Thursday, April 27, 2006

இரு செய்திகள்

முதல் செய்தி

மனிதனின் வளர்ச்சியில், அவன் புலன்களால் அறியும் விஷயங்களில் அவனுக்கு ஏற்படும் சந்தேகங்கள் பெரும் தொண்டாற்றுகின்றன. எவை எல்லாம் உண்மை என்று உன் முன்னால் வைக்கப்படுகின்றனவோ அவை எல்லாவற்றையும் ஆய்ந்து உறுதிப்படுத்திக்கொள் என்று விஞ்ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். (Question everything put forward as a fact). எப்பொழுதெல்லாம் மனிதன் இந்த முயற்சியில் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறானோ அப்பொழுதெல்லாம் அவன் தன் வாழ்க்கைப் பாதையின் பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தானே பயணப்படுத்திக் கொள்கிறான்.

சமீபத்தில் கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.

உருமாற்றம்
கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.

"தனிமனித உறவு நிலைகளில் உண்டாகும் முரண்கள் மற்றும் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும் எளிதில் தொற்றக்கூடியதாகவும் இருக்கும். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் - ஆனால் ஏற்கனவே அறியப்பட்ட அர்த்தத்தில் அல்ல. தர்க்கத்தின் பாதையில் வளர்ந்து சென்று தர்க்கமுறிவின் காரணமாக உருவாகும் கையறுநிலையைச் சந்திப்பதே என் கவிதையின் முயற்சி." என கவிஞர் யுவனும் தன் கவிதைக்குரிய காரணத்தை அழகாக சொல்லியிருந்தார்.

இப்படியாக மனிதன் தினசரி தான் பார்க்கும் விஷயங்களிலேயே பல வித்தியாசங்களைக் காண்கிறான். அந்த வித்தியாசங்களும், அவற்றில் இருக்கும் உண்மைகளும், அந்த உண்மைகளை காண அவன் மேற்கொள்ளும் வழிமுறைகளும் அவனை சிந்தனையாளனாக்குகின்றன. இந்த உயர்வு நிலை முழுக்க முழுக்க அவன் அறிவால் பெறப்படும் ஒன்று.

இரண்டாம் செய்தி

சமீபத்தில் சுகி.சிவம் அவர்கள் போஸ்டன் பாரதி கலாமன்றம் சார்பில் ஆற்றிய உரை ஒன்றைக் கேட்க நேர்ந்தது. திருக்குறளைப் பற்றி மிக அழகாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

"நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது திருக்குறள் படித்தேன். B. A (Economics) படிக்கும் பொழுது முதலாமாண்டில் எங்களுக்கு தமிழ் பாடம் உண்டு. அப்பொழுது திருக்குறள் படித்தேன். நான் சட்டம் படித்து முடித்து விருப்பத்திற்காக திருக்குறள் படித்தேன். இப்பொழுதும் என் பையில் திருக்குறள் கிடைக்கும். விமான பயணத்தில் திருக்குறள் படிப்பது என் வழக்கம். திருக்குறள் அதே தான் ஆனால் நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். திருக்குறள் நான் அப்பொழுது படித்த பொழுது எனக்கு கிடைத்த அர்த்தம் வேறு. இப்பொழுது நான் படிக்கும் பொழுது கிடைக்கின்ற அர்த்தம் வேறு. நான் வளர வளர அர்த்தங்களும் வளர்ந்து கொண்டே வரும் ஒரு அதிசய நூல் திருக்குறள்." என்று கூறினார்.

தன் உரையில் ஒரு குறளின் பொருளையும் விளக்கினார். திருக்குறளின் 595வது குறள் மற்றும் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஐந்தாவது குறள்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு."

"தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம். வாழ்க்கையில் உன்னுடைய உயரம் உன்னுடைய எண்ணங்களின் உயரம்." என்று அந்த குறளின் பொருளைக் கூறிவிட்டு அதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்ற பொழுது அவரிடத்தில் அமெரிக்க பெண்மணி ஒருவர் "சுவாமி நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று கேட்டார். சிறிது குழம்பிப்போன விவேகானந்தர், "எது உங்களை இந்த கேள்வி கேட்க தூண்டியது?" என வினவினார். அதற்கு அந்த பெண்மணி, "உங்களது அறிவாற்றல் தான் என்னை அந்த கேள்வி கேட்க தூண்டியது. எனக்கு உங்களைப் போல ஒரு பிள்ளை வேண்டும் அதனால் தான் அப்படி கேட்டேன்" என்று கூறினார். விவேகானந்தர் அதற்கு சற்றும் யோசிக்காமல், "ஒரு அறிவாளி பிள்ளைக்காகவா இப்படி வினவினாய், அதற்காக நீ ஒரு பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டாம் என்னை இப்பொழுதே உன் மகனாக தருகிறேன், ஏற்றுக்கொள் !" என்று கூறுகிறார்.

