Monday, May 30, 2005

ஆணாதிக்கம்

பிரம்மனுக்கு சல்யூட்டும்
அடித்தாயிற்று
பெண்களைப் படைத்ததற்க்காய்.
அந்த அழகியல் இடஒதுக்கீடு
மட்டும் இன்றளவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது
எல்லா ஆண்களாலும்
முழுமையாக 100%

"காதலிக்கு மட்டும்"
போர்டு போடாமல்
ஓட்டிவந்த வாகனுமும்
மனைவியானபின் ஒதுக்குகிறது.
இன்றுவரை புரியவில்லை
இந்த பின்சீட் மர்மம்.

வெளியூரிலிருக்கும் மனைவிக்கு
கடிதம் எழுதமுடிவதில்லை
ஒருவேளை காதலிக்காய்
எழுதி எழுதி
வார்த்தைகள்
தீர்ந்துபோயிருக்கலாம்

முகம் புதைத்து
அழுதுவிடும் துணிவும்கூட
மூடப்பட்டுவிடுகிறது
ஆதிக்கப்போர்வைக்குள்,
இருண்டு போகும்
பார்வையை அறியாமல்

விளக்கணைத்துவிட்டு
வெளிச்சத்தைத் தொலைத்துவிட்டு
இரவில் மட்டும் மனைவியைத் தேடுகிறான்
கிடைக்கமாட்டாள் என்று
தெரியாமலேயே

Saturday, May 28, 2005

ஹைக்கூ - படித்தவை & படைத்தவை

படித்தவை

திண்ணையிலிருந்த தாத்தா வீட்டிற்குள்
வந்தார் - புகைப்படமாக

இனிப்பும் கசப்புமாய் செல்கிறது வாழ்க்கை
வேப்பமரத்தில் தேன்கூடு

காதலிக்க ஆசை உறுத்தும் எனக்குள்
ஓடிப்போன அக்கா

அமாவாசை நாளில் நிலவு
எதிர்வீட்டு ஜன்னலில்

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக

ஐந்தில் வளைக்கவோ - பொதியாக
புத்தக மூட்டை

படைத்தவை

நானும் அலியாகிறேன்
என்னில் அவள் பாதி

வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்
வாங்குகிறார் - வெளியூரில் மகன்

பைத்தியங்களை படமாக்கி
பணமாக்கும் - "காதல்"

மணிபார்க்கும் நேரங்களில் சிரிக்கிறது
கடிகாரம் - வீணாகிறது நொடிகள்

ஞானபீடம் - நாய்ப்பேச்சு
"சில நேரங்களில் சில மனிதர்கள்"

மேகத்திற்க்கும் வானத்திற்க்கும் உறவு
களையப்படும் ஆடை - வானவில்

Friday, May 27, 2005

கிரிக்கெட், ஃபுட்பால் & ஹாக்கி.........

இன்றைய இந்துவின் விளையாட்டுச் செய்திகள்.

மூன்றில் முதலுரிமை தேசிய விளையாட்டு ஹாக்கிக்கு. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. லென் அய்யப்பா சிறப்பாக விளையாடினார். லென் அய்யப்பாவின் திறமையின் மீது சில கேள்விகள் எழுப்பப்படுகின்ற இந்த வேளையில் அவர் நன்றாக விளையாடியிருப்பது ஒரு போர்க்கால நடவடிக்கையைப் போன்றதாகும். தன்னம்பிக்கைக்கு ஒரு சான்று.

ஃபுட்பால். சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் நேற்று இரவு நடைபெற்றது. மிகவும் விருவிருப்பான போட்டியாக அமைந்தது. லிவர்பூலும் எ.சி.மிலன் அணியினரும் மோதினர். முற்பாதி ஆட்டத்தில் மிலன் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணியின் மால்டினி, செவசென்கோ, க்ரெஸ்போ ஆகியோர் முதற்பாதியில் கோல் அடித்தனர். ஆட்டத்தில் கண்டிப்பாக மிலன் அணியினர் தான் ஜெயிப்பார்கள் என்ற நிலையிருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் அதுவும் ஏழு நிமிடங்களில் லிவர்பூல் அணியினர் மூன்று கோல்கள் அடித்தனர் (ஜெர்ரார்ட், ஸ்மைசர், அலான்ஸோ). பரபரப்பான அந்த ஏழு நிமிடங்களில் அற்புதமான விளையாட்டுத்திறனையும் போராடும் திறனையும் லிவர்பூல் அணியினர் வெளிப்படுத்தினர். ஆட்டம் சமநிலையில் இருந்ததனால் டைபிரேக்கர் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் லிவர்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றனர். இறுதி வரை போராடும் மனோதிடத்திற்கு இந்த ஆட்டம் ஒரு நல்ல உதாரணம்.

