Tuesday, August 23, 2005

மோகன் பாடல்கள்

கோவில்பட்டியில் எங்கள் தெரு கொஞ்சம் ரசனையானது என்று தான் கூற வேண்டும். காலையில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் டேப்ரிக்கார்டர் தான் முதலில் முழித்துக்கொள்ளும். எங்கள் வீட்டிலிருந்து இடதுபுறம் மூன்று வீடு தள்ளி லாரி டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். எங்கள் வீட்டின் எதிர்புறம் ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வசித்து வந்தார். ஒரு பத்து வீடு வலதுபுறம் தாண்டினால் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை (கோவில்பட்டி தீப்பட்டி தொழிற்சாலைகளாலும் பிரபலமான ஊர்). இப்படியாக விடுமுறை நாட்களிலும் காலை வேளைகளிலும் சினிமா பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும்.

ஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களைக் கவர்ந்த அளவு இவர்களைப் போன்ற சினிமா பாடல் ரசிகர்களைக் கவரவில்லை என்று தான் கூற வேண்டும். அதனாலேயே எப்பொழுதும் இவர்களிடங்களிலிருந்து 70 80களின் பாடல்கள்தான் அநேகமாக கேட்கும். எண்பதுகளின் பாடல்கள் என்றால் அவை முற்றிலுமாக திரு.இளையராஜா அவர்களின் பாடல்களாகத்தான் இருக்கும். அதிலும் மோகன் அவர்கள் நடித்த திரைப்படப் பாடல்கள் அதிகமாக இருக்கும். எனக்குப் பிடித்தவை ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் ஆனாலும் தூக்கம் வரும் நேரங்களில் இளையராஜாவைக் கேட்பது போல ஏ.ஆர்.ரகுமானைக் கேட்க முடிவதில்லை.

இன்றைய இளைஞர்களின் ஒரு ஆச்சர்யமான மனோநிலையை அவர்களின் சினிமா பாடல் விருப்பங்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஜாலியான நேரங்களில் ஏ.ஆர்.ரகுமானையும் சோகமான நேரங்களிலும் தனிமையான நேரங்களிலும் இளையராஜாவையும் கேட்கிறார்கள். சொகமான நேரங்களில் மோகன் பாடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஏன் இந்த முரண்பாடு? அப்படியென்ன இருக்கின்றது அந்த "மோகன்" பாடல்களில்? அடிக்கடி நான் இப்படி நினைப்பதுண்டு அதனாலேயே மோகன் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். இன்று நானும் அந்த பாடல்களுக்கு அடிமை.

தனிமையான நேரங்களிலும் சோகமான நேரங்களிலும் ஒருவித பரிவை அந்த பாடல்கள் தாங்கி நிற்கின்றன. இதனாலேயே பல சமயங்களில் நான் இந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்கியிருக்கிறேன். என்னையும் அறியாமல் நடந்தது இது. ஒரு வேளை அந்த மனதை வருடும் இசையை இளையராஜா எளிதாக தருகிறார் போல. ஒரு "சங்கீத மேகம்", ஒரு "நிலாவே வா", ஒரு "தேனே தென்பாண்டி மீனே" கேட்கும் போது உணரும் அந்த பரிவு "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு" கேட்கும் போது எனக்கு கிடைப்பதில்லை. (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)

பலரிடம் இதைப் பற்றி நான் விவாதிப்பதுண்டு. மோகன் பாடல்களில் ஒருவித காதல் உணர்வு இளையோடும் அதுவும் இந்த கால இளைஞர்களின் உணர்வும் ஒத்துப்போகிறது அதனாலேயே அந்த பாடல்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில விவாதங்களில் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காதலிப்பவர்கள் மட்டுமல்ல காதலில் விழாதவர்கள் கூட மோகன் பாடல்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். என்ன காரணமென்று கேட்டால் எனக்கு ஏற்பட்ட அதே பரிவும் ஆறுதலும் அவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அதே நண்பர்கள் சந்தோஷமான நேரங்களில் "ஒரு அரபிக்கடலோரம்" "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு" என வித்தியாசப்படுவதுமுண்டு.

முடிவாக எனக்கு கிடைத்ததெல்லாம் மோகன் பாடல்கள் பொதுவாகவே நெஞ்சை வருடும் பாடல்களாக இருக்கின்றன. ஒருவித பரிவும் பாசமும் அவைகளில் உணரப்படுகின்றது. இதுவே அந்த பாடல்கள் இன்றளவும் நிலைத்திருக்கக் காரணம். அவற்றை காதல் உணர்வு மிகுந்தவை என்று கூறி ஒதுக்க முடிவதில்லை இனியும் ஒதுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

15 comments:

வீ. எம் said...

