Thursday, September 15, 2005

சொந்த ஊர்

பொதுவாக புதிதாக ஒருவரைப் பார்த்தால் கேட்கப்படும் கேள்வி "உங்க சொந்த ஊர் எது?". பிறந்தது ஒரு ஊராகவும் வாழ்வது ஒரு ஊராகவும் இருக்கும் பச்சத்தில் பிறந்த ஊரையே எல்லோரும் சொந்த ஊராக சொல்வார்கள். நான் பிறந்தது காஞ்சிபுரத்தில். வளர்ந்தது படித்தது (படித்து வளர்ந்தது) எல்லாமே கோவில்பட்டியில். காஞ்சிபுரத்திற்கு நான் இதுவரை ஒரு இரண்டு முறை தான் சென்றிருப்பேன் யாராவது சொந்த ஊரில் என்ன சிறப்பென்று கேட்டால் கூட முழிக்க வேண்டியது வரும். (சும்மாங்காட்டியும் பதிலளிக்கணும்னு சொல்லி காஞ்சி மடத்தையும் அண்ணா பிறந்த ஊர் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டேன்) எனக்கு பிறந்த ஊரைச் சொந்த ஊராக சொல்வதில் இப்பொழுதெல்லாம் உடன்பாடில்லை (சத்தியமா ஜெயேந்திரர் விவகாரம் இல்லைங்க). எதுக்கு தெரியாத ஊரைப் பற்றி தெரிந்த மாதிரி சொல்லணும்னுதான்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

நேற்று என்னுடன் வசிக்கும் நண்பரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அவ்வப்போது எல்லையைத் தாண்டி, ஒரு வரை முறை இல்லாமல் கிண்டலடிப்பது வழக்கம். அப்பொழுதெல்லாம் திட்டு வாங்கிக்கொண்டு இங்கொன்றும் அங்கொன்றுமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வோம். நாங்கள் இப்பொழுது தங்கி இருக்கும் வீடு ரொம்ப பெரியது. வீட்டில் ஆறு பேர் வசிக்கிறோம். வித்தியாசமான ரசனைகள் வித்தியாசமான அனுகுமுறைகள் என ஒவ்வொருவரின் நடவடிக்கையும் பகிர்தலுக்கும் புரிதலுக்கும் வழி வகுக்கின்றன. எல்லாவற்றையும் மீறி ஒரு பாசமும் பரிவும் எப்பொழுதுமே எங்களிடம் இருக்கும். அனைவருமே கோவில்பட்டியில் இருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் கள்ளூரி படிப்பை முடித்தவர்கள். (பாசம் இருக்காதா பின்னே) நான் கொஞ்சம் சமர்த்து எல்லாமே நல்ல பழக்கங்கள் தான் (அட மெய்யாலுமே நல்ல பழக்கங்கள் தான்). அதனாலேயே எல்லோரும் என்னை அடிக்கடி "பழம்" என்று விளிப்பதுண்டு.

நேற்று அரட்டைக் கச்சேரியில் சொந்த ஊர் பற்றிய விவாதம் எழுந்தது. என்னுடன் வசிக்கும் இரண்டு பேருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. என்னையும் சேர்த்து இரண்டு பேர் கோவில்பட்டி வாசிகள். ஒருவருக்கு தூத்துக்குடி. மற்றொருவருக்கு மதுரைப் பக்கம் ஒரு குக்கிராமம். நேற்றைய கிண்டலுக்கு மாட்டியவர் கிராமத்துக்காரர். ஏதோ பேசிக்கொண்டிருக்க தற்செயலாக "எங்க ஊர் ஒரு பெரிய கிராமம்" என்றார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே தூத்துக்குடிக்காரர் (குடிக்காரர் குடிகாரரும் கூட) "அதெப்போப்பா கிராமம் ஊரா மாறியது? அதென்ன சின்ன கிராமம் பெரிய கிராமம்? ஆட்களைப் பொருத்து சொல்றியா இல்லை வசதி வாய்ப்புகளை பொருத்து சொல்றியா?"ன்னு கேட்டார். மதுரைக்காரருக்கு வந்தது கோபம். உடனே "எங்க ஊரில் ஐசிஐசிஐ ஏடிஎம் செண்டரெல்லாம் இருக்கு தெரியுமா?"ன்னார்.

உண்மையில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த கிராமத்தை கண்டுகொண்ட ஐசிஐசிஐக்காரர்களுக்கு கோவில்பட்டி இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். கோவில்பட்டியில் ஐசிஐசிஐ பேங்கும் கிடையாது ஏடிஎம் செண்டரும் கிடையாது. மிகுந்த வருத்தமாயிருந்தது இருந்தாலும் சபையில் காட்டிக்கொண்டால் அடுத்த குறி நம்மீதுதான் வைக்கப்படும் என்று கொஞ்சம் இயல்பாக இருப்பது போல நடித்தேன். உடன் இன்னொரு கோவில்பட்டிக்காரர் இருப்பதால் கொஞ்சம் வசதி. மாட்டினால் இருவருமாகத்தான் மாட்டுவோம்.

"எங்க ஊரில் ஐசிஐசிஐ ஏடிஎம் செண்டரெல்லாம் இருக்கு தெரியுமா?"ன்னு மதுரைக்காரர் கேட்டதுமே நம்ம குடிக்காரருக்கு கொஞ்சம் பின்னடைவு. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு "அது தானே உங்க ஊர் டூரிஸ்ட் ஸ்பாட்?" என்றார். கேட்ட விதத்தில் எல்லோரும் சிரித்து விட்டோம். மதுரைக்காரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனா கொஞ்சம் நேரம் யோசித்தவர் ஒரு கேள்வி கேட்டார். "இப்போ உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க. டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு கூட்டிட்டு போகறீங்க. பிரசவ நேரமென்பதால் விமானம் மூலமாக போறீங்க. அப்போ விமான பிரயாணத்திலேயே அவங்களுக்கு குழந்தை பிறந்ததுன்னு வச்சுக்கோங்க அந்த குழந்தைக்கு சொந்த ஊர் எது?"

உடனே வெவ்வேறு பதில்கள். திருநெல்வேலிக்காரர் "அப்போ எந்த ஊருக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்ததோ அந்த ஊருதான் சொந்த ஊர்" என்று சொன்னார். மதுரைக்காரருக்கு ஒரு இண்டலிஜெண்ட் கேள்வி கேட்டதாக தோன்றியிருக்க வேண்டும். கொஞ்சம் சிரித்தார். உடனே நான் "அப்போ கடலுக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்தா சொந்த ஊருன்னு எதைச் சொல்லுவீங்க?"ன்னு கேட்டேன். (எப்படி நம்ம சாமர்த்தியம்) எல்லோருமே இப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்க. இதான் சமயம்னு நான் கேட்டேன் "அப்போ பிறந்த ஊர் சொந்த ஊர் கிடையாது. விவரமாக நம்மை வளர்த்த ஊர் எதுவோ எந்த ஊரில் நம்மை மறக்காத மக்கள் நிறைய பேர் இருக்கிறாங்களோ அதுதான் நம்ம சொந்த ஊர். அப்படித்தானே?" கேட்டு விட்டு காலரைத் தூக்கிக்கொண்டேன். அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

சரி உங்க கருத்தையும் நீங்க சொல்லுங்க. (கூடவே உங்க சொந்த ஊர் என்ன என்பதையும் சொல்லிட்டுப் போங்க)

***************

பதிவுடன் ஒரு துணுக்கு எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் ஒரு உண்மை சம்பவத்தையே துணுக்காக சொல்லலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.

ஒரு முறை உடன் வசிக்கும் கோவில்பட்டிக்காரரும் மதுரைக்காரரும் தாஜ்மகால் சென்றிருந்தார்கள். (நாங்கள் வசிப்பது டெல்லியில்) ரயில் பிரயாணத்தில் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அதே கம்பார்ட்மெண்ட்டில் இருந்த ஒரு மலையாளி இவர்களுடன் பேசியிருக்கிறார். இருவரிடமும் சொந்த ஊர் என்ன என்று கேட்டிருக்கிறார்.

"கோவில்பட்டி !!" என்று கோவில்பட்டிக்காரர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த மலையாளியும் "நான் கோவில்பட்டிக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். லக்ஷ்மி மில்ஸ் விஷயமாக வந்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.

மதுரைக்காரரிடமும் அதே கேள்வியைக் கேட்க அவரும் "மதுரை!!" என்று பதிலளித்திருக்கிறார்.

அதற்கு அந்த மலையாளி "மதுரைன்னா கோவில்பட்டிக்குப் பக்கத்தில் தானே இருக்கு?" என்று திருப்பி கேட்டிருக்கிறார்.

(படிச்சிட்டு மதுரைக்காரங்க அடிக்க வராதீங்க இது உண்மைச் சம்பவம். இதிலிருக்கும் நையாண்டி கருதி தான் துணுக்காக இதனைப் பதிவிடுகிறேன்:-))

17 comments:

வீ. எம் said...

/வசிக்கும் நண்பரைக் கிண்டல் //
அந்த நண்பருக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கா??
//கள்ளூரி படிப்பை//
நல்ல படிப்பு.. பட்டம் வாங்கிட்டீங்களா??
நல்ல படிப்பு.. பட்டம் வாங்கிட்டீங்களா??
//எல்லாமே நல்ல பழக்கங்கள் தான் //

ஆமா , அதல்லாம் நல்ல பழக்கம் தான்.. யாரு கெட்ட பழக்கம்னு சொன்னது..
//அப்போ கடலுக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்தா சொந்த ஊருன்னு எதைச் சொல்லுவீங்க?"ன்னு கேட்டேன்//
கடலூர்னு சொல்லலாமே..
அடேங்கபா ஐசிஐசிஐ ஏ டி எம் இருந்தா அது பெரிய ஊரா.. நல்ல வேலை , எங்க ஊருல ஏழு பேரு ஏ டி எம் கார்ட் வெச்சிருக்காங்க ... அதுனால எங்க ஊரு பெரிய ஊருனு சொல்லல.. :)
அடுத்த தடவை யாராச்சும் எந்த ஊருனு கேட்டா யாதும் ஊரே , யாவரும் கேளிர் னு போட்டுத்தாக்குங்க.... என்ன சொல்றீங்க கனேஷ்..

-தினம் ஒரு பதிவுனு கலக்கறீங்க !!

பாலராஜன்கீதா said...

சிறு வயதில் சென்னை, பம்பாய், கல்கத்தா, டெல்லி என்று பல ஊர்களை வாங்கியிருக்கிறோம் (டிரேட் / பிசினஸ் விளையாட்டில்) நெசமாக சொந்த ஊர் மொத்தத்தையும் வாங்க எவ்வளவு பணம் தேவை என்று தெரியவில்லை. :-))

நாங்க காஞ்சி வரம்.

Anonymous said...

காஞ்சி

தாணு said...

சொந்த ஊர்னா, அனேகமா பெற்றோரின் ஊரைத்தான் சொல்லுவார்கள், நமக்குன்னு ஒரு ஊர் அமையும் வரை. பிரசவத்துக்கு மட்டும்னு, தெரிஞ்ச டாக்டரைத் தேடி ஊர்விட்டு ஊர் போறது ரொம்ப சகஜமே. அதெல்லாம் சொந்த ஊராகுமா?
இந்த டாபிக் பத்தி போன வாரம் தற்செயலாக யோசித்திருந்தேன். திருநெல்வேலி பத்தி யாராவது எழுதினால், ரொம்ப நாள் படிச்சதினால் ஒரு பாசம் வந்து, சொந்த ஊர்னு தோண வைக்குது. திருச்செந்தூர், தூத்துக்குடி பக்கமா யேதாவது வந்தாலே, அட நம்ம ஊர்னு தோணுது, பிறந்த ஊர் பக்கமில்லையா? ஈரோடு பத்தி பேசினால் வாழ்ற ஊர்ங்கிறதாலே அதுவும் சொந்த ஊர்தான். இன்னைக்கு தேதியில் எல்லோருக்கும் இந்த குழப்பம் இருக்குது. நாம ஊர் ஊரா சுத்தினாலும் நம் வேர்கள் இருக்கும் ஊர்தான் சொந்த ஊர். அப்பாடி, ஒரு வழியா எனக்குள்ள குழப்பத்தை எல்லார்கிடேயும் கொட்டியாச்சு. நடுவர் தீர்ப்பே(கணேஷுடையது)இறுதியானது!!!
நாலாட்டின்புதூர்லேயா படிச்சீங்க? சுப்பையா பாரதி மாஸ்டரைத் தெரியுமா?

Anonymous said...

//கோவில்பட்டியில் ஐசிஐசிஐ பேங்கும் கிடையாது ஏடிஎம் செண்டரும் கிடையாது. //

ஏ.டி.எம் சென்டர்கள்: மேற்கு போலீஸ் நிலையத்துக்கு எதிரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஏடிஎம்; சாத்தூர் ரோடில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இன்னொன்று.

Suresh said...

கணேஷ்,

விஜயகாந்துக்கு தொண்டர்கள் கொடுத்த பெரிய வீரவாளை பார்த்த பின்பும் கூடவா உங்களுக்கு மதுரையைப்பற்றி இப்படி எழுத தைரியம் வந்தது...

கோவில்பட்டிக்கு மதுரை வழியாகத்தானே போயாகனும்... அப்ப பாத்துக்குறோம்.. :-)

துளசி கோபால் said...

கணேஷ்,

எனக்கும் இந்த 'சொந்த ஊர்' இல்லையேப்பா(-: நாடோடியாச்சே நானு. பொறந்த ஊர்
'கரூர்' ( ஈரோடுக்குப் பக்கத்துலே இருக்கே )
மனசுலே நிக்கற ஊர் 'வத்தலகுண்டு'. வாழ்க்கையின் பெரும்பகுதி இருந்த ஊர்ன்னா
இப்ப இருக்கரதுதான். 18 வருசமாச்சு இங்கே வந்து. இப்ப யாராவது சொந்த ஊர்னு
கேக்கறப்ப நியூஸிலாந்து ன்னு சொன்னா அடைக்க வரமாட்டாங்களா?
கவலையா இருக்கேப்பா. ஐய்யய்யோ.

துளசி கோபால் said...

அடைக்க இலே, 'அடிக்க'ன்னு இருக்கணும்.
தப்பா தட்டச்சு வுழுந்துருக்கு.

Ramya Nageswaran said...

ஆஹா...நான் ஒரு வக்கீல்ங்கிறதை ஞாபகப்படுத்திற விதமா ஒரு பதிவு!!! விட முடியுமா இந்த வாய்ப்பை?

கணேஷ், country of residence and country of domicile ங்கிறது சட்டத்தை பொறுத்த வரை ஒரு முக்கியமான விஷயம். எதுக்கு தெரியுமா? நிறைய சொத்து வைச்சிட்டு ஒருத்தர் மண்டையை போட்டுட்டா எந்த நாட்டு சட்டத்தின்படி tax கட்டணும் அப்படிங்கிற கேள்வி வரும். Domicileங்கிறதை simpleஆ சொல்லணும்னா 'நான் இந்த நாட்டுக்கு தான் திரும்பி போய் செட்டில் ஆகப் போறேன்' அப்படின்ன்னு எந்த இடத்தை பற்றி அடிக்கடி நினைக்கறீங்களோ அது தான் உங்க country of domicile.

நீங்க கேட்ட அந்த சாமர்த்திய (!!) கேள்விக்கு பதில்:

எனக்கு தெரிந்த வரை அந்த ப்ளேன் எந்த நாட்டை சேர்ந்ததோ அந்த நாட்டின் citizen!

