Saturday, April 30, 2005

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஐந்து கேள்விகள்

"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை" ஆம் கேள்விகள் மூலமாகவே வாழ்க்கையில் மூலமும் அறியப்படுகிறது. கேள்விகளால் வேள்விகளையும் செய்யலாம். கேள்விகள் நம்மை நாமே கூர் தீட்டிக்கொள்ள உதவும் கருவிகள். இப்படியாக கேள்விகள் பற்றிய கேள்விகளுக்கு எண்ணற்ற பதில்கள் உண்டு. கேள்விகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் மலர்ந்தது தான் இந்த பதிவு. தமிழ் திரையுலகில் எண்ணற்ற வசனங்கள் புகழ் பெற்றிருக்கின்றன. அவற்றில் பல கேள்வி வடிவில் இருந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த ஐந்து கேள்விகளை (வசனங்களை) இங்கு தொகுக்கிறேன்.

1. வேதம் புதிது
கேள்வி கேட்டவர் : திரு.பாரதிராஜா
கேட்ட கேள்வி : "பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"

நினைவு தெரிவதற்கு முன்னமே இந்த வசனம் என்னைக் கவர்ந்தது. அதற்கு காரணம் அது படமாக்கப்பட்ட விதம். இந்த கேள்வியைக் கேட்டவுடன் சத்யராஜ் கன்னத்தில் அறைந்தாற்போல உணர்வார். சிறிய வயதில் எனக்கு இது விசித்திரமானதொரு காட்சியாக தோன்றியது. ஆனால் கொஞ்சம் விவரம் வந்ததும் இந்த காட்சியின் ஆழம் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. ஜாதியில்லை ஜாதியில்லைன்னு சொல்ற நீங்களே பாலுத்தேவன் பாலுதேவன்னு மூச்சுக்கு முண்ணூறு தரம் சொல்றீங்களே, பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? என அந்த சிறுவன் சத்யராஜ்ஜைப் பார்த்து கேட்கும் கேள்வி ஒருவனின் சுயத்தைத் தட்டிப்பார்க்கும் என்று நம்புகிறேன்.

2. அன்பே சிவம்
கேள்வி கேட்டவர்: திரு.மதன்
கேட்ட கேள்வி : "என்ன மாதிரியான கடவுள் இது?"

அன்பே சிவம், கடவுள் பற்றிய கோட்பாடுக்கு ஒரு நல்ல விளக்கமளித்த படம். (இதைப்பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். பார்க்க) அதில் மாதவனுக்கு இரத்த தானம் செய்ய பயம். ஆனால் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்ற இரத்தம் கொடுக்க முன் வருகிறார். ஆனால் இரத்தம் கொடுத்த பின்பும் சிறிது நேரத்திலேயே அந்த சிறுவன் இறந்து போகிறான். அப்பொழுது மாதவன் துடித்துப் போய் கேட்கும் கேள்வி. கிடைக்காத இரத்தத்தைக் கிடைக்க வச்சு இப்போ அவனோட உயிரையும் வாங்கிக்கொண்டு விட்டான். என்ன மாதிரியான கடவுள் இது. இந்த மாதிரியான நேரத்தில் தான் கடவுள் இருக்கா இல்லையாங்கிற குழப்பமே வருது" என்பார். உண்மையும் ஏமாற்றமும் நேர்மையும் கலந்த ஒரு கேள்வி.

3. நாயகன்
கேள்வி கேட்டவர்: திரு.மணிரத்னம்
கேட்ட கேள்வி : "நீங்க நல்லவரா கெட்டவரா?"

இந்தக் கேள்வி அநேகமாக அதிகமாக கேட்கப்பட்ட கேள்வியாக இருக்க வேண்டும். படத்தின் நாயகன் ஏழைகளுக்காக போராடுபவன். அதற்காக சமூக விரோதிகளை கொல்வதற்கும் துணிபவன். அவனது கொள்கைகள் சட்டத்தின் பார்வையில் தவறானவை. அதனால் கோர்ட் வாசலை மிதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மக்கள் ஆதரவு அவனுக்கு பெருகியிருக்கிறது. அப்பொழுது அவனது பேரன் அவனைப் பார்த்து கேட்கும் கேள்வி. இயக்குனர் மணிரத்னத்திற்கு இந்த படம் ஒரு கிரீடம் என்று சொன்னால் மிகையாகாது. வாழ்க்கையில் நாயகனாக வாழ வேண்டும் என்று விரும்புகிற ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. சுயநலத்தைத் தவிர்த்து பிறருக்காக போராடும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த கேள்வி 100% பொருந்தும்.

4. அபூர்வ ராகங்கள்
கேள்வி கேட்டவர்: திரு.கே.பாலசந்தர்
கேட்ட கேள்வி: "என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மகன் எனக்கு மருமகன் என்றால் அவருக்கு எனக்கும் என்ன உறவு?"

சமுதாயத் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இயக்குனர் கே.பாலசந்தர் தன்னிகரில்லாதவர். ஆனால் அவரது படங்கள் பொதுவாக பெண்களை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணியம் சார்ந்த நல்ல திரைப்படங்களை தமிழ்த்திரையுலகிற்கு அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் அபூர்வ ராகங்கள் பெயருக்கேற்றாற்போல அபூர்வமாக நடக்கும் கதை. அர்த்தமில்லாத உறவு முடிச்சுகள் ஏற்படும் பொழுது தடுமாறும் ஒரு கதாபாத்திரம் கேட்கும் கேள்வியாக இது படத்தில் வரும். முடிச்சுகள் போடுவதும் அதனை அவிழ்ப்பதும் கே.பிக்கு கை வந்த கலை. ஆனால் இந்த படத்தின் முடிச்சுகள் கொஞ்சம் இறுக்கமானவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த படத்தில் இரண்டு தம்பதியனருக்கிடையில் உறவுக்குழப்பம் ஏற்படுவதாக கே.பி காட்டியிருப்பார். ஆங்கிலப்படம் ஒன்று இதே போல மூன்று முடிச்சுகளுடன் வந்ததாக கேள்வி. அந்தப் படம் ஆஸ்கார் விருதும் வாங்கியதாம். (விவரம் தெரிந்தவர்கள் கூறலாம்)

5. மெளனம் பேசியதே
கேள்வி கேட்டவர்: திரு.அமீர்
கேட்ட கேள்வி: "அப்பா அம்மாவோட வயித்தெறிச்சலைக் கொட்டிட்டு கல்யாணம் செஞ்சுட்டு போய் நீ மட்டும் உருப்படியா இருப்பியா?

மெளனம் பேசியதே ஒரு வித்தியாசமான படம். அதிகமாக லாபம் ஈட்டவில்லை என்றாலும் ஒரு தரமான படமாகவே நான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் மரபுகளை இயக்குனர் அமீர் மிக அனாயசமாக மிதித்திருப்பார். கதையின் நாயகன் ஒரு முரடன். அவனது நண்பன் மூலம் அவனுக்கு ஒரு காதல் ஜோடி அறிமுகமாகிறார்கள். காதலி வீட்டில் அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவளை திருமணத்திற்கு முன்தினம் கடத்தி வரும் பொறுப்பு நாயகனுக்கு அளிக்கப்படுகிறது. நாயகன் திருமண மண்டபத்தில் அந்தக் காதலிக்கு அறிவுரை கூறி அவளது பெற்றோருடனே அவளை விட்டுவிட்டு வந்து விடுகிறான். அப்பொழுது அவன் அவளிடம் கேட்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடையளிக்க அந்தப் பெண்ணால் முடியவில்லை. நாயகனே கூறுகிறான், "காதலுக்காக பெற்றவர்களைத் தூக்கியெறியும் பொழுது ஒரு தடவை பெற்றவர்களுக்காக காதலைத் தூக்கியெறிஞ்சு பாருங்க. உண்மை தெரியுமென்று." அழகான ஆழமான கருத்துக்கள். இப்படியாக இந்த படம் தமிழ் சினிமாவுன் மரபுகளை தவிர்த்து கொஞ்சம் யதார்த்தங்களை அலசிப் பார்த்த படம்.

