Friday, December 23, 2005

அமெரிக்காவும் இந்தியாவும்

கலாச்சாரக் காவலர்களுக்காக ஒரு படம்....



அமெரிக்காவின் தாக்கம் இந்த அளவிற்கு இந்தியாவில் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் காத்ரீனாவும், ரீட்டாவும் வந்து போன பிறகு இந்தியாவில் சில பெண் புயல்கள் வீச ஆரம்பித்திருக்கின்றன. நண்பன் ஒருவன் விளையாட்டாக சொன்னான் நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி கருப்பாயி, மாரியாத்தா, காளியாத்தான்னு (சும்மா பயமுறுத்தற மாதிரி) பேரு வைக்க ஆரம்பிக்க வேண்டியதுதானாம்.

இந்த காலத்தில் யாரும் தம் மகளுக்கு இப்படி பேரு வைக்கறதில்லைன்னு நினைக்கிறேன். கிராமத்துல கூட கொஞ்சம் மாடர்னா ஷ்ரேயா, ப்ரியான்னு வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால தைரியமா கருப்பாயி, மாரியாத்தான்னு வைக்கலாம். ஆனா பாருங்க லேட்டஸ்ட்டா வந்த புயலுக்கு மாலான்னு பேரு வச்சதா கேள்விப்பட்டேன். இப்படி மாடர்ன்னா புயலுக்கு பேரு வச்சா சில பிரச்சனைகள் வரலாம்.

ஒரு உதாரணத்துக்கு கல்லூரியில மாலான்னு ஒரு பொண்ணு படிக்குதுன்னு வைங்க.... நம்ம கண்ணடிச்சான் பயலுகளும், விசிலடிச்சான் குஞ்சுகளும் புயல் வர்ற திசையில தான் உட்கார்ந்திட்டு இருப்பாங்க... அப்புறம் மாலா இவங்கள தாண்டி நடக்கும் போது.... "புயல் கரைய கடந்துடுச்சுப்பா"ன்னு வாய்ஜாலம் காட்டுவாங்க. உடனே நம்ம மாலா கோபப்படும் ஏதாவது திட்டும்..... அதற்கும் நம்ம மக்கள் சும்மா இருப்பாங்களா... மாட்டாங்க... உடனே "பாத்து மாப்ளே !! மாலா பயங்கரமா தாக்கும்.. 24 மணி நேரத்திற்கு யாரும் பக்கத்துல போகாதீங்கன்னு சன் நியூஸ்ல சொன்னாங்கன்னு" எவனாவது சொல்வான். தப்பித் தவறி புயலுக்கு ரேவதின்னு பேரு வச்சாங்கன்னு வச்சுக்கோங்க... "ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு" கோரஸ் பாடிருவாங்க....

அதுக்காக இப்படியெல்லாம் நீ பண்ணினியான்னு கேட்காதீங்க. சத்தியமா இப்படியெல்லாம் நடக்கக்கூடதுங்கிற நல்ல (??!!!) எண்ணத்துல தான் இத்த எழுதறேன். எதுக்குங்க இந்த பேர்சூட்டும் படலம். நம்மூருக்கு இது ஒத்துவரும்னு நினைக்கறீங்க .... எனக்கென்னவோ இது தேவையில்லைன்னு தோணுது...

Monday, December 12, 2005

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி

கிட்டதட்ட ஒரு மாதமாகி விட்டது. அலுவல் காரணமாக வெளியூருக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. இடையே தமிழ்மணத்தில் நிறைய நடந்தேறியிருக்கிறது.

குழலி ஸ்டாராகியிருக்கிறார். ராகவன் ஜோ அவர்களின் நட்சத்திரப் பதிவுகளையும் படிக்க வேண்டும். மோகன்தாஸ் எழுதிய தேவதையின் காதலன் என்னவாயிற்று என்று தெரியவில்லை.... படிக்க வேண்டும். குமரன் ஏதாவது புதுசா செய்து கொண்டிருப்பாரென்று நினைத்தேன். கோதைத்தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார். ராகவன் அடுப்படி பக்கம் போயிருக்கிறார். மதுமிதா உஷா எல்லோரும் இயல்பான பதிவுகளை அளித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும்(இது உஷாவிற்கு மட்டும்) இருக்கின்றனர். துளசி நியுசி பற்றி இன்னும் நிறைய எழுதியிருப்பாரென்று நினைக்கிறேன்.

பார்ப்போம்.... எல்லாவற்றையும் படிக்க வேண்டும். அப்புறம் நம்ம மணிகண்டன் பேசிகிட்டு இருக்காறா....?

இளவஞ்சியின் பதிவை மட்டும் நண்பனின் வீட்டிலிருந்து படித்தேன்.... பின்னூட்டமும் அளித்தாகி விட்டது....

சரி சரி எல்லாவற்றையும் படிப்போம்....

அப்புறம் ராம்கி எப்படி இருக்கீங்க.... நலம் தானே..... தலைவர் பிறந்தநாளுக்கு ஊரில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கியாச்சா?

இங்கே நாங்கள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். முடிந்தால் படங்கள் அனுப்பி வைக்கிறேன்....

இந்த பதிவு மூலம் தலைவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் என் பதிவுகள் தொடரும்.

Tuesday, November 15, 2005

தலைவர்

கொஞ்ச நாளாகவே (வீ.எம் "பாவம் அவரை விட்டுவிடுவோமே" பதிவு போட்டதிலிருந்து) தலைவரைப் (ரஜினிகாந்த் @ சிவாஜி ராவ் கெய்க்வாட்) பற்றி பதிவிடணும்னு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த பதிவு. இந்த பதிவு நம்ம ரஜினி ராம்கியை பனிக்கட்டி மழையில் நனைக்கணும்னோ அல்லது அடுத்த தலைவர் படத்துக்கு (சிவாஜி) முதல் ஷோ டிக்கட் வாங்கணும்னோ எழுதப்பட்டதல்ல. மேலும் இந்த பதிவு எந்தளவிற்கு தேவை, தேவையில்லை, உபயோகமானது, உபயோகமில்லாதது ஆகிய கருத்தாய்வுகளை உங்களது கண்ணோட்டத்திற்கே விட்டு விடுகிறேன். இது என் எண்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவு தான்.

ரஜினி சாரை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிவிட்டதால் கட்டுரையில் ரஜினி என்று ஒருமையிலேயே அழைக்கிறேன். ரசிகன் என்ற தகுதியில் அவரிடம் கேட்காமலேயே அவரிடம் நான் எடுத்துக்கொள்ளும் உரிமை இது.

நான் சிறுவனாக இருந்த பொழுது என் வீட்டினருகே ஒரு அண்ணன் வசித்து வந்தார். பெயர் அந்தோணி. தீவிர ரஜினி ரசிகர். அவரிடம் எப்பொழுது பேசினாலும் ரஜினி ரஜினி ரஜினி தான். "அவன் இப்படி அடிப்பான் அப்படி அடிப்பான் அவன் ஸ்டைலே ஸ்டைலப்பா" ஆகிய புகழாரங்கள் தான் எப்போதும். போதாக்குறைக்கு வீட்டு எதிர்ப்புறமிருக்கும் மின்கம்பத்திலிருந்து முச்சந்தி விநாயகர் கோயில் சுவர் வரை "ரஜினி" தான். எனக்கு அப்போ வயசு எட்டு. அந்தோணி அண்ணன் என்னை விட ஒரு எட்டு வயது மூத்தவர். தளபதி படம் பத்து நாளில் ரிலீஸ் ஆகயிருந்தது. வழக்கம் போல் அந்தோணி அண்ணனின் ப்ரிரிலீஸ் (pre-release) வேலைகளும் ஆரம்பித்தன. தட்டி போர்டு, கலர் பெயிண்டு என மும்முரமானார். சும்மா ஐந்து நாள் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை முடித்தார். விளைவு எங்க ஏரியாவுல இருக்கிற தென்னை மரம், பஞ்சாயத்து அடி பம்பு என எல்லா இடங்களிலும் தளபதி என்ற வாசகம்.


அவர்கிட்ட போய் கேட்டேன். எண்ணன்னே வேலை எல்லாம் முடிஞ்சாதுன்னு. ஆமாம்பா முடிஞ்சது ஒரு ரெண்டு நாள் ரெஸ்டெடுத்திட்டு தலைவர் படம் முதல் ஷோ பார்த்துற வேண்டியது தான். "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" அவர் ஆர்வம் எனக்கு தொற்றிக் கொண்டது. என்னைப் பார்த்து சிரித்தவர் சரியென்று சொல்லிவிட்டு தளபதி போஸ்டர் ஒன்றை காண்பித்தார். தளபதி படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட்டிற்காக ரஜினி தலை முடியைக் கொண்டை போட்டிருப்பார் அந்த கெட்டப்பில் இருந்த போஸ்டர். தட்டி போர்டுக்காக வைத்திருந்த பெரிய சைஸ் போஸ்டர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. நான் மனதில் பதித்த முதல் ரஜினி போஸ்டர் அதுதான். அன்றிலிருந்து பசையிடாத போஸ்டர் ஒன்றும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதிலும் ரஜினிதான். அந்தோணி அண்ணன் தந்த ஊக்கம் அடம்பிடித்து அப்பாவுடன் சென்று தளபதி முதல் ஷோ பார்த்தேன். புரியாத விஷயங்களை அப்பா விளக்கினார். இப்படியாக விவரம் தெரிந்து நான் புரிந்து பார்த்த படம் "தளபதி". மகாபாரதக் கதையென்பதால் சீக்கிரமே பிடித்துக் கொண்டேன் போல. அன்றிலிருந்து நான் ரஜினி ரசிகன்.

அன்றைக்கு எனக்கிருந்த மனவளர்ச்சியில் ரஜினி யார்? அவனது பின்புலம் என்ன? நன்றாக நடிப்பானா? என்றெல்லாம் எனக்கு கேட்கத் தெரியவில்லை. அப்பொழுதிருந்து அநேகமாக ரஜினியின் அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறேன். ரஜினி திரையில் வில்லனை அடித்தால் இங்கே எனது உள்மனம் வீறு கொண்டெழும். இந்த மாதிரி உணர்ச்சிகளை திரைப்படம் பார்க்கும் அனைவரும் ஏதேனும் ஒரு வயதில் அனுபவித்திருப்பார்கள். அதே உணர்வு தான் எனக்கும்.
அவ்வப்போது அந்தோணி அண்ணனுடன் போஸ்டர் வேலை அப்படி இப்படியென்று நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

பின்னர் வயது ஏற ஏற பக்குவம் வந்தது. சினிமாவை அலசி ஆராயும் தெளிவும் வந்தது. ஆனால் இந்த பக்குவமும் தெளிவும் மற்ற நடிகர்களின் படங்களிற்கு மட்டும் தான். ரஜினி படங்களை அலசிப்பார்க்க ஆராய என்னால் முடியவில்லை. எனக்கு ஆங்கிலத்திற்கு ABCD போல சினிமாவுக்கு ரஜினி. ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் ஆரம்பிக்கும் இந்த உணர்ச்சி மழை முதல் நாள் முதல் ஷோ படம் முடிந்ததும் குறைந்து விடும். பின்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். இன்று வரை இப்படித்தான் செல்கிறது. ஒவ்வொரு முறை ரஜினி படம் பார்க்கையிலும் அதே பழைய சிந்தனைகள் தான். தன்னிலை உணராமல் என்னை மறந்த நிலையிலேயே இன்றும் ரஜினி படங்களைப் பார்த்து வருகிறேன். இதில் பகுத்தறிவை என்னால் புகுத்த முடியாது. அப்படி புகுத்துகிறேன் என்றால் நான் திரும்பவும் ABCD படிக்க ஆரம்பிக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. உணர்ச்சிகளால் வரும் அந்த சந்தோஷத்தை அறிவால் இழக்க நான் தயாராக இல்லை.

