Thursday, December 31, 2009

மண் சேராக் காரணம்

உச்சந்தலையில் விழுந்து
ஒரு துவட்டலில்
உலர்ந்துவிட்ட
மழைத்துளியொன்று கேட்கிறது
அது மண் சேராமல் போனதற்கான
காரணத்தை!

மஞ்சப்பை

பாலித்தீன் பைகளுடன்
உலக வெப்பத்தினைப்
பற்றிய செய்திக்குறிப்புகள்
படிக்கும் பொழுதெல்லாம்
அப்பா எடுத்துப்போக சொல்லி
மறுத்துவிட்ட மஞ்சப்பையையும்
தவறாமல் படித்து விடுகிறேன்.

Wednesday, December 30, 2009

வானவில்

எப்பொழுதாவது வானவில்லைப்
பார்த்திருக்கிறாயா எனக் கேட்டேன்?
இல்லை என்றாய் நீ.

நான் கேட்டது உனக்கும்
நீ சொன்னது எனக்கும்
ஏனோ தெரியவில்லை.

பொருளாதார மாற்றம்

பீடிக்கட்டுகளிலிருந்து சிகரெட்டு பாக்கெட்டுகளுக்கும்
பின் அவற்றிலிருந்து பீர் பாட்டில்களுக்குமாய்
நடந்தேறுகிறது பொருளாதார மாற்றம்
தன் மகனுக்கான பொருளாதாரக்கல்வியினை
வழங்கும் தகப்பன்மார்களுக்கு மட்டும் தெரியாமல்!

காக்கா க(வி)தை!

மிட்டாய் பகிர்வுக்கு
என் ”கடி”யையும்
காரியக்கறப்பின் சாதுரியத்திற்கு
என் ”பிடி”யையும்
உருவகிக்கிறீர்கள்!
அப்பொழுதுகளிலும்
நான் பார்த்திராத பாட்டியிடம்
வடை களவாடியதாகச்
செய்தி வாசிக்கும் பொழுதும்
நான் வடிக்கும் கண்ணீரில்
உங்கள் நீலியும் முதலையும்
இருந்திருக்கலாம்!

முற்றம் வந்து வைத்துப்போகும்
பாட்டன் பூட்டன் சாதத்திற்காய்
என்னைக் கூவி அழைத்துப்போகிறீர்கள்!
அப்பொழுது நான் வடிக்கும் கண்ணீரில்
உங்களின் கடி, பிடி, முதலை, நீலி என
அனைத்தையும் சேர்த்து
உதிர்த்து விடுகிறேன்.

அப்பாவின் கடிதங்கள்

பத்து வருடங்களுக்கு முன்
அப்பா கடிதமெழுதுகையில்
சவமாக்கிய கொசுக்களின்
இறுதிச்சடங்கு சாம்பல்கள்
இன்று அப்பா அனுப்பும்
மின்னஞ்சல் முகவரிகளை
மறைத்தபடி வந்து சேர்கின்றன.

குட்டி பதினாறடி பாயும்

வீட்டிற்கு தெரியாமல்
பத்தாம் வகுப்பில்
பார்த்த நீலப்படமும்
காயத்ரி என்பவளுக்காய்
எழுதிய காதல் கடிதமும்
எதிர்வீட்டுக் கண்மணிக்கான
சன்னலோரத்து சமிக்ஞைகளும்
கீழடித்து கவனமாய்
திறந்த குவாட்டர் பாட்டிலும்
அடிக்கடி தெரிகின்றன
பத்தாம் ஐந்தாம் வகுப்பு மகனின் முகத்தில்.

லக்ஸ் சோப்பு வாசனை

வீட்டுத் தோட்டத்து
தென்னைமர இளநீரில் வீசுகிறது
நான் குளித்து அதற்கிட்ட
லக்ஸ் சோப்பு வாசனை.

முதலெழுத்துக்கள்

அன்று பரிசு வழங்க
ஒலிபெருக்கியில் அழைத்த
அறிவிப்பாளன் மறந்துவிட்ட
பெயரின் முதலெழுத்துக்களை
மறக்காமல் எழுதுகிறேன்
அப்பாவிற்கான கடிதத்தில்!
முதலெழுத்துகளில் அம்மாவையும்
இணைத்துவிட்ட அப்பாவின்
பெருமிதத்தில் ஒரு எண்பது
சதவிகிதத்தைக் கடிதத்தில்
பசையாய் தடவியபடி.

Monday, December 28, 2009

நான்கும் ஒன்றும்

நான்கும் ஒன்றும்
சமமென்றாகும் பொழுது
அவனின் சதுரமும்
எனது வட்டமும்
உலகமாகிக்கொண்டிருக்கும்.

ஒரு மழைக்காதல்

யாரும் வந்து பார்க்காத
ஜன்னல் கம்பிகளின் வழியே
நுழைகிறது ஒரு மழைத்துளி.

நுழைந்த மழைத்துளியின்
போக்கின் வழி உருவாகும்
ஒரு பேரலை
நீர் படாத இடம்நெடுக
ஈரம் பரப்புகிறது.

நிலைகள் நடுக்கி
திரைச்சீலைகளை
உதிர்க்கிறது பேரலையின்
கொடூரம்.

ஜன்னலுடைத்து வீடும்
பேரலையில் கரைகிறது.

என் வீடென்றும் ஜன்னலென்றும்
நினைத்திருந்த நான்
உறங்கிக்கொண்டிருக்கிறேன்.

ஒற்றையடிப் பாதை

நெடுந்துயர்ந்து நிற்கும்
நெருஞ்சிமுற்செடிகளின் நடுவே
கண்டெடுக்கப்படாமலிருந்த
ஒற்றையடிப்பாதைகளின்
இருப்பைத் தெரிவிக்கின்றன
சில பாதச்சுவடுகள்.

பிரசுரம்

நிராகரிக்கப்பட்ட எழுத்துக்களில்
எழும் கேள்விகளில்
தான் பிரசவிக்கிறது
பிரசுரத்திற்கான முதல் கவிதை.

Thursday, December 24, 2009

விட்டுச் சென்றவை

முந்தைய தினம் மடிந்துபோன
செல்வியின் கணவன் சொன்னான்
அவள் தனிமையையும் துக்கத்தையும்
விட்டுச் சென்றுவிட்டதாக

நேர்கோட்டில் சீரிப்பாய்ந்து
தன்குறி தகர்த்ததொரு தோட்டா
விட்டுச் செல்கிறது
நேர்த்தியையும் பயத்தையும்

யானைக் கூட்டமொன்று
தாம் நுழைந்த ஊசிமுனை
துவாரங்களில் விட்டுச் செல்கிறது
பெருமையையும் சிறுமையையும்

சூரியன் கைகளில்
எரியத்துவங்கிய தீக்குச்சி
நெருப்பில் விட்டுச் செல்கிறது
சில விளக்குகளையும் பந்தங்களையும்

நெடுங்கம்பு நீட்டி
கலைத்துவிட்ட கூடொன்றில்
தேனீக்கள் விட்டுச் செல்கின்றன
காலத்தையும் சேமிப்பையும்

அந்தக் கண்ணாடி மட்டும்
எப்பொழுதும் காட்டுவதே இல்லை
முன்வந்து நின்று நான் விட்டுச்சென்ற
எனதுருவை.

