Wednesday, June 29, 2005

மறக்கப்படும் பக்தி பாடல்கள்

எண்பதுகளில் என் காலையை நிறைத்த அந்த பக்திப்பாடல்கள் எண்ணிலடங்காதவை. தாத்தாவும் பாட்டியும் அன்றாடம் சேர்ந்து ரசிக்கும் நிகழ்ச்சிகள் அந்த பக்திப் பாடல்களிலிருந்து தான் ஆரம்பமாகும். மாநிலச் செய்திகள், திரை இசை என்று பின்பு அவர்களின் அந்த பட்டியல் நீளும். டி.எம்.எஸ், ஜானகி, சுசிலா, நாகூர் ஹனிஃபா, எஸ்.பி.பி, ஜேசுதாஸ் என அன்றைய தேதியில் சினிமாவில் பிரபலமாகயிருந்த அனைத்து பிண்ணனி பாடகர்களும் பாடகிகளும் பக்திப் பாடல்களிலும் கவனம் செலுத்தினர். அது மட்டுமில்லாமல் எம்.எஸ்.வி போன்ற பெரிய இசையமைப்பாளர்களுக்கும் பக்திப்பாடல்களில் நாட்டம் இருந்தது. "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்", "ஆயர்பாடி மாளிகையில்", "கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்", "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என இசையின் நீளத்தையும் அகலத்தையும் தொட்டுப் பார்த்து வந்த பக்திப் பாடல்கள் பல.

ஒருவேளை எண்பதுகளில் நான் என் இளமைப் பருவத்தில் இருந்ததனால் தான் இந்த நினைவுகள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றனவோ என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து பார்த்ததில் அது தவறென்பது எனக்குப் புரிந்தது. பாடல்களின் தரம் தான் குறைந்துள்ளது, அதுவும் பக்திப்பாடல்களின் தரம் முற்றிலுமாக மறைந்து விட்டது என்ற நிதர்சனம் மட்டுமே இறுதியில் நிலைக்கிறது. அந்த காலகட்டங்களில் அன்று உலகைக் காணும் ஒவ்வொரு கொழிக்குஞ்சின் மீதும் சூரிய கதிர்கள் பட்டதோ இல்லையோ கண்டிப்பாக நாகூர் ஹனிஃபாவும், டி.எம்.எஸ்ஸும் அவற்றின் காதுகளில் இசையால் ரீங்காரமிட்டிருப்பார்கள். ஆல் இந்தியா ரேடியோவும் ஒவ்வொரு வீட்டின் காலைப் பொழுதையும் இசையாலும் கருத்துக்களாலும் நிறைத்து வந்தது.

இன்று நிலைமை தலைகீழ். "கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா" தான் இன்றைய தேதியில் எனக்குத் தெரிந்த மிக அற்புதமான பக்திப்பாடல் எங்கே போய்கொண்டிருக்கிறோம்? வித்தாயசங்களையும் தொழில்நுட்பத்தையும் வரவேற்பது எவ்வளவு முக்கியமோ அதே சமயம் கலைகளையும் மற்ற நல்ல விஷயங்களையும் பாதுகாப்பதும் அவ்வளவு முக்கியம். இசை இன்றைய தேதியில் கலையாகப் பார்க்கப்படுவதில்லை. திரையிசையில் கவனம் செலுத்தும் எந்த இசையமைப்பாளரும் எம்.எஸ்.வி போல ஒரு "கிருஷ்ண கானத்தை" வழங்க முன்வருவதில்லை. காரணம் இசை என்பது இப்பொழுது வியாபாரமாகி விட்டது. "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்", "ஐயங்காரு வீட்டு அழகை"யும் தான் இன்றைய தேதியில் இசையமைப்பாளர்கள் விரும்புகிறார்கள். ஒரு "மருதமலை மாமணியே முருகய்யாவும்", "கணபதியே வருவாய்"யையும் இனியும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இளையராஜாவைத் தவிர்த்து மார்க்கெட்டில் இருக்கும் எந்த இசையமைப்பாளரும் கிரியேட்டிவ் ஸ்பிரிச்சுவல் இசையை வழங்க முன்வருவதாக தெரியவில்லை. அதனாலேயே இளையராஜா என்னும் ஆளுமை இன்னும் பல வீடுகளில் நிரம்பி வழிகிறது.

உலகில் எந்த வானொலியிலும் எந்த அலைவரிசையிலும் கேட்கமுடியாது இன்னிசையைப் பக்திப்பாடல்களில் வழங்கியவர்கள் தமிழர்கள். அந்த காலம் மலையேறி விட்டதாகவே தோன்றுகிறது. மக்களின் ரசனை மாறிவிட்டதோ என்ற எண்ணமும் எனக்கு வருவதுண்டு ஆனால் அது தவறென்பதையும் புரிந்து கொண்டேன். இன்னும் பல வீடுகளில் சீர்காழி கோவிந்தராஜனும், ஜேசுதாஸ்ஸும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் அதிகம் வரவேற்கப்பட்ட பக்திப்பாடல்கள் என்று பார்த்தால் எஸ்.பி.பியின் "நமச்சிவாய"வையும், சுதா ரகுனாதனின் "தியான லிங்க"த்தையும் குறிப்பிடலாம். மற்றவை எல்லாம் ஏதோ ஒரு தனிமனித முயற்சியாகவோ அல்லது தானும் மார்க்கட்டில் இருக்கிறேன் என நிரூபிப்பதற்க்காகவோ செய்யப்பட்ட முயற்சிகளாகத்தான் தெரிகின்றன. அவை வெற்றி பெறாததற்கு அவற்றின் தரமே காரணம். திறமையான இசை வல்லுநர்களிருந்தும் இது பக்திப்பாடல்களின் தரம் குறைந்த வருத்தப்படக்கூடிய விஷமே.

24 comments:

supersubra said...

நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. இன்றைய பக்தி பாடல்கள் ஏதோ அந்த காலத்தில் வானொலியில் ஒலிபரப்பபடும் சேர்ந்திசை பாடல் போல எந்த ஒரு உணர்ச்சியுமின்றி ஒலிக்கின்றது. நீங்கள் World space உபயோகிக்கலாம். சுரேஷ் வட்கர் போன்ற பிரபல பாடகர்களின் மெய் மறக்கும் பக்தி பாடல்கள் கேட்க மிகவும் இனிமை.
http://www.worldspaceasia.com/index.php
நான் upload செய்துள்ள சில பாடல்களை இங்கிருந்த்து
இறக்கி கொள்ளலாம்.
http://www.coolgoose.com/go/music?user=supersubra&go=1

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

சில புதிய பக்திப் பாடல்களின் வரிகள் நன்றாக இருந்தாலும், இசையில் கவனம் செலுத்தப்படாதனவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்றில் இழுவையிலும் இழுவை அல்லது மிகவும் வேகம். இரண்டு அதீதங்களுக்கும் இடைப்பட்டு, மனதில் பதியும் இசையுடன் ஒன்றுமில்லை. இதிலே ஏற்கென்வே வந்து பிரபலமான சினிமாப் பாடலின் ராக/தாளத்தில் வார்த்தைகளை மாற்றிப் போடும் கண்றாவி வேறே! நல்ல பக்திப் பாடல்களின் காலம் மலையேறி விட்டதோ என்று எண்ண வைக்கிறது.

G.Ragavan said...

அப்பட்டமான உண்மையிது. இன்றைக்கு நிறைய பக்திப்பாடல்கள் வெளிவருகின்றன. கடைக்குப் போனால் மத வாரியாக பல கேசட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் தரம்?

இன்றைக்கு வரைக்கும் சூலமங்கலம் பாடிய சஷ்டி கவசம் தானே எல்லார் வீட்டிலும் ஒலிக்கிறது. சுப்ரபாதம் என்றால் சுப்புலட்சுமி அம்மா பாடியதுதான். முருகன் பாடல்களா? டி.எம்.எஸ், சீர்காழி, சூலமங்கலம், பித்துக்குளி முருகதாஸ். அம்மன் பாடல்கள் என்றால் ஈசுவரி. ஐயப்பன் பாடல்கள் என்றால் வீரமணி. நாகூர் ஹனீபாவின் இஸ்லாம் பாடல்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.

