Wednesday, April 05, 2006

பத்துப்பாட்டும் குத்துப்பாட்டும்


முன்னோர்கள் சொன்னார்களாம்... காலையில் ராஜா மாதிரியும், மதியம் மந்திரி மாதிரியும், இரவு பிச்சைக்காரன் போலவும் சாப்பிடணுமாம். அதில் எந்த அளவிற்கு நன்மை எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதென்பது வேறு விஷயம். இந்த காலத்திற்கு அதுவும் மென்பொருளாளர்களுக்கு அது பொருந்துமா? என்பது ஒரு பெரிய கேள்வி. சரி அதையும் விடுங்க.. இந்த வயசில கல்லைத் திண்ணாலும் செரிக்கணும்னு சொல்லிகிட்டே நிறைய சாப்பிடறது வழக்கமாப் போச்சு. அப்படியிருக்க மதியம் நல்லா சாப்பிட்டா, தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா? அந்த மாதிரி தூக்கம் வர்ற சமயத்தில காதில அந்த குரல்வாங்கியை (headphone/earphone) மாட்டிக்கொண்டு அடி பாட்டு கேட்பதென்பது என்னுடைய அன்றாட வழக்கமாகி விட்டது.

சரி இந்த அடிபாட்டு என்பது என்ன? தவில், மிருதங்கம், தாரை, தப்பட்டை போன்ற தாளக்கருவிகளின் பங்களிப்பு அதிகமாக மற்ற இசைக்கருவிகளை விஞ்சி நிற்கும் பாடல்களை அடிபாட்டு என்று கூறலாம். "மணப்பாறை மாடுகட்டி"யிலும் தாளக்கருவிகள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அதுக்காக அதை அடிபாட்டு என்று கூறலாமான்னு கேட்கிறவங்களுக்கு பதில் கீழே இருக்கிறது.

பொதுவாகவே இத்தகைய தாளக்கருவிகளின் பயன்பாடு கிராமிய பாடல்களில் அதிகமாக இருக்கும். விஸ்வநாதன் ராமமூர்த்தி காலத்தில் கிராமிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு. பின்பு இளையராஜா காலத்தில் கிராமிய பாடல்கள் உருமாற்றம் பெற்று அழகாகவும் தனித்தன்மையுடன் விளங்கின. நாட்கள் செல்ல செல்ல அந்த உருமாற்றம் உருச்சிதைவை உருவாக்கி அந்த கிராமிய மனத்திலிருந்து விலகி விரச மிகுதியுடன் இரட்டை அர்த்த பாடல்களாகி விட்டன. அடிபாட்டு என்ற சொல்லாடலும் இந்த பாடல்களுக்கே முழுவதுமாக பொருந்தும். இன்றைய தேதியில் மக்களாலும் முன்னணி நடிகர்களாலும் அதிகம் விரும்பப்படுவதும் இத்தகைய அடி பாடல்களே. அதற்கு நாளுக்கு நாள் இந்த பாடல்களின் எண்ணிக்கை கூடி வருவதே சான்று.

இவற்றுள் சில கதாநாயகனின் வீர தீர செயல்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதில் கொடுமை அந்த பாடல்களை திரையில் அவர்களே பாடுவார்கள். இந்த வியாதியிலிருந்து தப்பித்த முன்னணி கதாநாயகர்கள் மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை எனச் சொல்லலாம். தரம் தாழ்ந்து இல்லத்தாருடன் ரசிக்க முடியாதவையாகத்தான் இந்த பாடல்கள் அமைந்திருந்திருக்கின்றன. கதாநாயகர்களின் வீரத்தைப் பற்றின பாடல்களை வேண்டுமானால் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். எப்படியானாலும் அவற்றின் தரம் விரும்பத்தக்கதாக இல்லை என்பது உண்மை. ஆனால் இந்த பாடல்கள் பெறும் வரவேற்பு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

சென்ற ஆண்டு வந்த "லஜ்ஜாவதியே" ஒரு ஆறுதல். ஜெஸ்ஸி கிப்ட்டின் குரலில் விரசமில்லாத வரிகளில் ரசிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கடுத்து வந்த பாடல்கள் அடியோ அடியென்று அடித்து விட்டு போய்விட்டன. இப்படி தேவையில்லாமல் தாளக்கருவிகளையும் ரசிகர்களையும் குத்துவதால் இந்த பாடல்களுக்கு குத்துப்பாட்டு என்ற பெயரும் உண்டு. பாடல்களுக்கு ஆடும் நடிக நடிகைகளின் நடன அசைவும் குத்துப்பாட்டு என்ற பெயருக்கு தம்மால் ஆன உதவியைச் செய்து வருகிறது.

