Monday, December 19, 2011

நீர்த்துளி நிழல்

தகிக்கும் ஒளி மேல் படர கரும்புள்ளி நிழலாய் எஞ்சுகிறது நீர்த்துளி!!!

Monday, September 19, 2011

எதிர்பாராத மோதல்

பற்றுதல் இல்லை
கடக்கின்றன கணங்கள்
இருப்பவைகளில் இல்லாதவைகளாக
இல்லாதிருந்தவைகளை இருந்தவைகளாக
மாற்றி மாறி

இணைவதில் சம்மதமில்லை
சிலுவையாக கூட்டலாக
இருவேறு திசையில் கோடுகள்
மோதி
நீண்டனவா நெளிந்தனவா

கோணத்தில் கவனம்
சாய்வுக்கோடு
ஏணி
இடமிருந்து வலமோ
வலமிருந்து இடமோ
மேலிருந்து கீழோ
கீழிருந்து மேலோ

இணைவது தெரிவதில்லை
வட்டங்களில்
நிலா
வடை
தெரிவுகள்
அலைகிறது கணினிச் சுட்டி
பறக்கின்றன காக்கைகள்

எதிர்பாராத மோதலின்
உடனிகழ்வான சேதமாய்
இல்லாமல் போன
ஒரு கணம்

(அதீதம்.காம் இல் வெளிவந்தது. நன்றி நண்பர் எல்.கேவிற்கு)

Thursday, August 25, 2011

விட்டுச் செல்வதில்

விட்டுச் செல்வதில்
ஏதோவொன்று இருக்கிறது
கடந்த தூரமாக
இழந்த சொந்தமாக
மாறிய நம்பிக்கையாக
மறந்த பொருளாக
கலைந்த ஒழுங்காக
விடுத்த வழக்காக
மறைந்த நினைவாக
ஏதோவொன்று இருக்கிறது

வெளிகளிலிருந்து வெளிகளுக்கு
சொந்தங்களிலிருந்து சொந்தங்களுக்கு
நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு
மறந்தவைகளிலிருந்து மறப்பவைகளுக்கு
ஒழுங்கிலிருந்து ஒழுங்கிற்கு
வழக்கிலிருந்து வழக்கிற்கு
நினைவிலிருந்து நினைவுக்கு
அழைக்கும் நீயோ
நகரும் நானோ
விட்டுச் செல்வதில்
இருந்து விடவே செய்கிறோம்

Thursday, August 11, 2011

ஒரு புத்தகம் - அன்பளிப்பு

பக்கங்களாக
நிறைந்திருக்கிறது புத்தகம்
என்றோ யாரோ
பிடித்த வரிகளை
கோடிட்டிருக்கிறார்கள்

படரும் வேட்கையில்
ஏதோவொரு பரப்பொன்றில்
சிதறிய திரவம்
படித்த கடைசி வரிகளின்
நினைவிற்க்காய்
கவிழ்க்கப்பட்ட பக்கத்தில்
வண்ணப்பூச்சு எழுத்தாய்

தலைப்பு
எழுதியவர்
தெரியப்படுத்தும்
முதல் பக்கத்தில்
கோடுகளோ
வண்ணப்பூச்சுக்களோ
பார்த்ததில்லை
கையெழுத்துக்களில்
அன்பளிப்பு என்று பார்க்கையில்
மறுமுறை வாசிக்கிறேன்
அன்பளிப்பென்றே
உறுதி செய்ய!

Wednesday, August 10, 2011

வென்படம்

மூடிய வளைவரைகளான
வட்டங்களில்
உறுப்புகள்
கணங்களின் தொடர்புகள்
முடிவுறு தொகுப்புகள்

சூழ்ந்திருக்கும்
சதுர வெளி
வட்டங்களின் ஒன்றிப்புகளிலும்
இருக்கிறது
வென்படம்

Friday, August 05, 2011

ஆறும் அது ஆழமில்லதண்ணியில கோலம் போடு,
ஆடி காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்டை கட்டு,
அந்தரத்தில் தோட்டம் பொடு,
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் பொடு,
அத்தனையும் நடக்குமய்யா ஆச வச்ச கிடைக்குமய்யா,
ஆனா
கிடைக்காது,
நீ ஆசை வைக்கும் மாது...

