Wednesday, November 09, 2005

வருத்தப்படாதவர்கள் சங்கம்

முன்னறிவிப்பு:

இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. என் வயதில், என் அனுபவத்தில், எனக்கு நியாயமென்று தோன்றிய சில ஆதங்கங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் திண்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் திண்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் தன் ஏழ்மை நிலை காரணமாக புற்களைத் திண்பதாக சொல்கிறான். உடனே அவனை தன் வண்டியில் ஏற சொல்கிறார்.

வண்டியில் செல்லும் பொழுது அந்த விவசாயி தன் வீட்டில் தன் மகனும் மனைவியும் புற்களைத் திண்று கொண்டிருப்பதாக சொல்கிறான். அதற்கு அந்த பிரபு அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார். உடனே அந்த விவசாயி தன் அண்ணனும் அவன் மனைவி மக்களும் புற்களைத்தான் திண்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வதாக பிரபு உறுதியளிக்கிறார். பூரிப்படைந்த விவசாயி உங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கும் பொழுது ஏன் முன்னமே பணியாட்களை அந்த வேலைகளுக்கு அமர்த்தவில்லை என்று கேட்கிறான். அதற்கு அந்த பிரபு "என் வீட்டு தோட்டத்தில் புற்கள் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன அவைகளை நீக்குவதற்காகவே உங்களை அழைத்துச் செல்ல சம்மதித்தேன்"

என்று சொல்கிறார். வேடிக்கைக்காக சொல்லப்பட்ட விஷயம் தான் என்றாலும் அதிலுள்ள கருத்து ஆழமானது. பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் ஆசிரியர் தின விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர் ஆசிரியர்கள் மீது ஒரு குற்றம் சாட்டினார். வாங்கும் சம்பளத்தை வைத்து திருப்தி கொள்ளாமல் அரசாங்க ஆசிரியர்கள் வட்டிக்கு விட்டு பிழைக்கிறார்கள் என்று சொன்னார். நானும் என் நண்பனின் அப்பாவும் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். இந்த வட்டிக்கு விட்டு பிழைப்பது என்பது சிறிது காலத்திற்கு முன் பணக்காரர்கள் மட்டும் செய்து வந்த தொழில். இந்த விஷயத்திற்காகத்தான் நம் முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தான் நடித்து வெளியாகிய அநேக படங்களில் போராடியிருப்பார். அந்த படங்களைப் பார்த்தாலே புரியும். ஒரு பண்ணையார் இந்த தொழில் செய்து ஊர் மக்களையும் ஏழை விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பார். தலைவர் அவர்களைத் தட்டிக் கேட்டு ஏழைகளைக் காப்பாற்றுவார்.

இன்று நிலைமை வேறு தெருவுக்கு ஒருவரேனும் இந்த வட்டிக்குக் கொடுத்து வாங்கும் தொழிலில் இருக்கிறார். விவசாய நிலங்கள் இருக்கும் கிராமங்களில் கண்டிப்பாக ஐந்திலிருந்து பத்து பேர் இந்த தொழிலில் இருப்பார்கள். இவர்களில் சிலருக்கு இது மட்டும் தான் தொழிலாக இருக்கும். சிலருக்கு இதுவும் ஒரு தொழிலாக இருக்கும். எப்படியிருப்பினும் பொருளீட்டுவதே இதன் உள் நோக்கம். இந்த தொழிலுக்கு அடிப்படை தேவை நிலையான பண ஆதாரம் (constant money source என்று சொல்வார்கள்). இன்றைய தேதியில் அது அரசு அலுவலர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் இந்த வட்டிக்கு கொடுத்து வாங்கும் பழக்கமுள்ளவர்களில் அரசு அலுவலர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்களுக்கு இது தொழில் கிடையாது. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பள பணத்தை வைத்து அதிக பொருளீட்டும் ஒருவித வியாபாரம் அவ்வளவே. எப்படி பார்த்தாலும் இது தட்டிக் கேட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த தொழில் செய்வதில் எந்த விதத்திலும் நியாயம் இருக்க முடியாது.

இந்த தொழிலில் இருக்கும் சிலரைக் கேட்டால் நாங்கள் நியாயமான வட்டிக்குத் தான் பணத்தை வழங்குகிறோம் என்று சொல்வார்கள். தொழிலே அநியாயம் என்று சொல்லும் பொழுது அதன் இயக்கம் மற்றும் எப்படி நியாயமாக இருக்க முடியும்? என்று கேட்டால், மக்களின் தேவைக்காகத்தான் நாங்கள் இந்த தொழில் செய்கிறோம் என்று சொல்வார்கள். இந்த பதில் எப்படியென்றால் ஏமாறுகிறவன் இருக்கிற வரை நாங்கள் ஏமாற்றுவோம் என்று சொல்வது போலாகும்.

மக்களின் தேவைக்காகத்தான் வங்கிகளுக்கு பணத்தையும் வழங்கி, ஒரு வட்டி விகிதத்தையும் அரசு நிர்ணயித்திருக்கிறது. மக்களின் பொருட் தேவையையும் கால அவகாசத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள் அநியாயம் செய்கிறார்கள். அரசூதியம் வாங்கும் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் குறைவு. அதனால் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவது வசதியாகி விடுகிறது. எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவர் மதிய உணவு இடைவேளைகளில் கூட கலெக்ஷனுக்கு சென்று விடுவார். அப்படியிருக்க என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயமென்னவெனில் இவர்கள் மேல் எழுந்த குற்றச்சாட்டிற்கு இவர்கள் காட்டிய எதிர்ப்பு தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் தோற்றதும், அந்த தோல்விக்கு அரசு ஊழியர்கள் தான் பெரிதும் காரணமென்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. நம்ம முதல்வர் என்ன செய்தார் அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனை தான் அது என்று சொல்பவர்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. நான் சொல்ல வருவது இதுதான், அரசு அலுவலர்களைப் பாதிப்புள்ளாக்கினார் என்று ஒரு ஆட்சியை முற்றிலுமாக அகற்றும் அளவிற்கு அவர்களிடம் சக்தி இருக்கிறதென்றால் அந்த சக்தியை அவர்கள் ஏன் நல்ல விஷயத்திற்காக பயன் படுத்தக் கூடாது?

உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடு இந்தியா. எந்த நாட்டில் ஊழல் அதிகம் காணப்படுகிறதென்று என்று கேட்டால் அதற்கும் இந்தியா என்று துணிந்து பதிலளிக்கலாம். நமது அரசாங்கமும் அதன் அங்கத்தினர்களும் இந்த ஒரு வார்த்தைக்கு பேடண்ட் வாங்கலாம். அரசு துறைகளில் அந்த அளவிற்கு ஊழல் அதிகம் காணப்படுகிறது. வட்டிக்கு விடுபவர்கள் பற்றி நான் சொன்னதும் இதற்காகத்தான். ஊழல் செய்ய வழி உள்ளவர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்ய வழி இல்லாதவர்கள் குறுக்குவழி ஏதேனும் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். (நல்லவர்கள் மன்னிக்கவும்... இது பெரும்பான்மை அரசு அலுவலர்களுக்கு சொல்லப்பட்ட ஒன்று)

அரசாங்கத்தைப் புரட்டிப் போடும் சக்தி மக்கள் தான் என்றாலும் அந்த அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையேயான பாலமாக இருப்பது அரசு அலுவலர்கள் தான். தனக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது மட்டும் கொதித்தெழுந்து தம் துவேஷத்தைக் காட்டும் இவர்கள் மற்ற நேரத்தில் மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குறிய விஷயம்.

Nov. 19, 1863
It is rather for us the living here be dedicated to the great task remaining before us--that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion--that we here highly resolve that these dead shall not have died in vain, that this nation shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth.
- ஆபிரகாம் லிங்கன்

இன்றைய அரசு மக்களால் மக்களுக்காக நடைபெறவில்லை. அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் இதை நடைபெற விடாமல் தடுத்து விடுகிறார்கள். இது நடைபெறாத வரை அரசாங்கம் என்பது மக்களை நினைக்காமல் மக்களுக்காக வருத்தப்படாதவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு சங்கம் அவ்வளவே.

25 comments:

வினையூக்கி said...

கணேஷ், மிகவும் சிக்கலான ஒரு விசயத்தை "ட்ச்" செய்து விட்டீர்கள். உங்கள் தைரியம் பாரட்டத்தக்கது. நீங்கள் வட்டிக்கு விடும் நபர்களின் பின் புலத்தை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இது தான் செய்து வருவார்கள்.

எங்கள் குடும்ம்பத்தில் ஆசிரியர்கள் யாருமில்லை. இருந்தும் என் பள்ளி ஆசிரியர்களை மிகவும் நெருக்கத்தில் இருந்து கவனித்தவன் ஆகையால் நிச்சயம் நீங்கள் குறிப்பிடும் வட்டிக்கு விடும் ஆசிரியர்கள் மிகவும் குறைவே.

முந்தையப் பதிவில் உங்கள் ஆசிரியரைப் பற்றி எழுதி எங்களை நெகிழ வைத்து விட்டு, ஏன் இந்த எதிர்மறைப் பதிவு நண்பா!!!!!!!

Ganesh Gopalasubramanian said...

வினையூக்கி

//பின் புலத்தை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இது தான் செய்து வருவார்கள். //
உண்மைதான். ஆனா பாருங்க நான் சொல்ல வந்தது ஒரு உதாரணம் தான். விஷயம் என்னவென்றால் தனக்கென்று ஒரு ஆபத்து வரும் பொழுது அரசு அலுவலர்கள் காட்டும் எதிர்ப்பும் அவர்களின் நடவடிக்கையும் மற்ற நேரங்களில் காணப்படுவதில்லை. அதைத்தான் சொல்ல விழைந்தேன்.

//நிச்சயம் நீங்கள் குறிப்பிடும் வட்டிக்கு விடும் ஆசிரியர்கள் மிகவும் குறைவே.//
ஆசிரியர்களில் வட்டிக்கு விடுபவர்கள் குறைவு. ஆனா பாருங்க வட்டிக்கு விடுபவர்களில் ஆசிரியர்கள் அதிகம்.

//முந்தையப் பதிவில் உங்கள் ஆசிரியரைப் பற்றி எழுதி எங்களை நெகிழ வைத்து விட்டு, ஏன் இந்த எதிர்மறைப் பதிவு நண்பா!!!!!!!//
நல்லதைப் பற்றி எழுதும் வேளையில் கெட்டதையும் சொல்லணுமில்ல. ஆனாலும் கொஞ்சம் பயந்து பயந்து தான் இந்த பதிவை எழுதினேன்.
பொறுத்திருந்து பார்ப்போம் மற்றவர்களின் கண்ணோட்டமும் எப்படியிருக்கிறதென்று.

G.Ragavan said...

புரிகிறது கணேஷ். வட்டிக்கு விடுதல் மட்டுமல்ல. அதற்கு மேலும் அரசாங்க ஊழியர்களுக்கு உள்ள கடமைகளைச் சொல்லியிருக்கின்றீர்கள்.

பெங்களூரில் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு உள்ளேயே லஞ்சம் வாங்குகிறார்கள். கொடுப்பவன் ஒருத்தன். வாங்குகிறவன் இன்னொருவன். ஆனால் அரசாங்க அதிகாரி நேரடியாக வாங்க மாட்டார். ஆகையால் கைதும் செய்ய முடியாது. இப்படிப் பல.

ஒருமுறை அரசியல்வாதி (எம்.எல்.ஏ) ஒருவருக்குச் சாதகமாக நடக்காத எனது தந்தையை ஒரே வருடத்தில் மூன்று இடங்களுக்கு மாற்றியதும் நான் பார்த்திருக்கிறேன்.

நட்சத்திர வாரத்தில் ஒரு ஆதங்கத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். விளக்கை ஏற்றியிருக்கின்றீர்கள். வெளிச்சம் பரவட்டும்.

Maravandu - Ganesh said...

//அதிக பொருளீட்டும் ஒருவித வியாபாரம் அவ்வளவே. எப்படி பார்த்தாலும் இது தட்டிக் கேட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.//

அன்புள்ள கணேஷ்

நட்சத்திரப் பதிவாளர் என்றாலும் நினைப்பதை எல்லாம் எழுதக்கூடாது :-)

எனது அப்பா,நெருங்கிய நண்பர்களுக்கு கடனாகப் பணம் கொடுப்பார். பணம் வாங்கியவர்களே வட்டி கட்ட விருப்பம் தெரிவித்தால் அதை வாங்கிக் கொள்வார் , மற்றபடி
கட்டாயமெல்லாம் செய்யமாட்டார்.

வட்டிக்கு வாங்கிய பணத்தை முறையாகப் பயன்படுத்தி
முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள்.

வட்டி கொடுப்பவரும் , வாங்குபரும்
பாட்ரனர்ஷிப் முதலாளிகள் போலத்தான்..


அநியாய வட்டி கண்டிக்கப்படவேண்டியது

இந்தப் பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை :-((((

ஸ்ருசல் said...

இதனை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எனக்கு பல ஆசிரியர்களைத் தனிப்பட்ட முறையிலும் தெரியும். அவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

இது உங்களின் கண்ணோட்டம் அவ்வளவே. உங்கள் ஊரில் சில ஆசிரியர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்பது கருத்து.

சிலரை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டு விட்டு, "பெரும்பாலோனோர், அதிகமானோர்" என பொதுப்படையாக சொல்லுவது சரியாகாது என்பது என் கருத்து.

ஒரு வேளை இந்த வட்டி சமாசாரத்தை விட்டு விட்டு, ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்கள் தங்களின் சக்தியை நல்ல விதமாக பயன்படுத்தலாம் எனக் கூற விழைந்திருந்தால் கட்டுரை நல்ல விதமாக வந்திருக்கும். இப்போது சரியல்ல என்பதல்ல என் வாதம். உங்கள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை வைத்துள்ளீர்கள். அவ்வாறு எழுதியிருந்தால் பெரும்பாலோனோரின் (இதுவும் என் கண்ணோட்டம் தான்) ஒப்புதல் கிடைத்திருக்கும்.

அதனால் ஆசிரியர்களில் 99.99% பேர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை என்று என்னுடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.

Ganesh Gopalasubramanian said...

@ராகவன்
//அரசாங்க ஊழியர்களுக்கு உள்ள கடமைகளைச் சொல்லியிருக்கின்றீர்கள்.//
ஆமாம் ராகவன். என்னுடைய ஆதங்கம் அது தான் அரசு இயந்திரம் மிகுந்த கோளாறுடன் இருக்கிறது.

//மூன்று இடங்களுக்கு மாற்றியதும் நான் பார்த்திருக்கிறேன்.//
என்னத்த சொல்ல எல்லாவற்றையும் சொன்னால் வருத்தம் தான் மிஞ்சும்.

@மரவண்டு கணேஷ்
//நட்சத்திரப் பதிவாளர் என்றாலும் நினைப்பதை எல்லாம் எழுதக்கூடாது :-)//
ஒத்துக்கொள்கிறேன் கணேஷ் :-(

//அநியாய வட்டி கண்டிக்கப்படவேண்டியது
இந்தப் பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை :-((((//
இது ஒருவகையில் கணக்கெடுப்பு என்று வைத்துக்கொள்ளுங்களேன். தவறாக எழுதியிருந்தால் கண்டிப்பாக எண்ணொட்டத்தையும் என்னெழுத்தையும் திருத்திக் கொள்கிறேன்.
எனக்குத் தெரிந்த வரையில் இந்த விஷயத்தை எடுத்தாண்டிருக்கிறேன். இன்னும் அதிக பேர் பார்வையில் யோசிக்க வில்லை. உலக அறிவு கம்மி தான். உங்களைப் போன்ற முன்னோடிகள் என்னை இது போல் வழி நடத்துங்கள்.

@ஸ்ருசால்
//இது உங்களின் கண்ணோட்டம் அவ்வளவே. உங்கள் ஊரில் சில ஆசிரியர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்பது கருத்து.//
//பொதுப்படையாக சொல்லுவது சரியாகாது என்பது என் கருத்து.//
//ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்கள் தங்களின் சக்தியை நல்ல விதமாக பயன்படுத்தலாம் எனக் கூற விழைந்திருந்தால் கட்டுரை நல்ல விதமாக வந்திருக்கும்.//
ஆமாம் ஸ்ருசால் நீங்கள் சொல்வது உண்மைதான். முன்னர் சொன்ன மாதிரி இதற்கு நெகட்டிவ் ரியாக்ஷன் இருக்குமென்று தெரியும். ஒரு பயத்துடன் தான் எழுதினேன். ஆனால் என்னுடைய கண்ணோட்டத்தைச் சொல்லாமல் மற்றவர்களின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடியாதே. எனக்கு தெரிந்த ஆசிரியர்கள் அப்படி இருக்கலாம்.
நீங்களும் நேர்த்தியாக எனக்கு அறிவுறுத்தியதற்கு என் நன்றி.

Unknown said...