நான் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கேட்கும் பாடல்... கானா உலகநாதன் பாடிய "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்". அடி பாட்டு குத்து பாடல்களுக்கு உண்டான மகத்துவம் கொஞ்சமும் குறையாமல் அதே சமயம் விரசமில்லாத வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட பாடல். இந்த பாடலால் அடிபாட்டுக்கு இருந்த அந்த இலக்கணம் சற்றே மாறி விட்டதாகவே உணர்கிறேன். எப்படி கிராமிய பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல உருமாற்றம் அடைந்தனவோ அப்படியே அடி பாடல்களும் இதே போல் ஒரு நல்ல உருமாற்றம் பெறுமானால் ரசிகர்களும் அதிகரிப்பர். இவற்றுக்கென ஒருவித இலக்கணமும் வர வாய்ப்பிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் நல்ல ஜனரஞ்சகமான முயற்சியாகவும் இது அமையலாம். திரைப்பட பாடலாசிரியர்களின் பங்கு இதில் முக்கியமானதாக இருக்கும். அப்படியொரு நிலை வருமாயின் குத்துப்பாட்டுக்களை இல்லத்தாருடன் ரசிக்கலாம். பாடலுக்கேற்ற காட்சியமைப்பும் குரலுக்கேற்ற வாத்திய இசையும் இருக்குமேயானால், விரசமில்லாத வரிகளால் அடி பாட்டுக்களும் அதிரடியான வரவேற்பைப் பெறலாம்.

பி.கு

பத்துப்பாட்டுக்கும் இந்த குத்துப்பாட்டு(பதிவு)க்கும் சம்பந்தமில்லை.

சரி ! இத்தனை நாள் வலையுலகிற்கு வராமல் எங்கே போனாய் என வினவும் அன்பர்களுக்கு ஒரு கொசுறு செய்தி. இப்பொழுது நான் சென்னை வாசி :-)

13 comments:

சம்மட்டி said...

சொத்தப் பாட்டுக்கு ஆடதவர் எவரும்
ஆடுவர் குத்துப்பாட அலுக்கே !

பாடல்களெல்லாம் பாடலல்ல, ஒற்றைப் பாட்டாயினும்
குத்துப் பாடலே பாடல் !

ilavanji said...

அன்புத் தம்பிபிபிபிபிபிபிபிபிபிபி!!!!

இவ்ளோ நாள் எங்கேப்பா போயிருந்த?! (சிவாஜி ஸ்டைல்ல படிங்க! )

வால மீனுக்கும் வெளங்கு மீனும்தான் இப்போ நம்ப காதுலையும்!

சென்னையா?! அனுபவிங்க! எனக்குத்தான் கொடுத்துவைக்கலை!

ஜோ/Joe said...

வாங்க வாங்க!
கோவில்பட்டி தேர்தல் நிலவரம் எப்படி?

துளசி கோபால் said...

'அதெல்லாம் இருக்கட்டும். எங்கெ ஆளையே காணோம் ரொம்ப நாளா?'

இப்படிக் கேக்கறதுக்கு முந்தி விளக்கம் சொன்னதுக்கு தேங்க்ஸ்.

இப்னு ஹம்துன் said...

வாங்க கணேஷ்!
நல்லா இருக்கீங்களா?
சென்னை எப்படி இருக்கிறது?

வசந்தன்(Vasanthan) said...

வாங்கோ.
கனநாளைக்குப் பிறகு வந்திருக்கிறியள்.

Sud Gopal said...