Tuesday, December 22, 2009

முற்றுப்புள்ளி

அர்த்தமுணர்த்தும் உந்துதலுடன்
மொழித்திடலில் போட்டியிடுகின்றன
எழுத்துக்களும் இலக்கணங்களும்.

முடிவில் பச்சைக்கொடியுடன்
நின்று சிரித்துக்கொண்டிருக்கிறது
மொழியற்றதொரு முற்றுப்புள்ளி.

Sunday, December 20, 2009

வந்தடைந்த கேள்விகள்

என் கேள்விகளை
நீ கேட்கும் போது வியக்கிறேன்!
எப்படி கேள்விகள்
கேள்விகளாகவே
சென்று சேர்ந்தன என்று?

என் கேள்விகள் உன்னை
வந்தடைந்திருக்கலாம்
பெருத்த வாகனமொன்றில்
வளைந்த பாதைகளில்
விரைந்து பிராயணிக்கையில்

வேலிகள் மறைக்கும்
மந்தைச் செடிகளின்
மருகும் முனகலில்

நெருப்பு, விளக்குகளின்
வெளிச்சம் மறைத்து
இரைக்கும் வெப்பத்தில்

தந்திக்களின் நொடிகளாக
நுரைத்து வழியும்
நரம்புகளின் அதிர்வுகளில்

ஒரு நீர்க்குமிழியின்
மேலிடை பிம்பங்களில்
ஆழ்ந்த விசாரணையில்

வரிசை எறும்புகளின்
இருப்பறியாமல்
பூட்டப்படும்
கருப்பு பெட்டிகளில்

முழுமனதில்லாமல் எடுக்கப்பட்டு
நீட்சிகளாய் நீடிக்கும்
முந்திப்போன முடிவுகளில்.

என் கேள்விகளும் என்னை
வந்தடைந்தனவே.
என் கேள்விகளில் துவங்கி
என் கேள்விகளிலேயே
முடிந்து விடுகிறது
உனக்கும் எனக்குமான உறவு.


உரையாடல் கவிதைப் போட்டிக்காக.

Wednesday, December 09, 2009

தமிழ் சினிமாவும் ரேனிகுண்டாவும்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் வன்முறைப் படங்களும் அவை பெறும் வணிக வெற்றிகளும் சில கேள்விகளை நம் முன்னே வைக்கின்றன. பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் இப்பொழுது ரேனிகுண்டா. ஏனிந்த கோரம்? தமிழ் சினிமாவின் வித்தியாச முயற்சிகள் ஒரு கோரப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் வியக்கத்தக்க விஷயம் இவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது.

ஒரு நாள் முழுதும் உள்ளங்கை ரேகைகளேயே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். நம்மைச் சுற்றி நகரும் நிழல்களில் பல ஓவியங்களைப் பார்க்கலாம். இப்படிப் பொதுமையாக அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் பல விஷயங்கள் திரைக்களமாக்கப்பட வேண்டியவை. ஆண்பாவம் எனக்குப் பிடித்த பத்து தமிழ் படங்களில் முதல் இடம் பெறும். காரணம் அதில் இடம்பெறும் பாத்திரங்களை நான் நிஜ வாழ்க்கையில் அடிக்கடி பார்க்க நேர்வது தான். ஆண்பாவத்தின் களம் அப்படி. தினமும் நான் பார்க்கும் நபர்களில் ஒருவரேனும் சின்னப் பாண்டியையோ, பெரிய பாண்டியையோ, ராமசாமி அண்ணனையோ நினைவு படுத்திப் போவார்கள். ஆண்பாவ பாத்திரங்களை நிஜ வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்த நாட்கள் பல உண்டு.

ஆண்பாவம் போல் அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வரும் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. இதற்கு காரணம் வர்த்தக ரீதியாக சினிமாக்கள் வெற்றிபெற பல விஷயங்களை உள்ளடக்கியிருக்க வேண்டியிருக்கிறது. ஏ, பி, சி என மூன்று செண்ட்டர்கள் பிரித்தாகி விட்டன. ஒவ்வொரு செண்டரும் மற்றொன்றை விட ரசிகன், ரசனை, களம் தொடங்கி சினிமா பார்க்கும் தியேட்டர் வரை வேறுபடுகின்றன. இப்படியிருக்கையில் தமிழ் சினிமாக்கள் மூன்று வகையான ரசிகர்களையும் திருப்தி படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் தமிழ் சினிமா எவ்வளவு நல்ல களமாக இருந்தாலும் இரண்டு மணி நேரம், ஐந்து பாடல்கள், மூன்று ரீல் காமெடி, இரண்டு மோதல்கள் என இன்னும் அந்த வட்டத்திற்குளிருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அடையாளமாகி விட்டது. இதுபோக கதாநாயகர்கள் பலரும் தமக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அவர்களின் திறமையை நிறுவ முயன்று கொண்டிருக்கின்றனர். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இவை எல்லாம் ஆரோக்கியமான சினிமாவுக்கும், நல்ல கதைக்களத்தைத் தேர்ந்தேடுக்கவும் தடைக்கற்களாகவே இருக்கின்றன.

தேர்ந்த இயக்குனர்கள் மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கிய கதைக்களத்தைக் கொண்டு வெற்றிப்பெறுகின்றனர். சமீப காலங்களில் வெற்றி பெற்ற பல படங்களில் இந்த சூட்சுமத்தைக் காணலாம். பருத்தி வீரன் மற்றும் சுப்ரமணியபுரம் நல்ல உதாரணங்கள். இரண்டுமே மோதல்களுக்கான களங்கள். இடம்பெற்ற பாத்திரங்கள் மிக கவனமாக நகைச்சுவை உணர்வோட அமைக்கப் பெற்றிருந்தன. ஐந்து பாடல்களில் சி செண்டருக்கான ஒரு குத்துப்பாட்டும், ஏ செண்டருக்கான நல்ல ஒரு மெலடியும் (இதெப்படி ஏ செண்டர் மெலடியும் சி செண்டர் குத்துப்பாட்டும் என்று நீங்கள் சொல்லலாம் என கேட்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் வேரொரு பதிவில் பதிலளிக்கிறேன்) இடம்பெற்றிருப்பதைக் காணலாம். வித்தியாசமான பாத்திரப் படைப்பும், திரைக்கதையும், தொழில்நுட்ப ரீதியிலான முன்னடத்தலும், வித்தியாச சினிமா என்ற முத்திரைக் குத்தப்பட்டு ஏ செண்டரிலும் பி செண்டரிலும் இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தித் தந்தன. இந்தச் சினிமாக்கள் வணிக அளவிலும் வெற்றி பெறுவதற்கு இவையே காரணங்கள். மற்றபடி மொழி, ஆட்டோகிராஃப் போன்ற படங்கள் மூன்று வகையான ரசிகர்களின் பொதுமையான பண்புகளைச் சீண்டிப் பார்த்துச் சென்றன. அதில் ஆட்டோகிராஃப் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு அதில் மூன்று வகையான காதல்களும் இருந்ததும் ஒரு காரணம். மொழி ஏ செண்டரிலும் பி செண்டரிலும் பெற்ற வரவேற்பை சி செண்டரில் பெறவில்லை. ஏனென்றால் அதன் கதைக்களம் அவர்கள் வாழ்வோடு ஒட்டியதாக இல்லை.