முதல் நான்கு கேள்விகளும் சமுதாய பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை. ஐந்தாம் கேள்வி நிறைய பேர் வாழ்க்கையில் கேட்கப்படவேண்டிய கேள்வி. பழைய படங்களில் எண்ணற்ற கேள்விகள் இருந்திருக்கின்றன ஆனால் என் அறிவுக்கு எட்டிய என்னைப் பாதித்த ஐந்து கேள்விகளை இங்கு பதிந்துள்ளேன். தங்கள் கருத்துக்களையும் இடுங்கள்

Thursday, April 28, 2005

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

பாரதியார் பாடல்கள் என்றாலே திரைத்துறையில் ஒரு வரவேற்பு உண்டு. பாருக்குள்ளே நல்ல நாடு, நின்னையே ரதியென்று, காக்கைச் சிறகினிலே, நிற்பதுவே என இந்த பட்டியல் மிகப் பெரியது. ஆனால் எண்பதுகளுக்குப்பிறகு பாரதியாரின் தேச பக்தி பாடல்கள் ஒன்றும் திரைப்படங்களில் மலரவில்லை ("பாரதி" திரைப்படத்தைத் தவிர்த்து). ஒன்றிரண்டு பாடல்கள் "நல்லதோர் வீணை செய்தே" (மறுபடியும்), "சுட்டும் விழிச் சுடர்தான்" (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) அத்திப் பூத்தாற் போல வந்தாலும், பாரதியின் தேச பக்தி பாடல்கள் திரைத்துறையைப் பொறுத்தவரை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவே தோன்றியது. (மேற்கூறிய விவரங்கள் என்னுடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டவை)

இதற்கு விதிவிலக்காக வெளிவரவிருக்கும் "சதுரங்கம்" திரைப்படத்தில் பாரதியின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" பாடல் இடம் பெற்றுள்ளது. சதுரங்கம் திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்து மாதங்கள் இருப்பினும் இன்று தான் கேட்க முடிந்தது. இந்தப் பாடலுக்கு அழகாக இசையமைக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது, முக்கியமாக பாரதியின் வரிகள் செம்மையாக உச்சரிக்கப்பட்டுள்ளன. பாடியவர் திரு.மாணிக்க விநாயகமாக இருக்கலாம் என நினைக்கிறேன். நல்ல வேளையாக ஒரு தமிழர் கணீர் குரலில் பாடியிருக்கிறார். ("பர்வாயில்லை" போன்று தமிழ்க் கொலை செய்யவில்லை, பாரதி தப்பித்தான்).

எவ்வளவுதான் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் பாடல் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். எனினும் ஒரு நல்ல முயற்சிக்கு பாராட்டு என்பது அவசியம். கேட்டுவிட்டு பின்னூட்டம் இடுங்கள்.

Saturday, April 16, 2005

கால்கள்

சில ஜோடி கொலுசொலிக்கு
ஆசைப்பட்டு கடல் தாண்டி
வருகின்றனவாம் அலைகள்
சுனாமி பெயர்சூட்டி

சில செருப்புகளின் தடங்களுக்கு
இடம் பெயர்கின்றன மணற்மேடுகள்
மிதிக்க மிதிக்க அவை
மதிக்கப்படுமாம்

முத்துக்களும் முத்தமிட வேண்டுமாம்
வண்ணம் பூசிய கால் நகங்களை
முத்துக்களுக்கு முகில்கள்
மேல் ஆசை என்ன செய்வது

