"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை" ஆம் கேள்விகள் மூலமாகவே வாழ்க்கையில் மூலமும் அறியப்படுகிறது. கேள்விகளால் வேள்விகளையும் செய்யலாம். கேள்விகள் நம்மை நாமே கூர் தீட்டிக்கொள்ள உதவும் கருவிகள். இப்படியாக கேள்விகள் பற்றிய கேள்விகளுக்கு எண்ணற்ற பதில்கள் உண்டு. கேள்விகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் மலர்ந்தது தான் இந்த பதிவு. தமிழ் திரையுலகில் எண்ணற்ற வசனங்கள் புகழ் பெற்றிருக்கின்றன. அவற்றில் பல கேள்வி வடிவில் இருந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த ஐந்து கேள்விகளை (வசனங்களை) இங்கு தொகுக்கிறேன்.
1. வேதம் புதிது
கேள்வி கேட்டவர் : திரு.பாரதிராஜா
கேட்ட கேள்வி : "பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"
நினைவு தெரிவதற்கு முன்னமே இந்த வசனம் என்னைக் கவர்ந்தது. அதற்கு காரணம் அது படமாக்கப்பட்ட விதம். இந்த கேள்வியைக் கேட்டவுடன் சத்யராஜ் கன்னத்தில் அறைந்தாற்போல உணர்வார். சிறிய வயதில் எனக்கு இது விசித்திரமானதொரு காட்சியாக தோன்றியது. ஆனால் கொஞ்சம் விவரம் வந்ததும் இந்த காட்சியின் ஆழம் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. ஜாதியில்லை ஜாதியில்லைன்னு சொல்ற நீங்களே பாலுத்தேவன் பாலுதேவன்னு மூச்சுக்கு முண்ணூறு தரம் சொல்றீங்களே, பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? என அந்த சிறுவன் சத்யராஜ்ஜைப் பார்த்து கேட்கும் கேள்வி ஒருவனின் சுயத்தைத் தட்டிப்பார்க்கும் என்று நம்புகிறேன்.
2. அன்பே சிவம்
கேள்வி கேட்டவர்: திரு.மதன்
கேட்ட கேள்வி : "என்ன மாதிரியான கடவுள் இது?"
அன்பே சிவம், கடவுள் பற்றிய கோட்பாடுக்கு ஒரு நல்ல விளக்கமளித்த படம். (இதைப்பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். பார்க்க) அதில் மாதவனுக்கு இரத்த தானம் செய்ய பயம். ஆனால் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்ற இரத்தம் கொடுக்க முன் வருகிறார். ஆனால் இரத்தம் கொடுத்த பின்பும் சிறிது நேரத்திலேயே அந்த சிறுவன் இறந்து போகிறான். அப்பொழுது மாதவன் துடித்துப் போய் கேட்கும் கேள்வி. கிடைக்காத இரத்தத்தைக் கிடைக்க வச்சு இப்போ அவனோட உயிரையும் வாங்கிக்கொண்டு விட்டான். என்ன மாதிரியான கடவுள் இது. இந்த மாதிரியான நேரத்தில் தான் கடவுள் இருக்கா இல்லையாங்கிற குழப்பமே வருது" என்பார். உண்மையும் ஏமாற்றமும் நேர்மையும் கலந்த ஒரு கேள்வி.
3. நாயகன்
கேள்வி கேட்டவர்: திரு.மணிரத்னம்
கேட்ட கேள்வி : "நீங்க நல்லவரா கெட்டவரா?"
இந்தக் கேள்வி அநேகமாக அதிகமாக கேட்கப்பட்ட கேள்வியாக இருக்க வேண்டும். படத்தின் நாயகன் ஏழைகளுக்காக போராடுபவன். அதற்காக சமூக விரோதிகளை கொல்வதற்கும் துணிபவன். அவனது கொள்கைகள் சட்டத்தின் பார்வையில் தவறானவை. அதனால் கோர்ட் வாசலை மிதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மக்கள் ஆதரவு அவனுக்கு பெருகியிருக்கிறது. அப்பொழுது அவனது பேரன் அவனைப் பார்த்து கேட்கும் கேள்வி. இயக்குனர் மணிரத்னத்திற்கு இந்த படம் ஒரு கிரீடம் என்று சொன்னால் மிகையாகாது. வாழ்க்கையில் நாயகனாக வாழ வேண்டும் என்று விரும்புகிற ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. சுயநலத்தைத் தவிர்த்து பிறருக்காக போராடும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த கேள்வி 100% பொருந்தும்.
