Tuesday, April 20, 2010

ஆசை

அவன் அப்படி இருந்திருக்கக்கூடாதென்று
வருத்தப்படுகிறேன்
அவன் இப்படி இருக்க வேண்டுமென்ற
ஆசை உடன் சேர.
என் வருத்தங்களுமாகவும் ஆசைகளாகவும்
கழிகிறது அவன் வாழ்க்கை


கடிதமொன்று

நாளை வருவதாக அவன்
எழுதியிருந்த கடிதம்
நேற்று தான் கிடைத்தது.

கடிதமும் நாளையும்
அப்படியே இருந்தன.
நேற்றும் அவனும்
நேற்றோடு போயிருந்தார்கள்.

அருஞ்சொற்பொருள்

நண்பன்,
நல்லவன்,
வல்லவன்,
கெட்டவன்,
வயதானவன்,
மனம் பிறழ்ந்தவன்,
மூடன்,
கோபக்காரன்
என அந்தச் சொல்லுக்கான பொருளாக
நான் குழந்தையிடம் சொல்பவற்றுள்
சில, பல அல்லது அனைத்தும்
உங்களையும் சில சமயம்
குறிக்கலாம்.

சொற்களாலான கடிதம்

நிறையவே நினைத்தும்
சேர்த்தும் மடித்தும்
ஒட்டியும்
வந்து சேர்வனவற்றுள்
கிழிக்கப்படும் முன்
கிஞ்சித்து அர்த்தமுணர்த்தினாலும்
ஒட்டியதும் மடித்ததும்
சேர்த்ததும் நினைத்ததும்
நிறையவே
இருந்து விடுகின்றன.

ஈரம்

முன்னெப்போதோ புனித நீர் என்று
குடுவையில் அடைத்துக்
கொண்டுவந்த ஞாபகமிருக்கிறது.
குடுவையைக் காணவில்லை.
ஈரம் மட்டும்
முற்றத்து நீர் தேக்கத்தில்.

ஆயிரம் காலத்து பயிர்

ஆயிரம் காலத்துப் பயிர்
என்று நன்றாகத் தெரியும்
இன்னும் எத்தனை அறுவடைக்குத்
தாங்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

காடு தன் வரலாறு

இரு நதிக்கண்களுக்கிடையேயான
நெற்றிப்பரப்பில்
ஒரு பொட்டாய்
இடப்பட்டிருக்கிறேன்
நான்.

பொழிதல், சதுப்பு,
ஊசியிலை எனப்படுவனவற்றுள்
நான் பொழிதல்.
விலங்கினங்களுக்கான
வசதியானதொரு
புகலிடம்.

இலையுதிரென்றால் இலையுதிர்த்து,
கோடையென்றால் சூடடைந்து,
காரென்றால் இலைக் குடைபிடித்து
குளிரென்றால் பனிப் போர்வையாகி,
கால நிர்ணயம்
செய்து கொண்டே வாழ்கிறேன்.

என் மரவிரல்களின்
இலைநகங்களில்
சில சமயம்
ஈரச்சாயம்
பூசிச்செல்லும்
பெருமழை.

வெட்டப்பட்ட
சந்தன விரல்களின்
காயத்தழும்புகளில்
நுகர்கிறேன்
வாசனையை!

பறவைகளின் எச்சங்கள்
நெருஞ்சி முற்விதைகளுடன்
விழுவதறியாது
பசுமையுணர்த்துவேன்
நான்.

என் தோல்களின்
சில மயிர்களை
கால்களால் சவரம் செய்து
பாதைக் கீறல்களை
விட்டுச் செல்கின்றனர்
சிலர்.

ஆடையணியா என்னிடம்
அடைக்கலம்
புகுகின்றார்கள்
துறவிகள் சிலர்
காவி வேட்டியுடன்.

காடு தன் வரலாறு
கூறுகையில் ஒரு
பட்டமரம், அதன்
மேலிருந்த ஒற்றைப் பறவை
நீங்கலாக நான் மட்டுமே
இருந்தேன்.

தேடல்

தொலைந்தவற்றுக்கும் தொலைப்பதற்கும்
சேர்த்து நிகழ்கிறது தேடல்.
தேடல் மட்டுமே சொந்தமென்று
சொல்லிவிட்டதால்.

ஊரெங்கும் தேடல்கள்
மண் போல் இருந்தும்
இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு நிலச்சரிவோ
பூகம்பமோ
மணல் லாரியோ
வரும் வரை.