பொதுவாக கர்ப்பமனா பெண்களுக்கு 8 மாதங்கள் முடிந்து விட்டால் விமானத்தில் ஏற்ற மாட்டார்கள் (71/2 மாத கர்ப்பம் என்று டாக்டரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு வந்து விமானம் ஏறிய அனுபவம் உண்டு!)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//அப்போ கடலுக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்தா சொந்த ஊருன்னு எதைச் சொல்லுவீங்க?"//

கடல்பகுதி சொந்தமான நாட்டின் பிரசை (என்று நினைக்கிறேன்)!! :O)

என் பெற்றோரின் ஊரை நான் சொந்த ஊராய்ச் சொல்வதில்லை. ஏனென்டா அது எனக்குச் சொந்த ஊரில்ல.

G.Ragavan said...

ஊரு பிரச்சனை எல்லாருக்கும் இருக்கு போல. தூத்துக்குடில பொறந்தேன். கொஞ்ச வருசம் வளந்தேன். அப்புறம் தமிழ்நாடு முழுக்க சுத்தீட்டு இப்ப பெங்களூரில் இருக்கேன்.

ஆனாலும் சொந்த ஊருன்னு யார் கேட்டாலும் தூத்துக்குடிதான். அதுக்குதான் மொத மரியாதை.

கடலுக்கு மேல பறந்தா அந்தக் கடல் பகுதி எந்த நாட்டில் இருக்கோ அந்த நாட்டுப் பிரஜை. ஆனால் இது அரபு நாடுகளுக்குப் பொருந்தாது. அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் குடியுரிமை தருவதில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

//அதற்கு அந்த மலையாளி "மதுரைன்னா கோவில்பட்டிக்குப் பக்கத்தில் தானே இருக்கு?" என்று திருப்பி கேட்டிருக்கிறார்//.. இது உண்மையாகவே நடந்திருக்கலாம் என நானும் நம்புகிறேன்.

இந்த மெட்ராஸுங்கறது வேலூர் பக்கத்தில தானே இருக்கு? ந்னு கேட்ட வட இந்தியர்களை பார்த்திருக்கிறேன்.

அப்புறம், பிறந்த ஊர், வளர்ந்த ஊர் அப்படின்னு எல்லாம் ரெண்டு மூணு ஆப்ஷன்ஸ் இருந்தா, எந்த ஊர் நமக்கு ரொம்ப புடிச்சிருக்கோ அதை சொல்லிக்க வேண்டியதுதான்.. நம்ம துளசி மேடம் இல்லை? அவங்கள கேளுங்க - எந்த ஊர் பத்தி சொன்னாலும், அட ஆமாம் - நானும் அங்கே ரெண்டு வருஷம் இருந்திருக்கேன்"னு சொல்லிருவாங்க - கவனிச்சிருக்கீங்களா?:-)

kirukan said...

Ganesh........

There's an ICICI bank in Kovilpatti.. It was earlier a branch of Madura Bank. Ippadi Kavuthu viduriye??

Ama Ellarukum Kovilpatti enga irukunnu theriyuma???

Oru Unmaiya Solren......... Kovilpatti Enga Ooruku pakkathila than iruku.......

Enga Ooru? Kandu pidipavaruku 1000 PorKaasukal parisu.. (But Ganesh, you are not eligible to participate in this compettion)

For info I am also an NECian.

குழலி / Kuzhali said...

//கோவில்பட்டியில் ஐசிஐசிஐ பேங்கும் கிடையாது ஏடிஎம் செண்டரும் கிடையாது.
//
உண்மையாலுமா? ஐசிஐசிஐ பேங்கும் ஏடிஎம் செண்டரும் இல்லாத குக்கிராமமே இல்லைனு கேள்விப்பட்டேன்...

