Friday, June 25, 2010

மழைக்காதல்

அந்த மழைநாளின் 
மின்னலின் வெளிச்சத்தில்
மழையின் விரல்களின் நடுவே தான் 
உன்னைப் பார்த்தேன்.

உன்னைக் காணாமல்
மின்னல் என்னும் விக்கலுடன்
அழுகிறது வானம்
தூறலைப் பெருமழையாக மாற்றி.
சீக்கிரம் வெளியே வா!

பாதணிகளின்றி நடந்து செல்கிறாய் நீ
கால்தடங்களாகவும் கொலுசொலிகளாகவும்
உடன் வருகிறது காதல்.

மழையில் நீட்டியபடி உள்ளங்கை நனைக்கிறாய்
கைகளில் நெளியும் ரேகைகளென
காதலும் நனைந்து கோண்டிருக்கிறது.

உன்னைப் பார்த்தபடி 
வானில் நடக்கும் மேகங்கள்
வழிமாறி மோதுகின்றன
மழையென தம் காதலுதிர்த்து.

அடிக்கடி கண்சிமிட்டுகிறாய் நீ
அதில் துவங்கும் மின்னலுடன்
பொழியும் மழைநீர் தான் 
என்னை நனைக்கிறது.

உன்மீது காதல் கொண்ட 
மர இலைகள் 
நீ வந்த பின்பு தூவுகின்றன
சேமித்து வைத்த மழைத்துளிகளை!

உன் பாதம் தொட்ட மழைத்துளி
பரிகசிக்கிறது உன் தலையில் முடிந்த
மழைத்துளியைப் பார்த்து!
உன்னைக் கடந்த தொலைவிற்காக

எல்லாவற்றையும் கண்டு
கண்மை கரைசல் நீங்கலாக
உன்னைக் கரைத்துப் பார்த்து முடியாமல் 
விழுந்து கொண்டிருக்கிறது மழைநீர்!

Thursday, June 24, 2010

நான் நீயாய்

எப்பொழுதோ
கவனம்
என்ற சொல்தாங்கிய
கடிதத்தில்
அக்கறையாய் இருந்தேன்

நேற்று எதிர்பார்ப்பின்
துகள்கள் பதுங்கிய
சாலையில்
மின்விளக்கின் ஆறுதலாய்

பின்
இறுதி வடிவமென்று
காதணி அலைதலிலும்
கைக்குட்டை ஈரத்திலும்
வெறுப்பாய்

எப்பொழுதேனும்
பின்புறம் தெரியாத
மேகத்தின்
அக்கறை தெரியாத
கடற்காலத்தில்
நான் நீயாய்.

Wednesday, June 23, 2010

கதவு

பிரிவின் சட்டங்களைக் கொண்ட
கதவொன்று வீட்டிலிருக்கிறது
நீ நான் என்பவர்களுக்கெல்லாம்
அடைத்துக் கொள்ளும் கதவு

எல்லைகள் இல்லையென்றறிந்து
தேடித் திறக்கையில்
’தள்ளு’, ’இழு’ என்னும்
ஒட்டிகள் இல்லாமல்
ஒருபக்கமாகவே
திறந்து கொள்ளும் கதவு

Tuesday, June 08, 2010

தொலைதூரக் கவிதைகள்

இரவின் துளிகள் வழியும்
நினைவின் சட்டங்களில்
உன் அசைவுகளின்
பலுக்கல்களாக சேர்ந்திருக்கின்றன
சொற்கள்

வரி உருப்பெறும்
ஒவ்வொரு முறையும்
உன் அசைவுகளின்
வாசிப்புகளிலும்
உன் அருகாமையின்
வடிவங்களிலும்
தங்களைத் தாங்களே
திருத்திக்கொண்டு
தீர்ந்து போகின்ற
சொற்கள்

மலட்டு முயற்சிகளில்
தூர்ந்து போய்
தொலைதூரக் கவிதைகளை
மட்டுமே
எழுதிப்போகின்றன
உன் அசைவுகளின்
பலுக்கல்களாக சேர்ந்திருக்கும்
சொற்கள்

Friday, June 04, 2010

பத்து பத்து

ஏக்கப் பார்வையுடன் கூடிய
பதற்ற அசைவுகளுடன்
பிரிவின் கணங்கள் பொருந்திய
வார்த்தைத் தெறிப்புக்களை
இருவருக்கான இடைவெளியெங்கும்
இட்டுச் செல்கிறாய் நீ

விழித்திரை விலகும்
காட்சிகளின் இழப்பு
தீர்க்கவியலா புதிரொன்றை
ஒப்புமைக்கான தலையசைவாகவும்
வியப்பு, இயலாமை, புரிதலுக்கான
உதடு குவிப்புகளாகவும்
நீட்டித்துச் செல்கிறது

கணங்களைக் கைப்பற்ற
முடியாத கடிகாரமொன்று
பத்து பத்திலேயே
நின்று கொண்டிருக்கிறது.

Thursday, June 03, 2010

ஒரு கண்ணீர்த்துளியும்

பொய்சொன்ன பொழுதுகளின்
உறுத்தும் நீட்சிக்காய்
ஒரு கண்ணீர்த்துளியும்
பொய்யாகவே பிறந்து விடுகிறது

நனைதல்

துணைக்கரம் பிடித்து
கால் நனைத்திருக்கிறேன்
மணல் சேகரிப்பின்
புறக்கணிப்பிற்கு
அரைக்கால் சட்டையைத்
தீர்வாக்கியிருக்கிறேன்
கால் நனைத்தவரை
ஈரம் மட்டுமே
மீண்டிருந்தது.
வளர்ச்சி விகிதங்களால்
நீந்தத் தெரியுமென்பதால்
முழுவதும் நனையலாம்.
ஆனாலும்
கடலின் ஆழமும்
நீரின் உவர்ப்பும்
உவப்பானதாயில்லை.

யாருமற்ற

உனக்கான யாருமற்ற
பொழுதுகளில் என்னை
நிரப்பி பயணிக்கிறேன்
தனிமை துடைத்து
மௌன வெளிகளைப்
பங்கிட்டுக் கொண்டாலும்
உன்னுலகத்தின் யாதுமாக
விழையும் முயற்சிகளில்
தோற்று யாருமற்ற
ஒருவனாகவே திரும்புகிறேன்.

Wednesday, June 02, 2010

புகைப்படப் பெண்

முந்தானைத் தூசியைத்
தட்டி விட்டேன்
புருவ வளைவினைத்
தடவிப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
இடைவரை இறங்கிய
பார்வையில் காமமில்லை
அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்
புகைப்படப் பெண்
சிரித்துக்கொண்டேயிருந்தாள்.