Tuesday, June 28, 2005

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் கனவு காண்பதையோ, விருப்பங்களையோ தவிர்க்கவே பரிந்துரை செய்வேன். ஆனால் பெரியோர்கள் அதிகம் பேர் இலக்கை நிர்ணயம் செய், லட்சியத்தோடு போராடு என சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சாதனையாளர்கள் அதனால் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மைத் தூண்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்களின் லட்சியத்தை அடைய முயன்று கொண்டிருக்கையில் அவர்களின் எண்ணங்களும் விருப்பங்களும் எவ்வாறு இருந்தன என்பதே நமக்கு முக்கியம். ஒருவன் எப்பொழுது வருங்காலத்தை நினைக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதே அவன் நிகழ்காலத்தில் நிறைய இழக்க ஆரம்பித்து விடுகிறான். வருங்கால கனவுகள் எப்பொழுதும் இன்பமளிக்கக் கூடியவை அதனாலே அவற்றில் ஈடுபாடும் அதிகமாகி விடுகிறது. இது இயற்கை. ஆனால் எப்பொழுது எதையாவது ஒன்றை நினைத்து ஏங்கவோ கனவு காணவோ ஆரம்பித்து விடுகிறோமோ அப்பொழுதே அதற்கு எதிர்ப்புகளும் தடைகளும் ஆரம்பமாகி விடுகின்றன. இதைத் தான் இயலுலகு அல்லது உண்மை வாழ்க்கை எனக் கூறுகிறோம்.

நாம் நமது கனவையோ லட்சியத்தையோ அடைய தலைப்படும் பொழுது எடுக்கும் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு அர்த்தம் பெரும். அந்த அசைவுகள் நமது அடுத்த அடிகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமே தவிர அவற்றுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு எண்ணங்களும் எவ்வளவு முக்கியமோ அவற்றை நடைமுறை படுத்தும் முறைகளும் அவ்வளவு முக்கியம். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் என்றோ ஒருநாள் யாரோ ஒருவரின் எண்ணத்தில் உருவானது தான். எண்ணங்கள் தான் மெய்ப்படுகின்றன. ஆனால் நம்மை சென்றடைவது எண்ணங்களும் அவற்றின் இறுதி வடிவங்களும் தான். இடைப்பட்ட அந்த மாற்றங்கள் எதுவும் நமது கவனத்திற்கு வராமல் போய் விடுகின்றன. அந்த ஆரம்பத்திலிருந்து முடிவிற்கு செல்லும் பொழுது இடையில் நடக்கும் அந்த மாற்றங்கள் எதுவும் வெளிப்படுவதில்லை. அதனாலே உலகில் வாழும் பாதி ஜீவராசிகள் இன்னும் எண்ணங்களிலும் அவற்றை உருவகப்படுத்துவதிலுமே தமது உலக வாழ்க்கையைச் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தன் சொன்னது போல "நாம் என்ன நினைக்கிறோமோ நாம் அதுவாகவோ ஆகின்றோம். நமது இந்த உருவகம் நம்முடைய எண்ணங்களால் ஆனது. நமது எண்ணங்களால் தான் நாம் இந்த உலகை உருவகப்படுத்துகிறோம்" (we are what we think, all that we are arises from our thoughts. With our thoughts we make the world.) இதையே தான் மகாத்மா காந்தியும் "நாம் இந்த உலகில் காண தலைப்படும் மாற்றங்கள் நாமே தான்" (we are the change we wish to see in this world) எனக் கூறியிருக்கிறார். ஒருவன் தன் எண்ணங்களை உருவகப்படுத்த கற்றுக் கொண்டானேயானால் அவன் வெற்றி பெறுவது உறுதி. அவனது வெற்றி தோல்விகளையும் அவனது எண்ணங்களே உருவாக்குகின்றன. மனிதனுக்கு ஒரு கெட்ட வழக்கமுண்டு. அவனது ஆசைகளும் விருப்பங்களும் நினைத்தவுடன் நடந்தேறி விட வேண்டும். எப்பொழுது அவனுக்கு அது முடியாமல் போகிறதோ அப்பொழுது அவன் ஏமாற்றமடைகிறான். சில சமயம் ஆசைகளை நடைமுறை படுத்த அவன் சில தவறான பாதைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.

ஏன் நினைக்க தெரிந்த மனிதனுக்கு தமது எண்ணங்களுக்கு வடிவம் தர முடிவதில்லை. அவனுக்கு அதற்குண்டான வழிமுறைகளோ மறுக்கவோ மறைக்கவோ படுகின்றன. அதனாலே குழந்தை வளர்ப்பென்பது நமது சமுதாயத்தில் அதிக அக்கறை கொண்ட விஷயமாக கருதப்படுகிறது. சிறு வயது முதலே அவனுக்கு அவனது எண்ணங்களுக்கு வடிவம் தரும் வழித்தடங்களைக் கற்பிக்க முயல்கிறோம். அப்படியிருப்பினும் இயலுலகை காண அவன் அதிக தூரம் கடந்து வருகிறது. இடையில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புக்களும் அவனக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை அசைத்துப் பார்த்துவிட்டு போய்விடுகின்றன. அதனால் எப்பொழுது அவனக்கு அந்த வழிமுறைகள் தேவைப்படுகின்றனவோ அப்பொழுது அவை கிடைக்காமல் போய்விடுகிறது.

இதற்கெல்லாம் காரணமென்ன? இயலுலகு என்னும் வெளியுலகை மனிதன் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறான். அவனது எண்ணங்களும் அவனது ஆளுமையை அந்த வெளியுலகில் நிலைநிறுத்துவதிலேயே இருக்கின்றன. இதில் அவன் சுயத்தை இழந்து விடுகிறான். அல்லது அவனது உள்ளுலகு அவனுக்கு தெரியாமலும் புரியாமலும் போய் விடுகிறது. அவனது பலங்களும் பலவீனங்களும் அவனுக்கு புலப்படாமல் போய்விடுகின்றன. எப்பொழுது அவனுக்கு அவனது பலம் தெரியவில்லையோ அப்பொழுதே அவன் தமது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வழிமுறைகளை நினைக்க மறந்து விடுகிறான்.

வெளியுலகில் கவனத்தை செலுத்தாமல் கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளிலும் உள்ளுலகத்தில் கவனத்தைச் செலுத்தினால் கண்டிப்பாக நினைத்ததெல்லாம் நடக்கும்...

2 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Very Good posting !
Yesterday is history.
Tomorrow is a dream.
Today is real !
anbudan, Jayanthi Sankar

Ganesh Gopalasubramanian said...

நன்றி ஜெயந்தி சங்கர்.