Wednesday, July 13, 2005

திகார் சிறைச்சாலை - ஒரு பார்வை

கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்ட சிறைச்சாலை. 10 கைதிகள் இங்கே இருந்து தப்பித்திருக்கின்றனர். மொத்தமாக 13 கைதிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதில் 3 பேர் பிடிபட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திகார் சிறைச்சாலையில் நண்பர் ஒருவர் வேலை பார்ப்பதாலும் நான் பணிபுரியும் இடத்திலிருந்து 1 மணி நேர பயணத்தில் அந்த சிறைச்சாலையை அடைந்து விடலாம் என்பதாலும் அங்கு செல்லும் ஆவல் ஏற்பட்டது. நடந்ததை எப்படியும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும், வலைப்பூவிற்கு இன்னொரு பதிவாயிற்று என்ற ஆசையும் என்னை அங்கு அழைத்துச் சென்றன. நண்பரிடம் கைபேசியில் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு நானும் என்னுடன் வசிக்கும் நான்கு சகோதரர்களும் திகார் சிறைச்சாலைக்குப் பயணப்பட்டோம். என்னவோ உலக அதிசயம் ஒன்றை பார்க்கப் போவது போல் போகிற வழியெல்லாம் முதல் முறையாக சிறைச்சாலைக்குப் போகிறேன் என்று என்னை நானே விளம்பரப்படுத்திக் கொண்டே சென்றேன்.

அங்கு சென்றதும் நிலைமை தலைகீழ் கப்சிப். சிறைச்சாலை நண்பர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவருடைய பணி நேரம் இரவு 7 மணிக்கு தான் ஆரம்பமாகிறது. நாங்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே அங்கு சென்று விட்டோம். அதனால் முதலில் சிறைச்சாலையின் வரலாறுகளையும் சாதனைகளையும் கேட்கலானோம்.

திகார் சிறைச்சாலை ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. 1958 முன்பு வரை டெல்லி கேட் அருகே சின்ன சிறைச்சாலையாக இயங்கி வந்திருக்கிறது. பின்பு இந்த திகார் என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. முதலில் பஞ்சாப் அரசு தான் திகார் சிறைச்சாலையை நிர்வகித்து வந்திருக்கிறது. பின்பு 1966ல் டெல்லி அரசு நிர்வாகத்தை ஏற்றிருக்கிறது. அங்கிருந்த மத்திய சிறை மூன்றாக பிரிக்கப்பட்டு 1975 மத்திய சிறை 2 எனவும் மத்திய சிறை 3 எனவும் மாற்றப்பட்டுள்ளது. 1978ல் மத்திய சிறை 4 கட்டப்பட்டுள்ளது. 1996 மார்ச்ல் மத்திய சிறை 5 கட்டப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு மத்திய சிறை 6 கட்டப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையைப் போலவே சிறையின் மக்கள் தொகையும் அதிகரித்து வந்துள்ளது. இதில் சிறை எண் 5, 16 முதல் 21 வயது வரம்பிலிருக்கும் கைதிகளுக்காக கட்டப்பட்டது. சிறை எண் 6, மகளிர் ஸ்பெஷல். சுமார் 1800 பெண் கைதிகள் உட்பட 15,000 கைதிகள் இங்கிருக்கிறார்களாம். வெளிநாட்டவர் சுமார் 500 பேர் இருக்கிறார்களாம்.

