Wednesday, June 29, 2005

மறக்கப்படும் பக்தி பாடல்கள்

எண்பதுகளில் என் காலையை நிறைத்த அந்த பக்திப்பாடல்கள் எண்ணிலடங்காதவை. தாத்தாவும் பாட்டியும் அன்றாடம் சேர்ந்து ரசிக்கும் நிகழ்ச்சிகள் அந்த பக்திப் பாடல்களிலிருந்து தான் ஆரம்பமாகும். மாநிலச் செய்திகள், திரை இசை என்று பின்பு அவர்களின் அந்த பட்டியல் நீளும். டி.எம்.எஸ், ஜானகி, சுசிலா, நாகூர் ஹனிஃபா, எஸ்.பி.பி, ஜேசுதாஸ் என அன்றைய தேதியில் சினிமாவில் பிரபலமாகயிருந்த அனைத்து பிண்ணனி பாடகர்களும் பாடகிகளும் பக்திப் பாடல்களிலும் கவனம் செலுத்தினர். அது மட்டுமில்லாமல் எம்.எஸ்.வி போன்ற பெரிய இசையமைப்பாளர்களுக்கும் பக்திப்பாடல்களில் நாட்டம் இருந்தது. "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்", "ஆயர்பாடி மாளிகையில்", "கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்", "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என இசையின் நீளத்தையும் அகலத்தையும் தொட்டுப் பார்த்து வந்த பக்திப் பாடல்கள் பல.

ஒருவேளை எண்பதுகளில் நான் என் இளமைப் பருவத்தில் இருந்ததனால் தான் இந்த நினைவுகள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றனவோ என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து பார்த்ததில் அது தவறென்பது எனக்குப் புரிந்தது. பாடல்களின் தரம் தான் குறைந்துள்ளது, அதுவும் பக்திப்பாடல்களின் தரம் முற்றிலுமாக மறைந்து விட்டது என்ற நிதர்சனம் மட்டுமே இறுதியில் நிலைக்கிறது. அந்த காலகட்டங்களில் அன்று உலகைக் காணும் ஒவ்வொரு கொழிக்குஞ்சின் மீதும் சூரிய கதிர்கள் பட்டதோ இல்லையோ கண்டிப்பாக நாகூர் ஹனிஃபாவும், டி.எம்.எஸ்ஸும் அவற்றின் காதுகளில் இசையால் ரீங்காரமிட்டிருப்பார்கள். ஆல் இந்தியா ரேடியோவும் ஒவ்வொரு வீட்டின் காலைப் பொழுதையும் இசையாலும் கருத்துக்களாலும் நிறைத்து வந்தது.

இன்று நிலைமை தலைகீழ். "கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா" தான் இன்றைய தேதியில் எனக்குத் தெரிந்த மிக அற்புதமான பக்திப்பாடல் எங்கே போய்கொண்டிருக்கிறோம்? வித்தாயசங்களையும் தொழில்நுட்பத்தையும் வரவேற்பது எவ்வளவு முக்கியமோ அதே சமயம் கலைகளையும் மற்ற நல்ல விஷயங்களையும் பாதுகாப்பதும் அவ்வளவு முக்கியம். இசை இன்றைய தேதியில் கலையாகப் பார்க்கப்படுவதில்லை. திரையிசையில் கவனம் செலுத்தும் எந்த இசையமைப்பாளரும் எம்.எஸ்.வி போல ஒரு "கிருஷ்ண கானத்தை" வழங்க முன்வருவதில்லை. காரணம் இசை என்பது இப்பொழுது வியாபாரமாகி விட்டது. "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்", "ஐயங்காரு வீட்டு அழகை"யும் தான் இன்றைய தேதியில் இசையமைப்பாளர்கள் விரும்புகிறார்கள். ஒரு "மருதமலை மாமணியே முருகய்யாவும்", "கணபதியே வருவாய்"யையும் இனியும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இளையராஜாவைத் தவிர்த்து மார்க்கெட்டில் இருக்கும் எந்த இசையமைப்பாளரும் கிரியேட்டிவ் ஸ்பிரிச்சுவல் இசையை வழங்க முன்வருவதாக தெரியவில்லை. அதனாலேயே இளையராஜா என்னும் ஆளுமை இன்னும் பல வீடுகளில் நிரம்பி வழிகிறது.

