கொஞ்ச நாளாகவே (வீ.எம் "பாவம் அவரை விட்டுவிடுவோமே" பதிவு போட்டதிலிருந்து) தலைவரைப் (ரஜினிகாந்த் @ சிவாஜி ராவ் கெய்க்வாட்) பற்றி பதிவிடணும்னு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த பதிவு. இந்த பதிவு நம்ம ரஜினி ராம்கியை பனிக்கட்டி மழையில் நனைக்கணும்னோ அல்லது அடுத்த தலைவர் படத்துக்கு (சிவாஜி) முதல் ஷோ டிக்கட் வாங்கணும்னோ எழுதப்பட்டதல்ல. மேலும் இந்த பதிவு எந்தளவிற்கு தேவை, தேவையில்லை, உபயோகமானது, உபயோகமில்லாதது ஆகிய கருத்தாய்வுகளை உங்களது கண்ணோட்டத்திற்கே விட்டு விடுகிறேன். இது என் எண்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவு தான்.
ரஜினி சாரை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிவிட்டதால் கட்டுரையில் ரஜினி என்று ஒருமையிலேயே அழைக்கிறேன். ரசிகன் என்ற தகுதியில் அவரிடம் கேட்காமலேயே அவரிடம் நான் எடுத்துக்கொள்ளும் உரிமை இது.
நான் சிறுவனாக இருந்த பொழுது என் வீட்டினருகே ஒரு அண்ணன் வசித்து வந்தார். பெயர் அந்தோணி. தீவிர ரஜினி ரசிகர். அவரிடம் எப்பொழுது பேசினாலும் ரஜினி ரஜினி ரஜினி தான். "அவன் இப்படி அடிப்பான் அப்படி அடிப்பான் அவன் ஸ்டைலே ஸ்டைலப்பா" ஆகிய புகழாரங்கள் தான் எப்போதும். போதாக்குறைக்கு வீட்டு எதிர்ப்புறமிருக்கும் மின்கம்பத்திலிருந்து முச்சந்தி விநாயகர் கோயில் சுவர் வரை "ரஜினி" தான். எனக்கு அப்போ வயசு எட்டு. அந்தோணி அண்ணன் என்னை விட ஒரு எட்டு வயது மூத்தவர். தளபதி படம் பத்து நாளில் ரிலீஸ் ஆகயிருந்தது. வழக்கம் போல் அந்தோணி அண்ணனின் ப்ரிரிலீஸ் (pre-release) வேலைகளும் ஆரம்பித்தன. தட்டி போர்டு, கலர் பெயிண்டு என மும்முரமானார். சும்மா ஐந்து நாள் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்தார். விளைவு எங்க ஏரியாவுல இருக்கிற தென்னை மரம், பஞ்சாயத்து அடி பம்பு என எல்லா இடங்களிலும் தளபதி என்ற வாசகம்.
அவர்கிட்ட போய் கேட்டேன். எண்ணன்னே வேலை எல்லாம் முடிஞ்சாதுன்னு. ஆமாம்பா முடிஞ்சது ஒரு ரெண்டு நாள் ரெஸ்டெடுத்திட்டு தலைவர் படம் முதல் ஷோ பார்த்துற வேண்டியது தான். "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" அவர் ஆர்வம் எனக்கு தொற்றிக் கொண்டது. என்னைப் பார்த்து சிரித்தவர் சரியென்று சொல்லிவிட்டு தளபதி போஸ்டர் ஒன்றை காண்பித்தார். தளபதி படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட்டிற்காக ரஜினி தலை முடியைக் கொண்டை போட்டிருப்பார் அந்த கெட்டப்பில் இருந்த போஸ்டர். தட்டி போர்டுக்காக வைத்திருந்த பெரிய சைஸ் போஸ்டர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் மனதில் பதித்த முதல் ரஜினி போஸ்டர் அதுதான். அன்றிலிருந்து பசையிடாத போஸ்டர் ஒன்றும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதிலும் ரஜினிதான். அந்தோணி அண்ணன் தந்த ஊக்கம் அடம்பிடித்து அப்பாவுடன் சென்று தளபதி முதல் ஷோ பார்த்தேன். புரியாத விஷயங்களை அப்பா விளக்கினார். இப்படியாக விவரம் தெரிந்து நான் புரிந்து பார்த்த படம் "தளபதி". மகாபாரதக் கதையென்பதால் சீக்கிரமே பிடித்துக் கொண்டேன் போல. அன்றிலிருந்து நான் ரஜினி ரசிகன்.