மீன்களுக்கு கன்னியரின் கால்களில்
ஆசையில்லையாம் - தீண்டிவிட்டால்
அவற்றுக்கு தீராத குளிர் காய்ச்சலாம்
ஜலதோஷத்துடன்

தெரிந்தும் தவிர்க்கின்றனர் பெண்கள்
கடலலைகளை, மணற்மேடுகளை
முத்துக்களை மீன்களை
ஹை ஹீல்ஸில்

Wednesday, April 13, 2005

அந்த ஒரு நாள்

சொந்த ஊர் வாசனை
பெற்றோரின் ஆசி
திருக்கோயில் தரிசனம்
பள்ளிவயது நண்பர்கள்
ஏசி டிக்கெட்டில் ரஜினிபடம்
சொந்தங்கள் வீட்டு விருந்து

இந்த தடவை அந்த
ஒரு நாள் பத்தாதோ?

இந்திய அணியின் பயிற்சி முறையும் கிரேக் சேப்பலும்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஜான் ரைட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. அவரும் பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்து விட்டார். ஜான் ரைட்டின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜான் ரைட் ஒரு வெளிநாட்டவர் என்ற காரணத்தினால் அடுத்த பயிற்சியாளரும் வெளிநாட்டவராக இருக்கலாம் என்ற யூகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளருக்கு டாம் மூடி, டேவ் வாட்மோர் மற்றும் கிரேக் சேப்பலின் பெயர்கள் பரிசீலிக்கப் படுவதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. இம்மூவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கிரேக் சேப்பலுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பேசப்பட்டது.

நேற்று இந்து நாளிதழில் (greg chappell columnல்) கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை தம்மை அணுகவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் ஒருவேளை தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தம்முடைய அணுகுமுறை எப்படியிருக்கும், பயிற்சியாளரின் பொறுப்புகள் என்ன என்று விளக்கியிருந்தார். ஆனால் அவர் எழுதியிருந்ததில் சில விஷயங்கள் நெருடலாக இருக்கின்றன. அவை
1. இதற்கு முன்னர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இவரை பயிற்சியாளராக்க அணுகியிருக்கின்றனர். ஆனால் இவர் மறுத்திருக்கிறார். அதற்கான காரணம் கேட்டதற்கு அவர்கள் வழங்கிய பதவிக்காலம் குறைவானது, அந்த கால அவகாசத்தில் ஒரு அணியை வடிவமைப்பது மிகவும் கஷ்டம், அவர்கள் தங்கள் அணியின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நினைக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அதிக காலம் இவர் பயிற்சியாளராக இருக்க ஆசைப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

2. இந்திய அணியில் தற்போது கடைபிடிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றம் வேண்டும், உள்ளூர் அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் சர்வதேச அணியின் பயிற்சியாளருக்கும் ஒரு நல்ல இணக்கம் வேண்டும், இதன் மூலம் ஒரு நல்ல அணியைத் தேர்வு செய்வது என்பது இலகுவாக இருக்கும் ஆனால் இந்த மாற்றத்திற்கு அதிகம் செலவாகும் என்று கூறியிருக்கிறார். இதில் இவர் மாற்றத்தை குறிப்பிடுவது போல தம்முடைய வியாபார நோக்கையும் காட்டியுள்ளார்.

3. பயிற்சியாளர் என்பவர் ஒரு அணியின் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமாகமாட்டார். வீரர்களின் குறை நிறைகளைக் களைவதே அவரது பொறுப்பு, மற்றபடி நன்றாக விளையாடுவதென்பது வீரர்களின் கையில் தான் இருக்கிறது. அதில் பயிற்சியாளரின் பங்கு குறைவே என்று கூறியிருக்கிறார். இந்திய அணி நன்றாக விளையாடவில்லை என்றால் அவர்களுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பு இவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால் பயிற்சியாளராக ஆகும் முன்பே கவனமாக வார்த்தைகளில் விளையாடி விட்டார்.

