்று வந்தவர் என்பதால் தான் ஐன்ஸ்டீன் இன்றளவும் எல்லோராலும் போற்றப் படுகிறார். ஆசைப்படுபவர்கள் எல்லாரும் இவரைப் போல ஆசைப்பட வேண்டும். இதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை.

பி.கு.
மனிதனின் கடவுள் நம்பிக்கை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளைத் தேடியதன் விளைவு தான் இந்த பதிவு.

பார்க்க + படிக்க
'Einstein', Peter D Smith, (Life&Times series) Haus Publishing, ISBN 1-904341-15-2

Wednesday, November 09, 2005

வருத்தப்படாதவர்கள் சங்கம்

முன்னறிவிப்பு:

இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. என் வயதில், என் அனுபவத்தில், எனக்கு நியாயமென்று தோன்றிய சில ஆதங்கங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் திண்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் திண்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் தன் ஏழ்மை நிலை காரணமாக புற்களைத் திண்பதாக சொல்கிறான். உடனே அவனை தன் வண்டியில் ஏற சொல்கிறார்.

வண்டியில் செல்லும் பொழுது அந்த விவசாயி தன் வீட்டில் தன் மகனும் மனைவியும் புற்களைத் திண்று கொண்டிருப்பதாக சொல்கிறான். அதற்கு அந்த பிரபு அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார். உடனே அந்த விவசாயி தன் அண்ணனும் அவன் மனைவி மக்களும் புற்களைத்தான் திண்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வதாக பிரபு உறுதியளிக்கிறார். பூரிப்படைந்த விவசாயி உங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கும் பொழுது ஏன் முன்னமே பணியாட்களை அந்த வேலைகளுக்கு அமர்த்தவில்லை என்று கேட்கிறான். அதற்கு அந்த பிரபு "என் வீட்டு தோட்டத்தில் புற்கள் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன அவைகளை நீக்குவதற்காகவே உங்களை அழைத்துச் செல்ல சம்மதித்தேன்"

என்று சொல்கிறார். வேடிக்கைக்காக சொல்லப்பட்ட விஷயம் தான் என்றாலும் அதிலுள்ள கருத்து ஆழமானது. பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் ஆசிரியர் தின விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர் ஆசிரியர்கள் மீது ஒரு குற்றம் சாட்டினார். வாங்கும் சம்பளத்தை வைத்து திருப்தி கொள்ளாமல் அரசாங்க ஆசிரியர்கள் வட்டிக்கு விட்டு பிழைக்கிறார்கள் என்று சொன்னார். நானும் என் நண்பனின் அப்பாவும் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். இந்த வட்டிக்கு விட்டு பிழைப்பது என்பது சிறிது காலத்திற்கு முன் பணக்காரர்கள் மட்டும் செய்து வந்த தொழில். இந்த விஷயத்திற்காகத்தான் நம் முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தான் நடித்து வெளியாகிய அநேக படங்களில் போராடியிருப்பார். அந்த படங்களைப் பார்த்தாலே புரியும். ஒரு பண்ணையார் இந்த தொழில் செய்து ஊர் மக்களையும் ஏழை விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பார். தலைவர் அவர்களைத் தட்டிக் கேட்டு ஏழைகளைக் காப்பாற்றுவார்.

இன்று நிலைமை வேறு தெருவுக்கு ஒருவரேனும் இந்த வட்டிக்குக் கொடுத்து வாங்கும் தொழிலில் இருக்கிறார். விவசாய நிலங்கள் இருக்கும் கிராமங்களில் கண்டிப்பாக ஐந்திலிருந்து பத்து பேர் இந்த தொழிலில் இருப்பார்கள். இவர்களில் சிலருக்கு இது மட்டும் தான் தொழிலாக இருக்கும். சிலருக்கு இதுவும் ஒரு தொழிலாக இருக்கும். எப்படியிருப்பினும் பொருளீட்டுவதே இதன் உள் நோக்கம். இந்த தொழிலுக்கு அடிப்படை தேவை நிலையான பண ஆதாரம் (constant money source என்று சொல்வார்கள்). இன்றைய தேதியில் அது அரசு அலுவலர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் இந்த வட்டிக்கு கொடுத்து வாங்கும் பழக்கமுள்ளவர்களில் அரசு அலுவலர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்களுக்கு இது தொழில் கிடையாது. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பள பணத்தை வைத்து அதிக பொருளீட்டும் ஒருவித வியாபாரம் அவ்வளவே. எப்படி பார்த்தாலும் இது தட்டிக் கேட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த தொழில் செய்வதில் எந்த விதத்திலும் நியாயம் இருக்க முடியாது.

