விக்கி என்கிற விக்னேஷ்ஷை அவனின் பத்தாவது வயதிலிருந்து எனக்குத் தெரியும். அது நான் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி சென்ற முதல் வருடம். வயது வசத்தில் கல்லிகாஸ்கின்ஸ் காற்சட்டைகளுக்கு மாறி, முதன் முதலாக அதை அணிந்து வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்ற பொழுது “அண்ணே! பாகி பாண்ட் புதுசா இருக்கு” என்று என்னிடம் கேட்டுவிட்டு அவன் அப்பாவிடம் “அப்பா கணேஷ் அண்ணன் பாண்ட்ட பாருங்க” என்று என்னை நடுத்தெருவிலேயே நெளிய வைத்த துடுக்கு பையன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் என நினைக்கிறேன். எங்கள் வீடிருந்த தெருவின் முனையில் தான் அவனின் வீடிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து படிப்பு, பயணம், நுகர்வு, வழிபாடு என எல்லாவிதமான தன்னார்வ-சமூக நடவடிக்கைகளுக்கும் அவனது வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். பெரும்பாலும் எந்நேரமும் விக்கி தெருவில் விளையாடிக்கொண்டு தான் இருப்பான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில சொன்னது போல அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பால்யத்து என்னை நினைவு படுத்துவான். வெவ்வேறு நிலைகளில் என்னுடையதும் அவனுடையதுமான பரிணாமம் ஒரே தெருவில் நிகழ்ந்து கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்.
விக்கியின் அப்பா இன்முகத்துடன் நன்றாக பேசுவார். ஹைபர் டென்ஷன் என்னும் இரத்த அழுத்தம் பரம்பரை வியாதி என்பதற்கு மருத்துவர்கள் இரு காரணம் கூறுவர் ஒன்று மரபியல் சார்ந்தது இன்னொன்று வாழ்வு முறை சார்ந்தது. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரனான விக்கியின் அப்பாவிற்கு இன்முகமும், பேச்சு சாதுர்யமும், விருந்தோம்பலும் வாழ்வு முறையாலும் மரபியல் வழியாகவும் அவரின் தாத்தாவிடமிருந்து வாய்த்திருக்கலாம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதாலும் எனக்கும் அவரின் மேல் மரியாதை அதிகம். விக்கியின் அம்மா எனது அப்பாவுடன் பணி புரிந்தவர் என்பதாலும், ஒரே தெருவில் வசித்து வந்தோம் என்பதாலும் அடிக்கடி அவருடன் பேச நேர்ந்ததும் உண்டு. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் வெற்றிகரமாக இடம் வாங்கிவிட்ட என்னிடம் விக்கியின் அப்பா அடிக்கடி பேசியது அவனுடைய கல்வி சார்ந்த விஷயங்களுக்காகத்தான். மகனின் படிப்பு பற்றிய பேச்சுக்களில் மட்டும் அவரின் முகத்தில் ஒருவித கவலை ரேகை படியும். இயல்பாகவே இன்முகத்துடன் இருக்கும் அவரின் இந்த பேச்சுக்கள் மட்டும் என்னை மிகவும் நெருடவே செய்தன. ”கவலைப்படாதீங்க சார், விளையாட்டுத்தனம் குறைஞ்சா தன்னால படிக்க ஆரம்பிச்சுடுவான்” என நானும் எனக்குத் தெரிந்த பக்குவ ஆறுதல்களித்ததுண்டு. எந்நேரமும் தெருவில் விளையாடும் சிறுவனிடம் அப்பொழுது நல்லுரை வழங்கும் அளவிற்கு நான் வளரவில்லை. அதனால் விக்கியிடம் அவனது அப்பாவின் கவலைகளைப் பற்றி நான் பேசியது கிடையாது.
