Tuesday, November 08, 2005

திருமதி. எமிமா பால்துரை


இன்று காலை திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இந்த நாள் இனிய நாளில்" ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். தானியங்களையும் நவரத்தினங்களையும் விற்பதே அவனது தொழில். அவன் பொதி சுமப்பதற்காக இரண்டு கோவேரிக் கழுதைகளை வைத்திருந்தான். ஒரு நாள் பொருட்களை விற்பதற்காக அருகிலிருக்கும் நகரத்திற்கு சென்றான். அப்பொழுது தானியங்கள் அடங்கிய மூட்டையை ஒரு கழுதை மேலும் நவரத்தினங்கள் அடங்கிய மூட்டையை இன்னொரு கழுதை மேலும் ஏற்றினான். நவரத்தின மூட்டையை ஏற்றிய கழுதை தானியங்கள் ஏற்றிய கழுதையை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, நான் தான் பெரியவன் அதனால் தான் முதலாளி நவரத்தின மூட்டையை என் மேல் ஏற்றினார் என்று கூறியதாம். (மூட்டையில் நவரத்தினம் இருப்பது கழுதைக்கு எப்படி தெரிந்தது என்றெல்லாம் அறிவார்ந்த கேள்விகளைக் கேட்கக்கூடாது... கதை சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது). தானியங்களை ஏற்றிய கழுதையும் பதிலேதும் பேசாமல் வந்ததாம்.

நகரத்தைச் சென்றடைய ஒரு காட்டைக் கடக்க வேண்டும். வழக்கம் போல திருடன் அவர்களை வழிமறிக்கிறான். இரண்டு கழுதைகளும் ஓட ஆரம்பிக்கின்றன. திருடன் முதலில் தானியங்கள் சுமந்து வந்த கழுதையை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்க்கிறான். வெறும் தானியங்கள் இருப்பதைக் கண்டு அடுத்த கழுதையை விரட்டுகிறான். அது ஓடுகிறது. கத்தியை வீசுகிறான் கத்தி குறி தவறாமல் கழுதையின் காலில் சொருகுகிறது. நவரத்தின மூட்டையை எடுத்துக்கொண்டு திருடன் தப்பியோடி விடுகிறான். இப்பொழுது தானியங்களைச் சுமந்து வந்த கழுதை கேட்கிறது "இப்ப என்ன சொல்றீங்க? இப்ப என்ன சொல்றீங்க?". நவரத்தினங்களை சுமந்த கழுதை உண்மையை புரிந்து கொண்டதாய் சொல்கிறது "நாம் இருவரும் கோவேரிக் கழுதைகளே. இதில் உயர்வு தாழ்வென்பது கிடையாது". இதே போல் தான் மனிதனின் நிலைமையும். (மனிதனும் கழுதையும் ஒண்ணான்னு கோபப்படாதீர்கள்.) உயர்வு தாழ்வென்பது அவன் எவ்வளவு தூரம் மனிதனாக இருக்கிறான் மனிதத்துடன் இருக்கிறான் என்பதைப் பொருத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும்.

(This paragraph is meant only for தமிழ்மணம் audience) தமிழ்மணத்தில் நட்சத்திர வாரத்தில் நிறைய பேர் நிறைய நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் மனிதருக்கும் மனிதத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, உறவுகளுக்கான அந்த பாச முடிச்சுகளை வாழ்வியல் சம்பவங்களை வைத்து இளவஞ்சி எழுதியது போல வேறு யாரும் எழுதியிருக்க முடியாது. மதி அவர்களால் பிரத்யேகமாக பாராட்டப்பட்ட ஒரு நட்சத்திர பதிவர் இளவஞ்சி. இதனால் இவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசை ஏற்படுவது இயற்கையே. இந்த பதிவு முழுவதுமாக இளவஞ்சியின் பதிவுகளால் தூண்டப்பெற்றதனால் வந்ததே. (எழுத்து திருட்டுக்கு இப்பொழுதெல்லாம் தூண்டுதல் என்ற வார்த்தை தான் பொருத்தமாகயிருக்கிறது)