இந்த தொழிலில் இருக்கும் சிலரைக் கேட்டால் நாங்கள் நியாயமான வட்டிக்குத் தான் பணத்தை வழங்குகிறோம் என்று சொல்வார்கள். தொழிலே அநியாயம் என்று சொல்லும் பொழுது அதன் இயக்கம் மற்றும் எப்படி நியாயமாக இருக்க முடியும்? என்று கேட்டால், மக்களின் தேவைக்காகத்தான் நாங்கள் இந்த தொழில் செய்கிறோம் என்று சொல்வார்கள். இந்த பதில் எப்படியென்றால் ஏமாறுகிறவன் இருக்கிற வரை நாங்கள் ஏமாற்றுவோம் என்று சொல்வது போலாகும்.

மக்களின் தேவைக்காகத்தான் வங்கிகளுக்கு பணத்தையும் வழங்கி, ஒரு வட்டி விகிதத்தையும் அரசு நிர்ணயித்திருக்கிறது. மக்களின் பொருட் தேவையையும் கால அவகாசத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள் அநியாயம் செய்கிறார்கள். அரசூதியம் வாங்கும் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் குறைவு. அதனால் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவது வசதியாகி விடுகிறது. எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவர் மதிய உணவு இடைவேளைகளில் கூட கலெக்ஷனுக்கு சென்று விடுவார். அப்படியிருக்க என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயமென்னவெனில் இவர்கள் மேல் எழுந்த குற்றச்சாட்டிற்கு இவர்கள் காட்டிய எதிர்ப்பு தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் தோற்றதும், அந்த தோல்விக்கு அரசு ஊழியர்கள் தான் பெரிதும் காரணமென்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. நம்ம முதல்வர் என்ன செய்தார் அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனை தான் அது என்று சொல்பவர்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. நான் சொல்ல வருவது இதுதான், அரசு அலுவலர்களைப் பாதிப்புள்ளாக்கினார் என்று ஒரு ஆட்சியை முற்றிலுமாக அகற்றும் அளவிற்கு அவர்களிடம் சக்தி இருக்கிறதென்றால் அந்த சக்தியை அவர்கள் ஏன் நல்ல விஷயத்திற்காக பயன் படுத்தக் கூடாது?

உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடு இந்தியா. எந்த நாட்டில் ஊழல் அதிகம் காணப்படுகிறதென்று என்று கேட்டால் அதற்கும் இந்தியா என்று துணிந்து பதிலளிக்கலாம். நமது அரசாங்கமும் அதன் அங்கத்தினர்களும் இந்த ஒரு வார்த்தைக்கு பேடண்ட் வாங்கலாம். அரசு துறைகளில் அந்த அளவிற்கு ஊழல் அதிகம் காணப்படுகிறது. வட்டிக்கு விடுபவர்கள் பற்றி நான் சொன்னதும் இதற்காகத்தான். ஊழல் செய்ய வழி உள்ளவர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்ய வழி இல்லாதவர்கள் குறுக்குவழி ஏதேனும் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். (நல்லவர்கள் மன்னிக்கவும்... இது பெரும்பான்மை அரசு அலுவலர்களுக்கு சொல்லப்பட்ட ஒன்று)

அரசாங்கத்தைப் புரட்டிப் போடும் சக்தி மக்கள் தான் என்றாலும் அந்த அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையேயான பாலமாக இருப்பது அரசு அலுவலர்கள் தான். தனக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது மட்டும் கொதித்தெழுந்து தம் துவேஷத்தைக் காட்டும் இவர்கள் மற்ற நேரத்தில் மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குறிய விஷயம்.

Nov. 19, 1863
It is rather for us the living here be dedicated to the great task remaining before us--that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion--that we here highly resolve that these dead shall not have died in vain, that this nation shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth.
- ஆபிரகாம் லிங்கன்

இன்றைய அரசு மக்களால் மக்களுக்காக நடைபெறவில்லை. அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் இதை நடைபெற விடாமல் தடுத்து விடுகிறார்கள். இது நடைபெறாத வரை அரசாங்கம் என்பது மக்களை நினைக்காமல் மக்களுக்காக வருத்தப்படாதவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு சங்கம் அவ்வளவே.

Tuesday, November 08, 2005

திருமதி. எமிமா பால்துரை


இன்று காலை திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இந்த நாள் இனிய நாளில்" ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். தானியங்களையும் நவரத்தினங்களையும் விற்பதே அவனது தொழில். அவன் பொதி சுமப்பதற்காக இரண்டு கோவேரிக் கழுதைகளை வைத்திருந்தான். ஒரு நாள் பொருட்களை விற்பதற்காக அருகிலிருக்கும் நகரத்திற்கு சென்றான். அப்பொழுது தானியங்கள் அடங்கிய மூட்டையை ஒரு கழுதை மேலும் நவரத்தினங்கள் அடங்கிய மூட்டையை இன்னொரு கழுதை மேலும் ஏற்றினான். நவரத்தின மூட்டையை ஏற்றிய கழுதை தானியங்கள் ஏற்றிய கழுதையை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, நான் தான் பெரியவன் அதனால் தான் முதலாளி நவரத்தின மூட்டையை என் மேல் ஏற்றினார் என்று கூறியதாம். (மூட்டையில் நவரத்தினம் இருப்பது கழுதைக்கு எப்படி தெரிந்தது என்றெல்லாம் அறிவார்ந்த கேள்விகளைக் கேட்கக்கூடாது... கதை சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது). தானியங்களை ஏற்றிய கழுதையும் பதிலேதும் பேசாமல் வந்ததாம்.

நகரத்தைச் சென்றடைய ஒரு காட்டைக் கடக்க வேண்டும். வழக்கம் போல திருடன் அவர்களை வழிமறிக்கிறான். இரண்டு கழுதைகளும் ஓட ஆரம்பிக்கின்றன. திருடன் முதலில் தானியங்கள் சுமந்து வந்த கழுதையை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்க்கிறான். வெறும் தானியங்கள் இருப்பதைக் கண்டு அடுத்த கழுதையை விரட்டுகிறான். அது ஓடுகிறது. கத்தியை வீசுகிறான் கத்தி குறி தவறாமல் கழுதையின் காலில் சொருகுகிறது. நவரத்தின மூட்டையை எடுத்துக்கொண்டு திருடன் தப்பியோடி விடுகிறான். இப்பொழுது தானியங்களைச் சுமந்து வந்த கழுதை கேட்கிறது "இப்ப என்ன சொல்றீங்க? இப்ப என்ன சொல்றீங்க?". நவரத்தினங்களை சுமந்த கழுதை உண்மையை புரிந்து கொண்டதாய் சொல்கிறது "நாம் இருவரும் கோவேரிக் கழுதைகளே. இதில் உயர்வு தாழ்வென்பது கிடையாது". இதே போல் தான் மனிதனின் நிலைமையும். (மனிதனும் கழுதையும் ஒண்ணான்னு கோபப்படாதீர்கள்.) உயர்வு தாழ்வென்பது அவன் எவ்வளவு தூரம் மனிதனாக இருக்கிறான் மனிதத்துடன் இருக்கிறான் என்பதைப் பொருத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும்.

(This paragraph is meant only for தமிழ்மணம் audience) தமிழ்மணத்தில் நட்சத்திர வாரத்தில் நிறைய பேர் நிறைய நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் மனிதருக்கும் மனிதத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, உறவுகளுக்கான அந்த பாச முடிச்சுகளை வாழ்வியல் சம்பவங்களை வைத்து இளவஞ்சி எழுதியது போல வேறு யாரும் எழுதியிருக்க முடியாது. மதி அவர்களால் பிரத்யேகமாக பாராட்டப்பட்ட ஒரு நட்சத்திர பதிவர் இளவஞ்சி. இதனால் இவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசை ஏற்படுவது இயற்கையே. இந்த பதிவு முழுவதுமாக இளவஞ்சியின் பதிவுகளால் தூண்டப்பெற்றதனால் வந்ததே. (எழுத்து திருட்டுக்கு இப்பொழுதெல்லாம் தூண்டுதல் என்ற வார்த்தை தான் பொருத்தமாகயிருக்கிறது)