கிரிக்கெட்: லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். (ஒண்டே கிரிக்கெட்டிலும் பொறிக்கலாம் என்பவர்களுக்கு ஒரு சபாஷ்). நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் லாராவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நேர்த்தி, தன்னம்பிக்கை மற்றும் துடிப்பு மூன்றிற்க்கும் லாராவை உதாரணம் காட்டலாம். நேற்று இவர் அதிரடியாக விளையாடினார். 120 பந்துகளில் 130 ரன்கள் குவித்தார். இதில் பதினாறு ஃபோர்களும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். ஜெஃப்ரி பாய்காட் சொல்வது போல "right man in wrong place" அது லாராவுக்குத்தான் 100% பொருந்தும். வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாக சொதப்பி வரும் கால கட்டத்தில் லாரா மட்டும் இன்னும் மின்னும் நட்சத்திரமாக இருப்பது அவரது திறனையும் தன்னம்பிக்கையும் பறை சாற்றுகிறது. டெண்டுல்கரா லாராவா என்றால் என்னுடைய ஓட்டு லாராவுக்குத்தான். நீங்க என்ன சொல்றீங்?

மூன்று செய்திகளுமே ஆட்டத் திறமையைத் தவிர்த்து வீரர்களின் ஏனைய திறமைகளுக்கும் தன்னம்பிக்கைக்கும் சான்றாக அமைந்தவை. இவற்றைப் படிக்கும் பொழுது இன்று wordsmith.orgல் ஒரு quote_ஐப் படிக்க நேர்ந்தது.

A stereotyped but unconscious despair is concealed even under what are called the games and amusements of mankind.
-Henry David Thoreau, naturalist and author (1817-1862)


முற்றிலும் உண்மை.

Wednesday, May 25, 2005

முப்பது நொடிகளில் உங்களை விற்கலாம்

என்னது இது வம்பா போச்சு. நான் என்னை எதுக்கு விக்கணும்? (அப்படி வித்தாலும் யாரு வாங்குவா?). எனக்கும் இதே கேள்விகள் தான் மனதில் எழுந்தன. இன்றைய HINDU OPPORTUNITIES_ல், Sell yourself in 30 secondsனு எழுதியிருக்கிறார்கள். எதைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் நேர்முகத் தேர்வில் நம்மை நாமே எப்படி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் அதுவும் கிடைக்கும் சில மணித்துளிகளில் என்பன போன்ற அட்வைஸ்கள் இருந்தன. அதை ஏன் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. நேர்முகத் தேர்வு என்றாலே ஆட்களை விலைக்கு வாங்கும் விஷயமாகிவிட்டது. அதுவும் சாஃப்ட்வேர் துறையில் வேலை என்றால் இன்றைய கால கட்டத்தில் ஒருவனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள்.

BOOK FAIR போல இப்பொழுது JOB FAIRகளூம் நடத்தப்படுகின்றன. ஆதலால் ஒவ்வொருவருக்கும் நேர்முகத்தேர்வில் கிடைக்கும் கால அவகாசம் மிகக் குறைவே. இந்த கால அவகாசத்தில் தன் திறமையை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் மிக மிக குறைவே. அதனால் தான் மைக்ரோசாஃப்ட், ஆராக்கிள் போன்ற நிறுவனங்கள் இது போன்ற JOB FAIRகளில் பங்கேற்பதில்லை. நிறுவனங்களில் நிலைப்பாடு இப்படியிருக்க "உங்களை 30 நொடிகளில் விற்பது எப்படி?" போன்ற செய்திகள் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியவை. பட்டதாரிகள் சம்பாதிக்க மட்டுமே வருகிறார்களேத் தவிர அவர்களை அவர்களே விற்க வரவில்லை. இதுபோன்ற செய்திகள் தவறான முன்னுதாரணமாக மாறிவிட வாய்ப்பும் இருக்கிறது. INTERVIEW TIPS என்று எழுதியிருக்கலாம். அது கவர்ச்சிகரமாக இல்லை போலும். என்ன செய்ய எல்லாம் கலிகாலம்.

Monday, May 23, 2005

எனக்கொரு கேர்ள்பிரண்ட் வேணுமடா....

எத்தனை பேருக்கு இதைப் போலவும் ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும் என்பது தெரியும்? அல்லது எத்தனை பேர் இதைப் போல ஆராய்ச்சிகளைச் செய்ய தயாராக இருக்கிறீர்கள்? இந்த ஆராய்ச்சி அதிக விரக்தியில் செய்ததா அல்லது அறிவுமிகுதியில் செய்ததா என எனக்குத் தெரியாது. (என்னடா இழுவை சீக்கிரம் மேட்டருக்கு வா ன்னு திருப்பாச்சி ஸ்டைலில் வசனம் வேண்டாம்... விஷயத்திற்கு வருகிறேன்)

டிரிஸ்டன் மில்லர் என்பவர் ஜெர்மனி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரையைச் சமர்பித்திருக்கிறார். இவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு ஏன் எனக்கு ஒரு கேர்ள்பிரண்ட் கிடைக்க மாட்டாள் (why I will never have a girl friend ?). என்ன கண்றாவிடா இது. எதை எதைத்தான் ஆராய்ச்சி செய்றதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சுன்னு முனங்குபவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர் கொஞ்சம் வித்தியாசமாக படுகிறார் (முக்கியமாக அதிகமாக யோசித்திருக்கிறார் அதிகம் வாசித்திருக்கிறார்).