காரணம் என்னவென்று யோசிக்கிறேன். அந்தப் பாடல்களைப் பாடியவர்கள் அந்தந்த தெய்வங்களின் பக்தர்களாகவே இருந்ததால் அவர்களால் பாடல்களில் உணர்ச்சியைக் கொண்டு வர முடிந்தது. இப்பொழுது வியாபாரம் தானே. மகாநதி ஷோபனாவின் முருகன் பாடல்கள் விதிவிலக்கு. அருமையாக இருக்கின்றன. எஸ்.பீ.பின் அண்ணாமலை பாடல் கேட்க நன்றாக இருந்தாலும் பக்தி உணர்வுக்கு ஒரு மாற்றுக் குறைவுதான்.

ஆனால் பிசுசீலாவின் அம்மன் பாடல்களும் முருகன் பாடல்களும் சிறப்பாகவே இருந்தன. ரட்ச ரட்ச ஜெகன் மாதாவை மறக்க முடியுமா? அந்தப் பாடலுக்கு இசையமைத்த இரட்டையர்களான சோமு-காஜா ஆகியோரில் காஜா ஒரு இஸ்லாமியர் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மதங்களைத் தாண்டிய பக்தி உணர்வு அது.

குன்னக்குடி வைத்தியநாதனின் பாடல்களும் அருமை. தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி, வைகறைப் பொழுதினில் விழித்தேன், தேன் மணக்கும் தேவன் மலை போன்ற பாடல்களில் சுசீலாவின் குரல்களில் இனித்தனவே!

கிருஷ்ணகானத்தைச் சொல்லாமல் விட முடியுமா? டி.எம்.எஸ்ஸுக்கு ஒன்று, சுசீலாவுக்கு இரண்டு, ஈசுவரிக்கு ஒன்று, ஜானகிக்கு ஒன்று, வீரமணிக்கு ஒன்று எஸ்.பீ.பிக்கு ஒன்று தனக்கு ஒன்று என மெல்லிசை மன்னர் தந்த எட்டு பாடல்களும் தமிழமுதம் அல்லவா!

பினாத்தல் சுரேஷ் said...

பொதுவாக இந்த அந்தக்காலம் Vs இந்தக்காலம் பற்றிய என் கருத்து:

அந்தக் காலம் இந்தக் காலம் என்னும் பட்டிமன்றங்களே என்னைப் பொறுத்த வரையில் தேவையற்றது. இப்போது வெளிவரும் பக்திப் பாடல்களை நம் குழந்தைகள் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சிலாகிக்கலாம். நீங்கள் குறிப்பிடும் பாடல்கள் வெளிவந்த காலத்தில் அன்றைய "பெரிசுகள்" "இதெல்லாம் என்ன பாட்டு, அந்தக் காலம் மாதிரி உண்டா" எனக் குறை கூறி இருக்கலாம்.

அந்தக் காலத்தில் வெளிவந்த அத்தனைப் பாடல்களுமா நன்றாக இருந்தன? நன்றாக இருந்த ஒரு 10% பாடல்களே இன்றும் உங்கள் நினைவில் இருக்கின்றன - மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன!

இன்று வருவதில் எது நல்லது எது கெட்டது என்பதைக் காலம் சொல்லும் - ஆனால், அதற்கு முன் இவையும் "அந்தக்காலப் பாடல்கள்" ஆகிவிடும் என்பதுதான் சோகம்!

பக்திப்பாடல்களுக்கும் இவை பொருந்தும்!

அன்பு said...