உலகில் எந்த வானொலியிலும் எந்த அலைவரிசையிலும் கேட்கமுடியாது இன்னிசையைப் பக்திப்பாடல்களில் வழங்கியவர்கள் தமிழர்கள். அந்த காலம் மலையேறி விட்டதாகவே தோன்றுகிறது. மக்களின் ரசனை மாறிவிட்டதோ என்ற எண்ணமும் எனக்கு வருவதுண்டு ஆனால் அது தவறென்பதையும் புரிந்து கொண்டேன். இன்னும் பல வீடுகளில் சீர்காழி கோவிந்தராஜனும், ஜேசுதாஸ்ஸும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் அதிகம் வரவேற்கப்பட்ட பக்திப்பாடல்கள் என்று பார்த்தால் எஸ்.பி.பியின் "நமச்சிவாய"வையும், சுதா ரகுனாதனின் "தியான லிங்க"த்தையும் குறிப்பிடலாம். மற்றவை எல்லாம் ஏதோ ஒரு தனிமனித முயற்சியாகவோ அல்லது தானும் மார்க்கட்டில் இருக்கிறேன் என நிரூபிப்பதற்க்காகவோ செய்யப்பட்ட முயற்சிகளாகத்தான் தெரிகின்றன. அவை வெற்றி பெறாததற்கு அவற்றின் தரமே காரணம். திறமையான இசை வல்லுநர்களிருந்தும் இது பக்திப்பாடல்களின் தரம் குறைந்த வருத்தப்படக்கூடிய விஷமே.

Tuesday, June 28, 2005

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் கனவு காண்பதையோ, விருப்பங்களையோ தவிர்க்கவே பரிந்துரை செய்வேன். ஆனால் பெரியோர்கள் அதிகம் பேர் இலக்கை நிர்ணயம் செய், லட்சியத்தோடு போராடு என சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சாதனையாளர்கள் அதனால் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மைத் தூண்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்களின் லட்சியத்தை அடைய முயன்று கொண்டிருக்கையில் அவர்களின் எண்ணங்களும் விருப்பங்களும் எவ்வாறு இருந்தன என்பதே நமக்கு முக்கியம். ஒருவன் எப்பொழுது வருங்காலத்தை நினைக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதே அவன் நிகழ்காலத்தில் நிறைய இழக்க ஆரம்பித்து விடுகிறான். வருங்கால கனவுகள் எப்பொழுதும் இன்பமளிக்கக் கூடியவை அதனாலே அவற்றில் ஈடுபாடும் அதிகமாகி விடுகிறது. இது இயற்கை. ஆனால் எப்பொழுது எதையாவது ஒன்றை நினைத்து ஏங்கவோ கனவு காணவோ ஆரம்பித்து விடுகிறோமோ அப்பொழுதே அதற்கு எதிர்ப்புகளும் தடைகளும் ஆரம்பமாகி விடுகின்றன. இதைத் தான் இயலுலகு அல்லது உண்மை வாழ்க்கை எனக் கூறுகிறோம்.

நாம் நமது கனவையோ லட்சியத்தையோ அடைய தலைப்படும் பொழுது எடுக்கும் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு அர்த்தம் பெரும். அந்த அசைவுகள் நமது அடுத்த அடிகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமே தவிர அவற்றுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு எண்ணங்களும் எவ்வளவு முக்கியமோ அவற்றை நடைமுறை படுத்தும் முறைகளும் அவ்வளவு முக்கியம். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் என்றோ ஒருநாள் யாரோ ஒருவரின் எண்ணத்தில் உருவானது தான். எண்ணங்கள் தான் மெய்ப்படுகின்றன. ஆனால் நம்மை சென்றடைவது எண்ணங்களும் அவற்றின் இறுதி வடிவங்களும் தான். இடைப்பட்ட அந்த மாற்றங்கள் எதுவும் நமது கவனத்திற்கு வராமல் போய் விடுகின்றன. அந்த ஆரம்பத்திலிருந்து முடிவிற்கு செல்லும் பொழுது இடையில் நடக்கும் அந்த மாற்றங்கள் எதுவும் வெளிப்படுவதில்லை. அதனாலே உலகில் வாழும் பாதி ஜீவராசிகள் இன்னும் எண்ணங்களிலும் அவற்றை உருவகப்படுத்துவதிலுமே தமது உலக வாழ்க்கையைச் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தன் சொன்னது போல "நாம் என்ன நினைக்கிறோமோ நாம் அதுவாகவோ ஆகின்றோம். நமது இந்த உருவகம் நம்முடைய எண்ணங்களால் ஆனது. நமது எண்ணங்களால் தான் நாம் இந்த உலகை உருவகப்படுத்துகிறோம்" (we are what we think, all that we are arises from our thoughts. With our thoughts we make the world.) இதையே தான் மகாத்மா காந்தியும் "நாம் இந்த உலகில் காண தலைப்படும் மாற்றங்கள் நாமே தான்" (we are the change we wish to see in this world) எனக் கூறியிருக்கிறார். ஒருவன் தன் எண்ணங்களை உருவகப்படுத்த கற்றுக் கொண்டானேயானால் அவன் வெற்றி பெறுவது உறுதி. அவனது வெற்றி தோல்விகளையும் அவனது எண்ணங்களே உருவாக்குகின்றன. மனிதனுக்கு ஒரு கெட்ட வழக்கமுண்டு. அவனது ஆசைகளும் விருப்பங்களும் நினைத்தவுடன் நடந்தேறி விட வேண்டும். எப்பொழுது அவனுக்கு அது முடியாமல் போகிறதோ அப்பொழுது அவன் ஏமாற்றமடைகிறான். சில சமயம் ஆசைகளை நடைமுறை படுத்த அவன் சில தவறான பாதைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.

