Wednesday, September 17, 2014

தலைமுறை இடைவெளி...

தலைமுறை என்பது எதைச் சார்ந்த வரையறை என்பதில் இப்பொழுதெல்லாம் எனக்கு பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. டிவி விளம்பரத்தில் பாட்டி பேத்திய ”ஹாட்டா” இருக்கே என்கிறார். என்னை மாதிரியே சுற்றம் முற்றம் பார்த்து ஒரு ஏழு வயது சிறுவன் அதே விளம்பரத்தைப் பார்த்து குறுநகை உதிர்க்கிறான். ”போஸ்டல் சர்வீஸ் இப்போ ரொம்ப கஷ்டமாயிருக்கு. எல்லாம் கம்ப்யூட்டரைஸ் ஆயிடுச்சு”ன்னு ஆறு வருஷம் முன் வி.ஆர்.எஸ் வாங்கிய அம்மா தினமும் ஃபேஸ்புக்ல அப்டேட்ஸ் அனுப்புகிறார். வீட்டில் வேலை பார்க்கும் அம்மாளும், என் வீட்டம்மாளும் (வேலை பார்க்கும் அம்மாளை பார்க்கும் வேலை பார்க்கும் அம்மாள் ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்பா) ப்யூட்டி பார்லர் பத்தி பேசிக்கறாங்க. அந்த அம்மாளுக்கும் என் வீட்டம்மாளுக்கும் வயது வித்தியாசம் 35, வருமான வித்தியாசம் ஒரு 20ஆயிரம் வரை இருக்கலாம் (யாருக்கு அதிக சம்பளம் என்பது எனக்கு குழப்பம் தரக்கூடிய விஷயம்). ஐந்து வயது ஆகும் பக்கத்து வீட்டு பாசு, மாமா உனக்கு இன்னும் ஒழுங்கா பேசத் தெரியலன்னு சொல்வது வரை நிறைய பார்த்து கேட்டாகி விட்டது. என்ன சொல்ல வர்றேன்னா இப்படி எல்லா விதத்திலயும் தலைமுறை என்பது வயதைத் தாண்டிய, விஷய ஞானத்தைத் தாண்டிய, வருமானத்தைத் தாண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அப்போ “தலைமுறையை” எதைக்கொண்டு வரையறை செய்வது?

சென்ற வாரம் வீட்டிற்கு சுவாமிநாதன் சார் வந்திருந்தார். அம்மாவுடன் 20+ ஆண்டுகள் தபால்துறையில் வேலை பார்த்தவர். அவருடைய முதல் பையனும் என் தம்பியும் வகுப்புத் தோழர்கள். வி.ஆர்.எஸ் வாங்கிய அம்மாவுக்கு தபால்துறை பற்றிய விஷய ஞான வடிகால் அவரே. இப்போ வந்திருக்கிற சிஸ்டமெல்லாம் பழசை விட ரொம்ப மோசம். ஸ்பீடு பெர்ஃபார்மன்ஸ் எதுவும் சரியில்ல, பாடாவதி நெட் கனெக்‌ஷென் வச்சிகிட்டு காலம் தள்ளறது ரொம்ப கஷ்டாமிருக்குன்னு என்றார். பேப்பர்ல அக்கவுண்ட் இருந்த காலத்துல ஒரே நாள்ல எல்லா வேலையும் முடிஞ்சிட்டிருந்ததாகவும் கணினி மயமான வேலைகள் முடங்குவதற்கு முக்கிய (மலச்சிக்கல் காரணமா முக்கவில்லை) காரணம் தொழில்நுட்பத்தில் இருக்கும் சார்புத்தன்மை (dependency) என குறைபட்டுக்கொண்டார். தினமும் பெர்ஃபார்மன்ஸ் அனாலிசிஸ் செய்யும் எனக்கு அவர் சொல்வது மேலோட்டமான விஷயமா தெரியவில்லை. ஸ்பீடு என்பதை தனியாகவும் பெர்ஃபார்மன்ஸ் என்பதை தனியாகவும் தெளிவாக சொல்கிறார். ஆக வயதில் மூத்த அந்தத் தலைமுறை என நான் வரையறை செய்த தலைமுறை அந்த வரையறையில் இல்லை.

சுவாமிநாதன் சார், எங்கள் வீட்டிற்கு வந்த விஷயம் இன்னும் சுவாரஸ்யமானது. தனது மூத்த மகன் இப்பொழுது வங்கியில் வேலை பார்ப்பதாகவும் அவனுக்கு வரன் பார்ப்பது சம்பந்தமாக சுவாமிநாதன் சார் அப்பாவிடம் பேச வந்திருந்தார். என் தம்பிக்கும் அவருடைய மகனுக்கு ஒரே வயது. 25 நடக்கிறது. எங்கள் வீட்டில் என் தம்பிக்கு வரன் பார்ப்பது பற்றி இன்னும் நினைக்கவேயில்லை. அதனால் எனக்கு அவர் சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் கேட்டே விட்டேன். என்ன சார் அதுக்குள்ளேவா? 25தான நடக்குது என்றதற்கு, ”நானும் அப்படித்தான் நினைச்சேன். இப்பெல்லாம் பையன் அடிக்கடி ஊர் ஊரா சுத்தறான். கேட்டா ஃபிரண்டு கல்யாணம்ங்கிறான். தெளிவா தெரிஞ்சிக்கலாம்ன்னு, பையனா பொண்ணான்னு கேட்டா... கூட படிச்ச பையன்ங்கிறான். இதோட இப்படி நாலஞ்சு தடவ சொல்லிட்டான். போன வாரம் அவன் ஃபிரண்டு அப்பா வீட்டிற்கு வந்து பத்திரிகை கூட கொடுத்திட்டு போனார். அதான் ஒருவேளை நாம லேட் பண்ணிடக் கூடாதேன்னு நானும் ஆரம்பிச்சுட்டேன்”ன்னார்.

எனக்கிருக்கும் கேள்விகள் இவை தான்.
1. சுவாமிநாதன் சார் தன் மகனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததற்கு சொன்ன அத்தனை காரணங்களும் என் தம்பியிடமும் சமீப காலங்களில் நடந்தேறியிருக்கின்றன. இது என் தம்பியும் சுவாமிநாதன் சாருடைய மகனுக்கும் பொதுவான விஷயமா?
2. என் தம்பியும் சுவாமிநாதன் சாரும் கொஞ்ச நாள் முன்னாடி ரயில்வே ஸ்டேஷனில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எனக்கு வேலை நிமித்தமாக ஒரு தொலைபேசி அழைப்பு வரவே நான் அவர்களுடன் உரையாடவில்லை. அப்படி என்ன பேசினாங்க?
3. போன வாரம் தம்பிகிட்ட தொலைபேசிட்டிருந்த போது சுவாமிநாதன் சார்கிட்ட பேசினியான்னு அவன் என்னைக் கேட்டது ஏதேச்சையான விஷயமா?
4. இந்தப் பதிவை என் அம்மாவும் படிப்பாங்கங்கிறது என் தம்பிக்கு தெரியும். அது தெரிஞ்சதனால இருக்கிற மாஸ்டர் ப்ளானா?

தலைமுறை என்பதை எப்படி வரையறுப்பது? அப்படின்னா தலைமுறை இடைவெளி? யாராச்சும் ஃபில் பண்ணுங்கப்பா :)

1 comment:

Muthu Kannan said...

என்ன யோசிக்கிறீங்கன்னு ஃபீல் பண்ண முடியுது. ஃபில் பண்ண சரக்கு இல்லை. :)