4. அபூர்வ ராகங்கள்
கேள்வி கேட்டவர்: திரு.கே.பாலசந்தர்
கேட்ட கேள்வி: "என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மகன் எனக்கு மருமகன் என்றால் அவருக்கு எனக்கும் என்ன உறவு?"
சமுதாயத் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இயக்குனர் கே.பாலசந்தர் தன்னிகரில்லாதவர். ஆனால் அவரது படங்கள் பொதுவாக பெண்களை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணியம் சார்ந்த நல்ல திரைப்படங்களை தமிழ்த்திரையுலகிற்கு அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் அபூர்வ ராகங்கள் பெயருக்கேற்றாற்போல அபூர்வமாக நடக்கும் கதை. அர்த்தமில்லாத உறவு முடிச்சுகள் ஏற்படும் பொழுது தடுமாறும் ஒரு கதாபாத்திரம் கேட்கும் கேள்வியாக இது படத்தில் வரும். முடிச்சுகள் போடுவதும் அதனை அவிழ்ப்பதும் கே.பிக்கு கை வந்த கலை. ஆனால் இந்த படத்தின் முடிச்சுகள் கொஞ்சம் இறுக்கமானவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த படத்தில் இரண்டு தம்பதியனருக்கிடையில் உறவுக்குழப்பம் ஏற்படுவதாக கே.பி காட்டியிருப்பார். ஆங்கிலப்படம் ஒன்று இதே போல மூன்று முடிச்சுகளுடன் வந்ததாக கேள்வி. அந்தப் படம் ஆஸ்கார் விருதும் வாங்கியதாம். (விவரம் தெரிந்தவர்கள் கூறலாம்)
5. மெளனம் பேசியதே
கேள்வி கேட்டவர்: திரு.அமீர்
கேட்ட கேள்வி: "அப்பா அம்மாவோட வயித்தெறிச்சலைக் கொட்டிட்டு கல்யாணம் செஞ்சுட்டு போய் நீ மட்டும் உருப்படியா இருப்பியா?
மெளனம் பேசியதே ஒரு வித்தியாசமான படம். அதிகமாக லாபம் ஈட்டவில்லை என்றாலும் ஒரு தரமான படமாகவே நான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் மரபுகளை இயக்குனர் அமீர் மிக அனாயசமாக மிதித்திருப்பார். கதையின் நாயகன் ஒரு முரடன். அவனது நண்பன் மூலம் அவனுக்கு ஒரு காதல் ஜோடி அறிமுகமாகிறார்கள். காதலி வீட்டில் அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவளை திருமணத்திற்கு முன்தினம் கடத்தி வரும் பொறுப்பு நாயகனுக்கு அளிக்கப்படுகிறது. நாயகன் திருமண மண்டபத்தில் அந்தக் காதலிக்கு அறிவுரை கூறி அவளது பெற்றோருடனே அவளை விட்டுவிட்டு வந்து விடுகிறான். அப்பொழுது அவன் அவளிடம் கேட்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடையளிக்க அந்தப் பெண்ணால் முடியவில்லை. நாயகனே கூறுகிறான், "காதலுக்காக பெற்றவர்களைத் தூக்கியெறியும் பொழுது ஒரு தடவை பெற்றவர்களுக்காக காதலைத் தூக்கியெறிஞ்சு பாருங்க. உண்மை தெரியுமென்று." அழகான ஆழமான கருத்துக்கள். இப்படியாக இந்த படம் தமிழ் சினிமாவுன் மரபுகளை தவிர்த்து கொஞ்சம் யதார்த்தங்களை அலசிப் பார்த்த படம்.
