Tuesday, September 27, 2005

குறுகிய வட்டம்

எனக்கு தெரிந்து அதிகாரப்பூர்வமாக தமிழ்மணத்தில் நடந்த மீமீ ஒன்று தான். அது புத்தகங்கள் பற்றிய மீமீ. ஆனால் சமுதாய பிரச்சனைகள் தலை தூக்கும் பொழுது ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டதில் அந்த பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து ஆய்வறிக்கை சமர்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதில் சிலருக்கிடையில் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பில் போய் முடிகிறது. பதிவுகள், அவற்றின் எதிர் பதிவுகள் என இது ஒரு மெகா சீரியல் போல நீண்டு கொண்டே போகிறது.

இதில் சாதி, மதம் தொடங்கி சானியா குஷ்பு வரை அடக்கம். ஏனோ எனக்கு இந்த மாதிரியான பதிவுகள் பிடிக்காமலே போய் விடுகின்றன. கற்பென்பது என்ன என்பது பற்றி கடந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகள் மட்டுமே ஒரு ஐம்பதை தொட்டிருக்கும் என நினைக்கிறேன். அதே போல் கடந்த வாரம் சானியா வாரம். சென்ற மாதம் தங்கர்பச்சன் மாதம் என சன் தொலைக்காட்சி போல இந்த சிறப்புகளும் நீண்டு கொண்டே போகின்றன. சமுதாய பிரச்சனைகள் அலசப் பட வேண்டியனவே. ஆனால் அதற்காக அவரவர்க்கு இருக்கும் தனித்தன்மையை தவிர்த்து விட்டு பதிவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமுதாய பிரச்சனைகள் எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றனவோ அப்பொழுதெல்லாம் எல்லோருமே கிட்ட தட்ட ஒரே மாதிரியான விஷயத்தை திரும்ப திரும்ப எழுதுவது பொல தோன்றுகிறது. இப்படியே வாரம் ஒரு பிரச்சனை தொடருமாயின் தமிழ்மணத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒவ்வொரு வாசகர் வட்டம் இருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு வலைஞர் ஒரு பிரச்சனையைப்பற்றி ஒரு பதிவு போட்டாரென்றால் அவருடைய வாசகர் வட்டம் அந்த பதிவில் பின்னூட்டுவதன் மூலம் அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். அதை விட்டு ஒவ்வொருவரும் ஒரு தனி பதிவு போட முயல்வது வாசகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.

கருத்துக்கள் விரிவானதாக இருப்பினும் சிதறி விடுவதால் அவை எல்லோருக்கும் சென்று சேரவில்லையோ என தோன்றுகிறது. ஒவ்வொருவரின் நடையும் கருத்தும் மாறுபடுமாயினும் பின்னூட்டம் மூலமே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வலைப்பூவின் நோக்கமாம் தகவல் சேமிப்புக்கும் உதவும்.

கருத்துக்களைச் சொல்லும் எழுத்துக்கள் மட்டும் குறுகிய வட்டத்தில் இருக்கலாமோ?

(இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறிருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.)

23 comments:

SAVANT said...

கோயிஞ்சாமி சொன்னது போல பின்னூட்டத்திலேயே சொல்லாம்னு சொல்றீங்களா. நல்ல விஷயம் தான். எல்லாமே மொத்தமாக கிடைக்கும்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நான் நினைத்துக்கொண்டிருந்ததை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் கணேஷ்.

-மதி

சிவா said...

நெசம் தான் கணேஷ். அவரவர் கதைகள், கவிதைகள், அனுபவங்கள் போய், ஒரெ மாதிரி போய் விடுகிறது.

வீ. எம் said...

கரெக்ட் கனேஷ்.. மிகச்சரி..

அதான் பாருங்க.. இந்த மாதிரி மேட்டரெல்லாம் நம்ம பதிவா போடுறதில்லை.. யாராச்சும் போட்ட போய் நம்ம கருத்தை சொல்றதோட சரி..

ஒரு படத்தை போட்டு கதை சொல்றது , அப்புறம் ஒரு காணவில்லை ..அப்புறம் நாமளே வரையும் கார்ட்டுன் .. குட்டிக்கதைகள்.. இப்படித்தான் நம்ம பதிவுகள் போகுது.. :)

G.Ragavan said...

உண்மைதான் கணேஷ். அதனால்தான் நான் குஷ்பூ விவகாரத்தில் பின்னூட்டங்களை மட்டுமே போட்டுவிட்டு, என்னுடைய பிளாக்கில் ஒரு கதையைப் போட்டிருந்தேன். அதில் தனித்துவம் இருக்கிறதுதானே.