அன்றைக்கு எனக்கிருந்த மனவளர்ச்சியில் ரஜினி யார்? அவனது பின்புலம் என்ன? நன்றாக நடிப்பானா? என்றெல்லாம் எனக்கு கேட்கத் தெரியவில்லை. அப்பொழுதிருந்து அநேகமாக ரஜினியின் அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறேன். ரஜினி திரையில் வில்லனை அடித்தால் இங்கே எனது உள்மனம் வீறு கொண்டெழும். இந்த மாதிரி உணர்ச்சிகளை திரைப்படம் பார்க்கும் அனைவரும் ஏதேனும் ஒரு வயதில் அனுபவித்திருப்பார்கள். அதே உணர்வு தான் எனக்கும்.
அவ்வப்போது அந்தோணி அண்ணனுடன் போஸ்டர் வேலை அப்படி இப்படியென்று நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.
பின்னர் வயது ஏற ஏற பக்குவம் வந்தது. சினிமாவை அலசி ஆராயும் தெளிவும் வந்தது. ஆனால் இந்த பக்குவமும் தெளிவும் மற்ற நடிகர்களின் படங்களிற்கு மட்டும் தான். ரஜினி படங்களை அலசிப்பார்க்க ஆராய என்னால் முடியவில்லை. எனக்கு ஆங்கிலத்திற்கு ABCD போல சினிமாவுக்கு ரஜினி. ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் ஆரம்பிக்கும் இந்த உணர்ச்சி மழை முதல் நாள் முதல் ஷோ படம் முடிந்ததும் குறைந்து விடும். பின்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். இன்று வரை இப்படித்தான் செல்கிறது. ஒவ்வொரு முறை ரஜினி படம் பார்க்கையிலும் அதே பழைய சிந்தனைகள் தான். தன்னிலை உணராமல் என்னை மறந்த நிலையிலேயே இன்றும் ரஜினி படங்களைப் பார்த்து வருகிறேன். இதில் பகுத்தறிவை என்னால் புகுத்த முடியாது. அப்படி புகுத்துகிறேன் என்றால் நான் திரும்பவும் ABCD படிக்க ஆரம்பிக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.
டெல்லியில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவது அரிது. அதனால் பெரும்பாலும் திருட்டு சிடிக்களிலேயே படங்கள் பார்ப்பதுண்டு. (யாரும் போட்டுக்கொடுத்துறாதீங்க சாமி...) சந்திரமுகி ரிலீஸ் ஆகும் பொழுது என்னையும் அறியாமல் ஒருவித ஏமாற்றம் முதல் ஷோ பார்க்கமுடியவில்லையே என்று. ஆனால் தியேட்டருக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டேன். என் ஆசை வீண் போகவில்லை. டெல்லியில் சந்திரமுகி திரையிடப்பட்டது. போய் பார்த்துவிட்டு வந்து நான் எழுதிய பதிவுதான் "ரசிகனின் ஆட்டோகிராஃப்". அன்றும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன் "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" என்று அந்தோணி அண்ணனிடம் கேட்டதை.
தமிழ்மணத்திற்கு வரும் வரை ரஜினி என்பவன் நான் செய்ய முடியாததைத் திரையில் செய்யும் ஒரு பெரிய சக்தி அவ்வளவு தான். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்த பிறகு ரஜினி என்னும் அந்த திரை சக்தியின் சில பரிணாமங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. சந்திரமுகி விமர்சனம் எழுதிய அல்வாசிட்டி அண்ணாவின் வலைப்பதிவை ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். இதெப்படி சாத்தியமாயிற்று. ஒவ்வொரு வலைப்பதிவரும் பார்த்தார் என்றால் எண்ணிக்கை 800ஐத் தாண்டியிருக்க முடியாது. இதில் பகுத்தறிவுவாதிகள் பாதி பேர். (எழுத்தாளர்கள் அல்லவா...). நான் இப்படி சொல்கிறேனே என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் இருந்தாலும் எனக்கு பெரிய புதிராகவே உள்ளது. ஒருவேளை என்னிடம் இருக்கும் அந்த "தளபதி" மனம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது போல.