//...கோவில்பட்டி தீப்பட்டி தொழிற்சாலைகளாலும் பிரபலமான ஊர்//
இப்போ தம்பி கனேஷ் போன்ற எழுத்தாளர்களாலும், கோவில்பட்ட்டி பிரபலம் என இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்..

மோகன் பாடல் , மோகன் பாடல் னு சொல்லி சொல்லியே (சல்லியடித்தே - ஹி ஹி ஹி..எப்பத்தான் நான் இந்த வார்த்தைய சொல்றது?? ) பாவம் அந்த பாடல்களை எழுதின கவிஞர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுடாங்க :)

ஆயிரம் தான் சொல்லுங்க.. மோகன் பாடல்கள்னா மோகன் பாடல்கள்தான்.. அடிச்சுக்க முடியாது ..! :)

வீ எம்

பினாத்தல் சுரேஷ் said...

உங்க வருத்தத்தை கோபியோட போஸ்ட்டுலே பார்த்தேன். ஏதோ நம்மால ஆனது, ஒரு + குத்து!

நானெல்லாம் இன்னும் மோகனை விட்டு ரஹ்மான் பாடல்களுக்கு முன்னேறவே இல்லை:-(

துடிப்புகள் said...

'ஏல மக்கா.. கோயில்பட்டியா உனக்கு.. நமக்கு அதுக்கு பக்கத்தூருதான். கோயில்பட்டியில மட்டுமில்ல.. அந்த மாதிரி சிட்டிய ஒத்த எல்லா ஊர்களிலயும் ராசா பாடல்கள்தான் பட்டையைக் கெளப்பும். இங்க மெட்ரோ சிட்டீஸ்ல கூட ராத்திரி நேரம் எஃப்.எம். ரவுண்டு கட்டி ராசா பாட்டைத்தான் போடுவாய்ங்க! தனி மெயில் அனுப்புறேன். அடுத்த முற நம்ம மாவட்டத்துல சந்திப்போம்!'

Ganesh Gopalasubramanian said...

நன்றி வீ.எம் சுரேஷ் & முகில்

@வீ.எம்
//மோகன் பாடல் , மோகன் பாடல் னு சொல்லி சொல்லியே (சல்லியடித்தே - ஹி ஹி ஹி..எப்பத்தான் நான் இந்த வார்த்தைய சொல்றது?? ) பாவம் அந்த பாடல்களை எழுதின கவிஞர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுடாங்க :)//

நாம இன்னும் ஹீரோயிசத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்..... இல்லையா ... !!

@சுரேஷ்
// உங்க வருத்தத்தை கோபியோட போஸ்ட்டுலே பார்த்தேன். ஏதோ நம்மால ஆனது, ஒரு + குத்து! //

வருத்தப்பட்டாதான் வாழ்க்கை கிடைக்கும் போல..... (சும்மா தமாசுக்கு !!)

@முகில்

// தனி மெயில் அனுப்புறேன். அடுத்த முற நம்ம மாவட்டத்துல சந்திப்போம்!' //
உறவுக்காரங்களும் ஊர்க்காரங்களும் இனியும் இப்படித்தான் பேசிக்கணும் போல....

G.Ragavan said...

கோயில்பட்டிக்குப் போகையில் எல்லாம் ரெண்டொரு கேசட்டாவது பதிவு பண்ணாம வந்ததில்லை. கோயில்பட்டிக்குப் போயே வருசக் கணக்காகுது.

அருண் ஐஸ்கிரீமுக்கு எதுத்த மாதிரி மாடியில இருக்கும் அந்த ரெக்கார்டிங் கடை. இன்னும் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

அங்க இளையராஜாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்த "என் இனிய பொன் நிலாவே" என்று ஒரு படம் இருந்தது. அதுல ஒரு பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரின்னு போட்டிருந்தது. அத ரெக்கார்ட் பண்ண ஆசை. ஆனா பண்ணலை. என்ன காரணமுன்னு மறந்து போச்சு.

கோயில்பட்டிக்காரங்க அத ரெக்கார்டு செஞ்சி எம்.பி.3யா மாத்தி அப்லோடு பண்ணுங்கய்யா.

அப்புறம் நான் கதிரேசன் கோயிலை புதுப்பிக்கின்றார்கள் என்று கேள்விப் பட்டேன். உண்மையா?

Ramesh said...

ராகவன்,

கதிரேசன் கோயிலை புதுப்பிப்பது உண்மைதான். உடனே எனக்கு கதிரேசன் மலையின் புலிக்குகை பற்றி நினைவு வந்துவிட்ட்து. அதன் ரகசியங்களைப் பற்றி பேசியே கழித்த இரவுகள் பல.

கணேஷ்,

மோகன் பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருப்பது உண்மை. ஒருவேளை நாம் பால்ய காலத்தில் கேட்ட பாடல்கள் நம் மனதிற்கு மிக உகந்ததாக இருக்குமோ? மொழி அப்படித்தான் என்பது அனைவரும் அறிந்தது. இப்போதுள்ள இளைஞர்கள் பெரும்பாலும் எண்பது தொன்னூறுகளில் பிறந்தவர்கள் (உண்மையான இளைஞர்கள் அதாவது மனதளவில் இளைஞர்கள் என்னை மன்னிக்கவும்). அதனால் இருக்குமோ? ஆனாலும் பெரியவர்களும் அப்பாடல்களைக் கேட்பது என்னுடைய கருத்தின்படி விளக்கக்கூடியதாக இல்லை. ம்ம்ம்ம்ம்.....குழப்பம்.....யோசனை.....ஆஆஆஅ.....கொஞ்ச நேரம் 'நிலவு தூங்கும் நேரம்' கேட்டுட்டு வர்றேன்.

G.Ragavan said...

கதிரேசன் கோயில் புதுப்பிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.

முறையாகப் புதுப்பிக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டால் அது கோயில்பட்டியில் சிறந்த பொழுது போக்குத் தலமாகவும் பக்தித் தலமாகவும் இருக்கும். சின்னக் குன்றென்றாலும் போக வர உள்ளூர் மக்கள் விரும்புவார்கள்.

Ganesh Gopalasubramanian said...

ஆமா ராகவன்

எனக்கும் கதிரேசன் கோயில் ஞாபகம் வந்துவிட்டது. என்னுடன் +2 படித்தவன் கல்லூரி படிப்பைச் சென்னையில் முடித்தான். அப்பொழுது விடுமுறை நாட்களில் அவனது நண்பர்களும் அவனுடன் வந்திருந்தனர். பாண்டவர்மங்கலம் கம்மாயை அவன் Lake Pandavarmangal எனவும் கதிரேசன் கோயில் குன்றை Mount Kathiresh எனவும் அவனது நண்பர்களுக்கு சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். எல்லாம் பீலா தான். ஆனால் அவர்கள் அதனை ஒரு "பெரிய" விஷயமாக கேட்டு கொண்டிருந்தனர்.

குழலி / Kuzhali said...

//முடிவாக எனக்கு கிடைத்ததெல்லாம் மோகன் பாடல்கள் பொதுவாகவே நெஞ்சை வருடும் பாடல்களாக இருக்கின்றன. ஒருவித பரிவும் பாசமும் அவைகளில் உணரப்படுகின்றது. இதுவே அந்த பாடல்கள் இன்றளவும் நிலைத்திருக்கக் காரணம். அவற்றை காதல் உணர்வு மிகுந்தவை என்று கூறி ஒதுக்க முடிவதில்லை இனியும் ஒதுக்க முடியாது என்றே தோன்றுகிறது//

மோகன் பாடல்கள் எப்போதும் கேட்டு ரசிக்க கூடிய பாடல்கள், தனிமையில் கேட்பது இந்த பாடல்களும் தொடக்க கால விஜய டி ராஜேந்தர் பாடல்களும்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி ஜிகிடி குழலி ராகவன் !!

யோவ் ஜிகிடி நல்ல மேட்டரு எல்லாத்தில்லையும் "கைய" வச்சா எப்படி??

ஏஜண்ட் NJ said...

உண்மை கணேஷ்!

இரவு நேரங்களில், தனிமையில், நிசப்தமான சூழ்நிலையில், சன்னமான சப்தத்தில் மோகன் பாடல்கள் மனதை வருடுவது... ஆஹா என்ன சுகம்!!

==x==x===x===
தமிழா!
மோகன் பாடல்கள் கேட்டு உறங்கியது போதும்!
இப்படி மனம் மயக்கும் பாடல்கள் கேட்டு கேட்டே மதியும் மயங்கிப் போநாயே!

விழித்துக் கொள்! நாளை நமதாக வேண்டும்!!

திட்டமிட்டு சுரண்டும் அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக் காரர்களிடமிருந்து உன்னை விடுவித்துக் கொண்டு,

வீறுகொண்டு எழு!
விண்ணை முட்டு!!

தலைவலித்தால்... நண்டு .ஃபாம் தடவிக்கொண்டு மோகன் பாடல்கள் கேள்!!!

rajkumar said...