சின்னப்பையனானாலும் நல்லா கருத்து சொல்றே நீ. பாராட்டுகள்.

Vaa.Manikandan said...

i cannot read ur blog.some font problem is there

Ganesh Gopalasubramanian said...

சந்திரன் மதி சிவா வீ.எம் ராகவன்

எல்லோருக்கும் என் நன்றி

மணி என்னவென்று எனக்கு புலப்படவில்லை. சீக்கிரம் சரி செய்கிறேன்.

வீ.எம் !! பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாதென்று நினைத்து வந்தேன். மணி எனக்கு நல்ல நண்பர் அவரது பதிவில் கருத்து சொல்ல வேண்டியது என் கடமை ஆதலால் தான் பின்னூட்டமிட்டேன். அதுவே வினையாகிப் போய்விட்டது.

ராகவன் உங்கள் பாணியில் நீங்கள் பதிவிடுங்கள்.

ஜெகதீஸ்வரன் said...

///வாசகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும். //

உண்மையைச் சொன்னீர்கள் !! சலிப்புத் தட்டுவதை மறுக்க முடியாது !!

தாணு said...

உண்மை கணேஷ். குஷ்பூ பிரச்னை பற்றி பெரிய பதிவொன்று எழுதினேன். ஆனால் தமிழ்மணத்தில் அந்த மலர் நாரத் தொடங்இயதும் என் பதிவை ரத்து செய்துவிட்டேன். தேன் துளியில் என் கருத்து வந்ததை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும்பொருட்டே ஒரு பதிவாகப் போட்டேன். உங்கள் சுட்டியும் பார்த்தேன். அடிக்கடி இதுபோல் வரம்புமீறல்களைப் பார்த்து வருந்தி , ஒரு கவிதை எழுதிவிட்டு, சில நாள் மெளனம் காத்து, பிறகு எழுத வந்து- இது என்ன ஒரு சங்கிலித் தொடர் டார்ச்சர்.
உள்ளங்கையில் உலகத்தைப் பார்த்தது போய், உலகமே சாக்கடை நாறுவதுபோல் உள்ளது. நாமாவது கொஞ்சம் விலகி, அனுபவங்கள், பயணத் தொடர் , கடின்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Narain Rajagopalan said...

அதானே ;-)

ஜோ/Joe said...

கணேஷ்,
மிகச்சரியாக சொன்னீர்கள்..பாராட்டுக்கள்.

neyvelivichu.blogspot.com said...

ganesh,

i agree withyou... everywhere there will be somebody who has a alternate opinion.. right from our own house.

but sometimes when you see somebody is manipulating it to their advantage, some one has to write about that.. ofcourse the wrong side of the opinion will also come out.. but if everybody leaves it to the others or blame it on their unwillingness to get into an argument, we will live with opinions that may not match our thinking..

its like this only corruption came in the country.. if one person takes money, and his manager or colleague just waits for him to correct, then some one will also start..

express your opinion without hiding them behind modesty..

if people dont like that they will not read it..

anbudan vichchu..

ps. may be i am wrong.. but that is how i think.. and this is my opinion

Anonymous said...

"இதைக் கூட தனிப்பதிவாய் இடாமல் எங்கேயாவது பின்னூட்டமாய் இட்டு இருக்கலாமோ?? "
என்ற எனது கேள்வியை தனிப்பதிவாய் இடாமல் இங்கேயே பின்னூட்டமாய் இடுகிறேன்.

சிவா said...

நீங்க சொன்னாலும் சொன்னீங்ன..அத்ற்க்கப்புறம் வந்த பதிவுகள் பாதி தங்க தலைவி குஷ்புவ பத்தி தான்..ஓயாது போல இருக்கே...

வீ. எம் said...

Dont worry abt those anonymous comments Ganesh

Ganesh Gopalasubramanian said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல

@தாணு
// உள்ளங்கையில் உலகத்தைப் பார்த்தது போய், உலகமே சாக்கடை நாறுவதுபோல் உள்ளது. நாமாவது கொஞ்சம் விலகி, அனுபவங்கள், பயணத் தொடர் , கடின்னு ஆரம்பிக்க வேண்டியதுதான். //
Lesser men discuss people, average men discuss events and Great men discuss ideas. எனக்கு வேற ஒண்ணும் சொல்ல தோணலைங்க. நம்மை நாமே செதுக்குவதற்கு கொஞ்சம் காலமாகும் என நினைக்கிறேன்.

