ஒவ்வொரு நடுத்தர வயதுக்காரருக்கும் சினிமா என்பது சொர்க்கத்திற்கு சமம். தன்னால் முடியாததை ஒருவன் செய்கிறான் என்ற நினைவே அவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. தன்னால் முடியாத சில விஷயங்களை தமக்கான ஒருவன் செய்கிறான் என்ற சந்தோஷத்திலேயே தன்னை மறந்து அவன் நெகிழ்ந்து போகிறான். எதிரியை வீழ்த்துவதாகட்டும், சூழ்ச்சியை முறியடிப்பதாகட்டும் அல்லது காதலில் வெற்றி பெறுவதாகட்டும் அவனைப் பொறுத்தவரை அவனது கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் ஒருவித கருவியாகவே அவன் சினிமாவைப் பார்க்கிறேன். அதனாலேயே தமிழ்நாட்டில் இந்தக் கதையம்சம் நிறைந்த படங்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வித்தியாசங்களையும் வரவேற்கும் மனப்பக்குவமும் அவனிடம் இருக்கிறது. வித்தியாசங்கள் அவனுக்கு ஒருவித இனம் புரியாத பரிவை ஏற்படுத்தபவை. ஒரு பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் அன்னாந்து படுத்துறங்கும் சுகத்தை தருபவை. அவனால் வெல்ல முடியாத சமுதாய எதிரிகளை வெல்பவன் அவனுக்கு கடவுளுக்கு சமமாகிப் போகிறான். அதனாலேயே தன் பெற்றோர்களின் பிறந்த நாளை விட தன் நாயகனின் பிறந்த நாள் அவனுக்கு பெரிதாகப் படுகிறது.
ரசிகர்கள் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விசுவாசமானவர்கள். ஒரு நாயகன் தன் தயாரிப்பாளரையோ இயக்குனரையோ நம்பாவிடிலும் தன் ரசிகனை கண்டிப்பாக நம்பலாம். ஜாதி மத இனப் பாகுபாடில்லாமல் ஒருவன் நாயகனாக ஏற்றுக்கொள்ளப் படுகிற ஒரே துறை சினிமாத் துறை தான். எம்.ஜி.ஆர் முதல் அஜீத் வரை ரசிகர்கள் அவர்களது நாயகர்களை என்றைக்குமே விட்டுக் கொடுத்ததில்லை. அதனாலேயே போட்டி நிறைந்த திரைத்துறையிலும் ஹீரோயிச மசாலா படங்களும் அதிக லாபம் ஈட்டுகின்றன. அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் ஒவ்வொரு திருவிழாவிற்கும் திரைக் கட்டி சினிமா போடுவது வழக்கம். இப்பொழுது டிவிக்கள் பெருகி விட்டதால் அந்த தொழில்நுட்பம் குறைந்து போய் விட்டது. ஆனாலும் ஆங்காங்கே கிராமங்களில் திரைகட்டி திருவிழா கொண்டாடும் வழக்கமும் இருக்கவே செய்கிறது. அப்பொழுதெல்லாம் ரசிகர்களின் வெள்ளந்தித்தனம் வெளிப்படும். "திரை சிறுசா இருக்குடா இல்லைன்னா நம்ம தலைவரு சும்மா எம்பி எம்பி அடிப்பாருல்ல" போன்ற சத்தங்களை கேட்கலாம். நாயகன் போல மேனரிசங்களைச் செய்வது அவனைப் போன்றே டயலாக் பேசுவது எல்லாம் ஒரு ரசிகனிடம் ஒளிந்திருக்கும் ஹீரோவை வெளிக்கொணரும்.
சமீபத்தில் டில்லியில் திரையரங்கொன்றில் சந்திரமுகி திரைப்படம் பார்த்தேன். டில்லியில் அதிகமாக தமிழ் படங்கள் திரையரங்குகளில் காட்டப்படுவதில்லை. பாபா சூப்பர் ஃப்ளாப் ஆனதாலும் சந்திரமுகிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்த காரணத்தினாலும் எங்களுக்கு தமிழ் படம் பார்க்கும் புண்ணியம் கிட்டியது. அதுவும் சந்திரமுகி ரிலீசாகி வரவேற்பு நன்றாக இருக்கிறதென்று தெரிந்த பின்பு ஒரு இருபது நாள் கழித்து தான் டில்லியில் ரிலீசாகியிருந்தது. டில்லியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். திரையரங்குகளில் தமிழ் படம் காட்டப்படுவதே அரிதாகையில் கூட்டத்தை எதிர்பார்த்து முன்பே ரிசர்வேஷன் செய்து விட்டேன். ஒரு டிக்கட்டின் விலை 140 ரூபாய். அன்று ஹவுஸ்ஃபுல். ஆனால் என்னை ஆச்சர்யப்பட வைத்த ஒன்று கோட் சூட்டுடன் வந்த ஒருவர் ரஜினியின் அறிமுக காட்சியில் ரஜினியின் காலைத் தொட்டு கும்பிட்டது தான். விசில் வானைப் பிளக்கிறது (நானும் விசிலடித்தது வேறு விஷயம்). இருந்தாலும் படித்தவர் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவரிடம் நேரே சென்று என் குறையைக் கேட்டே விட்டேன். அவர் சொன்ன பதில் ஆச்சர்யமானது. "சார் ! என்னதான் படிச்சவன்னு சம்பாதிக்கறேன்னு சொன்னாலும் அவனவனுக்கு இருக்கிற பிரச்சனை அதிகம். கவலையே இல்லாம விசிலடிச்சு சினிமா பார்த்ததெல்லாம் சின்ன வயசுலதான் தலைவரப் பார்க்கும் பொழுது சின்ன வயசு ஞாபகமும் வருது என் கவலைகளும் மறந்து போகுது. இது பகுத்தறிவால பார்க்க வேண்டிய விஷயமில்ல சார் உணர்வுகளால பார்க்க வேண்டிய விஷயம்" அப்டீன்னார். யோசித்துப் பார்த்தேன் ரசிகனாக இருக்கிற ஒவ்வொருவனுக்கும் ஒருவித வேதியியல் உணர்ச்சி இருக்கிறது அதுவே அவனை நாயகனிடம் சிறைபடுத்துகிறது என்று நினைத்திருந்தேன் ஆனால் சந்திரமுகி பார்த்த பின் அந்த பேய் ஓடிவிட்டது.
3 comments:
ரசிகனாயிரருப்பதை யாரும் விமர்சிப்பதில்லை, ஆனால் ரசிகனாக மட்டுமிருந்தால் பரவாயில்லை, ஆனால் அதற்கும் மேலாக அரிதாரம் பூசிய நடிகர்கள் எது செய்தாலும் சரி என்பதும் என்ன ஏதென்று பகுத்தறியாமல் தலைவனாக்குவதும், திரைப்பட மோகத்தில் திரிவதும் தான் விமர்சிக்கப்படிகிறது.
நன்றி குழலி
நீங்கள் சொல்வது உண்மை. ஒரு ரசிகனை மேலோட்டமாக குறை கூறாமல் அவனது வாதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு ரசிகனிடத்திலும் சில sentimental values இருப்பதாக உணர்கிறேன்.
//இது பகுத்தறிவால பார்க்க வேண்டிய விஷயமில்ல சார் உணர்வுகளால பார்க்க வேண்டிய விஷயம்//
Super
Post a Comment