Tuesday, June 24, 2008

தொலைந்தவர்கள்

வசந்தகால வழிகளிலேயே
எனக்கும் அவனுக்குமான உறவு
தொலைந்து போயிற்று

இன்று இலையுதிர்காலம்
இருவரையுமே காணவில்லை

நாம்

உனக்கு என்னைத் தெரியாது
உனக்கு உன்னையும் தெரியாது

எனக்கு உன்னை தெரியாது
எனக்கு என்னையும் தெரியாது

நான் உனக்கு தெரிந்தால் சொல்
மறைகிறேன்

நீ எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்
தொலைந்துவிடு

நீயும் நானும் இருக்கையில்
அது எப்படி இருக்க முடியும்

நமக்கு நம்மை தெரிய வேண்டுமெனில்
நாம் அறியாத நாம்
இருந்து தான் ஆகவேண்டும்

கண்ணாடி

சில நேரம் குழித்துவிட்டும்
சில நேரம் குவித்துவிட்டும்
எனக்கும் என் கண்ணாடிக்குமான உறவு
மட்டும் எந்நேரமும் நிகழ்கிறது

ஓடும் வண்டிச்சக்கரமும்
பறக்கும் வானூர்தியும்
மிதக்கும் நட்சத்திரங்களும்
கண்ணாடியில் தான் விழுகின்றன

வண்டிச்சக்கரம் ஓடவும்
வானூர்தி பறக்கவும்
நட்சத்திரம் மிதக்கவும்
முடிவது கண்ணாடியால் தான்

நான் உறங்கையில் அது
மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது
எனக்கும் என் கண்ணுக்கும்
தெரியாமல்

கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது