Tuesday, April 12, 2005

சுனாமி - ஜெயலலிதாவும் ஓபராயும்

இந்தியா டுடே ஆங்கிலப் பதிப்பில் தமிழக முதல்வரும் விவேக் ஓபராயும் சுனாமி நிவாரணப் பணிகளில் எழுப்பும் சர்ச்சைகளைப் பற்றி ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அக்கட்டுரையின் முக்கிய அம்சங்கள்


முதல்வர் தரப்பு :
1. மீனவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஓபராயிடமிருந்து வலைகளைப் பெற்றுள்ளனர்.
2. ஓபராய் மொத்தமாக வழங்கியது ஏழு படகுகள்தான்.
3. வனத்துறை அலுவலர்கள் தான் மரக்கன்று நட்டுவித்தனர்.
4. ஓபராய் அளித்த வீடுகளும், அரசாங்கம் அளித்த நிலங்களிலேயே கட்டப்பட்டுள்ளன.
5. ஓபராய் தன் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததால் பட்டினச்சேரிக்கு ஓடி விட்டார்.


ஓபராய் தரப்பு :
1. அனைத்து மீனவர்களுக்கும் வலைகள் வழங்கப்பட்டுள்ளன
2. படகுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன, புதுப்படகுகளும் வழங்கப்பட்டுள்ளன
3. சுமார் 300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
4. நிரந்தரமாக வீடு கட்டுவதற்கு தமிழக அரசு இட வசதி செய்து தரவில்லை
5. தமிழக அரசின் சுனாமி நிவாரணப் பணிக்கான விதிகள் கடைபிடிக்க ஏதுவாக இல்லை.

எது எப்படியோ சுனாமி ஓய்ந்த பின்பும் அதன் தாக்கம் இந்தப் பகுதிகளில் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இரு தரப்பு நியாயங்கள் :
ஜெயலலிதா :
அரசு செய்யும் நிவாரணப் பணிகளைத் தான் செய்வதாக ஓபராய் சொல்கிறார் தேவனாம்பட்டினம் வாழ் மக்கள் முதல்வரின் இந்தக் கருத்தை ஆமோதிக்காவிட்டாலும் அவர்கள் ஓபராய் ஒன்றும் செய்யவில்லை என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஓபராய் : நிவாரணப் பணிக்கு அரசாங்க அதிகாரிகளை அதிகமாக சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. நிவாரணப் பணிக்கு உதவும் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின்பு அலுவலர்களின் ஆலோசனைப்படியே பணியைக் கையாள வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு என் கோரிக்கைகளை பத்து நாளில் நிறைவேற்றியது. ஆதலால் நான் இப்பொழுது பட்டினச்சேரியைத் தத்தெடுத்துள்ளேன்.

எது எப்படியோ, ஓபராய் மூலமாகவோ ஜெயலலிதா மூலமாகவோ தேவனாம்பட்டினத்திலோ பட்டினச்சேரியிலோ இன்னொரு சுனாமி வராமலிருந்தால் நல்லது.

உபரித் தகவல்:
தேவனாம்பட்டின நிவாரணப் பணிக்கு ஓபராய் ஒதுக்கியது 10 கோடி. பட்டினச்சேரிக்கு ஒதுக்கியிருப்பது 11 கோடி. ஒருவேளை ஓபராய் பட்டினச்சேரியை மாதிரி கிராமமாக மாற்றினால், ஜெயலலிதா கண்டிப்பாக தாக்கப்படுவார் தேவனாம்பட்டின சுனாமியால்.

5 comments:

kirukan said...

தேவானம்பட்டினத்தில் அரசு செய்ததில் 10% ஓபராய் செய்ததாக முதல்வரே ஒத்துக்கொள்கிறார். அந்த 10% என்பது தனிமனித அளவில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையே.

மேலும் ஓபராய் அளித்த emotional support என்பது மிக முக்கியமானது.

SAVANT said...

ஓபராய் என்னும் தனி மனிதனின் பங்களிப்பு வியப்பிற்குரியது. அதில் கொஞ்சம் அரசியல் மோதலும் அரசியல் சாயமும் பூசப்பட்டது வேதனையளிக்கிறது. ஜெயலலிதா கண்டிப்பாக இதற்கான தெளிவான விளக்கங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லையேல் நீங்கள் சொல்வது போல சுனாமி தாக்கக் கூடும். தேவனாம்பட்டின சுனாமி அல்ல தேர்தல் சுனாமி. ;-)

Narain Rajagopalan said...

ஒரு தனிமனிதனாய் விவேக் செய்தது பெரிய விஷயம். "தமிழ் என் மண். என் தாய்ப்பால், தமிழ்ப்பால்" என்று கேமரா பார்த்து வசனம் பேசும் எந்த தமிழில் (தமிழ் அல்ல) நடிக்கும் நடிகனுக்கும் இல்லாத அக்கறையும், ஆர்வமும் விவேக்கிற்கு இருந்தது. இந்த மண்ணில் அதெல்லாம் கொஞ்சம் தவறுதான். கண்டிப்பாக அரசியலிருக்கிறது. அதுவும் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் அரசியல். எப்படி இந்த விஷயத்தை ஊதி பெரிசாக்கி, அம்மாவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பவர்கள், இன்றைய தினமலரில் வந்திருக்கும் செய்தியை ஃபாக்ஸ் அனுப்பலாம் அல்லது அதிமுக வட்டச்செயலாளர்கள் அளவில் பெரிதாக பேசலாம். மக்கள் புத்திசாலிகள். விரலுக்கு மை வைக்கும்போது "அம்மா" பேச்சின் உண்மைகள் தெரியும்.

பாலு மணிமாறன் said...

மனிதநேயம் என்ற செடிகளின் வேர்களில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை - தயவுசெய்து வெந்நீர் ஊற்றாமல் இருக்கத் தேவையான நல்ல புத்தியை எல்லாம் வல்ல இறைவன் அரசியல்வாதிகளுக்கு அளிக்க வேண்டுமென்று வேண்டுவதைத்தவிர.. வேறென்ன செய்வது சொல்லுங்கள்? கூடியபட்சம் ஒரு ஓட்டு எதிராகப் போடலாம் எலக்ஷனில் !

Ganesh Gopalasubramanian said...

நம்ம ஆளுங்களுக்கு எதில சர்ச்சையைக் கிளப்புறதுன்னே நம்மாளுங்களுக்கு தெரியாது. செய்யாததை செஞ்சதா சொல்றதும், மத்தவங்க செஞ்சதை பாத்து வயித்தெறிச்சல் படறதும், ரொம்ப மோசமான குணம். எப்போதான் திருந்துவாங்களோ. பாலு சொல்ற மாதிரி தேர்தல் ஒரு ஓட்டு எதிரா போடலாம். வேற ஒண்ணும் செய்ய முடியாது.