பயிற்சியாளராக ஆகும் முன்னரே பதவிக்காலம், சம்பளம், கடமை ஆகியவற்றைப் பற்றி இவர் பேசியிருப்பது கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. அதிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை இன்னும் அணுகக்கூட இல்லை, அதற்கு முன்னரே இவ்வாறு பேசியிருப்பது தேவையில்லாதது. இவர் வருங்காலத்தில் ஒருவேளை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய அணியின் வருங்காலமும் கேள்விக்குறியதே. தம்மை இதுவரை அணுகாத போதும் தற்போதுள்ள பயிற்சி முறையில் மாற்றம் வேண்டும் என்று கூறியதன் மூலம் இவர் ஜான் ரைட்டை அவமானப்படுத்தியுள்ளார். இவர் சொன்ன விஷயங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பினும் அதை இவர் ஜான் ரைட்டிம் நேரடியாக சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி நாளிதழில் எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

Tuesday, April 12, 2005

சுனாமி - ஜெயலலிதாவும் ஓபராயும்

இந்தியா டுடே ஆங்கிலப் பதிப்பில் தமிழக முதல்வரும் விவேக் ஓபராயும் சுனாமி நிவாரணப் பணிகளில் எழுப்பும் சர்ச்சைகளைப் பற்றி ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அக்கட்டுரையின் முக்கிய அம்சங்கள்


முதல்வர் தரப்பு :
1. மீனவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஓபராயிடமிருந்து வலைகளைப் பெற்றுள்ளனர்.
2. ஓபராய் மொத்தமாக வழங்கியது ஏழு படகுகள்தான்.
3. வனத்துறை அலுவலர்கள் தான் மரக்கன்று நட்டுவித்தனர்.
4. ஓபராய் அளித்த வீடுகளும், அரசாங்கம் அளித்த நிலங்களிலேயே கட்டப்பட்டுள்ளன.
5. ஓபராய் தன் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததால் பட்டினச்சேரிக்கு ஓடி விட்டார்.


ஓபராய் தரப்பு :
1. அனைத்து மீனவர்களுக்கும் வலைகள் வழங்கப்பட்டுள்ளன
2. படகுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன, புதுப்படகுகளும் வழங்கப்பட்டுள்ளன
3. சுமார் 300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
4. நிரந்தரமாக வீடு கட்டுவதற்கு தமிழக அரசு இட வசதி செய்து தரவில்லை
5. தமிழக அரசின் சுனாமி நிவாரணப் பணிக்கான விதிகள் கடைபிடிக்க ஏதுவாக இல்லை.

எது எப்படியோ சுனாமி ஓய்ந்த பின்பும் அதன் தாக்கம் இந்தப் பகுதிகளில் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இரு தரப்பு நியாயங்கள் :
ஜெயலலிதா :
அரசு செய்யும் நிவாரணப் பணிகளைத் தான் செய்வதாக ஓபராய் சொல்கிறார் தேவனாம்பட்டினம் வாழ் மக்கள் முதல்வரின் இந்தக் கருத்தை ஆமோதிக்காவிட்டாலும் அவர்கள் ஓபராய் ஒன்றும் செய்யவில்லை என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஓபராய் : நிவாரணப் பணிக்கு அரசாங்க அதிகாரிகளை அதிகமாக சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. நிவாரணப் பணிக்கு உதவும் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின்பு அலுவலர்களின் ஆலோசனைப்படியே பணியைக் கையாள வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு என் கோரிக்கைகளை பத்து நாளில் நிறைவேற்றியது. ஆதலால் நான் இப்பொழுது பட்டினச்சேரியைத் தத்தெடுத்துள்ளேன்.

எது எப்படியோ, ஓபராய் மூலமாகவோ ஜெயலலிதா மூலமாகவோ தேவனாம்பட்டினத்திலோ பட்டினச்சேரியிலோ இன்னொரு சுனாமி வராமலிருந்தால் நல்லது.