//ஆசிரியர்களில் வட்டிக்கு விடுபவர்கள் குறைவு. ஆனா பாருங்க வட்டிக்கு விடுபவர்களில் ஆசிரியர்கள் அதிகம்.//

கணேஷ்., இப்பிடி உறுதியாச் சொல்றிங்க?! எனக்குத் தெரிந்தவரை ஆசியர்கள் யாரும் வட்டிக்கு விடவில்லை (ஓரிருவர் இருக்கலாம்)., ஆனால் இரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள்., அரசு அலுவகங்களில் வேலை பார்ப்பவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து பைனான்ஸ் கம்பெனியே வைத்து நடத்துகிறார்கள் அது எனக்குத் தெரியும். இது அரசு ஊழியர்கள் மட்டுமல்ல., பி.ஹெச்.ஈ.எல்., டால்மியா போன்ற பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சிலரும்தான். நம்ம ஊர்ல நல்லா சம்பாரிக்கிற (அதாவது மாத வருமானம் ரெகுலராக வாங்கும்) நாலு பேர் சேர்ந்தாலே, பேசினாலே அவங்க வட்டிக் கடை வச்சிருக்காங்கன்னு அடிச்சி சொல்லலாம். கந்து வட்டிய அம்மா நொந்து வட்டியா ஆக்கிட்ட பிறகு இப்ப எப்படி இருக்குன்னு தெரியலை... எங்க ஊர் பக்கத்துல., ஒரு வறுமையான பையனை., தன் உழைப்பு முழுவது கொடுத்து எம்.ஏ இலக்கியம் (ஆங்கிலம்)., படிக்க வைத்தார் ஒரு தாய்., ஆனால் தாய் இறக்கும்வரை பையனுக்கு எந்த வேலையுமில்லை., இறக்கும் தருவாயில் தன் சொத்தை விற்று வைத்திருந்த பணம் 6,000/- ரூபாயை மகனிடம் கொடுத்துவிட்டு மகனிடம் (இருந்து) விடுதலை பெற்றார். அம்மா இறந்தவுடன் அந்த மகன் முதலில் செய்தது., எம்.ஏ டிகிரியத் தூக்கி பரணில் போட்டது. பின்பு?., வட்டிக்கு விடறதுதான்.... நான் இங்க வரும் போது அவர் பல லட்சங்களுக்கு அதிபதி., இப்போ கோடியக் கூட பிடுச்சிருக்கலாம்., இல்ல... பணம் கொடுத்தவங்க நாமம் போட்டு.... ச்சே... நமக்கெதுக்கு பாவம்... ஆனால் நம் மக்களின் பணப் பற்றாக்குறைக்கு இவரின் செல்வம் சாட்சி சொல்கிறது. கொள்ளையா வட்டி குடுக்கிற வர்க்கம்., இந்த வட்டி மாதிரியே நினைச்சு மாதா மாதம் ஒரு சிறு தொகையையாவது சேமித்தால் என்ன?.

rv said...

கணேஷ்,
பணத்தேவை அதிகரிக்க அதிகரிக்க இதுபோன்ற வட்டிக்கு விடுவது எல்லாம் சகஜமாகிவிடுகிறது. அதுவும், அரசு இயந்திரங்களிலிருந்து பணம் பெறுவது, முன்னாளை காட்டிலும் முன்னேறியிருந்தாலும், இன்னும் கடினமான ஒன்றே. சிதம்பரம் கூட கல்வி கடன்கள் மறுக்கப்படக்கூடாது என்ற வகையில் அறிக்கை விட்டாரே..

இதுக்கே இப்படி சொன்னால் - எனக்கு தெரிந்த சில நல்ல வரும்படியுள்ள புரோகிதர்கள் கூட இதைச் செய்கின்றனர். :))

Maya said...

எல்லா ஆசிரியர்களையும் குற்றம் சொல்ல முடியாது.அதே நேரத்தில் சில உண்மைகளையும் சொல்ல விரும்புகிறேன்..

உலகத்திலேயே நம் நாட்டில் தான் அரசாங்க ஊழியர்களை வேலை செய்யச் சொன்னால் கோபம் வரும்..இந்தியன் படத்தில் சொல்வது போல் அவர்கள் கடைமையைச் செய்வதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்..ஒரு அரசாங்க அலுவலகத்தில் 100 பேர் வேலை பார்த்தால் உண்மையாக வேலை பார்ப்பவர்கள் மிஞ்சிப் போனால் 20 பேர் தான்..மீதி 80 பேர்கள் அந்த 20 பேர்களின் உழைப்பில் காலத்தை ஓட்டுபவர்கள்.இது நிதர்சன்மான உண்மை.
இன்னொன்று நம் அரசாங்க ஊழியர்களுக்குத்தான் அவரவர் வேலை பார்க்கும் துறைகளின் சலுகைகள் அதிகம்.மின்சாரத்துறையில் உற்பத்தி பிரிவில் வேலை பார்ப்பவர்களுக்கு மின்சாரம் இலவசம்.ட்தொலைபேசி துறையில் ஓசி ..பேரூந்து வேலை பார்பவர்களுக்கு இலவச பயணம்..
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..பொது மக்கள் வரி பணத்தில் தங்கள் சம்பள்த்தை வாங்கி சலுகைகளையும் அனுபவித்து வேலை பார்க்கச் சொன்னால் கோபம் வரும்.
இவர்கள் ஏதாவது பணியில் குற்றம் இருந்தால் அதிக பட்ச தண்டனை என்ன தெரியுமா ?? இட மாற்றல் அல்லது தற்கால பணி நீக்கம்..இது பள்ளிக்கூடத்தில் மாணவிகளை நாசம் செய்கின்ற சில ஆசிரியர்களுக்கு கிடைத்த தண்டனை..எந்த நாட்டிலும் இது போன்ற தண்டனைகள் கிடையாது.

நமக்குத் தேவை நல்ல அரசியல்வாதி அல்ல..கடமையைச் செய்யும் அரசாங்க அதிகாரிகளே..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

Boston Bala said...

----ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பள பணத்தை வைத்து அதிக பொருளீட்டும் ஒருவித வியாபாரம் அவ்வளவே. எப்படி பார்த்தாலும் இது தட்டிக் கேட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த தொழில் செய்வதில் எந்த விதத்திலும் நியாயம் இருக்க முடியாது.----

Risk vs Return... If a person lends the money to a high risk, then (s)he expects a better return for the money.

துளசி கோபால் said...

கணேசா,

எனக்குத் தெரிஞ்சவரை 'வட்டிக்குக் கடன் வாங்கும்' ஆசிரியர்களே அதிகம்.

குடும்பம் நடத்தக் காசு போதாத குறைதானாம்.

யாத்ரீகன் said...

இதில் நாம் எல்லோரும் கணேஷ் முக்கியமாக சொல்ல வந்ததை விட்டு விட்டு, அதில் வந்த வேற விஷயத்தை பிடித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்...

இப்போ, ரோடு சரியில்லைனு சொல்ற ஜனங்கள்ல அரசு ஊழியர்களும் இருப்பாங்க, ரேசன் அரிசி சரியில்லைனு சொல்ற ஜனங்கள்லயும் அரசு ஊழியர்கள் இருப்பாங்க... இப்படி நாட்ல நடக்குற ஒவ்வொரு தப்பையும் குறை சொல்ற ஜனங்கள்ல அரசு ஊழியர்களும் இருப்பாங்க, பத்திரப்பதிவு ஆபிசை அவுங்க பிரச்சனை சந்திக்கும் போது குறை சொல்ற போலிசும் இருப்பாங்க, அவுங்க வீட்ல திருடு போன பிறகு போலிஸை குறை சொல்ற பத்திர பதிவுத்துரையினரும் இருப்பாங்க (இங்கே போலிஸும், பத்திரப்பதிவுத்துறையினறையும் எடுத்தது ஒரு உதாரணத்துக்குத்தான்)

ஆனால், அவுங்க பக்கமும் ஒரு சின்ன தப்பு இருப்பதை மறந்துருவாங்க... , அதுக்கு காரணம் , அது சின்ன தப்புதானே யாரை பாதிக்கப்போகுதுனு ஒரு அலட்சியம், இல்லை, மேலதிகாரிமேல பழி போடலாம்.. இதில சில விஷயங்கள் நியாயமானதா கூட இருக்கலாம்

ஆக மொத்தம், சுய கட்டுப்பாடு/ஒழுக்கம் ( Self Responsibility ) தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை..

இதை சொல்ல வந்த அந்நியன் படம் தான் ஜிகினா வேலையில, வேறுபட்ட கோணங்கள்ல (அது சரியா தப்பானு, திருப்பி யாரும் இதை திசை திருப்ப வேணாம்) தொலைஞ்சு போச்சு..

இனிமே 50 வயாசானவுங்களை குற்றம் சொல்லி காலத்தை கழிக்குறதைவிட..

இனி நாம வளக்குற குழந்தைகளிடம் இருந்து இந்த மாற்றத்தை ஆரம்பிக்கலாமே..

வலைப்பூக்கள் மின்னும் இந்த சூழலில், வலைஞர்களாகிய நாமே ஆரம்பிக்கலாமே.. வெறுமனே வலைப்பூக்களில் கூச்சலிடுவதைத்தவிர...

Ganesh Gopalasubramanian said...

@ஜான்
//My opinion is that lending business exists because there are no instant solutions for people who need money//
கால அவகாசம் தான் அரசு துறையை இங்கு கெட்டவனாக்குகிறது. பார்க்கலாம் ஏதாவது முன்னேற்றம் வருகிறதா என்று.

@டி.ராஜ்
//பிராக்டிகல் மார்க்குகளை காரணம் காட்டி டியுசனில் சேரசொல்லும் ஆசிரியர்களும் உண்டு.//
இதைக் குறிப்பிடலாம் என்றிருந்தேன் பிறகு பதிவு ஆசிரியர்களைக் குறை சொல்வதற்காகவே எழுதப்பட்டதாகிவிடும் என்பதால் விட்டு விட்டேன்.

@யாத்திரீகன்
//ஆக மொத்தம், சுய கட்டுப்பாடு/ஒழுக்கம் (Self Responsibility) தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை..//
அப்டி போடுங்க... நான் சொல்ல வந்ததை ஒரு வரியில சொல்லிட்டீங்க.....

//வலைப்பூக்கள் மின்னும் இந்த சூழலில், வலைஞர்களாகிய நாமே ஆரம்பிக்கலாமே..//
ஆதங்கம் அப்ரூவ் ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். மக்கள் சக்தி மாற்றத்தைத் தரணும்.

@துளசி
//குடும்பம் நடத்தக் காசு போதாத குறைதானாம். //
இந்த கண்ணோட்டத்தில நான் யோசிக்காம விட்டுட்டேனே..
ஆசிரியர்களிடம் கேட்டிருக்கலாம்.

@பாலா
//Risk vs Return... If a person lends the money to a high risk, then (s)he expects a better return for the money.//
இதையே அரசு செஞ்சா மட்டும் நாம் ஏன் அதிக வட்டின்னு குறை சொல்றோம்?
ஆனாலும் நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். குறைந்த நேரத்தில் தேவைக்கேற்ப பணம் கிடைக்கும் பொழுது மக்கள் கேட்கும் வட்டியைக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
மரவண்டு சொல்வது போல் அநியாய வட்டி தான் கண்டிக்கத்தக்கது.

@மாயா
//அந்த 20 பேர்களின் உழைப்பில் காலத்தை ஓட்டுபவர்கள்.இது நிதர்சன்மான உண்மை.//
நீங்கள் சொல்வது உண்மைதான். என்ன சதவிகிதத்தில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.
என்னத்த சொல்றது. இதில் ஆட்குறைப்பு செய்தால் லபோதிபோன்னு கத்துவாங்க.

