பட்டம் விடறது என்பது எனக்கு ஒரு நெடுநாளைய கனவு. மிக உயரத்தில் பறக்கும் வண்ண வண்ண பட்டங்கள் வானத்தில் ஒரு கலர் காக்கையைப் போல தெரியும். சின்ன வயதில் பட்டங்களையும், பட்டம் விடுபவரையும் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் பட்டம் விடும் 'தொழில்நுட்ப' அறிவை அந்த வயதில் பெற முனைந்ததில்லை. பத்தாம் வகுப்பு வந்ததுமே எல்லோருக்கும் வருவது போல எனக்கும் "பட்டக்" கனவு வந்து விட்டது. பிறகென்ன லேட்டஸ்ட் பட்டக்கனவில் அந்த காகித தொழில்நுட்ப தேடல் முற்றிலுமாக மறந்துவிட்டது. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் பட்டங்கள் பிரபலம். வட இந்தியாவில் (டெல்லி அருகே நொய்டா) வேலை கிடைத்ததனாலோ என்னவோ மீண்டும் அந்த தேடல் ஆட்கொண்டது. எனினும் வேலை கிடைத்து இரண்டு வருமாகியும் நேற்று வரை அந்த முயற்சியில் ஈடுபடாமலே இருந்தேன். சுதந்திர தினத்தன்று பட்டம் விடுவதென்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வழக்கம். பழைய பழக்கமாக இருந்தாலும் இப்பொழுதெல்லாம் வட இந்தியாவில் காற்றடி காலங்களில் பட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் எனக்கு ஒரு தெம்பும் நம்பிக்கையும் பிறந்தது. மேலும் இந்த சீஸனில் நமக்கு மேலும் ஒரு நன்மையும் இருக்கிறது, பட்டங்கள் செய்யும் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுவதில்லை ஏனெனில் அவை ரெடிமேடாக இங்கு கிடைக்கின்றன.
சரி முயற்சி திருவினையாக்கும் என நினைத்துக்கொண்டே ஒரு ஐந்து பட்டங்களும் இரண்டு நூல்கண்டுகளையும் ஞாயிறன்றே வாங்கிக் கொண்டேன். முதல் முறையாகையால் ஐந்து பட்டங்கள் வாங்கினேன். சின்ன சின்ன பொடுசுகளே விடுது நாம விடறதுக்கென்ன என ஒருவித செருக்கும் கூடவே இருந்தது. மாலை நான்கு மணியளவில் எங்கள் (நானும் என்னுடன் வசிக்கும் நண்பர்களும்) பட்டப் போராட்டம் துவங்கியது. பட்டத்தில் எங்கெங்கு நூல் கோர்க்க வேண்டும் எவ்வாறு முடிச்சிட வேண்டும் என்பது தெரியாமலேயே முழித்துக்கொண்டிருந்தோம். மாடியில் வைத்து ஆராய்ச்சி செய்ததன் பலன் எங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகியது. பக்கத்து வீட்டுக்காரர் பட்டப்படிப்பிலும் மனிதவியலிலும் Phd வாங்கியிருக்க வேண்டும். எங்கள் பிரச்சனையைப் புரிந்து கொண்டவராக எங்களுக்கு உதவ முன்வந்தார். மாடி விட்டு மாடி தாவி வந்து (குரங்கியலிலும் Phd முடித்திருப்பார் போல) நாங்கள் முடிச்சிட்டு வைத்திருந்த பட்டத்தை வாங்கி பார்த்தார். பார்த்ததும் ஒரு சிரிப்பு சிரித்தாரே அதிலேயே எங்களுக்கும் அவருக்கும் தெரிந்து விட்டது எங்களின் பண் "பட்ட" அறிவு. பின்னர் எங்களின் முடிச்சுக்களை வெட்டியெறிந்து அவரது கைத்திறனைக் காட்ட ஆரம்பித்தார். முதல் பட்டம் ரெடி.