’ம்ம்ம்ம்’ பெண் குரல்களில் இசையின்றி துவங்கும் பாடல், தாளவாத்தியங்கள் சேர நாதஸ்வரத்துடன் இணைந்து, பின் ராஜா சார் குரலில் ஆர்ப்பரிக்கும். ”On your mark! Get set! Go!"ன்னு ஒரு பந்தயத்துக்கான துவக்கம் மாதிரியே இருக்கும். தாள வாத்தியத்துடன் சேரும் நாதஸ்வரம் ஒரு சில நொடிகளுக்குப் பின் நின்றுவிடும். தாள வாத்தியம் மட்டும் தொடர்ந்து இசைத்துக்கொண்டே இருக்கும். அந்த சில நொடிகள் வீரர்கள் ஓடத் துவங்கப் போவதற்கான கட்டியம். முதல் முறை பாடுகையில் ”ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல” என்ற இரு வரிகளுக்கு இடையில் ஒரு கிதார் ஃபில்லர் இருக்கும். டேய் இந்தா நான் ஓட ஆரம்பிச்சுட்டேன் நீயும் ஓடறியான்னு கேட்கிற மாதிரியே இருக்கும். அப்புறம் பாடல், குரலுக்கும், இசைக்கும், ரசனைக்குமான பந்தயம். அதே போல் ”ஆனா கிடைக்காது”ல் ’ஆனா’வுக்கு பின்னும் ’கிடைக்காது’க்குப்பின்னும் வரும் புல்லாங்குழல் ஃபில்லர் ஏன் என்பது ராஜாவுக்குத்தான் தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன ஃபில்லர்கள் ராஜாவோட பெரிய பலம்.

எனக்கு சரியா இசை நுணுக்கம் தெரியாது. ஆனா ‘ஆனா’வும், ‘கிடைக்காது’வும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கள் ஏழு சுரங்களில் கீழிருந்து மேல் சுரங்களுக்கான பெரிய தாவலாக இருக்கலாம். குரலில் (ஏற்ற இறக்கமில்லாமல்) இப்படியான தாவல்கள் தொடர்ந்து வருவதால் கேட்பவர்களுக்கு தினவேற்படலாம். அதனால் இந்த மாதிரி ஃபில்லர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். குறிப்பாக புல்லாங்குழல், வயலின், பியானோ, கிதார் ஃபில்லர்கள் ராஜா சாரின் நுண்திறமை. நிறைய பாடல்களில் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் ராஜா சார் வரிகளை பாடி முடிப்பது அழகு... எப்படி சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்க வேண்டுமோ அப்படியே சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்காமல் நிறுத்தப் படவும் வேண்டும். ”கோலம் போடு”, “தீபம் ஏத்து”ன்னு சட்டென முடிப்பதும்... ”கோட்டை கட்டுஉ உ உ உ”ன்னு நீடிப்பதும் அழகு.

Tuesday, July 12, 2011

பயங்களின் வாசல்

பயங்களின் வாசலில்
கால் வைக்கிறேன்
உள்ளே சென்றால்
இல்லாமல் போகலாமென்ற
முதல் பயத்தை
மிதித்தவாறே

Wednesday, June 01, 2011

பத்து வரிகளுக்குள்

பத்து வரிகளுக்குள்
எழுதிவிடுகிறேன்
மிகுந்திருந்தால் நீ பொறுப்பு
இல்லையென்றால் நான்
எதுவும் செய்யாமல்
கடந்து போனால்
சாவு,
நீ அல்லது
நான்

Tuesday, May 17, 2011

பழைய பேப்பர்

ஞாயிற்றுக்கிழமை! வழக்கம் போல 9-12 காலை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. மின்சாரம் இல்லாத இந்த அரை மணி நேரத்தில் அம்மா தெப்பலாக நனைந்திருந்தாள். வழக்கம் போல என்பதில் அவளுக்கு நிறைய திட்டமிடல்கள் இருந்ததன. காலை இட்லிக்குச் சட்னி அரைப்பது, மதிய கூட்டுக்கு தேவையான தேங்காய் இத்யாதி கொண்ட கரைசலை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்வது என மின்சாரம் சார் சில வேலைகளை ஒன்பது மணிக்கு முன் செய்து முடித்துக் கொள்வாள். இந்த வேலைகளில் காட்டிய முனைப்பு அவளது வியர்வைக்காய் பெரும் பங்காற்றியிருக்க வேண்டும். இவ்வளவையும் முடித்து
சாப்பிட உட்கார்ந்ததும், பழைய பேப்பர்க்காரன் குரல் கேட்டது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்க கூடும். வேகமாய் எழுந்து சென்று “நேத்து வரச்சொன்னா உன் இஷ்டத்துக்கு இன்னிக்கு வந்து நிக்கிறியே! நாங்க வீட்ல மத்த வேலையைப் பாக்காம உன் வேலையை பாத்திட்டு அலைய முடியுமா” எனச் சடசடவென பொரிந்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

வாரயிறுதி விடுமுறைக்கு ஊருக்குச் வந்திருந்த எனக்கு பேப்பர்க்காரனைப் பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்னால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. எது தேவையான பேப்பர் எது தேவையில்லாத பேப்பர் என நிர்ணயிக்கும் உரிமை என்னிடம் இருக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு பழைய பேப்பர் என்று நினைத்து கழித்த கட்டில் அம்மா எடுத்து வைத்திருந்த பக்தி மலர் கட்டும் இருந்திருக்கிறது. அப்பொழுது வாங்கிக்கட்டிக்கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. அம்மாவிடம் ஏதாவது சொல்லப்போய் அவளது வியர்வைச் சூடு என்னை பொசுக்கிவிடுமென்கிற பயமும் இருந்தது. இருந்தாலும் பேப்பர்க்காரனிடம் “அண்ணே! காலனிக்குள்ளே போய்ட்டு திரும்பி வரும்போது ஒரு எட்டு பாத்திட்டுப் போங்க! அம்மாகிட்ட கேட்டு எடுத்து தர்றேன்” என்று சொன்னேன். நமக்கு தேவையில்லாதது என்றாலும் நம்மை அச்சுறுத்தும் வரை மனிதன் அதைக் கண்டுகொள்வதில்லை. தேவையில்லாதவை என்பதனால் அதன் இருப்பும் தேவையில்லாததாகி விட முடியாது. காலப் போக்கில் பெரிய இடையூறாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான உதாரணம் மலச்சிக்கல். ஆனால் இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லும் தைரியம் எனக்கு அப்பொழுது இல்லை.

இந்நேரத்தில் பேப்பர்க்காரனைப் பற்றி விவரிப்பது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். நடுத்தர வயது இளைஞன். வயது 30-32ல் இருக்கலாம். கருத்த உருவம். மெலிந்த தேகம். முருக்கேறிய கைகள் என அன்றாட தேக உழைப்பின் அத்தனை அடையாளங்களையும் கொண்டிருந்தான். நன்கு எண்ணெய் தேய்த்து ஒழுங்காக சீவப்பட்ட அடர்த்தியான தலைமயிர். அதைப் பார்க்கும் பொழுது முடி உதிர்வதைத் தடுக்க, ஈரோடு வரை சென்று வாங்கி வந்த கருவேப்பிலையும் இன்னொரு மூலிகையும் கலந்த எண்ணெய்யின் ஞாபகம் வந்து போனது. தள்ளுவண்டியில் சில புதிய ப்ளாஸ்டிக் பொருட்களையும் ஒரு பெரிய சாக்குப் பையையும் வைத்திருந்தான். சாக்குப் பை, வெள்ளை காக்கி என அரிசி மூடைச்சாக்கு, நெல் மூடைச்சாக்கு என பல்வேறு சாக்குகளை சேர்த்து தைத்திருந்தது. பெரியதென்றால் என்னைப் போல் ஒரு மூன்று பேரை அதில் முழுதாக அடைக்கலாம் அவ்வளவு பெரியது. சாக்குப்பையை இரண்டாக பிரிக்குமாறு ஒரு அட்டையை வைத்திருந்தான். அட்டை கொண்டு பிரிக்கப்பட்ட ஒரு பகுதியில் சேகரித்த பழைய பேப்பர்களையும், மறு பகுதியில் சேகரித்த பழைய உடைந்த ப்ளாஸ்டிக் பொருட்களையும் நிரப்பியிருந்தான். பழைய பேப்பர் பகுதி பெரியதாக இருந்தது. கொள்ளளவிலும், கொண்டிருந்த அளவிலும். ப்ளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவு எளிதாக தேவையற்றதாகிவிடுவதில்லை. வீட்டில் இருக்கும் ப்ளாஸ்டிக் குடத்தின் பயனைப் பார்த்திருக்கிறேன். வாங்கிய புதிதில் குடி தண்ணீர் நிரப்ப உபயோகப்படுத்தப்பட்டது. அந்நாட்களில் வீட்டில் சமையலறையில் வைக்கப்பட்டிருந்தது. கைப்பிடி ஓரம் உடைந்த பின்னர் குழாயடி அருகே. நிறம் மங்கிய பின்னர் மாடியிலிருந்து மழை நீர் வடியும் இடங்களில். மழை நீர் நிரம்பி பாசி படர்ந்த பின்னரே அது தேவையில்லாததாகிறது. இதற்குள்ளாக அதற்கு ஒரு மூன்று வயதாகியிருக்கும். அப்படியான இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைப் பேப்பர்க்காரனின் சாக்குப் பையில் கண்டேன். இப்படி பாதிக்கும் சற்று அதிகமாக நிரம்பியிருந்த சாக்குப் பையின் மீதி வெளிப்புறமாக சுருட்டப்பட்டிருந்தது. அந்தச் சுருளின் அடர்த்தி ஒரு கிரிக்கெட் ஸ்டெம்ப்பின் அளவு இருக்கலாம். மூன்று அல்லது நான்கு முழுச் சுற்றுக்கள் இருந்திருக்கலாம். காலை பத்து மணிக்குள்ளாக இவ்வளவு நிரப்பியிருக்கிறானே என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. ஒருவேளை நேற்று சேகரித்தவற்றுடன் இன்று சேகரித்தவையையும் சேர்த்து விற்க எண்ணியிருப்பான் என நினைத்துக் கொண்டேன். அப்படியிருப்பின் ஏன் அவ்வளவையும் வீணாக தள்ளிக்கொண்டு வரவேண்டும், ஏதாவது ஒரு கடையிலோ அல்லது தெரிந்த வீட்டிலோ அல்லது தெரு முடிவுகளிலோ, காலி இடங்களிலோ போட்டு வைத்திருக்கலாமே என்னும் சந்தேகமும் தோன்றியது. அவனிடம் ஒரே ஒரு சாக்குதான் இருந்திருக்க வேண்டும். அதான் எல்லாச் சாக்குகளின் கலவையாக இருக்கிறதே. அதான் அதிலும் அட்டையைக் கொண்டு தடுப்பிட்டு பிரித்திருக்கிறான் என நினைத்துக் கொண்டேன். எப்படியிருப்பினும் இன்றையச் சாக்கு நிறைந்தே இருந்ததா அல்லது நிறைக்கப் பட்டதாவென எனக்கு தெரியவில்லை. இப்பொழுது பெரிய சாக்கில் என் யூகங்களும் சேகரமாகியிருந்தன.