ஏன் நினைக்க தெரிந்த மனிதனுக்கு தமது எண்ணங்களுக்கு வடிவம் தர முடிவதில்லை. அவனுக்கு அதற்குண்டான வழிமுறைகளோ மறுக்கவோ மறைக்கவோ படுகின்றன. அதனாலே குழந்தை வளர்ப்பென்பது நமது சமுதாயத்தில் அதிக அக்கறை கொண்ட விஷயமாக கருதப்படுகிறது. சிறு வயது முதலே அவனுக்கு அவனது எண்ணங்களுக்கு வடிவம் தரும் வழித்தடங்களைக் கற்பிக்க முயல்கிறோம். அப்படியிருப்பினும் இயலுலகை காண அவன் அதிக தூரம் கடந்து வருகிறது. இடையில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புக்களும் அவனக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை அசைத்துப் பார்த்துவிட்டு போய்விடுகின்றன. அதனால் எப்பொழுது அவனக்கு அந்த வழிமுறைகள் தேவைப்படுகின்றனவோ அப்பொழுது அவை கிடைக்காமல் போய்விடுகிறது.

இதற்கெல்லாம் காரணமென்ன? இயலுலகு என்னும் வெளியுலகை மனிதன் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறான். அவனது எண்ணங்களும் அவனது ஆளுமையை அந்த வெளியுலகில் நிலைநிறுத்துவதிலேயே இருக்கின்றன. இதில் அவன் சுயத்தை இழந்து விடுகிறான். அல்லது அவனது உள்ளுலகு அவனுக்கு தெரியாமலும் புரியாமலும் போய் விடுகிறது. அவனது பலங்களும் பலவீனங்களும் அவனுக்கு புலப்படாமல் போய்விடுகின்றன. எப்பொழுது அவனுக்கு அவனது பலம் தெரியவில்லையோ அப்பொழுதே அவன் தமது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வழிமுறைகளை நினைக்க மறந்து விடுகிறான்.

வெளியுலகில் கவனத்தை செலுத்தாமல் கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளிலும் உள்ளுலகத்தில் கவனத்தைச் செலுத்தினால் கண்டிப்பாக நினைத்ததெல்லாம் நடக்கும்...

Monday, June 27, 2005

கால் சென்டர்களில் ஊழல்

UKவில் வெளியாகும் "தி சன்" செய்தித்தாள் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், இந்திய கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பொறியாளரிடமிருந்து தங்களின் பத்திரிக்கையாளர் ஒருவர் எண்ணற்ற தகவல்களை வாங்கி வந்துள்ளதாக கூறுகிறது. பாஸ்வேர்ட்கள், முகவரிகள் மற்றும் பாஸ்போர்ட் குறிப்புகளும் இவற்றில் அடக்கமாம். அந்த பத்திரிக்கையாளர், ஒருவரின் தகவல்களைப் பெற சுமார் 350 ரூபாய் செலவளித்தாராம். 1000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் இது போல விற்கப்பட்டதாக தெரிகிறது. இதைப் பற்றி ஏற்கனவே பல இந்திய செய்திதாள்கள் எழுதி வருகின்றன. ஆனால் நாளுக்கு நாள் இந்த ஊழல் மட்டும் அதிகமாகிக் கொண்டே வருவதாகத்தான் தெரிகிறது.இந்திய கால் சென்டர்கள் ஏனைய நாடுகளிலுள்ள கால் சென்டர்களை விட குறைந்த விலையில் பணிகளை முடித்து தருகின்றன. அதனால் தான் இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்வதற்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதனாலேயே இந்த தொழில்நுடபத்தின் தரம் குறைந்த வருவதும் ஒரு மறுக்க முடியாத உண்மை. தகவல் பாதுகாப்பை ஒதுக்கி வைத்துவிட்டு பணியை முடித்துக் கொடுப்பதில் எந்த தரமும் இருக்காது. மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால் இந்தியாவின் வருவாயிலும் அவுட்சோர்சிங்கிலும் பெரிய பின்னடைவு ஏற்படும். செலவை குறைத்து இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்தால் அதற்கு கைமேல் பலன் தகவல் பாதுகாப்பில் கிடைப்பதும் உறுதி என சில வெளிநாட்டு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சில கால் சென்டர்களில் வருடத்திற்கு மூன்று முறையோ நான்கு முறையோ தான் தகவல் பாதுகாப்பைத் தணிக்கை செய்கிறார்கள். ஆனால் தினமும் இங்கு நடக்கும் தகவல் பரிமாற்றம் மட்டுமே பல லட்சக்கணக்கில் இருக்கும். இது ஒரு புறமென்றால், கால் சென்டர்களில் வேலை பார்க்கும் பலருக்கு அந்த தகவல்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை. பல தகவல்கள் குப்பையாகப் போடப்படுகின்றன. தகவல் பாதுகாப்பு என்பது பல நாடுகளில் சரிவர இல்லை. ஆனாலும் இந்தியாவில் இது போல நிகழ்வது அமெரிக்கா மற்றும் UKவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது ஏனென்றால் அமெரிக்காவிலிருந்தும் UKவிலிருந்தும் அவுட்சோர்சிங் செய்யப்படும் பணிகள் உள்ளூர் பணியிடங்களைக் காலி செய்து அனுப்பப்படுகின்றன. அதனால் இத்தகைய இந்திய ஊழல்களால் உள்நாட்டில் இவர்களுக்கு கண்டனங்களும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

இதுவரையில் இந்தியாவிற்கு சாதகமாக ஒரு விஷயம் மட்டும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இத்தகைய ஊழலைப் பற்றி இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டதற்கு, "அமெரிக்காவில் நடைபெறும் ஊழலை விட இந்தியாவில் நடைபெறும் ஊழல் ஒன்றும் பெரிதாக உணரப்படவில்லை மேலும் அங்கிருந்து (இந்தியாவிலிருந்து) இங்கு தகவல்கள் வந்து சேர்வதற்கு முன்னரே அத்தகவல்களில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன அதனால் நாங்கள் இதனை பொருட்படுத்தவில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.உலக அளவில் தினமும் நிதி சம்பந்தமாக ஏதேனும் முறைகேடுகள் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் இவை நடப்பது வருத்தமளிக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறையில் மட்டும் 2004-2005ல் $5.2bn அளவிற்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன மேலும் அடுத்த நிதியாண்டில் 40% வளர்ச்சி இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 குற்றங்களில் 10 மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதாகவும் இந்தியாவின் சட்டத்திட்டங்களும் இவற்றை அழிப்பதற்கு சாதகமாக இல்லை என அதிர்ச்சி தரும் செய்திகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்திய அரசும் இதனை அவ்வளவாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் தவறுகள் என தட்டிக்கழித்து வருகிறது. இந்தியாவில் கால்சென்டர்களில் சுமார் 3,50,000 பேர் வேலை செய்கின்றனர். பல கோடி ரூபாய் பணம் புரளுகிறது. ஆனால் நம் மக்கள் கூடிய மட்டும் எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியுமோ அதிலெல்லாம் ஊழல் செய்து விடுகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் 70% குற்றவாளிகள் குற்றங்களுக்கு புதியவர்கள்.

ஊழல் என்பது இந்தியாவின் சாபக்கேடோ?

எனக்கென்னவோ ஷங்கருக்கு அடுத்த படத்திற்கு தேவையான ஊழல் கதைகள் கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது

படங்கள் + தகவல்கள் - நன்றி பிபிசி

Thursday, June 16, 2005

புத்தகங்களின் தோழமை.

எதையும் நீ கேட்டாய் என்பதற்க்காக நம்பாதே. பல தலைமுறையாக வந்துவிட்டதென்பதற்க்காக உனது பாரம்பரியத்தின் மேல் நம்பிக்கை கொள்ளாதே. பல பேரால் ஏற்றுக்கொள்ளப்படுவதால் எதையும் நம்பாதே. உன்னுடைய வேத புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதென்பதற்க்காக எதையும் நம்பாதே. ஆசிரியர்கள் மூத்தவர்கள் என்கிற ஆளுமைகளால் படிப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதற்க்காக எதையும் நம்பாதே. ஆனால் உற்று நோக்கி ஆய்ந்து தெளிந்த பின் எதேனும் உன்னுடைய அடிப்படை கருத்துக்களுடன் ஒத்துப் போவதாக அமைந்தால், அது மற்றவருக்கு நன்மை தரும் என்கிற பொழுதில் அதை ஏற்றுக்கொண்டு அதன் படி வாழ தளைப்படு. - புத்தர்.