சரி எப்படியும் LIC பில்டிங் உயரத்திற்க்காவது பட்டம் விட்டுவிட வேண்டும் என்ற தீராத ஆவலில் வேகமாக விளையாட்டை ஆரம்பித்தோம். பட்டம் சும்மா நாலு சுற்றுக்கள் காற்றில் சுற்றி எங்கள் வாட்டர் டேங்க் உயரத்திற்கு பறந்து விட்டு பிறந்த இடத்திற்கே திரும்பி வந்து விழுந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் சிரிப்பு இப்பொழுது கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது. வந்தார் நூலை ரெண்டு சுண்டு சுண்டினார் ஆட்டினார் இழுத்தார் பட்டம் பறக்க ஆரம்பித்தது. முதன் முறையாக எங்கள் தொழில்நுட்பம் வெற்றி பெற்றதில் எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால் எங்கள் முயற்சியில் அது நடைபெறவில்லை என்பது ஒரு சிறு குறையாகவே பட்டது. அதனால் ஒரு திமிருடன் அவர் கையிலிருந்த நூலை வாங்கி நான் ரெண்டு சுண்டு சுண்டினேன். பட்டத்திற்கு திமிர் பிடித்தவர்களைப் பிடிக்காது போலும் உடனே அது கீழே இறங்க ஆரம்பித்தது. திமிர் இருந்தாலும் பட்ட அறிவு இல்லாமலிருந்தாலும் முயற்சிகளில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம் என்பது அப்பொழுது தெளிவாக புரிந்தது. மீண்டும் மிஷன் பக்கத்து மாடிக்காரர் கைக்கு மாறியது. மீண்டும் அவர் அவரது ஆளுமையை நிலைநாட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இந்த முறை கொஞ்சம் தெளிவாக அவரது செயல்திறனை கவனித்தேன். அவரும் எங்கள் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவராக எங்களிடம் நூலை ஒப்படைத்தார். இந்த முறை சிறிது நேரம் என்னால் தாக்கு பிடிக்க முடிந்தது.
இரண்டு நிமிடம் என் கை வன்மை தெரிந்தது (கண்டிப்பாக LIC பில்டிங் உயரம் பறந்திருக்கும் என்பது என் நம்பிக்கை). அதற்குள்ளாக எங்கிருந்தோ ஒருவன் எங்கள் பட்டத்துடன் வந்த மோதலானான். விளைவு நூல் மட்டும் எங்கள் கையில் இருந்தது பட்டம் அறுபட்ட நூலுடன் எங்கள் கண் முன்னே கீழிறங்கிக் கொண்டிருந்தது. முதல் முயற்சியின் பலன் புஸ்வானமானது வருத்தமாக இருந்தது. அப்பொழுதுதான் பட்டம் விடுவதற்கு சில திட்டங்களையும் வகுக்க வேண்டும் எப்பொழுது அடுத்தவரை சீண்டலாம் எப்பொழுது ஜகா வாங்க வேண்டும் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கைவசம் ஐந்து ஆராய்ச்சிகளுக்கு உபகரணங்களிருந்ததால் வருத்தம் அவ்வளவாக எங்களை ஆட்கொள்ளவில்லை. அடுத்த முயற்சி ஆரம்பமானது. இந்த முறை வாட்டர் டேங்கைத் தாண்டி என்னாலேயே பட்டத்தைப் பறக்க விட முடிந்தது. ஆனாலும் LIC பில்டிங் உயரம் எட்டாததாகவே இருந்தது. எப்பொழுது நூல் விட வேண்டும் எப்பொழுது நூலை இழுக்க வேண்டும் என்பது விளங்காததாகவே இருந்தது. மணி ஆறை நெருங்கி விட்டிருக்கவே நாங்களும் எங்கள் முயற்சியைப் பின்பொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என கீழிறங்கி வந்து விட்டோம்.
இன்னும் மெஸேஜ் சர்வீஸ், மாஞ்சா போடுவது போன்ற விஷயங்கள் இருக்கின்றனவாம். இன்று முயன்று பார்க்க வேண்டும். இன்று முழித்ததுமே பட்ட ஆவல் வந்து தொற்றிக் கொண்டது. எப்படியும் எல்லாரையும் விட சிறப்பாக பட்டம் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். தென்கச்சி கோ.சுவாமிநாதனும் சொல்லிக்கொண்டிருந்தார் "என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை ! என்னால் மட்டுமே முடியுமென்பது ஆணவம்". நேற்று வரை எனக்கிருந்தது ஆணவம் இன்று எனக்குள்ளிருப்பது தன்னம்பிக்கை. எப்படியும் ஜெயித்து விடலாம் பின்பு நானும் பாடலாம் "பாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்".
பட்டப்படிப்பில் தெரிந்து கொண்டவை
- தெரியாத காரியத்தை தெரிந்து கொள்ள நினைப்பது சிறந்தது.
- தெரியாத காரியத்தை செய்யும் முன்பு முழு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
- சின்ன சின்ன பொடுசுகளே சில சமயம் பெரியவர்கள் செய்ய முடியாத காரியங்களைச் சுலபமாக செய்து விடுவார்கள். மூர்த்திதான் சிறியது.
- திட்டங்கள் வகுப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. இல்லையென்றால் வெற்றியின் முழு சுவையை அனுபவிக்க முடியாது.
- வெற்றிக்கென ஒரு எல்லையை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். ("Everyone can't reach moon and everyone shouldn't rely on simple accomplishments")
- காலை நேரத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதனை கேட்பது ஒரு நல்ல விஷயம். தாத்தா கதை சொல்வது போல் அழகான கதைகளை சொல்கிறார்.