கணேஷ்,

மோகன் அந்த காலத்தில் ஒரு "இயக்குநர்களின் நாயகன்". கதாநாயகன் பிரதானப்படாது, கதை பிரதானப்பட வேண்டும் என விரும்பிய இயக்குநர்கள் மோகனை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் ஆர். சுந்தர்ராஜன், கே.ரங்கராஜ் மற்றும் அவ்வப்போது மணிவண்ணன். இந்த இயக்குநர்கள் மற்றும் இளையராஜாவின் கூட்டு முயற்சியால் உருவானது தற்போது நீங்கள் குறிப்பிட்ட்டுள்ள இனிமையான "மோகன் பாடல்கள்".

மணிரத்னம் கூட ஆரம்ப காலப்படங்களில் மோகனை தேர்ந்தெடுத்தார். அஞ்சலியில் கூட முதலில் மோகன் நடிப்பதாகத்தான் இருந்தது.

அன்புடன்

ராஜ்குமார்

Ganesh Gopalasubramanian said...

நன்றி ரதி, ஞான்ஸ் & ராஜ்குமார்

@ரதி
// Eventhough I was in K.Patti for more than 15 years, have never been to Kathiresan Kovil. //
இப்போ கோவில்பட்டி ஊர் ரொம்ப புதுமையா மாறிட்டு வருதுங்க.. மேம்பாலம், கதிரேசன் கோயில் புதுப்பித்தல் என நிறைய வேலை நடக்குது

@ஞான்ஸ்
//வீறுகொண்டு எழு!
விண்ணை முட்டு!!//

இது யாருக்குங்க எனக்கா என் பதிவ படிச்சவங்களுக்கா??

@ராஜ்குமார்
//மோகன் அந்த காலத்தில் ஒரு "இயக்குநர்களின் நாயகன்". கதாநாயகன் பிரதானப்படாது, கதை பிரதானப்பட வேண்டும் என விரும்பிய இயக்குநர்கள் மோகனை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் ஆர். சுந்தர்ராஜன், கே.ரங்கராஜ் மற்றும் அவ்வப்போது மணிவண்ணன். இந்த இயக்குநர்கள் மற்றும் இளையராஜாவின் கூட்டு முயற்சியால் உருவானது தற்போது நீங்கள் குறிப்பிட்ட்டுள்ள இனிமையான "மோகன் பாடல்கள்".//

ஆமா ராஜ் நீங்க சொல்வது உண்மைதான். மோகன் இயக்குனர்களின் நாயகன். ஒருவித மெல்லிய உணர்வு அவர் முகத்திலேயே தெரியும். மெளன ராகம் சந்திரகுமார் தான் என்னுடைய பேவரிட்.

அன்பு said...

கணேஸ்,
கடந்தவாரம் நீண்ட இடைவெளிக்குபின் ஊருக்குப்போயிருந்தேன். கோவில்பட்டி அக்கா வீட்டுக்கும். இப்பல்லாம் நம்ம ஊருப்பக்கம் சூரியன் எப்.எம்-தான். எங்க கிராமாத்துல்ல எல்லா வீட்டுலயும் குட்டியா ஒரு FM Reciever அதுல்லய ஸ்பீக்கரும் இருக்குது 200 ரூபாய் போல. எல்லா வீடு, தோட்டம்னு எங்க பார்த்தாலும் ஒலிக்குது. தொலைபேசியில் அரட்டை, நேயர் விருப்பம்னு கலை கட்டிடுத்து...

Ganesh Gopalasubramanian said...

அன்பு !!

நானும் ஜூலை மாசம் தான் போயிட்டு வந்தேன். என்ன திருட்டு சிடி கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமாயிருக்கு, மக்களுக்கு பக்தி கொஞ்சம் கூடியிருக்கு, இந்த வருஷம் தண்ணி கஷ்டம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு..... மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மாற்றங்கள் எதுவுமில்லை

FM சும்மா முக்குக்கு முக்கு ஒலிக்குது. ஒரு பாட்டை 10 கிலோமீட்டர் தூரம் பிரயாணப்பட்டாலும் முழுசா கேட்க முடியுது. முன்னெல்லாம் பாருங்க, தெரு முக்குல கேட்பேன் அது சரணமாகத்தான் இருக்கும் பல்லவி ஞாபகம் வராது அதுக்குள்ள ஒரு அரை கிலோமீட்டர் தாண்டியிருப்பேன். வீடு வந்து சேர்ந்தாலும் ஒரே யோசனையா இருக்கும். இப்போ அந்த கவலை சுத்தமா இல்லை :-)