@விச்சு
//express your opinion without hiding them behind modesty..
if people dont like that they will not read it..
anbudan vichchu..
ps. may be i am wrong.. but that is how i think.. and this is my opinion//
விச்சு நல்ல விச்சு இந்த மாதிரி யோசிப்பதற்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் தேவைப்படுகிறது. அது இப்பொழுது தான் கிடைக்க ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன்.

@இராஜேஷ்
"இதைக் கூட தனிப்பதிவாய் இடாமல் எங்கேயாவது பின்னூட்டமாய் இட்டு இருக்கலாமோ?? "
நானும் நினைத்தேன். ஆனால் எங்கே இடுவதென்ற குழப்பத்தில் விளைந்தது தான் இந்த பதிவே!!
எங்கே இடமுடியும்
"பேசலாமி"லா அல்லது "தேன்துளி"யிலா? (நான் சொன்னது இரண்டு தான் சொல்லாமல் போனது நிறைய இருக்கும்)

@சிவா
// நீங்க சொன்னாலும் சொன்னீங்ன..அத்ற்க்கப்புறம் வந்த பதிவுகள் பாதி தங்க தலைவி குஷ்புவ பத்தி தான்..ஓயாது போல இருக்கே...//
சரி விடுங்க நாம நம்ம வேலைய பார்ப்போம்.

@வீ.எம்
//Dont worry abt those anonymous comments Ganesh//
பார்த்தவுடன் இருந்த அந்த பதட்டம் இப்பொழுது இல்லை. அவர் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு அப்படி தோன்றியிருக்கிறது. இதில் கோபப் பட ஒன்றுமில்லைன்னு நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

துளசி கோபால் said...

என்னப்பா நடக்குது?

குஷ்பு என்ன சொன்னாங்க,'கல்யாணத்துக்கு முன்னாலே எல்லாப் பொண்ணுங்களும் செக்ஸ் வச்சுக்கணுமுன்னா?'
இது அவுங்கவுங்க சொந்த விருப்பம் இல்லையா? அப்படி வச்சுக்கறவங்க இந்தக் கழிசடை( ங்கறது தெரியாமத்தான்!)
கிட்டே இருந்து நோய் பிடிச்சுக்கப்போகுது, தேவையில்லாம புள்ளைங்களைவேற பொறந்துறப்போகுது. அதனாலே
ஜாக்கிரதையா இருங்கோ'ன்னு சொன்னது மெய்யாலுமா தப்புங்கறீங்க?

இது உலகத்துலே இருக்கற எல்லாப் பொம்பிளைங்களுக்கும்தானே?

ச்சின்னச்சின்னதா வீடுங்க வச்சுக்கிட்டு இருக்கற ஆம்புளைங்க, குறிப்பா அரசியல்வாதிங்கதான் ச்சும்மா இருக்கற
பொம்பிளைங்களை உசுப்பிவிட்டுகிட்டு கலாட்டா செய்யறாங்க.

விதவைத் திருமணம் செய்யறதை ஆதரிக்கிறீங்கல்லே, அப்ப அந்தப் பொண்ணு ரெண்டாங்கல்யாணம் செய்யறப்ப
'கன்னிப் பொண்ணு'ன்னு விளம்பரம் செய்யணுமா?

அட போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கணேஷ் & துளசி - நெத்தியடி!

NambikkaiRAMA said...

//தவறிருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்//
கணேஷ் நீங்கள் சொன்னதில் தவறு கொஞ்சம் கூட இல்லை. என் கருத்து நும் கருத்தே!

அன்பு said...

அருமையா சொல்லிருக்கப்பா கணேஷ், என்னோட கவலையும் அதான். கடந்த சில வாரங்களில் அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் இல்லாமல் வரும் பதிவுகள் மிகக் குறைந்துவிட்டது. இதற்கிடையில் யாராவது நல்லதொரு பதிவு இட்டால்கூட இந்த களேபேரத்தில் அது காணமால் போய்விடுகிறது.

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

//தவறிருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்//
இதிலென்ன தவறு இருக்கிறது. இப்படி அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருந்தா தலைவராக முடியாது பார்த்து...:)

Ganesh Gopalasubramanian said...

@துளசி

குஷ்பு பற்றி எழுதிய எல்லோர் பதிவிலும் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதற்கு என் நன்றி.

@ராமா, @அன்பு ஆதரவுக்கு நன்றி

@அன்பு
//இப்படி அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருந்தா தலைவராக முடியாது பார்த்து//
என்ன அன்பு இப்படி அநியாயத்து மாட்டி விடுறீங்க பாவம் சின்ன பையன் பொழச்சு போகட்டும்னு விட்டுற மாட்டாங்களா என்ன?

kirukan said...

You views are right.. Ganesh.

Anonymous said...

:)