கட்டுரை பின்வருமாறு வரையப்பட்டிருக்கிறது.

முன்னுரை:
எத்தனையோ ஆண் அறிவியியல் வல்லுநர்கள் ஒரு கேர்ள்ஃபிரண்ட் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று அடிக்கடி பேசி வந்தாலும் இதுவரை யாரும் அந்த விஷயத்தைப் பற்றி அதிகம் எழுதவில்லை அல்லது ஆராய்ச்சி செய்யவில்லை. இந்தக் கட்டுரையில் ஆசிரியர் தன்னையே ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு ஒரு கேர்ள்ஃபிரண்ட் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை சில புள்ளி விவரங்களைக் கொண்டு முன்வைத்திருக்கிறார்

அடுத்ததாக எனக்கேன் ஒரு கேர்ள்பிரண்ட் இல்லை?
இது ஒவ்வொருவரு ஆடவனும் அவனுக்குள் ஏதோ ஒரு கால கட்டத்தில் கேட்டுக் கொள்ளும் கேள்வி. துரதிர்ஷ்டவசமாக இந்த கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில்லை. அவனது சுயமதிப்பீடுகள் முடிந்த பின் அவனுக்கு விடையாக இருப்பது அவனுக்கு சாதகமாக இருப்பதில்லை. தன்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அவனே முடிவு செய்து கொள்கிறான். ஆனால் ஒரு ஆராய்ச்சியாளன் என்ற முறையில் ஆதாரமில்லாத விஷயங்களை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் சில அறிவியல் ஆதாரங்களையும் சில புள்ளியியல் விவரங்களையும் சேகரித்து இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.

எனது எதிர்பார்ப்புகள் அதிகம். முதலாவதாக: எனது கேர்ள்பிரண்ட் என்னை ஒத்த வயதுள்ளவளாக இருக்க வேண்டும். (21 விட நான்கு வயது கூடவோ குறையவோ). இரண்டாவதாக அவள் அழகாக இருக்க வேண்டும். மூன்றாவதாக அவள் புத்திசாலியாக இருக்க வேண்டும். எனது ஆராய்ச்சியும் இந்த மூன்று அடிப்படைத் தகுதிகளை வைத்தே நடத்தப்பட்டது.

உலக மக்கள் தொகை (1998ல்): 5,592,830,000
U.S. Bureau of the Census, Report WP/98 புத்தகத்தின் படி உலக மக்கள் தொகை 1998 ஐப் பொறுத்தவரை 5,592,830,000. 1998க்குப் பின்னர் இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் புள்ளி விவரங்களை மாற்றிவிட்டு விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை பேர் பெண்கள்: 2,941,118,000
எனக்கு கண்டிப்பாக ஒரு பெண் துணை தான் வேண்டும் (ஆண்கள் மன்னிக்க) ஆதலால் புள்ளியியல் விவரப்படி உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதி பேர் பெண்கள். மேற்கூறிய புத்தகத்தின் படி அவர்களின் எண்ணிக்கை 2,941,118,000.

என்னால் தொடர்புகொள்ளக்கூடியவர்கள்: 605,601,000
இணைய வசதியில்லாத அல்லது இணையத்தைப் பற்றி தெரியாத நாடுகளில் உள்ள பெண்களை என்னால் கணக்கிலெடுத்துக்கொள்ள முடியாது. அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு மேலும் நான் எனது முழு வாழ்க்கையையுமே இங்கேயே கழிக்கவிருப்பதால் அவர்கள் என் கணக்கிற்கு வரமாட்டார்கள்.

இன்றைய தேதியில் 18 லிருந்து 25 வயதுள்ளவர்கள்: 65,399,083
நான் சராசரி ஆடவனாதலால் என்னை ஒத்த வயதுள்ளவரை தான் நான் என் கேர்ள்பிரண்டாக ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு தான் சில விஷயங்கள் தெளிவில்லாமல் போய்விடுகின்றன. உற்று கவனிக்கவும். சென்சஸ் புள்ளியியல் விவரம் இரண்டு வருடம் பழையது மேலும் அது ஒவ்வொரு வயதையையும் தனியாக குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக வயதுவரம்பைத்தான் குறிப்பிடுகிறது. (15-19 வரை, 20-44 வரை) 15-19 வயது வரம்புள்ளவர்கள் 39,560,000. 20-44 பிரிவில் உள்ளவர்கள் 215,073,000. 2000ம் ஆண்டு 15-19 வயதுள்ளவர்கள் 2000ஆம் ஆண்டு 17-22 வயதடைந்து விடுவார்கள் அதனால் 2000ஆம் ஆண்டு

15-19 வயதுள்ளவர்கள்

அதே போல 22- 25 வயதுள்ளவர்கள்

துரதிர்ஷ்டவசமாக 1% பேர் சென்சஸ் படி இறக்கிறார்கள்
அதனால் மீதமிருக்கும் கண்மணிகள் 65,399,083.