இந்த வட்டங்கள் கதைக்களத்தை எண்ணற்ற அளவில் பாதிக்கின்றன. உதாரணத்திற்கு சொல்லப் போனால், குத்துப்பாட்டும் மோதல்களும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் கதைக்களம் அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அனைத்து பாத்திரங்களிலிருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொணர்ந்தால் தனியாக காமெடி டிராக் இல்லாமல் சினிமாவை எடுத்து விடலாம். ஆனால் கதைக்களம் சண்டைகளில் சூரப்புலியான நாயகனின் நகைச்சுவை உணர்வை மேலோட்டமாக காட்டமுடியாது. அவனது செயல்களினூடே அவனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது நாயகனுடன் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி அதன் மூலம் காமெடி டிராக் அமைக்கப் பட வேண்டும். பருத்தி வீரனில் சரவணனும், சுப்ரமணியபுரத்தில் கஞ்சா கருப்பும் இந்த வேலையைச் செய்திருப்பார்கள். இப்படி நண்பர்கள் வட்டம் மூலம் நகைச்சுவை அமைக்கப்பெறுவது திரைக்கதையின் ஓட்டத்தையும் தடுக்காது.

வித்தியாச சினிமா என்றொரு விஷயம் இப்பொழுது தமிழ் சினிமாவை உலுக்கிக்கொண்டிருக்கிறது. வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும் வித்தியாசம் என்பது ஓவ்வொருத்தர் பார்வைக்கும் வித்தியாசப்படுகிறது. வணிக அளவில் வெற்றிப் பெறுகின்றன என்பதற்காக சினிமாவைக் கோரங்களாக முன்வைப்பது தவறான முன்னுதாரணமாகி விடும். சமுதாய அவலங்களைச் சாடுவது சினிமாவின் களாமாக இருப்பதில் தவறில்லை ஆனால், சாடுவதை ஒன்றையே மையமாக வைத்து களமமைப்பது வருத்தத்திற்குரிய விஷயம். இரண்டு முரடர்கள், சமுதாயம் நிறுவியுள்ள நெறிமுறைகளை மீறுபவர்களால் பாதிக்கப்படுவதும், அல்லது அக்கறைக் காட்ட ஆளில்லாமல் நெறிமுறைகளை மீறுவதும், பின்னர் அவன் நல்லவனாகவோ அல்லது அவனுக்குத் தேவையான விஷயத்தைத் தேடிச்செல்லும் பொழுது அவன் முன்செய்த தீவினைகளால் தோல்வியுறுவது என்பன போன்ற களத்தை எடுத்துக் கொண்டு அதில் மேற்சொன்ன ஏ, பி, சி சமாச்சாரங்களை விகித அளவில் சரியாகச் சேர்த்து ஒரு கலவை ஆக்கினால் அது வணிக அளவில் வெற்றி தருகின்றது. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சமுதாய அவலங்களைச் சாமர்த்தியாமாக சமாளிக்கும் சாதுர்யமான ஹீரோயிசக் கதைகள் வெற்றி பெறுகின்றன. சினிமாவைப் பற்றிய புரிதல் இல்லாமல் இந்தப் படங்கள் வெற்றியடைவதில்லை. சினிமாவைப் பற்றியும் வணிக லாபங்களைக் கணக்கில் கொண்டும் வந்த புரிதல்களினாலேயே இவை வெற்றி பெறுகின்றன. இயக்கம், அழகான திரைக்கதை என இந்த படங்களிலிருக்கும் நல்ல விஷயங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றால் தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பென்றால், மக்களுடன் ஒட்டி வாழும் பாத்திரங்கள் கொண்ட கதைக்களம் இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் படங்களின் கதைக்களம் சமூகச்சிக்கல்களினூடே அமைக்கப்படுகின்றது. எல்லோராலும் இந்த கதைகளுக்குள் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியாது.

ரேனிகுண்டா அப்படியொரு படம்.

கதாநாயகனாக நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் மகன் ஜானி அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி சனுஷா. இவர் பீமா படத்தில் நடித்திருப்பதாக கேள்வி?? இருந்தாலும் அறிமுகம் சனுஷா என்று தான் திரையிடப்பட்டிருக்கிறார். இயக்குனர் லிங்குசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய பன்னீர்செல்வம் படத்தை இயக்கியிருக்கிறார். வீணை எஸ்.பாலச்சந்தரின் கொள்ளுப் பேரன் கணேஷ் ராகவேந்திர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். ஜீவாவிடம் உதவி ஒளிப்பதிவாளாரக இருந்த ஷக்தி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படியாக ஏகப்பட்ட அறிமுகங்கள். “Few days and a love" என்று டேக்லைன் (tagline) போடுகிறார்கள்.

சமுதாய அவலங்களை பார்க்க நேரிடும் மக்கள் ஏதாவதொரு வகையில் அதன் பாதிப்புக்குள்ளாகிறார்கள். கொலையைப் பார்த்தவனுக்கும் கத்திக்குத்து துப்பாக்கிக் குண்டு, குடும்பத்தைக் கொல்வதாக மிரட்டல்). கொலையைப் பார்த்தவன் சாட்சி சொல்ல வர மாட்டான். வந்தால் சாவு நிச்சயம் போன்ற க்ளிஷேக்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலம். உண்மை என்பது இன்றுவரை எனக்கு ஆண்டவ வெளிச்சமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படியொரு கருவை மையமாக எடுத்துக்கொண்டு அதனால் பாதிக்கப்படும் ஒரு இளைஞனின் கதை தான் ரேனிகுண்டா. நண்பனின் கொலையை பார்க்க நேரிடும் கதாநாயகனின் அப்பா கொலையாளியின் மிரட்டல்களை எல்லாம் தாண்டி சாட்சியாகிறார் (சாட்சி சொல்வேன் என்கிறார்). கதாநாயகனின் அப்பாவிடம் கொலையாளியின் தூதுவராக ஒருவர் சமரசம் பேச வருகிறார். பதினஞ்சு வருஷம் பழகியிருக்கோம் அதனால சாட்சி சொல்லாமல் இருக்க முடியாது என கதாநாயகனின் அப்பா சொல்லிவிடுகிறார். இதனால் அவரும் அவர் மனைவியும்
கொல்லப்படுகிறார்கள். திடீரென்று நடக்கும் இந்த கோரத்தால் கதாநாயகன் வாழ்க்கை திசை மாறி போகிறது. இருவரையும் கொன்று விட்டு தூது சென்ற நபரிடம் ”கோர்ட்ல போய் ஃபைன் கட்டிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று கொலையாளி சொல்வது கோரத்தின் உச்சம். அத்தோடு ரேனிகுண்டா டைம்பாஸ் படம் என்ற திசையும் மாறி விடுகிறது.