விவரம் தெரிந்து அழும் அழுகை மூன்று விஷயங்களுக்காக வரலாம். ஒன்று, பாசமானவர்களைப் பிரிய நேரும் பொழுது. இரண்டாவது அளவற்ற ஆனந்தம் அடையும் பொழுது, மற்றொன்று சுயநலம், ஈகோ இறந்து மனிதம் தலை தூக்கும் பொழுது. இதில் மூன்றாவது அழுகை வரும் பொழுது மனதில் ஒரு பெரிய நம்பிக்கையும் தெளிவும் வந்து போகும். அதற்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் இழக்கலாம் என்று தோன்றும். திரு.இளையராஜாவின் சென்னை இசையரங்கு நிகழ்ச்சியில் திரு.பார்த்திபன் சொன்னார் "சந்தோஷம் உச்ச கட்டத்தை அடையும் பொழுது செத்து விடலாம் என்று தோன்றும்". அப்படித்தான் இதுவும். சுயநலம் இறந்து மனிதம் பிறக்கும் பொழுது செத்து விடலாம் என்று தோன்றும். ஒன்றுமில்லை செய்த தவறுக்கு உடனேயே மன்னிப்பு மட்டும் கேட்டுப் பாருங்கள் இதன் அர்த்தமும் அதிலிருக்கும் ஆனந்தமும் புரியும். (நன்றாக இருந்தது என்பதற்காக தவறுகளாக செய்து கொண்டே போகக் கூடாது...). இந்த மாதிரியான அழுகை மன்னிப்பு கோரும் பொழுதில் மட்டுமல்ல, பிறருக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருத்தப்படும் பொழுதும் வரும். அன்பே சிவம் படத்தில் திரு.கமல் சொல்ற மாதிரி "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அதான் கடவுள்". அப்பொழுது நாம் மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்ந்து விடுகிறோம். பார்த்தீங்களா..!!!. மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும். அவன் கடவுளாகி விடுகிறான்.

போன பத்தியில் சொன்னது விவரம் தெரிந்து அழுவது. விவரம் தெரியாமல் அழுவது சிறு குழந்தைகளின் முரண்டு. எதாவது வேண்டும் என்று அழுவார்கள். சில சமயம் பக்கத்திலிருக்கும் யாரேனும் அழுதாலும் அழுது விடுவார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு துக்கமும் இருப்பதில்லை வெட்கமும் இருப்பதில்லை. அதனால் அழுகை என்பது அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது. அப்படி விவரம் தெரியாத வயதில் விவரம் தெரிந்து நான் அழுதது எனக்கு ஞாபகமிருக்கிறது. (அப்பாடா இதற்கா இவ்வளவு பீடிகை .... விஷயத்துக்கு வந்துட்டான் என்று நிறைய பேர் பெருமூச்சு விடுகிறீர்கள் போல....). எல்.கே.ஜி படிக்கும் பொழுது எனக்கு பாடம் எடுத்தவர் திருமதி.எமிமா பால்துரை. எல்லோரும் ஒரு கட்டத்தில் யாரேனும் ஒரு டீச்சரையாவது மனதில் பதிய வைத்து விடுவர். நம்ம இயக்குனர் சேரனுக்கு ஞாபகத்திலிருப்பவர் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர் (பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை...) எனக்கு எல்.கே.ஜி, ஒண்ணாப்பு, மூன்றாம் வகுப்பு என மூன்று வருடங்கள் பாடம் எடுத்தவர் தான் எமிமா பால்துரை.