கணேஸ் உங்களுடைய கவலை எனக்குமுண்டு. உங்கள் தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு என்னென்ன பாடல்கள் ஞாபகம் வந்தனவோ அதை உங்கள் பதிவிலும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கு இப்போது நினைத்தாலும் வரிகள் ஞாபகமிருந்து பாட முடிவது, திரையிசையைவிட பக்திப்பாடல்கள்தான். கடந்த சிலவருடங்களாக நான் கேசட் வாங்கித்தேய்ந்து பின்னர் சிடி-யாகவும் வாங்கி கேட்டு ரசித்தது - மகாநதி ஷொபனாவின் - "பக்திச்சுடர்" பல நல்ல பாடல்களை திரும்பவும் பாடியிருப்பார். அருமை - ஒரு காலத்தில் அதுகேட்டால்தான் - தூக்கம்வரும்:) அந்தப் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டதுக்கு இன்னொருகாரணம் அதில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட, எனக்குப்பிடித்த தப்ளா/மிருதங்கம் - வாத்தியக்கருவியாகவும் இருக்கலாம்.

துளசி கோபால் said...

கணேஷ்,

அந்தக் காலத்திலே நாங்கெல்லாம் நல்ல தூக்கத்தில் இருக்கறப்ப சரியாத் தூக்கமே
வராத எங்க பாட்டி, 'எப்படா பொழுது விடியுமு'ன்னு காத்திருந்ததுபோல காலையிலே
ஆகாஷ்வாணியிலே போடற மங்கள இசையைச் சத்தமா வச்சு எங்களை எழுப்பிவிட்டிருவாங்க.
கோபத்தோட எழுந்தாலும், அதைத் தொடர்ந்துவர்ற சாமிப் பாட்டுக்களையெல்லாம் கேட்டுக்கிட்டேதான்
காலைநேரமே கடந்துபோகும்!!!

இப்பெல்லாம் வீட்டுலே சி.டியிலே கேக்கறொமுன்னாலும் அந்த 'அதிகாலைப் பாட்டு'ன்றது போயிருச்சு!

அன்புடன்,
துளசி.

வீ. எம் said...

நல்ல பதிவு கனேஷ்,
அப்போதெல்லாம் , திரைபாடலுக்கும், பக்திப்பாடலுக்கும் ஒரு இடைவெளி இருந்தது, மெல்ல திரைப்பட பாடல் மெட்டுக்களில் பக்தி பாடல்கள் வரதுவங்கியது, திரைப்பாடங்களும் பக்திபட பாடல்களின் மெட்டை உபயோகபடுத்தியது.. திரைபாடலுக்கும் பக்திபாடலுக்கும் கலப்பு திருமணம் நடந்தேறியது அதன் உச்சகட்டம் தான் கும்பிடபோன தெய்வம் பாடல்.. இன்னும் எப்படியெல்லாம் மாறுமோ..கடவுளுக்கே வெளிச்சம்.

இரண்டு பழமொழி உண்டு,
1. பூவோடு சேர்ந்த நாறும் மனக்கும்
2. பன்னிக்குட்டியோட சேர்ந்த கன்னுக்குட்டி

சினிமாவோடு எது சேருகிறதோ அது 2 பழமொழி வழியில் சென்றுவிடுகிறது! என்ன செய்ய !!:)
வீ எம்

Ganesh Gopalasubramanian said...

பின்னூட்டமிட்ட பெரியோர்களுக்கு நன்றி.

supersubra: நானும் சிறிது காலம் கூல்கூஸிலிருந்து இறக்கம் செய்து கேட்டு வந்தேன். இப்பொழுது விட்டுவிட்டேன். பார்ப்போம் வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் இறக்கம் செய்து கேட்கிறேன். worldspaceasia பற்றி இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

ஷ்ரேயா: // இதிலே ஏற்கென்வே வந்து பிரபலமான சினிமாப் பாடலின் ராக/தாளத்தில் வார்த்தைகளை மாற்றிப் போடும் கண்றாவி வேறே! //
ஆமா நம்ம "மல மல மல மருதமலே" கூட டப்பிங் செய்பவர்களால் "மல மல மல சபரிமல" என மாறிவிடுகிறது.

ராகவன்: //காரணம் என்னவென்று யோசிக்கிறேன். அந்தப் பாடல்களைப் பாடியவர்கள் அந்தந்த தெய்வங்களின் பக்தர்களாகவே இருந்ததால் அவர்களால் பாடல்களில் உணர்ச்சியைக் கொண்டு வர முடிந்தது// உண்மை ராகவன். நான் சொல்ல மறந்த கருத்து இது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
// மதங்களைத் தாண்டிய பக்தி உணர்வு அது. கிருஷ்ணகானத்தைச் சொல்லாமல் விட முடியுமா? //
அருமையானதொரு உள்ளுணர்வுடனும் ஐக்கியத்துடனும் கலந்த அந்த பாடல்கள் நீடித்து வாழக்கூடியவை. கிருஷ்ணகானம் அந்த காலத்து பக்திப்பாடல்களில் ஒரு மைல்கல் என்று கூறினால் மிகையாகாது.

சுரேஷ்: // அந்தக் காலத்தில் வெளிவந்த அத்தனைப் பாடல்களுமா நன்றாக இருந்தன? நன்றாக இருந்த ஒரு 10% பாடல்களே இன்றும் உங்கள் நினைவில் இருக்கின்றன - மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன! //
10% சதவிகிதமென்று ஒதுக்கி விடாதீர்கள் சுரேஷ். அவற்றின் தரம் சதவிகிதங்களைத் தாண்டியது. அந்த கால பாடல்களில் போட்டி போட்டுக் கொண்டு கருத்துக்களும் இசையும் வார்த்தைகளும் இருக்கும். இன்றைய நிலைமையே வேறு. அனைத்துமே இப்பொழுது மிஸ்ஸிங்.
// அன்றைய "பெரிசுகள்" "இதெல்லாம் என்ன பாட்டு, அந்தக் காலம் மாதிரி உண்டா" //
நிச்சயமாக பக்திப்பாடல்களில் இந்த கருத்தாக்கம் அந்த கால பெரியவர்களிடத்தில் இருந்ததில்லை. எந்த பெரியவரும் "சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு" பாடலையும் "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாடல்களை வெளி வந்த காலத்தில் வெறுத்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய பாடல்கள் கேட்கப்படுவதேயில்லை அந்த அளவிற்கு கணக்கிலடங்காமலும் தரம் தாழ்ந்தும் இருக்கின்றன

அன்பு : // "பக்திச்சுடர்" பல நல்ல பாடல்களை திரும்பவும் பாடியிருப்பார் //
நானும் கேட்டிருக்கிறேன் அன்பு... என்னுடைய ஃபேவரிட் "சொல்ல சொல்ல இனிக்குதடா"
உங்களுக்குப் பிடித்த வாத்தியங்கள் தப்ளா/மிருதங்கம். எனக்கு வயலின்\புல்லாங்குழல். (ஏற்கனவே கண்டுபிடிச்சிருப்பீங்களே. நான் இளையராஜா சார் ரசிகன் சிம்பனியில் திருவாசகம் பற்றி யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் இந்த பதிவு எழுத வேண்டுமென்ற ஆவல் பிறந்தது)

துளசி //அதைத் தொடர்ந்துவர்ற சாமிப் பாட்டுக்களையெல்லாம் கேட்டுக்கிட்டேதான் காலைநேரமே கடந்துபோகும் //
இந்த அனுபவம் எனக்குமுண்டு. ஒருமுறை என் தாத்தா அதிகாலையில் விரும்பிய பாடல் ஒன்று ஒலிபரப்படும்பொழுது வாசலில் பால்க்காரன் மணியடிக்க அவனுக்கு வாசலிலேயே ஒரு கச்சேரி நடத்திக்காட்டினார். இன்றளவும் ஞாபகமிருக்கும் விஷயங்கள் அவை. அந்த பாடல் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வாசித்த பாடலென்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் பக்திப்பாடல்கள் கேட்டுத்தான் கண்விழித்ததாக ஞாபகம்.

