Wednesday, December 09, 2009

தமிழ் சினிமாவும் ரேனிகுண்டாவும்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் வன்முறைப் படங்களும் அவை பெறும் வணிக வெற்றிகளும் சில கேள்விகளை நம் முன்னே வைக்கின்றன. பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் இப்பொழுது ரேனிகுண்டா. ஏனிந்த கோரம்? தமிழ் சினிமாவின் வித்தியாச முயற்சிகள் ஒரு கோரப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் வியக்கத்தக்க விஷயம் இவை அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது.

ஒரு நாள் முழுதும் உள்ளங்கை ரேகைகளேயே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். நம்மைச் சுற்றி நகரும் நிழல்களில் பல ஓவியங்களைப் பார்க்கலாம். இப்படிப் பொதுமையாக அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் பல விஷயங்கள் திரைக்களமாக்கப்பட வேண்டியவை. ஆண்பாவம் எனக்குப் பிடித்த பத்து தமிழ் படங்களில் முதல் இடம் பெறும். காரணம் அதில் இடம்பெறும் பாத்திரங்களை நான் நிஜ வாழ்க்கையில் அடிக்கடி பார்க்க நேர்வது தான். ஆண்பாவத்தின் களம் அப்படி. தினமும் நான் பார்க்கும் நபர்களில் ஒருவரேனும் சின்னப் பாண்டியையோ, பெரிய பாண்டியையோ, ராமசாமி அண்ணனையோ நினைவு படுத்திப் போவார்கள். ஆண்பாவ பாத்திரங்களை நிஜ வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்த நாட்கள் பல உண்டு.

ஆண்பாவம் போல் அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வரும் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. இதற்கு காரணம் வர்த்தக ரீதியாக சினிமாக்கள் வெற்றிபெற பல விஷயங்களை உள்ளடக்கியிருக்க வேண்டியிருக்கிறது. ஏ, பி, சி என மூன்று செண்ட்டர்கள் பிரித்தாகி விட்டன. ஒவ்வொரு செண்டரும் மற்றொன்றை விட ரசிகன், ரசனை, களம் தொடங்கி சினிமா பார்க்கும் தியேட்டர் வரை வேறுபடுகின்றன. இப்படியிருக்கையில் தமிழ் சினிமாக்கள் மூன்று வகையான ரசிகர்களையும் திருப்தி படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் தமிழ் சினிமா எவ்வளவு நல்ல களமாக இருந்தாலும் இரண்டு மணி நேரம், ஐந்து பாடல்கள், மூன்று ரீல் காமெடி, இரண்டு மோதல்கள் என இன்னும் அந்த வட்டத்திற்குளிருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அடையாளமாகி விட்டது. இதுபோக கதாநாயகர்கள் பலரும் தமக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அவர்களின் திறமையை நிறுவ முயன்று கொண்டிருக்கின்றனர். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இவை எல்லாம் ஆரோக்கியமான சினிமாவுக்கும், நல்ல கதைக்களத்தைத் தேர்ந்தேடுக்கவும் தடைக்கற்களாகவே இருக்கின்றன.

தேர்ந்த இயக்குனர்கள் மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கிய கதைக்களத்தைக் கொண்டு வெற்றிப்பெறுகின்றனர். சமீப காலங்களில் வெற்றி பெற்ற பல படங்களில் இந்த சூட்சுமத்தைக் காணலாம். பருத்தி வீரன் மற்றும் சுப்ரமணியபுரம் நல்ல உதாரணங்கள். இரண்டுமே மோதல்களுக்கான களங்கள். இடம்பெற்ற பாத்திரங்கள் மிக கவனமாக நகைச்சுவை உணர்வோட அமைக்கப் பெற்றிருந்தன. ஐந்து பாடல்களில் சி செண்டருக்கான ஒரு குத்துப்பாட்டும், ஏ செண்டருக்கான நல்ல ஒரு மெலடியும் (இதெப்படி ஏ செண்டர் மெலடியும் சி செண்டர் குத்துப்பாட்டும் என்று நீங்கள் சொல்லலாம் என கேட்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் வேரொரு பதிவில் பதிலளிக்கிறேன்) இடம்பெற்றிருப்பதைக் காணலாம். வித்தியாசமான பாத்திரப் படைப்பும், திரைக்கதையும், தொழில்நுட்ப ரீதியிலான முன்னடத்தலும், வித்தியாச சினிமா என்ற முத்திரைக் குத்தப்பட்டு ஏ செண்டரிலும் பி செண்டரிலும் இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தித் தந்தன. இந்தச் சினிமாக்கள் வணிக அளவிலும் வெற்றி பெறுவதற்கு இவையே காரணங்கள். மற்றபடி மொழி, ஆட்டோகிராஃப் போன்ற படங்கள் மூன்று வகையான ரசிகர்களின் பொதுமையான பண்புகளைச் சீண்டிப் பார்த்துச் சென்றன. அதில் ஆட்டோகிராஃப் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு அதில் மூன்று வகையான காதல்களும் இருந்ததும் ஒரு காரணம். மொழி ஏ செண்டரிலும் பி செண்டரிலும் பெற்ற வரவேற்பை சி செண்டரில் பெறவில்லை. ஏனென்றால் அதன் கதைக்களம் அவர்கள் வாழ்வோடு ஒட்டியதாக இல்லை.

