Thursday, September 08, 2005

பிள்ளையார் அருள் பாலித்தார் !!

நேற்று பிள்ளையார் சதுர்த்தி!! கோவில்பட்டியில் இருந்தவரை சும்மா வருடா வருடம் கொழுக்கட்டையை முழுசு முழுசா முழுங்குவேன். எப்படியானாலும் ஒரு பதினைந்து கொழுக்கட்டைகளாவது உள்ளே போவது உறுதி. பாருங்க வேலை கிடைச்சாலும் கிடைச்சது கொழுக்கட்டைக்கும் துண்டு விழுந்து போச்சு. போன வருஷம் வரைக்கும் ஏதோ நான் சாப்பிடுகின்ற மெஸ்ஸிலிருந்து கொழுக்கட்டைகள் கிடைத்து வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் அந்த மெஸ் உரிமையாளரும் தமிழ்நாட்டுக்கு சொந்த ஊருக்கு குடிபெயர்ந்து விட்டார். அதனால் இந்த வருஷம் கொழுக்கட்டை கிடைக்காதென்பது கிட்டதட்ட போன வாரமே தெரிஞ்சு போச்சு. சரி அம்மாகிட்ட ஃபோன்ல கேட்டு செஞ்சுரலாம்னு நினைச்சா அம்மா அது ரொம்ப கஷ்டம் உன்னால முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற என்ன செய்ய தமிழ்க் கோயிலா போய் உண்டகட்டி வாங்கித் திங்க வேண்டியதுன்னு நினைச்சேன். ஞாயிற்றுக் கிழமை மலை மந்திர் போன சமயம் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை உண்டா என்று நிர்வாகியிடம் கேட்டேன். கோயில் நிர்வாகியும் என்னுடைய ஏக்கத்தை புரிந்தவராய் அன்பாய் இல்லையென்று சொல்லி விட்டார் :-(.

சரி இந்த வருஷம் கொழுக்கட்டைக்கு அல்வா தான்னு நினைச்சுக்கிட்டேன். நல்ல நாள் அதுவுமா கோயிலுக்கு போறது வழக்கம். கொழுக்கட்டை கிடைக்கலேயேன்னு வருத்தமிருந்தாலும் பிள்ளையார்கிட்ட கோபிச்சுக்கிறது முறையில்லையே அதனால நேத்தும் மலை மந்திர் போனேன். என் கூட வருத்தப்படறதுக்கு ஒரு நண்பனையும் கூட்டிகிட்டு போனேன்!!. எல்லா சன்னதிக்கும் போய்விட்டு திரும்பும் பொழுது கோயில் வாசலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தயிர்சாதம் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏன் விடுவானேன்னு நானும் என் நண்பனும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கினோம். என் நண்பன் கொழுக்கட்டை சாப்பிடலையேன்னு திருப்பி புலம்ப ஆரம்பித்தான். அதைக் கேட்டு எங்கள் முன் நின்று அம்மாள் சிரித்தார். பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை பின்னாடி திரும்பி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் என் நண்பரிடம் பேசலானார். எனக்கு ஒரே ஆச்சர்யம் என்னடா இது என்னைக்கு இல்லாத திருநாளா இன்னைக்கு ஒருத்தர் நம் புலம்பலைக் கேட்டு ஏளனம் செய்யாமல் நம்மிடம் சிரித்து பேசுகிறாரே என்று. விசாரித்ததில் என் நண்பனின் சொந்த ஊரில் (சென்னை பக்கம் ஏதோ கிராமம்) அவர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் அந்த அம்மாள் (முன்பு அக்கா) வசித்து வந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு டெல்லிக்கு குடியேறியிருக்கிறார்.

பக்கத்து வீட்டு அக்காவிற்கு நல்லவேளையாக டெல்லியிலும் கோயிலுக்கு பக்கத்திலேயே வீடிருந்தது. பிறகென்ன அவர் வீட்டிற்கு போய் கொழுக்கட்டையாக முழுங்கினோம். அப்போ மணி இரவு 7.30லிருந்து 8.00 க்குள் இருக்கும். பிள்ளையார், பிள்ளையார் சதுர்த்தி அதுவுமாக எங்களை கொழுக்கட்டைக்காக இவ்வளவு நேரம் தவிக்க விட்டிருக்கக்கூடாது.

முடிவு செய்து கொண்டேன் அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குள் கொழுக்கட்டை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். உதவுபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு :-)

7 comments:

பாலதர்ஷன் said...

முயற்சி திருவினையாக்ட்டும்!

தருமி said...

உங்க அப்பா-அம்மா ஞான திருஷ்டி உள்ளவர்கள்தான். பாருங்களேன், கொழுக்கட்டைக்கு இப்படி ஆலாய் பறப்பீர்கள் என்று தெரிந்தே உங்களுக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று நினைக்கின்றேன்.

வீ. எம் said...

தம்பி கனேசா,

இப்போ கொஞ்சம் அவசரமா போகனும்.. வீட்டு பக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில்ல.. இன்னைக்கும் கொழுக்கட்டை தராங்களாம்.. நேத்து 21 ,இப்போ போய் ஒரு 7 , 8 வாங்கினா .. மொத்தம் 28, 29 ஆகும் ..சரி சரி ..மணியாச்சு..வரேன்..
நாளைக்கும் வந்து விரிவா கருத்து சொல்றேன்..

துளசி கோபால் said...

கணேஷ்,

பெயர் பொருத்தம் பேஷ்பேஷ்

//அந்த அம்மாள் (முன்பு அக்கா) //

குசும்பா?

Ganesh Gopalasubramanian said...

நன்றி பாலன், தருமி, வீ.எம் & துளசி....

நாளைக்கு விளக்கமாக பதிலளிக்கிறேன்.

Ganesh Gopalasubramanian said...

ராஜ்

இத்தனை வெரைட்டியா.... அடுத்த வாரம் போயிர வேண்டியது தான்....
அது சரி நீங்க இப்போ எங்க இருக்கீங்க ??

வீ. எம் said...

27 கொழுக்கட்டை சாப்பிட்டு , வயிறு சரியில்லாம போயி.... அதான் கனேசு, அடுத்த நாளே வர முடியல.. கொஞ்சம் லேட் ..

//அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குள் கொழுக்கட்டை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்//
ஒன்னு, கொழுக்கட்டை செய்ய கத்துக்கோங்க.. இல்லை பக்கத்துல கொழுக்கட்டை செய்யுற அக்காவை எல்லாம் friend பிடிச்சுக்கோங்க... !