புத்த மகான் அருமையாக சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் உற்று நோக்க, ஆய்ந்து தெளிய பிப்லியோகிராஃபியைக் குறிப்பிடாமல் சென்றுவிட்டார். எனக்கு அடிக்கடி இந்த மாதிரியான சந்தேகங்கள் எழுவதுண்டு. உதாரணத்திற்க்கு எடுத்துக் கொண்டால்

Laziness is the worst enemy of humans - Jawaharlal Nehru.
சோம்பேறித்தனம் தான் மனிதனின் மோசமான எதிரி - நேரு

Humans should learn to love even their worst enemies - Mahatma Gandhi
மனிதர்கள் அவர்களின் மோசமான எதிரிகளிடத்தும் அன்பு காண வேண்டும். -மகாத்மா காந்தி

இரண்டு கருத்துக்களுமே மனிதப் பண்புகளை குறிக்க சொல்லப் பட்டதாகும். (என்னடா இந்த மாதிரி விதண்டாவாதம் எல்லாம் பண்றேன்னு சொல்கிறவர்கள் கண்டிப்பாக பின்னூட்டமிட வேண்டும்). இது போல எண்ணற்ற ஒப்புமைகளால் குழப்பங்கள் ஏற்படுவது எல்லோருக்கும் இயற்கை. மேலே குறிப்பிடப்பட்டள்ள கருத்துக்கள் அத்தகைய ஒப்புமைகளில் சந்தேகத்தையோ, பின்பற்றுவருக்கு சங்கடத்தையோ சிலருக்கு சிரிப்பையோ வரவழைக்கும். ஆனால் இது போல குழப்பங்கள் தான் வாழ்வின் ஆதாரங்கள் எப்பொழுது மனிதன் ஒவ்வொரு காரியத்திற்க்கும் யோசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவன் முன்னேற்ற பாதைகளின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்து விடுகிறான். ஆனால் அவனுக்கு தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. பாலசந்தர் படத்தில் வருவது போல ஒரு நண்பனாகவும், அறிஞராகவும் வழிகாட்டியாகவும் (friend, philosopher and guide) அவனை அந்த துணை வழிநடத்தி செல்ல வேண்டியிருக்கிறது. புத்தன் சொல்வது போல எதையும் உடனே நம்பி விடக்கூடாதென்றால் மனிதன் எதை வைத்து தான் ஆய்வு செய்வான்? உற்று
நோக்குவான்?. பதில் கிடைப்பதில்லை. இப்படியாக ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் புத்தன் ஒருவேளை புத்தகங்களை துணைக்கு அழைக்க சொல்லியிருப்பானோ என்று தோன்றியது. அப்பொழுதிருந்து தான் புத்தகங்கள் மீது ஆர்வம். சுமார் ஒரு நான்கைந்து வருடங்கள் இருக்கலாம். ஆனால் அவை என் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு அதிகம்.

"டேய் சாப்பிட்டிட்டு படிடா!! ஏம்மா சாப்பாடென்ன ஓடியா போகுது....... அப்ப அந்த ஆனந்த விகடன் மட்டுமென்ன ஓடியா போகப் போவுது. சாப்பிட்டிட்டு படிடான்னு சொன்னா"..... இப்படியான உரையாடல்கள் நிகழ ஆரம்பித்தன.

"காலைல இருந்து பொம்பள புள்ள மாதிரி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கே..... எங்கயாவது போய்ட்டு வாயேண்டா....... சரியான சோம்பேறியா மாறிட்டே....."
அப்பாவின் அநாவசிய கவலைகள் எல்லாம் புத்தன் வாக்கிற்க்குள் மூழ்கி போயிருக்கின்றன. (அதென்ன ! பொம்பள புள்ள மாதிரி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறது என்று சண்டை பிடிப்பவர்கள் மன்னிக்கவும்.....)

அப்படியாக படிக்க ஆரம்பித்தது தான் புத்தனும் புத்தகங்களும். (புத்தம் சரணம் கச்சாமி, புத்தகம் சரணம் கச்சாமி பதிவுகளுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை) இன்று சாப்பாடில்லாவிட்டாலும் பரவாயில்லை புத்தகங்கள் இல்லாமல் இருக்க முடியாதென்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. வேலை சார்ந்ததோ கருத்து சார்ந்ததோ புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் எப்பொழுதும் ஒட்டிக் கொண்டு இருக்கவே செய்கிறது. சின்ன வயசில சிறுவர்மலரில் படம் பார்ப்பதுண்டு. படம் பார்ப்பதற்க்காகவே சில மாயாவி கதைப் புத்தகங்களையும் வாங்கியதுண்டு.