இந்த வட்டங்கள் கதைக்களத்தை எண்ணற்ற அளவில் பாதிக்கின்றன. உதாரணத்திற்கு சொல்லப் போனால், குத்துப்பாட்டும் மோதல்களும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் கதைக்களம் அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அனைத்து பாத்திரங்களிலிருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொணர்ந்தால் தனியாக காமெடி டிராக் இல்லாமல் சினிமாவை எடுத்து விடலாம். ஆனால் கதைக்களம் சண்டைகளில் சூரப்புலியான நாயகனின் நகைச்சுவை உணர்வை மேலோட்டமாக காட்டமுடியாது. அவனது செயல்களினூடே அவனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது நாயகனுடன் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி அதன் மூலம் காமெடி டிராக் அமைக்கப் பட வேண்டும். பருத்தி வீரனில் சரவணனும், சுப்ரமணியபுரத்தில் கஞ்சா கருப்பும் இந்த வேலையைச் செய்திருப்பார்கள். இப்படி நண்பர்கள் வட்டம் மூலம் நகைச்சுவை அமைக்கப்பெறுவது திரைக்கதையின் ஓட்டத்தையும் தடுக்காது.

வித்தியாச சினிமா என்றொரு விஷயம் இப்பொழுது தமிழ் சினிமாவை உலுக்கிக்கொண்டிருக்கிறது. வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும் வித்தியாசம் என்பது ஓவ்வொருத்தர் பார்வைக்கும் வித்தியாசப்படுகிறது. வணிக அளவில் வெற்றிப் பெறுகின்றன என்பதற்காக சினிமாவைக் கோரங்களாக முன்வைப்பது தவறான முன்னுதாரணமாகி விடும். சமுதாய அவலங்களைச் சாடுவது சினிமாவின் களாமாக இருப்பதில் தவறில்லை ஆனால், சாடுவதை ஒன்றையே மையமாக வைத்து களமமைப்பது வருத்தத்திற்குரிய விஷயம். இரண்டு முரடர்கள், சமுதாயம் நிறுவியுள்ள நெறிமுறைகளை மீறுபவர்களால் பாதிக்கப்படுவதும், அல்லது அக்கறைக் காட்ட ஆளில்லாமல் நெறிமுறைகளை மீறுவதும், பின்னர் அவன் நல்லவனாகவோ அல்லது அவனுக்குத் தேவையான விஷயத்தைத் தேடிச்செல்லும் பொழுது அவன் முன்செய்த தீவினைகளால் தோல்வியுறுவது என்பன போன்ற களத்தை எடுத்துக் கொண்டு அதில் மேற்சொன்ன ஏ, பி, சி சமாச்சாரங்களை விகித அளவில் சரியாகச் சேர்த்து ஒரு கலவை ஆக்கினால் அது வணிக அளவில் வெற்றி தருகின்றது. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சமுதாய அவலங்களைச் சாமர்த்தியாமாக சமாளிக்கும் சாதுர்யமான ஹீரோயிசக் கதைகள் வெற்றி பெறுகின்றன. சினிமாவைப் பற்றிய புரிதல் இல்லாமல் இந்தப் படங்கள் வெற்றியடைவதில்லை. சினிமாவைப் பற்றியும் வணிக லாபங்களைக் கணக்கில் கொண்டும் வந்த புரிதல்களினாலேயே இவை வெற்றி பெறுகின்றன. இயக்கம், அழகான திரைக்கதை என இந்த படங்களிலிருக்கும் நல்ல விஷயங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றால் தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பென்றால், மக்களுடன் ஒட்டி வாழும் பாத்திரங்கள் கொண்ட கதைக்களம் இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் படங்களின் கதைக்களம் சமூகச்சிக்கல்களினூடே அமைக்கப்படுகின்றது. எல்லோராலும் இந்த கதைகளுக்குள் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியாது.

ரேனிகுண்டா அப்படியொரு படம்.

கதாநாயகனாக நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் மகன் ஜானி அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி சனுஷா. இவர் பீமா படத்தில் நடித்திருப்பதாக கேள்வி?? இருந்தாலும் அறிமுகம் சனுஷா என்று தான் திரையிடப்பட்டிருக்கிறார். இயக்குனர் லிங்குசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய பன்னீர்செல்வம் படத்தை இயக்கியிருக்கிறார். வீணை எஸ்.பாலச்சந்தரின் கொள்ளுப் பேரன் கணேஷ் ராகவேந்திர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். ஜீவாவிடம் உதவி ஒளிப்பதிவாளாரக இருந்த ஷக்தி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படியாக ஏகப்பட்ட அறிமுகங்கள். “Few days and a love" என்று டேக்லைன் (tagline) போடுகிறார்கள்.

சமுதாய அவலங்களை பார்க்க நேரிடும் மக்கள் ஏதாவதொரு வகையில் அதன் பாதிப்புக்குள்ளாகிறார்கள். கொலையைப் பார்த்தவனுக்கும் கத்திக்குத்து துப்பாக்கிக் குண்டு, குடும்பத்தைக் கொல்வதாக மிரட்டல்). கொலையைப் பார்த்தவன் சாட்சி சொல்ல வர மாட்டான். வந்தால் சாவு நிச்சயம் போன்ற க்ளிஷேக்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலம். உண்மை என்பது இன்றுவரை எனக்கு ஆண்டவ வெளிச்சமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படியொரு கருவை மையமாக எடுத்துக்கொண்டு அதனால் பாதிக்கப்படும் ஒரு இளைஞனின் கதை தான் ரேனிகுண்டா. நண்பனின் கொலையை பார்க்க நேரிடும் கதாநாயகனின் அப்பா கொலையாளியின் மிரட்டல்களை எல்லாம் தாண்டி சாட்சியாகிறார் (சாட்சி சொல்வேன் என்கிறார்). கதாநாயகனின் அப்பாவிடம் கொலையாளியின் தூதுவராக ஒருவர் சமரசம் பேச வருகிறார். பதினஞ்சு வருஷம் பழகியிருக்கோம் அதனால சாட்சி சொல்லாமல் இருக்க முடியாது என கதாநாயகனின் அப்பா சொல்லிவிடுகிறார். இதனால் அவரும் அவர் மனைவியும்
கொல்லப்படுகிறார்கள். திடீரென்று நடக்கும் இந்த கோரத்தால் கதாநாயகன் வாழ்க்கை திசை மாறி போகிறது. இருவரையும் கொன்று விட்டு தூது சென்ற நபரிடம் ”கோர்ட்ல போய் ஃபைன் கட்டிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று கொலையாளி சொல்வது கோரத்தின் உச்சம். அத்தோடு ரேனிகுண்டா டைம்பாஸ் படம் என்ற திசையும் மாறி விடுகிறது.

இப்படி தாய் தந்தையைப் பலி கொண்ட கொலையாளியைப் பழி வாங்க கதாநாயகன் கிளம்புகிறார். பதிண்ம வயது சிறுவன் இதயமில்லா மிருகத்தின் கையில் ஒரு ரத்தக்கீறலிடுகிறான். அடியாட்களால் பிடிக்கப்படுகிறான். போலிசில் ஒப்படைக்கப்படுகிறான். தந்தையையும் தாயையும் கொல்லும் ஒருவன் மகனை மட்டும் விட்டுவைப்பது தமிழ்சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அப்படிப்பட்ட சினிமாக்களின் முடிவு அந்த தருணத்திலேயே தெரிந்து விடும். கொலையாளி வில்லனாகி விடுவான். மகன் ஹீரோவாகி விடுவான். இருவருக்குமிடையில் ஒரு யுத்தம் நடக்கும். அப்படிப்பட்ட படங்களை எல்லாம் ‘தர்மம் வெல்லும்’ என்ற தலைப்பில் அடக்கி விடலாம். ரேனிகுண்டாவின் களம் முற்றிலும் மாறுபட்டு இந்த தருணத்தில் தான் துவங்குகிறது.

சிறையில் கதாநாயகனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், யதார்த்தத்தின் நிழல்கள். அங்க அடையாளங்களுக்காக ஆடை அகற்றப்படுவதும், இதுவரை சிறையைப் பார்த்திராத நாயகன் அச்சக்கூச்சப்படுவதும், அதற்காக அவனுக்கு கிடைக்கும் அடி உதைகளும், திரையில் இவற்றைக் காட்டிய விதமும் அருமை. அதிலும் நாயகனின் கூச்சத்தைப் போக்க சிறைக்காவலர்கள் அளிக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் விஷுவல் சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. இப்படியாக நாயகன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகிறார். நான்கு கைதிகள் இவர் படும் வேதனைகளைக் கண்டு பொங்கியெழுகிறார்கள். கைதிகள் என்றால் “தேடிவந்து வெட்டுவோம்ல” என்று காவலர்களையே பயமுறுத்தும் அளவிற்கு கொலை கொள்ளைகளுக்குப் பழகியவர்கள். கொலைகளை ‘டீம் ஒர்க்’ என்று உருவகப்படுத்தும் அளவிற்கு அநீதிகள் இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் நால்வரும் சிறையிலிருந்து தப்பிக்க, கூடவே நாயகனையும் அழைத்துச் செல்கிறார்கள். சிறையிலிருந்து தப்பித்ததும், ஐவருமாக நாயகனின் தாய் தந்தையைக் கொன்றவனை வெட்டி சாய்க்கிறார்கள். ‘தர்மம் வெல்லும்’ தலைப்பு இங்கோடு முடிகிறது. படம் ஓடியிருப்பது முக்கால் மணிநேரம் தான்.

மும்பையில் இவர்களைப் போன்றவர்களுக்கு மார்க்கெட் அதிகம் என்று கேள்விப்பட்டு மும்பை செல்கிறார்கள். இடையில் ரேனிகுண்டாவில் இறங்க நேரிடுகிறது. அங்கு ஒரு சிறை நண்பனைச் சந்திக்க அவனுடன் பெரிய அளவில் கொலைகளில் ஈடுபடுகிறார்கள். ரேனிகுண்டாவில் நாயகனுக்கும் அங்கிருக்கும் வாய்பேச முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. நாயகிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அக்கா விபச்சாரி, அக்காவின் கணவன் குடிகார ஆட்டோ ஓட்டுநர், வாகன ஃபைனான்சியர் காம வெறியன் என நாயகி அவலங்களுக்கு மத்தியில் வாழ்கிறார். ரேனிகுண்டாவில் இவர்களுக்கு என்ன ஆகிறது, காதல் வென்றதா, ஐவரும் என்ன ஆனார்கள், கத்தி எடுத்தவன் என்ன ஆவான் என பலக் கேள்விகளுக்கு பின்பாதி விடை சொல்கிறது.

ஐவரில் ஒருவராக வரும் டப்பா அசத்தியிருக்கிறார். படத்தின் காமெடி லைன் இவரை வைத்தே அமைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய மேனரிசங்களும், ஒன் லைனர்களும் படத்திற்கு பெரிய பலம்.

விபச்சாரி அக்காவாக நடித்திருப்பவர் படத்தின் இன்னொரு அம்சம். இவரது கண்கள் கேரக்டரின் எண்ணங்களை அழகாக பிரதிபலிக்கின்றன. ஐவர் கூட்டணியின் தலைவனாக வரும் குண்டர் நல்ல தேர்வு. அசல் கைதி போலவே தெரிகிறார். சிறையிலிருந்து பிடித்து வந்து நடிக்க வைத்தார்களா என்ன? நாயகி சனுஷாவிற்கு பெரிய அளவில் வாய்ப்பில்லை. பேச முடியாதவராய் நடந்திருக்கிறார்.

நாயகன் ஜானி பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் ஷக்திக்கு முதல் படமே மகுடம். மழையைக் காட்டுவதிலும் சரி, நாயகன் நாயகிக்கிடையே நடக்கும் அந்த முட்டுச்சந்து ஓட்டங்களைக் காட்டுவதிலும் சரி, நாயகன் வீராவேசத்துடன் கொலை செய்வதைக் காட்டுவதிலும் சரி, இவருடைய கேமிராவும் பொழிகிறது, ஓடுகிறது, மிரட்டுகிறது. ரேனிகுண்டா இன்று ஒரு படமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதென்றால் இவருக்கு அதில் பெரும் பங்கு உண்டு.

படத்தில் நெருட வைக்கும் விஷயம் கோரம். படம் நெடுக யதார்த்தமிருந்தாலும் கோரங்களும் வியாபித்திருப்பதால் நெஞ்சைப் பீதியடைய வைக்கிறது. கொலை, கொள்ளை, விபச்சாரங்களும் அவற்றின் பின்புலமும், அவற்றிற்கான நேர்கோட்டுக் காரணங்களும் திரைக்களமாக்கப்பட வேண்டியவையே. ஆனால் இவ்வளவு ரத்தச்சகதியாக இருக்கும் பண்டங்களை எல்லோருக்கும் படைப்பதென்பது ஆரோக்கியமான விஷயமாகாது.

இவற்றை தவிர்த்து பார்த்தால் ரேனிகுண்டா தமிழ் சினிமாவின் இன்னுமொரு வித்தியாச முயற்சி.

No comments: