Tuesday, June 07, 2005

நுழைவுத் தேர்வு - ஒரு பார்வை

நான் படிக்கிற காலத்தில் அதிகம் என்னை அவதிப்படுத்திய ஒன்று நுழைவுத் தேர்வு. +2 படிக்கும் ஒவ்வொருவருக்கும் நுழைவுத் தேர்வென்பது ஒரு சிம்மசொப்பனம். நம்ம முதல்வரம்மா சத்தமில்லாமல் சலனமில்லாமல் இதனை அப்புறப்படுத்தியிருக்கிறார். state board_ல் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது மிகுந்த சந்தோஷமளிக்கக் கூடிய விஷயம். தினமும் +2 தேர்வுக்கு படிப்பு, வாரம் இருமுறை நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என்று கிட்டதட்ட ஒரு இயந்திர கதியில் +2 வாழ்க்கையை மாணவர்கள் கழித்து வந்தனர். இன்று அந்த நிலைமை மாறியிருக்கிறது. நம்முடைய தம்பி தங்கையருக்காவது ஞாயிற்று கிழமை சாப்பாடு அம்மாவுடனும் அப்பாவுடனும் கிடைக்கும் என்று நினைவே இன்பமளிக்கிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்? அதுவும் இந்த ஆண்டே இதனை கொண்டு வருவதற்கு ஏன் இந்த அவசரம்? 60,000 விண்ணப்பங்களும் அதற்கு செலவு செய்யப்பட்ட பணமும் வீணாகப் போகிறதே ஏன்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் இந்த ஆண்டு சுமார் 2000 மாணவர்கள் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுகள் எழுதியிருக்கின்றனர். போன வருடமே +2 முடித்து ஓராண்டு நுழைவுத் தேர்வுக்காக படித்த இவர்களின் முயற்சிகளில் எல்லாம் மண்ணை வாறி போடுவது நியாயமா?

இந்த அவசரம், அதுவும் கவுன்சிலிங் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில் அமல்படுத்தப்படும் இந்த திட்டம், கண்டிப்பாக அரசின் ஏதோ குளறுபடியை மறைப்பதற்க்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவுக்கு அடுத்த தேர்தலில் (தேர்வில்) இதற்க்கான விடை கிடைக்கும். சரி +2 மார்க்கை வைத்துதான் மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் வழங்கப்படுமென்றால் CBSE மாணவர்களின் கதி என்ன?. CBSE தேர்வு முறை மிகவும் கடினமான ஒன்று. அதில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெறுவதென்பது மிகவும் கடினம். அவர்கள் இந்த திட்டத்தால் பெரிது பாதிக்கப் படப் போவது உறுதி. இப்படியாக இந்த திட்டத்தில் குறைபாடுகளும் அதிகமிருக்கின்றன. தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள், நுழைவுத் தேர்வுக்கென்றே தனியாக பயிற்சி அளித்து பெயர் வாங்கிய பள்ளிகள் என இந்த திட்டத்தால் நஷ்டமடைபவர்களும் அதிகம்.

ஆனால் மாணவனின் பார்வையில் பார்த்தால் இது அவர்களுக்கொரு வரப்பிரசாதம். +2 படிப்பை அவன் இனி ஒரு தவமாக மேற்கொள்ள வேண்டியதில்லை. பெற்றோரை துறந்து, பயிற்சி மையங்களுக்கு பறந்து அல்லல் பட வேண்டியதில்லை. நிம்மதியாக எப்பொழுதும் போல பெற்றோருடன் வார விடுமுறைகளை பகிர்ந்து கொண்டே, ஒரு நிதானத்துடனும் தேர்வை அணுகலாம். கிராமப்புற மாணவர்களை இந்தத் திட்டம் மேலும் மகிழ்ச்சியடைச் செய்யும். தனியார் பயிற்சி மையங்களின் வாயில் அறைபட்டு பணப்பிடுங்கலில் உருக்குலைந்து போன எத்தனையோ கிராமப்புற மாணவர்களை எனக்குத் தெரியும். கல்வி என்பது வியாபாரமாகி ஒரு வர்த்தகமாகவே உருமாறி விட்டதற்கு இந்த நுழைவுத் தேர்வும் ஒரு காரணம். எத்தனையோ பேர் நுழைவுத் தேர்வுக்கென்று சிறப்பாக பயிற்சி எடுக்க வேண்டுமென்று அத்தை வீடுகளிலும் மாமா வீடுகளிலும் தங்கிப்படித்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் படிக்கத் தேவையான அந்த அமைதியான சூழ்நிலை கிடைக்கவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை. அது மாற்றப்பட்டிருக்கிறது.

பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் முதல் எதிரி இன்றைய கல்விமுறை தான். படிப்பென்பது மாணவர்களுக்கு ஒரு பெரும் சுமையாகவே இருக்கிறது. எது தேவையோ அது அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எதை எதையோ படிக்கும் மாணவனுக்கு படித்தவற்றையெல்லாம் பயன்படுத்த தெரிவதில்லை. அல்லது அவர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதனை சொல்லிக் கொடுப்பதில்லை. கிராமப்புறங்களில் இந்த நிலை பெரிதும் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் நுழைவுத் தேர்வும் அவர்களின் கஷ்டங்களை மேலும் அதிகப்படுத்தியது. 21 வருடத்தில் நுழைவுத் தேர்வென்பது கல்வியின் கந்தையை கழற்றி சந்தையில் விற்றுவந்தது. இந்த நிலைமை இன்று மாறியிருக்கிறது. இதற்க்காக முதல்வர் அவர்களுக்கு ஒரு ஓ போடலாம். ஆனால் அவசரம் அவசரமாக இதனை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்பதற்க்கு முதல்வர் சரியான விளக்கமளிக்க வேண்டும்.

மொத்தத்தில் கல்வியை வியாபார நோக்கில் அணுகியவர்களுக்கு இது ஒரு இழப்பு. CBSE தவிர மற்ற மாணவர்களுக்கு சந்தோஷப்பட வேண்டிய விஷயம். தனியார் கல்லூரிகள் ஏற்கனவே கல்வியை தொழிலாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வருடமொருமுறை இது மேலும் ஒரு போனஸ். இப்படியாக இன்றைய என் வலைப்பதிவுக்கு மற்றுமொரு பதிவு "நுழைவுத் தேர்வு - ஒரு பார்வை".

7 comments:

வீ. எம் said...

கனேஷ் ..
சாதாரண பார்வை அல்ல...அகன்று விரிந்த பார்வை ... நல்லதொரு அலசல்.. !!

+2 மதிப்பென்னுக்கும் பொறியியல் , மருத்துவம் படிப்பிற்க்கும் சம்பந்த்தம் மிக குறைவு.. !!

ஒன்று +2 syllabus மாற்ற வேண்டும்..இல்லை நுழைவு தேர்வு இருக்க வேண்டும்.. என் கருத்து மட்டுமே!

வீ.எம்

Moorthi said...

நானு படிக்கும்போதும் ஐஐடின்னாங்கெ... ஏபிடி பார்சல் சர்வீஸ்னாங்கெ.. எனக்குதான் ஒன்னும் வெளங்கல.. வக்கத்தவனுக்கு வாத்தி வேலைன்னு சொல்வாய்ங்கெளே? அந்தமாதிரி ஏதோ ஒன்ன படிச்சேன்....ம்.. அத ஏங்கேக்குறீங்க.. எல்லாம் பழய கதை.. பெருமூச்சுதேங் வருது.

ஜெ. உமா மகேஸ்வரன் said...

நுழைவுத் தேர்வு பற்றி நல்லதொரு அலசல். நன்றி!

Go.Ganesh said...

நன்றி வீ.எம், மூர்த்தி & உமா மகேஸ்வரன்

மூர்த்தி ! நீங்கள் சொல்வது சரிதான் நானும் IIT JEEக்குப் படிக்கப் போறேன்னு சும்மா ஒரு மூவாயிரம் செலவு செஞ்சேன் (எங்கப்பா தான் செஞ்சாரு.....) சின்ன சின்ன சந்தேகங்கள் வந்தாலும் அதை தெளிவு படுத்த ஆசிரியருக்கு நேரமில்லை அல்லது தெரியவில்லை..... தென் மாவட்டங்களும் கிராமங்களும் இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. இப்போதான் IAS, IIT ன்னு நம்ம மக்கள் நுழைய ஆரம்பிச்சுருக்காங்க..... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..

Vaa.Manikandan said...

பார்ட்டி!
இவ்வளவு மேட்டர் எப்படி டைப் பண்ணுனீங்க?இன்னும் படிக்க வில்லை.படித்துவிட்டு சொல்லுகிறேன்...
என்னொட ப்லொக் பார்த்தீங்களா?

அல்வாசிட்டி.சம்மி said...

தம்பி நல்ல அலசல். நா எழுதனும்னு நெனச்சேன் பாத்தா நீ ஏற்கனவே எழுதீட்ட. அழகா எழுதிருக்க.

சரி இப்ப ஏதோ குலுக்கல் முறைனு சொல்லுரானுகளே என்னப்பா அது?

இந்த அரசியல்வாதிங்க தனகேத்த மாதிரி எல்லாத்தையும் வளைச்சிகிறதால வர பிரச்சனை இது. எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளில் கண்டிப்பாக பலர் பாதிக்கப்ப்டுகின்றனர்.

இம்புரூவ்மெண்ட், நுழைவுத்தேர்வு செலவு, அது திருத்திய செலவு, விண்ண்ப்பபடிவம்? இப்படி நெறைய இருக்குப்பா. இப்ப இம்புரூவ்மெண்ட் பிரச்சனை பெருசு. அத ஒழிச்சது நல்ல விசயம்தான். ஆனா அத ஒரு 1 வருசம் முன்னாடி ஒழிச்சு இனிமே கெடையாதுன்னு சொல்லியிருக்கலாம் அல்லது செய்யலாம். ஹம்ம்ம் அப்படியெல்லாம் செஞ்சிட்ட அவங்க அரசியவாதி இல்லையே? என்ன நாஞ் சொல்லுரது?

Go.Ganesh said...

நன்றி அல்வாசிட்டி

ஒரு வருசம் முன்னாடி கண்டிப்பாக இத்தகைய மாற்றங்கள் மாணவர்களுக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும்.........

//சரி இப்ப ஏதோ குலுக்கல் முறைனு சொல்லுரானுகளே என்னப்பா அது?//
அது என்னன்னா இப்போ ரெண்டு பேர் ஒரே மார்க் எடுத்திட்டா
முதலில் கணிதம்
அடுத்து இயற்பியல்
அடுத்து வேதியியல்
அடுத்து பிறந்த தேதி
அடுத்து குலுக்கல் முறை என அவர்களை வரிசை படுத்தும் முயற்சி

// அப்படியெல்லாம் செஞ்சிட்ட அவங்க அரசியவாதி இல்லையே? என்ன நாஞ் சொல்லுரது? //
நமக்கு அல்வா குடுக்கறதே அவங்க வேலையா போச்சு