Monday, October 03, 2005

அன்பே சிவம் vs நந்தா - யார் சிறந்த கடவுள்?

தமிழ்மணத்திற்கு வருவதற்கு முன்பு நான் எழுதிய பதிவு. எனக்கு மிகவும் பிடித்த பதிவாகையில் இன்று மறுபதிப்பு செய்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவும் வேறுபட்ட பல நல்ல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கடவுளைப் பற்றிய அதன் முயற்சிகளையும் ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது. கடவுள் என்று சொன்னதுமே நமக்கு முதலில் ஞாபகம் வரும் இயக்குனர் வேலுபிரபாகரன் தான். தமது ஒவ்வொரு முயற்சிகளிலும் கடவுளைச் சீண்டவேண்டும் என்பதே இவரது குறிக்கோள். ஆனால் இவரது படைப்புகள் அனைத்துமே பெரிதாக பேசும்படியாக இருந்ததில்லை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதில் பக்தி படங்களைத் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம் முதலாக இன்றைய பாளையத்து அம்மன் வரை) தவிர்த்து கடவுள் பற்றிய கோட்பாடுகள் அடங்கியவை மிகச்சொற்பமே. இன்றைய தேதியில் மக்களின் இறையுணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய படங்கள் மிக அரிதாகத்தான் தென்படுகின்றன. குறும்படங்கள் சில அவ்வப்போது வெளிவந்தாலும் வெகுஜன திரைப்படங்களில் அந்த முயற்சி குறைவே. மிகுந்த கவனத்துடனும் சாமர்த்தியமாகவும் கையாளப்பட வேண்டிய கருவாதலால் இயக்குனர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள் போலும்.

இருந்தாலும் தமிழர்கள் தைரியசாலிகள் என்பது திரைத்துறைக்கு மட்டும் பொருந்தாதா என்ன? கடவுளைப் பற்றி அற்புதமான இரண்டு திரைப்படங்களை மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். இரண்டுமே சமீப காலங்களில் வெளிவந்தவை. முதலாவது அன்பே சிவம் இரண்டாவது நந்தா. நந்தாவில் வெளிப்படையாக ஒரிரு காட்சிகளில் தான் கடவுளின் தன்மைகளை இயக்குனர் சொல்லியிருப்பார். இருந்தாலும் நந்தா என்றொரு முழுத்தொகுப்பையும் எடுத்துக்கொண்டால் அது முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த படைப்பாகத் தான் தெரிகிறது. அன்பே சிவத்தைப் பற்றி சொல்லவேண்டியதில்லை (மன்னிக்கவும் எழுதவேண்டியதில்லை), வெளிப்படையாகவே மிகுந்த சொல்வளத்துடன் வெளிவந்த படைப்பு.

கில்லி, சாமி போன்ற திரை மசாலாக்களை விடவும், நினைவேடு, (ஆட்டோ கிராஃப்) காதல் போன்ற உணர்ச்சிக் குவியல்களை விடவும் என்னை அதிகமாக பாதித்தது அன்பே சிவமும் நந்தாவும் தான். "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அது தான் கடவுள்" என்ற நல்லாவின் (கமலின்) யதார்த்தமாகட்டும், "அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்செழுகிற ஒவ்வொருத்தனும் சாமி தாண்டா, இதுக்குன்னு (மேலேயிருந்து) வருமா?" என்ற ஐயாவின் (ராஜ்கிரணின்) கொதிப்பாகட்டும், கண்டிப்பாக தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மொழிகள்.

நல்லாவும் நந்தாவும், கடவுள் என்பவன் மனிதனிடமும் இருக்கிறான் என்பதனை வலியுறுத்தினாலும் தத்தமது செயல்பாடுகளால் முற்றிலும் முரணானவர்கள். நல்லா, அன்பிலும் அரவணைப்பிலும் கடவுளைக் காட்டியவன். நந்தா, அக்கிரமங்களை அழிப்பதில் கடவுளைக் காட்டியவன். எனக்குள் ஒரு வினா, இவர்களில் யாரைப் (எந்தக் கடவுளைப்) பின்பற்றலாம்? நல்லாக்கள் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள், உதாரணத்திற்கு காந்தியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறை இந்தக்காலத்திற்கு ஏற்றதாக எனக்கு தோன்றவில்லை. (மன்னிக்கவும் இது எனது அபிப்பிராயம்). நந்தாவிற்கு இணையாக எனக்கொரு உதாரணப் புருஷன் கிடைக்கவில்லை. நந்தாவின் செயல்பாடுகள் ஒருவருக்கு நல்லதாகப் பட்டாலும், பாதிக்கப் படும் நபரின் கண்ணோட்டத்தில் தவறாகத் தோன்றலாம். இருந்தும் இன்றையத் தேதியில் நல்லாவைக் காட்டிலும் நந்தாதான் ஒரு சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்பது என் (இந்தக் கடவுளின்) கருத்தாக இருக்கிறது. நீங்கள் (சக கடவுள்கள்) என்ன சொல்கிறீர்கள்?

13 comments:

ஜோ/Joe said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...

கணேஷ்,
'நந்தா' முழுவதுமாக பார்க்கவில்லை .எனினும் தொலைக்காட்சியில் நிறைய காட்சிகளை பார்த்திருக்கிறேன் .'அன்பே சிவம்' அற்புதமான படம் .ஆன்மீக வாதிகள் ஆன்மீகம் சொல்லுகிறேன் பேர்வழி என்று அபத்தங்களை சினிமாவாக எடுத்த போது ,ஒரு நாத்திகள் கமல் எடுத்த உண்மையான ஆன்மிக கருத்து கொண்ட படம் 'அன்பே சிவம்' .நந்தா வழிமுறை வேறாக இருப்பின் ,நான் நல்லா வழி முறையயே வழி மொழிகிறேன்

வீ. எம் said...

test

வசந்தன்(Vasanthan) said...

ஒருத்தர் மாதிரியும் வேண்டாம்.
என்னைப்போல வாழுங்கள்.
-வசந்தக் கடவுள்-

Ganesh Gopalasubramanian said...

//ஒரு நாத்திகள் கமல் எடுத்த உண்மையான ஆன்மிக கருத்து கொண்ட படம் 'அன்பே சிவம்'//
ஆமாங்க உண்மையிலேயே கமலின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்பே சிவம் தான். படம் ஏனோ வியாபார ரீதியில் தோல்வியையே சந்தித்தது வருத்தத்திற்குரியது.

//-வசந்தக் கடவுள்-//
எந்த கடவுளா இருந்தா என்ன கடவுள்னு ஆனதுக்கப்புறம் வாழ்ந்து தானே ஆகணும்

தாணு said...

பத்மாவின் கடவுள் என்றொரு கான்செப்ட் வாசித்திங்களா?

வினையூக்கி said...

நண்பரே, காந்தி பற்றிய உங்கள் கருத்து யோசிக்க வைத்துள்ளது.

G.Ragavan said...

நந்தான் சிவம். சிவம்தான் நந்தா. சோறூட்டும் அம்மாதானே தவறு செய்கையில் அடிக்கிறாள். உதவுவதில் சிவமாகவும் தேவைக்கேற்ப நந்தாவாகவும் இருப்பதே கடவுள். நாம் முடிந்தவரை இரண்டு பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கொல்ல வந்த பசுவையும் கொல்லச் சொல்லி காந்தி சொல்லியிருக்கின்றாரே. அங்கே பாரதியின் "ரௌத்திரம் பழகு" வந்து விடுகிறதே.

நல்ல சிந்தனை வந்திருக்கிறது கணேஷ். இதுதான் சமயம். பழந்தமிழ் இலக்கியங்களை ஆராயப் புகுங்கள். நுனிப்புல் மேய வேண்டாம். ஆழப் படியுங்கள்.

வசந்தன்(Vasanthan) said...

அன்பே சிவ 'நல்லா' ஒரு கட்டத்தில் தனக்கு மூஞ்சையில் குத்திய அன்பரசுவுக்கு திருப்பிக் குத்துவார். அதுவும் நல்லாவின் குணவியல்புதான். எனக்கு நல்லாவை நன்றாகப் பிடித்திருந்தது.

NambikkaiRAMA said...

அருமையான கருத்து கணேஷ்!

பழூர் கார்த்தி said...

என்னப்பூ கணேசு...
திடிர்னு சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டீங்க :-)

பரவால்ல.. உங்க கருத்து நல்லாத்தான் இருக்குது (எங்களையும் கடவுள்கள்ன்னு சொன்னதால்) :-)

சில சமயங்களில் நந்தாவாகவும், சில சமயங்களில் நல்லாவாகவும் இருப்பதுதான் நல்லது என நான் நினைக்கிறேன்...

Anonymous said...

as u said,there is no example for nanda.but consider subhash.if we are all gods why we need to worship some other.so there is a superior power which is supreme to all of us(puriyama ezhutherennu ninaikatha)i know that u r a great pious man.so iam leaving this comment about ur article about god.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அன்பே சிவம் மிகவும் பிடிக்கும். தமிழ்படங்களில் எந்தப் படம் பிடிக்கும் என்று கேட்டாலோ எந்தப் பாத்திரம் பிடிக்கும் என்று கேட்டாலோ அன்பே சிவமும் நல்லாவுந்தான் நினைவுக்கு வருவார்கள்.

Planes, Trains & Automobiles இன் பாதிப்பில்தான் அன்பேசிவம் உருவாகிற்று என்று சொன்னாலும்கூட நல்லாவை மறக்க முடியாது.

நந்தாவும் பிடித்தபடந்தான். ஆனாலும் மேலே நீங்கள் சொன்னபடி கேள்விகளையெல்லாம் எழுப்பவில்லை. ஐயா சொல்லும் வசனத்தைக் கேட்கும்போது அட! என்று சொல்ல வைத்தது. ஆனால், படம் அந்த விதயத்தை வைத்து எடுக்கப்படவில்லைதானே.

ஒரேயொரு வசனம் அட போடவைத்த இன்னொரு படம் வசூல் ராஜா. இந்தியில் இருந்து டப் செய்தார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அந்த கோமா நோயாளியை விறாந்தை வழியாகத் தள்ளிக்கொண்டு போகும்போது

'கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனை நம்பலாம். அட! கடவுள் இல்லைன்னு சொல்றான் பாரு அவனைக்கூட நம்பலாம். ஆனா, நாந்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே நம்பாதே'

ன்னு சொல்லிட்டுபோவாரே அந்த டுபாக்கூர் டாக்டர். அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க? [யாரோ எப்போதோ பிடித்த பட வசனங்கள்னு ஒரு பதிவு போட்டாங்க. நாமளும் பிடித்த பிலாசபி வசனங்கள்னு ஒரு பதிவு போட்டுருவமா? ;) ]

சரி, சொல்ல வந்ததை மறந்துட்டு கதை பேசிட்டு இருக்கேன்.

என்னைப்பொருத்தவரை நல்லா மாதிரி இருக்கணும். கொஞ்சம் 'ரௌத்ரம் பழகிட்டு'. நல்லாகிட்டயும் அந்த ரௌத்ரம் இருக்குன்னு நினைக்கிறேன்.

நல்லா 75% + நந்தா 25%

தான் ஓரளவு சரியானதாக இருக்கும்னு நினைக்கிறேன்.

-மதி