விவரம் தெரிந்து அழும் அழுகை மூன்று விஷயங்களுக்காக வரலாம். ஒன்று, பாசமானவர்களைப் பிரிய நேரும் பொழுது. இரண்டாவது அளவற்ற ஆனந்தம் அடையும் பொழுது, மற்றொன்று சுயநலம், ஈகோ இறந்து மனிதம் தலை தூக்கும் பொழுது. இதில் மூன்றாவது அழுகை வரும் பொழுது மனதில் ஒரு பெரிய நம்பிக்கையும் தெளிவும் வந்து போகும். அதற்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் இழக்கலாம் என்று தோன்றும். திரு.இளையராஜாவின் சென்னை இசையரங்கு நிகழ்ச்சியில் திரு.பார்த்திபன் சொன்னார் "சந்தோஷம் உச்ச கட்டத்தை அடையும் பொழுது செத்து விடலாம் என்று தோன்றும்". அப்படித்தான் இதுவும். சுயநலம் இறந்து மனிதம் பிறக்கும் பொழுது செத்து விடலாம் என்று தோன்றும். ஒன்றுமில்லை செய்த தவறுக்கு உடனேயே மன்னிப்பு மட்டும் கேட்டுப் பாருங்கள் இதன் அர்த்தமும் அதிலிருக்கும் ஆனந்தமும் புரியும். (நன்றாக இருந்தது என்பதற்காக தவறுகளாக செய்து கொண்டே போகக் கூடாது...). இந்த மாதிரியான அழுகை மன்னிப்பு கோரும் பொழுதில் மட்டுமல்ல, பிறருக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருத்தப்படும் பொழுதும் வரும். அன்பே சிவம் படத்தில் திரு.கமல் சொல்ற மாதிரி "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அதான் கடவுள்". அப்பொழுது நாம் மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்ந்து விடுகிறோம். பார்த்தீங்களா..!!!. மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும். அவன் கடவுளாகி விடுகிறான்.

போன பத்தியில் சொன்னது விவரம் தெரிந்து அழுவது. விவரம் தெரியாமல் அழுவது சிறு குழந்தைகளின் முரண்டு. எதாவது வேண்டும் என்று அழுவார்கள். சில சமயம் பக்கத்திலிருக்கும் யாரேனும் அழுதாலும் அழுது விடுவார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு துக்கமும் இருப்பதில்லை வெட்கமும் இருப்பதில்லை. அதனால் அழுகை என்பது அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது. அப்படி விவரம் தெரியாத வயதில் விவரம் தெரிந்து நான் அழுதது எனக்கு ஞாபகமிருக்கிறது. (அப்பாடா இதற்கா இவ்வளவு பீடிகை .... விஷயத்துக்கு வந்துட்டான் என்று நிறைய பேர் பெருமூச்சு விடுகிறீர்கள் போல....). எல்.கே.ஜி படிக்கும் பொழுது எனக்கு பாடம் எடுத்தவர் திருமதி.எமிமா பால்துரை. எல்லோரும் ஒரு கட்டத்தில் யாரேனும் ஒரு டீச்சரையாவது மனதில் பதிய வைத்து விடுவர். நம்ம இயக்குனர் சேரனுக்கு ஞாபகத்திலிருப்பவர் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர் (பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை...) எனக்கு எல்.கே.ஜி, ஒண்ணாப்பு, மூன்றாம் வகுப்பு என மூன்று வருடங்கள் பாடம் எடுத்தவர் தான் எமிமா பால்துரை.

நான் ஆறாம் வகுப்பு வரை படித்தது கோவில்பட்டியிலுள்ள எஸ்.டி.ஏ பள்ளியில். அதில் திரு பால்துரை அவர்களும், திருமதி எமிமா பால்துரை அவர்களும் பல காலங்களாக வேலை பார்த்து வந்தனர். சிறு பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மூன்று நான்கு வகுப்புகளைக் கவனித்துக் கொள்வார். அப்படித்தான் திருமதி எமிமாவும் எனக்கு மூன்று ஆண்டுகள் பாடம் எடுத்தார். ஒரு நாளில் அப்பொழுதெல்லாம் ஒரு பத்து மணிநேரம் நான் அவர்களுடன் தான் இருப்பேன். பள்ளி ஆரம்பமாகும் முன்பே அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன் பள்ளி முடிந்து அவர்களுடனே அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என்னைத் தொல்லையாக நினைக்காமல் என்மேல் பாசம் வைத்த இரண்டாம் தாய் என்றே அவர்களைச் சொல்லலாம். நான் முதல் வகுப்பு படிக்கும் பொழுது அவர் பேறு கால விடுமுறையில் சென்றார். இரண்டு மாதங்கள் அதனால் அவர்கள் பள்ளி வரவில்லை. அப்பொழுதெல்லாம் அப்பாவுடன் வாரத்திற்கு மூன்று முறையேனும் அவர்களைப் பார்க்க சென்று விடுவேன். அவர்களுக்கு அது பத்தாவது மாதம். அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டார்கள். அந்த நாளும் வந்தது. என் அம்மாவும் அவர்களின் உதவிக்காக அன்று விடுமுறை எடுத்திருந்தார்கள். நானும் என் அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். சொன்னபடி அறுவை சிகிச்சையும்முடிந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எமிமா அழுததைப் பார்த்து நானும் மூன்று மணி நேரம் அழுதேன். விவரம் தெரியாத வயதில் நான் அழுதது இன்றளவும் எனக்கு ஞாபகமிருக்கிறது. மிக அருகில் நான் பார்த்த முதல் பிணம் அந்த குழந்தையினுடையது தான். ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் அன்று நான் அழுதது எமிமா மேடம் அழுதார்களே என்பதற்காக அல்ல. அந்த அழுகை எதனால் வந்தது என்பதும் எனக்கு இன்று வரை தெளிவாகவில்லை. விவரம் தெரியாத வயதில் அன்று அழுதது போல் விவரம் தெரிந்து என்றைக்குமே அப்படி அழுததாகவும் எனக்கு ஞாபகமில்லை.