விடலை பருவத்தில் அதுவே கொஞ்சம் கலர்புல்லாக வண்ணப்படங்களுக்காகவும் சில த்ரிஷாக்களுக்காகவும் சில நடுப்பக்க நாயகிகளுக்காகவும் வாங்க ஆரம்பித்ததுதான் இந்த வார இதழ்கள். மனிதனுக்கு மூன்று விலைமதிப்பற்ற பொருட்கள் கிடைக்கின்றன. நல்லது, கெட்டது அவற்றை தேர்ந்தெடுக்கும் விவேகமுள்ள புத்தி. எத்தனை நாள் தான் நடுப்பக்க நாயகி கிளர்ச்சியும் குளிர்ச்சியும் ஊட்டுவாள். அடுத்த பக்கங்களையும் படிக்க ஆரம்பித்தேன். வார இதழ்கள் நாளிதழ்களுக்கும் பின்பு அனைத்து இதழ்களுக்கும் வழிநடத்தின. எல்லாம் ஒரு கனவு போல் இருக்கிறது. ஒரு ஐந்து ஆறு வருடங்கள் ஓடிப்போய்விட்டன.

முதலில் வலைப்பூக்களில் இத்தகைய மீமீக்கள் நடைபெறுவது தெரிந்தவுடனே என்னுடைய அனுபவங்களையும் எழுத வேண்டும் போல் இருந்தது. யாருமே அழைக்காமல் இருந்ததால் பொறுமை காத்து வந்தேன். அன்பு என் பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் (மாட்டிவிட்டிட்டு வேடிக்கையா பாக்கறீங்க....உம்ம அப்புறம் கவனிச்சுக்கறேன்)

"memes are the cultural counterpart of genes", ஒரு கலாச்சாரத்தின் அணுநுட்பமே மீமீக்கள்... வலைப்பதிவில் இதனை ஆரம்பித்த அந்த மீமீ நாயகனுக்கு

இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இந்த மீமீ தொடருக்கு அழைத்த நண்பர் அன்பு அவர்களுக்கும் எனது நன்றிகள்.

என்னிடம் மொத்தமாக ஒரு 200 புத்தகங்கள் இருக்குமென நினைக்கிறேன்.

அவற்றுள் நாவல்களையும், நடுப்பக்கத்தில் நாயகிகள் இல்லாத புத்தகங்களையும் தவிர்த்து நல்ல புத்தகங்கள் என நான் பாதுகாப்பவை.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
கல்கியின் பொன்னியின் செல்வன்
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்துவின் தண்ணீர் தேசம்
வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
மகாத்மாவின் சத்திய சோதனை
அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள்
சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி
எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து
சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஓஷோவின் தம்மபதம்
மதனின் வந்தார்கள் வென்றார்கள்


கவிதைகளின் நான் அடிக்கடி புரட்டிப் பார்க்கும் புத்தகங்கள்

அப்துல் ரகுமானின் ஆலாபனை
வெண்ணிலாவின் நீரிலலையும் முகம்
அறிவுமதியின் நட்புக்காலம்


ஆங்கிலப் புத்தகங்களில் இப்பொழுது கைவசம் இருப்பவை
Beautiful mind - Sylvia Nasar
The Alchemist - Poelo Coelho
Monk who sold his ferrari - Robin S.Sharma
Da Vinci code - Dan browne
God Father - Mario Puzo
You can win - Shiv khera
Long walk to freedom - Nelson Mandela
Mein kempf - Adolf Hitler
Ignited Minds - Abdul Kalaam
Anthem, For the new intellectual - Ayn Rand
Kaizen - Taichi Ohno
Oliver Twist - Charles Dickens


இன்னும் சில ஐன் ரேண்ட் புத்தகங்களையும் பாலோ கோல்ஹோ புத்தகங்களையும் படிக்க வேண்டும் என ஆசை. கண்டிப்பாக இன்னும் ஒரு 25 வருடங்களாவது உயிரோடு இருப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருப்பின் இந்த லிஸ்ட்டில் இன்னும் ஒரு 400 புத்தகங்கள் சேர்ந்திருக்கலாம்.

பார்ப்போம்.!!! புத்தகங்களின் தோழமை எப்படியென்று...
நானும் ஒருகாலத்தில் பாடுவேன்
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே" --- என புத்தகங்களிடம்.

நான் அடுத்ததாக இந்த மீமீக்கு அழைப்பது

மணிகண்டன்
மதுரை-மல்லி
ரசிகவ்
தாரா
கறுப்பி

Monday, June 13, 2005

கல்லூரி புத்தகங்கள்

கல்லூரி வாழ்க்கைக்குப் பின்
படித்த புத்தகங்கள் பல
எழுதியவர்கள் பலர்

வார்த்தைகள் அதிகம்
வடிவங்களும் அதிகம்
அர்த்தங்கள் அதிகம்
அறிந்தவையும் அதிகம்

பள்ளத்தில் கிடந்த என்னை
தூசு தட்டி நானே
எடுத்துக் கொண்டதும்
புத்தகங்களைப் படித்துதான்

அப்படி இருந்தும்
மனம் ஏங்குகிறது
படிக்காமல் விட்ட அந்த
கல்லூரி புத்தகங்களுக்காக !