1982 வரை சிறையின் அனைத்து நிர்வாகங்களையும் வட இந்தியர்கள் தான் கவனித்து வந்திருக்கின்றனர். வழக்கம் போல ஊழல் தலை விரித்தாடியிருக்கிறது. (யோவ் ! என்னையா சொல்ற ஊழல் செய்றவங்கள பிடிச்சுப் போடற இடத்தில என்னையா ஊழல்னு? நீங்க கேட்கிறது புரியுது) வெளிநாட்டவர் அதிகம் இடம் பிடித்திருப்பதாலும், யோகா, தையல் பயிற்சி அப்படி இப்படின்னு நல்ல விஷயம் நடக்கிறதா படம் போடுவதாலும் இந்த சிறைச்சாலைக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உதவித் தொகை ஏராளம். அப்படி இப்படியென்று கண்காணிப்பாளர் வீடுகளாகவும் கார்களாகவும் மாறியது போக எப்படியும் ஒரு கைதிக்கு சுமார் 100 ரூபாய் அளவிற்கு மாத வருமானம் உண்டாம். ஆனால் 1982ல் இந்ததொகை கைதி ஒருவருக்கு 60ரூபாய் வீதம் குறைந்திருக்கிறது. உதவித்தொகை வீடாக மாறுவதற்கு பதிலாக மாளிகையாக மாற ஆரம்பித்திருக்கிறது. (தமிழ்நாட்டு போலீஸ் கவனிக்க: நீங்கள் டி.விக்கும் ஸ்கூட்டருக்கும் அடி போட்டுக்கொண்டிருக்க திகார்ல வீடும் காரும் வாங்கிட்டிருக்காங்க...). இதன் விளைவாக இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை என்று பெயரெடுத்த தமிழக காவல் துறை திகாரில் கால் பதித்திருக்கிறது. (சிறந்த காவல் துறையா? ஆமா நம்மாளுங்க டிவி தான வாங்குவாங்க....).

தமிழக காவலர்கள் பொதுவாகவே ரொம்ப கடுமையானவர்கள்னு பெயரெடுத்தவர்கள். இவர்களின் கவனிப்பு பிடித்து போயிருக்கிறது. வடநாட்டவன் காலில் தான் அடிப்பானாம். நம்மாளுங்க ஸ்ட்ரெய்ட்டா தலையில தான் அடிப்பாங்களாம். அதுமட்டுமில்லாமல் சிறை வருமானமும் கொஞ்சமாக களவாடப்பட்டிருக்கிறது. (கவனிக்க ஒரு காரின் மதிப்பு 3.5 லட்சம் ரூபாய் ஒரு உயர்ரக டிவியின் மதிப்பு 20ஆயிரம் ரூபாய்). அதனால் இன்று முழுவதுமாக சிறையின் கீழ்மட்டம் தமிழக காவலர்களால் தான் நிர்வகிக்கப்படுகிறது. இதில் சில வேலைகளுக்கு மட்டும் வடநாட்டவர்கள் பயன் படுத்தப்படுகிறார்கள். கைதிகளை சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் கோர்ட்டிற்கு அழைத்து வருவதும் வடநாட்டவர்கள் தான். அப்படி அழைத்து வந்த இடத்தில் தான் 13 பேர் தப்பித்திருக்கின்றனர். அழைத்து வந்ததுடன் வேலை முடிந்ததென்ற நினைப்பு சீட்டாட்டத்தில் கவனம் செலுத்த வைத்திருக்கிறது. விளைவு 10 பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்.

திகார் சிறைச்சாலை பொதுவாகவே மிகுந்த பாதுகாப்பு மிக்கது. சிறையிலிருக்கும் பொழுது தப்பிப்பது மிகவும் கடினம். அப்படி தப்பிக்க நினைப்பவர்கள் மூன்று பெரும் சுவர்களை ஏறி குதிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நம்ம தமிழக காவலர்களை வேற சமாளிக்க வேண்டும். இது நடக்கக்கூடிய காரியமில்லை. ஆனால் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டால் ஒரே ஒரு சுவரை தான் தாண்ட வேண்டும். மேலும் அந்த சுவரருகே ஒரு மரமும் இருக்கிறது. அதனால் எளிதாக தப்பித்திருக்கின்றனர். தப்பியோடிய 13 பேரில் 3 பேர் என்னை மாதிரி பேக்குன்னு நினைக்கிறேன். இந்த 3 பேரும் நேராக சிறை கேம்ப்பிற்க்குள் ஓடியிருக்கின்றனர். அங்கிருப்பதோ நமது தமிழக காவலர்கள் எப்படி விடுவார்கள்? இது தான் நடந்த கதை.

