Monday, October 11, 2010

கோவில்பட்டி திமிர்

கோவில்பட்டி சிறிய கரிசல் நகரம். அங்கேயிருந்து நெறைய படைப்பாளிகள் வந்திருக்காங்க. 1980களின் தொடக்கத்திலேயே அந்தச் சிறிய நகரத்தில் பேர் சொல்லக்கூடிய 20 படைப்பாளிகள் இருந்தனர். கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலர் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தனர். தேவதச்சன், பிரதீபன், கௌரிசங்கர், க்ருஷி வாத்தியார், அப்பாசாமி, வித்யாசங்கர் போன்றவர்கள் இருந்தனர். பின்னர் சமயவேல், ஜோதிவிநாயகம் போன்றவர்கள் அங்கு வந்தனர்.

இவர்களோடு என்னைப் போன்றவர்கள் எழுத வந்தோம். அது நான் பட்டாளத்திலிருந்து திரும்பிய நேரம். என்மனம் போல கோவில்பட்டி பலவிதமான சிந்தனையோட்டங்களுடன் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு தெருமுனையிலும் ஒரு சிந்தனைப்போக்கு நின்று அழைத்துக் கொண்டிருந்தது. பிரான்சு நாட்டில்கூட இப்படி இருந்திருக்குமா என்று தெரியாது. `ஜோதிபாசு சலூன்' வாசலில் பால்வண்ணம் போன்றவர்களுடன் ஒரு கூட்டம் இடதுசாரி இலக்கியம் பேசிக்கொண்டிருக்கும். அங்கிருந்து தெற்கு பஜார் முனையில் ஒரு நகைக்கடை வாசலில் தேவதச்சனுடன் ஒரு கூட்டம் ஜி. கிருஷ்ணமூர்த்தியின் உரைகளை அலசிக் கொண்டிருக்கும். அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு தெற்கு பஜாருக்குள் நடந்தால் ஒரு முழு நேர இளம் காதலர் குழு அன்றன்று நடந்த சந்திப்புகள், கடிதப் போக்குவரத்துகள் குறித்து மனம் நடுங்கப் பேசிக்கொண்டிருக்கும். தாஸ்தாயெவ்ஸ்கியின் `வெண்ணிற இரவுகளை' விட்டு ஒருபோதும் வெளிவரத் தயாராக இல்லாத குழு. இவர்களைத் தாண்டி சில தப்படிகள் உள்ள படிக்கட்டுகளில் ஏறி காந்தி மைதானம் வந்தால் அது திறந்தவெளி விவாதக் கூடமாக மாறியிருக்கும். இரவு முழுவதும் அங்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல சிந்தனையுள்ளவர்களும் அங்கு கலந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கோவில்பட்டியில் நான் பழகி வந்த மனிதர்களின் மனநிலை காசு,பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்காரியங்களுக்குச் செலவிடுபவர்களாக இருந்தது.

- ச.தமிழ்செல்வன் (http://groups.google.co.in/group/keetru/msg/c4c66bb6cd8cc744)

No comments: