மனைவியை வேலைக்கு அனுப்பறதா நீங்க யாரு சார் அத முடிவு பண்றது? அவங்கள பத்தின முடிவுகளை நீங்க எடுக்க கூடாது போன்ற அட்வைஸ்களும், தலைப்பைப் பார்த்தவுடன் ஆணாதிக்கம் தாண்டவமாடும் ஒரு தலைப்பு என்று கூறுபவர்களின் கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளேன் ஏனென்றால் இது முழுக்க முழுக்க திருமணமாகாத ஆண் (ஆண்கள்) தமக்குள் கேட்டுக்கொண்ட எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி.
நேற்று தற்செயலாய் ஒரு செய்தித்தாளில் "MITR - my friend" படத்தைப் பற்றின செய்தியைப் படிக்க நேர்ந்தது. வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதனால் குழுந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதனைக் குறித்து அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. பிரச்சனை அதிலிருந்து தான் ஆரம்பம். நண்பனின் (ஒரு bachelors room) வீட்டில் மாலை ஒரு ஐந்து மணியளவில் அச்செய்தியைப் படித்தேன். நமக்குத்தான் ஆர்வம் அதிகமாச்சே உடனே ஆரம்பிச்சேன் "டேய் ! நீ இதப்பத்தி என்ன நினைக்கிறே?". அவன் கொஞ்சம் நேரடியாக யோசிப்பவன். உடனே பதில் சொன்னான் "பணத்துக்கு ஆசைப்பட்டா இத மாதிரியெல்லாம் நடக்கத்தான் செய்யும்". பதில் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. உடனே அடுத்த கேள்வியைக் கேட்டேன் "ஏண்டா அப்ப ரெண்டு பேரும் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்றீயா?" என் கேள்வியில் நியாயம் இருந்தது ஏனென்றால் அவனது அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். "தேவைக்கு மேல் பணத்தை எதிர்பார்த்து இருவரும் வேலைக்கு செல்வது தான் தப்புன்னு சொல்றேன்" இந்த பதிலுக்கும் அவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பணம் என்பது இன்று இன்றியமையாத ஒரு விஷயம் அதை அடைவதில் திருப்தி என்பதே கிடையாது. பில்கேட்ஸ் முதல் பிச்சைக்காரன் வரை பணம் தேடும் முயற்சிகளில் தான் இருக்க்கின்றனர். எனக்கு இப்பொழுது ஆர்வம் அதிகமானது உடனே "சொந்த வீடும் வாகன வசதிகளும் அவரவர் சம்பாத்தியத்துக்கேற்ப தான் அமையும் அப்படியிருக்க டூவிலர் வச்சிருக்கிறவர்கள் மனைவியும் பொருளீட்டினால் கார் வாங்க முடியும். அதே மாதிரி வாடகை வீட்டில் இருக்கிறவர்கள் மனைவியும் பொருளீட்டினால் ஒரு ப்ளாட் வாங்க முடியும் இதெல்லாம் ஒரு betterment இதில ரெண்டு பேரோட முன்னேற்றமும் இருக்கிறது இதில அதிகம் ஆசைப்படறதுங்கிற பேச்சுக்கே இடமில்லை" என்று நான் சொன்னேன். அவன் இதற்கும் பதில் தயாராக வைத்திருந்தான் "டேய் ! betterment ங்கிறது ரொம்ப பெரிய விஷயம் அதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளக்கம் கொடுப்பாங்க. அதெல்லாம் அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. ப்ளாட் வச்சிருக்கிறவர்கள் வீடு வாங்க நினைக்கிறதும், indica வச்சிருக்கிறவர்கள் honda city வாங்க நினைக்கிறதும் betterment தான் அதனால இத ஆராயக் கூடாது அப்படி ஆராய்ஞ்சா குழப்பம் தான் மிஞ்சும்".
