ஞாயிற்றுக்கிழமை! வழக்கம் போல 9-12 காலை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. மின்சாரம் இல்லாத இந்த அரை மணி நேரத்தில் அம்மா தெப்பலாக நனைந்திருந்தாள். வழக்கம் போல என்பதில் அவளுக்கு நிறைய திட்டமிடல்கள் இருந்ததன. காலை இட்லிக்குச் சட்னி அரைப்பது, மதிய கூட்டுக்கு தேவையான தேங்காய் இத்யாதி கொண்ட கரைசலை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்வது என மின்சாரம் சார் சில வேலைகளை ஒன்பது மணிக்கு முன் செய்து முடித்துக் கொள்வாள். இந்த வேலைகளில் காட்டிய முனைப்பு அவளது வியர்வைக்காய் பெரும் பங்காற்றியிருக்க வேண்டும். இவ்வளவையும் முடித்து
சாப்பிட உட்கார்ந்ததும், பழைய பேப்பர்க்காரன் குரல் கேட்டது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்க கூடும். வேகமாய் எழுந்து சென்று “நேத்து வரச்சொன்னா உன் இஷ்டத்துக்கு இன்னிக்கு வந்து நிக்கிறியே! நாங்க வீட்ல மத்த வேலையைப் பாக்காம உன் வேலையை பாத்திட்டு அலைய முடியுமா” எனச் சடசடவென பொரிந்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
வாரயிறுதி விடுமுறைக்கு ஊருக்குச் வந்திருந்த எனக்கு பேப்பர்க்காரனைப் பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்னால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. எது தேவையான பேப்பர் எது தேவையில்லாத பேப்பர் என நிர்ணயிக்கும் உரிமை என்னிடம் இருக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு பழைய பேப்பர் என்று நினைத்து கழித்த கட்டில் அம்மா எடுத்து வைத்திருந்த பக்தி மலர் கட்டும் இருந்திருக்கிறது. அப்பொழுது வாங்கிக்கட்டிக்கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. அம்மாவிடம் ஏதாவது சொல்லப்போய் அவளது வியர்வைச் சூடு என்னை பொசுக்கிவிடுமென்கிற பயமும் இருந்தது. இருந்தாலும் பேப்பர்க்காரனிடம் “அண்ணே! காலனிக்குள்ளே போய்ட்டு திரும்பி வரும்போது ஒரு எட்டு பாத்திட்டுப் போங்க! அம்மாகிட்ட கேட்டு எடுத்து தர்றேன்” என்று சொன்னேன். நமக்கு தேவையில்லாதது என்றாலும் நம்மை அச்சுறுத்தும் வரை மனிதன் அதைக் கண்டுகொள்வதில்லை. தேவையில்லாதவை என்பதனால் அதன் இருப்பும் தேவையில்லாததாகி விட முடியாது. காலப் போக்கில் பெரிய இடையூறாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான உதாரணம் மலச்சிக்கல். ஆனால் இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லும் தைரியம் எனக்கு அப்பொழுது இல்லை.
இந்நேரத்தில் பேப்பர்க்காரனைப் பற்றி விவரிப்பது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். நடுத்தர வயது இளைஞன். வயது 30-32ல் இருக்கலாம். கருத்த உருவம். மெலிந்த தேகம். முருக்கேறிய கைகள் என அன்றாட தேக உழைப்பின் அத்தனை அடையாளங்களையும் கொண்டிருந்தான். நன்கு எண்ணெய் தேய்த்து ஒழுங்காக சீவப்பட்ட அடர்த்தியான தலைமயிர். அதைப் பார்க்கும் பொழுது முடி உதிர்வதைத் தடுக்க, ஈரோடு வரை சென்று வாங்கி வந்த கருவேப்பிலையும் இன்னொரு மூலிகையும் கலந்த எண்ணெய்யின் ஞாபகம் வந்து போனது. தள்ளுவண்டியில் சில புதிய ப்ளாஸ்டிக் பொருட்களையும் ஒரு பெரிய சாக்குப் பையையும் வைத்திருந்தான். சாக்குப் பை, வெள்ளை காக்கி என அரிசி மூடைச்சாக்கு, நெல் மூடைச்சாக்கு என பல்வேறு சாக்குகளை சேர்த்து தைத்திருந்தது. பெரியதென்றால் என்னைப் போல் ஒரு மூன்று பேரை அதில் முழுதாக அடைக்கலாம் அவ்வளவு பெரியது. சாக்குப்பையை இரண்டாக பிரிக்குமாறு ஒரு அட்டையை வைத்திருந்தான். அட்டை கொண்டு பிரிக்கப்பட்ட ஒரு பகுதியில் சேகரித்த பழைய பேப்பர்களையும், மறு பகுதியில் சேகரித்த பழைய உடைந்த ப்ளாஸ்டிக் பொருட்களையும் நிரப்பியிருந்தான். பழைய பேப்பர் பகுதி பெரியதாக இருந்தது. கொள்ளளவிலும், கொண்டிருந்த அளவிலும். ப்ளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவு எளிதாக தேவையற்றதாகிவிடுவதில்லை. வீட்டில் இருக்கும் ப்ளாஸ்டிக் குடத்தின் பயனைப் பார்த்திருக்கிறேன். வாங்கிய புதிதில் குடி தண்ணீர் நிரப்ப உபயோகப்படுத்தப்பட்டது. அந்நாட்களில் வீட்டில் சமையலறையில் வைக்கப்பட்டிருந்தது. கைப்பிடி ஓரம் உடைந்த பின்னர் குழாயடி அருகே. நிறம் மங்கிய பின்னர் மாடியிலிருந்து மழை நீர் வடியும் இடங்களில். மழை நீர் நிரம்பி பாசி படர்ந்த பின்னரே அது தேவையில்லாததாகிறது. இதற்குள்ளாக அதற்கு ஒரு மூன்று வயதாகியிருக்கும். அப்படியான இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைப் பேப்பர்க்காரனின் சாக்குப் பையில் கண்டேன். இப்படி பாதிக்கும் சற்று அதிகமாக நிரம்பியிருந்த சாக்குப் பையின் மீதி வெளிப்புறமாக சுருட்டப்பட்டிருந்தது. அந்தச் சுருளின் அடர்த்தி ஒரு கிரிக்கெட் ஸ்டெம்ப்பின் அளவு இருக்கலாம். மூன்று அல்லது நான்கு முழுச் சுற்றுக்கள் இருந்திருக்கலாம். காலை பத்து மணிக்குள்ளாக இவ்வளவு நிரப்பியிருக்கிறானே என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. ஒருவேளை நேற்று சேகரித்தவற்றுடன் இன்று சேகரித்தவையையும் சேர்த்து விற்க எண்ணியிருப்பான் என நினைத்துக் கொண்டேன். அப்படியிருப்பின் ஏன் அவ்வளவையும் வீணாக தள்ளிக்கொண்டு வரவேண்டும், ஏதாவது ஒரு கடையிலோ அல்லது தெரிந்த வீட்டிலோ அல்லது தெரு முடிவுகளிலோ, காலி இடங்களிலோ போட்டு வைத்திருக்கலாமே என்னும் சந்தேகமும் தோன்றியது. அவனிடம் ஒரே ஒரு சாக்குதான் இருந்திருக்க வேண்டும். அதான் எல்லாச் சாக்குகளின் கலவையாக இருக்கிறதே. அதான் அதிலும் அட்டையைக் கொண்டு தடுப்பிட்டு பிரித்திருக்கிறான் என நினைத்துக் கொண்டேன். எப்படியிருப்பினும் இன்றையச் சாக்கு நிறைந்தே இருந்ததா அல்லது நிறைக்கப் பட்டதாவென எனக்கு தெரியவில்லை. இப்பொழுது பெரிய சாக்கில் என் யூகங்களும் சேகரமாகியிருந்தன.
பேப்பர்க்காரன் சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களைக் கழட்டி விட்டிருந்தான். உள்ளே அணிந்திருந்த பனியனில் இருந்த எழுத்துக்களில் நடுவில் இருந்தவை வெளியே தெரிந்தன. இரண்டு அல்லது மூன்று சுழியின் (ன அல்லது ண) ஈற்றான சுழியும் கோடும் தெரிந்தன. அதற்கடுத்து ‘ம’ என்ற எழுத்து முழுதும் தெரிந்தது. பின்னர் பழையபடி இரண்டு அல்லது மூன்று சுழியின் (ன அல்லது ண) வின் துவக்க சுழி தெரிந்தது. முழு வார்த்தை ”கண்மணி” என இருந்திருக்கலாம். அல்லது ”தினமணி” என இருந்திருக்கலாம். மொத்தத்தில் என்னை யூகங்களால் நிறைத்திருந்தான் பேப்பர்க்காரன். ”நேத்து கொஞ்சம் லேட்டாயிருச்சு. ஆறு மணிக்கு மேல வந்தா, அம்மா எடுத்துத் தருவாங்களான்னு தெரியல. நாளைக்கு ஞாயித்துக்கிழமை வந்து எடுத்துக்கலாம்னு போயிட்டேன். சாப்பிடற நேரமா வந்துட்டேன் போலிருக்கு அதான் அம்மா கோச்சுகிட்டாங்க. நான் திரும்ப போகும் போது வந்து எடுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைத் தள்ளலானான். தெளிவாக அவன் சொன்ன விஷயங்கள், அம்மாவின் பேச்சைப் பற்றிய அவனது புரிதல் எல்லாம் தொழிலில் அவனது அனுபவத்தைக் காட்டியது. பின் அவன் காலனிக்குள் சென்று விட்டான். நான் சாப்பிட்டு விட்டு நண்பனைப் பார்க்க சென்று விட்டேன்.
மதியம் இரண்டரை மணியிருக்கும். நண்பன் வீட்டிலிருந்து சாப்பிட வந்தேன். வெளியில் பேப்பர்க்காரன் நின்று கொண்டிருந்தான். ”என்னண்ணே அம்மா எடுத்துக் கொடுத்திட்டாங்களா” எனக் கேட்டேன். ”இல்ல அம்மா சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. வந்து எடுத்து தர்றென்னு சொல்லியிருக்காங்க” எனச் சொன்னான். எப்படி வெளியில் ஒருவரை நிற்க வைத்துக்கொண்டு அம்மாவால் சாப்பிட முடிகிறதென்று நினைத்ததை உள்ளே சென்று அம்மாவிடம் கேட்டேன். ”நான் சாப்பிட ஆரம்பிச்சப்புறம் தான் அவன் வந்தான். சாப்பிட்டுட்டு எடுத்து தர்றேன்னு சொல்லியிருக்கேன்” என்று அம்மா சொன்னாள். “சரி பழைய பேப்பர் எதுன்னு சொல்லு நான் எடுத்து கொடுக்கிறேன்னு” சொன்னேன். அதற்குள்ளாக வெளியில் சென்றிருந்த அப்பாவும் வந்து சேர்ந்தார். இருவருமாக பழைய பேப்பர் கட்டுக்களை எடுத்து போட்டோம். அதற்குள்ளாக அம்மா ”விகடன், மங்கையர் மலர் புக்கெல்லாம் போட வேண்டாம் டா. இன்னும் அதுல தேவையானது நிறைய எடுக்க வேண்டியிருக்கு” என்று சொன்னாள். ”சரிம்மா” என்று சொல்லிவிட்டு பேப்பர்கட்டுக்களை மட்டும் போட்டோம். பேப்பர்க்காரன் முதலில் ஒரு கிலோ எடைக்கல்லை வைத்து பேப்பர்களை அளந்தான். பின்னர் அளந்த பேப்பர்களையும் எடைக்கல்லையும் தராசில் ஒரு தட்டில் வைத்து, மிச்ச பேப்பர்களை அளந்தான். மாடியில் பேழையில் கொஞ்சம் பேப்பர் இருப்பதாக சொல்லவே மாடியிலிருந்து அந்த பேப்பர்களை எடுத்து வந்தேன். அவை எல்லாம் மிகவும் பழைய ஆங்கில பேப்பர்கள். எடைபோட்டதில் 12 கிலோ 300 கிராம் தமிழ் பேப்பரும், 2 கிலோ 100 கிராம் ஆங்கில பேப்பரும் இருந்தது. அப்பா பழைய ப்ளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டிருந்த அட்டை டப்பாவை எடுத்துக் கொடுத்தார். அவை இரண்டு கிலோ இருந்தது. மொத்தம் 130 ரூபாய் வருவதாக பேப்பர்க்காரன் சொன்னான். அப்பா பேசி 140ஆக வாங்கிக் கொண்டார். ”புக்கையெல்லாம் எடுத்துட்டுப் போயிரலாம்னு காசெல்லாம் எடுத்துட்டு வந்தேன்” என்று பேப்பர்க்காரன் சொன்னான். ”ரெண்டு வாரம் கழிச்சு வாங்கண்ணே. அம்மா அதுக்குள்ள வேணுங்கிறது கிழிச்சி எடுத்து வச்சுக்குவாங்க” என்று நான் சொன்னேன். “சரி தம்பி. வர்றேன்” என சேகரமான 14 கிலோவை சாக்குப்பையில் நிரப்பிக்கொண்டு கிளம்பினான் பேப்பர்க்காரன். “சாப்பிட்டாச்சாண்ணே! எனக் கேட்டேன். “போய் தான் சாப்பிடணும் தம்பி. வழக்கமா ரெண்டு ரெண்டரை மணிக்கு சாப்பாடுவேன்.
உங்க வீட்ல இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு. அரை மணி நேரத்தில போயிருவேன். வரட்டா” என சொல்லி கிளம்பி விட்டான் பேப்பர்க்காரன். இப்பொழுது கவனித்தேன். சாக்கு கிட்டதட்ட முழுவதுமாக நிரம்பியிருந்தது. அம்மா சாப்பிட்டு முடித்து வெளியே வந்திருந்தாள். தெரு முடிவில் ஐஸ் வண்டிக்காரன் மணி அடித்துக்கொண்டிருந்தான். ”அந்த காசுக்கு ஐஸ் வாங்கிருங்க” என்று அப்பாவிடம் சொன்னாள் அம்மா. நான் சாப்பிட வீட்டின் உள்ளே சென்றேன். அம்மா பாதுகாத்த புத்தகமொன்றின் முன்னட்டையில் ஒரு பெண்மணி சிரித்துக்கொண்டிருந்தார். பழைய பேப்பர் வைத்திருந்த இடம் வெறுமை படர்ந்து பழைய பேப்பர் சேகரித்து வைக்கத் தயாராகயிருந்தது.