அழகானவர்கள்: 1,487,838
இது எனது பார்வையையும் மனப்பாங்கினையும் பொறுத்தது. அதனால் புள்ளியியல் விவரப்படியும் ஒரு சராசரி ஆணின் கணிப்புப்படியும்



புத்திசாலிகள்: 236,053
இந்தத் தகுதியும் ஒவ்வொரு மனிதனின் கண்ணோட்டத்திலும் வேறுபடுகிறது. அதனால் இதிலும் ஒரு சராசரி ஆணின் கணிப்புப்படி



ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவர்கள் அல்லது திருமணமானவர்கள் அல்லது காதல் செய்பவர்கள்: 118,027
இது கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். அடுத்தவன் சந்தோஷத்தில் நாம் மண்ணைப் போடக்கூடாதாகையால் இந்த விவரமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

என்னை விரும்பக்கூடியவர்கள்: 18,726
நான் கருதுவது போல பெண்களும் கருதுவார்கள் அதனால் மேற்கூறிய அத்தனை கழிவுகளுக்குப் பின் என்னை விரும்புக்கூடியவர்கள் 18,726 பேர் தான்.

முடிவுரை:
மொத்தத்தில் நமது (எனது) ஆராய்ச்சியின் படி என்னை விரும்பக்கூடியவர்கள் 18,726 பெண்கள் தான். மேலும் இவர்களில் ஒருத்தியை நான் தேர்வு செய்யவோ அல்லது அவர்களில் ஒருத்தி என்னைத் தேர்வு செய்யவோ கண்டிப்பாக எல்லோரிடமும் நான் பேசியாக வேண்டும் (ஒருத்தியிடம் பேசிவிட்டு அடுத்தவரிடம் பேசாமல் முதலாமானவளைத் தேர்வு செய்வது மரபுப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று) அதனால் இவ்வளவு பேரை கண்டுபிடித்து பேசுவதற்கு எனக்கு 3493 வாரங்கள் ஆகும். (சுமாராக 67 வருடங்கள்). இப்பொழுது எனக்கு வயது 21. எனக்கேற்ற ஒருத்தியை நான் கண்டுபிடிக்க எனக்கு இன்னும் 67 வருடம் தேவைப்படுகிறது. அதற்குள் நானும் அவளும் இறந்திருப்போம் என்பது உறுதி. அதனால் தான் சொல்கிறேன் எனக்கு "எனக்கு ஒரு கேர்ள்பிரண்ட் கிடைக்க மாட்டாள்"

ஆச்சர்யம் என்னவென்றால் இந்தக் கட்டுரை IEEE யால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை ஆங்கிலத்தில் PDF வடிவில் பெற இங்கே சுட்டலாம். இக்கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ள இங்கே சுட்டலாம். (டேய்! நிறுத்துடா!! எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கீங்கன்னு ஒவ்வொருத்தரும் சவுண்ட் விடுறது எனக்கு கேட்குது). இந்தக் கட்டுரை கொஞ்சம் லேட்டாத்தான் கிடைச்சது.

பெரியவங்க அடிக்கடி சொல்வாங்க பொண்ணுங்கள நினைச்சி பொழப்ப கெடுத்துக்காதன்னு.... நம்மாளு மில்லருக்குப் பாருங்க IEEE அங்கீகாரமே கிடைச்சிருக்கு. எல்லாம் வித்தியாசமும் கலிகாலமும் செய்ற வேலைங்க.

Tuesday, May 17, 2005

மனைவியை வேலைக்கு அனுப்பலாமா ?

மனைவியை வேலைக்கு அனுப்பறதா நீங்க யாரு சார் அத முடிவு பண்றது? அவங்கள பத்தின முடிவுகளை நீங்க எடுக்க கூடாது போன்ற அட்வைஸ்களும், தலைப்பைப் பார்த்தவுடன் ஆணாதிக்கம் தாண்டவமாடும் ஒரு தலைப்பு என்று கூறுபவர்களின் கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளேன் ஏனென்றால் இது முழுக்க முழுக்க திருமணமாகாத ஆண் (ஆண்கள்) தமக்குள் கேட்டுக்கொண்ட எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி.

