Saturday, May 28, 2005

ஹைக்கூ - படித்தவை & படைத்தவை

படித்தவை

திண்ணையிலிருந்த தாத்தா வீட்டிற்குள்
வந்தார் - புகைப்படமாக

இனிப்பும் கசப்புமாய் செல்கிறது வாழ்க்கை
வேப்பமரத்தில் தேன்கூடு

காதலிக்க ஆசை உறுத்தும் எனக்குள்
ஓடிப்போன அக்கா

அமாவாசை நாளில் நிலவு
எதிர்வீட்டு ஜன்னலில்

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக

ஐந்தில் வளைக்கவோ - பொதியாக
புத்தக மூட்டை

படைத்தவை

நானும் அலியாகிறேன்
என்னில் அவள் பாதி

வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்
வாங்குகிறார் - வெளியூரில் மகன்

பைத்தியங்களை படமாக்கி
பணமாக்கும் - "காதல்"

மணிபார்க்கும் நேரங்களில் சிரிக்கிறது
கடிகாரம் - வீணாகிறது நொடிகள்

ஞானபீடம் - நாய்ப்பேச்சு
"சில நேரங்களில் சில மனிதர்கள்"

மேகத்திற்க்கும் வானத்திற்க்கும் உறவு
களையப்படும் ஆடை - வானவில்

6 comments:

ஏஜண்ட் NJ said...

"நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை"
குறள்-193

சில நேரங்களில் சில மனிதர்கள் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவர்கள் நீதியில்லாதவர்கள் என்பதை அறிவிக்கும்.

Ganesh Gopalasubramanian said...

ஞானபீடம் அவர்களே வருகைக்கு நன்றி.......

என்ன சார் செய்ய சில சமயம் அனுபவம் வாய்ந்தவர்களே வாய் தவறிவிடுகிறார்கள்.....
உண்மையில் நான் ஜெயகாந்தனின் நல்ல அபிமானி.... அந்த பேச்சிற்க்குப்பிறகு அதிகம் வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.......

குழலி / Kuzhali said...

//வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்
வாங்குகிறார் - வெளியூரில் மகன்//

புரியவில்லையே!

கிவியன் said...

//வாசிக்கத் தெரியாதவர் நாளிதழ்
வாங்குகிறார் - வெளியூரில் மகன்//

குழலி, மேலே "வெளியூரில்"க்கு பதில்
வெளிநாடில் என இருக்கலாமோ?

தொடர்ந்து எழுதுங்கள் கணேஷ்.

Ganesh Gopalasubramanian said...

குழலி !!

வெளியூரில் மகனிருந்தால் வாசிக்கத் தெரியாதவர் கூட
மகனிருக்கும் இடத்தைப் பற்றி ஏதேனும் செய்தி வருகிறதா
எனப் பார்ப்பதற்க்காக நாளிதழ் வாங்குவார்.
இது எனக்கே அதிகம் நடைபெற்றிருக்கிறது. நானிருக்கும்
இடத்தைப் பற்றிய செய்திகள் எனக்கு தெரியுமுன்பே என்
தந்தை தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறார்.

பாசம் செய்யும் வேலை தான் இது...

சுரேஷ்... நீங்கள் சொல்வதும் சரிதான்... வெளிநாடு
என்றெழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

பின்னூட்டத்திற்கு நன்றி

Karthik Murugan said...

//*திண்ணையிலிருந்த தாத்தா வீட்டிற்குள்
வந்தார் - புகைப்படமாக*//

:), :(