பேப்பர்க்காரன் சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களைக் கழட்டி விட்டிருந்தான். உள்ளே அணிந்திருந்த பனியனில் இருந்த எழுத்துக்களில் நடுவில் இருந்தவை வெளியே தெரிந்தன. இரண்டு அல்லது மூன்று சுழியின் (ன அல்லது ண) ஈற்றான சுழியும் கோடும் தெரிந்தன. அதற்கடுத்து ‘ம’ என்ற எழுத்து முழுதும் தெரிந்தது. பின்னர் பழையபடி இரண்டு அல்லது மூன்று சுழியின் (ன அல்லது ண) வின் துவக்க சுழி தெரிந்தது. முழு வார்த்தை ”கண்மணி” என இருந்திருக்கலாம். அல்லது ”தினமணி” என இருந்திருக்கலாம். மொத்தத்தில் என்னை யூகங்களால் நிறைத்திருந்தான் பேப்பர்க்காரன். ”நேத்து கொஞ்சம் லேட்டாயிருச்சு. ஆறு மணிக்கு மேல வந்தா, அம்மா எடுத்துத் தருவாங்களான்னு தெரியல. நாளைக்கு ஞாயித்துக்கிழமை வந்து எடுத்துக்கலாம்னு போயிட்டேன். சாப்பிடற நேரமா வந்துட்டேன் போலிருக்கு அதான் அம்மா கோச்சுகிட்டாங்க. நான் திரும்ப போகும் போது வந்து எடுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைத் தள்ளலானான். தெளிவாக அவன் சொன்ன விஷயங்கள், அம்மாவின் பேச்சைப் பற்றிய அவனது புரிதல் எல்லாம் தொழிலில் அவனது அனுபவத்தைக் காட்டியது. பின் அவன் காலனிக்குள் சென்று விட்டான். நான் சாப்பிட்டு விட்டு நண்பனைப் பார்க்க சென்று விட்டேன்.

மதியம் இரண்டரை மணியிருக்கும். நண்பன் வீட்டிலிருந்து சாப்பிட வந்தேன். வெளியில் பேப்பர்க்காரன் நின்று கொண்டிருந்தான். ”என்னண்ணே அம்மா எடுத்துக் கொடுத்திட்டாங்களா” எனக் கேட்டேன். ”இல்ல அம்மா சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. வந்து எடுத்து தர்றென்னு சொல்லியிருக்காங்க” எனச் சொன்னான். எப்படி வெளியில் ஒருவரை நிற்க வைத்துக்கொண்டு அம்மாவால் சாப்பிட முடிகிறதென்று நினைத்ததை உள்ளே சென்று அம்மாவிடம் கேட்டேன். ”நான் சாப்பிட ஆரம்பிச்சப்புறம் தான் அவன் வந்தான். சாப்பிட்டுட்டு எடுத்து தர்றேன்னு சொல்லியிருக்கேன்” என்று அம்மா சொன்னாள். “சரி பழைய பேப்பர் எதுன்னு சொல்லு நான் எடுத்து கொடுக்கிறேன்னு” சொன்னேன். அதற்குள்ளாக வெளியில் சென்றிருந்த அப்பாவும் வந்து சேர்ந்தார். இருவருமாக பழைய பேப்பர் கட்டுக்களை எடுத்து போட்டோம். அதற்குள்ளாக அம்மா ”விகடன், மங்கையர் மலர் புக்கெல்லாம் போட வேண்டாம் டா. இன்னும் அதுல தேவையானது நிறைய எடுக்க வேண்டியிருக்கு” என்று சொன்னாள். ”சரிம்மா” என்று சொல்லிவிட்டு பேப்பர்கட்டுக்களை மட்டும் போட்டோம். பேப்பர்க்காரன் முதலில் ஒரு கிலோ எடைக்கல்லை வைத்து பேப்பர்களை அளந்தான். பின்னர் அளந்த பேப்பர்களையும் எடைக்கல்லையும் தராசில் ஒரு தட்டில் வைத்து, மிச்ச பேப்பர்களை அளந்தான். மாடியில் பேழையில் கொஞ்சம் பேப்பர் இருப்பதாக சொல்லவே மாடியிலிருந்து அந்த பேப்பர்களை எடுத்து வந்தேன். அவை எல்லாம் மிகவும் பழைய ஆங்கில பேப்பர்கள். எடைபோட்டதில் 12 கிலோ 300 கிராம் தமிழ் பேப்பரும், 2 கிலோ 100 கிராம் ஆங்கில பேப்பரும் இருந்தது. அப்பா பழைய ப்ளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டிருந்த அட்டை டப்பாவை எடுத்துக் கொடுத்தார். அவை இரண்டு கிலோ இருந்தது. மொத்தம் 130 ரூபாய் வருவதாக பேப்பர்க்காரன் சொன்னான். அப்பா பேசி 140ஆக வாங்கிக் கொண்டார். ”புக்கையெல்லாம் எடுத்துட்டுப் போயிரலாம்னு காசெல்லாம் எடுத்துட்டு வந்தேன்” என்று பேப்பர்க்காரன் சொன்னான். ”ரெண்டு வாரம் கழிச்சு வாங்கண்ணே. அம்மா அதுக்குள்ள வேணுங்கிறது கிழிச்சி எடுத்து வச்சுக்குவாங்க” என்று நான் சொன்னேன். “சரி தம்பி. வர்றேன்” என சேகரமான 14 கிலோவை சாக்குப்பையில் நிரப்பிக்கொண்டு கிளம்பினான் பேப்பர்க்காரன். “சாப்பிட்டாச்சாண்ணே! எனக் கேட்டேன். “போய் தான் சாப்பிடணும் தம்பி. வழக்கமா ரெண்டு ரெண்டரை மணிக்கு சாப்பாடுவேன்.
உங்க வீட்ல இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு. அரை மணி நேரத்தில போயிருவேன். வரட்டா” என சொல்லி கிளம்பி விட்டான் பேப்பர்க்காரன். இப்பொழுது கவனித்தேன். சாக்கு கிட்டதட்ட முழுவதுமாக நிரம்பியிருந்தது. அம்மா சாப்பிட்டு முடித்து வெளியே வந்திருந்தாள். தெரு முடிவில் ஐஸ் வண்டிக்காரன் மணி அடித்துக்கொண்டிருந்தான். ”அந்த காசுக்கு ஐஸ் வாங்கிருங்க” என்று அப்பாவிடம் சொன்னாள் அம்மா. நான் சாப்பிட வீட்டின் உள்ளே சென்றேன். அம்மா பாதுகாத்த புத்தகமொன்றின் முன்னட்டையில் ஒரு பெண்மணி சிரித்துக்கொண்டிருந்தார். பழைய பேப்பர் வைத்திருந்த இடம் வெறுமை படர்ந்து பழைய பேப்பர் சேகரித்து வைக்கத் தயாராகயிருந்தது.