இன்னொரு பரிணாமம் ரஜினி ராம்கி. என்னால் ரஜினி ராம்கி போல் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு என் ஆளுமை ஒப்பவில்லை (இது தான் பகுத்தறிவு என்று சொல்பவர்களுக்கு வாயில் அவல்). ஆனால் என்று ரஜினி என்பவனுக்கு இத்தனை பெரிய ரசிகர் மன்றம் இருக்கிறதென்று தெரிந்ததோ அதில் இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறதென்று தெரிந்ததோ (பார்க்க http://rajinifans.com/activities/index.asp) அதுவும் ரஜினி ராம்கி போன்ற அன்பர்களால் நடக்கிறதென்று தெரிந்ததோ அன்றே என்னையும் அந்த குழுமத்தில் இணைத்துக் கொண்டேன் (இன்றுவரை அந்த குழுமத்திலிருந்து உபயோகமாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும்). தன்னலமில்லாமல் கட்டப்பட்ட ஒரு வீடு அது. தெரிந்தோ தெரியாமலோ என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.
பி.கு
வீ.எம் பதிவுக்கு நானளித்த பின்னூட்டத்தில் சொன்ன வரிகள் "இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் வேண்டாமென்று யோசிக்கிறான், அமைதி தேடி இமயமலை போறான், இவனிடம் அரசாங்கத்தை கொடுத்தால் "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன? ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன்."
35 comments:
ரஜனியின் தாக்கம் எல்லாருக்கும் இருக்கிறது. நான் அந்த கால ரசிகன், சிவகுமார் ப்ஃப் விட்டுட்டு ரஜினி பரட்டை தல கிராப்புக்கு மாறுனவன், மூன்று முடிச்சுக்குப்பறம் ஆன அந்த விந்தையின் மயக்கம் இன்னும் இந்த கால சின்ன நண்டு வரை தொடருதுனா, அது என் பகுத்தறிவையும் தாண்டி யோசிக்க வைக்கிற ஒரு ஆச்சிரியம் போங்க. ரஜினி கொல்லு பேரன் எடுக்கிற் வரக்கும் இது தொடருமோ?
//உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை//
இது இது இது
படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லைனு சொல்றதும்
சரிதான்.இல்லே?
கணேஷ் ,மிக நல்ல வெளிப்படையான பதிவு .ரஜினியை விட கமல் தான் என்னை கவர்ந்தவர் எனினும் ரஜினி படம் பார்க்கும் சந்தோஷத்தை நானும் தவற விடுவதில்லை .அடுத்த நாள் செமஸ்டர் பரீட்சை வைத்துக்கொண்டு ,நண்பன் கொண்டுவந்த தளபதி 'டிக்கெட்' -ஐ இழக்க மனமின்றி படம் பார்க்க சென்றது நினைவுக்கு வருகிறது .'குணா' அதுக்கு முன்னரே பார்த்து விட்டது வேறு விஷயம்.
நல்லா இருக்கு கணேஷ்!
"அவன்" என்பதை "அவர்" என்று எழுதியிருக்கலாமோ?
உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.
அருமை. ஆனால் 'முத்து', ராஜாதி ராஜா போன்ற படங்களில் கிடைத்த சந்தோசம் 'பாபா', சந்திரமுகி போன்ற சமீபத்திய படங்களில் கிடைக்கவில்லை. என்பதும் உண்மை. அதனால் அவரிடம் இனிமேலும் அதிகம் எதிர்ப்பார்க்காமல், பழையபடம் இருந்தால் போட்டுப் பார்த்துக்கவேண்டியதுதான்!
தளபதி வெளியானபோது ஈரோட்டில் முதல்காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் அப்படியே அடுத்த காட்சி வரை வரிசையில் நின்று படம் பார்த்தோம். (இது நிகழ்ந்தது நான் MCA படித்தபோது... எவ்ளோ சின்னைப்பையன் நீ (வயசுல்ல...)
(வயாசாயிட்டத திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்தாதீங்கப்பா...:)
டெல்லியில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவது அரிது.
அது ஒரு கனாக்காலம்... TYCA -ல உறுபினராய் பஹார்கஞ்ச்-இல் அவ்வப்போது திரையிடுவார்கள். (இப்போது அங்க ஸ்டேசன் பக்கத்தில்தான் குண்டுவெடுச்சது கேள்விப்பட்டு உள்ளம் அழுதது!)
அதனால் பெரும்பாலும் திருட்டு சிடிக்களிலேயே படங்கள் பார்ப்பதுண்டு.