எமிமா மேடத்தைப் பார்த்து கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் ஊருக்கு சென்று வந்த பொழுது எமிமா மேடம் எப்படியிருக்காங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன். திரு. பால்துரை சக்கரை வியாதியால் இறந்து விட்டதாகவும் எமிமா மேடம் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் அம்மா சொன்னார்கள். இப்பொழுது வேலூரில் இருப்பதாக கேள்வி. என்றேனும் மறுபடியும் அவர்களைப் பார்த்தால் கேட்க வேண்டும் "என்னைத் தெரிகிறதா மேடம் என்று?". ஒருவேளை அன்று திரும்பவும் அழலாம் அதே பழைய அழுகையை.

படம்: நன்றி கூகிள்

27 comments:

Ganesh Gopalasubramanian said...
This comment has been removed by a blog administrator.
SAVANT said...

கணேசா

நெகிழ்வாக எழுதியிருக்கிறாய். வாழ்த்துக்கள். தேர்ந்த எழுத்தாளனுக்கு உண்டான தகுதிகள் உன்னிடம் தெரிகின்றன. ம்ம்ம்ம்ம் கலக்கு....

தருமி said...

ஆரோக்கியமான போட்டி. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டே இருக்க இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்பு said...

மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.
அதற்கு அந்தப்புகைப்படமும் ஓர் காரணம். நன்றி.

ரவிகுமார் ராஜவேல் said...

நெகிழவைத்துவிட்டீர்கள்

Anonymous said...

கணேஷ்,
எப்போதும் தென்கச்சி எதாவது ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு ஒரு ஜோக்கான கதை சொல்வார். நீங்கள் தென்கச்சியில் ஆரம்பித்துவிட்டு சோகத்தில் முடித்துவிட்டீர்கள் :-( வாழ்க்கை என்பது இது தான். அதுவும் சின்ன வயசில் நாம் பார்க்கும் சம்பவங்கள் பல நம் நினைவை விட்டு நீங்காதவை.
நல்ல பதிவு. அப்புறம் அந்த படம் மிகவும் அழகாக இருக்கிறது. படித்துவிட்டு படத்தை பார்த்தால் துக்கம் மேலும் கூடுகிறது.
அன்புடன்,
தேசிகன்

Anonymous said...

கனேஷ், நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

வினையூக்கி said...

கனேஷ், நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

வினையூக்கி said...

I wish you all the best and Great Sucess. Problem with my tamil editor. So in English. Dont mind.

Ganesh Gopalasubramanian said...

நன்றி சந்திரன், தருமி, அன்பு, ரவிகுமார், தேசிகன், வினையூக்கி

@சந்திரன்
//ம்ம்ம்ம்ம் கலக்கு....//
நன்றி நண்பரே...

@தருமி
//முந்திக்கொண்டே இருக்க இருவருக்கும் வாழ்த்துக்கள்.//
எப்போதும் பெரியவங்க ஆசி...

@அன்பு
//அதற்கு அந்தப்புகைப்படமும் ஓர் காரணம். நன்றி.//
பதிவிட்டு சிறிது நேரம் கழித்து தான் படத்தை உள்ளடக்கம் செய்தேன். பொருந்தி வந்தது எனக்கும் நெகிழ்வாகத்தான் இருந்தது.

@ராஜவேல்
நன்றி நண்பரே.... தாங்கள் வலைப்பூ தொடங்கும் முயற்சியில் இருக்கிறீர்களா?