Monday, April 18, 2011

விடைத்தாள்

திருத்தப்பட்ட விடைத்தாள்கள்
கொடுக்கப்படுகின்றன.

”கலைவாணி”
என்றழைக்கிறார்
ஆசிரியர்.

கோடிட்ட இடங்களை
பூக்களால் நிரப்பியிருக்கிறாள்.

இடப்புறம் இருக்கும் பட்டியலில்
எல்லாவற்றையும்
வலப்புறம் இருக்கும்
எல்லாவற்றினுடனும்
பொருளறிந்து பொருத்தியிருக்கிறாள்.

சரியா தவறாவில்
எல்லாமே சரியாய்
இருக்கின்றன.

உலகம் பற்றிய
வினா ஒன்றுக்கு
மூன்று வரிக்கு மிகாமல்
தாளில் பாதியும்
மேஜையில் பாதியும்
யானை ஒன்றை வரைந்திருக்கிறாள்.

மேஜையில் இருக்கும் யானை
தன் மதிப்பெண்கள் அனைத்தையும்
தின்று விட்டது தெரிந்ததும்
சந்தோஷமடைகிறாள்.

மேஜைக்காடுகளில்
விலங்குகள் தின்னும் விலங்குகள் கூட
மதிப்பெண்களை மட்டுமே
தின்று கொண்டிருக்கின்றன.

Monday, April 11, 2011

தார் சாலைகள்

எச்சில் பொட்டுக்களுடன்
நெடுக கிடத்தப்பட்டிருக்கின்றன
தார் சாலைகள்

இரு பாகம் பிரித்து
வெள்ளை நூல் கொண்டு
சிவப்பு மண் மேல்
கவனமாய் தைத்திருக்கிறார்கள்

மஞ்சள்
கோடு
போக-வர
வேலியிடுகிறது

ஊர்திகளின்
இடைவிடாத
போக்குவரத்தில்
ஊர்களை
இணைத்து
கருமையிழக்கின்றன

சாவடிகளில்
சுமைகளின்
சந்தேகங்களில்
சோதனையும்
உண்டு

முடிவின்றி
நீண்டு கிடக்கின்றன
எல்லைகள் தாண்டி
வரிகள்
வேறுபடுகின்றன
சக்கரங்களுக்கேற்ப

Thursday, April 07, 2011

அடையாளம்

துர்கா மெஸ்ஸில்
”DM” என்ற
எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட
எவர்சில்வர் தட்டுகளில்
உண்டிருக்கிறேன்.

ஜெயஸ்ரீ கல்யாண மஹாலில்
பல வண்ணங்களில்
JKM எண்களுடன்
ப்ளாஸ்டிக் சேர்களை
கண்டதுண்டு.

சண்முகா டாக்கீஸில்
துளையிடப்பட்டு
இரும்புச் சங்கிலியில்
கட்டப்பட்டிருக்கிறது
காலி தண்ணீர் டம்ளர்!

நண்பன் பரிசளித்த
காப்பிக் குவளையொன்றில்
சிரித்தவாறு
அச்சிடப்பட்டிருக்கிறேன்
நான்.

Wednesday, February 09, 2011

வீடுகள்

மேல வீட்டுக்கு
கீழ வீடாகவும்
கீழ வீட்டிற்கு
மேல வீடாகவும்
இருக்கிறது வீடு.

அஞ்சல்களுக்காகவும்
வருபவர்களுக்காகவும்
தேடுபவர்களுக்காகவும்
வீட்டிற்கு
விலாசம் இருக்கிறது.

தூளிகளுக்கான
கொக்கிகளுடன்
வெள்ளையடிக்கப்பட்ட
உட்கூரையும் உண்டு.

ஒளியை மறைத்திருக்கும்
வீட்டின்
திறந்திருக்கும் ஜன்னல்களின் வழி
ஊடுறுவும் ஒளி

தரையின்
சதுர அடி கற்களில்
பதிந்திருக்கின்றன
நடந்த கால்களும்
அவை நகர்ந்த தூரமும்

வாடகை வீடுகளில்
ஆணியடிக்கப்படாத
வெற்று சுவர்களில்
புகைப்படமாக இருக்கிறார்கள்
வீட்டுக்குச் சொந்தக்காரர்கள்.
ஆட்கள் இல்லாத
வீடுகள் தாளிடப்பட்டனவாக
இருக்கின்றன.

Friday, February 04, 2011

தொலைக்கத் தவறியவை

யாரோ துப்பிவிட்டு
போயிருந்த பபுள் கம்
கூடவே வரும்
விளக்குக் கம்பத்
தேய்ப்பிற்குப் பிறகும்.

மட்காப்பிலோ, சக்கர ஆரத்திலோ
சிக்கிக் கொண்டு
ஓட்ட வேகத்தில்
சத்தமிட்டுக்கொண்டிருக்கும்
ஒரு பாலித்தீன் பை.

சுகாதார ஆசை
கவனம் பெற்று
நூலாம்படை நீக்குகையில்
பரணில் தட்டுப்படலாம்
ஒரு பழைய நாணயம்.

வெளிப்புறம் வழிந்த
எண்ணெய்த் துளிகள்
ஒவ்வொரு இருத்தலிலும்
தெரியப்படுத்தலாம்
புட்டியின் அடிபிம்பத்தை.

தூசி படர்ந்த
வாகன கண்ணாடியில்
என்றேனும் எழுதப்பட்டிருக்கும்
ஒரு பெயர்.

Monday, January 31, 2011

மாதிரிகள்

அமர்ந்த மாதிரி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்
நகரும் மாதிரிகளில்

நிஜம் மாதிரி சுவர்ச் சித்திரங்ளில்
பறந்து கொண்டேயிருக்கின்றன
பறவை மாதிரிகள்.

முன் நிற்பது மாதிரி
என்னையே காட்டிக்கொண்டிருக்கிறது
கண் மாதிரி கண்ணாடி.

அந்த மாதிரி இந்த மாதிரி எந்த மாதிரியும்
இல்லாமல் இருந்தவை
முன் மாதிரியே ஆகிவிட்டன.

புரியாத மாதிரி
இருப்பவை எல்லாம்
ஒரு மாதிரி ஆகிவிடுகின்றன.

உண்மையாய் இருப்பது மாதிரியே
இருந்து கொண்டிருக்கின்றன மாதிரிகள்.