அப்புறம் கரோல்பாக் போனபிறகு கூட அங்கிருந்த பார்கஞ்ச் மார்க்கெட்ல இருந்த ஒரு மலையாளி கடைல்லதா எல்லா மொழி வீடியோ கேசட்டும் கிடைக்கும்:)
//ஆனால் இந்த பக்குவமும் தெளிவும் மற்ற நடிகர்களின் படங்களிற்கு மட்டும் தான். ரஜினி படங்களை அலசிப்பார்க்க ஆராய என்னால் முடியவில்லை. //
அதே நிலைமைதான் எனக்கும்..
தளபதி பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ என்ன மாதிரியே முண்டியடிச்சு பார்த்தவங்க நிறைய பேர் இருப்பீங்க போலிருக்கே.. தியெட்டரில் அன்று நான் பார்த்த எனர்ஜி வேறெவருக்கும் பார்த்தது கிடையாது. தளபதி வெற்றி பெற்று குணா கொஞ்சம் சறுக்கியபோது, என்னவோ நாம் தான் படத்திற்கு exec. producer மாதிரி ஒரு சந்தோஷம்!
பாபா கூட எனக்கு பிடித்தது. சந்திரமுகியும் தான். காரணம், ரஜினி மட்டுமே!
No comments! :-)
நான் ரஜினி ரசிகன் என்று சொல்ல முடியாது.. தியேட்டருக்குள் போனால் யார் ஹீரோவோ அவர்தான் நம்ம தலை.. ஆனா தியேட்டருக்குள் போவதுதான் பாடே..
தளபதி நண்பன் ப்ளாக்கில் "சொல்லி வைத்து" வாங்கிய டிக்கெட் வீணாகக்கூடாது அதே சமயத்தில் ராகிங்கிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற நிலைமையில் ஒரு திருவிஷா போல் பார்த்த படம்..
அதற்கப்புறம் படையப்பா தியேட்டரில் பார்த்ததோடு சரி.. ரஜினி இப்ப ஸ்கிரீனில் வயசாகி தெரியிறாரா இல்ல ஏதாவது கேரள மாந்திரீகம் ??
ஆனாலும் ஷ்ரேயாவெல்லாம் கொஞ்சம் டூ மச்சின்னு சொல்லுங்கப்பா உங்க தலைகிட்ட...
(பரவாயில்ல சகிச்சிக்கிறோம், மழை நாயகிய மாத்த வேணாம்)
***
// No comments! :-) //
ஜெ. ராம்கி, நீங்க ரஜினி படங்கள் எல்லாம் பாக்கறதுண்டா ??
நானும் ரஜினி ராம்கி மாதிரிதான்...NO COMMENTS
கோ.கணேஷ்,
நல்ல பதிவு. 20 வருடங்களாக கமல் ரசிகனான என்னை ரஜினி ரசிகனாகவும் மாற்றிய படம் அண்ணாமலை. அதற்குப் பிறகு டிவி மூலம் அநேகமாக ரஜினியின் பல படங்களைப் பார்த்துவிட்டேன். தமிழ் இணைய/வலைப்பதிவு உலகில் இந்தப் புனைபெயர் வைத்துக்கொண்டதும் அவரின் மூன்று முகம் படம் தான் காரணம். அவரின் சிறந்த படங்கள் (நடிப்பை வைத்து, எஞ்சாய்மெண்ட் வைத்தும்) - என்னைப் பொறுத்தவரையில் - நெற்றிக்கண், தில்லு முல்லு, மூன்று முடிச்சு, அவர்கள் என 78 முதல் 90 வரை வந்த பல படங்களைச் சொல்லலாம்.
- அலெக்ஸ்
எங்க வீட்டுல ரஜினி படமெல்லாம் பாக்கமாட்டாங்க. கூட்டீட்டும் போக மாட்டாங்க. நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ மாப்பிள்ளைன்னு ஒரு படம் வந்தது. அமலா கூட நடிச்சது. அதுதான் நாங்க பாத்த மொத ரஜினி படம். அதுக்கப்புறமும் ரஜினி படம் தேடிப் போய் பார்த்த நியாபகம் இல்லை. முத்துதான் தேடிப் போய் பார்த்த முதல் படம். காரணம் எல்லாருக்கும் தெரியும். அதுக்கப்புறம் படையப்பா. அதுக்குக் காரணம் சிவாஜி. அதுக்கப்புறம் பாபா பாக்கவேயில்லை. அதுக்கப்புறம் சந்திரமுகி. அதுவும் எனக்குப் பிடிச்ச மணிசித்திரதாழு படத்தோட ரீமேக் அப்படீங்கறதாலயும் ஜோதிகாவுக்கும்தான். அடுத்து பாத்தா சங்கர் படமுன்னு சொல்றாங்க. அதுக்காகவாவது போகனுமே.
மொத்தத்துல என்ன...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசன. அதுக்கேத்தாப்புல இருந்துக்குங்க. அடுத்தவங்கள தொந்திரவு செய்யாதீங்க.
மற்றபடி ரஜினி என்ற மனிதனின் மீது நம்பிக்கை.......தனிப்பட்ட முறையில் எனக்கு கொஞ்சமும் இல்லை.
எங்க பாட்டிக்கு என்.டி.ராமாராவ் படம் என்றால் ரொம்ப இஷ்டம். சில சமயம் என்னையும் கூட்டிகிட்டுப் போவாங்க. எல்லா படத்துலையும் கடைசி சீன்ல விஸ்வரூப தரிசனம் உண்டு. எழுந்து நின்று கன்னத்துல போட்டுக்க வேண்டும். தியேட்டரே எழுந்து நின்று "நாராயணா, கோவிந்தா" என்று அலறும். மேலும் பாட்டி என்னவோ மேல் லோகத்துக்கு போய் மகாவிஷ்ணுவைப் நேர்ல பார்த்து வந்தாமாதிரி, என்.டி.ஆருக்கு சாட்சாத் மகாவிஷ்ணுதான் என்று நற்சான்றிதழும் தருவார்.
ஆக அவரை கடவுள் ஆக்கிவிட்டார்களா, அப்புறம் ஆந்திராவுக்கு சி.எம் ஆயிட்டாரு. கடவுள் இல்லையா சொடுக்கு போட்டதும்
ஆந்திராவுல பாலாறும் தேனாறும் ஓட ஆரம்பித்துவிட்டது. ஏளைங்க எல்லாம் கோடிஸ்வரங்க ஆயிட்டாங்க. அப்புறம்....
ஐயய்யோ ஏன் எல்லாரும் முறைக்கிறீங்க? புரியலையே :-(
கணேஷ்,
மீண்டும் ஒருமுறை நமக்குள் அலைவரிசை ஒத்துபோயிருக்கிறது.
எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் ரஜினி படமும் "தளபதி" தான்
உண்மையை சொன்னால் அப்போது ஏதோ இருட்டில் நடக்கிறது, நம்ம வயசு பசங்களுக்கெல்லாம் பிடித்த ரஜினியின் படம் என்பது மட்டுமே எனக்கு புரிந்த விஷயம்.
ஆனால் அதன்பின் ரஜினி என்ற சொல் என்னை தன் வயப்படுத்தியது உண்மை. அண்ணாமலை முதல் சந்திரமுகி வரை ஒவ்வொரு ரஜினியின் திரைப்படத்தையும் திரையரங்கிலேயே திரும்பி திரும்பி பார்ப்பதும், CD யோ DVD யோ வந்தவுடன் வாங்கிவிட்டு, நினைத்த நேரமெல்லாம் பார்ப்பதும் வழக்கமாகி போன ஒன்று
ஆனால் இன்றளவும் ரஜினியைத்தவிர வேறோருவர் பெண்மை குறித்து பேசினாலோ, ஸ்டைல் செய்தாலோ, பறந்து பறந்து அடித்தாலோ மனம் ஏனோ ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நானும் உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை
மற்றுமொரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
-- Vignesh
உஷா!
//எங்க பாட்டிக்கு என்.டி.ராமாராவ் படம் என்றால் ரொம்ப இஷ்டம்//.