ஒரு செய்தியை நல்ல நோக்கத்தோடும், மற்றவரை புண்படுத்தாமல் அதே சமயம் அவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உயர்ந்த பண்போடும் அணுகுவதால் மனிதன் உயர்வு நிலையை அடைகிறான். இந்த உயர்வு நிலை முழுக்க முழுக்க எண்ணங்களால் பெறப்படும் ஒன்று.

--------------

இவ்விரு செய்திகளிலும் மனிதனின் நோக்கம் உயர்வானதாக இருந்தது. அணுகுமுறை மட்டுமே மாறுபட்டது. ஒன்று அறிவாலும் மற்றொன்று மனதாலும் அணுகப்பட்டது. இரண்டுமே உயர்ந்த நிலைக்கே மனிதனை இட்டுச் செல்கின்றன.

Saturday, April 22, 2006

அப்பனுக்கு தப்பாத பிள்ளை

தேர்தல் நேரங்களில் தலைவர்களின் பேச்சைக்கேட்பதென்பது அருமையான பொழுதுபோக்கு. கலைஞர், வைகோ என சிறந்த பேச்சாளர்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக இருப்பதும் இந்த பொழுதுபோக்கிற்கு ஒரு காரணம். ஸ்டாலின் அவர்களின் பேச்சாற்றல் மேல் எனக்கு அந்த அளவிற்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் இந்த தேர்தலில் எப்பொழுதும் போலல்லாமல் அவர் நன்றாக பேசுவதாகவே எனக்கு படுகிறது. இதிலும் தன்னை வல்லவராக்கி கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது. (அரசியலில் ஏற்கனவே அவர் வல்லவர் என்பது வைகோ எதிரணியில் இருப்பதிலிருந்தே தெரியும்)


இந்த தேர்தலில் தளபதி என களமிறங்கியிருக்கும் ஸ்டாலினின் பேச்சு பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பது போல நையாண்டியுடன் கருத்தைச் சொல்வதில் வித்தியாசப்படுகிறார் ஸ்டாலின்.


உதாரணத்திற்கு சாலை பணியாளர் பிரச்சனை குறித்து "செல்லக்கிளி புருஷன் செவ்வாய்க்கிழமை செத்தானாம். வீடு வெறிச்சோடி கிடக்குமேன்னு அவ வெள்ளிக்கிழமை அழுதாலாம்" என அதிமுக அரசு தாமதமாக பணியாற்றும் விதத்தைக் குறித்தும், கருக் காரணத்தை விட்டு விட்டு தேவையில்லாமல் சிந்திப்பதைக் குறித்தும் சொல்லியிருக்கிறார்.


அது போலவே அரசு ஊழியர்கள் சலுகை பறிப்பு குறித்து "தலையில முக்காடு போட கோவணத்தை உருவின கதை கேட்டிருக்கீங்களா? உருவி ஊர் சிரிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுதான் அது கோவணம்னு. அப்புறம் உருவின கோவணத்தைத் திருப்பி கொடுத்து விட்டு இது எங்கள் வீரம்னு சொல்கின்றனர். பாவம் அவங்களுக்கு தெரியல போனது மானம்னு" இப்படியாக எள்ளி நகையாடியிருக்கிறார்.


பேச்சாற்றலை வளர்ப்பதுடன் மட்டுமல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் வளர்த்தால் அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கும்.

Wednesday, April 05, 2006

பத்துப்பாட்டும் குத்துப்பாட்டும்


முன்னோர்கள் சொன்னார்களாம்... காலையில் ராஜா மாதிரியும், மதியம் மந்திரி மாதிரியும், இரவு பிச்சைக்காரன் போலவும் சாப்பிடணுமாம். அதில் எந்த அளவிற்கு நன்மை எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதென்பது வேறு விஷயம். இந்த காலத்திற்கு அதுவும் மென்பொருளாளர்களுக்கு அது பொருந்துமா? என்பது ஒரு பெரிய கேள்வி. சரி அதையும் விடுங்க.. இந்த வயசில கல்லைத் திண்ணாலும் செரிக்கணும்னு சொல்லிகிட்டே நிறைய சாப்பிடறது வழக்கமாப் போச்சு. அப்படியிருக்க மதியம் நல்லா சாப்பிட்டா, தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா? அந்த மாதிரி தூக்கம் வர்ற சமயத்தில காதில அந்த குரல்வாங்கியை (headphone/earphone) மாட்டிக்கொண்டு அடி பாட்டு கேட்பதென்பது என்னுடைய அன்றாட வழக்கமாகி விட்டது.

சரி இந்த அடிபாட்டு என்பது என்ன? தவில், மிருதங்கம், தாரை, தப்பட்டை போன்ற தாளக்கருவிகளின் பங்களிப்பு அதிகமாக மற்ற இசைக்கருவிகளை விஞ்சி நிற்கும் பாடல்களை அடிபாட்டு என்று கூறலாம். "மணப்பாறை மாடுகட்டி"யிலும் தாளக்கருவிகள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அதுக்காக அதை அடிபாட்டு என்று கூறலாமான்னு கேட்கிறவங்களுக்கு பதில் கீழே இருக்கிறது.