நேற்று தற்செயலாய் ஒரு செய்தித்தாளில் "MITR - my friend" படத்தைப் பற்றின செய்தியைப் படிக்க நேர்ந்தது. வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதனால் குழுந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதனைக் குறித்து அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. பிரச்சனை அதிலிருந்து தான் ஆரம்பம். நண்பனின் (ஒரு bachelors room) வீட்டில் மாலை ஒரு ஐந்து மணியளவில் அச்செய்தியைப் படித்தேன். நமக்குத்தான் ஆர்வம் அதிகமாச்சே உடனே ஆரம்பிச்சேன் "டேய் ! நீ இதப்பத்தி என்ன நினைக்கிறே?". அவன் கொஞ்சம் நேரடியாக யோசிப்பவன். உடனே பதில் சொன்னான் "பணத்துக்கு ஆசைப்பட்டா இத மாதிரியெல்லாம் நடக்கத்தான் செய்யும்". பதில் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. உடனே அடுத்த கேள்வியைக் கேட்டேன் "ஏண்டா அப்ப ரெண்டு பேரும் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்றீயா?" என் கேள்வியில் நியாயம் இருந்தது ஏனென்றால் அவனது அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பது எனக்குத் தெரியும். "தேவைக்கு மேல் பணத்தை எதிர்பார்த்து இருவரும் வேலைக்கு செல்வது தான் தப்புன்னு சொல்றேன்" இந்த பதிலுக்கும் அவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பணம் என்பது இன்று இன்றியமையாத ஒரு விஷயம் அதை அடைவதில் திருப்தி என்பதே கிடையாது. பில்கேட்ஸ் முதல் பிச்சைக்காரன் வரை பணம் தேடும் முயற்சிகளில் தான் இருக்க்கின்றனர். எனக்கு இப்பொழுது ஆர்வம் அதிகமானது உடனே "சொந்த வீடும் வாகன வசதிகளும் அவரவர் சம்பாத்தியத்துக்கேற்ப தான் அமையும் அப்படியிருக்க டூவிலர் வச்சிருக்கிறவர்கள் மனைவியும் பொருளீட்டினால் கார் வாங்க முடியும். அதே மாதிரி வாடகை வீட்டில் இருக்கிறவர்கள் மனைவியும் பொருளீட்டினால் ஒரு ப்ளாட் வாங்க முடியும் இதெல்லாம் ஒரு betterment இதில ரெண்டு பேரோட முன்னேற்றமும் இருக்கிறது இதில அதிகம் ஆசைப்படறதுங்கிற பேச்சுக்கே இடமில்லை" என்று நான் சொன்னேன். அவன் இதற்கும் பதில் தயாராக வைத்திருந்தான் "டேய் ! betterment ங்கிறது ரொம்ப பெரிய விஷயம் அதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளக்கம் கொடுப்பாங்க. அதெல்லாம் அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. ப்ளாட் வச்சிருக்கிறவர்கள் வீடு வாங்க நினைக்கிறதும், indica வச்சிருக்கிறவர்கள் honda city வாங்க நினைக்கிறதும் betterment தான் அதனால இத ஆராயக் கூடாது அப்படி ஆராய்ஞ்சா குழப்பம் தான் மிஞ்சும்".

என்னால் முடிவு தெரியாமல் சும்மா இருக்கமுடியவில்லை. வழக்கம் போல் பொதுவான கேள்வியை கேட்டால் அவனை மடக்கி விடலாம் என நினைத்து "அப்ப இந்த பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?" எனக் கேட்டேன். அதற்கும் சாதரணமாக பதில் சொன்னான் "இப்ப கேட்டையே இது நல்ல கேள்வி! ரெண்டு பேரும் வேலைக்கு போகிறதுங்கிறது இந்தக் காலத்துல ரொம்ப பழகிப் போன விஷயம். அதே மாதிரி அவங்க வீட்டில் குழந்தைகளுக்கு parental care கிடைக்கலைங்கறதும் பழகிப் போன விஷயம். இதில முக்கியமா கவனிக்க வேண்டியது அவங்களோட அவசியத்தை, பணத் தேவையை. இந்த மாதிரியானவர்களுக்குகுழந்தை வளர்ப்பும் பணத் தேவையும் இப்போ ஒன்றுக்கொன்று எதிரானவை. எதையாவது ஒன்னத்தான் உருப்படியா செய்ய முடியும். ப்ளாட்ல இருந்தாலும் சந்தோஷமா இருக்கிறவங்க, வீடு வாங்கி நிம்மதி இல்லாம இருக்கிறவங்களைப் பாத்து திருந்திக்கணும். இது மனிதத்துவத்தின் அடிப்படை மரபு. ஒண்ணு கிடைக்குதுன்னா இன்னொன்னை இழந்து தான் ஆகணும். அத விட்டுட்டு ரெண்டுக்கும் ஆசைப்பட்டா அது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைங்கிற போல ஆயிடும்". இப்பொழுது அவனது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எனக்குப்பட்டன. (அது சரி எவ்வளவு நேரம் தான் விதன்டாவாதம் ஜெயிக்கும்). ஆனா எனக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளும் ஆசை பிறந்தது அதனால் "அப்ப ஏன் பெண்கள் மட்டும் வீட்டிலிருக்க வேண்டும் ஆண்கள் வேலைக்குப் போகணும்னு சொல்றாங்க அதே உல்ட்டாவா நடந்தா என்ன?". ஒரு நல்ல கேள்வியுடன் அவனை மடக்கி விட்டதாக உணர்ந்தேன். இந்த முறை கொஞ்சம் யோசித்தான் "அறிவைப் பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் தான் ஆனால் உடலமைப்புகளாலும் மனதாலும் வேறுபட்டவர்கள். பெண்களுக்கு மனபலம் அதிகம் ஆண்களுக்கு உடல்பலம் அதிகம். குழந்தை வளர்ப்பு உளவியல் சார்ந்தது அதனால் பெண்கள் அதற்கு பொறுத்தமானவர்களாகின்றனர். மற்றபடி இதில் வேறு விஷயம் ஏதுமில்லை". "அப்போ ரெண்டு பேரும் வேலைக்கு போகிற வீட்டின் நிலைமை என்னன்னு சொல்றது?" நான் விடவில்லை. "அந்த வீட்டின் ஆணிற்கு உடல்பலம் போதவில்லைன்னு வச்சுக்கலாம்" அப்படீன்னு சொன்னான். நீ சொல்றது புரியலையேன்னு கேட்டேன். "அதாவது தம் உடல் பலத்தைக் கொண்டோ அறிவைக் கொண்டோ அவனால் குடும்பத்தை நடத்துமளவுக்கு பொருளீட்டத் தெரியவில்லை அல்லது இருவருக்கும் பணம் பெரிதாக படுகிறது அதனால் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட mutual compromise அப்படீன்னு வச்சுக்கலாம்".