இங்க பீப்பிள் ஸாஃப்ட் படிக்கலம்ன்னு ஒரு சென்டருல சேர்ந்தேன் (ஆந்திரா மக்கள் வச்சு இருக்கிறதுதான்!)., ஒரு வாரங்கழிச்சு., ராம நவமி வந்துச்சா?., சைட்ல யிருந்து டவுன்லோட் பண்ணி, புரஜெட் பண்ணி (கிளாஸ் நடத்துற போர்டுல) ஒரு இராமராவ் படம் ஜோரா ஓடிட்டு இருந்துது.. நான் அடப் பாவிங்களா போடறதுதான் போடுறிங்க... ஒரு உதய் கிரண் படமோ இல்ல...மகேஷ் படமோ(ரொம்ப ஓவர்ங்கிறிங்களா?)... சரி...சரி நம்ம அலைவரிசையில ஒரு வெங்கி... படமோ... நாகார்ஜூன் (இதுங்களுந்தான் ஓல்டு... இருந்தாலும் பரவாயில்ல.... பாக்கலாம்....)போடமா இதப் போட்டுட்டு இருக்குதுகளேன்னு நினைச்சுக்கிட்டே நோட்டப் பிரிச்சு படிக்கிற பாவனையில டெஸ்க்கில உக்கார்ந்தேன். பின்ன நம்மோட (தமிழர்களோட) கடமையுணர்வ ஊருக்கு எடுத்து சொல்ல வேண்டாம்?!. கொஞ்ச நேரத்துல எல்லாரும் எழுத்திருச்சு நிக்க ஆரம்பிச்சுருக! என்னன்னு பாத்தா... நீங்க சொன்ன மாதிரி விஸ்வரூபம் எடுத்து நிக்கிறாரு ராமாராவ்... இன்னும் நீங்க மாறவேயில்லையாடான்னு நினைச்சுகிட்டு... (நம்மால பொறுமைய ஒரு அளவுக்கு மேல கடை பிடிக்க முடியாது...) பட்டுன்னு புரொஜெக்டர் வயரைப் புடிச்சு இழுத்துட்டேன் (தெரியாம கை படற மாதிரிதான்., அதுவே ஒரு பாடாவதி புரொஜெக்டர்... பட்ன்னு.. நின்னு போச்சு.). சரி பண்ண ஓடுன பையன ம்... "நேனு ஒக்க சாரி செப்தே. (செய்யற்துக்கு என்னாங்க செஸ்தே?)... " அது!ன்னு.. நம்மாளு (ச்ச! முடியலைப்பா!) லுக்கு ஒன்ன விட்டுட்டு படிக்க ஆரம்பித்தேன்.
//உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை//
தம்பி கணேஷ்., நிறைய பேரு இங்க இப்படித்தான் நினைக்கிறாங்க போலருக்கு...
Arumaiyyana Padhivu!! Nermaiyyana blog, pagattu illamal!!
மனசுல இருப்பதை இமேஜ்க்கு பயந்து இல்லாமல் அப்படியே பதிந்தமைக்கு வாழ்த்துக்கள் கணேஷ்..
தில்லுமுல்லு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று, எத்தனை தடவை பார்த்தேன் என்பதும் தெரியாது.. இதோ இப்பொழுது கூட தில்லு முல்லுதான் டவுண்லோட் ஆகிகிட்டு இருக்கு...
ஆனால்,எனக்கு தெரிஞ்சு படையப்பாவுக்கு அப்புறம் வந்த எந்த ரஜினி படமும் பாக்குற மாதிரி இல்லை..
சரி ரஜினின்ற நடிகன விடுங்க, அந்த தனிமனிதனை பற்றி அவ்வளவு பெரிய எண்ணமெல்லாம் இல்லை, நாட்டில் உள்ள நதி இணைப்பு திட்டத்துக்கு நடந்த நாடகம், தெளிவா ஒரு முடிவெடுக்க முடியா எண்ணம், ஜெ மீண்டும் வந்து விட்டால் தமிழகத்தை ஆண்டவானாலும் காப்பாத்த முடியாது என்று சொன்னவர், தன் படத்தை ஓட விடாத இராமதாஸ் கூட்டணியை எதிர்பதற்காக ரெட்டை இலைக்கு ஓட்டுப்போடும் இடத்திலயே பிரச்சாரம் பண்ணி, தமிழகத்தை அடகுவைக்கத்துணிந்தாரே.... இவரிடம் மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது..
ரஜினியை ஒரு மாஸ் நடிகனாக மட்டும் பார்த்து இரசியுங்கள்.. ஏற்க்கனவே அலசி அலசி கிழிந்த துணிதான் இது...
நீங்கள் நினைத்த மாதிரி ஓர் விஜய் இரசிகன், கிசு கிசுவே வராத நல்லவர், ஓர் குடும்பத்தை சந்தோஷமா வச்சுக்கிறார், நம்மளையும் சந்தோஷப்படுத்துறார்னு நெனைச்சு அடுத்த சி.ம் ரேஞ்சுக்கு அவரையும் ஏத்து விட்டுராதீங்கபா...
யாத்ரீகன், தில்லு முல்லு படம் எனக்கும் மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை. ஹிந்தி கோல்மாலை விட எனக்குத் தில்லு முல்லு பிடித்திருந்தது.
அதே போல ரஜினி நடித்து நான் ரசித்த படங்களில் முள்ளும் மலரும் படமும் ஒன்று. என்ன படங்க அது! அதே போலத்தான் ஜானியும். அவரை ஒழுங்காகப் பயன்படுத்தியவர்கள் வெகுசிலரே என்று நினைக்கிறேன்.
உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.
அருமை.
எனக்கு தெரிந்து நான் முதலில் பார்த்த படம் தீ. ஆனால் படம் பார்ப்பதற்கு முன்பே என்னையறியாமல் ரஜினியை பிடித்து விட்டது.
தளபதி என்னால் மறக்க முடியாத படம். அதுவும் அம்மாவை பார்த்த பிறகு தூணுக்கு பின்னால் அவர் அழாமல் நம்மை அழ வைத்திருப்பார்.
100 முறைக்கு மேல் பார்த்தாலும் இன்னும் நான் பார்க்கும் படம் அன்னாமலை. கடந்த முறை சென்னைக்கு வந்த போது அமைந்தகரை லட்சுமியிலும்(11 மணி காட்சி) என்னை பார்க்க தூண்டிய படம் தான் அன்னாமலை.
அருமையான பதிவு. எல்லாருக்கும் பிளாஸ்பேக்கை ஞபகப்படுத்திய பதிவு.
ஒரு விளம்பர பிரேக்.. டொய்ங்க்க்க்...
//http://ilavanji.blogspot.com/2005/04/blog-post_111247611709020165.html//
மனசாட்சி கவுண்டமணி: எதுக்குடா இளாவஞ்சி இந்த விளம்பரம்? இந்த சினிமாகாரங்கதான்...
நான் ரஜனி ரசிகனெல்லாம் இல்லை என்றாலும் தமிழ்ப் படங்களில் என் விருப்பப் பட்டியலில் ஜானியும் தளபதியும்,முள்ளும் மலரும் உண்டு கூடவே பதினாறு வயதினிலே பரட்டையும் உண்டு.சரியாகப் பயன்படுத்தினால் ரஜனி பட்டை தீட்டிய வைரம்.இல்லாவிட்டால் அண்மைக்காலப் படங்கள் மாதிரி தூசி படிந்த வைரம்.
ganesh,
just check my blog :)
ரஜினி ரசிகா.. "6 ல் இருந்து 60 வரை" சமீபத்தில் ஒரு டி.வி யில் பார்த்தேன். யப்பா உங்க தல என்னாம்மா அசத்தியிருந்தார் தெரியுமா?
கணேஷ். இந்தப் பதிவை படிங்க. இந்தப் பதிவில
நல்ல பதிவு கணேஷ்.....
நானும் ரஜினியின் ரசிகன்தான். கிழம் முதல் நண்டு சிண்டுவரை ரசிகர்களாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
ரஜினியை எல்லோருக்கும் பிடிக்க காரணம் அவருக்குள் இருக்கும் அடுத்தவர்க்கு பரப்பும் உற்சாகம்தான். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டம் ஒரு மிகச்சிறந்த நடிகனை மறைத்து விட்டது. எவ்வளவு சிறந்த நடிகராக பரிமளிக்க வேண்டியவர் வெறும் மசாலா படங்களுக்குள் சுருங்க வேண்டியதாக போயிற்று.....
ஆன்மீகம் என்பதே வெறும் நம்பிக்கைதான். அதனால் ரஜினி சீசனுக்கொரு கடவுளின் பக்தராக இருக்கிறார் என்ற கிண்டலை ரசிப்பதில்லை. அமைதி ஒரே இடத்தில் கிடைப்பதாக இருந்தால் அதை விலை கொடுத்து வாங்கிவிட மாட்டோமா?
இன்றைக்கும் எனக்கு மிகவும் பிடித்தவர் ரஜினிதான். அதிலும் குறிப்பாக ஆறிலிருந்து அறுவதுவரை, நெற்றிக்கண், தில்லுமுல்லு, ஜானி , முள்ளும் மலரும், ராகவேந்திரர், பாட்ஷா, படையப்பா எனக்கு மிகவும் பிடித்த படங்கள்....
ஆனால் அரசியல் தளத்தில்?
நிச்சயம் கண்ணை மூடிக்கொண்டு அவரை ஆதரிக்க மாட்டேன். அவரின் செயல்பாடுகள் கொள்கைகள் பொறுத்தே என் முடிவுகள்.
ஏனென்றால் நடிகருக்குத்தான் ரசிகனாக இருக்கமுடியும்
'பலீஞ் சடுகுடு...குடு....குடு....' யாரு அவன் இவன்னு சொன்னது?
கணேஷ் நம்ம தலைவரைப் பற்றிய பதிவு அசத்தலாக இருக்குது.
என் அத்தை மகன் தூத்துக்குடி ரஜினி ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தார், அவர் புண்ணியத்தில் முதல் ஷோவிலேயே படம் பார்த்து விடுவேன். ஒரே கலாட்டா, அடிதடி, மற்ற நடிகர்களை வசவு பேசுவது எல்லாம் அங்கே நடக்கும்.
படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பு ஒரு மின்கம்பம் கூட விடாமல் தட்டி கட்ட வேண்டும், இரவு முழுவதும் விழித்திருந்து செய்தி தாட்களை துண்டு துண்டாக்குவோம், தியேட்டரில் வீசத் தான்.
பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்த பதிவு.
//அவர் புண்ணியத்தில் முதல் ஷோவிலேயே படம் பார்த்து விடுவேன். ஒரே கலாட்டா, அடிதடி, மற்ற நடிகர்களை வசவு பேசுவது எல்லாம் அங்கே நடக்கும்.
படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பு ஒரு மின்கம்பம் கூட விடாமல் தட்டி கட்ட வேண்டும், இரவு முழுவதும் விழித்திருந்து செய்தி தாட்களை துண்டு துண்டாக்குவோம், தியேட்டரில் வீசத் தான்.//
உங்கள் நற்பணிகள் புல்லரிக்க வைக்கின்றன .என்னே ஒரு சாதனை?
இம்மாம் பேரு பின்னூட்டமிட்டுட்டு ஒருத்தரு கூட ஸ்டாரிலே +ஸோ -ஸோ குத்தலை போலருக்கு. பாவம், அது கணேஷோட ஒத்தை +ஸோட இருக்குது. சரி, தலைவரை அவன் இவன்னு சொன்னதுக்காக இதோ என்னோட பங்கு...குத்தேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!
ஜோ சொன்னது : //உங்கள் நற்பணிகள் புல்லரிக்க வைக்கின்றன .என்னே ஒரு சாதனை? //
நண்பர் ஜோ, அது சின்ன வயசு, அப்போ எது தேவை, எது தேவையற்றது என்று தெரியாத வயசு. மேலும் பசங்க அனைவரும் ஒன்று கூடி செய்வதால் அது தனி சுவாரஸ்யமே இருந்தது. இன்று அதை நினைத்தால் நீங்க கிண்டல் செய்வது போல் தான் சிரிப்பு வருது.
இந்த விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். நான் முன்பு சொன்னது போல எங்கள் வீட்டில் ரஜினி படங்கள் என்று பார்ப்பதில்லை. ஏதாவது நன்றாக இருக்கிறது என்றால் பார்ப்போம்.
ஆனால் இந்த வாரயிறுதியில் எனது சகோதரி குழந்தைகளுடன் வந்திருந்தாள். மூத்தவனுக்கு நாலு வயது. அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான். எதற்கோ டீவி சேனலை மாற்றும் பொழுது பாபா படம் வந்தது. ஒரு நிமிடத்தில் சானலை மாற்றினோம்.
இப்பொழுது எனது மருமகன் அழுதான். "ரஜினி தாத்தா படம் போடுங்க. ரஜினி தாத்தா படம் போடுங்க" என்று. நாங்கள் உண்மையிலேயே வியப்பின் உச்சியில். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு விடையே தெரியவில்லை. அந்தப் படத்தை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்தான். படம் முடிந்ததும்தான் அவன் எழுந்தான்.
Dey kalakkal daaaaa
கணேஷ், நானும் உங்களை மாதிரி ரசிகர்தான்.
உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை
நான் மிகவும் ரசித்து படித்த பதிவு இது.
http://lollu-sabha.blogspot.com
Post a Comment