தன்னுடய ஹிபர்னேஷனில் இருந்து வந்திருக்கும் கோ.கண்சுக்கு வாழ்த்துக்கள்.அப்படியே உங்கள மாதிரி ஹிபர்னேஷனில் போயிருக்கும் ரம்யா அக்கா,வீ.எம்.,என்றும் அன்புடன் பாலா இவிங்களையும் இஸ்துகினு வந்திருக்கலாமே???

கோடை காலச் சென்னையில் கால் வைத்திருக்கும் உங்களுக்கு,சென்னையில் நீங்கள் விரும்பியது கிடைக்க வாழ்த்துக்கள்.

அப்படியே "பத்துப்பாட்டும் குத்துப்பாட்டும்" அப்படிங்கற தலைப்புக்கும் தேர்தல் 2006க்கும் என்ன சம்பந்தம்னு சொல்லீடுங்களேன்.

குமரன் (Kumaran) said...

வாங்க வாங்க கணேஷு. எத்தனை தடவை உங்க பதிவுக்கு வந்து பாத்திருப்பேன். என்னடா ஆளையேக் காணோமேன்னு. டெல்லியில இருந்து இப்ப சென்னைக்கு வந்தாச்சா? அப்ப சீக்கிரம் டும்டும்டும் தான்னு சொல்லுங்க. :-)

Ganesh Gopalasubramanian said...

அனைவருக்கும் நன்றி... முக்கியமா என்னை மறக்காம நிறைய பேர் இருக்காங்கங்கிற திருப்தி இருக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு...

வலையுலகத்தின் இப்போதைய நிலவரம் என்னன்னு யாராச்சும் சொல்லுங்களேன்... அதுக்கேத்த மாதிரி பதிவு போட வசதியாயிருக்கும்...

இளவஞ்சி, இப்னு, துளசி அக்கா, குமரன், ஜோ, வசந்தன், சுதர்சன் எல்லோருக்கும் ரொம்ப நன்றி....

சம்மட்டி அண்ணே... சீக்கிரம் உங்க பதிவ படிச்சிட்டு குத்திட்டு போறேன்.

லதா said...

// டெல்லியில இருந்து இப்ப சென்னைக்கு வந்தாச்சா? அப்ப சீக்கிரம் டும்டும்டும் தான்னு சொல்லுங்க //

குமரன்,

அதைத்தான் முதலிலேயே சொல்லிட்டாரே

பத்துப்பாட்*டும்*
குத்துப்பாட்*டும்*

:-)))

Maha said...

கணேஷ்,
நீங்க போட்ருக்கும் படத்த பாத்துட்டு சின்ன வயசுல படிச்ச 'ரிங்ஙா ரிங்ஙா ரோஸஸ்' பாட்ட பற்றிதான் எழுதிருகிங்ஙணு நிணேச்சேன்.
இந்த கால கட்டத்தில் வரும் எந்த வகை சார்ந்த பாடலானாலும் சரி மிக சில பாடல்களே நம்மை முணுமுணுக்க செய்கிறது. நான் இறுதியாக கேட்ட குத்து பாட்டு 'காதல்' திரைபடத்தில் வரும் 'தண்டட்டிகருப்பாயி'... அந்த பாடல் குத்து பாட்டு வகை சார்ந்தது தாணே?

நவணித கிருஷ்ணன் பாடிய பாடல்கள் சில, தமிழ் மணம் மாறா நல்ல நாட்டுப்புற பாடல்களென நிணைக்கிறேன் .. குறிப்பாக நினைவுக்கு வரும் ஓரு பாடல் 'கொலுசு கடை ஓரத்திலே கொலுசு ஒண்ணாஙா...'

மகாலட்சுமி

தருமி said...

"'அதெல்லாம் இருக்கட்டும். எங்கெ ஆளையே காணோம் ரொம்ப நாளா?'

இப்படிக் கேக்கறதுக்கு முந்தி விளக்கம் சொன்னதுக்கு தேங்க்ஸ்."//

- ஏங்க துளசி, இந்த ஆளு எங்க விளக்கம் சொன்னாரு; அவரு பாட்டுக்குப் போயிட்டு இப்ப வந்திருக்காரு. சரி..விடுங்க, வந்தவரைக்கும் சந்தோஷம்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.