என்னால் முடிவு தெரியாமல் சும்மா இருக்கமுடியவில்லை. வழக்கம் போல் பொதுவான கேள்வியை கேட்டால் அவனை மடக்கி விடலாம் என நினைத்து "அப்ப இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?" எனக் கேட்டேன். அதற்கும் சாதரணமாக பதில் சொன்னான் "இப்ப கேட்டையே இது நல்ல கேள்வி! ரெண்டு பேரும் வேலைக்கு போகிறதுங்கிறது இந்தக் காலத்துல ரொம்ப பழகிப் போன விஷயம். அதே மாதிரி அவங்க வீட்டில் குழந்தைகளுக்கு parental care கிடைக்கலைங்கறதும் பழகிப் போன விஷயம். இதில முக்கியமா கவனிக்க வேண்டியது அவங்களோட அவசியத்தை, பணத் தேவையை. இந்த மாதிரியானவர்களுக்குகுழந்தை வளர்ப்பும் பணத் தேவையும் இப்போ ஒன்றுக்கொன்று எதிரானவை. எதையாவது ஒன்னத்தான் உருப்படியா செய்ய முடியும். ப்ளாட்ல இருந்தாலும் சந்தோஷமா இருக்கிறவங்க, வீடு வாங்கி நிம்மதி இல்லாம இருக்கிறவங்களைப் பாத்து திருந்திக்கணும். இது மனிதத்துவத்தின் அடிப்படை மரபு. ஒண்ணு கிடைக்குதுன்னா இன்னொன்னை இழந்து தான் ஆகணும். அத விட்டுட்டு ரெண்டுக்கும் ஆசைப்பட்டா அது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைங்கிற போல ஆயிடும்". இப்பொழுது அவனது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எனக்குப்பட்டன. (அது சரி எவ்வளவு நேரம் தான் விதன்டாவாதம் ஜெயிக்கும்). ஆனா எனக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளும் ஆசை பிறந்தது அதனால் "அப்ப ஏன் பெண்கள் மட்டும் வீட்டிலிருக்க வேண்டும் ஆண்கள் வேலைக்குப் போகணும்னு சொல்றாங்க அதே உல்ட்டாவா நடந்தா என்ன?". ஒரு நல்ல கேள்வியுடன் அவனை மடக்கி விட்டதாக உணர்ந்தேன். இந்த முறை கொஞ்சம் யோசித்தான் "அறிவைப் பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் தான் ஆனால் உடலமைப்புகளாலும் மனதாலும் வேறுபட்டவர்கள். பெண்களுக்கு மனபலம் அதிகம் ஆண்களுக்கு உடல்பலம் அதிகம். குழந்தை வளர்ப்பு உளவியல் சார்ந்தது அதனால் பெண்கள் அதற்கு பொறுத்தமானவர்களாகின்றனர். மற்றபடி இதில் வேறு விஷயம் ஏதுமில்லை". "அப்போ ரெண்டு பேரும் வேலைக்கு போகிற வீட்டின் நிலைமை என்னன்னு சொல்றது?" நான் விடவில்லை. "அந்த வீட்டின் ஆணிற்கு உடல்பலம் போதவில்லைன்னு வச்சுக்கலாம்" அப்படீன்னு சொன்னான். நீ சொல்றது புரியலையேன்னு கேட்டேன். "அதாவது தம் உடல் பலத்தைக் கொண்டோ அறிவைக் கொண்டோ அவனால் குடும்பத்தை நடத்துமளவுக்கு பொருளீட்டத் தெரியவில்லை அல்லது இருவருக்கும் பணம் பெரிதாக படுகிறது அதனால் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட mutual compromise அப்படீன்னு வச்சுக்கலாம்".
என் கேள்விகள் தொடர்ந்தன "சரி நீ என்ன செய்யப் போறே? வேலை பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்குவியா அல்லது வேலை பார்க்காத பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்குவியா?". "ரெண்டு பேரா இருக்கிற வரைக்கும் அது பிரச்சனையே இல்லை. அவங்கவங்க இஷ்டப்படி செஞ்சுக்கலாம் ஆனா மூணாவது ஒருத்தர் வந்திட்டாருன்னா கொஞ்சம் யோசிக்கனும்". "அப்போ என்ன செய்வே?". "அது அப்போதைய பிரச்சனை. அதுமட்டுமில்லாம இது நான் மட்டும் முடிவு பண்ற விஷயமில்லை வரப்போறவங்க கிட்டயும் கேட்கணும் அவங்க அபிப்ராயமும் இதில 50% இருக்கு." "சரி யாராவது ஒருத்தர் தான் வேலைக்கு போகணும்கிற கட்டாயம் வருது அப்போ என்ன செய்வே?" "அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே parental careக்கு பொறுத்தமானவங்க பெண்கள் தான் அது அவங்களுக்கும் புரியும் அதனால அவங்களாகவே வேலையை விட்டுருவாங்க" "அப்படி விடலைன்னா?" "நான் விட்டுருவேன் ஏன்னா எனக்கு அவங்களும் முக்கியம் என் பிள்ளைகளும் முக்கியம்" "நடக்குதான்னு பார்ப்போம்" ன்னு சொல்லிட்டு வந்தேன்.
பின்பு அசை போட்டு பார்த்ததில் நண்பன் சொல்வது சரியாக பட்டது. பெண்கள் வேலைக்கு செல்வதோ அல்லது வீட்டிலிருப்பதோ அவரவர் வாழ்க்கை முறையைச் சார்ந்தது அவர்களை கட்டாயப் படுத்த யாருக்கும் உரிமையில்லை கணவன் உட்பட. மேலும் கணவனின் பேராசைக்காக மனைவி வேலைக்கு செல்வது தான் ஆணாதிக்கமாகும் குழந்தை வளர்ப்புக்காக மனைவி வேலையை விடுவது ஆணாதிக்கமாகாது. இது இரு bachelors க்குள் நடந்த விவாதம் ஆதலால் குடும்பஸ்தர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்....bachelor/spinster கள் அனுபவசாலிகளின் அட்வைஸை கேட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
13 comments:
மனைவிகளும் மனிதப் பிறவிகள் தான், அவர்களுக்கென்றும் ஆசைகள் இருக்கும். மனைவியின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிற கணவன் நான். என்னை பொருத்த வரை, இது முழுக்க முழுக்க என் மனைவியின் முடிவு. இதில் என் முடிவை புகுத்துவதில் அர்த்தமே இல்லை.
இப்படிக்கு,
மனைவிக்கு வேலைக்கு போக உதவி புரிந்து கொண்டிருக்கும் ஒரு கணவன்.
கணேஷ்,
இது குறித்து சில விசயங்கள்:
1.பெண்கள் வெளியில் வேலைக்கு போவதென்பது இந்த நாட்டில் மிக இயல்பான ஒன்று. உழைக்கும் மக்களில், குடும்பங்களில் 90% பெண்கள் வேலைக்குப்போகிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய தொழிலாகிய வேளாண்மையில் 60% க்கும் அதிகமான வேலையைச் செய்வது பெண்கள்தான். இதல்லாமல், எரிபொருள் சேகரிப்பு, வளங்களை முறையாக பயன்படுத்துதல்,இத்துடன் குடும்பம், குழந்தை வளர்ப்பு இவையும் கூட அப்பெண்களாலேயே செய்யப்படுகின்றன. இந்த பெண்கள் குறிப்பாக மனைவிகள் வேலைக்கு போகலாமா என்கிற கருத்தாக்கம் எங்கு உற்பத்தியாகிறது என்பதைக் கவனிப்பது முக்கியம் என்று நினைக்க்கிறேன்.
2. வேலை என்பது பொருளாதாரம், தன்னம்பிக்கை, சுயமரியாதை என்று விரிவது.
3.ஒருவரோடு கூட வாழ்பவர் எத்தன்மை உடையவராக இருக்கவேண்டும் என்ற தேவையின் அடிப்படையிலேயே இந்தக்கேள்விகள் பொருத்தமானவையாக இருக்கும்.
பி.கு: வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் குறைந்தவர்கள் என்பது தெய்வத்தின் குரல்.
// "அப்ப ஏன் பெண்கள் மட்டும் வீட்டிலிருக்க வேண்டும் ஆண்கள் வேலைக்குப் போகணும்னு சொல்றாங்க அதே உல்ட்டாவா நடந்தா என்ன?"//
நான் ரெடி, சும்மா பிராஜக்ட் டென்ஷன், மேனேஜரை காக்கா புடிக்கிறது, டெட்லைன்,டெலிவரினு இல்லாம நிம்மதியா கோலங்கள்,மெட்டிஒலி,மனைவினு சீரியல் பார்த்து என்ஜாய் பன்னலாம்
- தெருப்பாடகன் -
குழந்தபெற்றுக்கொண்டவுடன் பெண்களுக்கு குறிப்பிட்ட காலம்வரை பாதுகாப்பான (பொருளாதார ரீதியிலும்) விடுமுறை கிடைக்க வேண்டும்..
இது எட்டு மணி நேரம் தான் வேலை என்பது போன்ற சட்டமாக வர வேண்டும்.
முதல் வரு வருடம் இரு வருடங்களுக்குப்பிறகு குழந்த வளர்க்க பெண்கள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை.
ஆண்கள் வேலை விட்டுவிடுவது நல்லது போல் படுகிறது.
ஏனெனில் நீங்கள் சொன்னது போல் அவர்களுக்கு உடல்பலம் அதிகமல்லவா, பெண்கள் வீடுகளில் நின்று செய்யும் வீட்டு வேலைகள் போன்றவற்றை பல மடங்கு அதிகமாக விரைவாக ஆண்களால் முடிக்க முடியுமல்லவா? ஆபீஸ் வேலைகள் உடல் பலம் குறைந்த(?) பெண்களுக்கு பொருத்தம் அதிகம்.
(இந்தக்குழப்பம் எல்லாம் சமூகம் குழந்தைகளை பொறுப்பேற்க மறுக்கும் தனியுடைமை சமூகங்களில் தான்)
//(இந்தக்குழப்பம் எல்லாம் சமூகம் குழந்தைகளை பொறுப்பேற்க மறுக்கும் தனியுடைமை சமூகங்களில் தான்//
absolutely true!!!
..aadhi
தங்கமணி !!
நீங்கள் சொல்வது போல
"மனைவிகள் வேலைக்குப் போகலாமா என்கிற கருத்தாக்கம் எங்கு உற்பத்தியாகிறது என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்".
ஆனால் வேளாண்மை சுயதொழில் பிரிவில் வந்து விடுகிறது. ஆதலால் வேளாண்மையில் ஈடுபடும் பெண்களுக்கு குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வரும் பிரச்சனை இருப்பதில்லை. இங்கு பிரச்சனையே குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களைப் பற்றியது தான்.
// வேலை என்பது பொருளாதாரம், தன்னம்பிக்கை, சுயமரியாதை என்று விரிவது.//
ù
// மெட்டிஒலி,மனைவினு சீரியல் பார்த்து என்ஜாய் பன்னலாம் - தெருப்பாடகன் -//
Mr.தெருப்பாடகன் நீங்களும் இன்னும் bachelor தான் போல...:-))
// இந்தக்குழப்பம் எல்லாம் சமூகம் குழந்தைகளை பொறுப்பேற்க மறுக்கும் தனியுடைமை சமூகங்களில் தான் //
உண்மை மயூரன்... ஏனோ நமது வழக்கங்கள் மற்றும் ego அதனை ஏற்றுக்கொள்வதில்லை.
நன்றி டுபாக்கூர்
//ஆனால் வேளாண்மை சுயதொழில் பிரிவில் வந்து விடுகிறது. ஆதலால் வேளாண்மையில் ஈடுபடும் பெண்களுக்கு குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வரும் பிரச்சனை இருப்பதில்லை. இங்கு பிரச்சனையே குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களைப் பற்றியது தான்.//
எல்லோரும் தங்கள் நிலத்தில் உழைப்பதில்லை. மாறாக கூலியாக வேலைக்கு போகிறவர்கள், மற்ற தொழில்கள், வேலைக்குப் போகிறவர்கள்தான் அதிகம். எல்லா பெண்களும் வேலைக்குச்செல்லும் நிலை வரும்போது குழந்தை வளர்ப்பு பற்றிய கருத்தாக்கம் மாறிவிடும். குழந்தைகளை சமூக சொத்தாக கருதும் நிலையும் ஏற்படத்தான் போகிறது. ஆனால் இன்னும் நாளாகும்.
நன்றிகள்
வேளாண்மை தங்கள் நிலத்தில் உழைப்பதில்லை என்றாலும் அவர்கட்கு குழந்தை பேணல் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. குழந்தையை எடுத்து வராதே என்று எந்த முதலாளியும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல சிறிது காலம் கழித்து குழந்தைகளை சமூக சொத்தாக கருதும் நிலையும் ஏற்படத்தான் போகிறது.
மனைவியை வேலைக்கு அனுப்பலாமா ?
என்னைப்பொருத்தவரை இந்தக்கேள்வி, மனோநிலையே தவறு. நாம் யார் அவர்களை வேலைக்கு அனுப்ப? அவர்களே முடிவு செய்யட்டும். வேலைக்குச் செல்வதானால் செல்லட்டும், வேண்டாமென்றால் வீட்டிலிருக்கட்டும். (வீட்டிலிருக்கும் சில பெண்கள் - நானும் வேலைக்குப்போறேன்னு சொல்றாங்க. வேலைக்குச்செல்லும் சில பெண்கள் - வீட்டுலயும் வேலை பார்த்து, வேலைக்கும் போகணுமான்னு புலம்பறாங்க. அதனால்தான் இந்த யோசனை:)
அப்புறம் தொடர்ந்து நல்ல பதிவுகள்ளாம் போடறீங்க, பாராட்டுக்கள்.
ஹலோ மிஸ்டர் டூப்ளிகேட் டோண்டு..... தங்கள் வரவு நல்வரவாகுக..... ஏன் சார் உங்களுக்கு நல்லதே நினைக்கத் தெரியாதா ???
அன்பு நீங்கள் சொல்வது சரிதான். பெண்கள் கண்டிப்பாக அவர்கள் இஷ்டப்படிதான் செய்ய வேண்டும் நாம் வற்புறுத்துதல் கூடாது. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
nallathoru kelvi...nalla nalla badhilgal !!
சமீபத்தில் 1981-ல் விசுவின் "குடும்பம் ஒரு கதம்பம்" படம் வந்தது. அப்படத்தின் முக்கியக் கருவே பெண்கள் வேலைக்கு போகலாமா அல்லது கூடாதா என்ற சர்ச்சைதான். பார்க்கவில்லையானால் பார்க்கவும்.
டூப்ளிகேட் டோண்டுவை இனம் கண்டு கொண்டதற்கு நன்றி. நான் 1946-ல் போன பார்த்திப ஆண்டில் பிறந்தவன். அடுத்த ஏப்ரலில் அறுபது வயது முடியப் போகிறது. இப்போது தூள் கிளப்பும் பல வலைப்பதிவர்கள் என் குழந்தையின் வயதை உடையவர்கள். என் பதிவுகளில் இது வரை ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே என் வயதுக்கு மதிப்பு கொடுத்து மரியாதையுடனேயே பின்னூட்டம் இடுகின்றனர். எல்லோரையும் பயங்கர புத்திசாலிக் குழந்தைகளாகவே நான் கருதுகிறேன். அதில் ஒரு குழந்தை மட்டும் ஏன் இப்படி என்று புரியவில்லை. ஒரு வேளை என்னையறியாமல் யார் மனதையாவது புண்படுத்தியிருப்பேனோ என்று தோன்றுகிறது. என் உள்ளம் கவர்ந்த கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்னைக் காத்து என் மன அமைதியை எனக்கு கொடுப்பான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாது போயிற்று. மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது ஞாபகம் வருகிற எப்போதோ படித்த வரிகள்:
'அலுவலகத் தொலைபேசி
சிணுங்கியவுடன்
அள்ளியெடுக்கத்தயாராகிறாய் நீ.
வீட்டிலோ
பாலுக்கு அழும்
உன் குழந்தையின் குரல்
அனாதையாக'
(நான் பெண் 'உரிமை'க்கு எதிரி இல்லை)
Post a Comment