இப்படி தாய் தந்தையைப் பலி கொண்ட கொலையாளியைப் பழி வாங்க கதாநாயகன் கிளம்புகிறார். பதிண்ம வயது சிறுவன் இதயமில்லா மிருகத்தின் கையில் ஒரு ரத்தக்கீறலிடுகிறான். அடியாட்களால் பிடிக்கப்படுகிறான். போலிசில் ஒப்படைக்கப்படுகிறான். தந்தையையும் தாயையும் கொல்லும் ஒருவன் மகனை மட்டும் விட்டுவைப்பது தமிழ்சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அப்படிப்பட்ட சினிமாக்களின் முடிவு அந்த தருணத்திலேயே தெரிந்து விடும். கொலையாளி வில்லனாகி விடுவான். மகன் ஹீரோவாகி விடுவான். இருவருக்குமிடையில் ஒரு யுத்தம் நடக்கும். அப்படிப்பட்ட படங்களை எல்லாம் ‘தர்மம் வெல்லும்’ என்ற தலைப்பில் அடக்கி விடலாம். ரேனிகுண்டாவின் களம் முற்றிலும் மாறுபட்டு இந்த தருணத்தில் தான் துவங்குகிறது.

சிறையில் கதாநாயகனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், யதார்த்தத்தின் நிழல்கள். அங்க அடையாளங்களுக்காக ஆடை அகற்றப்படுவதும், இதுவரை சிறையைப் பார்த்திராத நாயகன் அச்சக்கூச்சப்படுவதும், அதற்காக அவனுக்கு கிடைக்கும் அடி உதைகளும், திரையில் இவற்றைக் காட்டிய விதமும் அருமை. அதிலும் நாயகனின் கூச்சத்தைப் போக்க சிறைக்காவலர்கள் அளிக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் விஷுவல் சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. இப்படியாக நாயகன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகிறார். நான்கு கைதிகள் இவர் படும் வேதனைகளைக் கண்டு பொங்கியெழுகிறார்கள். கைதிகள் என்றால் “தேடிவந்து வெட்டுவோம்ல” என்று காவலர்களையே பயமுறுத்தும் அளவிற்கு கொலை கொள்ளைகளுக்குப் பழகியவர்கள். கொலைகளை ‘டீம் ஒர்க்’ என்று உருவகப்படுத்தும் அளவிற்கு அநீதிகள் இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் நால்வரும் சிறையிலிருந்து தப்பிக்க, கூடவே நாயகனையும் அழைத்துச் செல்கிறார்கள். சிறையிலிருந்து தப்பித்ததும், ஐவருமாக நாயகனின் தாய் தந்தையைக் கொன்றவனை வெட்டி சாய்க்கிறார்கள். ‘தர்மம் வெல்லும்’ தலைப்பு இங்கோடு முடிகிறது. படம் ஓடியிருப்பது முக்கால் மணிநேரம் தான்.

மும்பையில் இவர்களைப் போன்றவர்களுக்கு மார்க்கெட் அதிகம் என்று கேள்விப்பட்டு மும்பை செல்கிறார்கள். இடையில் ரேனிகுண்டாவில் இறங்க நேரிடுகிறது. அங்கு ஒரு சிறை நண்பனைச் சந்திக்க அவனுடன் பெரிய அளவில் கொலைகளில் ஈடுபடுகிறார்கள். ரேனிகுண்டாவில் நாயகனுக்கும் அங்கிருக்கும் வாய்பேச முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. நாயகிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அக்கா விபச்சாரி, அக்காவின் கணவன் குடிகார ஆட்டோ ஓட்டுநர், வாகன ஃபைனான்சியர் காம வெறியன் என நாயகி அவலங்களுக்கு மத்தியில் வாழ்கிறார். ரேனிகுண்டாவில் இவர்களுக்கு என்ன ஆகிறது, காதல் வென்றதா, ஐவரும் என்ன ஆனார்கள், கத்தி எடுத்தவன் என்ன ஆவான் என பலக் கேள்விகளுக்கு பின்பாதி விடை சொல்கிறது.

ஐவரில் ஒருவராக வரும் டப்பா அசத்தியிருக்கிறார். படத்தின் காமெடி லைன் இவரை வைத்தே அமைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய மேனரிசங்களும், ஒன் லைனர்களும் படத்திற்கு பெரிய பலம்.

விபச்சாரி அக்காவாக நடித்திருப்பவர் படத்தின் இன்னொரு அம்சம். இவரது கண்கள் கேரக்டரின் எண்ணங்களை அழகாக பிரதிபலிக்கின்றன. ஐவர் கூட்டணியின் தலைவனாக வரும் குண்டர் நல்ல தேர்வு. அசல் கைதி போலவே தெரிகிறார். சிறையிலிருந்து பிடித்து வந்து நடிக்க வைத்தார்களா என்ன? நாயகி சனுஷாவிற்கு பெரிய அளவில் வாய்ப்பில்லை. பேச முடியாதவராய் நடந்திருக்கிறார்.

நாயகன் ஜானி பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் ஷக்திக்கு முதல் படமே மகுடம். மழையைக் காட்டுவதிலும் சரி, நாயகன் நாயகிக்கிடையே நடக்கும் அந்த முட்டுச்சந்து ஓட்டங்களைக் காட்டுவதிலும் சரி, நாயகன் வீராவேசத்துடன் கொலை செய்வதைக் காட்டுவதிலும் சரி, இவருடைய கேமிராவும் பொழிகிறது, ஓடுகிறது, மிரட்டுகிறது. ரேனிகுண்டா இன்று ஒரு படமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதென்றால் இவருக்கு அதில் பெரும் பங்கு உண்டு.

படத்தில் நெருட வைக்கும் விஷயம் கோரம். படம் நெடுக யதார்த்தமிருந்தாலும் கோரங்களும் வியாபித்திருப்பதால் நெஞ்சைப் பீதியடைய வைக்கிறது. கொலை, கொள்ளை, விபச்சாரங்களும் அவற்றின் பின்புலமும், அவற்றிற்கான நேர்கோட்டுக் காரணங்களும் திரைக்களமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இவ்வளவு ரத்தச்சகதியாக இருக்கும் பண்டங்களை எல்லோருக்கும் படைப்பதென்பது ஆரோக்கியமான விஷயமாகாது.

இவற்றை தவிர்த்து பார்த்தால் ரேனிகுண்டா தமிழ் சினிமாவின் இன்னுமொரு வித்தியாச முயற்சி.

Monday, December 07, 2009

உறுப்பில்லா நான்

நேற்றொருவன் வந்தான்

என் ஆண் உறுப்பிலும்
பெண் உறுப்பிலும்
புணர்வது என்ற
குறிக்கோளுடன்

விளையாட்டாய் கேட்டேன்
”உன்னால் முடியுமா?” என்று
சிரித்தவாறே சென்று விட்டான்.

இன்று இன்னொருவன் வருகின்றானாம்.
அதே கேள்வியைக் கேட்க வேண்டும்.

என்றேனும் ஒருவன் விடை சொல்வான்.
அவனுக்குத் தெரிந்திருக்கும்
உறுப்பில்லா நான் யார் என்று!

Thursday, November 26, 2009

வேட்டைக்காரனும் மொழிமாற்றமும்

வேட்டைக்காரன் படத்தைப் பற்றி தினம் ஒரு குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் குறுஞ்செய்தி “வேட்டைக்காரன் படம் பார்க்க முன்பதிவு செய்பவர்கள் எல்லோரும் தற்கொலை முயற்சிக்காக கைது செய்யப் படுகிறார்களாம்”. வேட்டைக்காரன் மேல் எல்லோருக்கும் ஏன் இந்த மான் பயம் என்று புரியவில்லை.

வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறவிருக்கும் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. (”கரிகாலன் காலைப் போல” & “புலி உறுமுது”). ”கரிகாலனில்” பெண்குரலில் இருக்கும் இனிமை, கணிவு, காந்தம், பாந்தம் அட விடுங்க ஏதோ ஒன்னு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாடியவர் பெயர் சங்கீதா ராஜேஸ்வரன் என நினைக்கிறேன். பாடல் காபி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன், "தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டியை" அடிக்கடி நினைவு படுத்துகிறது. ”தாஜ்மகால் நிழலு”ன்னு அவர் பாடும் பொழுது ஒரு பாடலுடன் ஒரு குழுமையும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. நன்றாக படமாக்கப்பட்டிருந்தால் மூக்கு சுந்தர் சொல்வது போல், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே வேட்டைக்காரர் விஜய் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா” என்று பாடி பரபரப்பேற்றியிருக்கிறார். அதனால் இளைஞர்கள் பாடலைப் பார்த்து ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளித்தள்ளப்போகிறார்கள்.

மற்றொரு பாடல் “புலி உறுமுது”. பாடலைக் கேட்டால் ஒரு பெரிய ஹீரோவுக்கு ஏற்ற ”எல்லா” அந்தஸ்த்துடன் அமைந்த பாடல் என்று சொல்லத் தோன்றுகிறது. வரிகளில் இந்தளவிற்கு வேகம் இருக்கும் பாடல்கள் இதற்குமுன் தலைவருக்குத் தான் வாய்த்திருக்கிறது. (தலைவர் யார் தலை யார்? என்பதை அவர் அவர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்). ”குல நடுங்குது குல நடுங்குது”ன்னு திரு.அனந்தாவ் பாடுவதைக் கேட்கும் பொழுதே நடுங்குகிறது. இதில் ”வர்றான் வர்றான்னு” கோரஸ் வேறு பாடி வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ”யாரிவன் யாரிவன் யாரிவன்?” எனக் கேள்விகேட்டு ”ஐய்யனார் ஆயுதம் போல கூறிவன்” என உச்சஸ்தாயில் பதில் சொல்வதும் “இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா” என்பதும் மாஸ் மாஸ் மாஸ் தவிர வேறெதுவுமில்லை. மாஸ் ஹீரோ பாடல் என்றாலும் அணு அணுவாய் கத்தி போல் தீட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த “ஓடு ஓடு ஓடு ஓடு”வையும் ”டங்கறு டங்கறு டங்கறு”வையும் நீக்கியிருக்கலாம்.

சரி கிட்டத்தட்ட பதிவையே வேட்டையாடி விட்டேன் என நினைக்கிறேன். விஷயத்திற்கு வருவோம். எனக்கு மிகவும் படங்களில் நந்தாவும் அடங்கும். ஏற்கனவே நந்தாவைப் பற்றி எழுதியாகிவிட்டது. நந்தாவில் வரும் “ஓர் ஆயிரம் யானை கொன்றால்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். திரு. உன்னிகிருஷ்ணனின் குரலில் கவிஞர் நா.முத்துகுமாரின் அருமையான வரிகளில் அமைந்த நல்லதொரு பாடல். திரு. சாரு நிவேதிதா சொல்வது போல் “பெண்கள் மிக்ஸி வந்தால் ஆண் சட்னி” என்று நா.முத்துக்குமார் அவ்வப்போது எழுதினாலும் அவரது எழுத்திற்கு ”ஓர் ஆயிரம் யானை”யும் “கண் பேசும் வார்த்தை”களும் நல்ல உதாரணங்கள். ”வாழ்ந்தாய் தீயின் மடியில் சேர்ந்தாய் தீர்த்தக்கரையில்” என்றும் “ஒரு ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என்றும் அழகான வரிகளை உள்ளடக்கியது ”ஓர் யானை”.

எனக்கு பிடித்த வரிகளை (புத்தகங்களிலிருந்து படிப்பதையோ, கேட்கும் பாடலில் இருக்கும் வரிகளையோ) Personalised Message_ஆக எனது Skype Profile_லில் இடுவது எனது வழக்கம். அந்த வகையில் நேற்று ஓர் யானை கேட்டுவிட்டு ”ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என இட்டிருதேன். டெல்லியிலிருக்கும் தமிழ் தெரியாத என் நண்பர் ஒருவர் அப்படியென்றால் என்ன என்று வினவினார். ”மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என்ற வரியை மொழிமாற்றம் செய்யத் தெரியவில்லை. (தமிழ் கூறும் நல்லுலக வலைப்பதிவர்கள் உதவலாம்). அப்பொழுது புரிந்தது மொழிமாற்றம் என்பது எளிதான விஷயமல்ல என்று.


நண்பர்கள் இந்த மொழிமாற்ற முயற்சிக்கு உதவலாம் :)

சித்தன் -?
மனம் நொந்து நொறுங்காமல் - ?
Personalised Message - ?