என் கேள்விகள் தொடர்ந்தன "சரி நீ என்ன செய்யப் போறே? வேலை பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்குவியா அல்லது வேலை பார்க்காத பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்குவியா?". "ரெண்டு பேரா இருக்கிற வரைக்கும் அது பிரச்சனையே இல்லை. அவங்கவங்க இஷ்டப்படி செஞ்சுக்கலாம் ஆனா மூணாவது ஒருத்தர் வந்திட்டாருன்னா கொஞ்சம் யோசிக்கனும்". "அப்போ என்ன செய்வே?". "அது அப்போதைய பிரச்சனை. அதுமட்டுமில்லாம இது நான் மட்டும் முடிவு பண்ற விஷயமில்லை வரப்போறவங்க கிட்டயும் கேட்கணும் அவங்க அபிப்ராயமும் இதில 50% இருக்கு." "சரி யாராவது ஒருத்தர் தான் வேலைக்கு போகணும்கிற கட்டாயம் வருது அப்போ என்ன செய்வே?" "அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே parental careக்கு பொறுத்தமானவங்க பெண்கள் தான் அது அவங்களுக்கும் புரியும் அதனால அவங்களாகவே வேலையை விட்டுருவாங்க" "அப்படி விடலைன்னா?" "நான் விட்டுருவேன் ஏன்னா எனக்கு அவங்களும் முக்கியம் என் பிள்ளைகளும் முக்கியம்" "நடக்குதான்னு பார்ப்போம்" ன்னு சொல்லிட்டு வந்தேன்.

பின்பு அசை போட்டு பார்த்ததில் நண்பன் சொல்வது சரியாக பட்டது. பெண்கள் வேலைக்கு செல்வதோ அல்லது வீட்டிலிருப்பதோ அவரவர் வாழ்க்கை முறையைச் சார்ந்தது அவர்களை கட்டாயப் படுத்த யாருக்கும் உரிமையில்லை கணவன் உட்பட. மேலும் கணவனின் பேராசைக்காக மனைவி வேலைக்கு செல்வது தான் ஆணாதிக்கமாகும் குழந்தை வளர்ப்புக்காக மனைவி வேலையை விடுவது ஆணாதிக்கமாகாது. இது இரு bachelors க்குள் நடந்த விவாதம் ஆதலால் குடும்பஸ்தர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்....bachelor/spinster கள் அனுபவசாலிகளின் அட்வைஸை கேட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

Tuesday, May 10, 2005

ரசிகனின் ஆட்டோ கிராஃப்

ஒவ்வொரு நடுத்தர வயதுக்காரருக்கும் சினிமா என்பது சொர்க்கத்திற்கு சமம். தன்னால் முடியாததை ஒருவன் செய்கிறான் என்ற நினைவே அவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. தன்னால் முடியாத சில விஷயங்களை தமக்கான ஒருவன் செய்கிறான் என்ற சந்தோஷத்திலேயே தன்னை மறந்து அவன் நெகிழ்ந்து போகிறான். எதிரியை வீழ்த்துவதாகட்டும், சூழ்ச்சியை முறியடிப்பதாகட்டும் அல்லது காதலில் வெற்றி பெறுவதாகட்டும் அவனைப் பொறுத்தவரை அவனது கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் ஒருவித கருவியாகவே அவன் சினிமாவைப் பார்க்கிறேன். அதனாலேயே தமிழ்நாட்டில் இந்தக் கதையம்சம் நிறைந்த படங்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வித்தியாசங்களையும் வரவேற்கும் மனப்பக்குவமும் அவனிடம் இருக்கிறது. வித்தியாசங்கள் அவனுக்கு ஒருவித இனம் புரியாத பரிவை ஏற்படுத்தபவை. ஒரு பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் அன்னாந்து படுத்துறங்கும் சுகத்தை தருபவை. அவனால் வெல்ல முடியாத சமுதாய எதிரிகளை வெல்பவன் அவனுக்கு கடவுளுக்கு சமமாகிப் போகிறான். அதனாலேயே தன் பெற்றோர்களின் பிறந்த நாளை விட தன் நாயகனின் பிறந்த நாள் அவனுக்கு பெரிதாகப் படுகிறது.