டெல்லியில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவது அரிது. அதனால் பெரும்பாலும் திருட்டு சிடிக்களிலேயே படங்கள் பார்ப்பதுண்டு. (யாரும் போட்டுக்கொடுத்துறாதீங்க சாமி...) சந்திரமுகி ரிலீஸ் ஆகும் பொழுது என்னையும் அறியாமல் ஒருவித ஏமாற்றம் முதல் ஷோ பார்க்கமுடியவில்லையே என்று. ஆனால் தியேட்டருக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று மட்டும் உறுதி எடுத்துக் கொண்டேன். என் ஆசை வீண் போகவில்லை. டெல்லியில் சந்திரமுகி திரையிடப்பட்டது. போய் பார்த்துவிட்டு வந்து நான் எழுதிய பதிவுதான் "ரசிகனின் ஆட்டோகிராஃப்". அன்றும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன் "என்னையும் கூட்டிட்டுப் போவீங்களாண்ணே?" என்று அந்தோணி அண்ணனிடம் கேட்டதை.

தமிழ்மணத்திற்கு வரும் வரை ரஜினி என்பவன் நான் செய்ய முடியாததைத் திரையில் செய்யும் ஒரு பெரிய சக்தி அவ்வளவு தான். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்த பிறகு ரஜினி என்னும் அந்த திரை சக்தியின் சில பரிணாமங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. சந்திரமுகி விமர்சனம் எழுதிய அல்வாசிட்டி அண்ணாவின் வலைப்பதிவை ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். இதெப்படி சாத்தியமாயிற்று. ஒவ்வொரு வலைப்பதிவரும் பார்த்தார் என்றால் எண்ணிக்கை 800ஐத் தாண்டியிருக்க முடியாது. இதில் பகுத்தறிவுவாதிகள் பாதி பேர். (எழுத்தாளர்கள் அல்லவா...). நான் இப்படி சொல்கிறேனே என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் இருந்தாலும் எனக்கு பெரிய புதிராகவே உள்ளது. ஒருவேளை என்னிடம் இருக்கும் அந்த "தளபதி" மனம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது போல.

இன்னொரு பரிணாமம் ரஜினி ராம்கி. என்னால் ரஜினி ராம்கி போல் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு என் ஆளுமை ஒப்பவில்லை (இது தான் பகுத்தறிவு என்று சொல்பவர்களுக்கு வாயில் அவல்). ஆனால் என்று ரஜினி என்பவனுக்கு இத்தனை பெரிய ரசிகர் மன்றம் இருக்கிறதென்று தெரிந்ததோ அதில் இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறதென்று தெரிந்ததோ (பார்க்க http://rajinifans.com/activities/index.asp) அதுவும் ரஜினி ராம்கி போன்ற அன்பர்களால் நடக்கிறதென்று தெரிந்ததோ அன்றே என்னையும் அந்த குழுமத்தில் இணைத்துக் கொண்டேன் (இன்றுவரை அந்த குழுமத்திலிருந்து உபயோகமாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும்). தன்னலமில்லாமல் கட்டப்பட்ட ஒரு வீடு அது. தெரிந்தோ தெரியாமலோ என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.

பி.கு

வீ.எம் பதிவுக்கு நானளித்த பின்னூட்டத்தில் சொன்ன வரிகள் "இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் வேண்டாமென்று யோசிக்கிறான், அமைதி தேடி இமயமலை போறான், இவனிடம் அரசாங்கத்தை கொடுத்தால் "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன? ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன்."

Monday, November 14, 2005

நட்சத்திரம் வாரம் சுபமஸ்து

ஒரு வழியாக நட்சத்திர வாரம் முடிவடைந்து விட்டது. ஆறு பதிவுகள் எழுதியாச்சு. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டாச்சு. எந்த வேலையிலும் ஓய்வு வேணுமில்ல. ஆறு பதிவுகளும் ஓரளவிற்கு நன்றாக இருந்தன என்று நினைக்கிறேன்.

கட்டுரை கவிதை கதை என்று எழுதிடலாம்ணு நினைச்சேன். கதை எழுதுவது எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது போலிருக்கிறது. எழுதிய ஒரு கதையைப் பதிவிடாமலேயே விட்டு விட்டேன். ரம்யா அக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

நான், எனக்கு வேண்டியவர்கள், சமுதாயம், கடவுள், குடும்ப வாழ்க்கை, என் ஆதர்சன் என்று இந்த வாரம் இனிதே சென்றது. எழுதிய ஆறு பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எனது ஆசிரியரைப் பற்றி எழுதிய பதிவுதான்.

அறிவியல் சார்ந்த ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து தான் ஐன்ஸ்டீனைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதுவும் ரஜினி டி.ராஜ், ரஜினி ராம்கி ஆகியோரால் பாராட்டப்பட்டது. ராஜ் நான் செய்த தவறுகளை அழகாகவும் கண்ணியமாகவும் சுட்டிக் காட்டினார். முதல் முயற்சி என்பதால் சில தவறுகள் வந்து விட்டன. எதிர்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

அடுத்த பதிவு "என் மனைவியின் டைரிக் குறிப்புகள்". ஒரு சிக்கலான பதிவாகையில் இதில் சில சர்ச்சைகளும் இருந்தன. உண்மையைச் சொல்லி விடுகிறேன். அந்த நண்பரும் அந்த கவிதையும் என்னுடைய சொந்த கற்பனையே. மெளனராகம் படம் பார்த்த தாக்கத்தில் எழுதியது. அதை ஒரு பின்னூட்டத்திலும் கோடிட்டு எழுதியிருந்தேன். அதற்கு "கல்வெட்டு" தந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததாக அப்துல் ரகுமான் கவிதை. ஒவ்வொரு மனிதனும் தனித்திருக்கும் பொழுது சில மனிதர்களைப் பற்றி எண்ணுவதுண்டு. அப்படி நான் தனித்திருக்கும் பொழுது அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒரு நபர் அப்துல் ரகுமான். நான் நேசிக்கும் ஒரு கவிஞர். எனக்கு ஆதர்சனப் புருஷர். அதனால் அவரது கவிதை ஒன்றை பதிவாக்கினேன்.

அப்படி இப்படி ஒரு வாரம் முடிந்தது. சொன்னது போலவே அழகாகவும் ஆழமாகவும் எழுதினேன் என்று நினைக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிந்த அனைவருக்கும் என் நன்றி.

நான் வலைப்பதிவுலகில் அதிகம் நேசிக்கும் நண்பர்கள் வீ.எம் & வா.மணிகண்டன் இங்கு வராதது வருத்தத்தைத் தந்தாலும் புதிய நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். அதற்காக மகிழ்கிறேன். மேலும் சந்திரவதனா, ரம்யா அக்கா எல்லோரும் என் பதிவுக்கு சுட்டிகளை நிறுவி தங்கள் பதிவினை ஆரம்பித்திருந்தனர். சந்தோஷமளித்த விஷயங்கள்.

நான் வலைப்பதிய ஆரம்பித்தது திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களைப் பார்த்து தான். இது வரையிலும் அவர் என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் என் வலைப்பதிவுகள் தொடரும் வழக்கம் போல உங்கள் ஆதரவுடன்

Saturday, November 12, 2005

அப்துல் ரகுமானும் புத்தகங்களும்

சமீபத்தில் ஒரு ஹைக்கூ படித்தேன்.
"புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்".

யார் எழுதியது என்று தேடிப் பார்த்ததில் கவிஞர் அப்துல் ரகுமான் எழுதியது என்று தெரிய வந்தது. சரி அப்துல் ரகுமானைப் பாராட்டி பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். சூரியனைப் பற்றி ஒரு தீக்குச்சி எழுதலாமா அல்லது எழுததான் முடியுமா? முயற்சியைக் கைவிட்டு விட்டேன். ஆனாலும் மனசு கேக்கல. நாம தான் எழுத கூடாது வேற யாராச்சும் எழுதியிருப்பாங்க அத்த எடுத்து போடலாம்னு நினைச்சேன். "பித்தன்" கவிதைத் தொகுப்பை எடுத்து படிக்கலானேன். ஆனால் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே. அவரைப் பற்றி அவரே இரு கோணங்களில் எழுதியிருந்தார். அநேகமாக எல்லோரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே இந்த பதிவு.

அவர் ஆலாபனை என்றொரு தொகுப்பும், பித்தன் என்றொரு தொகுப்பும் எழுதியிருக்கிறார். ஆலாபனையை நேர்களின் ரசிகன் என்றும் பித்தனை எதிர்களின் உபாசகன் என்றும் கூறியிருக்கிறார். பித்தன் எதனை எல்லாம் முரணாக பார்க்கிறான் என்பதை பித்தன் என்னும் தொகுப்பில் கவிதைகளாக்கியிருக்கிறார்.

உங்களுக்காக ஒரு கவிதை இங்கே. அதிலிருந்து எடுத்தது தான் மேலே சொல்லியிருந்த ஹைக்கூ.

புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

எனக்கென்னவோ முரணாக சொன்னாலும் இன்றைய தேதியில் அதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது. விளைவு பித்தன் எனக்கு சித்தனாகிப் போனான்.

Friday, November 11, 2005

என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். அடிக்கடி எழுதிய கவிதைகளை என்னிடம் படிக்க கொடுப்பார். எனது விமர்சனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். சமீபத்தில் ஒரு கவிதை எழுதி என்னிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள் என்று சொன்னேன். அவருக்கிருந்த தாழ்வு மனப்பான்மையால் அனுப்பாமல் விட்டு விட்டார். வலைப்பூ நண்பர்களுக்காக அவரிடம் அந்த கவிதையைக் கேட்டு வாங்கி இங்கு ஒரு பதிவாக இடுகிறேன்.

நண்பர் திருமணமானவர். இந்த கவிதை எனக்கென்னவோ கற்பனையில் வந்ததாக படவில்லை. நீங்களும் படித்து விட்டு கருத்துக் கூறுங்கள்.

************************************
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

"எனக்கு திருமணமான பின்பும்
என்னை மனதில் வைத்துக்
கொண்டிருக்கும் காதலனுக்காக...


கோடி முறை யோசித்து
நீ எழுதிய எனக்கான காதல் கடிதம்
பத்திரமாக இருக்கிறது
மடித்து வைத்த
என் கூரைச் சேலை மத்தியில்

முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்
மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று..."

இப்படியாக நீள்கிறது
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

************************************

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காதலன் நினைவில் வாழும் மனைவியின் அன்பான கணவன் என வித்தியாசப்பட்ட கவிதை.
படித்து முடித்து நான் கேட்ட முதல் கேள்வி "ஏன் சார் மனைவியின் டைரியைப் படிச்சீங்க?"

நீங்களே சொல்லுங்க நான் கேட்டது தப்பா?

Thursday, November 10, 2005

பிறப்பும் இறப்பும் (God does not play dice)

நான் ஏற்கனவே கடவுளைப் பற்றிய ஒரு பதிவெழுதியிருந்தேன். ஆனால் அது முற்றிலும் சினிமாவைச் சார்ந்தது. அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் இங்கு எடுத்தாள ஆசைப்படுகிறேன்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

ஒரு ஊரில் வயதான ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக மாடியில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அவரது மனைவி கீழே ஏதோ பலகாரம் செய்து கொண்டிருக்கிறார். வாசம் அவரது மூக்கை துளைக்கிறது. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று இவருக்கு ஆசை. உடனே மனைவியைக் கூப்பிடுகிறார். மனைவியிடமிருந்து பதிலேதுமில்லை. இவரால் ஆசையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி கீழே இறங்கி சமையலறை வரை வந்து விடுகிறார்.

நோய்வாய் பட்ட கணவனை சமையலறையில் பார்த்ததும் மனைவிக்கு பதட்டம். எதற்காக கீழே இறங்கி வந்தீர்கள் எனக் கேட்கிறார். பலகாரம் சாப்பிட வந்ததாக கூறுகிறார். இந்த பலகாரம் வேறு விஷயத்திற்காக வைத்திருப்பதாகவும் அதனைத் தொடக்கூடாது என்று சொல்கிறார். வயோதிகருக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. எதற்காக வைத்திருக்கிறாய் என மனைவியிடம் கேட்கிறார். அதற்கு மனைவியும் நாளைக்கு அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர் சொன்னதாகவும் அவருக்கு இஷ்டமான பலகாரங்களை ஈமச்சடங்கில் வைக்க வேண்டுமென்பதால் இந்த பலகாரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட உடனே அந்த வயோதிகர் இறந்து விடுகிறார்.

உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை என்பதற்காக சொல்லப்பட்ட துணுக்கு. ஆனால் அதில் இன்னொரு நல்ல கருத்தும் அடங்கியிருக்கிறது. மனிதன் மரணப்படுக்கையில் இருந்தாலும் அவனது ஆசைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.

எல்லோருக்கும் ஐன்ஸ்டீனைப் பற்றி தெரியும். மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இவரும் ஒரு சராசரி மனிதனைப் போல் தன் ஆசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் இவரது ஆசை விசித்திரமானது. ஆசைப்படுவதிலும் இவருக்கு நிகர் இவரே. மரணப்படுக்கையில் இருக்கும் பொழுதும் தன் மூக்கு கண்ணாடி, தன் கருவிகள் மற்றும் தன் அண்மைக்கால சமன்பாடுகளைத் தான் இவர் கேட்டார். நினைவு வருவதும் போவதுமாக இருக்கிறது. அந்த நிலையிலும் கண்டுபிடிப்புகளில் சிறந்ததென்று இவர் நினைத்த "கடவுளின் மூளையை" வெளிப்படுத்தும் ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்.


எனக்கு கடவுளின் எண்ணங்கள் தெரிய வேண்டும் (I want to know God's thoughts). இது தான் இவரது கடைசி ஆசை. இந்த ஆசையைப் பற்றி இவர் முன்னமே சொல்லியிருந்தார். "அனைத்துமே கடவுளின் எண்ணங்கள் தான் மற்றவை எல்லாம் வெறும் விவரங்கள் தான். (I want to know God's thoughts – the rest are mere details). இந்த ஒரு ஆசையினாலே இவர் அறிவியல் அறிஞர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தார். தனக்கு 20 வயதிருக்கும் பொழுது அறிவியல் உலகில் முத்திரை பதிக்க இவர் முயற்சி செய்து கொண்டிருந்த காலம். 1905 ஆம் வருடம் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்த வருடம். இவரது ஆய்வறிக்கைகள் உலகை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு சான்றாக அமைந்தன.

சார்பியல் கோட்பாடு (Theory of relativity): E=mc2 என்பதை இவர் கண்டுபிடித்து வெளியிட்ட ஆண்டு. உலகிலுள்ள அனைத்து சடப்பொருள் எல்லாம் மூலக்கூறுகளால் ஆனவை என்று சொன்னார். (All matter is composed of molecules). அந்த காலத்தில் நேரம் என்பது வரம்பற்ற மாறாத ஒன்றாக கருதப்பட்ட காலம். அந்த காலத்தில் தான் நேரம் என்பது நாம் பயணிக்கும் வேகத்தைச் சார்ந்ததென்று E=mc2 என்னும் சமன்பாட்டினால் நிரூபித்தார். இன்றளவும் கணிதத்திலும் சரி அறிவியலிலும் சரி மிக உயர்வாக கருதப்படும் சமன்பாடு இது.

பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் பொதுப்படையான சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார் (Theory of general relativity). நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்றாலும் அதற்கு என்ன காரணம் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐன்ஸ்டீன் தனது பொதுப்படையான சார்பியல் தத்துவத்தில் புவி ஈர்ப்பு விசை என்பது நேரத்தையும் வெளியையும் பொருட்கள் வளைப்பதால் வருவது என்று கூறினார். (bending of time and space by massive objects). இது 1919ஆம் ஆண்டு வானூலார்களால் சூரிய கிரகணமன்று நிரூபிக்கப்பட்டது.

பின்னர் இவர் துளியம் விசையியல் (quantum mechanics) பற்றிய ஆய்வறிக்கைக்காக நோபல் பரிசு பெற்றதும் நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் 1920 ஆம் ஆண்டு நீல்ஸ் போர், ஸ்க்ராடிஞ்சர், ஹெய்சன்பர்க் ஆகிய ஆய்வாளர்களால் ஐன்ஸ்டீனின் துளியம் பற்றிய ஆராய்ச்சி பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அவர்கள் சொன்ன விஷயம் இது தான் உலகில் எதையுமே தீர்மானமாக சொல்ல முடியாது, ஒரு பொருளின் வேகத்தைச் சரியாக சொல்லலாமே ஒழிய அதன் நிலையை சரியாக சொல்ல முடியாது. (speed of a particle but not its position). ஐன்ஸ்டீன் "கடவுள் என்னும் ஒரு பெரிய சக்தி" தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தீர்க்கமாக நம்பினார். அதன் மூலம் உலகிலுள்ள எல்லாவற்றையும் கணித சமன்பாடுகள் மூலம் எளிதாக விளக்கி விடலாம் என்றும் பெரிதும் நம்பினார். அதனால் இவர் மற்ற கருத்தாய்வுகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டார். அதனாலேயே அடிக்கடி பல்வேறு ஆராய்ச்சியாளர்களுடன் இவருக்கு தர்க்கம் செய்ய வேண்டியதாகி விட்டது.

1920ல் சால்வே கலந்தாய்வில் இந்த தர்க்கம் முற்றியது. நீல்ஸ் போருடன் இவரது அந்த தர்க்கம் தான் இன்றளவும் ஒவ்வொரு மனிதனின் கடவுள் பற்றிய கேள்விகளின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். அதில் ஐன்ஸ்டீன் சொன்னது "கடவுள் பகடையாடுவதில்லை. அவரின் கணக்கில் எல்லாமே தீர்க்கமானது தான். அதில் வாய்ப்புகளுக்கு இடமில்லை" (God does not play dice, meaning that nothing would be left to chance in the universe). அதற்கு நீல்ஸ் போரும் அவருடன் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்களும் சொன்ன பதில் இது தான் "Einstein, stop telling God what to do with his dice".

ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தில் உலகை எப்படியும் ஊகித்து விடலாம். அதற்கு எளிய கணிதச் சமன்பாடுகள் போதுமென்று கூறினார். ஆனால் கடைசி வரை இதை இவரால் நிரூபிக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால் இன்றளவும் இயற்பியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கும் நிறைய ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கும் இந்த தத்துவமே காரணம்.

ஒரு வேளை ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை நிரூபித்திருந்தால் உலகில் இன்று எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கும். முக்கியமாக நாத்திகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் மனிதனின் தோற்றத்திற்கான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க முடியவில்லை. அந்த பதில்களுக்கு மிக அருகில் சென்று வந்தவர் என்பதால் தான் ஐன்ஸ்டீன் இன்றளவும் எல்லோராலும் போற்றப் படுகிறார். ஆசைப்படுபவர்கள் எல்லாரும் இவரைப் போல ஆசைப்பட வேண்டும். இதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை.

பி.கு.
மனிதனின் கடவுள் நம்பிக்கை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளைத் தேடியதன் விளைவு தான் இந்த பதிவு.

பார்க்க + படிக்க
'Einstein', Peter D Smith, (Life&Times series) Haus Publishing, ISBN 1-904341-15-2

Wednesday, November 09, 2005

வருத்தப்படாதவர்கள் சங்கம்

முன்னறிவிப்பு:

இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. என் வயதில், என் அனுபவத்தில், எனக்கு நியாயமென்று தோன்றிய சில ஆதங்கங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

முன்னொரு காலத்தில் ஐக்கிய குடியரசில் ஒரு பிரபு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினார். தன் குதிரை வண்டியில் ஊர் சுற்றும் பொழுது ஒரு இடத்தில் ஒரு ஏழை விவசாயி புற்களைத் திண்று கொண்டிருந்தான். உடனே அந்த பிரபு அவனிடம் போய் அவன் புற்களைத் திண்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் தன் ஏழ்மை நிலை காரணமாக புற்களைத் திண்பதாக சொல்கிறான். உடனே அவனை தன் வண்டியில் ஏற சொல்கிறார்.

வண்டியில் செல்லும் பொழுது அந்த விவசாயி தன் வீட்டில் தன் மகனும் மனைவியும் புற்களைத் திண்று கொண்டிருப்பதாக சொல்கிறான். அதற்கு அந்த பிரபு அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார். உடனே அந்த விவசாயி தன் அண்ணனும் அவன் மனைவி மக்களும் புற்களைத்தான் திண்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறான். அவர்களையும் வண்டியில் ஏற்றிக் கொள்வதாக பிரபு உறுதியளிக்கிறார். பூரிப்படைந்த விவசாயி உங்கள் வீட்டில் இத்தனை பேருக்கு வேலை இருக்கும் பொழுது ஏன் முன்னமே பணியாட்களை அந்த வேலைகளுக்கு அமர்த்தவில்லை என்று கேட்கிறான். அதற்கு அந்த பிரபு "என் வீட்டு தோட்டத்தில் புற்கள் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன அவைகளை நீக்குவதற்காகவே உங்களை அழைத்துச் செல்ல சம்மதித்தேன்"

என்று சொல்கிறார். வேடிக்கைக்காக சொல்லப்பட்ட விஷயம் தான் என்றாலும் அதிலுள்ள கருத்து ஆழமானது. பிறரது கஷ்டத்தைத் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்பவர்கள் இந்த உலகத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் ஆசிரியர் தின விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர் ஆசிரியர்கள் மீது ஒரு குற்றம் சாட்டினார். வாங்கும் சம்பளத்தை வைத்து திருப்தி கொள்ளாமல் அரசாங்க ஆசிரியர்கள் வட்டிக்கு விட்டு பிழைக்கிறார்கள் என்று சொன்னார். நானும் என் நண்பனின் அப்பாவும் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். இந்த வட்டிக்கு விட்டு பிழைப்பது என்பது சிறிது காலத்திற்கு முன் பணக்காரர்கள் மட்டும் செய்து வந்த தொழில். இந்த விஷயத்திற்காகத்தான் நம் முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தான் நடித்து வெளியாகிய அநேக படங்களில் போராடியிருப்பார். அந்த படங்களைப் பார்த்தாலே புரியும். ஒரு பண்ணையார் இந்த தொழில் செய்து ஊர் மக்களையும் ஏழை விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பார். தலைவர் அவர்களைத் தட்டிக் கேட்டு ஏழைகளைக் காப்பாற்றுவார்.

இன்று நிலைமை வேறு தெருவுக்கு ஒருவரேனும் இந்த வட்டிக்குக் கொடுத்து வாங்கும் தொழிலில் இருக்கிறார். விவசாய நிலங்கள் இருக்கும் கிராமங்களில் கண்டிப்பாக ஐந்திலிருந்து பத்து பேர் இந்த தொழிலில் இருப்பார்கள். இவர்களில் சிலருக்கு இது மட்டும் தான் தொழிலாக இருக்கும். சிலருக்கு இதுவும் ஒரு தொழிலாக இருக்கும். எப்படியிருப்பினும் பொருளீட்டுவதே இதன் உள் நோக்கம். இந்த தொழிலுக்கு அடிப்படை தேவை நிலையான பண ஆதாரம் (constant money source என்று சொல்வார்கள்). இன்றைய தேதியில் அது அரசு அலுவலர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் இந்த வட்டிக்கு கொடுத்து வாங்கும் பழக்கமுள்ளவர்களில் அரசு அலுவலர்களே அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்களுக்கு இது தொழில் கிடையாது. ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சம்பள பணத்தை வைத்து அதிக பொருளீட்டும் ஒருவித வியாபாரம் அவ்வளவே. எப்படி பார்த்தாலும் இது தட்டிக் கேட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த தொழில் செய்வதில் எந்த விதத்திலும் நியாயம் இருக்க முடியாது.