////அப்போ கடலுக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்தா சொந்த ஊருன்னு எதைச் சொல்லுவீங்க?"ன்னு கேட்டேன்//
கடலூர்னு சொல்லலாமே..
//
யாருப்பா எங்க ஊரை இழுக்கிறது

Ganesh Gopalasubramanian said...

@வீ.எம்
//அந்த நண்பருக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கா??//
இல்லங்க இன்னும் கல்யாணம் ஆகலை

//நல்ல படிப்பு.. பட்டம் வாங்கிட்டீங்களா??//
ம்ம் அது ஒரு ராயல் சேலஞ்ச் தெரியுமா...

//கடலூர்னு சொல்லலாமே..//
நல்ல கற்பனை வீ.எம். நானும் கொஞ்சம் நகைச்சுவையாக பதிவு போட முயல்கிறேன் ஆனாலும் உங்க அளவுக்கு வர மாட்டேங்குது:-)

//அதுனால எங்க ஊரு பெரிய ஊருனு சொல்லல.. :)//
நாம தாங்க ஆரம்பிக்கணும்

//யாதும் ஊரே , யாவரும் கேளிர் னு போட்டுத்தாக்குங்க.... என்ன சொல்றீங்க கனேஷ்..//
வீ.எம் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா

//தினம் ஒரு பதிவுனு கலக்கறீங்க !! //
ஆமா கொஞ்ச நாள் லீவு விட்டாச்சு இப்போ முழு மூச்சா இறங்கிட்டேன்:-)


@கீதா
//(டிரேட் / பிசினஸ் விளையாட்டில்)//
அப்போ எல்லாம் சென்னை ரொம்ப சீப் ரூ5000/- தான்.

//எவ்வளவு பணம் தேவை என்று தெரியவில்லை. :-))//
எனக்கும் தான்... பில்கேட்ஸ் கிட்ட கேட்கலாம் :-)

@ஆனந்த்
//காஞ்சி//
உங்க காஞ்சி பதிவ இதுக்கு முன்னாடி படிக்கலை ஆனந்த். நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப ஒற்றுமை இருக்குன்னு நினைக்கிறேன் :-))

@ஈஸ்வர்
www.newmadurai.org பார்த்தேன். சீக்கிரமே அவரை தொடர்பு கொள்வேன்.

//நம்ம ஊர என்னோட எழுத்த வச்சே கண்டுபுடிக்கலாம். முயற்சி பண்ணுங்க கணேஷ் //
நாகர்கோவிலா ???

@தாணு
//தெரிஞ்ச டாக்டரைத் தேடி ஊர்விட்டு ஊர் போறது ரொம்ப சகஜமே. அதெல்லாம் சொந்த ஊராகுமா? //
வாஸ்தவம்தான்.. இந்த விஷயத்தை நான் யோசிக்கவே இல்லை.

//ரொம்ப நாள் படிச்சதினால் ஒரு பாசம் வந்து, சொந்த ஊர்னு தோண வைக்குது.//
இப்போ எல்லாம் கோவில்பட்டின்னு சொன்னாலே எனக்கு கண்ணீர் வருது

//நடுவர் தீர்ப்பே(கணேஷுடையது)இறுதியானது!!!//
தாணு உங்களுக்கு எங்க நிம்மதி அதிகமாக கிடைக்கிறதோ (அல்லது கிடைக்கும்னு நினைக்கிறீங்களோ) அது தான் உங்க சொந்த ஊர்.

//நாலாட்டின்புதூர்லேயா படிச்சீங்க? சுப்பையா பாரதி மாஸ்டரைத் தெரியுமா? //
நல்லா தெரியும்...

@அனானிமஸ்
//ஏ.டி.எம் சென்டர்கள்: மேற்கு போலீஸ் நிலையத்துக்கு எதிரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஏடிஎம்; சாத்தூர் ரோடில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இன்னொன்று. //
நான் சொன்னது ஐசிஐசிஐ பேங்க் ஏடிஎம். தவறாக பதிவிட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

@துளசி
//அடைக்க இலே, 'அடிக்க'ன்னு இருக்கணும்.//
ரம்யா சொல்றத பாத்தா அடைக்கவும் செய்வாங்க போலவே....:-)))))

@சுரேஷ்
//கோவில்பட்டிக்கு மதுரை வழியாகத்தானே போயாகனும்... அப்ப பாத்துக்குறோம்.. :-)//
ஐயோ சுரேஷ்.... நான் ஆட்டத்துக்கு வரலையே..... வேற யாராவது "கில்லி" கிடைப்பாங்க...

@ராஜ்
//இதன் காரணமாக் அவ்வப்போது சொந்த ஊரே அன்னியமாகிப்போனது போலவும் தோன்றும். //
இது போல் நிறைய நடப்பதுண்டு

@ரம்யா
//எந்த இடத்தை பற்றி அடிக்கடி நினைக்கறீங்களோ அது தான் உங்க country of domicile.//
உங்களையே நடுவரா போட்டிருக்கலாம். சட்ட சிக்கலிலிருந்து தப்பிச்சிருக்கலாம்.

//பொதுவாக கர்ப்பமனா பெண்களுக்கு 8 மாதங்கள் முடிந்து விட்டால் விமானத்தில் ஏற்ற மாட்டார்கள் (71/2 மாத கர்ப்பம் என்று டாக்டரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு வந்து விமானம் ஏறிய அனுபவம் உண்டு!) //
நல்ல தகவல். நன்றி ரம்யா

@ஷ்ரேயா
//என் பெற்றோரின் ஊரை நான் சொந்த ஊராய்ச் சொல்வதில்லை. ஏனென்டா அது எனக்குச் சொந்த ஊரில்ல. //
ஆமா ஷ்ரேயா பெண்களுக்கு மட்டும் இரண்டு சொந்த ஊர்கள்

@ராகவன்
//கடலுக்கு மேல பறந்தா அந்தக் கடல் பகுதி எந்த நாட்டில் இருக்கோ அந்த நாட்டுப் பிரஜை. ஆனால் இது அரபு நாடுகளுக்குப் பொருந்தாது. அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் குடியுரிமை தருவதில்லை. //
ஹா ஹா நல்ல பதில் ராகவன். உங்க தகவலுக்கும் நன்றி. எனக்கு அரபு நாடுகளைப் பற்றி இப்பொழுது தான் தெரியும்.

@சுரேஷ்
//எந்த ஊர் நமக்கு ரொம்ப புடிச்சிருக்கோ அதை சொல்லிக்க வேண்டியதுதான்..//
சரியா சொன்னீங்க சுரேஷ்

// நானும் அங்கே ரெண்டு வருஷம் இருந்திருக்கேன்"னு சொல்லிருவாங்க - கவனிச்சிருக்கீங்களா?:-) //
துளசி நோட் திஸ் பாய்ண்ட்

@கிறுக்கன்
//Kovilpatti Enga Ooruku pakkathila than iruku//
அடடா.... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

//For info I am also an NECian. //
தெரியும் கிறுக்கன். உங்க பேரு சரவணன் தானே

Ganesh Gopalasubramanian said...

@குழலி
//யாருப்பா எங்க ஊரை இழுக்கிறது //
வீ.எம் எங்க ஆளைக் காணோம்..... அடிக்க ஆள் கிளம்பிட்டாங்க

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//ஆமா ஷ்ரேயா பெண்களுக்கு மட்டும் இரண்டு சொந்த ஊர்கள்//

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை கணேஷ்.(அந்தக் கருத்தில் எனக்கு நம்பிக்கையுமில்லை)

நான் வளர்ந்தது பெற்றோரின் ஊரிலல்ல. வேறொரு ஊரில். அவர்களின் ஊருக்குப் போவது விடுமுறைக்கு மட்டுமே. நான் வளர்ந்த ஊரைத்தான் எனக்கு மிக நன்றாகத்தெரியும். அதைத்தான் நான் எனது சொந்த ஊராகச் சொல்வது. இதையே நான் சொல்ல வந்தேன்.