பொதுவாகவே இத்தகைய தாளக்கருவிகளின் பயன்பாடு கிராமிய பாடல்களில் அதிகமாக இருக்கும். விஸ்வநாதன் ராமமூர்த்தி காலத்தில் கிராமிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு. பின்பு இளையராஜா காலத்தில் கிராமிய பாடல்கள் உருமாற்றம் பெற்று அழகாகவும் தனித்தன்மையுடன் விளங்கின. நாட்கள் செல்ல செல்ல அந்த உருமாற்றம் உருச்சிதைவை உருவாக்கி அந்த கிராமிய மனத்திலிருந்து விலகி விரச மிகுதியுடன் இரட்டை அர்த்த பாடல்களாகி விட்டன. அடிபாட்டு என்ற சொல்லாடலும் இந்த பாடல்களுக்கே முழுவதுமாக பொருந்தும். இன்றைய தேதியில் மக்களாலும் முன்னணி நடிகர்களாலும் அதிகம் விரும்பப்படுவதும் இத்தகைய அடி பாடல்களே. அதற்கு நாளுக்கு நாள் இந்த பாடல்களின் எண்ணிக்கை கூடி வருவதே சான்று.

இவற்றுள் சில கதாநாயகனின் வீர தீர செயல்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதில் கொடுமை அந்த பாடல்களை திரையில் அவர்களே பாடுவார்கள். இந்த வியாதியிலிருந்து தப்பித்த முன்னணி கதாநாயகர்கள் மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை எனச் சொல்லலாம். தரம் தாழ்ந்து இல்லத்தாருடன் ரசிக்க முடியாதவையாகத்தான் இந்த பாடல்கள் அமைந்திருந்திருக்கின்றன. கதாநாயகர்களின் வீரத்தைப் பற்றின பாடல்களை வேண்டுமானால் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். எப்படியானாலும் அவற்றின் தரம் விரும்பத்தக்கதாக இல்லை என்பது உண்மை. ஆனால் இந்த பாடல்கள் பெறும் வரவேற்பு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

சென்ற ஆண்டு வந்த "லஜ்ஜாவதியே" ஒரு ஆறுதல். ஜெஸ்ஸி கிப்ட்டின் குரலில் விரசமில்லாத வரிகளில் ரசிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கடுத்து வந்த பாடல்கள் அடியோ அடியென்று அடித்து விட்டு போய்விட்டன. இப்படி தேவையில்லாமல் தாளக்கருவிகளையும் ரசிகர்களையும் குத்துவதால் இந்த பாடல்களுக்கு குத்துப்பாட்டு என்ற பெயரும் உண்டு. பாடல்களுக்கு ஆடும் நடிக நடிகைகளின் நடன அசைவும் குத்துப்பாட்டு என்ற பெயருக்கு தம்மால் ஆன உதவியைச் செய்து வருகிறது.

நான் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கேட்கும் பாடல்... கானா உலகநாதன் பாடிய "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்". அடி பாட்டு குத்து பாடல்களுக்கு உண்டான மகத்துவம் கொஞ்சமும் குறையாமல் அதே சமயம் விரசமில்லாத வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட பாடல். இந்த பாடலால் அடிபாட்டுக்கு இருந்த அந்த இலக்கணம் சற்றே மாறி விட்டதாகவே உணர்கிறேன். எப்படி கிராமிய பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உருமாற்றம் அடைந்தனவோ அப்படியே அடி பாடல்களும் இதே போல் ஒரு நல்ல உருமாற்றம் பெறுமானால் ரசிகர்களும் அதிகரிப்பர். இவற்றுக்கென ஒருவித இலக்கணமும் வர வாய்ப்பிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் நல்ல ஜனரஞ்சகமான முயற்சியாகவும் இது அமையலாம். திரைப்பட பாடலாசிரியர்களின் பங்கு இதில் முக்கியமானதாக இருக்கும். அப்படியொரு நிலை வருமாயின் குத்துப்பாட்டுக்களை இல்லத்தாருடன் ரசிக்கலாம். பாடலுக்கேற்ற காட்சியமைப்பும் குரலுக்கேற்ற வாத்திய இசையும் இருக்குமேயானால், விரசமில்லாத வரிகளால் அடி பாட்டுக்களும் அதிரடியான வரவேற்பைப் பெறலாம்.

பி.கு

பத்துப்பாட்டுக்கும் இந்த குத்துப்பாட்டு(பதிவு)க்கும் சம்பந்தமில்லை.

சரி ! இத்தனை நாள் வலையுலகிற்கு வராமல் எங்கே போனாய் என வினவும் அன்பர்களுக்கு ஒரு கொசுறு செய்தி. இப்பொழுது நான் சென்னை வாசி :-)