உபரித் தகவல்:
தேவனாம்பட்டின நிவாரணப் பணிக்கு ஓபராய் ஒதுக்கியது 10 கோடி. பட்டினச்சேரிக்கு ஒதுக்கியிருப்பது 11 கோடி. ஒருவேளை ஓபராய் பட்டினச்சேரியை மாதிரி கிராமமாக மாற்றினால், ஜெயலலிதா கண்டிப்பாக தாக்கப்படுவார் தேவனாம்பட்டின சுனாமியால்.

Tuesday, April 05, 2005

கங்குலியும் நூடில்ஸும்

சமீபத்தில் பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்ட ஜோக் இது. கங்குலி சமீபத்தில் நடந்த போட்டிகளில் நூடில்ஸ் தயாரிக்கும் நேரத்தில் அவுட் ஆகி விடுகிறாராம். இது உண்மை என்றாலும் கங்குலியின் பங்களிப்பை இந்தியா கண்டிப்பாக உணர வேண்டும். ஒரு தன்னலமற்ற வீரர், ஒரு சிறந்த கேப்டன், ஒரு போராளி, தன்னம்பிக்கை மிகுந்தவர், இப்படி எண்ணற்ற புகழாரங்களை கங்குலிக்கு சூட்டலாம். இந்திய அணி திறமை இருந்தும் முன்னேற கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் விடிவெள்ளியாக இந்திய கேப்டன் பதவியைக் கையாண்டவர் கங்குலி.

இந்திய அணி இன்று ஒரு சிறந்த அணியாக உருவெடுத்துள்ளதென்றால் அதில் கங்குலியின் பங்கு மகத்தானது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்ற பின்னர் தன் மேல்சட்டையைக் கழற்றி சுற்றிய விதத்திலேயே அவரின் கிரிக்கெட் ஈடுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம். அவரிடம் உள்ள அந்த வேட்கை, முடிவெடுக்கும் திறன் ஆகியவை தான் இன்று இந்திய அணியைப் பல இக்கட்டான போட்டிகளில் வெற்றியடையச் செய்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே அணி என்றால் அது இந்திய அணி மட்டும்தான். இதற்கு முழு காரணமும் கங்குலி தான்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பொழுதும், ஒரு சிறந்த கேப்டனாக விளங்கிக்கொண்டிருந்த பொழுதும் அவரை அணியிலிருந்து வெளியேற்றினர் ஆனால் கங்குலி ஒழுங்காக விளையாடாத பொழுதும் அவரை அணியிலிருந்து நீக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியா போல இந்திய அணியில் கங்குலிக்கு மாற்றாக ஒரு சிறந்த நிர்வாகி இல்லை. ராகுல் டிராவிட் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஒரு சிறந்த கேப்டனாக இருக்க வாய்ப்புகள் குறைவே. மேலும் டிராவிட்டிடம் அமைதி பொறுமை சற்றே அதிகமாக இருக்கிறது. இது யோசிக்கப் பட வேண்டிய ஒன்று. பொறுமை அமைதி மட்டுமல்ல வேகமும் வேட்கையும் ஒரு கேப்டனுக்கு வேண்டும். அது கண்டிப்பாக டிராவிட்டிடம் கிடையாது. கங்குலிக்கு அடுத்தபடியாக இந்த வேகம் நிறைந்தவர் சேவாக் தான். ஆனால் அவருக்கு அனுபவமும் பக்குவமும் போதாது. டெண்டுல்கர் ஏற்கனவே கேப்டன் பதவியை ஏற்று அதில் வெற்றியடைய முடியாதவர். அதனால் இன்றையச் சூழ்நிலையில் கங்குலியைத் தவிர ஒரு நல்ல் கேப்டன் இந்திய அணிக்கு கிடைப்பது கஷ்டமே.

