Tuesday, April 05, 2005

கங்குலியும் நூடில்ஸும்

சமீபத்தில் பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்ட ஜோக் இது. கங்குலி சமீபத்தில் நடந்த போட்டிகளில் நூடில்ஸ் தயாரிக்கும் நேரத்தில் அவுட் ஆகி விடுகிறாராம். இது உண்மை என்றாலும் கங்குலியின் பங்களிப்பை இந்தியா கண்டிப்பாக உணர வேண்டும். ஒரு தன்னலமற்ற வீரர், ஒரு சிறந்த கேப்டன், ஒரு போராளி, தன்னம்பிக்கை மிகுந்தவர், இப்படி எண்ணற்ற புகழாரங்களை கங்குலிக்கு சூட்டலாம். இந்திய அணி திறமை இருந்தும் முன்னேற கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் விடிவெள்ளியாக இந்திய கேப்டன் பதவியைக் கையாண்டவர் கங்குலி.

இந்திய அணி இன்று ஒரு சிறந்த அணியாக உருவெடுத்துள்ளதென்றால் அதில் கங்குலியின் பங்கு மகத்தானது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்ற பின்னர் தன் மேல்சட்டையைக் கழற்றி சுற்றிய விதத்திலேயே அவரின் கிரிக்கெட் ஈடுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம். அவரிடம் உள்ள அந்த வேட்கை, முடிவெடுக்கும் திறன் ஆகியவை தான் இன்று இந்திய அணியைப் பல இக்கட்டான போட்டிகளில் வெற்றியடையச் செய்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே அணி என்றால் அது இந்திய அணி மட்டும்தான். இதற்கு முழு காரணமும் கங்குலி தான்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பொழுதும், ஒரு சிறந்த கேப்டனாக விளங்கிக்கொண்டிருந்த பொழுதும் அவரை அணியிலிருந்து வெளியேற்றினர் ஆனால் கங்குலி ஒழுங்காக விளையாடாத பொழுதும் அவரை அணியிலிருந்து நீக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியா போல இந்திய அணியில் கங்குலிக்கு மாற்றாக ஒரு சிறந்த நிர்வாகி இல்லை. ராகுல் டிராவிட் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஒரு சிறந்த கேப்டனாக இருக்க வாய்ப்புகள் குறைவே. மேலும் டிராவிட்டிடம் அமைதி பொறுமை சற்றே அதிகமாக இருக்கிறது. இது யோசிக்கப் பட வேண்டிய ஒன்று. பொறுமை அமைதி மட்டுமல்ல வேகமும் வேட்கையும் ஒரு கேப்டனுக்கு வேண்டும். அது கண்டிப்பாக டிராவிட்டிடம் கிடையாது. கங்குலிக்கு அடுத்தபடியாக இந்த வேகம் நிறைந்தவர் சேவாக் தான். ஆனால் அவருக்கு அனுபவமும் பக்குவமும் போதாது. டெண்டுல்கர் ஏற்கனவே கேப்டன் பதவியை ஏற்று அதில் வெற்றியடைய முடியாதவர். அதனால் இன்றையச் சூழ்நிலையில் கங்குலியைத் தவிர ஒரு நல்ல் கேப்டன் இந்திய அணிக்கு கிடைப்பது கஷ்டமே.

மேலும் உலகினில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் ஒரு காலத்தில் ஃபார்ம் அவுட் ஆவதென்பது சகஜம். அதனால் கங்குலிக்கு நாம் இத்தருணத்தில் ஆதரவு தர வேண்டும். கண்டிப்பாக கங்குலியிடம் திறமையும் தைரியமும் இருக்கிறது. அதுதான் அவரை இந்த உயர்ந்த நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. இப்பொழுது இருக்கும் கங்குலி தன் தனிப்பட்ட ஃபார்மில் சொதப்பி வந்தாலும், கேப்டன் என்ற பொறுப்பில் அவரது ஃபார்ம் வெகு சிறப்பாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்திலும், டெண்டுல்கர் அவுட் ஆன பின்பு தான் களத்தில் இறங்காமல் தோனியைக் களத்தில் இறங்க வைத்த அவரது சாதுர்யம், நூடில்ஸ் தயாரிக்கும் நேரத்தில் முடிவெடுக்கும் திறமை அவரைவிட ஒரு சிறந்த கேப்டன் இந்திய அணிக்கு கிடைக்க மாட்டார் என்பதை பறைசாற்றுகிறது. இப்பொழுது அவருக்குத் தேவை ஒரு நல்ல ஊக்கம். மற்றபடி கங்குலி ஜொலிப்பதென்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஜெஃப்ரி பாய்காட் சொல்வது போல "Form is temporary but class is permanent" இது கங்குலிக்கு 100% பொருந்தும்.

3 comments:

Anonymous said...

அவர்கிட்ட திறமையிருக்குங்கிறது உண்மைதான் ஆனா அதுக்காக ரன்னே அடிக்காம டீம்ல இருக்கிறது, இளைஞர்கள்கிட்ட இருந்து வாய்ப்பை பறிக்கிற மாதிரி இருக்கில்ல.
- murasu

enRenRum-anbudan.BALA said...

ஐயா,

//இப்பொழுது அவருக்குத் தேவை ஒரு நல்ல ஊக்கம்.//

நல்ல ஊக்கம் எல்லாம் நிறைய கொடுத்தாச்சு!! கங்குலிக்கு short pitch bowling- னா தகராறு!

without giving an opportunity to Dravid, how can you say he won't be a good captain?
I think he will be better captain (calm and thinks properly) than this arrogant and egoistic Ganguly!

என்றென்றும் அன்புடன்
பாலா

Go.Ganesh said...

டிராவிட் ஒரு நல்ல டீம் ப்ளேயர்
ஆனா கங்குலியிடம் இருக்கும் அந்த killer instict கண்டிப்பாக டிராவிட்டிடம் கிடையாது. (உண்மையில் நானொரு டிராவிட் ரசிகன், ஆனா கேப்டன்ஷிப் கண்டிப்பாக டிராவிட்டுக்கு பொருந்தாது இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்). கங்குலி தன் கிரிக்கெட் வாழ்வின் மிகச் சோதனையான கால கட்டத்தில் இருக்கிறார். இதில் அவரால் வெற்றியடைய முடியவில்லையென்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடர்வது கேள்விக்குறியே ஏனெனில் சிறப்பான இளைஞர்கள் அவரின் இடத்தை நிரப்ப தயாராக உள்ளனர்.
இருந்தாலும் கங்குலியின் சாதனைகளையும் அவர் ஏற்கனவே வெளிப்படுத்திய திறமைக்கும் ஒரு ஆறு மாத காலமாவது அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.