இந்த தொழிலில் இருக்கும் சிலரைக் கேட்டால் நாங்கள் நியாயமான வட்டிக்குத் தான் பணத்தை வழங்குகிறோம் என்று சொல்வார்கள். தொழிலே அநியாயம் என்று சொல்லும் பொழுது அதன் இயக்கம் மற்றும் எப்படி நியாயமாக இருக்க முடியும்? என்று கேட்டால், மக்களின் தேவைக்காகத்தான் நாங்கள் இந்த தொழில் செய்கிறோம் என்று சொல்வார்கள். இந்த பதில் எப்படியென்றால் ஏமாறுகிறவன் இருக்கிற வரை நாங்கள் ஏமாற்றுவோம் என்று சொல்வது போலாகும்.

மக்களின் தேவைக்காகத்தான் வங்கிகளுக்கு பணத்தையும் வழங்கி, ஒரு வட்டி விகிதத்தையும் அரசு நிர்ணயித்திருக்கிறது. மக்களின் பொருட் தேவையையும் கால அவகாசத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள் அநியாயம் செய்கிறார்கள். அரசூதியம் வாங்கும் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் குறைவு. அதனால் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவது வசதியாகி விடுகிறது. எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவர் மதிய உணவு இடைவேளைகளில் கூட கலெக்ஷனுக்கு சென்று விடுவார். அப்படியிருக்க என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயமென்னவெனில் இவர்கள் மேல் எழுந்த குற்றச்சாட்டிற்கு இவர்கள் காட்டிய எதிர்ப்பு தான்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் தோற்றதும், அந்த தோல்விக்கு அரசு ஊழியர்கள் தான் பெரிதும் காரணமென்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. நம்ம முதல்வர் என்ன செய்தார் அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனை தான் அது என்று சொல்பவர்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. நான் சொல்ல வருவது இதுதான், அரசு அலுவலர்களைப் பாதிப்புள்ளாக்கினார் என்று ஒரு ஆட்சியை முற்றிலுமாக அகற்றும் அளவிற்கு அவர்களிடம் சக்தி இருக்கிறதென்றால் அந்த சக்தியை அவர்கள் ஏன் நல்ல விஷயத்திற்காக பயன் படுத்தக் கூடாது?

உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடு இந்தியா. எந்த நாட்டில் ஊழல் அதிகம் காணப்படுகிறதென்று என்று கேட்டால் அதற்கும் இந்தியா என்று துணிந்து பதிலளிக்கலாம். நமது அரசாங்கமும் அதன் அங்கத்தினர்களும் இந்த ஒரு வார்த்தைக்கு பேடண்ட் வாங்கலாம். அரசு துறைகளில் அந்த அளவிற்கு ஊழல் அதிகம் காணப்படுகிறது. வட்டிக்கு விடுபவர்கள் பற்றி நான் சொன்னதும் இதற்காகத்தான். ஊழல் செய்ய வழி உள்ளவர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்ய வழி இல்லாதவர்கள் குறுக்குவழி ஏதேனும் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். (நல்லவர்கள் மன்னிக்கவும்... இது பெரும்பான்மை அரசு அலுவலர்களுக்கு சொல்லப்பட்ட ஒன்று)

அரசாங்கத்தைப் புரட்டிப் போடும் சக்தி மக்கள் தான் என்றாலும் அந்த அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையேயான பாலமாக இருப்பது அரசு அலுவலர்கள் தான். தனக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது மட்டும் கொதித்தெழுந்து தம் துவேஷத்தைக் காட்டும் இவர்கள் மற்ற நேரத்தில் மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குறிய விஷயம்.

Nov. 19, 1863
It is rather for us the living here be dedicated to the great task remaining before us--that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion--that we here highly resolve that these dead shall not have died in vain, that this nation shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth.
- ஆபிரகாம் லிங்கன்

இன்றைய அரசு மக்களால் மக்களுக்காக நடைபெறவில்லை. அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் இதை நடைபெற விடாமல் தடுத்து விடுகிறார்கள். இது நடைபெறாத வரை அரசாங்கம் என்பது மக்களை நினைக்காமல் மக்களுக்காக வருத்தப்படாதவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு சங்கம் அவ்வளவே.

Tuesday, November 08, 2005

திருமதி. எமிமா பால்துரை


இன்று காலை திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இந்த நாள் இனிய நாளில்" ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். தானியங்களையும் நவரத்தினங்களையும் விற்பதே அவனது தொழில். அவன் பொதி சுமப்பதற்காக இரண்டு கோவேரிக் கழுதைகளை வைத்திருந்தான். ஒரு நாள் பொருட்களை விற்பதற்காக அருகிலிருக்கும் நகரத்திற்கு சென்றான். அப்பொழுது தானியங்கள் அடங்கிய மூட்டையை ஒரு கழுதை மேலும் நவரத்தினங்கள் அடங்கிய மூட்டையை இன்னொரு கழுதை மேலும் ஏற்றினான். நவரத்தின மூட்டையை ஏற்றிய கழுதை தானியங்கள் ஏற்றிய கழுதையை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, நான் தான் பெரியவன் அதனால் தான் முதலாளி நவரத்தின மூட்டையை என் மேல் ஏற்றினார் என்று கூறியதாம். (மூட்டையில் நவரத்தினம் இருப்பது கழுதைக்கு எப்படி தெரிந்தது என்றெல்லாம் அறிவார்ந்த கேள்விகளைக் கேட்கக்கூடாது... கதை சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது). தானியங்களை ஏற்றிய கழுதையும் பதிலேதும் பேசாமல் வந்ததாம்.

நகரத்தைச் சென்றடைய ஒரு காட்டைக் கடக்க வேண்டும். வழக்கம் போல திருடன் அவர்களை வழிமறிக்கிறான். இரண்டு கழுதைகளும் ஓட ஆரம்பிக்கின்றன. திருடன் முதலில் தானியங்கள் சுமந்து வந்த கழுதையை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்க்கிறான். வெறும் தானியங்கள் இருப்பதைக் கண்டு அடுத்த கழுதையை விரட்டுகிறான். அது ஓடுகிறது. கத்தியை வீசுகிறான் கத்தி குறி தவறாமல் கழுதையின் காலில் சொருகுகிறது. நவரத்தின மூட்டையை எடுத்துக்கொண்டு திருடன் தப்பியோடி விடுகிறான். இப்பொழுது தானியங்களைச் சுமந்து வந்த கழுதை கேட்கிறது "இப்ப என்ன சொல்றீங்க? இப்ப என்ன சொல்றீங்க?". நவரத்தினங்களை சுமந்த கழுதை உண்மையை புரிந்து கொண்டதாய் சொல்கிறது "நாம் இருவரும் கோவேரிக் கழுதைகளே. இதில் உயர்வு தாழ்வென்பது கிடையாது". இதே போல் தான் மனிதனின் நிலைமையும். (மனிதனும் கழுதையும் ஒண்ணான்னு கோபப்படாதீர்கள்.) உயர்வு தாழ்வென்பது அவன் எவ்வளவு தூரம் மனிதனாக இருக்கிறான் மனிதத்துடன் இருக்கிறான் என்பதைப் பொருத்தே நிர்ணயிக்கப்பட வேண்டும்.

(This paragraph is meant only for தமிழ்மணம் audience) தமிழ்மணத்தில் நட்சத்திர வாரத்தில் நிறைய பேர் நிறைய நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் மனிதருக்கும் மனிதத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, உறவுகளுக்கான அந்த பாச முடிச்சுகளை வாழ்வியல் சம்பவங்களை வைத்து இளவஞ்சி எழுதியது போல வேறு யாரும் எழுதியிருக்க முடியாது. மதி அவர்களால் பிரத்யேகமாக பாராட்டப்பட்ட ஒரு நட்சத்திர பதிவர் இளவஞ்சி. இதனால் இவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசை ஏற்படுவது இயற்கையே. இந்த பதிவு முழுவதுமாக இளவஞ்சியின் பதிவுகளால் தூண்டப்பெற்றதனால் வந்ததே. (எழுத்து திருட்டுக்கு இப்பொழுதெல்லாம் தூண்டுதல் என்ற வார்த்தை தான் பொருத்தமாகயிருக்கிறது)

விவரம் தெரிந்து அழும் அழுகை மூன்று விஷயங்களுக்காக வரலாம். ஒன்று, பாசமானவர்களைப் பிரிய நேரும் பொழுது. இரண்டாவது அளவற்ற ஆனந்தம் அடையும் பொழுது, மற்றொன்று சுயநலம், ஈகோ இறந்து மனிதம் தலை தூக்கும் பொழுது. இதில் மூன்றாவது அழுகை வரும் பொழுது மனதில் ஒரு பெரிய நம்பிக்கையும் தெளிவும் வந்து போகும். அதற்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் இழக்கலாம் என்று தோன்றும். திரு.இளையராஜாவின் சென்னை இசையரங்கு நிகழ்ச்சியில் திரு.பார்த்திபன் சொன்னார் "சந்தோஷம் உச்ச கட்டத்தை அடையும் பொழுது செத்து விடலாம் என்று தோன்றும்". அப்படித்தான் இதுவும். சுயநலம் இறந்து மனிதம் பிறக்கும் பொழுது செத்து விடலாம் என்று தோன்றும். ஒன்றுமில்லை செய்த தவறுக்கு உடனேயே மன்னிப்பு மட்டும் கேட்டுப் பாருங்கள் இதன் அர்த்தமும் அதிலிருக்கும் ஆனந்தமும் புரியும். (நன்றாக இருந்தது என்பதற்காக தவறுகளாக செய்து கொண்டே போகக் கூடாது...). இந்த மாதிரியான அழுகை மன்னிப்பு கோரும் பொழுதில் மட்டுமல்ல, பிறருக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருத்தப்படும் பொழுதும் வரும். அன்பே சிவம் படத்தில் திரு.கமல் சொல்ற மாதிரி "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அதான் கடவுள்". அப்பொழுது நாம் மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்ந்து விடுகிறோம். பார்த்தீங்களா..!!!. மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும். அவன் கடவுளாகி விடுகிறான்.

போன பத்தியில் சொன்னது விவரம் தெரிந்து அழுவது. விவரம் தெரியாமல் அழுவது சிறு குழந்தைகளின் முரண்டு. எதாவது வேண்டும் என்று அழுவார்கள். சில சமயம் பக்கத்திலிருக்கும் யாரேனும் அழுதாலும் அழுது விடுவார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு துக்கமும் இருப்பதில்லை வெட்கமும் இருப்பதில்லை. அதனால் அழுகை என்பது அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது. அப்படி விவரம் தெரியாத வயதில் விவரம் தெரிந்து நான் அழுதது எனக்கு ஞாபகமிருக்கிறது. (அப்பாடா இதற்கா இவ்வளவு பீடிகை .... விஷயத்துக்கு வந்துட்டான் என்று நிறைய பேர் பெருமூச்சு விடுகிறீர்கள் போல....). எல்.கே.ஜி படிக்கும் பொழுது எனக்கு பாடம் எடுத்தவர் திருமதி.எமிமா பால்துரை. எல்லோரும் ஒரு கட்டத்தில் யாரேனும் ஒரு டீச்சரையாவது மனதில் பதிய வைத்து விடுவர். நம்ம இயக்குனர் சேரனுக்கு ஞாபகத்திலிருப்பவர் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர் (பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை...) எனக்கு எல்.கே.ஜி, ஒண்ணாப்பு, மூன்றாம் வகுப்பு என மூன்று வருடங்கள் பாடம் எடுத்தவர் தான் எமிமா பால்துரை.