ஒரு ஆசானும் எண்பது மதிப்பெண்களும்

என் மேலேயையும் என் கீழேயையும்
தொடுப்பில்லாமல்
இணைத்துக் கொண்டிருந்தது
அந்த விசை

கண் போலவும்
பார்வை போலவும்
என் விழுதலையும்
இயற்கையாக்கிக்
கொண்டிருந்தது.

ரெக்கைகள் முளைக்காமல்
உயரப் பறக்கின்றேன்
ஊர்ப் பருந்துடன்.
விசிறியெறிந்த பந்தாக
மீண்டும் அதே வழியில்.

கால்களின் நகர்வைப்
புறந்தள்ளி
தலையால் நடக்கிறேன்.
விளங்குகிறது
இருளின் வெளிச்சம்.

வேரில்லா மரமொன்று
நிற்பது போல
என் பேனா
எழுதத் தொடங்கியது.

நிலம் பரப்பி, நீரூற்றி
விழுதுக்குப் பின்னே
முளைக்கின்றன வேர்கள்.

ஒரு ஆசானும் எண்பது
மதிப்பெண்களும் தேவைப்பட்டன
விசையை விசையென
அறிவதற்கு.

Wednesday, November 25, 2009

மின்வெட்டு

மேஜை புத்தகத்தை புரட்டிப்பார்க்கிறது
சுவர் விசிறி

ஆப்பிள் தோட்டத்து வேலி முள்ளாய்
கணத்த ஒரு பக்கம்
கைவலி கண்ட கிழவியாக
ஒரு முனகலுடன் திருப்பப்படுகிறது

கனவற்றுப் போன தூக்கமாய்
பிணமாகிய மொழியின் எழுத்துக்களைத் தேடி
விடைதெரியா பரீட்சை மாணவனாய்
நெளிகின்றன நீள் ரெக்கைகள்

உதட்டு சாயம் மறைக்கும் முத்தங்களாய்
சில வண்ணப் படங்கள்
வெடித்து சிதறும் நீர்த்துளியாய்
நிறம் பிரிக்கப்படுகின்றன

புத்தகம் விசிறியாயும்
விசிறி புத்தகமாயும் உருமாருகின்றன
சாரல் மழையில்
மின்வெட்டு செயலாகும் பொழுது

Monday, November 23, 2009

பிம்பங்கள் உடைகின்றன

BL Whorf சொல்லுவார்

“பிரபஞ்சம் உதட்டுக்கு உதடு வேறுபடுகிறதென்று”
(Picture of the universe shifts from tongue to tongue).

சமீபத்தில் எனது நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தேறியது. கல்லூரியில் தன் வகுப்பில் படித்தவரை ஆறு வருடம் லவ்வோ லவ்வென்று லவ்வி பெற்றோரின் சம்மதத்துடன் கைப்பிடித்தார். இருவரும் இப்பொழுது நல்ல வேலையில் இருக்கிறார்கள். நண்பர் என்னை விட மூன்று வயது சிறியவர் (ம்ம்ம்... பல்லிருந்தாலும் பக்கோடா போடத்தெரியனும்மில்லே) மிகவும் சந்தோஷமாக இருந்தது. லவ்வில் ஜெயிச்ச நீங்க வாழ்க்கையிலும் ஜெயிக்கனும்னு ஒரு பெரிய மனுசனுக்கே உரிய தெனாவட்டில் வாழ்த்திவிட்டு வந்தேன் (மொய் எழுதுனீங்களா இல்லையா என்ற கேள்விகளுக்கு தனிப் பதிவிடக்கூடிய அளவிற்கு மேட்டர் இருக்கிறது அதை அப்புறம் பார்ப்போம்).

கடந்த வாரம் அந்த நண்பர் வீட்டிற்கு சென்றேன். உடன் படித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதால் நண்பரின் மனைவி நண்பரைப் பெயரிட்டுத் தான் அழைப்பார் என எதிர்பார்த்தேன். ஆணாதிக்கம் இல்லாமல் அன்பு மட்டுமே தளைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆச்சரியம்! வாங்க போங்க என நண்பர் காலரைத் தூக்கிவிடும் அளவிற்கு மரியாதை பொங்கியது. நண்பர் மேல் கடுப்பாகி இருவரிடம் கேட்டே விட்டேன். என் கேள்விக்கு நண்பரின் மனைவி ”என்ன தான் காதல் திருமணம் என்றாலும், வாங்க போங்கன்னு சொல்றதுல்ல ஒரு வித சந்தோஷம் இருக்கிறது. என் கணவருக்கும் அப்படி அழைப்பது தான் பிடிக்கும்” என்றார். என்னடா நன்கு படித்த பெண் இன்னும் பழைய காலத்திலே இருக்கிறாரே என நினைத்தேன். ஊருக்காக இல்லாமல் கணவரின் விருப்பத்திற்காக அழைக்கிறென் என்று அவர் சொன்னது அவர்களிடத்தில் இருந்த புரிதலை எனக்கு வெளிப்படுத்தியது. நமது நல்லாசியுடன் வாழ்க்கையிலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கூடுதல் சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

சென்ற வாரம் இன்னொரு நண்பர் தனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதாக கூறினார். என் சமவயதுக்காரர். இவரும் தன்னுடன் படித்த பெண்ணை சமீபத்தில் எங்கோ சந்தித்து பேச ஆரம்பித்து லவ்வி விட்டிருக்கிறார். லேட்டானலும் லேட்டஸ்ட்டாக்கியிருக்கிறார். இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் கூட கொஞ்சம் மேத்தமேடிக்கிஸும் கைகூடி வர அடுத்த மாதம் திருமணம் என நிச்சயமாகியிருக்கிறது. நேற்று திருமணத்திற்கான உடைகள் வாங்குவதற்கு துணையாக என்னை அழைத்திருந்தார். மாலை 6 மணி அளவில் தியாகராய நகரில் கிருஷ்ணா கலெக்‌ஷனில் கூடினோம். நண்பருடன் அவரது வருங்காலத் துணைவியாரும் அவரது சகோதரரும் வந்திருந்தனர். செர்வானி எடுக்கலாம் என முடிவு செய்தோம். நாம தான் எப்பவுமே அவசரக் குடுக்கையாச்சே! சந்தனக் கலரில் ஒரு செர்வானியைப் பார்த்து நண்பருக்கு பரிந்துரை செய்தேன். நண்பரின் வருங்காலத் துணைவியார் இது புடவைக் கலருக்கு மேட்சாகாது என்றார். விஷயம் அப்பொழுது தான் புரிந்தது. காலையிலிருந்து துணைவியாருக்கு புடவை (கள்??!!) எடுத்து விட்டு மாலையில் நண்பருக்கு துணி எடுக்க வந்திருக்கிறார்கள். நண்பர் அப்பாவித்தனமாக முழித்துக் கொண்டிருந்தது சிரிப்பாக இருந்தது. பெண்கள் சில விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பொழுது புரிந்தது. Pure Female Chauvinism என நிலைமையைச் சரி செய்ய ஒரு கமெண்ட் அடித்தேன்.

எப்படியோ புடவைக்கு மேட்ச்சாகிற சிவப்பு நிற செர்வானி எடுத்தாயிற்று. அருகிலிருக்கும் உணவகத்தில் சாப்பிட சென்றோம். நண்பர் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நண்பரின் துணைவியார் நண்பரைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். நண்பரைப் பெயரிட்டு அழைப்பதும் அவ்வப்போது நடந்தது. எனக்குள்ளிருந்த நாரதர் முழித்துக் கொண்டார். அதே பழைய சந்தேகம். அதே கேள்வியை வேறு தொனியில் கேட்டேன். இப்படி வருங்காலக் கணவரை பெயரிட்டு அழைக்கிறீர்களே உற்றாரும் உறவினரும் தவறாக நினைக்க மாட்டார்களா?. ”இனிமேல் இவர் தான் உறவு.. மத்த உறவுகளுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது. உங்க ஃபிரண்டுக்கு அப்படி கூப்பிட்டால் தான் பிடிக்கும்” என சட்டென்று பதில் வந்தது. வியப்பாயிருந்தது! ஒரே கேள்விக்கு ஒரே மாதிரி சூழ்நிலையில் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு பதில்கள். மனித உணர்வுகள் சிக்காலானவை! உணர்வுகளின் புரிதல் மட்டுமே முக்கியம்! என்னும் நிதர்சனம் இரு பதில்களையும் நியாயப்படுத்தியது.

சந்தோஷமாயிருந்தது. வந்த வேலையை (சாப்பாட்டு வேலையை) நண்பரின் காசில் முடித்துவிட்டு கிளம்பலானேன். இரு தம்பதியரிடம் தேவையில்லாத கேள்வியைக் கேட்டது போல் மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த கேள்வியைக் கேட்டதினால் கிடைத்த பதில்கள் இது நாள் வரை நான் உருவகப்படுத்தயிருந்த பல பிம்பங்களை உடைத்தெறிந்தன. சந்தோஷமாகவே வீடு வந்து சேர்ந்தேன்.

அநேகமாக இந்த பதிவினை நண்பர்கள் வேறு யாரும் படித்தால் இனிமேல் என்னைப் பக்கத்தில் கூட விட மாட்டார்கள் என நினைக்கிறேன். என்ன ஆனால் என்ன நமக்கு கலகம் செய்வதும் பிம்பங்களை உடைப்பதும் தான் முக்கியம். உண்மையிலேயே பிரபஞ்சம் உதட்டுக்கு உதடு வேறுபடுகின்றது. Whorf சொன்னது மொழி சம்பந்தப்பட்ட கூற்று ஆனால் பல இடங்களில் அது பொருந்தும்.

மேகம் மட்டும் !!

எனது இரண்டாம் காலை
அந்த வானத்தின் மேல் வைக்கலானேன்

ஒரு மரத்தில் மஞ்சள் நட்சத்திரம்
காய்த்துக் கொண்டிருந்தது

தலைக்கு மேலே பூமி
சிவப்பாகத் தெரிந்தது

வியாழனில் இருக்கும் மாமா
கடிதம் அனுப்பியிருந்தார்

எனக்கும் பூமிக்கும் இடையில்
மேகம் மட்டும் மிச்சமிருந்தது

Sunday, November 22, 2009

புரிகிறது

கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஒருவன் வாசிக்கிறான்.
ஒருவன் சிரிக்கிறான்.
ஒருவன் வசிக்கிறான்.
பலர் பார்க்கிறார்கள்.
புரியாதவர்களில் சிலர் கேட்கிறார்கள்.
புரிந்தவர்களில் சிலர் சொல்கிறார்கள்.
பலருக்கும் ஒன்றும் புரிவதில்லை.
எவனுக்கு புரியும் எவனுக்கு புரியாது
என்பது எழுதியவனுக்கு மட்டுமே
புரிகிறது.

நான் உறங்கப் போகிறேன்

விட்டம் வெறித்த கண்களிலிருந்து
பதுங்கி விழுகிறது தண்ணீர்த் துளி

தண்ணீர்த் துளிகளில் அமைதியாக
நகர்கிறது ராட்சத பல்லி

பல்லி நகரும் சுவரும் ஓசையின்றி
நின்று கொண்டிருக்கிறது

நிற்கும் சுவரில்
கவிதை பாடுகின்றன மின்விசிறிகள்

முடிகிறது இந்த விஸ்வரூப தரிசனம்
நான் உறங்கப் போகிறேன்

Monday, June 01, 2009

சில பெண் குரல்கள்

சில பெண் குரல்கள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, ஷேக் ஹசினா, சந்தா கோச்சர், மீரா குமார் போன்றோரின் கருத்துக் குரலைப் பற்றி எழுதுவேன் என்று நினைத்து வந்தவர்களுக்கு முதற்கண் என் மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா, சினிமா, சினிமா தான் இந்த பதிவு. அதுவும் முழுக்க முழுக்க பெண் குரல்களில் வெளி வந்துள்ள பாடல்களைப் பற்றி. அதற்காக "உயர்ந்த மனிதனின்" நாளை "இந்த வேளை பார்த்து", "அரியது அரியது" போன்ற பாடல்களைப் பற்றியெல்லாம் எழுதுவேன் என்றும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் எனக்கு நுண்ணறிவு பத்தாது. அந்த பாடல்களெல்லாம் "காலத்தை வென்ற சிறப்புடையவை" என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டால் இசையில் சிறந்த நுண்ணறிவாளர்கள் வாயில் விழுவதிலிருந்து தப்பித்துக் கொள்வேன்.

இதுவரை 38 முறை தேசிய அளவில் "சிறந்த பிண்ணனி பாடகி" விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழர் பெருமை பட வேண்டிய விஷயம், தமிழ் பாடலுக்காக (ஊ ல லா தமிழ் பாடலா எனக் கேட்பவர்கள் தமிழ் படங்களில் வந்த பாடலுக்காக எனக் கொள்ளலாம்) இது வரை 12 முறை இந்து விருது வழங்கப்பட்டுள்ளது. பி. சுசிலா, கே. பி. சுந்தராம்பாள், வாணி ஜெயராம், எஸ். ஜானகி, சித்ரா, சுவர்ணலதா, பவதாரிணி, சாதனா சர்கம் என மொத்தம் எட்டு பேருக்கு இந்த விருது தமிழ் பாடலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் சாதனா சர்கம் அவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் தமிழில் பேசவும் தெரிந்தவர்கள். (சாதனா சர்கம் சொல்லும் "வணக்கம் தமில் நாடு" எல்லாம் இதில் கணக்கில் கிடையாது)

இப்படியாக தமிழ் பாடகிகளுக்கு அல்லது தமிழில் பாடும் பாடகிகளுக்கு இந்தியளவில் சிறந்த அங்கீகாரம் இருந்து வருகிறது. சமீபத்தில் என்னுடைய i-podல் 1998க்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த தமிழில் முழுக்க முழுக்க பெண் குரலில் வந்த சில பாடல்களைத் தொகுத்தேன். அவை பின்வருவன

1. எனக்கு பிடித்த பாடல் - ஜுலி கணபதி - ஷ்ரேயா கோஷால்
2. காதல் வானொலி - ஆல்பம் - சுஜாதா
3. தையத்தா தையத்தா - திருட்டுப் பயலே - சாதனா சர்கம்
4. யாரிடம் சொல்வேன் - ரைட்டா தப்பா - ஹரிணி
5. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால் - சின்மயி
6. மழை நின்ற பின்பும் ஈரம் - ராமன் தேடிய சீதை - கல்யாணி
7. மருதாணி - சக்கரக்கட்டி - மதுஸ்ரீ
8. ஆலங்குயில் - பார்த்திபன் கனவு - ஹரிணி
9. ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப் - சித்ரா

இந்த தொகுப்பில் சமீபத்தில் மேலும் இரண்டு பாடல்களைச் சேர்த்துள்ளேன்.

1. கண்ணில் தாகம் - அச்சமுண்டு அச்சமுண்டு - சௌமியா
2. கூட வருவியா - வால்மீகி - பேலா ஷிண்டே

இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் நான் எப்பொழுதும் கேட்கும் திரு. இளையராஜா இசையமைத்த பாடல்கள் இரண்டு. ஆஸ்கார் நாயகன் திரு. ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. வித்யாசாகர் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. பரத்வாஜ் அவர்கள் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. கார்த்திக் ராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள் மூன்று. கார்த்திக் ராஜா மிகக் குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார் என்றாலும் சொல்லும் படியான சில நல்ல பாடல்களை வழங்கியிருக்கிறார். எனக்குத் தெரிந்து நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று "யாரிடம் சொல்வேன்". அநேகமாக நிறைய பேர் இந்த பாடலைக் கேட்டிருக்க மாட்டார்கள். அதே போல் சமீபத்தில் கர்நாடக இசைப் பாடகி திருமதி. சௌமியா பாடியுள்ள கண்ணில் தாகம் என்னும் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த வருடம் மீண்டும் அந்த "சிறந்த பிண்ணனி பாடகி" விருது ஒரு தமிழ் பாடலுக்கு கிடைக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் இந்த தொகுப்பில் இருக்கும் பாடகிகளில் பலர் (எஸ். ஜானகி, பி. சுசிலா உட்பட) ஆல் இந்தியா ரேடியோ, சா ரி க ம பா போன்ற வெகுஜன ஊடக நிகழ்ச்சிகள் மூலமாக அறிமுகமானவர்களே. இப்பொழுது தமிழ் தொலைக்காட்சிகளில் "சூப்பர் சிங்கர்", "டாப் சிங்கர்", "ராகமாலிகா" என பல போட்டி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படியாக நிறைய பெண் குரல்கள் நமக்கு கிடைக்கின்றனர். செவிகளுக்கு சுவை படைப்பதில் இவர்களை மிஞ்சியவர்கள் வேரெவருமில்லை.

ஒரு வேண்டுகோள்:
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வைப்பவர்கள் "சூப்பர் சிங்கர்", "டாப் சிங்கர்" என பெயர் வைப்பதற்கு பதிலாக "தமிழ் பாட்டும் மெட்டும்", "பாட்டுப் பாடவா" எனப் பெயர் வைக்க துவங்கலாம். ("ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு ஒரு வணக்கம்!!)

Tuesday, May 26, 2009

தொலையாத முகம்

ஒரு காகிதத்தின் வழியாகத்தான்
வெளிப்படுகிறது அதுவும்
அழுந்திய கணம் முதல்
முயன்று கொண்டிருக்கிறது
முடிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கும் முகத்தைக் காட்ட
கண்ணாடி பார்க்காத கைப்பக்குவம்
முதல் நகர்விலேயே ரத்தக்கீறலாக்க
காரியம் முடிந்து பார்த்தால்
சில கோடுகளின் நடுவில்
தெரிகிறது தொலையாத முகம்

(வா. மணியின் ஒரு கவிதையைத் தழுவி எழுதியது)

முதல் கவிதை

முதன்முதலாய் எழுத நினைத்து
பேனாவில் விரல் கோர்த்து
நினைத்தவைகளில் விலக்கியவை பல
என் பயன்பாட்டுக்காய்
நொடி பொழுதுகளை
வீணடிக்கும் காலமகன்,
முரண்களில் முரண்படும்
அந்த ஒற்றுமை,
விடியல் வரை
உறங்க மறுக்கும் இரவு,
புலனுறுத்தல், பிம்பங்கள்
என நீண்டது விலக்கப் பட்டியல்.
முதலெழுத்துக்காய் மூச்சிறைத்து
முயற்சி தளர்த்தி
முடித்துவிட நினைத்தபோது
கைவந்தது
நண்பன் கொடுத்த வெள்ளைத்தாள்.

பயணம்

இந்த ஆசையின்
மக்கள்தொகையில் - நான்
ஆயிரம் கோடிகளில் இருக்கலாம்.

நான் சம்பாதிக்கப் போகும்
ஒற்றை ரூபாய் எனக்கு
மட்டுமே கூட பயன்படலாம்.

கணிதம் ஒழுங்காய்
படித்திருந்தால் இன்றோடு
39 என்று என்னால் சரியாகச்
சொல்லியிருக்க முடியும்.

எனக்கு காலக்கொலைகள்
பிடிப்பதில்லை...
அவை விசாரிக்கப்படுமென்பதனால்

நான் பயன்படுத்திய சில
நொடிகள் - என்
மயிர்களில் சிலவற்றுக்கு
வெள்ளையடித்துப் போயிருக்கின்றன
சிலவற்றை எடுத்தும் சென்றிருக்கின்றன.

என்றேனும் ஒரு நாள்
தெரிந்து போயிருக்க வேண்டும்
எனக்காக நான் சேமித்து வைத்திருந்த
நொடிக் கணங்கள் எல்லோருக்கும்.

அகமகிழ்வு

ஒளிக்கடன் வாங்கி
வெளியில் விற்று
இருள் நீக்கும் நிலா,
அன்னல் புணர்கையில்
மின்னல் களைந்து
உயிர்த்துளி உதிர்த்து
பயிர்பெருக்கும் கார்மேகம்,
அகமகிழ்வின் ஆதாரம்
கண்டவை எவையென
அலசிய போது
சிரித்துக் கொண்டிருந்தது
நைட்ரஸ் ஆக்சைடு
அடைத்து வைத்த சீசா !