Friday, May 06, 2005

ஜாண்டி ரோட்ஸ் - படம் பார்த்து கதை சொல்லு

ஒரு நாலு படம் அதுவும் ஒரே விஷயத்தைப் பற்றி forward mailலில் கிடைத்தால் ஒரு பதிவு எழுத முடியுமா? அந்த கேள்விக்கு விடையாகத்தான் இந்தப் பதிவு.


படம்1

கிரிக்கெட் அநாயசமாக ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் தேசப்பற்றை சுண்டிவிட்டுப் பார்க்கும் ஒரு விளையாட்டு. அதனாலேயே கிரிக்கெட் மேல் எனக்கு ஈடுபாடு அதிகம். இந்தியர்கள் கிரிக்கெட் பார்க்கும் பொழுது மட்டுமே 100% சதவிகிதம் இந்தியர்களாக இருக்கிறார்கள். இந்திய அணியின் வெற்றிகளில், 1983 உலக கோப்பையை வெற்றியைத் தவிர்த்தால் எஞ்சுவது மிகச் சொற்பமே. அப்படியிருந்தும் இந்தியாவில் தான் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்திய ரசிகர்களின் ரசனையை குறைவாக மதிப்பிட முடியாது. அவர்கள் எதிரணியின் திறமையையும் ஊக்கப்படுத்தும் மனப்பான்மை கொண்டவர்கள் (பாகிஸ்தானைத் தவிர்த்து :-( ). இந்திய ரசிகர்கள் மனதில் பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அவர்களுள் 90களில் அதிகம் பேசப்பட்டவர் போற்றப்பட்டவர் ஜாண்டி ரோட்ஸ்.


படம்2

இந்திய அணியின் ஃபீல்டிங் ஆரம்ப காலம் முதல் சொல்லிக்கோள்ளும் படியாக இருந்ததில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்கிற்காக பேசப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் குறைவே (முகமது கைப், அசாரூதீன், ஜடேஜா, ராபின் சிங், யுவராஜ் included ). ஃபீல்டிங் என்றவுடனேயே ஞாபகம் வரும் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ். பந்து இவர் ஃபீல்டிங் செய்யும் திசையை நோக்கி வருகின்றதென்றால் அப்படியொரு துறுதுறுப்பு இவரிடம் தென்படும். கூர்மையான கண்கள், வில்லாய் வளையும் உடல், குதிரையின் வேகம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால் ஒருவரி கிடைப்பார் என்றால் அவர்தான் ஜாண்டி. பேட்ஸ்மேன் அடித்த பந்து இவரிடம் சென்றால் ரன்னெடுக்கும் வாய்ப்பை விட ரன் அவுட் வாய்ப்புகளே அதிகம். பந்து எவ்வளவு வேகமாக வந்தாலும், ஒரு ஐந்து மீட்டர் தூரத்தில் வந்தாலும் பாய்ந்து தடுப்பது மட்டுமல்லாமல், தடுத்த வேகத்தில் எடுத்து குறி பார்த்து எறிவதிலும் இவர் அசகாய சூரர். ஸ்டம்ப் அருகில் பந்து கிடக்கிறதென்றால் இவர் பந்தை எடுத்து எறிய மாட்டார், ஸ்டம்பை நோக்கி பந்துடன் பாய்வார். 1992 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்சமாம் உல் ஹக்கை இவர் ரன் அவுட் ஆக்கிய விதம் என்னவென்று சொல்வது (பார்க்க படம் 2).


படம்3


படம்4

தென் ஆப்பிரிக்க அணிக்காக கால்பந்து போட்டிகளிலும் இவர் விளையாடியிருக்கிறார். அமைதியானவர், நேர்மையானவர் (இது முக்கியமா என்று கேட்காதீர்கள், அசாரூதீன், ஹான்சி குரோனியே காலத்தில் நேர்மை என்பது ரொம்ப பெரிய விஷயம்). இப்படிப்பட்ட ஒரு திறமையான வீரருக்கு வலிப்பு நோய் உண்டாம். முகமது கைப் விழுந்து ஒன்றிரண்டு பந்தைப் பிடித்தாலே ஆஹா ஓஹோவென்று புகழ்கின்றோமே அப்படியென்றால் ஜாண்டி போல் ஒருவர் கிடைத்தால் என்ன செய்வோம்?

பயிற்சி என்பது விளையாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பது முதல் படத்தையும் நான்காம் படத்தையும் பார்த்தால் புரியும்.

பதிவு எப்படி இருக்கு? சின்ன வயசில படம் பார்த்து கதை சொல்லுனு ஸ்கூல்ல படிச்ச ஞாபகம். அது இதுதானோ? இப்போதான் தெரியுது அன்னைக்கு ஏன் ஃபெயில் ஆனேன்னு..

1 comment:

Anonymous said...

படம் தமிழ் படமா இருந்தா நல்ல இருக்குமே

- ராஜா