மேலும் உலகினில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் ஒரு காலத்தில் ஃபார்ம் அவுட் ஆவதென்பது சகஜம். அதனால் கங்குலிக்கு நாம் இத்தருணத்தில் ஆதரவு தர வேண்டும். கண்டிப்பாக கங்குலியிடம் திறமையும் தைரியமும் இருக்கிறது. அதுதான் அவரை இந்த உயர்ந்த நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. இப்பொழுது இருக்கும் கங்குலி தன் தனிப்பட்ட ஃபார்மில் சொதப்பி வந்தாலும், கேப்டன் என்ற பொறுப்பில் அவரது ஃபார்ம் வெகு சிறப்பாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்திலும், டெண்டுல்கர் அவுட் ஆன பின்பு தான் களத்தில் இறங்காமல் தோனியைக் களத்தில் இறங்க வைத்த அவரது சாதுர்யம், நூடில்ஸ் தயாரிக்கும் நேரத்தில் முடிவெடுக்கும் திறமை அவரைவிட ஒரு சிறந்த கேப்டன் இந்திய அணிக்கு கிடைக்க மாட்டார் என்பதை பறைசாற்றுகிறது. இப்பொழுது அவருக்குத் தேவை ஒரு நல்ல ஊக்கம். மற்றபடி கங்குலி ஜொலிப்பதென்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஜெஃப்ரி பாய்காட் சொல்வது போல "Form is temporary but class is permanent" இது கங்குலிக்கு 100% பொருந்தும்.

Monday, April 04, 2005

எனக்கோர் கனவு வேண்டும்

நீண்ட நாளாய் கனவென்பது
எனக்கோர் மனக்குறை.
இந்நாளில் இறைவனிடம் நான்
வைக்கும் கோரிக்கைகளில்
கனவும் அடங்கிவிட்டது.
துயில்கையில் நானொரு
மூச்சுவிடும் பிணமாதலால்
இன்றுவரை எனக்கு கனவு
கிட்டாத ஒன்று

கனவென்பது கிடைக்காத ஒன்றையும்
கிடைக்கச் செய்யுமாம்.
அப்படியென்றால் எனக்கு
கனவென்பதே இன்றுவரை
கனவாய் இருக்கிறது
நினைவில் காணும் கனவுபற்றி
எனக்கு கனவில்லை
எனக்கு கனவென்பது
கனவாய் வேண்டும்

அப்துல் கலாமின் நம்பிக்கை
பொறாமையில்லா உலகம்
கவலையில்லா மனிதர்கள்
வேறுபாடில்லா வாழ்க்கை
வேதனையில்லா சூழ்நிலை
எல்லாவற்றையும் நானும்
காண வேண்டும் -
ஒரு கனவிலாவது

விதி

அரசியல்வாதிகளின் ஊழல்
அலுவலர்களின் சுரண்டல்
சாதீயக் கொடுமைகள்
வறுமையின் வேட்கை
மனிதர் கொள்ளும் சுயநலம்
வஞ்சகரின் சூழ்ச்சி

எல்லாமும் எங்கோ ஒருவரால்
ஏற்றுக்கொள்ளப்படத்தான் செய்கிறது
விதி என்னும் பெயரால்.

Friday, April 01, 2005

நெஞ்சத்து சுனாமி

சாலையில் அடிபட்டு
கிடக்கும் நாயினை
பார்த்தும் பார்க்காமல்
செல்லும் பொழுதும்

பேரூந்து நிறுத்தத்தில்
குழந்தையுடன் பிச்சைக்
கேட்கும் பெண்மணியை
துரத்தும் பொழுதும்

வீட்டுத் தோட்டத்தின்
மரத்திலிருக்கும் எட்டாத
குருவியின் கூட்டை
கலைக்கும் பொழுதும்

சமையலறையில் சரிபார்த்து
சாமர்த்தியமாய்
எலிப்பொறி ஒன்றை
வைக்கும் பொழுதும்

நெஞ்சத்தில் ஏற்படும்
அதிர்வு கண்களில்
மட்டும் சுனாமியை
வரவழைத்ததேயில்லை