நான் ஆறாம் வகுப்பு வரை படித்தது கோவில்பட்டியிலுள்ள எஸ்.டி.ஏ பள்ளியில். அதில் திரு பால்துரை அவர்களும், திருமதி எமிமா பால்துரை அவர்களும் பல காலங்களாக வேலை பார்த்து வந்தனர். சிறு பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மூன்று நான்கு வகுப்புகளைக் கவனித்துக் கொள்வார். அப்படித்தான் திருமதி எமிமாவும் எனக்கு மூன்று ஆண்டுகள் பாடம் எடுத்தார். ஒரு நாளில் அப்பொழுதெல்லாம் ஒரு பத்து மணிநேரம் நான் அவர்களுடன் தான் இருப்பேன். பள்ளி ஆரம்பமாகும் முன்பே அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன் பள்ளி முடிந்து அவர்களுடனே அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என்னைத் தொல்லையாக நினைக்காமல் என்மேல் பாசம் வைத்த இரண்டாம் தாய் என்றே அவர்களைச் சொல்லலாம். நான் முதல் வகுப்பு படிக்கும் பொழுது அவர் பேறு கால விடுமுறையில் சென்றார். இரண்டு மாதங்கள் அதனால் அவர்கள் பள்ளி வரவில்லை. அப்பொழுதெல்லாம் அப்பாவுடன் வாரத்திற்கு மூன்று முறையேனும் அவர்களைப் பார்க்க சென்று விடுவேன். அவர்களுக்கு அது பத்தாவது மாதம். அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டார்கள். அந்த நாளும் வந்தது. என் அம்மாவும் அவர்களின் உதவிக்காக அன்று விடுமுறை எடுத்திருந்தார்கள். நானும் என் அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். சொன்னபடி அறுவை சிகிச்சையும்முடிந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எமிமா அழுததைப் பார்த்து நானும் மூன்று மணி நேரம் அழுதேன். விவரம் தெரியாத வயதில் நான் அழுதது இன்றளவும் எனக்கு ஞாபகமிருக்கிறது. மிக அருகில் நான் பார்த்த முதல் பிணம் அந்த குழந்தையினுடையது தான். ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் அன்று நான் அழுதது எமிமா மேடம் அழுதார்களே என்பதற்காக அல்ல. அந்த அழுகை எதனால் வந்தது என்பதும் எனக்கு இன்று வரை தெளிவாகவில்லை. விவரம் தெரியாத வயதில் அன்று அழுதது போல் விவரம் தெரிந்து என்றைக்குமே அப்படி அழுததாகவும் எனக்கு ஞாபகமில்லை.

எமிமா மேடத்தைப் பார்த்து கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் ஊருக்கு சென்று வந்த பொழுது எமிமா மேடம் எப்படியிருக்காங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன். திரு. பால்துரை சக்கரை வியாதியால் இறந்து விட்டதாகவும் எமிமா மேடம் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் அம்மா சொன்னார்கள். இப்பொழுது வேலூரில் இருப்பதாக கேள்வி. என்றேனும் மறுபடியும் அவர்களைப் பார்த்தால் கேட்க வேண்டும் "என்னைத் தெரிகிறதா மேடம் என்று?". ஒருவேளை அன்று திரும்பவும் அழலாம் அதே பழைய அழுகையை.

படம்: நன்றி கூகிள்

Monday, November 07, 2005

நான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)

என் வேலையை எவ்வளவு நேசிக்கிறேன் என எனக்கே தெரியாது. பூலோகத்திலேயே நான் அடைந்த சொர்க்கம் என் வேலைதான். "வாழ்க்கையில் உருப்படியா எதையாவது சாதித்தாயா?" என யாரேனும் கேட்டால் இன்றளவும் நான் சொல்லிக் கொள்வது, வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று தேடிக்கொண்ட வேலையைத்தான். அப்பொழுதெல்லாம் குரலில் ஒரு கம்பீரமும் மனதில் ஒரு கர்வமும் இருக்கும். என்னை மட்டுமல்ல என் பெற்றோர்கள் என் நண்பர்கள் என என்னைச் சார்ந்த எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயமாக இருப்பதனால் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சொல்லிக்கொள்ளத்தக்க மதிப்பீடு வேலையிலிருந்தே ஆரம்பமாகிறது. (SSLCஇல் முதலிடம் +2வில் முதலிடம் போன்ற கெளரவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பதால் அவை புறந்தள்ளப்பட்டுவிட்டன...). படிப்பு முடிக்கும் வரையில் ஒருவனின் மதிப்பீடு அவனது பெற்றோர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு முடிந்ததென்றால் அவன் ஒரு முழு மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். அப்பொழுது பிறரால் கவனிக்கப்படுகிறான். அதன்பின் அவனது வளர்ச்சி எல்லாமே பெற்றோர்களின் துணையின்றி அவனாகவே தேடிக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. இப்படியாக சமூதாயத்தின் நிலைப்பாடு இருக்க வேலை என்பதுதான் ஒருவன் தன்னை இந்த உலகுக்கு வெளிக்காட்ட எடுக்கும் முதல் ஆயுதம். அந்த ஆயுதம் மட்டும் குறி தவறாது தன் இலக்கினை அடைந்துவிட்டதெனில் சமூதாயத்தின் பார்வையில் அவன் வளர்ச்சிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. அவன் படிப்புக்கேற்ற வேலைதான் கிடைக்கிறதென்றாலும் வேலையை வைத்துதான் அவன் என்ன படித்தான் எப்படி படித்தான் என்பது கணிக்கப்படுகிறது. சுமாராக படித்தவன் நல்ல வேலையில் அமர்ந்தால், "விளையாடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான்பா" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். நன்றாக படித்தவன் வேலை கிடைக்காமல் அலைந்தால், "புத்தகத்தை மட்டும் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதற்கு மனரீதியான தகுதிகளும் முடிவெடுக்கும் திறனும் வேணும் அது அவன்கிட்ட இல்லப்பா" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். இப்படியாக மனிதன் அவன் செய்யும் வேலைகளின் மூலமே அவனுக்குண்டான முகவரியினை பெறுகிறான்.

சமீப காலங்களில் (ஒரு பத்து வருடங்களாக) "மென்பொருளாளன்" என்ற சொல்லிலேயே ஒரு மதிப்பும் திமிரும் இருப்பது தெரிகிறது. அதிக சம்பளம், வெள்ளைக் கழுத்துப்பட்டை (white collar) வேலை, நவீன தொழில்நுட்பங்கள், விரைவான தகவல் தொடர்பு என ஒரு மென்பொருள் வல்லுநன் அனுபவிக்கும் சந்தோஷங்களும் பெருமைகளும் அதிகம். இதனால் அவன் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது ஒன்றும் வியப்பிற்குரிய விஷயமல்ல. உலக வாழ்வில், தன்னை வாழ்க்கைக்கேற்ப வளைத்து வாழ்கிறவர்கள், வாழ்க்கையை தனக்கேற்றாற்போல் வளைத்துக்கொண்டு வாழ்பவர்கள் என இரு பிரிவினர் உண்டு. இதில் இரண்டாமானவர்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். சமூகத்தால் வெற்றி பெற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மென்பொருளாளன் இரண்டாம் பிரிவில் வருகிறான். அவன் தன் திட்ட மேலாளர் (project manager) முன்பு வேண்டுமானால் கூனிக் குறுகி நிற்கும் நிலை வரலாம் (அதுவும் மேலாளரின் இயல்பைப் பொறுத்தது) ஆனால் சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் அந்தஸ்தே வேறு. இந்த அந்தஸ்து வெறும் பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு பின்னால் அவனுடைய படிப்பறிவு, பெற்றோர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக்க அனுபவித்த கஷ்டங்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. இதில் பணமும் சேர்ந்து கொள்வதால் அவனது மதிப்பு சமூகம் என்னும் சந்தையில் உயர்ந்து விடுகிறது அவ்வளவுதான்.

சின்னக் குழந்தைகளிடம் பரவலாக கேட்க்கப்படும் ஒரு கேள்வி "நீ பெரியவனான பிறகு என்ன செய்யப் போகிறாய்?". சின்ன வயதில் இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது "நான் M.Tech படிக்கப் போகிறேன்." தெரிந்து சொன்னதோ தெரியாமல் சொன்னதோ இன்று நான் ஒரு தொழில்நுட்ப படிப்பு முடித்த ஒரு மென்பொருளாளன். நினைத்துப்பார்த்தால் பெருமிதம் பிடிபடுவதில்லை. இதில் "நாங்க சொன்னதத்தான் செய்வோம் செய்யறதத்தான் சொல்வோம்"னு தலைவர் பாணியில் வசனம் வேற. சந்தோஷத்தாலும் நினைத்ததை அடைந்து விட்டோம் என்ற திருப்தியிலும் தான் இப்படி சொல்கிறேனே ஒழிய மமதையில் அல்ல.

நண்பர் தேசிகன் தனது ஒரு வலைப்பூவில் மென்பொருளாளனின் அன்றாட வேலையைப் பற்றி ஒரு நகைச்சுவை பதிவெழுதியிருந்தார். நன்றாக இருந்தது. பெரும்பாலும் உண்மை பேசிய பதிவு. ஆனால் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் அவர் சொல்வது போன்ற "வேலைப்பளு" காணப்படுவதில்லை. வளர்ந்து வரும் சின்ன நிறுவனங்களில் உண்மையிலேயே வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கிறது. (நான் வளர்ந்து வரும் சின்ன நிறுவனமொன்றில் வேலை செய்கிறேன் என்பது உள்ளடக்கம்...அங்கங்கே விஷயத்தையும் சொல்லணுமில்ல...) அப்படி கஷ்டப்படுகிற சமயங்களில் தோன்றும் ஒரு கருத்து "ஒரு விவசாயி வெயிலில் கஷ்டப்படுகிறான் நாம் இங்கு நிழலில் கஷ்டப்படுகிறோம். ஆனால் அவனைக்காட்டிலும் ஒரு இருபது மடங்காவது அதிக பணம் பெறுகிறோம்... இது உண்மையிலேயே நியாயமான விஷயம் தானா?". விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.

ஒரு மென்பொருளாளனுக்கு கண்டிப்பாக தேவைக்கு அதிகமாக பணம் வருகிறது. ஓட்டு வீட்டில் இருப்பவன் மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மிதிவண்டியில் சென்று படித்தவன் நான்கு சக்கர வாகனங்களை வாங்குகிறான். இவை அனைத்தும் பணத்தால் பெறப்படும் வசதிகள். இதில் சந்தேகமின்றி ஒரு மென்பொருளாளன் வெற்றி பெறுகிறான். அதிலும் வெளிநாட்டில் சில காலம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பணத்தால் இவன் பெறும் விஷயங்கள் பிரமிக்கத்தக்க ஒன்று. ஆனாலும் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமும் இதில் உண்டு. மிதிவண்டியில் சென்றவன் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது மிதிவண்டியில் செல்பவர்களை மதிப்பதில்லை. மாளிகை வாசத்திற்கு வந்தவுடன் அவனுக்கு ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் ஏளனமாகிப்போகிறார்கள். மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். மனிதன் பழையவற்றை மறந்து விடுகிறான். (இது எல்லோருக்கும் பொருந்தாதென்றாலும் பெரும்பான்மை மென்பொருளாளர்களுக்கு பொருந்தும்). இதில் வாங்கும் பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு மென்பொருளாளனுக்கு கிடைக்கும் அத்தனையும் நியாயமானதுதானா? பணம், மதிப்பு, மரியாதை என சமுதாயத்தில் போற்றப்படும் அத்தனை நல்ல விஷயங்களும் எளிதாக கிடைப்பது சரிதானா? கண்டிப்பாக என்னைப் பொறுத்த வரையில் சரியே. மற்ற தொழிலைப் போல மென்பொருள் பெருக்கத்தில் ஊழலுக்கும் ஏமாற்றவதற்கும் வாய்ப்புகள் குறைவு (Ctrl + C & Ctrl + V வேலை எல்லாம் சரியான்னு கேட்காதீர்கள்....). அவன் ஈட்டும் பொருள் நியாயமான முறையில் அவனது உழைப்பால் வருவது. இதில் அநியாயம் என்ற வாதத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது. மற்ற தொழிலைக் காட்டிலும் அவனுக்கு வழங்கப்படும் பணம் அதிகமாக இருக்கிறது. இது தான் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சரிதானா என்பது அவரவர் கண்ணொட்டத்தைப் பொறுத்தது.

முன்பெல்லாம் ஆசைக்கொரு மகள் ஆஸ்திக்கொரு மகன் என்று சொல்வார்கள். மகள் திருமணமாகி சென்ற பிறகு மகனுக்கு தன் ஆஸ்தி அனைத்தையும் கொடுத்து விட்டு தன் கடைசி காலத்தை பெற்றோர்கள் அவனுடன் கழிப்பார்கள். இன்றைய தேதியில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. மகன் படிப்பு முடித்து வெளிநாடு வெளியூர் சென்று விடுகிறான். அவனைப் பெற்றவர்கள், வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு கட்டிய வீட்டை விட்டுவிட்டு வர முடியாமல் சொந்த ஊரிலேயே தங்கி விடுகிறார்கள். அதனால் மகளை சொந்த ஊரிலேயே திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது. இதில் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை மகனை ஆளாக்கிய திருப்தி அவர்களை பெருமையடையச் செய்கிறது. எனக்கும் அதுதான் சரியென்று படுகிறது. அதனால் நான் ஒரு மென்பொருளாளன் என்று சொல்வதில் எனக்கு பெருமையே.

எனது பயணம்

வைரமுத்து தன் தொகுப்பொன்றில் சொல்வார்

"நான் என்பது இலக்கணத்தில் ஒருமை நடைமுறையில் பன்மை. என்னைப் பொறுத்தவரையில் 'நான்' என்பது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம்".

முற்றிலும் உண்மை. 'நான்' அடிக்கடி நினைத்துப் பார்க்கக்கூடிய வரிகள். மனிதனுக்கு 'நான்' என்பவன் அகந்தையின் சொந்தக்காரன். படைப்பாளிக்கு 'நான்' என்பவன் படைப்புகளின் வழிகாட்டி. அந்த பாத்திரத்தை அவன் எந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை பொருத்தே படைப்பாளி போய்ச்சேரும் இடமும் தூரமும் வெளிப்படும். பாத்திரம் காலியாக காலியாக படைப்புகள் நிரம்புகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த எனது தமிழாசிரியை திருமதி.தமிழரசியை இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன். ஆனாலும் பொறியியல் படிப்பில் தமிழ் இன்னும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ஒரு பொறியாளனான கோ.கணேஷ் இன்றும் தமிழில் ஒரு சிலர் படிக்கும் வகையில் எழுதுகிறான் என்றால் அதற்கு வைரமுத்துவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கல்லூரி படிக்கும் பொழுதும் தமிழின் மேல் இருந்த ஈடுபாடு குறையாமல் இருந்ததற்கு அவரே காரணம். என்னுடைய நட்சத்திரப் பதிவை வைரமுத்துவை வைத்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து இங்கு எழுத வைத்த மதி அவர்களுக்கும் இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்லூரி படிக்கும் பொழுது எனது விரிவுரையாளர் ஒருவர் சொன்ன கருத்து இது, "மனிதனின் உண்மையான குணம் ஒருவன் அவனைப் புகழும் பொழுது அவன் சொல்லும் பதிலில் இருக்கிறது. அவனது அநேக குணாதிசயங்களை ஒரு புகழுரைக்கு அவன் சொல்லும் பதிலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். " என்னை யாராவது புகழ்ந்தால் நான் சொல்லும் முதல் பதில் "இந்த புகழுக்கு சொந்தக்காரங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கே இந்த பெருமை போய்ச்சேரட்டும்". எனக்கு தோன்றும் பதில் அது தான். தமிழ்மணத்திற்கும் இது பொறுந்தும். நான் ஒரு நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களே காரணம்.

சமூகம் என்னை எழுதுகிறது. அதில் சிலவற்றை நான் எழுதுகிறேன். இப்படி சொல்வதனாலும் எழுதுவதாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் புகழுக்கு என்னைச் சுற்றி உள்ளவர்களே காரணமென்றால் நான் செய்யும் தவறுகளுக்கும் என்னைச்சுற்றி உள்ளவர்களே காரணம்(போட்டாம்ல எல்லா பழியையும் உங்க மேல..). மொத்தத்தில் சமூகம் தன்னை எழுதவதற்கு என்னை ஒரு இடைநிலையாக வைத்திருக்கிறது அவ்வளவுதான்.

இப்படியெல்லாம் நம்ம முகமூடி சார் சொல்ற மாதிரி ஆழமா எழுதணும்னு ஆசை. ஆனா பாருங்க ஆழம்ணா என்ன என்று கேட்டால் அது ரொம்ப டீப்பம்மான்னு பாடற வரைக்கும் தான் என்னோட அறிவு அதுக்கும் மேல முயற்சி பண்ணினா இது ரொம்ப டூப்பம்ம்மன்னு கோரஸ் பாடிருவாங்க.

தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நட்சத்திரமா தேர்ந்தெடுத்திட்டாங்க.. (எல்லோரும் இந்த டயலாக்கையே சொன்னா எப்படின்னு கேட்காதீங்க) அதனால முடிஞ்ச வரைக்கும் ஆழமாகவும் அழகாகவும் எழுத முயற்சி செய்கிறேன்.