Monday, June 27, 2005

கால் சென்டர்களில் ஊழல்

UKவில் வெளியாகும் "தி சன்" செய்தித்தாள் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், இந்திய கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பொறியாளரிடமிருந்து தங்களின் பத்திரிக்கையாளர் ஒருவர் எண்ணற்ற தகவல்களை வாங்கி வந்துள்ளதாக கூறுகிறது. பாஸ்வேர்ட்கள், முகவரிகள் மற்றும் பாஸ்போர்ட் குறிப்புகளும் இவற்றில் அடக்கமாம். அந்த பத்திரிக்கையாளர், ஒருவரின் தகவல்களைப் பெற சுமார் 350 ரூபாய் செலவளித்தாராம். 1000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் இது போல விற்கப்பட்டதாக தெரிகிறது. இதைப் பற்றி ஏற்கனவே பல இந்திய செய்திதாள்கள் எழுதி வருகின்றன. ஆனால் நாளுக்கு நாள் இந்த ஊழல் மட்டும் அதிகமாகிக் கொண்டே வருவதாகத்தான் தெரிகிறது.



இந்திய கால் சென்டர்கள் ஏனைய நாடுகளிலுள்ள கால் சென்டர்களை விட குறைந்த விலையில் பணிகளை முடித்து தருகின்றன. அதனால் தான் இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்வதற்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதனாலேயே இந்த தொழில்நுடபத்தின் தரம் குறைந்த வருவதும் ஒரு மறுக்க முடியாத உண்மை. தகவல் பாதுகாப்பை ஒதுக்கி வைத்துவிட்டு பணியை முடித்துக் கொடுப்பதில் எந்த தரமும் இருக்காது. மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால் இந்தியாவின் வருவாயிலும் அவுட்சோர்சிங்கிலும் பெரிய பின்னடைவு ஏற்படும். செலவை குறைத்து இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்தால் அதற்கு கைமேல் பலன் தகவல் பாதுகாப்பில் கிடைப்பதும் உறுதி என சில வெளிநாட்டு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சில கால் சென்டர்களில் வருடத்திற்கு மூன்று முறையோ நான்கு முறையோ தான் தகவல் பாதுகாப்பைத் தணிக்கை செய்கிறார்கள். ஆனால் தினமும் இங்கு நடக்கும் தகவல் பரிமாற்றம் மட்டுமே பல லட்சக்கணக்கில் இருக்கும். இது ஒரு புறமென்றால், கால் சென்டர்களில் வேலை பார்க்கும் பலருக்கு அந்த தகவல்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை. பல தகவல்கள் குப்பையாகப் போடப்படுகின்றன. தகவல் பாதுகாப்பு என்பது பல நாடுகளில் சரிவர இல்லை. ஆனாலும் இந்தியாவில் இது போல நிகழ்வது அமெரிக்கா மற்றும் UKவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது ஏனென்றால் அமெரிக்காவிலிருந்தும் UKவிலிருந்தும் அவுட்சோர்சிங் செய்யப்படும் பணிகள் உள்ளூர் பணியிடங்களைக் காலி செய்து அனுப்பப்படுகின்றன. அதனால் இத்தகைய இந்திய ஊழல்களால் உள்நாட்டில் இவர்களுக்கு கண்டனங்களும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

இதுவரையில் இந்தியாவிற்கு சாதகமாக ஒரு விஷயம் மட்டும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இத்தகைய ஊழலைப் பற்றி இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டதற்கு, "அமெரிக்காவில் நடைபெறும் ஊழலை விட இந்தியாவில் நடைபெறும் ஊழல் ஒன்றும் பெரிதாக உணரப்படவில்லை மேலும் அங்கிருந்து (இந்தியாவிலிருந்து) இங்கு தகவல்கள் வந்து சேர்வதற்கு முன்னரே அத்தகவல்களில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன அதனால் நாங்கள் இதனை பொருட்படுத்தவில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.



உலக அளவில் தினமும் நிதி சம்பந்தமாக ஏதேனும் முறைகேடுகள் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் இவை நடப்பது வருத்தமளிக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறையில் மட்டும் 2004-2005ல் $5.2bn அளவிற்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன மேலும் அடுத்த நிதியாண்டில் 40% வளர்ச்சி இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 குற்றங்களில் 10 மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதாகவும் இந்தியாவின் சட்டத்திட்டங்களும் இவற்றை அழிப்பதற்கு சாதகமாக இல்லை என அதிர்ச்சி தரும் செய்திகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்திய அரசும் இதனை அவ்வளவாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் தவறுகள் என தட்டிக்கழித்து வருகிறது. இந்தியாவில் கால்சென்டர்களில் சுமார் 3,50,000 பேர் வேலை செய்கின்றனர். பல கோடி ரூபாய் பணம் புரளுகிறது. ஆனால் நம் மக்கள் கூடிய மட்டும் எதிலெல்லாம் ஊழல் செய்ய முடியுமோ அதிலெல்லாம் ஊழல் செய்து விடுகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் 70% குற்றவாளிகள் குற்றங்களுக்கு புதியவர்கள்.

ஊழல் என்பது இந்தியாவின் சாபக்கேடோ?

எனக்கென்னவோ ஷங்கருக்கு அடுத்த படத்திற்கு தேவையான ஊழல் கதைகள் கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது

படங்கள் + தகவல்கள் - நன்றி பிபிசி

2 comments:

Anonymous said...

// இதில் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் 70% குற்றவாளிகள் குற்றங்களுக்கு புதியவர்கள். //

உண்மையிலேயே வருத்தமளிக்கக் கூடிய விடயம். - முரசு

வீ. எம் said...

வேதனையான விஷயம். !
புற்றீசல் போல முளைத்துவிட்ட கால் சென்டர்களும்.. resourcing பற்றி முழுமையாக தெரியாமல், போட்டியின் காரணமாக கிடைத்தவர்களை எல்லாம் பனியமர்த்துவதும், அங்கே சேகரிக்கப்படும் தகவல்களின் முக்கியத்துவம் பனிபுரிவோருக்கு புரிய வைக்கபடாததும் இதற்கு ஒரு காரணம்..
"தி சன்"
அங்கேயும் ஒரு சன் !! :)

வீ எம்