வீ.எம் // சினிமாவோடு எது சேருகிறதோ அது 2 பழமொழி வழியில் சென்றுவிடுகிறது! என்ன செய்ய !!:) //
உங்கள் நகைச்சுவையை எப்பொழுது நிறுத்துவதாக உத்தேசம். அது சரி உங்கள் முழுப்பெயரைக் கேட்க வேண்டுமென்று நினைத்து ஒவ்வொரு முறையும் மறந்து விடுகிறேன். தயவு செய்து சொல்லி விடுங்கள். எனக்கு அது வரையில் தலையில் யாராவது தம்புரா வாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

அல்வாசிட்டி அண்ணா // இப்ப எல்லாம் நீ மட்டும் தனியா கேக்கவேண்டியதுதான்.//
அண்ணன்மார்கள் நீங்களிருக்கையில் எனக்கென்ன கவலை. எனக்க்ய் வேண்டியதைத் தரமாட்டீர்களா என்ன?
// நம்மளால முடிஞ்சது நாமளாவது வீட்டுக்குள்ள கேப்போம். //
இல்லை அண்ணா அலுவலகத்தில் நான் அடிக்கடி கேட்பது பக்திப் பாடல்கள் தான்...பல சமயம் அந்த கால பக்திப்பாடல்கள் சில சமயம் இந்த கால "பக்தி" பாடல்கள்.

தாரா said...

கணேஷ்,

நீங்க குறிப்பிட்டிருக்கிற அத்தனை பக்தி பாடல்களையும், நான் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். எங்க வீட்டிற்கு சற்று அருகில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. மார்கழி மாதமானால் போதும், அந்தக் கோவிலில் ஒலி பெருக்கி வைத்து இந்த பக்திப் பாடல்களை போட்டுவிட்டுவிடுவார்கள். அப்போதுதான் எங்களுக்கு செமெஸ்டர் பரீட்சை நடக்கும் நேரம். படிக்க முடியாமல் தவித்திருக்கிறேன். பல நாட்கள் இந்தப் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்ததால், அவை இன்னும் எனக்கு மறக்கவில்லை.

தாரா.

Ganesh Gopalasubramanian said...

தாரா !! பக்திப்பாடல்கள் என்றாலே மார்கழி மாதமும் ஞாபகம் வந்து விடுகிறது. நீங்கள் சொல்லும் அனுபவம் எனக்குமுண்டு.

பின்னூட்டத்திற்கு நன்றி

Vijayakumar said...

அட கணேஷ், பதிவு போட்டு பக்தி பாட்டை ஞாபகப்படுத்துனீங்க. பாளையங்கோட்டையில காலங்கார்த்தாலே எந்திருச்சா சுத்தி இருக்கிற ராமர் கோவில் பெருமாள் கோவிலேயிருந்து பாட்டு கேட்டே தான் எழுந்திருக்கிறது.

அப்புறம் கோவில்பட்டி நாராயணசாமி தியேட்டர்ல 8:30 மலையாள படம் பார்க்க போகும்போது, சீன் படம்னாலும் "கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலை கேட்டு 4 படி பால் கறக்குது ராமாயி"ன்னு சாமி பாட்டு போட்டு தான் "நேத்து ராத்திரி யம்மா" போடுவாங்க.

இப்படி பல பக்தி பாட்டு ஞாபகம் வருதே... அய்யோ...

G.Ragavan said...

விஜய், கோயில்பட்டியில் என்ன செய்தீர்கள். நானும் நடுவில் கொஞ்ச நாள் கோவில்பட்டியில் இருந்தேன். நீங்கள் சொல்லும் நாராயணசாமி தியேட்டரும் தெரியும். ராமசாமி தியேட்டரும் தெரியும். ஆனால் அந்த ஊர்ப்பக்கம் போய் ஆண்டுகள் பல ஆகின்றன. ஆகையால் இப்போதைய நிலை எனக்குத் தெரியாது.

Ganesh Gopalasubramanian said...
This comment has been removed by a blog administrator.
Ganesh Gopalasubramanian said...

அல்வாசிட்டி அண்ணா
அது "கோகுலத்தில் பசுக்கள்" அல்ல "குருவாயூருக்கு வாருங்கள்". இந்த பாடலில் "நாராயண நாராயண" என சரணத்தில் வரும். தியேட்டர் பெயரும் நாராயணசாமி அதனால் அந்த பாடல் ஒலிபரப்பப்பட்டது.