//நமக்குத் தேவை நல்ல அரசியல்வாதி அல்ல கடமையைச் செய்யும் அரசாங்க அதிகாரிகளே..//
அதாங்க... நெத்தியடி... நல்ல அலுவலர்களும் இருக்கவே செய்கிறார்கள். என் நண்பனின் அப்பா central excise துறையில் வேலை செய்கிறார். (The most corruption prone dept). இன்று வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறார். நண்பனும் கல்லூரி படிப்பை வங்கியில் கடன் வாங்கி தான் படித்தான். நேர்மை என்று வார்த்தைக்கு எனக்கு உதாரண புருஷனாக தோன்றுபவர் அவர்தான்.

@இராமநாதன்
//இதுக்கே இப்படி சொன்னால் - எனக்கு தெரிந்த சில நல்ல வரும்படியுள்ள புரோகிதர்கள் கூட இதைச் செய்கின்றனர். :))//
பிழைக்கத் தெரிந்தவர்கள் வேறென்ன சொல்ல....

@அப்டிபோடு
//இந்த வட்டி மாதிரியே நினைச்சு மாதா மாதம் ஒரு சிறு தொகையையாவது சேமித்தால் என்ன?.//
ஆசைக்கும் பேராசைக்கும் வேறுபாடு இருக்குங்களே...

b said...

எனக்கு தமிழ் பாடம் எடுத்த சின்ன தமிழய்யா தமிழ்செல்வன் ஆவார். அவரும் பின்னர் இதுபோல வட்டிக்குவிட ஆரம்பிக்க வியாபாரம் சூடு பிடித்தது. பின்னர் மற்றவர்களும் அவரிடம் பணம் கொடுத்து விடச் சொன்னார்கள். அவர்களுக்கு 5வட்டி கொடுத்துவிட்டு இவர் 8ல் இருந்து 10வரை வட்டிக்கு வெளியில் விட்டார்.

வியாபாரம் மேலும் சூடு பிடித்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டது. நகை, பாத்திரங்கள் அடகாகவும் பிடிக்கப்பட்டது.

அதன்பின் பணத்தை இரட்டிப்பாக(அடித்தல்)த் தருகிறேன் என்று இன்னொருவர் ஆசைகாட்ட பேராசையால் அனைத்தும் இழந்தார். கடன்காரர்கள் வீட்டினை மொய்க்க திருப்பித்தர முடியாத நிலை. தற்கொலை செய்து கொண்டார்.

கொடுத்தவர்கள் வீட்டை மொய்க்க அவர் மனைவியோ எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

வட்டியால் அந்த ஆசிரியரின் குடும்பம் மட்டுமின்றி பலரின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டது.

Chandravathanaa said...

பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

கதையும் கருத்தும் எனக்குப் பிடித்திருக்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...

//சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் தோற்றதும், அந்த தோல்விக்கு அரசு ஊழியர்கள் தான் பெரிதும் காரணமென்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. //

யாரந்த அனைவர்?எத்தனை Sweeping Comments என்பதை புரிந்துக்கொண்டுதான் எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இப்படி அரசு ஊழியர்களால் ஒரு கட்சியை அதுவும் ஆளும் கட்சியாக ஐந்தாண்டுகாலம் ஆட்சி செய்த ஒரு கட்சியை பதவியிழக்க செய்ய முடியும் என்றால், ஒரு பாப்ரி தேவியை,ஏன் மீண்டும் ஆட்சி செய்யும் ஜெ..வை அடுத்த பொதுத் தேர்தலில் பதவியிழக்க செய்ய முடியும் என்கிறீர்களா?

புரியவில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பள பணத்தை வைத்து அதிக பொருளீட்டும் ஒருவித வியாபாரம் அவ்வளவே. //

என்ன சார் சொல்றீங்க? அரசு ஊழியர்களுள் மிகவும் குறைந்த ஊதியம் பெறுபவர் அரசு ஆசிரியர்கள்தான்.

அரசின் மற்ற டிபார்ட்மென்டுகளில் வேலை செய்பவருக்காவது சம்பளத்துடன் கிம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தரத்துக்கும் கீழ் இருப்பவர்கள். அவர்களுக்கு காசு கொடுத்து டியூஷன் படிக்கக்கூட வழியில்லை.

இதில் ஆசிரியர்களுக்கு ஊதியத்தைத் தவிர வேறு வழியில்லை.. இதில் மாத சம்பளத்தில் கடன் இல்லாமல் பொழுதைக் கழிப்பதே கஷ்டம்..

உண்மை அப்படியிருக்க மாத சம்பளத்தில் சேமித்து அதை வட்டிக்கு விட்டு.. சரி அப்படியே இருந்தாலும் எத்தனை பேருக்கு கொடுத்துவிடமுடியும் உணவு இடைவேளை - அதாவது அரை மணியில் - நேரத்தில் கலெக்ஷன் போகும் அளவுக்கு வேண்டுமானால் ஒருவேளை - அதாவது ஒன்று அல்லது இரண்டு பேர் - அவரிடம் கடன் வாங்கியவர்கள் இருக்கக் கூடும்..

அதை Magnify செய்து எல்லோருமே வட்டிக்கு விட்டு பிழைக்கிறார்கள் என்று பொதுமறையாக குற்றம் சாட்டுவது சரியா?

டிபிஆர்.ஜோசப் said...

மாயா கூறியுள்ள கருத்துகளும் சரியில்லை என்றுதான் நினைக்கிறேன்.

//ஒரு அரசாங்க அலுவலகத்தில் 100 பேர் வேலை பார்த்தால் உண்மையாக வேலை பார்ப்பவர்கள் மிஞ்சிப் போனால் 20 பேர் தான்..மீதி 80 பேர்கள் அந்த 20 பேர்களின் உழைப்பில் காலத்தை ஓட்டுபவர்கள்.இது நிதர்சன்மான உண்மை.//


இதெல்லாம் உங்கள் கற்பனையா மாயா?

உங்களுக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிபவரை யாரையாவது தெரியுமா?

என் குடும்பத்தில் அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அலுவலக நிமித்தம் படும் பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

எல்லா துறைகளிலும் பொறுப்பற்ற பணியாட்கள் இருக்கின்றனர்.ஏன், தனியார் வங்கியான என் வங்கியிலும் இத்தகையோர் எத்தனையோ பேர்.

அதுபோல் அரசு அலுவலகங்களிலும் இருக்க வாய்ப்புண்டு. இல்லையென்று சொல்ல வரவில்லை.. நீங்கள் சொன்ன 80:20 சதவிகிதத்தில் கண்டிப்பாய் இல்லை..

தாணு said...

வட்டி வாங்குவது என்பதே, பிறரின் ரத்ததை உறிஞ்சும் அட்டைப்பூச்சித் தனமே! அதிலும் ஆசிரியர்களே அந்த தொழிலை செய்வது கேவலமான வெளிப்பாடு. அதை நியாயப் படுத்துவதே தவறு. ஆனால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் பொருளாதாரத் தேவையால், சக நண்பர்களிடம் கைமாற்று வாங்கி வாங்கி, ஒரு கட்டத்தில் அவர்களை இந்த ருசி காணச் செய்துவிடுகிறார்கள். பிறகு தாங்களும் அந்த சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

நல்ல கருத்து கணேஷ். முன் ஏர் கொஞ்சம் சரியாகப் போனால், பின் ஏர் பாதை தவற யோசிக்கவாவது செய்யும் அல்லவா?

பினாத்தல் சுரேஷ் said...

''95.423145325% of all statistics are bogus.

80% of people do the generalization, 20% believe it..''

We should think twice before using any figures, that too when generalizing. We tend to use the fugures as authentic.

I can say 99% of all governement officials are corruption -free, based on my experience (which is nil)-- will anyone accept it?

Ganesh Gopalasubramanian said...

@டி ராஜ்
//சரியாச் சொன்னீங்க. --- மக்களிடம் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. ஒரு தொடர் போடலாமென்று இருக்கிறேன்.//
நல்லா நெத்தியடியா எழுதுங்க. ஏமாறுகிறவனும் இருக்கக் கூடாது ஏமாற்றுபவனும் இருக்கக்கூடாது.

@ராமா
//வட்டியால் அந்த ஆசிரியரின் குடும்பம் மட்டுமின்றி பலரின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டது.//
இன்னுமொரு உதாரணமா. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிலர் உண்மை என்கிறார்கள் சிலர் பொய் என்கிறார்கள். திரும்பவும் என் கேள்விக்கு விடை தெரியாமலேயே போய் விடும் போலிருக்கே.

@சந்திரவதனா
//கதையும் கருத்தும் எனக்குப் பிடித்திருக்கிறது.//
நன்றி. நான் தமிழ்மணத்தில் வலைப்பதிவிட ஆரம்பித்த பொழுது என் பதிவுக்கென வந்த பின்னூட்டங்களில் நீங்கள் தான் இரண்டாவது பின்னூட்டத்தை அளித்தீர்கள். இன்று நான் நட்சத்திர பதிவராகியிருக்கிறேன். கண்டிப்பாக உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசியே.

@ஜோசப்
//யாரந்த அனைவர்?எத்தனை sweeping comments என்பதை புரிந்துக்கொண்டுதான் எழுதுகிறீர்களா//
இல்லை என்கிறீர்களா?

//ஒரு பாப்ரி தேவியை,ஏன் மீண்டும் ஆட்சி செய்யும் ஜெ..வை அடுத்த பொதுத் தேர்தலில் பதவியிழக்க செய்ய முடியும் என்கிறீர்களா?//
இல்லையா பின்ன. ஜெ வே பாராளுமன்ற தேர்தலில் தோற்ற பிறகு முன்பு பறித்த சலுகைகள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்தாரே அப்படியென்றால் அதற்கு என்ன காரணம்?

//என்ன சார் சொல்றீங்க? அரசு ஊழியர்களுள் மிகவும் குறைந்த ஊதியம் பெறுபவர் அரசு ஆசிரியர்கள்தான். //
அரசு ஊழியர்கள் என்றால் போக்குவரத்து துறை ஊழியர்கள், துப்புறவு தொழிலார்கள் என எல்லோரும் அடக்கம். இதில் எல்லோருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அனுபவத்திற்கேற்ப தான் சம்பளம் வழங்கப்படுகிறதே ஒழிய ஆசிரியர்களுக்கு மட்டும் எல்லோரையும் விட குறைவாக வழங்கப்படுவதில்லை.

//அதை magnify செய்து எல்லோருமே வட்டிக்கு விட்டு பிழைக்கிறார்கள் என்று பொதுமறையாக குற்றம் சாட்டுவது சரியா?//
எல்லோரும் வட்டிக்கு விட்டு பிழைக்கிறார்கள் என்று நான் சொல்லவே இல்லை. நான் சொல்ல வந்தது இது தான் ஆசிரியர்களில் வட்டிக்கு விடுபவர்கள் குறைவு. ஆனா வட்டிக்கு விடுபவர்களில் ஆசிரியர்கள் அதிகம். பின்னூட்டங்களுக்கு அளித்த பதில் பின்னூட்டம் ஒன்றிலும் இதையேத்தான் சொல்லியிருந்தேன்.