ரசிகர்கள் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விசுவாசமானவர்கள். ஒரு நாயகன் தன் தயாரிப்பாளரையோ இயக்குனரையோ நம்பாவிடிலும் தன் ரசிகனை கண்டிப்பாக நம்பலாம். ஜாதி மத இனப் பாகுபாடில்லாமல் ஒருவன் நாயகனாக ஏற்றுக்கொள்ளப் படுகிற ஒரே துறை சினிமாத் துறை தான். எம்.ஜி.ஆர் முதல் அஜீத் வரை ரசிகர்கள் அவர்களது நாயகர்களை என்றைக்குமே விட்டுக் கொடுத்ததில்லை. அதனாலேயே போட்டி நிறைந்த திரைத்துறையிலும் ஹீரோயிச மசாலா படங்களும் அதிக லாபம் ஈட்டுகின்றன. அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் ஒவ்வொரு திருவிழாவிற்கும் திரைக் கட்டி சினிமா போடுவது வழக்கம். இப்பொழுது டிவிக்கள் பெருகி விட்டதால் அந்த தொழில்நுட்பம் குறைந்து போய் விட்டது. ஆனாலும் ஆங்காங்கே கிராமங்களில் திரைகட்டி திருவிழா கொண்டாடும் வழக்கமும் இருக்கவே செய்கிறது. அப்பொழுதெல்லாம் ரசிகர்களின் வெள்ளந்தித்தனம் வெளிப்படும். "திரை சிறுசா இருக்குடா இல்லைன்னா நம்ம தலைவரு சும்மா எம்பி எம்பி அடிப்பாருல்ல" போன்ற சத்தங்களை கேட்கலாம். நாயகன் போல மேனரிசங்களைச் செய்வது அவனைப் போன்றே டயலாக் பேசுவது எல்லாம் ஒரு ரசிகனிடம் ஒளிந்திருக்கும் ஹீரோவை வெளிக்கொணரும்.

சமீபத்தில் டில்லியில் திரையரங்கொன்றில் சந்திரமுகி திரைப்படம் பார்த்தேன். டில்லியில் அதிகமாக தமிழ் படங்கள் திரையரங்குகளில் காட்டப்படுவதில்லை. பாபா சூப்பர் ஃப்ளாப் ஆனதாலும் சந்திரமுகிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்த காரணத்தினாலும் எங்களுக்கு தமிழ் படம் பார்க்கும் புண்ணியம் கிட்டியது. அதுவும் சந்திரமுகி ரிலீசாகி வரவேற்பு நன்றாக இருக்கிறதென்று தெரிந்த பின்பு ஒரு இருபது நாள் கழித்து தான் டில்லியில் ரிலீசாகியிருந்தது. டில்லியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். திரையரங்குகளில் தமிழ் படம் காட்டப்படுவதே அரிதாகையில் கூட்டத்தை எதிர்பார்த்து முன்பே ரிசர்வேஷன் செய்து விட்டேன். ஒரு டிக்கட்டின் விலை 140 ரூபாய். அன்று ஹவுஸ்ஃபுல். ஆனால் என்னை ஆச்சர்யப்பட வைத்த ஒன்று கோட் சூட்டுடன் வந்த ஒருவர் ரஜினியின் அறிமுக காட்சியில் ரஜினியின் காலைத் தொட்டு கும்பிட்டது தான். விசில் வானைப் பிளக்கிறது (நானும் விசிலடித்தது வேறு விஷயம்). இருந்தாலும் படித்தவர் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவரிடம் நேரே சென்று என் குறையைக் கேட்டே விட்டேன். அவர் சொன்ன பதில் ஆச்சர்யமானது. "சார் ! என்னதான் படிச்சவன்னு சம்பாதிக்கறேன்னு சொன்னாலும் அவனவனுக்கு இருக்கிற பிரச்சனை அதிகம். கவலையே இல்லாம விசிலடிச்சு சினிமா பார்த்ததெல்லாம் சின்ன வயசுலதான் தலைவரப் பார்க்கும் பொழுது சின்ன வயசு ஞாபகமும் வருது என் கவலைகளும் மறந்து போகுது. இது பகுத்தறிவால பார்க்க வேண்டிய விஷயமில்ல சார் உணர்வுகளால பார்க்க வேண்டிய விஷயம்" அப்டீன்னார். யோசித்துப் பார்த்தேன் ரசிகனாக இருக்கிற ஒவ்வொருவனுக்கும் ஒருவித வேதியியல் உணர்ச்சி இருக்கிறது அதுவே அவனை நாயகனிடம் சிறைபடுத்துகிறது என்று நினைத்திருந்தேன் ஆனால் சந்திரமுகி பார்த்த பின் அந்த பேய் ஓடிவிட்டது.


Friday, May 06, 2005

ஜாண்டி ரோட்ஸ் - படம் பார்த்து கதை சொல்லு

ஒரு நாலு படம் அதுவும் ஒரே விஷயத்தைப் பற்றி forward mailலில் கிடைத்தால் ஒரு பதிவு எழுத முடியுமா? அந்த கேள்விக்கு விடையாகத்தான் இந்தப் பதிவு.


படம்1

கிரிக்கெட் அநாயசமாக ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் தேசப்பற்றை சுண்டிவிட்டுப் பார்க்கும் ஒரு விளையாட்டு. அதனாலேயே கிரிக்கெட் மேல் எனக்கு ஈடுபாடு அதிகம். இந்தியர்கள் கிரிக்கெட் பார்க்கும் பொழுது மட்டுமே 100% சதவிகிதம் இந்தியர்களாக இருக்கிறார்கள். இந்திய அணியின் வெற்றிகளில், 1983 உலக கோப்பையை வெற்றியைத் தவிர்த்தால் எஞ்சுவது மிகச் சொற்பமே. அப்படியிருந்தும் இந்தியாவில் தான் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்திய ரசிகர்களின் ரசனையை குறைவாக மதிப்பிட முடியாது. அவர்கள் எதிரணியின் திறமையையும் ஊக்கப்படுத்தும் மனப்பான்மை கொண்டவர்கள் (பாகிஸ்தானைத் தவிர்த்து :-( ). இந்திய ரசிகர்கள் மனதில் பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அவர்களுள் 90களில் அதிகம் பேசப்பட்டவர் போற்றப்பட்டவர் ஜாண்டி ரோட்ஸ்.


படம்2

இந்திய அணியின் ஃபீல்டிங் ஆரம்ப காலம் முதல் சொல்லிக்கோள்ளும் படியாக இருந்ததில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்கிற்காக பேசப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் குறைவே (முகமது கைப், அசாரூதீன், ஜடேஜா, ராபின் சிங், யுவராஜ் included ). ஃபீல்டிங் என்றவுடனேயே ஞாபகம் வரும் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ். பந்து இவர் ஃபீல்டிங் செய்யும் திசையை நோக்கி வருகின்றதென்றால் அப்படியொரு துறுதுறுப்பு இவரிடம் தென்படும். கூர்மையான கண்கள், வில்லாய் வளையும் உடல், குதிரையின் வேகம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால் ஒருவரி கிடைப்பார் என்றால் அவர்தான் ஜாண்டி. பேட்ஸ்மேன் அடித்த பந்து இவரிடம் சென்றால் ரன்னெடுக்கும் வாய்ப்பை விட ரன் அவுட் வாய்ப்புகளே அதிகம். பந்து எவ்வளவு வேகமாக வந்தாலும், ஒரு ஐந்து மீட்டர் தூரத்தில் வந்தாலும் பாய்ந்து தடுப்பது மட்டுமல்லாமல், தடுத்த வேகத்தில் எடுத்து குறி பார்த்து எறிவதிலும் இவர் அசகாய சூரர். ஸ்டம்ப் அருகில் பந்து கிடக்கிறதென்றால் இவர் பந்தை எடுத்து எறிய மாட்டார், ஸ்டம்பை நோக்கி பந்துடன் பாய்வார். 1992 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்சமாம் உல் ஹக்கை இவர் ரன் அவுட் ஆக்கிய விதம் என்னவென்று சொல்வது (பார்க்க படம் 2).


படம்3


படம்4

தென் ஆப்பிரிக்க அணிக்காக கால்பந்து போட்டிகளிலும் இவர் விளையாடியிருக்கிறார். அமைதியானவர், நேர்மையானவர் (இது முக்கியமா என்று கேட்காதீர்கள், அசாரூதீன், ஹான்சி குரோனியே காலத்தில் நேர்மை என்பது ரொம்ப பெரிய விஷயம்). இப்படிப்பட்ட ஒரு திறமையான வீரருக்கு வலிப்பு நோய் உண்டாம். முகமது கைப் விழுந்து ஒன்றிரண்டு பந்தைப் பிடித்தாலே ஆஹா ஓஹோவென்று புகழ்கின்றோமே அப்படியென்றால் ஜாண்டி போல் ஒருவர் கிடைத்தால் என்ன செய்வோம்?

பயிற்சி என்பது விளையாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பது முதல் படத்தையும் நான்காம் படத்தையும் பார்த்தால் புரியும்.

பதிவு எப்படி இருக்கு? சின்ன வயசில படம் பார்த்து கதை சொல்லுனு ஸ்கூல்ல படிச்ச ஞாபகம். அது இதுதானோ? இப்போதான் தெரியுது அன்னைக்கு ஏன் ஃபெயில் ஆனேன்னு..