ஆனா நான் நீங்க சொல்வது போல "நேத்து ராத்திரி யம்மா" எல்லாம் பார்தது கிடையாது. சின்ன பையன்னு சொல்லிட்டு தனியா படம் பார்க்கவே விட மாட்டாங்க... ம்ம்ம் எல்லாம் நல்லதுக்குத்தான்.....

ராகவன் // விஜய், கோயில்பட்டியில் என்ன செய்தீர்கள். //
அவர் எனக்கு சீனியர். படித்தது எல்லாம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில்.

//இப்போதைய நிலை எனக்குத் தெரியாது.//
நாராயணசாமி தியேட்டர் விற்கப்பட்டு இப்பொழுது சத்தியபாமாdts ஆகிவிட்டது. அவர் சொன்ன "குருவாயூருக்கு வாருங்கள்" போய் "கும்பிடப் போன தெய்வம்" ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Vijayakumar said...

//அல்வாசிட்டி அண்ணா
அது "கோகுலத்தில் பசுக்கள்" அல்ல "குருவாயூருக்கு வாருங்கள்". இந்த பாடலில் "நாராயண நாராயண" என சரணத்தில் வரும். தியேட்டர் பெயரும் நாராயணசாமி அதனால் அந்த பாடல் ஒலிபரப்பப்பட்டது//

இத்தோ பார்ற கரெக்டா எடுத்து உட்றாரு. வயசாச்சி போச்சுல தம்பி. ஞாபக மறதி ஜாஸ்தியா போயிடுச்சுப்பா.

//விஜய், கோயில்பட்டியில் என்ன செய்தீர்கள்.//

ராகவன்,

கணேஷ் தம்பியே சொல்லிட்டாரு. நேஷனல் இன்ஞ்சினியரிங் காலேஜ்-ல தான் குப்பை கொட்டுனோம்.(ரமணா-ல வர்ற நேஷனல் காலேஜ் இல்ல)

ராமசாமி, நாராயணசாமி தியேட்டருக்கு நடுவில மார்க்கெட்டுக்கு போற சந்துல அந்த மூத்திர சந்துக்கு அடுத்த லாட்ஜ்லேயும் அதுக்கு பக்கத்தில் இருந்த ரூம்களிலும் தான் நம்ம அல்வாசிட்டி நண்பர்கள் சம்மியும், சங்கரும்,நானும் காலம் தள்ளினோம்.

பார்த்தீங்களா.. நம்ம ஜீனியர் பதிவுல என்ன போடு போடுறாருன்னு... எல்லாம் ராமசாமியும், நாராயணசாமியும் தந்த 8:30 மலையாள படம் தான் காரணமுன்னு நினைக்கிறேன். ராகவன் நீங்க என்ன பண்ணீங்க.

G.Ragavan said...

என்னுடைய சகோதரி படித்தது அதே கல்லூரியில்தான். அப்பொழுது என் தந்தையார் கோயில்பட்டியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி என்றாலும் சென்னைக்குக் குடி பெயர்ந்தவர்கள். இப்பொழுது எங்கள் சொந்தக் காரர்கள்தான் கோயில்பட்டியில் இருக்கிறார்கள். அடிக்கடி ஊர் மாறும் பணியில் தந்தையார் இருந்ததால் தமிழ் நாடு முழுவதும் சுற்றி வந்த வாய்ப்பு கிடைத்தது.

G.Ragavan said...

நான் சொல்லும் காலம் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு.

வீ. எம் said...

என்ன கனேஷ் நம்ம வலைப்பக்கம் கானோம்???
அப்புறம் நான் அனுப்பிய mail வந்ததா??

வீ எம்

jeevagv said...

கணேஷ்,
தேசம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மழை மேக வண்ணா' பாடலைக் கேட்கவில்லையா?

Ramya Nageswaran said...

