இளையராஜா சாரோட நிறைய பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு. அந்த மிகப்பெரிய லிஸ்ட்டில் இந்தப் பாடலுக்கும் இடமுண்டு. ஒரே ஆறுதல் கன்னத்தில் மச்சத்துடனும் எத்தி கட்டிய கைலியுடனும் திரையில் திரிந்து கொண்டிருந்த ராதாரவி கோட் சூட்டுக்கு மாறியது வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அவருடைய "தொண்டுமுட்டி"க்கு கால் தூசி பெறாது இந்தப் பாடலில் அவருடைய தோற்றம். அமைதியா துவங்கி எங்கெங்கோ சென்று துவங்கிய அமைதியுடன் முடிவது என்பது எவ்வளவு சுகமானது. இடையில் வரும் அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் சஞ்சரிக்க முடிந்தாலும் அமைதியா முடிவதில் தான் பேரானந்தம் போல.
முதல் இடையிசை (interlude) மரபிசை. வீணை தனியாக ஒலிக்கும் பின் வயலின் தனியாக ஒலிக்கும் பின் வீணை பின் வயலின் பின்னர் இரண்டும் ஒன்றாக. உடன் துவங்கும் இருமுக முழவு (tabla) கூடவே வரும் தம்புரா. இங்கு தான் ஆரம்பிக்கும் சந்தேகம். பாடுபவர்கள் சுருதி பிசகாமல் பாட தம்புரா தேவைப்படும் ஆனால் இங்கு முழவுடன் இணைந்திருக்கும் ஏன்? இன்னும் சொல்லப்போனால் பாடலில் இங்கு தான் தம்புரா துவங்குகிறதோ எனக்கூட சந்தேகம் வரும். மரபுகளை உடைக்க கேள்விகள் தேவைப்படுவது போல. புல்லாங்குழல், முழவு, வயலின் எல்லாம் சேர்ந்தால் அந்தப் பன்முகம் கிடைக்கப் பெறலாம் அது மலர்கள் தொங்கும் செட்டிநாட்டு தேக்கு நிலை போல. கதவுகளைத் தாங்கும், கண்ணாடிகளைக் கொண்டிருக்கும், சிறிதளவு பிம்பம் காட்டும். ஆனால் நின்ற இடத்திலேயே நிற்கும். மரபிசை!! பின்னர் ஜேசுதாஸ் மெதுவாக அழைத்துச் செல்வார். வெகுதூரம் போகும் துடிப்பு இருக்கும் காங்கோவின் தாளத்தில் சீராக. எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வரை. வாய்பேசிடும் புல்லாங்குழலில் துடிப்படங்கி மறுபடியும் இருந்த இடத்திற்கே செல்லும். காங்கோவின் துடிப்பு பின்னர் இணையும்.
இரண்டாம் இடையிசை நவீனம். மரபென்று இதனை ஒதுக்க முடியாது, அழகில்லையென்று தள்ள முடியாது. நிச்சயமாக கடக்க வேண்டிய தொலைவு. தாண்ட முடியாத தூரம். இது பாலம். ஒருவகையில் பாதை. முக்கியமான பிணைப்பு. இரு கரைகளிலும் பிடிப்பிருக்கும். பாலத்தின் மேல் வைக்கும் முதல் அடியில் மட்டக்குரலில் மின் கிதார் பயமுறுத்தும். காங்கோவின் துடிப்பு முற்றிலுமாக நின்றிருக்கும். பதிலாக பேரிகைகள் முழங்க ஆரம்பிக்கும். முழக்கம் சீராகவும் இருக்காது. சலங்கைகள் முதன்முறையாக ஒலிக்கத்துவங்கும். ஆடல் ஆரம்பம். அங்கங்கு வந்து இணையும் வயலினும் இதுவரை இருந்தது போல் மெலிதாக தோன்றாது. இருமுக முழவு அடிக்கடி பழையதை ஞாபகப்படுத்தும் ஆனாலும் பேரிகைகளின் தாக்கத்தில் பழையவை தோற்கும். வேறு வழியில்லாமல் வயலின்கள் கூட்டு சேர்ந்து கொல்லும். பின்னர் கொஞ்சமாக முழவு பேரிகைகளின் தாக்கத்திலிருந்து பாதையை மீட்டு வரும். உக்கிரம் ஓய்ந்திருக்காது. விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை என எழுதியவன் உணர்ந்தவனாக இருப்பானாயிருக்கும். ஜேசுதாஸ் முந்தைய வேலையைத் தெளிவாக தொடர்வார். மெதுவாக அடங்கும் குரல் பூவேவில்.... இறுதியில் புல்லாங்குழல் அதே அமைதி.
பாடலின் இசையில் எவ்வளவு விஷயம் இருந்ததோ அந்த அளவுக்கு "என்றென்றும் ராஜா"வில் இதன் நிகழ்வும் விஷயமிக்கது. புல்லாங்குழல் இளையராஜாவுக்கு பெரிய பலம். தண்ணீர் போல. போகும் வழியெல்லாம் எல்லாவற்றையும் தழுவி எங்கெல்லாம் நிறைய முடியுமோ அங்கெல்லாம் நிறைந்துவிடும். எல்லா இடங்களிலும் முடிந்தவரை அதன் குளிர்ச்சி. அருண்மொழி (அ) நெப்போலியன் அற்புதக் கலைஞன். அரும்பு தளிரே தளிர் தூங்கிடும், நான் என்பது நீயல்லவோ, ஏ ராசாத்தி... (மலேசியா வாசுதேவனுடன் இணைந்த அதே) வித்தியாசக் குரலுக்கு சொந்தக்காரன். ஆர்ப்பாட்டமில்லாத குரலும் குழலும் அவனுக்கு கைவந்தது வியப்பில்லை அப்படியொரு சாந்தம். தாடிக்காரர் சதானனம். இளைய நிலா, என் இனிய பொன் நிலாவே... கிதார் இசை இவர் மீட்டியவை தான். வயலின் பிரபாகர். கனகம்பீரம். ராஜான்னா வயலின்... எனக்கு பிறகு தான் எல்லாமேங்கிற கர்வம் முகத்தில் தெரியும். தபேலா பிரசாத்... என்ன மாதிரியான டிசைன் இது... கலவை இது? எல்லாத்துக்கும் மேல ஜேசுதாஸ்... பாட்டுல எவ்வளவு சொதப்ப (அசலிலிருந்து விலகுதல்) முடியுமோ அவ்வளவு சொதப்பினார். ஆனால் அவராலேயே இந்த நிகழ்வு அற்புதமானது.
வயலினும் புல்லாங்குழலும் சேரும் இடத்தில் அருண்மொழியும் பிரபாகரும் சேர்வது அழகு... ஜெயா டிவி கேமிராவுக்கு வணக்கம்... நிகழ்ச்சியின் சோலோ வயலின் பாகங்களை பிரபாகர் அநேகமாக நின்று கொண்டே வாசித்தார்... இசையின் நீள அகலங்களுக்கும் வயலின் வில்வீச்சுக்கும் உயரம் தேவைப்பட்டிருக்கலாம். அவரை அழகாகவும் கம்பீரமாகவும் படம்பிடித்திருந்தார்கள்... அதிலும் நிகழ்ச்சியின் முடிவில் ராஜா அவரின் பங்களிப்பை நிறுவிய பொழுது இவருடைய முகத்தில் உலகத்தையே வென்றுவிட்ட பெருமிதம் தெரிந்தது. நிழல் போல நானும் பிறகு வரும் ஆலாபனையை தாள ஆரம்பத்தில் தவற விட்டு அழகாக தாளத்துடன் இணைந்தார். ராஜாவோட பலம் தெளிவான நிறுத்தங்கள். ஃபார்முலா பந்தயத்தின் நிறுத்தங்களைப் போல... வேகத்துக்கேற்ற தூண்டுதல் அங்குதான் கிடைக்கும் எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் செம்மைப் படுத்தப்படும். ஜேசுதாஸ் கச்சேரி மூடில் இருந்திருப்பார் போலும்... இந்தப் பாடலின் சிறு நிறுத்தங்களுக்கு மதிப்பளிக்கவே இல்லை... வாய்பேசிடும்... புல்லாங்குழல்... நீதானொரு... பூவின் மடல்... நான்கு நிறுத்தங்கள் போதுமென்று நினைத்து விட்டார் போலும். ஆனால் மெல்லிய புன்னகையுடனும் அந்த அசகாய குரலில் இவர் வீசுவது லிட்டில் பாயோ... ஃபேட் மேனோ... விழுந்தால் ஜென்மம் முழுவதும் அதன் தாக்கம் இருக்கும்.
ராஜா ரசிகர்களின் மனக்குவியல்களில் இந்த பாடல் ஒரு முத்து. இரண்டாம் இடையிசை மின் கிதாருடன் துவங்குகையிலேயே அவர்களின் ஆராவாரமும் துவங்குகிறது. அந்த இடையிசையில் வயலின் குழு சேர்கையில் அந்தப் பரவசம் தரும் இன்பத்தை எத்தனை பேர் அனுபவித்திருப்பார்கள். இசையுடன் இணையும் அந்தப் பாசக் கூச்சலுக்குப் பின் எத்தனை இதயத்துடிப்பு இருந்திருக்குமோ? இந்த இடையிசை முடியும் முன்னரே ஜேசுதாஸ் பாடத்துவங்க, வேலையில் கவனமாக இருந்த நடத்துநர் புருஷோத்தமன் என்ன செய்வதென புரியாமல் ஜேசுதாஸைப் பார்த்தபடியே இசைக்கோர்வையை தொடர எல்லாம் குளருபடியானது. ஆனாலும் இசைஞர்கள் ஜேசுதாஸை மொத்தமாக கைவிடாமல் அவர் பாடும் வரிகளுக்கேற்ற தாளத்துடன் இணைய, நுழைகிறார் ராஜா. இது என் ஷோ. இப்படியிருக்க கூடாது என ஜேசுதாஸை நிறுத்துகிறார். ஜேசுதாஸ் வாழ்நாளில் இவ்வளவு பேர் முன்னிலையில் தாளத்துக்கு தவறி மீண்டும் துவங்கியது இது எத்தனையாவது முறையாக இருக்க முடியும்? ராஜா என்ன சொல்லி நிறுத்தினாரோ... ரிக்கார்டிங்கென்று ஜேசுதாஸ் மைக்கில் சொல்ல... மறுபடியும்... இங்கு ஜனங்களின் ஆராவாரம். இது ராஜாவுக்கு. தங்களுக்குத் தேவையானதை தெளிவாக தரும் அவர்களுடைய ராஜாவிற்கு. இங்கு ஜெயா டிவி கேமிரா கண்களுக்கு தீனி... முதல் முறை மின் கிதார் துவக்கத்திற்கு தவறாக சதானனத்தை காண்பிப்பார்கள். பின்னர் அது மின் கிதார் வாசிப்பவர் மேல் திருப்பப்படும். டிரம்ஸ் வாசிப்பவரின் தலையசைப்பையும் இரு வேறு கோணங்களில் படம்பிடிக்க இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த டிரம்மருக்கு ஒரு ஷொட்டு டிரம்ஸுக்கும், தலையசைப்பிற்கும். இரண்டாம் முறையும் ஜேசுதாஸ் சொதப்ப, ராஜா இந்த முறை வெறும் கையசைவில் அவரை நிறுத்தி இசைஞர்களுக்கு பாதை காட்டுகிறார். முதல் முறை ஜேசுதாஸைக் காப்பாற்றியவர்களை இந்த முறை ராஜா காப்பாற்றுகிறார். பின்னர் ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க ராஜாவின் முகத்தில் வரும் அந்த நிம்மதி ஆள்காட்டி விரலுடன் அவர் உதிர்க்கும் அந்த புன்னகையில் தெரியும். பிறகு நான் செய்த என ஜேசுதாஸ் பாடுகையில் தாமரை மலர்வது போன்ற ராஜா உதிர்க்கும் அந்த பாவம் எல்லாம் சரியாக்கப்பட்டதன் நிறைவு.
முடிவு என்னவென்று பார்த்த பின்னரும் ’வணக்கமோ’’நன்றியோ’ தெரியாமல், கூட்டம் கலையட்டும் எனப் பொறுமையுடன் டூரிங் டாக்கீஸில் கொடுத்த கடைசி ஐம்பது காசு வரை திரையை தரிசிக்கும் அந்த ரசிகனின் பொறுமையுடன் தான் ராஜாவின் பாடல்களை ரசிக்க வேண்டும். பாடல் என்பது வெறும் மனிதர்களின் குரல் அல்ல அது இசையுடன் கூடிய ஒருவித பிணைப்பு. ராஜாவின் பாடல்களில் அநேக பாடல்களில் நிறைவுப் பகுதி அருமையானதாக இருக்கும். இளைய நிலா மிகச்சிறந்த உதாரணம். இந்த நிகழ்விலும், குற்றவுணர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த ஜேசுதாஸ் பூவேவேஏஏஏஏ க்குப் பின் எனக்காக இன்னொரு வாட்டி பார்க்கலாமா என கேட்கிறார். ராஜாவிற்கும் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். மெதுவாக மைக்கை ஜேசுதாஸிடமிருந்து வாங்கி விஷயம் என்னன்னா அவர் சொல்ல ஆரம்பிக்க... அருண்மொழி ஊதிக்கொண்டே இருக்கிறான். குழலூதும் கண்ணனல்லவா... ராஜாவுக்கும் அப்பொழுது தான் தோன்றுகிறது பாடல் இன்னும் முடியவில்லையென்று. மக்களுக்கும் தெளிவாக்குகிறார். பின்னர் அதனை திருத்துகிறார். அப்பொழுது அருண்மொழி முடிக்கையில் ராஜாவின் கையசைவை கவனிக்கணும் அது இயற்கைக்கு செய்யும் அர்க்ய பிரதானம்.
இத்துடன் முடியுமா. ஜேசுதாஸ் பெரிய ஆளுமை. குற்றவுணர்ச்சியுடன் வீடு செல்ல முடியுமா. திருத்திக்கொள்கிறார். மறுபடியும் மின் கிதார். புருஷோத்தமன் அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்க ராஜா தானே இசைஞர்களை வழிநடத்த... பதறியபடியே புருஷோத்தமன் புத்தகத்தை வைத்துவிட்டு அதே பாடலுக்கான தன் வேலைக்கு மீண்டும் திரும்ப ராஜாவுக்கு சந்தோஷம். கூட்டத்துக்கு தேவையான ஒன்ஸ்மோர்கள் இப்படியாக போய் சேர்கின்றதே என்கிற உற்சாகத்துடன் ராஜா. இந்த முறை ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க கூட்டத்தில் பலத்த கைதட்டல். அது இசைக்கு அவர்களின் வரவேற்பு, ஜேசுதாஸ் ராஜா எல்லோருக்குமான வாழ்த்து. தவறை உணர்ந்து திருந்துபவனுக்கும், திருத்துபவனுக்கும் என்றென்றைக்குமான அவர்களின் பொது மன்னிப்பு. நான் செய்த பாவம் என்னோடு போகும் என ஜேசுதாஸ் தன்னை நோக்கி விரலைக் காட்டுவதைப் பார்த்த ராஜா கையெடுத்து ஜேசுதாஸை வணங்குவது கலையைத் தாண்டி மனிதத்துக்கான பாடம். அது தரும் நெகிழ்வு அலாதியானது. புல்லாங்குழலும் மணியும் அதே அமைதிக்கு எல்லாவற்றையும் திருப்ப... சாந்தி! என ஜேசுதாஸ் முடிக்கிறார்.
ராஜா இருக்கும் காலத்தில் காதுடன் இருப்பதைத் தவிற வேறென்ன வேண்டும் உலகத்தில்.
பார்க்க பூவே செம்பூவே - http://www.youtube.com/watch?v=xEYONZd2If4
பார்க்க என்றென்றும் ராஜா இசைஞர்கள் - http://www.youtube.com/watch?v=-oFG4ee_YGw
2 comments:
அருமையான வர்ணனை.அங்கு நடந்தவற்றை நேரில் பார்த்த தோரணை உங்கள் எழுத்துகளில் உள்ளது .நன்றி
அது என்னமோ தெரியலங்க இப்போதெல்லாம் திரைப்பட பாடலுக்காக வாய் அசைக்கும் அழகு ராணி ,அழகு ராஜாக்களை பார்ப்பதில் இல்லாத உற்சாகமும் சந்தோசமும் பாடலுக்கான சொந்தக்காரர்கள் பாடுவதை பார்க்கும் போது அளவு கடந்த உற்சாகத்தோடு மெய்சிலிர்க்க வைக்கிறது
பூவே செம்பூவே பாடலை இளையராஜா அவர்கள் இசையமைக்க ஜேசுதாஸ் பாடியதை ஜெயா டிவியில் பார்த்து அசந்து போய்விட்டேன் .ஜேசுதாசின் அழகான உச்சரிப்புகள் அப்பப்பா அருமை ...அருமை
இளையராஜாவை பற்றி சொல்லியா தெரிய வேண்டும் !!!அத்தனை வாத்தியங்களும் இவரின் கட்டளையை ஏற்று அருமையான இசையை வெளிபடுத்தும் விதத்தை பார்க்கும் போது இசைஞானியின் திறமை என்ன என்று நமக்கே புரியும்.
இசைஞானி இசைஞானி தான்...அவருக்கு நிகர் இனி அவர் மட்டும் தான்...
-தஞ்சை தேவா
http://tamil.oneindia.in/movies/television/2012/08/endrenrum-raja-ilayaraja-concert-in-jaya-tv-160302.html
Post a Comment