- குரங்கியலிலும் Phd முடித்தால் நமக்கு என்றைக்கேனும் உதவப் போவது உறுதி
12 comments:
இன்னுமா குரங்கியல் படிக்கல..... வெரசா படியும் வே...
ஆனாலும் சுவையாகவே எழுதியிருக்கீர்
நன்றி சங்கரய்யா... சீக்கிரம் குரங்கியலும் படிச்சிர வேண்டியது தான் அதுக்கு முன்னாடி பட்டம் விட படிக்கணும்
விரைவில் பட்டம் விடுவதிலும் பட்டம் வாங்கிட வாழ்த்துக்கள் கனேஷ்!
//மூர்த்திதான் சிறியது.//
நம்ம வலைப்பூ மூர்த்தியவா சொல்றீங்க????? :) :)
////"என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை ! என்னால் மட்டுமே முடியுமென்பது ஆணவம்". .....//
என்னாலேயே முடியலனா, வேற எவனாலயும் முடியாது என்பது அகங்காரம்.
என்னால் மட்டுமே முடியனும்..வேற எவனாலும் முடியகூடாது கடவுளே என்பது அல்பத்தனம்...
என்னால் முடியாதுபா யார் வேனும்னாலும் முடிச்சுடட்டும் என்பது அசிங்கம் :)
வீ எம்
என்னங்க கனேஷ்,
2 கதை எழுதியிருக்கேன்..அத படிச்சுட்டு கருத்து சொல்லமாட்டீங்களா????
நிறைய இடத்துல கருத்து போட்டிருக்கீங்க..நம்ம ஏரியாக்கு வரமாட்டீங்களா??
எனக்கும் பட்டம் விடணும்னு இப்ப ஆசை வந்துருச்சு. நல்ல நுண்மாண் நுழைபுலம் அதாவது நல்ல 'அனாலிசிஸ்'.
ஆங்கிலத்துல ஜல்லியடிக்கிறதுக்கு 'பீட்டர்' வுட்ரான்னு சொல்ற மாதிரி இந்த தமிழ் ஜல்லிக்கும் எதாவது பெயர் வெச்சா வசதியா இருக்கும்ல?
நன்றி வீ.எம் ரமேஷ் !!
வீ.எம் உங்கள் முகமூடி கதைக்கு பின்னூட்டமிட்டு விட்டேன்.
"இடையை கையில் பிடித்து" கொஞ்சம் விவகாரமான பதிவாக இருக்கிறது. என்னைச் சார்ந்தவர்கள் என்னை அவ்வப்போது ஃபாலோ செய்வதால் அந்த பதிவிற்கு பின்னூட்டமிடும் நிலையில் நானில்லை. மன்னிக்கவும்.
கனேஷ்,
படித்தேன் , பதில் கருத்து போட்டிருக்கேன்.. கொஞ்சம் விவரமாக..! :) படியுங்கள் நேரமிருக்கும் போது..
இடையை கையில்.... அது ஒரு பெப்ஸி பாட்டிலை பற்றியது தானே :) :)
அப்புறம்,
இதற்கு முன் கருத்திலே ஒரு குட்டி அனாலிசஸ் போட்டேனே " அகங்காரம், அல்பத்தனம், அசிங்கம்..." அது பற்றி???
வீ எம்
//என்னைச் சார்ந்தவர்கள் என்னை அவ்வப்போது ஃபாலோ செய்வதால்... //
கணேஷு, ம்...
எலி, பொறியில சிக்கிடுச்சுன்னு சொல்லுங்க ;-)
//கணேஷு, ம்...
எலி, பொறியில சிக்கிடுச்சுன்னு சொல்லுங்க ;-)//
யோவ் ஞானபீடம் உம்ம நக்கல் இருக்கே...
குழலி, இதுல என்னய்யா நக்கலு இருக்கு!
உண்மயத்தானேய்யா சொன்னேன், அது ஒமக்குத் தெரியாதா என்ன, நீரும் ஒரு பொறியில் மாட்டிய எலி தானேய்யா!
:-)))
ஆனா, நாங்கல்லாம்... வேணாம் அத நானே சொல்லது அவ்ளோ நல்லால்ல... ;-)
ஹலோ ஞான்ஸ் & குழலி ! பின்னூட்டத்திற்கு நன்றி
அது சரி குழலி நீங்க அரசியல் பக்கம் இறங்கிட்டீங்க போல ....
// நீரும் ஒரு பொறியில் மாட்டிய எலி தானேய்யா! //
என்ன பொறி என்ன எலி கொஞ்சம் விளக்கமா சொல்லு
Post a Comment