- திடீரென்று குள்ளராகிவிட்டால் என்ன நடக்கும்?
- வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் தான் என்று மாறிவிட்டால்?
- பூமி என்பது மண்ணால் ஆகாமல் உடைபடாத இரும்பால் ஆகியிருந்தால்?
- ரஜினி என்பவர் கண்டெக்டராகவே இருந்திருந்தால்? (இது கொஞ்சம் ஓவர்.... இருந்தாலும் இது ரஜினி சீஸன் என்பதால் இந்த கேள்வி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது)
மேலே உள்ள விஷயங்கள் எல்லாம் நடந்தால் !! நினைச்சுப் பாருங்க. ஒரு வித்தியாசமான உலகத்தில உலாவுறத போல இருக்குதுல்ல. கீழயிருக்கிற படங்கள பாருங்க இன்னும் விசேஷமா நிறைய விஷயங்கள் தோணும்.
சும்மாவாவது எதையாச்சும் யோசிக்கறது ரொம்ப நல்ல விஷயம். அதுவும் சம்பந்தமில்லாத நடக்கமுடியாத விஷயமாக இருந்தா அந்த யோசனைகள் சில சமயம் சந்தோஷத்தைத் தருவதுண்டு.
அந்நியன் படத்தில வர்ற சார்லி மாதிரி தூங்கறதும், தூங்கியதனால களைப்பாவதும், பின்பு தூங்குவதும் ஒரு வகையில் இந்த மாதிரி யோசனையால் தான் (அடிக்க வராதீங்க....சில சமயம்தான் இந்த மாதிரியான யோசனைகள் இன்பம் தருவதுண்டு). மத்தவங்களுக்கு துன்பம் தராதவரை நம்ம யோசனைகளெல்லாம் நல்லவைதான் (அட!! இன்பம் தர முடியலேன்னா கூட). "லூசாப்பா நீ?"ன்னு பிதாமகன் படத்தில லைலா மேடம் கேட்கிற மாதிரி நீங்களும் கேட்கனும்னு நினைக்கிறீங்களா? சரி சரி விடுங்க சொல்ல வந்ததை சொல்றேன்.
இப்படியாக தேவையில்லாததைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் பொழுது திடீரென உலகம் அழிஞ்சு போச்சினா அடுத்து வர்ற ஜெனரேஷனுக்கு என்னத்த விட்டுட்டுப் போறோம்னு யோசிச்சிட்டிருந்தேன். (இப்போ தெரிஞ்சு போச்சு, கேட்டு புண்ணியமில்ல நீ சரியான லூசு தான்!) முன் காலத்தில அத உபயோகிச்சாங்க இத உபயோகிச்சாங்கன்னு நிறைய சொல்றாங்க. எல்லாத்துக்கும் அகழ்வாராய்ச்சி, வரலாற்று சுவடுகள் அது இதுன்னு சாட்சிகள் இருக்கின்றன. இப்போ ஒருவேளை நாம இருக்கிற உலகம் அழிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க அப்போ நாம உபயோகப்படுத்துக்கிட்டிருந்த (உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிற) இந்த செல்போன், டிவி, விமானங்கள், நாம வானத்தில நிறுவியிருக்கிற அந்த செயற்கைக்கோள்கள் என நம்முடைய கண்டுபிடிப்புகள் எல்லாமே அடுத்து இந்த உலகத்தில வாழப்போறவங்களுக்கு தெரியாமப் போயிரும்ல... (வந்துட்டாருல்ல லார்டு லபக்கு தாஸூ)
அப்ப நாம உபயோகப்படுத்திக்கிட்டிருக்கிற இந்த அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் எப்படி கட்டி காக்க முடியும்? எல்லாத்தையும் மண்ணுல போட்டு புதைச்சிரலாமா? (ஏண்டா ! அதுக்கா செயற்கைக்கோள்கள கண்டுபிடிச்சோம்னு நம்ம சயிண்டிஸ்டுங்க எல்லாம் சண்டை பிடிச்சிராம...) வேற என்னவெல்லாம் செய்யலாம்? (அவரவர் ஐடியாக்களைப் பின்னூட்டமிடலாம். நல்ல தரமான ஐடியாவுக்கு நம்ம முகமூடி சார் பரிசு வழங்குவார்...). அவற்றையெல்லாம் வருங்காலத்துக்கு எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தோணவே மாட்டேங்குது. (எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் ஹி ஹி ஹி!!! ) நீங்களும் முடிஞ்சா முயற்சி செஞ்சு மன்னிக்கவும் யோசிச்சுப் பாருங்க. கேட்க வந்தத கேட்டாச்சு இப்பத்தான் ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு.
இந்த பதிவ எழுதிக்கிட்டிருக்கும்பொழுது மின்னஞ்சலில் வந்த துணுக்கு !!
ஒரு தடவ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் & இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில சண்டை வந்ததாம்.
அப்போ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 50 அடி தோண்டுறாங்க. செம்பு கம்பி ஒண்ணு கிடைக்குது. இத சாக்காய் வச்சுகிட்டு 25,000 ஆண்டு முன்னரே தங்கள் நாட்டில் தொலைபேசிகள் இருந்ததாக அறிவிக்கிறாங்க.
இதைக்கேட்டுட்டு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 100 அடி தோண்டுறாங்க. சின்ன கண்ணாடி துண்டு கிடைக்குது. உடனே தங்கள் நாட்டில் 35,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒளி இழை (fibre optic) உபயோகத்தில் இருந்ததாக அறிவிக்கிறாங்க.
நம்ம இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கோபம். உடனே பூமியில் 150 அடி தோண்டுறாங்க. எதுவும் கிடைக்கல. விடாம இன்னும் ஒரு 50 அடி தோண்டுறாங்க அப்பவும் எதுவுமே கிடைக்கல. உடனே இந்தியாவுல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கம்பியில்லா இணைப்புகள் (wireless connections) இருந்ததாக அறிவிக்கிறாங்க.... எப்படி ??
படங்கள்