எந்த புத்தகங்களையும் படிக்காமலே
சில சமயம் புரிந்துவிடுகிறது
புத்தகங்களும் மனிதர்களும் ஒன்றென்று !
படிக்காமல் விட்ட மனிதர்களுக்காகவும்
மனம் ஏங்கும் பொழுது

Wednesday, June 08, 2005

சில தலைவர்கள் சில தகவல்கள்

இன்று காலை அவுட்லுக்கைத் திறந்தால் சில நல்ல விஷயங்கள் இமெயிலில் வந்திருந்தன. அவற்றுள் ஒன்று தான் இது.
சில தலைவர்களைப் பற்றிய சில செய்திகள் வந்திருந்தன. அவற்றை இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.

ஹிட்லர்:* ஹிட்லர் மிருகங்கள் மீது அதீத பாசம் கொண்டவர்.
* இவர் அசைவம் சாப்பிட மாட்டார்.

ஒரு கொடுங்கோலனிலும் ஒரு நல்லவன் இருந்திருக்கிறான்

புடின்:* புடின் தமது இளமை காலத்தில் ஜூடோவில் கருப்பு பெல்ட் வாங்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஜூடோ ஆசிரியர்கள் அவருக்கு உயரம் போதவில்லை என்று நிராகரித்து விட்டனர்.
* இன்று ஜூடோவில் புடின் கருப்பு பெல்ட் வாங்கிவிட்டார்.

என்ன நம்ம லல்லுபிரசாத் யாதவ் இளங்கலைப் பட்டம் பெற்றது போல என்று சொல்கிறீர்களா? என்ன தான் இருந்தாலும் ரஷ்ய தலைவர் ஆயிற்றே போராடித்தான் வாங்கியிருப்பார் என நினைக்கிறேன்.

அராஃபத்:* அராஃபத் அரசியலில் ஈடுபட்டதால் இளங்கலை பட்டம் பெற அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆனது.
* டாம் & ஜெர்ரி டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பதற்க்காக அராஃபத் விருந்தினரைக் கூட பல மணி நேரம் காக்க வைப்பாராம்.

நம்ம லல்லு உட்கார்ந்து கொண்டே சுதந்திர தினத்தன்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கதைதான்.

தலாய் லாமா:* நான்கு வயதில் திபேத்தின் முதன்மை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்
* கிட்டதட்ட 500 புத்தகங்களை எழுதிய தலாய் லாமாவின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா? பழைய கடிகாரங்களை சேகரிப்பதும் அவற்றைப் பழுது பார்ப்பதும் தானாம்

தலாய் லாமாவிற்க்குள் இருந்த ஐன்ஸ்டீன் யாருக்குமே தெரியவில்லை..ம்ம்

Tuesday, June 07, 2005

நுழைவுத் தேர்வு - ஒரு பார்வை

நான் படிக்கிற காலத்தில் அதிகம் என்னை அவதிப்படுத்திய ஒன்று நுழைவுத் தேர்வு. +2 படிக்கும் ஒவ்வொருவருக்கும் நுழைவுத் தேர்வென்பது ஒரு சிம்மசொப்பனம். நம்ம முதல்வரம்மா சத்தமில்லாமல் சலனமில்லாமல் இதனை அப்புறப்படுத்தியிருக்கிறார். state board_ல் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது மிகுந்த சந்தோஷமளிக்கக் கூடிய விஷயம். தினமும் +2 தேர்வுக்கு படிப்பு, வாரம் இருமுறை நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என்று கிட்டதட்ட ஒரு இயந்திர கதியில் +2 வாழ்க்கையை மாணவர்கள் கழித்து வந்தனர். இன்று அந்த நிலைமை மாறியிருக்கிறது. நம்முடைய தம்பி தங்கையருக்காவது ஞாயிற்று கிழமை சாப்பாடு அம்மாவுடனும் அப்பாவுடனும் கிடைக்கும் என்று நினைவே இன்பமளிக்கிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்? அதுவும் இந்த ஆண்டே இதனை கொண்டு வருவதற்கு ஏன் இந்த அவசரம்? 60,000 விண்ணப்பங்களும் அதற்கு செலவு செய்யப்பட்ட பணமும் வீணாகப் போகிறதே ஏன்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் இந்த ஆண்டு சுமார் 2000 மாணவர்கள் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுகள் எழுதியிருக்கின்றனர். போன வருடமே +2 முடித்து ஓராண்டு நுழைவுத் தேர்வுக்காக படித்த இவர்களின் முயற்சிகளில் எல்லாம் மண்ணை வாறி போடுவது நியாயமா?

இந்த அவசரம், அதுவும் கவுன்சிலிங் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில் அமல்படுத்தப்படும் இந்த திட்டம், கண்டிப்பாக அரசின் ஏதோ குளறுபடியை மறைப்பதற்க்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவுக்கு அடுத்த தேர்தலில் (தேர்வில்) இதற்க்கான விடை கிடைக்கும். சரி +2 மார்க்கை வைத்துதான் மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் வழங்கப்படுமென்றால் CBSE மாணவர்களின் கதி என்ன?. CBSE தேர்வு முறை மிகவும் கடினமான ஒன்று. அதில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெறுவதென்பது மிகவும் கடினம். அவர்கள் இந்த திட்டத்தால் பெரிது பாதிக்கப் படப் போவது உறுதி. இப்படியாக இந்த திட்டத்தில் குறைபாடுகளும் அதிகமிருக்கின்றன. தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள், நுழைவுத் தேர்வுக்கென்றே தனியாக பயிற்சி அளித்து பெயர் வாங்கிய பள்ளிகள் என இந்த திட்டத்தால் நஷ்டமடைபவர்களும் அதிகம்.

ஆனால் மாணவனின் பார்வையில் பார்த்தால் இது அவர்களுக்கொரு வரப்பிரசாதம். +2 படிப்பை அவன் இனி ஒரு தவமாக மேற்கொள்ள வேண்டியதில்லை. பெற்றோரை துறந்து, பயிற்சி மையங்களுக்கு பறந்து அல்லல் பட வேண்டியதில்லை. நிம்மதியாக எப்பொழுதும் போல பெற்றோருடன் வார விடுமுறைகளை பகிர்ந்து கொண்டே, ஒரு நிதானத்துடனும் தேர்வை அணுகலாம். கிராமப்புற மாணவர்களை இந்தத் திட்டம் மேலும் மகிழ்ச்சியடைச் செய்யும். தனியார் பயிற்சி மையங்களின் வாயில் அறைபட்டு பணப்பிடுங்கலில் உருக்குலைந்து போன எத்தனையோ கிராமப்புற மாணவர்களை எனக்குத் தெரியும். கல்வி என்பது வியாபாரமாகி ஒரு வர்த்தகமாகவே உருமாறி விட்டதற்கு இந்த நுழைவுத் தேர்வும் ஒரு காரணம். எத்தனையோ பேர் நுழைவுத் தேர்வுக்கென்று சிறப்பாக பயிற்சி எடுக்க வேண்டுமென்று அத்தை வீடுகளிலும் மாமா வீடுகளிலும் தங்கிப்படித்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் படிக்கத் தேவையான அந்த அமைதியான சூழ்நிலை கிடைக்கவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை. அது மாற்றப்பட்டிருக்கிறது.

பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் முதல் எதிரி இன்றைய கல்விமுறை தான். படிப்பென்பது மாணவர்களுக்கு ஒரு பெரும் சுமையாகவே இருக்கிறது. எது தேவையோ அது அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எதை எதையோ படிக்கும் மாணவனுக்கு படித்தவற்றையெல்லாம் பயன்படுத்த தெரிவதில்லை. அல்லது அவர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதனை சொல்லிக் கொடுப்பதில்லை. கிராமப்புறங்களில் இந்த நிலை பெரிதும் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் நுழைவுத் தேர்வும் அவர்களின் கஷ்டங்களை மேலும் அதிகப்படுத்தியது. 21 வருடத்தில் நுழைவுத் தேர்வென்பது கல்வியின் கந்தையை கழற்றி சந்தையில் விற்றுவந்தது. இந்த நிலைமை இன்று மாறியிருக்கிறது. இதற்க்காக முதல்வர் அவர்களுக்கு ஒரு ஓ போடலாம். ஆனால் அவசரம் அவசரமாக இதனை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்பதற்க்கு முதல்வர் சரியான விளக்கமளிக்க வேண்டும்.

மொத்தத்தில் கல்வியை வியாபார நோக்கில் அணுகியவர்களுக்கு இது ஒரு இழப்பு. CBSE தவிர மற்ற மாணவர்களுக்கு சந்தோஷப்பட வேண்டிய விஷயம். தனியார் கல்லூரிகள் ஏற்கனவே கல்வியை தொழிலாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வருடமொருமுறை இது மேலும் ஒரு போனஸ். இப்படியாக இன்றைய என் வலைப்பதிவுக்கு மற்றுமொரு பதிவு "நுழைவுத் தேர்வு - ஒரு பார்வை".