//அதுபோல் அரசு அலுவலகங்களிலும் இருக்க வாய்ப்புண்டு. இல்லையென்று சொல்ல வரவில்லை.. நீங்கள் சொன்ன 80:20 சதவிகிதத்தில் கண்டிப்பாய் இல்லை..//
சுரண்டி பிழைப்பவர்களின் சதவிகிதம் மாறலாம். நானும் ஒப்புக்கொள்கிறேன். அரசு துறைகளில் இது அதிகமாக இருக்கும்.

@தாணு
//இந்த ருசி காணச் செய்துவிடுகிறார்கள். பிறகு தாங்களும் அந்த சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.//
இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை தாணு. அதற்கு தான் அனுபவம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.

//பின் ஏர் பாதை தவற யோசிக்கவாவது செய்யும் அல்லவா?//
அழகா சொல்லிட்டீங்க. மாற்றம் வரும் வரை காத்திருப்போம்.

@சுரேஷ்
// ''95.423145325% of all statistics are bogus.//
சுரேஷ் சொல்ல வந்ததை நல்லா சொன்னீங்க :-)

//I can say 99% of all governement officials are corruption -free, based on my experience//
என்ன செய்ய கடைசியில எனக்கு குழப்பம் தான் மிஞ்சுது

Anonymous said...

NALLAP PATHIVU....UNARA VAENDIYAVARKAL UNARA VAENDUM....

Maya said...

ஜோசப் அவர்களே
வணக்கம்.நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்..

1) /இதெல்லாம் உங்கள் கற்பனையா மாயா?
உங்களுக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிபவரை யாரையாவது தெரியுமா?
/

கண்டிப்பாக கற்பனை இல்லை.3 ஆண்டுகள் தமிழக மின் வாரியத்தில் பணி புரிந்த அனுபவம்.

2)/ என் குடும்பத்தில் அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அலுவலக நிமித்தம் படும் பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல ../

அவர்கள் நான் சொன்ன 20 சதவீததில் வருபவர்களாக இருப்பார்கள்.

3)/எல்லா துறைகளிலும் பொறுப்பற்ற பணியாட்கள் இருக்கின்றனர்.ஏன், தனியார் வங்கியான என் வங்கியிலும் இத்தகையோர் எத்தனையோ பேர்./
ஆச்சரியமாக உள்ளது ஜயா..ஒரு தனியார் நிறுவனததில் வேலை பார்க்காமல் ஒபி(ஜல்லியடித்து) அடித்து வெட்டியாக இருப்பார்களேயானால் ஒன்று..அவர்களை மேய்க்கும் மேலாளர் சரியில்லை அல்லது அவருக்கு அதிகாரம் இல்லை என்றே பொருள்..நான் சொல்வாது சரியாக இருந்தால் ஒன்று அது அரசாங்க அலுவலகம் அல்லது சீக்கிரம் மூடு விழா காணப் போகும் தனியார் நிறுவனம்.


4)/அதுபோல் அரசு அலுவலகங்களிலும் இருக்க வாய்ப்புண்டு. இல்லையென்று சொல்ல வரவில்லை.. நீங்கள் சொன்ன 80:20 சதவிகிதத்தில் கண்டிப்பாய் இல்லை../
ஓரளவிற்கு ஒத்துக் கொண்டதற்கு நன்றி ஜயா..80:20 இல்லை என்றால் ??? எவ்வளவு என்று சொல்ல முடியுமா ??

மீண்டும் சொல்கிறேன்..ஓரிருரின் உண்மையான உழைப்பில்தான் மற்ற அரசாங்க ஊழியர்கள் காலத்தை ஓட்டி வருவருகிறார்கள்..
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

Machi said...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி நிறைய பின்னூட்டம் வந்துவிட்டதால் வட்டி தொழிலை பற்றிய என்னுடைய கருத்து.....
வட்டிக்கு விடுவது கொடுந் தொழிலா? அப்ப வங்கிகள் செய்வது என்னவாம்? சேவையோ? பணம் என்பது இருக்கும் வரை வட்டி தொழிலும் இருக்கும், அநியாய வட்டி என்பது தான் தவறு. நான் ஏன் தனியாரிடம் கடன் வாங்கப் போறேன்? வங்கியில் கொடுக்க/வைக்க என்னிடம் நகை கிடையாது, சொத்து கிடையாது அதையெல்லாம் கொடுத்தாலும் பணம் ("லோன்") கிடைக்குமா என்பது தெரியாது. என்னுடைய அவசர தேவைக்கு பணம் உடனே கிடைக்கும் இடம் எனக்கு தெரிந்த நபர் தான் ( அவருக்கு நானும் தெரியனும் ). சும்மா கடன் கேட்டா எவன் தருவான்? நீங்க தருவீங்களோ?

மதுமிதா said...

கணேஷ்
###எந்த நாட்டில் ஊழல் அதிகம் காணப்படுகிறதென்று என்று கேட்டால்
அதற்கும் இந்தியா என்று துணிந்து பதிலளிக்கலாம்.###
இந்தியா ஏழாவது நாடு என்று நினைக்கிறேன்.

வீட்டு மாடியை பள்ளியாக்கி பெரிய போர்ட் வைத்து 60 பேருக்கு வருட ஆரம்பத்திலேயே 6000/-வாங்கிக்கொண்டு ட்யூஷன் எடுக்கும் வாத்தியார்களை பார்த்திருக்கிறேன்.

கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாது வட்டிக்கு விடுபவர்களையும் தான்.
அங்கு வட்டிக்கு விட்டுக் கொண்டே இங்கு ஊதிய உயர்வுக்கு போராட்டத்துக்கு
சென்றவர்கள் உண்டு.

எல்லோரையும் சொல்லவில்லை.
ஆனால் ஆசிரியர் என்கையில் பெற்றோருக்கு அடுத்தபடியான பள்ளி பெற்றோர்கள் அவர்கள்.
அதனாலேயே இந்த எதிர்பார்ப்பு
ஆசிரியர்களிடம்.