விக்கியிடம் பேசுவதற்கு நிறைய இருந்தது. எங்கள் தெரு சிறுவர்கள் கண்ணாமூச்சி ஆட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கார்டூன் நெட்வொர்க் பக்கமும், கணினி விளையாட்டுக்களின் பக்கமும் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்த காலமது. விக்கியிடம் அடிக்கடி நான் கேட்கும் கேள்வி “டிவி பார்க்கலையா விக்கி?”. ”கார்டூன் நெட்வொர்க் சூப்பரா இருக்குன்னு எல்லாரும் பார்க்கறாங்க நீ பார்க்கலையா?”ன்னு கேட்டா, “ஒரு ப்ரோக்ராம் முடிஞ்சதும் அம்மா படிக்க சொல்லிருவாங்க. அரை மணி நேரம் தான் பார்க்க முடியும்”னு அந்த வயதில் ”ப்ரோக்ராம்” என்பதற்கான சரியான அர்த்தத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவன். ஒரு முறை டிவிஎஸ் சாம்ப்பில் (TVS Champ) சென்று கொண்டிருந்த என்னை அவனது மிதிவண்டியில் போட்டியிட்டு வெற்றி பெற முயன்றவன். ஒல்லியான தேகமாதலால் அவனிடமிருந்த சுறுசுறுப்பு வியப்பிற்குரியது. ”பால்யத்து என்னை” என நான் சொல்வதும் கூட அவனிடம் நான் கவனித்த அந்த சுறுசுறுப்பை எனக்கான அடையாளமாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியாகக் கூட இருக்கலாம். விக்கியிடம் பேசுவதில் கிடைக்கும் விஷயங்களுக்கும் அவனுடைய பெற்றோர்களிடம் அவனைப் பற்றி பேசுவதில் கிடைக்கும் விஷயங்களுக்கும் இருந்த வித்தியாசம் ”தலைமுறை இடைவெளி” என்பதற்கான அர்த்தமாக நான் கருதினேன். இப்படி அவனிடமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் பல.
நான் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பு முடித்த தருணம் விக்கியின் குடும்பம் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தது. விக்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் வாரயிறுதி வகுப்புக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் பார்த்து பேசியிருக்கிறேன். அவ்வப்பொழுது அவனது அப்பாவையோ அம்மாவையோ பார்க்க நேரிடுகையில் அவனைப் பற்றிய விசாரணைகளில் விக்கி வளர்ந்து கொண்டிருந்தான். இரு மாதங்களுக்கு முன்பு அவன் அப்பாவை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். நான்கைந்து வருடம் கழித்து அவரைப் பார்த்தேன். தலை நரைத்து கொஞ்சம் வயதானவராக தோன்றினார். அவருடைய விக்கி பற்றி கவலைகளும் வயோதிகம் அடைந்திருந்தது. இப்பொழுது விக்கி இரண்டாமாண்டு பொறியியல் படிப்பதாக கூறினார். விக்கியின் நண்பர்களுடனான ஊர் சுற்றல் பற்றியும், அவனுடைய பேராசிரியர்களின் புகார்களைப் பற்றியும் குறைபட்டு கொண்டிருந்தார். ”பத்தாவது பாசாவானான்னு யோசிச்சோம். எப்படியோ பாசாகிட்டான். பண்ணிரெண்டாவதுல நல்ல மார்க் வாங்குவானான்னு கவலைப் பட்டோம். ஓரளவிற்கு நல்ல மார்க் வாங்கி காலேஜ்ஜும் சேர்ந்திட்டான்” என சொன்னார். இடையிடையே அவனுடைய சாதனைகளையும் அவர் பட்டியலிட்டது விக்கியை அவர் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதனைத் தெளிவு படுத்தியது. விக்கியின் அப்பா பேசிய விதத்திலிருந்து அவரிடம் அவனது எதிர்காலம் பற்றிய நம்பிக்கை முளைத்திருப்பதாக நினைத்துக் கொண்டேன். என்னுடைய அவதானிப்பில் விக்கி கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை அவ்வளவே. பெற்றோர்கள் எப்பொழுதும் கவலைப் பட்டுகொண்டிருக்கும் விதத்தில் பிழைகள் செய்யும் சீரழிந்த சிறுவனல்ல. அவனின் முழு கவனமும் விளையாட்டிலிருந்ததனால் நல்ல மதிப்பெண் பெறாத மாணவனாக அவன் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.
இந்த வாரம், வாரயிறுதி விடுமுறைகளில் நவராத்திரி கொண்டாட கோவில்பட்டி சென்றிருந்தேன். அதிகாலை நான்கு மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் சென்றிறங்கினேன். அப்பாவை அந்த நேரத்தில் எழுப்ப வேண்டாம் என நினைத்து அருகிலிருந்த ஆட்டோக்காரரிடம் விசாரிக்கலானேன். அவர் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நூற்றைம்பது ரூபாய் கேட்கவே பழைய பேருந்து நிலையம் வரை நடக்கலானேன். புதிய பேருந்து நிலையத்திலிருந்து இளையரசநேந்தல் ரோடு வழியாக நடக்கையில் சாலை எங்கும் விளம்பரத் தட்டிகள். ”கவிஞர் கனிமொழியே, எதிர்காலமே, அஞ்சா நெஞ்சனின் சகோதரியே, நாளைய இந்தியாவே” என விதவிதமாக வாசகங்களைத் தாங்கி நின்று கொண்டிருந்தன. வேலை வாய்ப்பு பயிற்சி முகாமுக்காக கனிமொழி அன்று கோவில்பட்டி வருகிறார் என அறிந்து கொண்டேன். ஒருவாறு ஐந்து மணிக்கு வீட்டை சென்றடைந்தேன். எங்கள் வீடிருந்த பகுதி சண்முக சிகாமணி நகர். அங்கிருக்கும் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தான் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாம் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாயிற்று. ஒலிபெருக்கிகளின் தயவில் முகாமில் கனிமொழி பேசியதை எங்கள் வீட்டிலிருந்தபடியே நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். மேற்கோள்களுடனும் இந்த முறை உத்வேகமிக்க பாடல்களுடன் கனிமொழி நன்றாக உறையாற்றினார். முகாம் மதியம் ஒரு மணியளவில் முடிவுற்றது.
மாலை ஐந்து மணியளவில் எதிர் வீட்டு சிறுவன் செல்வம், முகாமிற்கு வந்த யாரோ ஒருவன் சாலை விபத்தில் இறந்து விட்டதாக தகவல் சொன்னான். என்னால் முடிந்த பச்சாதாப வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு அம்மாவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றேன். வீட்டிற்கு வரும் பொழுது எங்கள் தெரு முனைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் தான் தெரிந்தது இறந்த அந்த மாணவன் விக்கி என்று. அவனும் அவனுடைய நண்பர்கள் இருவரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது வாகனமொன்று மோதி தலையில் அடிபட்டு சாலையிலேயே விக்கியின் உயிர் பிரிந்திருக்கிறது. மூன்று நபர்கள் ஒரே வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். அதில் மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு தலையில் அடிபட்டதனால் விக்கியின் உயிர் பிரிந்திருக்கிறது. தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்தவன் இன்று அதே தெரு முனையின் பேசு பொருளாக ஆகியிருந்தான். என்னை அறியாமல் அவனிடம் பேசிய விஷயங்களின் நினைவுகளுடனும் சில கண்ணீர்த்துளிகளுடனும் அன்றைய இரவு கழிந்தது.
விக்கிக்கு இப்பொழுது இருபது வயதிருக்கும். ஒன்பதாவது வகுப்பிலேயே இரு சக்கர வாகனம் ஓட்ட ஆரம்பித்திருந்தவன், கல்லூரி மூன்றாமாண்டு படிக்கையில் வாகனத்தில் சென்றதொன்றும் வியப்பான விஷயமில்லை. ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் ஒன்பதாம் வகுப்பில் லைசன்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிச் சென்றான். இன்று சாலை விதிகளை மீறி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். நான் பார்த்த வரையில் கோவில்பட்டியில் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருவதும், டியூசன் செல்வதும் வழக்கமான விஷயமாகி விட்டது. இந்த வழக்கம் ஒரு துடுக்கான இளைஞனின் உயிரைப் பறித்து விட்டிருக்கிறது. இதில் பள்ளிகளின் கவனமும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. மாணவர்களும் தினம் மூன்றோ அல்லது நான்கோ டியூசன் செல்கிறார்கள். அவர்களின் உடல் அயர்ச்சியைக் கருதி பெற்றோர்களும் வாகனங்களை வாங்கி கொடுக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை.
மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் பள்ளியிலேயே கற்பிக்கப் படல் வேண்டும், பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் வகுப்புகள் எடுக்கக் கூடாது, மாணவர்கள் பள்ளிகளுக்கு இரு சக்கர-நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லக் கூடாது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும். இல்லையெனில் எண்ணற்ற விக்கிகளை இழக்க நேரிடும்.
1 comment:
இதுபோல் நடந்த சில மரணங்கள் எனக்கும் வருத்தம் அளித்திருக்கிறது.
மணி சார் மகன் மரணம் ஞாபகம் வருகிறது.
Post a Comment