அங்கு சென்ற இடத்தில் கொஞ்சம் நெகிழ்வான சம்பவங்களும் நடந்தேறின. சுமார் 150 காவலர்களுக்கு டார்மிட்டரி எனப்படும் வரிசையான படுக்கைகள் தான் வழங்கப்பட்டுள்ளன. ஓரே நீள அறையில் 150 பேர் தங்கி வருகின்றனர். 150 பேருக்கு 20 குளியலறைகள் ஒரு டிவி. சுகாதரம் படு மோசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் இவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உண்மை நெருடுகிறது. கீழ்மட்டத்திலிருக்கும் இவர்களிடத்தில் பணம் புரளுவதில்லை. உழைத்தாக வேண்டிய கட்டாயம் இவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதில் மணமானவர்களும் இருக்கின்றனர். 8 மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று வருவார்களாம். இது ஒருபுறமென்றால் இவர்களின் பணி நேரம் சிஃப்ட் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் 3 மணி நேரம் காவல் காக்க வேண்டும் பின்பு 6 மணி நேரம் ஓய்வு. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கும். இந்த முறையினால் ஒரு காவலர் தொடர்ச்சியாக 4 மணி நேரம் தான் தூங்க முடிகிறது. இந்த லட்சணத்தில் ஒரு 10 பேர் தப்பித்தால் என்ன தூங்கிட்டிருந்தீங்களான்னு மேல் இடத்திலிருந்து கேள்விக் கணைகள். காவலர்களின் இருப்பிடமும் கிட்டதட்ட ஒரு சிறை போல் தான் இருக்கிறது. என்ன இளையராஜாவையும் எஸ்.பி.பியையும் கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அங்கேயும் "வானுயர்ந்த சோலையிலேவும்", "என்ன சத்தம் இந்த நேரமும்" ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

என்னுடன் வந்த நண்பர் கூறிய சில விஷயங்கள் எனக்கு வியப்பளித்தன. இங்கு கைதிகளாக வருபவர்களில் 20% பேர் சோம்பேறிகள். திகார் சிறையில் நம்ம தமிழ் சினிமாவில் காட்டுவது போல கல்குவாரிகளோ மரங்களோ கிடையாது. இதனால் கைதிகளுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை. டெல்லியில் குளிர்காலம் மிக மோசமானது. 5 டிகிரி வரை குறையும். அதனால் குளிர் காலத்தில் சிறையில் வழங்கப்படும் உடுப்புக்களுக்காகவும் உணவிற்க்காகவும் இங்கு வரும் கைதிகள் ஏராளம். இதில் கூத்து என்னவென்றால் அப்பா சிறை எண் 3லும் அம்மா சிறை எண் 6லும் மகன் சிறை எண் 5லும் இருக்கும் சம்பவங்களும் நடந்துள்ளதாம். இவர்கள் வாரம் இருமுறை சந்தித்துக் கொள்வார்களாம். இது இவர்களின் குளிர்கால கூட்டத்தொடராம். யோகாசனம், பயிற்சி வகுப்புகள், தியான வகுப்புகள் என இந்த சிறை கிட்டதட்ட ஒரு ஆசிரமம் மாதிரி இருக்குமாம். 30 கைதிகளுக்கு ஒரு டிவியும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் குளிர்காலத்தில் ஒரு மூன்று மாதத்தை செலவில்லாமல் சுகமாக இவர்கள் கழித்து வருகின்றனர்.

இந்த சிறைச்சாலை விசிட் மூலம் எனக்கு சில விஷயங்கள் தெளிவாகின.
* சமுதாயத்தில் பரவலாக காணப்படும் தென்னாட்டவன் வடநாட்டவன் என்ற பிரிவினை அங்கும் காணப்படுகிறது. (காவலர்கள் & கைதிகள் உட்பட)
* ஊழல் எனப்படுவது அதை தடுக்க எடுக்கும் முயற்சிகளை பெரிதும் பாதித்திருக்கிறது.
* தமிழக காவலர்கள் ஏனைய மாநில காவலர்களை விட 80% சிறந்தவர்கள் (சிலர் ஜெயலட்சுமிகளைத் தவிர்க்காதலால் மீதமிருக்கும் 20% வழங்கமுடியவில்லை).

இந்த பதிவை என் சிறைச்சாலை நண்பர் படிக்காமலிருக்க வேண்டும் படித்து விட்டாரென்றால் பிறகு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி கைக்கணிணியுடன் திகாரிலிருந்து தான் வலைப்பதிவிட முடியும். மொத்தத்தில் திகார் சிறைச்சாலைக்கு செல்வதென்றால் கைதியாகத்தான் செல்ல வேண்டும் காவலராக சென்றால் ஒரு கைதி போல தான் வாழ வேண்டியிருக்கும்.

11 comments:

வீ. எம் said...

//இது இவர்களின் குளிர்கால கூட்டத்தொடராம். யோகாசனம், பயிற்சி வகுப்புகள், தியான வகுப்புகள் என இந்த சிறை கிட்டதட்ட ஒரு ஆசிரமம் மாதிரி இருக்குமாம்//

சரி, ஆசிரமத்துக்கும், சிறை எப்பவும் லின்க் இருக்கும் போல!! ஆசிரமத்தில இருக்கவங்க கடைசில சிறை போவதும்..சிறைல இருக்கவங்க அப்பப்ப அவசர தேவைக்கு ஆசிரமம் வருவதும்..இதெல்லாம் சகஜம் போல..

அப்புறம் கனேஷ்.. இது நம்ம குழலி போட்டாரே "ப்ரேமானந்தாவுடன் சிறையில் ஒரு சந்திப்பு".. அது மாதிரி ஏதாச்சும்?????????/

வீ எம்

Ganesh Gopalasubramanian said...

வீ.எம்
// சரி, ஆசிரமத்துக்கும், சிறை எப்பவும் லின்க் இருக்கும் போல!! ஆசிரமத்தில இருக்கவங்க கடைசில சிறை போவதும்..சிறைல இருக்கவங்க அப்பப்ப அவசர தேவைக்கு ஆசிரமம் வருவதும்..இதெல்லாம் சகஜம் போல..

அப்புறம் கனேஷ்.. இது நம்ம குழலி போட்டாரே "ப்ரேமானந்தாவுடன் சிறையில் ஒரு சந்திப்பு".. அது மாதிரி ஏதாச்சும்?????????//

இன்னும் அந்த அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளாகல வீ.எம்...

Anonymous said...

கனேஷ் , நல்ல பார்வை.

Ganesh Gopalasubramanian said...

நன்றி பரணீ

contivity said...

மகாநதி திரைப்படம் வந்த புதிதில் சிறை பற்றிய திகில் உணர்வு இருந்தது.. இந்தப் பதிவைப் படித்தால் அப்படியே எதிர் மறையாக உள்ளது.. நல்ல பதிவு கணேஷ்.. நன்றி..

enRenRum-anbudan.BALA said...

விளக்கமான (சிறைச்சாலை பற்றி இருந்தாலும் கூட:)) நல்லதொரு பதிவு தந்ததற்கு பாராட்டுக்கள், கணேஷ் !!!

தகடூர் கோபி(Gopi) said...

என்ன கணேஷ்.. சந்நியாசம் வாங்கிட்டு சாமியாரா ஆகப் போறீங்க போல..

(பின்ன திடீர்னு சிறைச்சாலை பத்தியெல்லாம் எழுதினா வேற என்ன நெனக்கறது?)

Vaa.Manikandan said...

இன்னாபா ராசு!
ஆள காணோம்?

Suresh said...

Thanks for the article Ganesh...

Ganesh said...

Ganesh
Thanks for visiting my site
First time here, excellent blog :)
I used to write in my tamil blog kkirukan.blogspot.com but for now have stopped it and posting only in english blog.
Anyway keep visiting.

Adaengappa !! said...

Nice interesting post !!

Neenga kovil patti-ya?? Join da club !!