முதல் நான்கு கேள்விகளும் சமுதாய பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை. ஐந்தாம் கேள்வி நிறைய பேர் வாழ்க்கையில் கேட்கப்படவேண்டிய கேள்வி. பழைய படங்களில் எண்ணற்ற கேள்விகள் இருந்திருக்கின்றன ஆனால் என் அறிவுக்கு எட்டிய என்னைப் பாதித்த ஐந்து கேள்விகளை இங்கு பதிந்துள்ளேன். தங்கள் கருத்துக்களையும் இடுங்கள்
23 comments:
//"பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"//
இதே பாரதிராஜா சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில்(மதுரையில் என்று நினைவு) தன் சாதியின் பெருமையைப் பற்றியும் அந்த சாதியில் பிறந்ததற்காக பெருமைப் படுவதாகவும், சாதீய மகிமைகளைப் பற்றியும் கூறியுள்ளார்.
--பாலு
//மெளனம் பேசியதே ஒரு வித்தியாசமான படம். அதிகமாக லாபம் ஈட்டவில்லை என்றாலும் ஒரு தரமான படமாகவே நான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் மரபுகளை இயக்குனர் அமீர் மிக அனாயசமாக மிதித்திருப்பார். //
நல்ல படம்ங்க அது. எனக்கு மிகவும் பிடித்தது. அந்த இயக்குநர் வேறு படம் எடுத்திருக்கிறாரா?
Ganesh, பாலசந்தரின் கேள்வியினை தவிர மற்ற எல்லாமே எனக்கும் பிடித்த கேள்விகள். தொடக்க காலத்தில் பாலசந்தரின் மீதிருந்திருந்த ஈர்ப்பு (எனக்கு) இப்போது மாறிவிட்டத்தும் ஒரு காரணமாக இருக்கலாம்.
//அந்த இயக்குநர் வேறு படம் எடுத்திருக்கிறாரா?//
காசி, அமீரின் இரண்டாவது படம் 'ராம்' வெளிவந்து விட்டது. இதுவும் நன்றாக வந்திருப்பதாக படித்தேன். இன்னமும் பார்க்கவில்லை.
அன்புடன்
நவன் பகவதி
கணேஷ்,
வேதம் புதிது கேள்வியும், அது படமாக்கப்பட்ட விதமும் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் பாலசந்தர் கேள்வி சொதப்பலான ஒன்று. இந்த மாதிரி அர்த்தமற்றைவையெல்லாம் அவருடைய படங்களில் தான் நடக்கும்.
மெளனம் பேசியதே - நல்ல கேள்வி. காதலுக்காக பெற்றோர்களை உதறியவர்களைவிட, பெற்றோர்களுக்காக காதலை உதறியவர்கள், முக்கியமாக பெண்கள் நம் சமுதாயத்தில் அதிகமோ?
தாரா.
நன்றி பாலு, காசி, நவன், தாரா
பாலசந்தர் கேள்விக்கு கொஞ்சம் எதிர்ப்பு வருமென்று நம்பினேன். நம்பியது போலவே நடந்து விட்டது. சில அபத்தங்கள் பெண்ணியம் என்ற பெயரில் தர அவரால் மட்டுமே முடியும்.
ராம் ஒரு நல்ல தரமான படம். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை தான் கொஞ்சம் சொதப்பி விட்டது.
தாரா,
// மெளனம் பேசியதே - நல்ல கேள்வி. காதலுக்காக பெற்றோர்களை உதறியவர்களைவிட, பெற்றோர்களுக்காக காதலை உதறியவர்கள், முக்கியமாக பெண்கள் நம் சமுதாயத்தில் அதிகமோ? //
ஆண் ஒரு பெண்ணைப் காதலிக்கத் தொடங்கியவுடன் பெற்றோர்களை மறந்தே போய்விடுகிறான். ஆனால் பெண் அவ்வாறில்லை. அவள் பொறுப்பு மிக்கவள். சிந்தித்து செயல் படுகிறாள். அதனால் கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மைதானே.
உன்னை நினைத்து படத்தில் ஒரு பாடல் உண்டு "பொம்பளைங்க காதலத்தான் நம்பி விடாதே" அப்டீன்னு. அதில "பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சாண்டா எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?" என்றொரு வரியும் வரும்.
கவிஞன் அபத்தமாக எழுதியிருப்பான். செங்கல் நட்டி வைத்தால் அவ்வளவு தான் அவளுக்கு ஏனைய இளைஞர்களிடமிருந்து வரும் தொந்தரவிற்கு யார் பதில் சொல்ல?
நம்ம மக்களுக்கு எப்பொழுதுமே -ve நினைப்புகள் தான் அதிகம்
நன்றி அல்வாசிட்டி அண்ணா.
குருதிப்புனல் கேள்வி அழகு.....நன்றி
//"பாலுங்கிறது உங்க பேருன்னா தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"//
இதே பாரதிராஜா முதல் மரியாதை படத்தில், "நான் *#@ ன் டா என்று நடிகர் திலகம் சிவாஜி பேசுவது போல் ஒரு வசனம் வைத்திருப்பார்.
இந்த இரண்டில் பாரதிராஜா எந்த வகையைச் சேர்ந்தவர் என்ற ஒரு குழப்பம் இருந்தது. பாலு சொன்னதுபோல் சாதி யைப்பற்றி நிசத்திலும் பேசி என் குழப்பத்தைத் தீர்த்துவிட்டார் பாரதிராஜா.
கொஞ்சம் சுயசிந்தனை இருந்தாலும் பாரதிராஜாவால் சாதி என்னும் வட்டத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. கமல் மட்டும் இதற்கு விதிவிலக்காக எனக்குப் படுகிறார்.
எனக்கு ரொம்ப பிடிச்ச கேள்வி.....
'அந்த இன்னொரு பழம் எங்கேடா?!'
நன்றி மாயவரத்தான்....
எல்லோருக்கும் பிடித்த கேள்விகளில் அதுவும் ஒன்று.......
நானும் யோசித்தேன் ஆனால் கேள்வியின் ஆழம் கருதி தவிர்த்துவிட்டேன்......
மத்தபடி ஜனரஞ்சகமான கேள்விகள் என்று ஒரு பதிவு எழுதினால் அதில கண்டிப்பாக "பழ" த்திற்க்குத்தான் முதலிடம்
அதே "பழ" கேள்வி வரும் படத்தில் மற்றொரு முக்கியமான கேள்வி இருக்கே , மறந்து போச்சா????
"இந்த கார (CAR) இப்போ நாம் வெச்சிருக்கோம்... காரை வெச்சிருந்த ......... """"
நியாபகம் வருதா???? வந்தா சரி !!..
கனேஷ்,
எல்லாவற்றையும் விட சூப்பர் கேள்வி :
அவ்வை பாட்டி கிட்ட முருகர் கேட்ட கேள்வி தான் பா.... படம் ஞாபகம் இல்ல...அந்த பாடல் டைப் கேள்விகள் :
"கொடிது எது....? அரிது எது ...?"
ஏதோ என்னோட பதிவுகளையும் நிறைய பேர் படிக்கிறாங்கன்னு சொல்லி எங்கம்மாவுக்கும் என்னோட blog linkஐக் கொடுத்திருக்கேன். வம்புல மாட்டி விடாதீங்க வீ.எம் சார். கரகாட்டக்காரன்_ல நீங்க சொல்ற கேள்வி கொஞ்சம் (நிறையவே...இது கணேஷோட மனசாட்சி) ஜனரஞ்சகமான கேள்விதான் ;-) மத்தபடி முழுமையாக சிரிக்க வைத்த ஒரு சூப்பர் படம்.
அவ்வை பாட்டி கிட்ட முருகர் கேட்ட கேள்வி தான் பா.... படம் ஞாபகம் இல்ல...அந்த பாடல் டைப் கேள்விகள் :
"கொடிது எது....? அரிது எது ...?"
அதே போல சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? நிறைய மறந்திட்டேன்......
படம் திருவிளையாடலென்று நினைக்கிறேன்.
வணக்கம் கோ கணேஷ். வாழைப்பழக் கேள்வி சற்று சிக்கலானதே. என்னுடைய ஒரு பதிவில் பல விடுகதைக் கேள்விகள் போட்டேன். அவற்றில் ஒன்று இக்கேள்வி:
"கவுண்டமணி கேள்வியை எம்மாதிரிக் கேட்டிருந்தால் செந்தில் சரியான பதிலைக் கூறியிருந்திருப்பார்?"
விடை:
"வாங்கின வாழைப்பழங்களிலே இன்னொண்ணு இங்க இருக்கு. ஒண்ணு எங்கே?"
பிரச்சினை என்னவென்றால் எது ஒன்று எது இன்னொன்று என்பதுதான். செந்தில் ஒன்றைத் தின்று விட்டார். இன்னொன்றை கவுண்டமணியிடம் கொடுக்கிறார். அவரைப் பொருத்தவரை அவர் பார்வைக்கோணம் அப்படித்தான் இருக்கும். கவுண்டமணியின் நிலையோ எல்லோருக்கும் தெரிந்ததே.
இதனால் அறியும் நீதி என்னவென்ரால்: மற்றவர் பார்வை கோணத்திலிருந்து பார்ப்பதும் நன்மை பயப்பதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"
// "கவுண்டமணி கேள்வியை எம்மாதிரிக் கேட்டிருந்தால் செந்தில் சரியான பதிலைக் கூறியிருந்திருப்பார்?" //
டோண்டு சார்....... செந்திலிடமிருந்து விடை கிடைத்திருக்குமென்று நினைக்கிறீங்க......
ஆனால் நீங்க சொன்ன நீதி "மற்றவர் பார்வை கோணத்திலிருந்து பார்ப்பதும் நன்மை பயப்பதே." முற்றிலும் உண்மை.....
கனேஷ் ,
" எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேனுமடா " பதிவை அம்மா பார்க்க வேண்டுமென்றே அவர்களுக்கு blog link கொடுத்தீங்களா சார் ...??? :) :)
சும்மா விளையாட்டாய் !!
வீ .எம்
//'அந்த இன்னொரு பழம் எங்கேடா?!'//
மாயவரத்தாரே இருந்தாலும் உமக்கு குறும்பு அதிகம் ஐயா.
//" எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேனுமடா " பதிவை அம்மா பார்க்க வேண்டுமென்றே அவர்களுக்கு blog link கொடுத்தீங்களா சார் ...??? :) :) //
என்ன கேள்வி இது வீ .எம் ?! அந்தப் பதிவை கணேஷ் எழுதியதே அவருடைய அம்மா பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே!
நன்றி காஞ்சி பிலிம்ஸ்
// என்ன கேள்வி இது வீ .எம் ?! அந்தப் பதிவை கணேஷ் எழுதியதே அவருடைய அம்மா பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே! //
மாயவரத்தான் நீங்களும் சேர்ந்துகிட்டீங்களா..... எப்படியோ நல்லது நடந்தா சரி
நன்றி நண்பர்களே
இந்நேரம் அம்மா படிச்சிருப்பாங்க... சரி, சரி.. சீக்கிரம் ட்ரீட் ஏற்பாடு பண்ணுங்க கணேஷ்..! ;)
மாயவரத்தான் அவர்களே....
எனக்கு இப்போ 23 வயசுதான் சார் ஆகுது கொஞ்ச காலம் நானும் இத மாதிரி "கேர்ள் பிரண்ட் வேணும்" "வயசுக்கோளாறு" (இன்னும் எழுதவில்லை).. அப்படின்னு ஒரு பத்து பதினைஞ்சு பதிவுகள எழுதிக்கறேன்.... அப்புறம் கல்யாண சாப்பாடு போடுவோம்....... என்ன சொல்றீங்க.........
பாருங்க.. இங்கேயும் அம்மாவுக்கு தான் கோடிட்டு காட்டுறாரு பாருங்க.. இன்னும் ஒரு பத்தி பதினைந்து பதிவுகளுக்கு அப்புறம் கல்யாண சாப்பாடாம்.. ஏப்ரல் 12-ம் தேதி பதிவு போட ஆரம்பிச்ச இவரு இப்போதைய நிலவரப்படி பத்து பதிவு போட்டுட்டாரு. இந்த கணக்கு படி பார்த்தால் இன்னும் ஒரு ரெண்டு, மூணு மாசத்திலே பத்து, பதினைந்து பதிவுகள் முடிச்சிடுவாரு. அம்மாஆஆஆஆஆஆஆஆ... படிச்சீங்களா? படிச்சீங்களா?
மாயவரத்தான் சார்
அம்மாகிட்ட நானே நேரவே சொல்லிடறேன்..... என்னை விட்டுடுங்க......
உங்க முகவரி (postal address) தனிமடலில் அனுப்பவும்...
(கல்யாண அழைப்பிதழ் அனுப்ப)
Post a Comment