@தேசிகன்
//படித்துவிட்டு படத்தை பார்த்தால் துக்கம் மேலும் கூடுகிறது.//
தேசிகன் உங்கள் எழுத்துக்கு நான் விசிறி. நீங்கள் பாராட்டுவது புதுத்தெம்பைத் தருகிறது.

@வினையூக்கி
//நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//
பெயருக்கேற்ற வார்த்தைகள்.

Ramya Nageswaran said...

இயல்பான நடையிலே எழுதியிருக்கீங்க..மனதை கனமாக்கிய பதிவு..

குமரன் (Kumaran) said...

கணேஷ்...கடைசி வரியில் கண்ணீர் வந்துவிட்டது...கண்ணீருடன் தான் இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்....

Ganesh Gopalasubramanian said...

@ரம்யா
நன்றி. எனக்கும் எழுதி முடித்த பின் மனதிலிருந்த பாரம் இறங்கியது போலிருந்தது.

@குமரன்
//கணேஷ்...கடைசி வரியில் கண்ணீர் வந்துவிட்டது//
நன்றி குமரன். என் எழுத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் இதுதான் என்று நினைக்கிறேன்.

Maravandu - Ganesh said...

அன்புள்ள namesake :-)

ஜல்லியில்லாத நல்ல பதிவு :-)

//எழுத்து திருட்டுக்கு இப்பொழுதெல்லாம் தூண்டுதல் என்ற வார்த்தை தான் பொருத்தமாகயிருக்கிறது//

எழுத்து திருட்டுக்கும்(plagiarization) தூண்டுதலுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது ..
வேண்டுமென்றால் தழுவல் என்று என்று சொல்லிக்கொள்ளுங்களேன்

என்றும் அன்பகலா
மரவண்டு

துளசி கோபால் said...

கணேசா,

அந்தப் படம்...... பட்டுப்போல ஒரு பிஞ்சுப்பாப்பா. அடடா. எங்கேருந்தய்யா
இந்தமாதிரிப் படமெல்லாம் கிடைக்குது?

நல்ல பதிவு.

இன்னோன்னு சொல்லிடறேன்.
அது என்ன நம்ம ஆட்கள்கிட்டே ஒரு பழக்கம்?

ஃபோன் செஞ்சாலும் சரி, ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்தாலும் சரி...

'யார் பேசறதுன்னு தெரியுதா?' 'என்னை யார்னு தெரியுதுல்லே?'

இப்படியெல்லாம் ஒரு க்விஸ் ப்ரோக்ராம் நடத்தியே தீரணுமுன்னு
ஒரு விரதமா?

சில(பல) சமயங்களிலே நாம் 'அசடு' போல முழிக்கறதைப் பார்க்கணுமே!

b said...

இந்த வார நட்சத்திரம் கணேஷ் அவர்களே வாழ்த்துக்கள்.

பனிக்குவியலை அள்ளும் அந்த கையின் புகைப்படம் அருமை. தங்களின் ஆக்கமோ நெகிழ்வைத் தாந்தது.

rv said...

நல்ல பதிவு.

Anonymous said...

Ganesh,

Very matured writing..Try to write articles in 'Anantha Vikatan' kind of weekly's.

Ganesh Gopalasubramanian said...

@மரவண்டு
//ஜல்லியில்லாத நல்ல பதிவு :-)//
நன்றி கணேஷ்.

//namesake :-)//
கணேஷ் என்று பெயரிருந்தாலே horizontal thoughts ஜாஸ்தியாத்தான் இருக்கும் போல


//வேண்டுமென்றால் தழுவல் என்று என்று சொல்லிக்கொள்ளுங்களேன்//
இல்லங்க.... Shrikanth Deva அல்லது SARajkumar திருடி இசை அமைத்தால் இப்பொழுதெல்லாம் inspiration அப்படின்னு தான் சொல்றாங்க....

அது சரி இந்த ஜல்லியடித்தல் என்பதற்கு சரியான அர்த்தம் இன்னும் பிடி பட மாட்டேங்குதே...

@சினேகிதி
//seyanum endu therinju irukanume.//
அப்டி போடுங்க... நான் எங்க திட்ட மேலாளரிடம் பாதி திட்டு வாங்கறதே அதுக்குத்தான்...

@ஜான்
//Keep it up... //
ஜான் எமிமா மேடமைத் தெரிந்த இன்னொரு நண்பரா நீங்கள்... அவர்களின் சொந்த ஊர் எதுவென்று தெரியுமா?
சங்கரன்கோவில் பக்கம் ஏதோ கிராமம் என்று நினைக்கிறேன்.

//I should not read your blogs at office man..I am carried away.//
அதுக்காக படிக்காம விட்டுறாதீங்க. வீட்ல போய் படிங்க.

@துளசி
//இந்தமாதிரிப் படமெல்லாம் கிடைக்குது?//
துளசி கூகிளில் தேடுங்க.... சும்மா படங்கள் மழையாட்டம் பொழியும்.

@இராமநாதன்
//நல்ல பதிவு.//
இப்போவெல்லாம் ரொம்ப அடக்கி வாசிக்கறீங்க..... தருமி சாரும் சின்னவரும் இங்க இல்லையே...:-)

@மூர்த்தி
//அந்த கையின் புகைப்படம் அருமை. தங்களின் ஆக்கமோ நெகிழ்வைத் தாந்தது//
மூர்த்தி வாழ்த்துக்களுக்கு நன்றி இப்போ உங்க டேமேஜர் வேலை எப்படி இருக்கு....?

@அனானி
//Very matured writing..Try to write articles in 'Anantha Vikatan' kind of weekly's. //
நன்றி அனானி. நம்ம முன்னோடிகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க எழுதட்டும் அதற்கு பிறகு பார்க்கலாம்.
இப்போதைக்கு தொடர்ந்து எழுத வேண்டும் அது தான் ஆசை.

தாணு said...

கணேஷ்,
எழுத்து நடையின் தரம் கூடியிருக்கிற்து. எண்ணத்தில் எழுவதை வார்த்தைகளாக்குவது எல்லோருக்கும் சாத்தியமன்று. நன்கு எழுதியுள்ளீர்கள்

G.Ragavan said...

தணு சொல்வது உண்மைதான். எழுத்தின் தரமும் பரிமானமும் கூடியிருக்கிறது கணேஷ். சிரிப்பில் தொடங்கி கண்ணீரில் முடித்த பதிவு.

மதுமிதா said...

கணேஷ்
கண்ண விட்டு போக மாட்டேங்குது அந்தக் குழந்தை.
நானும் இந்த வாரம் ஊருக்குப் போகும் போது தலைமை ஆசிரியை பிச்சையம்மாள்
அவங்களைப் பாக்கணும்.
வந்த பிறகு பதிவுக்கு வர்றேன்.

என்ன சும்மா அழ வைக்கணும்-னு கங்கணம் கட்டியாச்சா.

NambikkaiRAMA said...

படமும் பதிவும் அருமை!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

Super!! கணேஷ்.

பழூர் கார்த்தி said...

நல்ல இருக்குய்யா கணேசு... கலக்குய்யா...

Ganesh Gopalasubramanian said...

நன்றி தாணு, ராகவன், மதுமிதா, ராமா, ஷ்ரேயா, சோம்பேறி பையன்

தாணு & ராகவன்
எழுதவது கொஞ்சம் கைவந்திருக்கிறதென்று உண்மைதான் பார்ப்போம் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறேன் என்று.

மதுமிதா
//என்ன சும்மா அழ வைக்கணும்-னு கங்கணம் கட்டியாச்சா.//
நீங்க அழுதிட்டீங்கன்னா எனக்கு சந்தோஷம் தான் (இந்த பதிவுக்காக மட்டும்)

ராமா
//படமும் பதிவும் அருமை!//
ராமா நெகட்டிவ் எண்ணங்கள் இந்த மாதிரி விஷயத்தில் இருந்தால் ஒண்ணும் பிரச்சனையில்லையே

ஷ்ரேயா
//Super!! கணேஷ்.//
நன்றி ஷ்ரேயா....

சோம்பேறி பையன்
//கணேசு... கலக்குய்யா...//
வாழ்த்துக்களுக்கு நன்றி Mr.பையன்

Anonymous said...

சகோதரரே! உள்ளக் கிடக்கையை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

எனது ஒன்றாம் வகுப்பு பேபி டீச்சரை நினைவுப்படுத்தியது. என்னால் இன்று வரை மறக்கமுடியாத எனது ஆசான்களில் எனக்கு எழுத்தறிவித்த பேபி டீச்சரும் ஒருவர்.

மனதின் ஆழத்தில் கிடந்த சில மெல்லிய நினைவுகளை தட்டி எழுப்பிய ஓர் சிறந்த பதிவு.

ஊருக்கு செல்லும் பொழுது ஒரு முறை என் பேபி டீச்சரை சென்று காண வேண்டும்.