கணேஷ்,

இது ஒரு natural evolution process. நாம் செய்த விஷயங்களை நம் குழந்தைகள் செய்ய மாட்டார்கள் அல்லது வேறு விதத்தில் செய்வார்கள். 'அந்த காலத்திலே" என்று கேட்ட காலம் போய்விட்டது. இப்பொழுது நானும் அதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன் :-) வயதாகி விட்டது என்பதின் ஒரு அறிகுறி!

விஷ்வ விநாயகா கேட்டிருக்கிறீர்களா?

Ganesh Gopalasubramanian said...

நன்றி ஜீவா சார் & ரம்யா மேடம்

// தேசம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மழை மேக வண்ணா' பாடலைக் கேட்கவில்லையா? //
ஜீவா சார் கேட்டிருக்கிறேன்... நன்றாக இருக்கிறது....இந்தியில் கேட்பத்ற்கு இன்னமும் நன்றாக இருக்கிறது. ஆனால் பக்திப்பாடலுக்கு உண்டான அந்த டச் கொஞ்சம் மிஸ்ஸிங்

// இது ஒரு natural evolution process. நாம் செய்த விஷயங்களை நம் குழந்தைகள் செய்ய மாட்டார்கள் அல்லது வேறு விதத்தில் செய்வார்கள். 'அந்த காலத்திலே" என்று கேட்ட காலம் போய்விட்டது. இப்பொழுது நானும் அதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன் :-) வயதாகி விட்டது என்பதின் ஒரு அறிகுறி! //
ரம்யா மேடம் நீங்கள் சொல்வது சரி தான். கண்டிப்பாக நிகழக்கூடிய ஒன்று.
நான் சொல்ல வந்ததெல்லாம் இது தான் 80களில் வெளிவந்த பக்திப்பாடல்களை அந்த கால கட்ட பெரியவர்களும் விரும்பி கேட்டனர், அந்த நிலைமை இன்றைய பக்திப்பாடல்களுக்கு இல்லை என்பதை மட்டுமே. இதற்கு தரத்தைத் தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்.

G.Ragavan said...

மழை மேக வண்ணாவும் சிறப்பான பாடலே. இந்தப் பாடல் தரமானதுதான். பழைய பாடல்களின் தரத்தோடு ஒத்தது. ஆனால் அத்தி பூத்தாற் போல். அவ்வளவே. விஸ்வநாதனைக் கேட்டவர்கள், இளையராஜாவுக்குத் தாவி அங்கிருந்து ரகுமானுக்கு வந்து அதையும் தாண்டிப் போகின்றார்கள். ஆனால் இன்றைக்கும் சூலமங்கலமும் எம்.எஸ்ஸும் டி.எம்.எஸ் சீர்காழி, ஈசுவரி ஆகியோர்தான் பெரும்பாலும் பக்திப் பணி செய்கிறார்கள். புதியவர்களின் பங்களிப்புகளின் தரம் பொதுவாகவே குறைந்திருக்கிறது. அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு ஆங்காங்கே. இதற்கும் வயதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

G.Ragavan said...

மூர்த்தி அந்தப் பதிவில் பெயர் உங்களுடையதாக இருந்தாலும் கிளிக்கினால் அல்வாசிட்டி விஜயின் பக்கத்திற்குப் போகிறது.

Ganesh Gopalasubramanian said...

நன்றி மூர்த்தி ராகவன்.

// நள்ளிரவு ஒருமணி, இரண்டு மணிக்கு ஸ்டீரியோ சவுண்ட் எஃபக்டுடன் கூடிய செட்டில் பக்திப் பாடல்களும் தூக்கம் வந்தால் கானாப் பாடல்களும் போட்டு புத்தகம் படித்து இருக்கிறேன். //

அது சரி எத்தனை பேர்கிட்ட இதுக்காக திட்டு வாங்கினீங்கன்னு சொல்லவே இல்லை. :-))

// இதற்கும் வயதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. //
100% உண்மை

// மூர்த்தி அந்தப் பதிவில் பெயர் உங்களுடையதாக இருந்தாலும் கிளிக்கினால் அல்வாசிட்டி விஜயின் பக்கத்திற்குப் போகிறது. //
அந்த பின்னூட்டத்தை நீக்காயாகி விட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன்