Tuesday, September 13, 2005

பிரச்சனைகள்

ரம்யா அவர்கள் பதிவையும் பத்மா அரவிந்த் அவர்களின் பதிவையும் படித்த பிறகு பெண்களின் அன்றாட பிரச்சனைகளைப் பற்றி ஒரு பதிவெழுத வேண்டும் என்பது ஆவலாக இருக்கிறது(சத்தியமா நான் சேடிஸ்ட் இல்லைங்க..). எழுதலாம் என்று நினைத்தால் எழுதும் அளவிற்கு எந்த பிரச்சனையையும் நான் மனதிலிருத்தியிருக்கவில்லை (தனக்கு வந்தாதானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும்). ரம்யா அவர்களின் நிஜ பூதங்கள் பதிவைப் படித்த பிறகு வெளியுலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை, அதுவும் பெண்களுடன் பழக கிடைக்கும் நிகழ்வுகளை சேமிக்கலானேன். ஒவ்வொரு பிரச்சனையையும் அதை அவர்கள் கையாளும் விதமும் அநேக விஷயங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.

அலுவலக கோப்பு வாங்குவது போல் கையை உரசும் மேலதிகாரி, ஏடிஎம் சென்டரில் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல நினைக்கும் இந்திய குடிமகன், தொலைபேசி பில்லிற்கு வைத்திருந்த பணத்தைத் திருடிச் செல்லும் திருடன், மேல்மாடியிலிருந்து நோட்டம் விடும் இந்திய நாட்டின் நாளைய தலைமுறை, முதுகு சொறிந்தால் முகம் சுழிக்கும் சக ஊழியர் என ஒரு நான்கு நாட்களிலேயே தெளிவாக தெரிந்து விட்டது பெண்களின் பாடு. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆண்களால் வரும் பிரச்சனைகள். இவற்றைத் தவிர்த்து பெண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளும் பல.

கையை உரசும் மேலதிகாரிக்கு காலில் மிதி !! கூடவே "நீங்களும் இனிமே இங்க தான் வேலை பார்க்கணும் நானும் இங்க தான் வேலை பார்க்கணும் அதை தெரிஞ்சு நடந்துக்கோங்க" என்ற எச்சிரிக்கை மொழி, இந்திய குடிமகனிடம் "முதல்ல நிற்கப் பழகுங்க சார் அப்புறம் முன்னாடி போகறதப் பத்தி யோசிக்கலாம்" என்ற நையாண்டி என பெண்களின் சாமர்த்தியம் வெளிப்பட்டாலும் சில சமயங்களில் அவர்களுக்கு இயலாமையே மிஞ்சுகின்றன.
பணத்தைத் திருடிவிட்டு ஓடும் திருடனை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. முதுகு சொறிந்தால் முகம் சுழிக்கும் சக ஊழியரைக் கண்டால் ஒதுங்கிப் போனாலும் அவரிடம் மட்டுமே கிடைக்கும் அலுவலகக் குறிப்புகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கும் இவர்கள் ஆளாகிறார்கள். இந்திய நாட்டின் நாளையத் தலைமுறையை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை கண்டித்தாலோ முறைத்தாலோ அது "நாயை அடிப்பானேன்....... சுமப்பானேன்" கதை தான்.

இந்த பிரச்சனைகள் போதாதென்று மனரீதியானப் பிரச்சனைகளும் பல. அவற்றை அவர்களைத் தவிர வேறு எவராலும் இயல்பாக எடுத்துக்கூற முடியாது.

மதுரமல்லி என்பவர் இரு மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சனைகளை மிக நேர்த்தியாக அதே சமயம் படு ஆக்ரோஷமாக வலைப்பதிவில் எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தார். ஏனோ இப்பொழுது அவர் அதிகமாக பதிவிடுவதில்லை. கறுப்பியும் முன்பு அடிக்கடி பெண்ணாய்ப் பிறந்ததால் அதிகப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பார். அவரது படைப்புகளையும் இப்பொழுது அலுவலக வேலைத் தின்று விட்டது. இப்படியாக நிறைய எழுத்தாளர்கள் வெளிவந்தாலும் ஏனோ இவர்களால் தொடர முடிவதில்லை.

எதிர்பார்க்கிறேன் துளசி, தாணு, உஷா, மதுமிதா, விழி, கலை (யார் பெயரையாவது விட்டிருந்தேனா மன்னிச்சுக்கோங்க!!!) போன்ற பெண் எழுத்தாளர்கள் தொடர வேண்டுமென்று.

6 comments:

Ramya Nageswaran said...

கணேஷ்.. எங்க பதிவுகளைப் படிச்சதை ஒரு பதிவாவே போட்டுட்டீங்களா? ரொம்ப நன்றி. எனக்கும் மதுரமல்லியோட எழுத்துக்கள் ரொம்ப பிடிச்சுது. அவங்க நிறைய எழுதாதது ஒரு குறை தான்.

நீங்க சொன்ன எல்லாருமே நல்லா எழுதிகிட்டிருக்கிறவங்க தான். அருணா, பத்மப்ரியா, பவித்ரா, மதி கே-மார்ட் பத்தி எழுதினவங்க (பேரு மறந்திடுச்சு) இவங்க எழுதுக்களும் நல்லா இருக்கும்.

rv said...

//ஏடிஎம் சென்டரில் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல நினைக்கும் இந்திய குடிமகன்//

என்ன கணேஷ், இது நானா?? கோல் போட்டுட்டீங்களே இப்படி! :(

துளசி கோபால் said...

கணேஷ்,

நல்ல பதிவுதான். ஆனா ஓடி ஒளிஞ்சுக்கிடறது நல்லது. இன்னும் ரெண்டு மணி நேரத்துலே 'ஷ்ரேயா' வந்துருவாங்க:-)
சொல்றதைச் சொல்லிப்புட்டேன்ப்பா.

பத்மா அர்விந்த் said...

கணேஷ்
நன்றாக எழுதுபவர்கள் வரிசியில் நான் இல்லை.
சந்திரவதனா, சாரா (இவர் பின்னூட்டம் மட்டுமே இடுவார். அருமையான கருத்துக்கள்) போன்றவர்களும் நிறைய எழுதுகிறார்கள். அப்படிப்போடு மதுரமல்லி பற்றி நான் சில தினங்களுக்கு முன் நினைத்திருந்தேன்

Ramya Nageswaran said...

பத்மா சொன்ன மாதிரி முக்கியமான பெண்கள் பிரச்சனைகளை ரொம்ப ஆழமா எழுதறவங்க பொடிச்சி, தான்யா. நேத்து மறந்துட்டேன். சாராவோட பின்னூட்டங்கள் படிச்சு நானும் வியந்திருக்கேன்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி ரம்யா, ராம்ஸ், துளசி, தேன் துளி

@ரம்யா
//அருணா, பத்மப்ரியா, பவித்ரா, மதி கே-மார்ட் பத்தி எழுதினவங்க (பேரு மறந்திடுச்சு) இவங்க எழுதுக்களும் நல்லா இருக்கும்.//
கே.மார்ட் பத்தி எழுதினவங்க தாரா. அவங்க எழுத்துக்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பத்மப்ரியா, ஸ்நேகிதி, பவித்ரா, காயத்ரி எல்லாருடைய எழுத்துக்களும் பிடிக்கும்.
பொடிச்சி தான்யா அடிக்கடி படிக்கிறதில்லை அதனால் குறிப்பிடவில்லை.
சாரா அவங்களோட பின்னூட்டத்தை இதுவரை நான் படித்ததில்லை கவனிக்காமல் சென்றிருப்பேன். பார்க்கிறேன்.
சந்திரவதனா அவர்களை என்னால் மறக்க முடியாது. என்னுடைய பதிவில் இரண்டாம் பின்னூட்டம் அவர்களுடையதுதான்.

@ராம்ஸ்
நான் சத்தியமா உங்கள சொல்லல ராம்ஸ்...:-)) இது தற்செயலா நடந்தது....

@துளசி
//நல்ல பதிவுதான். ஆனா ஓடி ஒளிஞ்சுக்கிடறது நல்லது. இன்னும் ரெண்டு மணி நேரத்துலே 'ஷ்ரேயா' வந்துருவாங்க:-)//
அதெப்படிங்க பாயிண்ட் எடுத்து கொடுத்திட்டு இப்படி நைசா கழட்டிக்கிறீங்க.... உங்க கிட்ட பதிவுல சொன்ன சாமர்த்தியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.

@தேன் துளி
மன்னிச்சிடுங்க..... தேன் துளி
இப்படி எசகுபிசகா மாட்டிப்பேன்னு தெரிஞ்சு தான் யார் பெயரையாவது விட்டிருந்தேனா மன்னிச்சுக்கோங்கன்னு பதிவிலேயே போட்டிருந்தேன்.

// அப்படிப்போடு மதுரமல்லி பற்றி நான் சில தினங்களுக்கு முன் நினைத்திருந்தேன் //
எனக்கு ரம்யா அவர்களின் பதிவைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு நெகிழ்ச்சி இருக்கும். மதுரமல்லி பதிவைப் படித்த பொழுது ஒருவகை அச்சத்தையும் கூடவே குற்ற உணர்ச்சியையும் உணர்ந்திருக்கிறேன். ஏனோ அவர்களால் தொடர முடியவில்லை.