நான் ஆறாம் வகுப்பு வரை படித்தது கோவில்பட்டியிலுள்ள எஸ்.டி.ஏ பள்ளியில். அதில் திரு பால்துரை அவர்களும், திருமதி எமிமா பால்துரை அவர்களும் பல காலங்களாக வேலை பார்த்து வந்தனர். சிறு பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மூன்று நான்கு வகுப்புகளைக் கவனித்துக் கொள்வார். அப்படித்தான் திருமதி எமிமாவும் எனக்கு மூன்று ஆண்டுகள் பாடம் எடுத்தார். ஒரு நாளில் அப்பொழுதெல்லாம் ஒரு பத்து மணிநேரம் நான் அவர்களுடன் தான் இருப்பேன். பள்ளி ஆரம்பமாகும் முன்பே அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன் பள்ளி முடிந்து அவர்களுடனே அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவேன். என்னைத் தொல்லையாக நினைக்காமல் என்மேல் பாசம் வைத்த இரண்டாம் தாய் என்றே அவர்களைச் சொல்லலாம். நான் முதல் வகுப்பு படிக்கும் பொழுது அவர் பேறு கால விடுமுறையில் சென்றார். இரண்டு மாதங்கள் அதனால் அவர்கள் பள்ளி வரவில்லை. அப்பொழுதெல்லாம் அப்பாவுடன் வாரத்திற்கு மூன்று முறையேனும் அவர்களைப் பார்க்க சென்று விடுவேன். அவர்களுக்கு அது பத்தாவது மாதம். அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டார்கள். அந்த நாளும் வந்தது. என் அம்மாவும் அவர்களின் உதவிக்காக அன்று விடுமுறை எடுத்திருந்தார்கள். நானும் என் அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். சொன்னபடி அறுவை சிகிச்சையும்முடிந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எமிமா அழுததைப் பார்த்து நானும் மூன்று மணி நேரம் அழுதேன். விவரம் தெரியாத வயதில் நான் அழுதது இன்றளவும் எனக்கு ஞாபகமிருக்கிறது. மிக அருகில் நான் பார்த்த முதல் பிணம் அந்த குழந்தையினுடையது தான். ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் அன்று நான் அழுதது எமிமா மேடம் அழுதார்களே என்பதற்காக அல்ல. அந்த அழுகை எதனால் வந்தது என்பதும் எனக்கு இன்று வரை தெளிவாகவில்லை. விவரம் தெரியாத வயதில் அன்று அழுதது போல் விவரம் தெரிந்து என்றைக்குமே அப்படி அழுததாகவும் எனக்கு ஞாபகமில்லை.

எமிமா மேடத்தைப் பார்த்து கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் ஊருக்கு சென்று வந்த பொழுது எமிமா மேடம் எப்படியிருக்காங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன். திரு. பால்துரை சக்கரை வியாதியால் இறந்து விட்டதாகவும் எமிமா மேடம் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் அம்மா சொன்னார்கள். இப்பொழுது வேலூரில் இருப்பதாக கேள்வி. என்றேனும் மறுபடியும் அவர்களைப் பார்த்தால் கேட்க வேண்டும் "என்னைத் தெரிகிறதா மேடம் என்று?". ஒருவேளை அன்று திரும்பவும் அழலாம் அதே பழைய அழுகையை.

படம்: நன்றி கூகிள்

Monday, November 07, 2005

நான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)

என் வேலையை எவ்வளவு நேசிக்கிறேன் என எனக்கே தெரியாது. பூலோகத்திலேயே நான் அடைந்த சொர்க்கம் என் வேலைதான். "வாழ்க்கையில் உருப்படியா எதையாவது சாதித்தாயா?" என யாரேனும் கேட்டால் இன்றளவும் நான் சொல்லிக் கொள்வது, வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று தேடிக்கொண்ட வேலையைத்தான். அப்பொழுதெல்லாம் குரலில் ஒரு கம்பீரமும் மனதில் ஒரு கர்வமும் இருக்கும். என்னை மட்டுமல்ல என் பெற்றோர்கள் என் நண்பர்கள் என என்னைச் சார்ந்த எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயமாக இருப்பதனால் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சொல்லிக்கொள்ளத்தக்க மதிப்பீடு வேலையிலிருந்தே ஆரம்பமாகிறது. (SSLCஇல் முதலிடம் +2வில் முதலிடம் போன்ற கெளரவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பதால் அவை புறந்தள்ளப்பட்டுவிட்டன...). படிப்பு முடிக்கும் வரையில் ஒருவனின் மதிப்பீடு அவனது பெற்றோர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு முடிந்ததென்றால் அவன் ஒரு முழு மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். அப்பொழுது பிறரால் கவனிக்கப்படுகிறான். அதன்பின் அவனது வளர்ச்சி எல்லாமே பெற்றோர்களின் துணையின்றி அவனாகவே தேடிக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. இப்படியாக சமூதாயத்தின் நிலைப்பாடு இருக்க வேலை என்பதுதான் ஒருவன் தன்னை இந்த உலகுக்கு வெளிக்காட்ட எடுக்கும் முதல் ஆயுதம். அந்த ஆயுதம் மட்டும் குறி தவறாது தன் இலக்கினை அடைந்துவிட்டதெனில் சமூதாயத்தின் பார்வையில் அவன் வளர்ச்சிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. அவன் படிப்புக்கேற்ற வேலைதான் கிடைக்கிறதென்றாலும் வேலையை வைத்துதான் அவன் என்ன படித்தான் எப்படி படித்தான் என்பது கணிக்கப்படுகிறது. சுமாராக படித்தவன் நல்ல வேலையில் அமர்ந்தால், "விளையாடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான்பா" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். நன்றாக படித்தவன் வேலை கிடைக்காமல் அலைந்தால், "புத்தகத்தை மட்டும் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதற்கு மனரீதியான தகுதிகளும் முடிவெடுக்கும் திறனும் வேணும் அது அவன்கிட்ட இல்லப்பா" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். இப்படியாக மனிதன் அவன் செய்யும் வேலைகளின் மூலமே அவனுக்குண்டான முகவரியினை பெறுகிறான்.

சமீப காலங்களில் (ஒரு பத்து வருடங்களாக) "மென்பொருளாளன்" என்ற சொல்லிலேயே ஒரு மதிப்பும் திமிரும் இருப்பது தெரிகிறது. அதிக சம்பளம், வெள்ளைக் கழுத்துப்பட்டை (white collar) வேலை, நவீன தொழில்நுட்பங்கள், விரைவான தகவல் தொடர்பு என ஒரு மென்பொருள் வல்லுநன் அனுபவிக்கும் சந்தோஷங்களும் பெருமைகளும் அதிகம். இதனால் அவன் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது ஒன்றும் வியப்பிற்குரிய விஷயமல்ல. உலக வாழ்வில், தன்னை வாழ்க்கைக்கேற்ப வளைத்து வாழ்கிறவர்கள், வாழ்க்கையை தனக்கேற்றாற்போல் வளைத்துக்கொண்டு வாழ்பவர்கள் என இரு பிரிவினர் உண்டு. இதில் இரண்டாமானவர்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். சமூகத்தால் வெற்றி பெற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மென்பொருளாளன் இரண்டாம் பிரிவில் வருகிறான். அவன் தன் திட்ட மேலாளர் (project manager) முன்பு வேண்டுமானால் கூனிக் குறுகி நிற்கும் நிலை வரலாம் (அதுவும் மேலாளரின் இயல்பைப் பொறுத்தது) ஆனால் சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் அந்தஸ்தே வேறு. இந்த அந்தஸ்து வெறும் பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு பின்னால் அவனுடைய படிப்பறிவு, பெற்றோர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக்க அனுபவித்த கஷ்டங்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. இதில் பணமும் சேர்ந்து கொள்வதால் அவனது மதிப்பு சமூகம் என்னும் சந்தையில் உயர்ந்து விடுகிறது அவ்வளவுதான்.

சின்னக் குழந்தைகளிடம் பரவலாக கேட்க்கப்படும் ஒரு கேள்வி "நீ பெரியவனான பிறகு என்ன செய்யப் போகிறாய்?". சின்ன வயதில் இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது "நான் M.Tech படிக்கப் போகிறேன்." தெரிந்து சொன்னதோ தெரியாமல் சொன்னதோ இன்று நான் ஒரு தொழில்நுட்ப படிப்பு முடித்த ஒரு மென்பொருளாளன். நினைத்துப்பார்த்தால் பெருமிதம் பிடிபடுவதில்லை. இதில் "நாங்க சொன்னதத்தான் செய்வோம் செய்யறதத்தான் சொல்வோம்"னு தலைவர் பாணியில் வசனம் வேற. சந்தோஷத்தாலும் நினைத்ததை அடைந்து விட்டோம் என்ற திருப்தியிலும் தான் இப்படி சொல்கிறேனே ஒழிய மமதையில் அல்ல.

நண்பர் தேசிகன் தனது ஒரு வலைப்பூவில் மென்பொருளாளனின் அன்றாட வேலையைப் பற்றி ஒரு நகைச்சுவை பதிவெழுதியிருந்தார். நன்றாக இருந்தது. பெரும்பாலும் உண்மை பேசிய பதிவு. ஆனால் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் அவர் சொல்வது போன்ற "வேலைப்பளு" காணப்படுவதில்லை. வளர்ந்து வரும் சின்ன நிறுவனங்களில் உண்மையிலேயே வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கிறது. (நான் வளர்ந்து வரும் சின்ன நிறுவனமொன்றில் வேலை செய்கிறேன் என்பது உள்ளடக்கம்...அங்கங்கே விஷயத்தையும் சொல்லணுமில்ல...) அப்படி கஷ்டப்படுகிற சமயங்களில் தோன்றும் ஒரு கருத்து "ஒரு விவசாயி வெயிலில் கஷ்டப்படுகிறான் நாம் இங்கு நிழலில் கஷ்டப்படுகிறோம். ஆனால் அவனைக்காட்டிலும் ஒரு இருபது மடங்காவது அதிக பணம் பெறுகிறோம்... இது உண்மையிலேயே நியாயமான விஷயம் தானா?". விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.

ஒரு மென்பொருளாளனுக்கு கண்டிப்பாக தேவைக்கு அதிகமாக பணம் வருகிறது. ஓட்டு வீட்டில் இருப்பவன் மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மிதிவண்டியில் சென்று படித்தவன் நான்கு சக்கர வாகனங்களை வாங்குகிறான். இவை அனைத்தும் பணத்தால் பெறப்படும் வசதிகள். இதில் சந்தேகமின்றி ஒரு மென்பொருளாளன் வெற்றி பெறுகிறான். அதிலும் வெளிநாட்டில் சில காலம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பணத்தால் இவன் பெறும் விஷயங்கள் பிரமிக்கத்தக்க ஒன்று. ஆனாலும் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமும் இதில் உண்டு. மிதிவண்டியில் சென்றவன் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது மிதிவண்டியில் செல்பவர்களை மதிப்பதில்லை. மாளிகை வாசத்திற்கு வந்தவுடன் அவனுக்கு ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் ஏளனமாகிப்போகிறார்கள். மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். மனிதன் பழையவற்றை மறந்து விடுகிறான். (இது எல்லோருக்கும் பொருந்தாதென்றாலும் பெரும்பான்மை மென்பொருளாளர்களுக்கு பொருந்தும்). இதில் வாங்கும் பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு மென்பொருளாளனுக்கு கிடைக்கும் அத்தனையும் நியாயமானதுதானா? பணம், மதிப்பு, மரியாதை என சமுதாயத்தில் போற்றப்படும் அத்தனை நல்ல விஷயங்களும் எளிதாக கிடைப்பது சரிதானா? கண்டிப்பாக என்னைப் பொறுத்த வரையில் சரியே. மற்ற தொழிலைப் போல மென்பொருள் பெருக்கத்தில் ஊழலுக்கும் ஏமாற்றவதற்கும் வாய்ப்புகள் குறைவு (Ctrl + C & Ctrl + V வேலை எல்லாம் சரியான்னு கேட்காதீர்கள்....). அவன் ஈட்டும் பொருள் நியாயமான முறையில் அவனது உழைப்பால் வருவது. இதில் அநியாயம் என்ற வாதத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது. மற்ற தொழிலைக் காட்டிலும் அவனுக்கு வழங்கப்படும் பணம் அதிகமாக இருக்கிறது. இது தான் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சரிதானா என்பது அவரவர் கண்ணொட்டத்தைப் பொறுத்தது.

முன்பெல்லாம் ஆசைக்கொரு மகள் ஆஸ்திக்கொரு மகன் என்று சொல்வார்கள். மகள் திருமணமாகி சென்ற பிறகு மகனுக்கு தன் ஆஸ்தி அனைத்தையும் கொடுத்து விட்டு தன் கடைசி காலத்தை பெற்றோர்கள் அவனுடன் கழிப்பார்கள். இன்றைய தேதியில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. மகன் படிப்பு முடித்து வெளிநாடு வெளியூர் சென்று விடுகிறான். அவனைப் பெற்றவர்கள், வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு கட்டிய வீட்டை விட்டுவிட்டு வர முடியாமல் சொந்த ஊரிலேயே தங்கி விடுகிறார்கள். அதனால் மகளை சொந்த ஊரிலேயே திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது. இதில் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை மகனை ஆளாக்கிய திருப்தி அவர்களை பெருமையடையச் செய்கிறது. எனக்கும் அதுதான் சரியென்று படுகிறது. அதனால் நான் ஒரு மென்பொருளாளன் என்று சொல்வதில் எனக்கு பெருமையே.

எனது பயணம்

வைரமுத்து தன் தொகுப்பொன்றில் சொல்வார்

"நான் என்பது இலக்கணத்தில் ஒருமை நடைமுறையில் பன்மை. என்னைப் பொறுத்தவரையில் 'நான்' என்பது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம்".

முற்றிலும் உண்மை. 'நான்' அடிக்கடி நினைத்துப் பார்க்கக்கூடிய வரிகள். மனிதனுக்கு 'நான்' என்பவன் அகந்தையின் சொந்தக்காரன். படைப்பாளிக்கு 'நான்' என்பவன் படைப்புகளின் வழிகாட்டி. அந்த பாத்திரத்தை அவன் எந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை பொருத்தே படைப்பாளி போய்ச்சேரும் இடமும் தூரமும் வெளிப்படும். பாத்திரம் காலியாக காலியாக படைப்புகள் நிரம்புகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த எனது தமிழாசிரியை திருமதி.தமிழரசியை இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன். ஆனாலும் பொறியியல் படிப்பில் தமிழ் இன்னும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ஒரு பொறியாளனான கோ.கணேஷ் இன்றும் தமிழில் ஒரு சிலர் படிக்கும் வகையில் எழுதுகிறான் என்றால் அதற்கு வைரமுத்துவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கல்லூரி படிக்கும் பொழுதும் தமிழின் மேல் இருந்த ஈடுபாடு குறையாமல் இருந்ததற்கு அவரே காரணம். என்னுடைய நட்சத்திரப் பதிவை வைரமுத்துவை வைத்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து இங்கு எழுத வைத்த மதி அவர்களுக்கும் இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்லூரி படிக்கும் பொழுது எனது விரிவுரையாளர் ஒருவர் சொன்ன கருத்து இது, "மனிதனின் உண்மையான குணம் ஒருவன் அவனைப் புகழும் பொழுது அவன் சொல்லும் பதிலில் இருக்கிறது. அவனது அநேக குணாதிசயங்களை ஒரு புகழுரைக்கு அவன் சொல்லும் பதிலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். " என்னை யாராவது புகழ்ந்தால் நான் சொல்லும் முதல் பதில் "இந்த புகழுக்கு சொந்தக்காரங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கே இந்த பெருமை போய்ச்சேரட்டும்". எனக்கு தோன்றும் பதில் அது தான். தமிழ்மணத்திற்கும் இது பொறுந்தும். நான் ஒரு நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களே காரணம்.

சமூகம் என்னை எழுதுகிறது. அதில் சிலவற்றை நான் எழுதுகிறேன். இப்படி சொல்வதனாலும் எழுதுவதாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் புகழுக்கு என்னைச் சுற்றி உள்ளவர்களே காரணமென்றால் நான் செய்யும் தவறுகளுக்கும் என்னைச்சுற்றி உள்ளவர்களே காரணம்(போட்டாம்ல எல்லா பழியையும் உங்க மேல..). மொத்தத்தில் சமூகம் தன்னை எழுதவதற்கு என்னை ஒரு இடைநிலையாக வைத்திருக்கிறது அவ்வளவுதான்.

இப்படியெல்லாம் நம்ம முகமூடி சார் சொல்ற மாதிரி ஆழமா எழுதணும்னு ஆசை. ஆனா பாருங்க ஆழம்ணா என்ன என்று கேட்டால் அது ரொம்ப டீப்பம்மான்னு பாடற வரைக்கும் தான் என்னோட அறிவு அதுக்கும் மேல முயற்சி பண்ணினா இது ரொம்ப டூப்பம்ம்மன்னு கோரஸ் பாடிருவாங்க.

தெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நட்சத்திரமா தேர்ந்தெடுத்திட்டாங்க.. (எல்லோரும் இந்த டயலாக்கையே சொன்னா எப்படின்னு கேட்காதீங்க) அதனால முடிஞ்ச வரைக்கும் ஆழமாகவும் அழகாகவும் எழுத முயற்சி செய்கிறேன்.

Thursday, October 13, 2005

ராசிபலனும் நண்பனும்

எந்த பத்திரிகை வந்தாலும் ராசிபலன் பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்வது என்னுடைய தினசரி வழக்கம். பழக்கமென்னவோ கெட்ட பழக்கம் தான் ஆனாலும் அதன் மூலம் எனக்கு விவாதிப்பதற்கு நிறைய விஷயங்களும் சில நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். (யாரு நம்ம ஜோதிட மாமணி பார்த்தசாரதியான்னு கேட்காதீங்க..)

ராசிபலன் பார்ப்பது மூலம் கிடைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானவை. மிதுன ராசிக்கு இந்த வாரம் அலைச்சல்கள் அதிகம் அதனால் கற்பகாம்பாளை தினமும் வழிபட வேண்டும், இந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும், இந்த எண் உங்களுக்கு ராசியான எண் என்று குறிப்பிட்டிருப்பார்கள். ராசிபலனை அப்படியே பின்பற்றுபவராய் இருந்தால் தினமும் கற்பகாம்பாளை வழிபட கிளம்பி விடுவர். உண்மையில் அது தான் பெரிய அலைச்சலாக இருக்கும். இதையே கொஞ்சம் ஆராயும் நோக்குடன் பார்க்க ஆரம்பித்தால் கற்பகாம்பாளுக்கும் அலைச்சலுக்கும் என்ன சம்பந்தம் என்று விவாதிக்கலாம் (திட்டாதீங்க இதுவும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் போலத்தான்). சில சமயம் இது போல விவாதங்கள் பல நல்ல வரலாற்றுத் தகவல்களைத் தரும் அப்பொழுதெல்லாம் ஆச்சரியமாகவும் இருக்கும்.

ராசிபலம் பார்ப்பது மூலம் கிடைக்கும் நண்பர்கள் அதிகம். எனது பக்கத்து தெருக்காரர் ஒரு நியுமராலஜி பைத்தியம். அடிக்கடி பேசுவது கிடையாது. நான் ராசிபலன் பார்க்க ஆரம்பித்த பிறகு அவருடன் ஒரு நாள் நியுமராலஜி பற்றி விவரங்கள் கேட்டேன். அன்றிலிருந்து அவரும் நானும் அடிக்கடி சந்தித்து பேசுவதுண்டு. சில சமயம் நியுமராலஜி சில சமயம் உலக நடப்புகள் என எங்கள் பேச்சுக்கள் நீளும். நம்பர்களால் கிடைத்த நண்பர் அவர். இதே போல் மேலே சொன்ன ராசிபலன் பற்றிய விவாதங்களுக்கு நம்முடன் இருப்பவரும் நமக்கு நண்பர்களாகி விடுவர். இது போதாதென்று ராசிபலன் பார்க்காதே இதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை வெறும் மூடநம்பிக்கை என நமக்கு அறிவுறுத்தும் சில நல விரும்பிகளும் நமக்கு கிடைப்பர். மொத்தத்தில் ராசிபலன் மூலம் கிடைக்கும் விஷயங்களும் நண்பர்களும் அதிகம். எனது ராசிக்கு ஏற்ற பலனை நானே தீர்மானிப்பதில் எனக்கும் ஒரு சந்தோஷம். அதனாலேயே ராசிபலன் பார்க்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்.

சரி சரி விஷயத்துக்கு வருவோம். என்னைப் போல நண்பன் ஒருவனும் ராசிபலன் பைத்தியம். வார பலன், மாத பலன், பிறந்த நாள் பலன் இது போக தீபாவளி பலன் பொங்கல் பலன் என்று ஒவ்வொரு பலனையும் பார்த்து தான் எந்த புது முயற்சியையும் செய்வான். அநேகமாக அவனது முயற்சிகள் எண்பது சதவிகிதம் தோல்வியில் தான் முடியும். (பின்னே முயற்சி எதற்காக செய்கிறோம் அதற்கு என்ன பலன் என்று பார்க்காமல் ராசிபலன் பார்த்தால் காரியம் நடக்குமா?) அவனுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டால் பொறியியல் என்று சொல்லாமல் பதிமூணு வருஷமா சங்கீதம் படிக்கிறேன்னு தான் முதலில் சொல்வான்.

சமீப காலமாக அவனுக்கு சினிமாவில் பாட வேண்டும் என ஆசை. அடித்து பிடித்து யாரையோ சிபாரிசு பிடித்து, வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளரை அணுகியிருக்கிறான். அவரும் இவன் பாடலைக் கேட்டுவிட்டு சினிமாவில் பாடுமளவிற்கு உங்களுக்கு குரல்வளம் இல்லை இன்னும் நன்றாக பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். நண்பனுக்கு ஏமாற்றம். வீடு வந்தவுடன் செய்தித்தாளைப் புரட்டியிருக்கிறான். வழக்கம்போல ராசி பலனைப் படித்திருக்கிறான். "இன்று உங்கள் திறமை வீணாகும் தேவையில்லாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்" என வெளியாகியிருக்கிறது. நண்பனுக்கு உடனே அந்த இசையமைப்பாளரின் மேல் வெறுப்பு என்னிடம் வந்து அவரை சராமாரியாக வசைபாட ஆரம்பித்தான். ஏதேதோ சொல்லி நான் தான் அவனை சமாதானப் படுத்தினேன்.

இன்றும் சினிமாவில் பாட வேறு சிலரிடம் சிபாரிசுக்காகவும் அறிமுகத்திற்காகவும் அலைந்து கொண்டிருக்கிறான். முதலில் சந்தித்த இசையமைப்பாளர் சொன்ன பிரத்யேக பயிற்சியை மட்டும் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை. விஷயம் அவனுக்கு இன்னும் பிடிபடவில்லை. அந்த பயிற்சியை ஆரம்பிக்காதவரை அப்படி இப்படி சிபாரிசு பிடித்து வேறு இசையமைப்பாளரைப் பிடித்தாலும் அவனது அன்றைய ராசிபலன் "திறமை வீணாகும்" என்றே சொல்லப் போகிறது.

சரி இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடலாம் என்று என்றைக்கெல்லாம் நினைக்கிறேனோ அன்றைக்கெல்லாம் என் ராசிபலனில் "வீண் பேச்சு" என்றிருக்கிறது:-)

Friday, October 07, 2005

ஒரு புதிர் சூடோகு

சூடோகு பத்தி நிறையவே எழுதியாச்சு. அதனால நான் எழுதப் போறதில்லை.

இந்து பேப்பரில் வந்த ஒரு "HARD" சூடோகுக்கு விடை தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.

கொடுக்கப்பட்ட சூடோகு


நான் முயன்று பார்த்ததில் சில கட்டங்களை நிறப்பினேன். ஒரு சமயத்தில் கீழே உள்ளது போல சூடோகு மாறியது. அதற்கு பிறகு என்னால் எந்த கட்டத்தையும் நிரப்ப முடியவில்லை. நீங்கள் முயன்று பாருங்கள். ஏதேனும் கட்டத்தை நிறப்பினால் எப்படி நிறப்பினீர்கள் என்று சொல்லுங்கள்.

Monday, October 03, 2005

அன்பே சிவம் vs நந்தா - யார் சிறந்த கடவுள்?

தமிழ்மணத்திற்கு வருவதற்கு முன்பு நான் எழுதிய பதிவு. எனக்கு மிகவும் பிடித்த பதிவாகையில் இன்று மறுபதிப்பு செய்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவும் வேறுபட்ட பல நல்ல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கடவுளைப் பற்றிய அதன் முயற்சிகளையும் ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது. கடவுள் என்று சொன்னதுமே நமக்கு முதலில் ஞாபகம் வரும் இயக்குனர் வேலுபிரபாகரன் தான். தமது ஒவ்வொரு முயற்சிகளிலும் கடவுளைச் சீண்டவேண்டும் என்பதே இவரது குறிக்கோள். ஆனால் இவரது படைப்புகள் அனைத்துமே பெரிதாக பேசும்படியாக இருந்ததில்லை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதில் பக்தி படங்களைத் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம் முதலாக இன்றைய பாளையத்து அம்மன் வரை) தவிர்த்து கடவுள் பற்றிய கோட்பாடுகள் அடங்கியவை மிகச்சொற்பமே. இன்றைய தேதியில் மக்களின் இறையுணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய படங்கள் மிக அரிதாகத்தான் தென்படுகின்றன. குறும்படங்கள் சில அவ்வப்போது வெளிவந்தாலும் வெகுஜன திரைப்படங்களில் அந்த முயற்சி குறைவே. மிகுந்த கவனத்துடனும் சாமர்த்தியமாகவும் கையாளப்பட வேண்டிய கருவாதலால் இயக்குனர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள் போலும்.

இருந்தாலும் தமிழர்கள் தைரியசாலிகள் என்பது திரைத்துறைக்கு மட்டும் பொருந்தாதா என்ன? கடவுளைப் பற்றி அற்புதமான இரண்டு திரைப்படங்களை மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். இரண்டுமே சமீப காலங்களில் வெளிவந்தவை. முதலாவது அன்பே சிவம் இரண்டாவது நந்தா. நந்தாவில் வெளிப்படையாக ஒரிரு காட்சிகளில் தான் கடவுளின் தன்மைகளை இயக்குனர் சொல்லியிருப்பார். இருந்தாலும் நந்தா என்றொரு முழுத்தொகுப்பையும் எடுத்துக்கொண்டால் அது முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த படைப்பாகத் தான் தெரிகிறது. அன்பே சிவத்தைப் பற்றி சொல்லவேண்டியதில்லை (மன்னிக்கவும் எழுதவேண்டியதில்லை), வெளிப்படையாகவே மிகுந்த சொல்வளத்துடன் வெளிவந்த படைப்பு.

கில்லி, சாமி போன்ற திரை மசாலாக்களை விடவும், நினைவேடு, (ஆட்டோ கிராஃப்) காதல் போன்ற உணர்ச்சிக் குவியல்களை விடவும் என்னை அதிகமாக பாதித்தது அன்பே சிவமும் நந்தாவும் தான். "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அது தான் கடவுள்" என்ற நல்லாவின் (கமலின்) யதார்த்தமாகட்டும், "அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்செழுகிற ஒவ்வொருத்தனும் சாமி தாண்டா, இதுக்குன்னு (மேலேயிருந்து) வருமா?" என்ற ஐயாவின் (ராஜ்கிரணின்) கொதிப்பாகட்டும், கண்டிப்பாக தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மொழிகள்.

நல்லாவும் நந்தாவும், கடவுள் என்பவன் மனிதனிடமும் இருக்கிறான் என்பதனை வலியுறுத்தினாலும் தத்தமது செயல்பாடுகளால் முற்றிலும் முரணானவர்கள். நல்லா, அன்பிலும் அரவணைப்பிலும் கடவுளைக் காட்டியவன். நந்தா, அக்கிரமங்களை அழிப்பதில் கடவுளைக் காட்டியவன். எனக்குள் ஒரு வினா, இவர்களில் யாரைப் (எந்தக் கடவுளைப்) பின்பற்றலாம்? நல்லாக்கள் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள், உதாரணத்திற்கு காந்தியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறை இந்தக்காலத்திற்கு ஏற்றதாக எனக்கு தோன்றவில்லை. (மன்னிக்கவும் இது எனது அபிப்பிராயம்). நந்தாவிற்கு இணையாக எனக்கொரு உதாரணப் புருஷன் கிடைக்கவில்லை. நந்தாவின் செயல்பாடுகள் ஒருவருக்கு நல்லதாகப் பட்டாலும், பாதிக்கப் படும் நபரின் கண்ணோட்டத்தில் தவறாகத் தோன்றலாம். இருந்தும் இன்றையத் தேதியில் நல்லாவைக் காட்டிலும் நந்தாதான் ஒரு சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்பது என் (இந்தக் கடவுளின்) கருத்தாக இருக்கிறது. நீங்கள் (சக கடவுள்கள்) என்ன சொல்கிறீர்கள்?

Tuesday, September 27, 2005

குறுகிய வட்டம்

எனக்கு தெரிந்து அதிகாரப்பூர்வமாக தமிழ்மணத்தில் நடந்த மீமீ ஒன்று தான். அது புத்தகங்கள் பற்றிய மீமீ. ஆனால் சமுதாய பிரச்சனைகள் தலை தூக்கும் பொழுது ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டதில் அந்த பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து ஆய்வறிக்கை சமர்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதில் சிலருக்கிடையில் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பில் போய் முடிகிறது. பதிவுகள், அவற்றின் எதிர் பதிவுகள் என இது ஒரு மெகா சீரியல் போல நீண்டு கொண்டே போகிறது.

இதில் சாதி, மதம் தொடங்கி சானியா குஷ்பு வரை அடக்கம். ஏனோ எனக்கு இந்த மாதிரியான பதிவுகள் பிடிக்காமலே போய் விடுகின்றன. கற்பென்பது என்ன என்பது பற்றி கடந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகள் மட்டுமே ஒரு ஐம்பதை தொட்டிருக்கும் என நினைக்கிறேன். அதே போல் கடந்த வாரம் சானியா வாரம். சென்ற மாதம் தங்கர்பச்சன் மாதம் என சன் தொலைக்காட்சி போல இந்த சிறப்புகளும் நீண்டு கொண்டே போகின்றன. சமுதாய பிரச்சனைகள் அலசப் பட வேண்டியனவே. ஆனால் அதற்காக அவரவர்க்கு இருக்கும் தனித்தன்மையை தவிர்த்து விட்டு பதிவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமுதாய பிரச்சனைகள் எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றனவோ அப்பொழுதெல்லாம் எல்லோருமே கிட்ட தட்ட ஒரே மாதிரியான விஷயத்தை திரும்ப திரும்ப எழுதுவது பொல தோன்றுகிறது. இப்படியே வாரம் ஒரு பிரச்சனை தொடருமாயின் தமிழ்மணத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒவ்வொரு வாசகர் வட்டம் இருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு வலைஞர் ஒரு பிரச்சனையைப்பற்றி ஒரு பதிவு போட்டாரென்றால் அவருடைய வாசகர் வட்டம் அந்த பதிவில் பின்னூட்டுவதன் மூலம் அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். அதை விட்டு ஒவ்வொருவரும் ஒரு தனி பதிவு போட முயல்வது வாசகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.

கருத்துக்கள் விரிவானதாக இருப்பினும் சிதறி விடுவதால் அவை எல்லோருக்கும் சென்று சேரவில்லையோ என தோன்றுகிறது. ஒவ்வொருவரின் நடையும் கருத்தும் மாறுபடுமாயினும் பின்னூட்டம் மூலமே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வலைப்பூவின் நோக்கமாம் தகவல் சேமிப்புக்கும் உதவும்.

கருத்துக்களைச் சொல்லும் எழுத்துக்கள் மட்டும் குறுகிய வட்டத்தில் இருக்கலாமோ?

(இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறிருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.)

Sunday, September 18, 2005

வடக்கு vs தெற்கு

ஏற்கனவே இந்த வடஇந்தியன் vs தென்னிந்தியன் பற்றி எனது திகார் சிறை பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நேற்று "த வீக்" செப் 4 இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதன் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் தாக்கம். ஒரு ஐந்தாறு பக்கங்களுக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு பத்திரிக்கை என்பது நல்லது கெட்டதை எடுத்துக்கூற வேண்டுமேயொழிய அதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது. தென்னிந்தியன் வட இந்தியன் என்னும் பாகுபாடு பொதுவாக மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் இது ஒரு தவறான கருத்து. இதனைச் சாடாமல் இவற்றில் எது இப்பொழுது பெரிதும் விரும்பப்படுகிறது எனபது பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை தேவையேயில்லை.

அந்த கட்டுரை பல அபத்தமான விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது. தென்னிந்தியா பெரிதும் மக்களால் விரும்பப்படுகிறது என்பது தான் அந்த கட்டுரையின் சாராம்சம். இதற்கு சாம்பாரில்லிருந்து சானியாவரை ஆதாரம் சேகரித்திருக்கின்றனர். Latest south indian sensation என சானியாவையும், உலக புகழ் பெற்ற பெரும்புள்ளி என ஏ.ஆர்.ரகுமானையும் விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். இதற்கு ரகுமான் வேறு தனியாக பேட்டியளித்துள்ளார்.

தென்னிந்தியாவிலிருந்து வரும் அரசியல்வாதிகளின் ஊழல் குறைவாக இருக்கிறதாம். வட இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் அதிகமாக இருக்கிறதாம். தென்னிந்தியர்கள் வட இந்தியாவிற்கு வந்தால் மொழிப்பிரச்சனை அதிகமாக இருப்பது கிடையாதாம். வட இந்தியர்கள் தென்னிந்தியாவில் பெரிதும் மொழிப்பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களாம். இப்படியாக செல்கிறது அந்தக் கட்டுரை.

விளையாட்டிலிருந்து விளைநிலம் வரை அனைத்திற்கும் தென்னிந்தியாவிற்கு வக்காலத்து வாங்கி அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விளையாட்டு என்பதற்கு அஞ்சு ஜார்ஜையும், சானியா மிர்ஸாவையும் உதாரணம் காட்டியிருக்கின்றனர். அஞ்சு ஜார்ஜ்ஜும், பி.டி.உஷாவிற்கு பிறகு தென்னிந்தியாவில் விளையாட்டு என்பது வாழ்க்கைத் தொழிலாகவே மாறியிருப்பதாக கூறியிருக்கிறார்.

அரசியல்வாதிகளில் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்திருக்கிறார். தொழில்நுட்பத்தில் விப்ரோ நிறைய பேரால் விரும்பப்படுவதாக எழுதியிருக்கின்றனர். சென்னையைக்காட்டிலும் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் குடியேற மக்கள் அதிகமாக விரும்புவதாக எழுதியிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குடியேறியிருக்கும் வட இந்தியர்கள் பெரிதும் தென்னிந்தியாவில் இருக்கவே ஆசைப்படுவதாக ஒரு புள்ளி விவரம் வேறு.

தென்னிந்தியாவிலிருந்து தான் ஒரு ஆண்டில் அதிக திரைப்படங்கள் வெளிவருகின்றனவாம். வர்த்தக ரீதியாக வெற்றியும் பெருகின்றனவாம். ஆட்டோகிராஃப் திரைப்படம் page3யை விடவும் பரினீத்தாவை விடவும் சிறந்த படமென்று மற்றொரு பிரமுகர் பேட்டியளித்திருக்கிறார். சாம்பார் தென்னிந்தயர்கள் மட்டுமில்லாமல் வடஇந்தியர்களுக்கும் பிடித்த உணவாக இருக்கிறதாம்.

மொத்தத்தில் சாம்பாரை உதாரணம் காட்டி இந்திய ஒற்றுமையை சாம்பலாக்கியிருக்கிறார்கள்.

இந்திய பிரதமராக மன்மோகன் சிங்கும், குடியரசு தலைவராக அப்துல் கலாமும் தேச பெருமையை மொழி, மத, பிராந்திய வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு நிலை நாட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தி வீக் போன்ற நல்ல பத்திரிக்கைகள் இது போன்றதொரு கட்டுரையை வெளியிட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

Thursday, September 15, 2005

சொந்த ஊர்

பொதுவாக புதிதாக ஒருவரைப் பார்த்தால் கேட்கப்படும் கேள்வி "உங்க சொந்த ஊர் எது?". பிறந்தது ஒரு ஊராகவும் வாழ்வது ஒரு ஊராகவும் இருக்கும் பச்சத்தில் பிறந்த ஊரையே எல்லோரும் சொந்த ஊராக சொல்வார்கள். நான் பிறந்தது காஞ்சிபுரத்தில். வளர்ந்தது படித்தது (படித்து வளர்ந்தது) எல்லாமே கோவில்பட்டியில். காஞ்சிபுரத்திற்கு நான் இதுவரை ஒரு இரண்டு முறை தான் சென்றிருப்பேன் யாராவது சொந்த ஊரில் என்ன சிறப்பென்று கேட்டால் கூட முழிக்க வேண்டியது வரும். (சும்மாங்காட்டியும் பதிலளிக்கணும்னு சொல்லி காஞ்சி மடத்தையும் அண்ணா பிறந்த ஊர் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டேன்) எனக்கு பிறந்த ஊரைச் சொந்த ஊராக சொல்வதில் இப்பொழுதெல்லாம் உடன்பாடில்லை (சத்தியமா ஜெயேந்திரர் விவகாரம் இல்லைங்க). எதுக்கு தெரியாத ஊரைப் பற்றி தெரிந்த மாதிரி சொல்லணும்னுதான்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

நேற்று என்னுடன் வசிக்கும் நண்பரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அவ்வப்போது எல்லையைத் தாண்டி, ஒரு வரை முறை இல்லாமல் கிண்டலடிப்பது வழக்கம். அப்பொழுதெல்லாம் திட்டு வாங்கிக்கொண்டு இங்கொன்றும் அங்கொன்றுமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வோம். நாங்கள் இப்பொழுது தங்கி இருக்கும் வீடு ரொம்ப பெரியது. வீட்டில் ஆறு பேர் வசிக்கிறோம். வித்தியாசமான ரசனைகள் வித்தியாசமான அனுகுமுறைகள் என ஒவ்வொருவரின் நடவடிக்கையும் பகிர்தலுக்கும் புரிதலுக்கும் வழி வகுக்கின்றன. எல்லாவற்றையும் மீறி ஒரு பாசமும் பரிவும் எப்பொழுதுமே எங்களிடம் இருக்கும். அனைவருமே கோவில்பட்டியில் இருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் கள்ளூரி படிப்பை முடித்தவர்கள். (பாசம் இருக்காதா பின்னே) நான் கொஞ்சம் சமர்த்து எல்லாமே நல்ல பழக்கங்கள் தான் (அட மெய்யாலுமே நல்ல பழக்கங்கள் தான்). அதனாலேயே எல்லோரும் என்னை அடிக்கடி "பழம்" என்று விளிப்பதுண்டு.

நேற்று அரட்டைக் கச்சேரியில் சொந்த ஊர் பற்றிய விவாதம் எழுந்தது. என்னுடன் வசிக்கும் இரண்டு பேருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. என்னையும் சேர்த்து இரண்டு பேர் கோவில்பட்டி வாசிகள். ஒருவருக்கு தூத்துக்குடி. மற்றொருவருக்கு மதுரைப் பக்கம் ஒரு குக்கிராமம். நேற்றைய கிண்டலுக்கு மாட்டியவர் கிராமத்துக்காரர். ஏதோ பேசிக்கொண்டிருக்க தற்செயலாக "எங்க ஊர் ஒரு பெரிய கிராமம்" என்றார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே தூத்துக்குடிக்காரர் (குடிக்காரர் குடிகாரரும் கூட) "அதெப்போப்பா கிராமம் ஊரா மாறியது? அதென்ன சின்ன கிராமம் பெரிய கிராமம்? ஆட்களைப் பொருத்து சொல்றியா இல்லை வசதி வாய்ப்புகளை பொருத்து சொல்றியா?"ன்னு கேட்டார். மதுரைக்காரருக்கு வந்தது கோபம். உடனே "எங்க ஊரில் ஐசிஐசிஐ ஏடிஎம் செண்டரெல்லாம் இருக்கு தெரியுமா?"ன்னார்.

உண்மையில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த கிராமத்தை கண்டுகொண்ட ஐசிஐசிஐக்காரர்களுக்கு கோவில்பட்டி இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். கோவில்பட்டியில் ஐசிஐசிஐ பேங்கும் கிடையாது ஏடிஎம் செண்டரும் கிடையாது. மிகுந்த வருத்தமாயிருந்தது இருந்தாலும் சபையில் காட்டிக்கொண்டால் அடுத்த குறி நம்மீதுதான் வைக்கப்படும் என்று கொஞ்சம் இயல்பாக இருப்பது போல நடித்தேன். உடன் இன்னொரு கோவில்பட்டிக்காரர் இருப்பதால் கொஞ்சம் வசதி. மாட்டினால் இருவருமாகத்தான் மாட்டுவோம்.

"எங்க ஊரில் ஐசிஐசிஐ ஏடிஎம் செண்டரெல்லாம் இருக்கு தெரியுமா?"ன்னு மதுரைக்காரர் கேட்டதுமே நம்ம குடிக்காரருக்கு கொஞ்சம் பின்னடைவு. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு "அது தானே உங்க ஊர் டூரிஸ்ட் ஸ்பாட்?" என்றார். கேட்ட விதத்தில் எல்லோரும் சிரித்து விட்டோம். மதுரைக்காரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனா கொஞ்சம் நேரம் யோசித்தவர் ஒரு கேள்வி கேட்டார். "இப்போ உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க. டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு கூட்டிட்டு போகறீங்க. பிரசவ நேரமென்பதால் விமானம் மூலமாக போறீங்க. அப்போ விமான பிரயாணத்திலேயே அவங்களுக்கு குழந்தை பிறந்ததுன்னு வச்சுக்கோங்க அந்த குழந்தைக்கு சொந்த ஊர் எது?"

உடனே வெவ்வேறு பதில்கள். திருநெல்வேலிக்காரர் "அப்போ எந்த ஊருக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்ததோ அந்த ஊருதான் சொந்த ஊர்" என்று சொன்னார். மதுரைக்காரருக்கு ஒரு இண்டலிஜெண்ட் கேள்வி கேட்டதாக தோன்றியிருக்க வேண்டும். கொஞ்சம் சிரித்தார். உடனே நான் "அப்போ கடலுக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்தா சொந்த ஊருன்னு எதைச் சொல்லுவீங்க?"ன்னு கேட்டேன். (எப்படி நம்ம சாமர்த்தியம்) எல்லோருமே இப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்க. இதான் சமயம்னு நான் கேட்டேன் "அப்போ பிறந்த ஊர் சொந்த ஊர் கிடையாது. விவரமாக நம்மை வளர்த்த ஊர் எதுவோ எந்த ஊரில் நம்மை மறக்காத மக்கள் நிறைய பேர் இருக்கிறாங்களோ அதுதான் நம்ம சொந்த ஊர். அப்படித்தானே?" கேட்டு விட்டு காலரைத் தூக்கிக்கொண்டேன். அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

சரி உங்க கருத்தையும் நீங்க சொல்லுங்க. (கூடவே உங்க சொந்த ஊர் என்ன என்பதையும் சொல்லிட்டுப் போங்க)

***************

பதிவுடன் ஒரு துணுக்கு எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் ஒரு உண்மை சம்பவத்தையே துணுக்காக சொல்லலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.

ஒரு முறை உடன் வசிக்கும் கோவில்பட்டிக்காரரும் மதுரைக்காரரும் தாஜ்மகால் சென்றிருந்தார்கள். (நாங்கள் வசிப்பது டெல்லியில்) ரயில் பிரயாணத்தில் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அதே கம்பார்ட்மெண்ட்டில் இருந்த ஒரு மலையாளி இவர்களுடன் பேசியிருக்கிறார். இருவரிடமும் சொந்த ஊர் என்ன என்று கேட்டிருக்கிறார்.

"கோவில்பட்டி !!" என்று கோவில்பட்டிக்காரர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த மலையாளியும் "நான் கோவில்பட்டிக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். லக்ஷ்மி மில்ஸ் விஷயமாக வந்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.

மதுரைக்காரரிடமும் அதே கேள்வியைக் கேட்க அவரும் "மதுரை!!" என்று பதிலளித்திருக்கிறார்.

அதற்கு அந்த மலையாளி "மதுரைன்னா கோவில்பட்டிக்குப் பக்கத்தில் தானே இருக்கு?" என்று திருப்பி கேட்டிருக்கிறார்.

(படிச்சிட்டு மதுரைக்காரங்க அடிக்க வராதீங்க இது உண்மைச் சம்பவம். இதிலிருக்கும் நையாண்டி கருதி தான் துணுக்காக இதனைப் பதிவிடுகிறேன்:-))

Wednesday, September 14, 2005

காதல்

இதே போல ஒரு கவிதையை (அநேகமாக மீனாக்ஸ் என்று நினைக்கிறேன்) எழுதியிருந்தார். படித்த நியாபகம் இருக்கிறது. இருந்தாலும் இது என்னுடையது:-) படிச்சிட்டு யாரும் அடிக்க வராதீங்க..

அநியாயத்திற்கு பெண்கள்
அழகாய் பிறக்கிறார்கள்
பிரம்மனின் இடஒதுக்கீடு
100% பெண்களுக்குத்தான்
அழகில் மட்டும்

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
வளர்ந்தும் விடுகிறார்கள்
பருவம் வந்து பள்ளியும்
செல்கிறார்கள்

இதில் சில
கட்டப் பாவாடை
கண்மணிகளுக்கு
காளையர்கள் தெரிகிறார்கள்
ஓரக்கண்ணில் மட்டும்

காரை வீட்டுப் பெண் மனசை,
தெரிந்தோ தெரியாமலோ
ஏழை புள்ளையாண்டன்
தான் களவாடுகிறான்
சத்தமில்லாமல்

சில ஸ்கூட்டிகள்
ஹாரனால் மட்டுமே
இயங்க ஆரம்பிக்கின்றன
பெட்ரோலை விலை
பேசிவிட்டு

சைக்கிள் மணியும்
ஸ்கூட்டியின் ஹாரனும்
சில நாட்களில் நின்று
போய்விடுகின்றன
ஏதோ ஒரு மரத்தடியில்

என்றும் போகாதவன்
இன்று போகிறான்
மளிகைக் கடைக்கு
வழியில் தெய்வத்தின்
ஜன்னல் தரிசனமாம்

ஆண்டவன் இவர்களுக்கு
மட்டுமில்லாமல் அவள்
தகப்பனுக்கும் அருள்
பாலித்துவிடுகிறான்
தெரிந்து விடுகிறது

கண்டிப்பு அடி உதை
வீட்டுச்சிறை வெளியுலக
தடைச்சட்டம்...
வித்தியாசப்படுகிறது
அன்றாட வாழ்க்கை

சில நாட்களில்
வீட்டிற்கு கட்டுப்பட்டவள்
கழுத்தை நீட்டுகிறாள்
வீட்டிற்கு கட்டுப்படாதவள்
கம்பி நீட்டுகிறாள்

கம்பி நீட்டினாலும் தேடி
இழுத்து வருகிறார்கள்
முதலாமவனும் அவன் முடிச்சுக்களும்
அவிழ்க்கப்படுகின்றன
அவள் சம்மதமில்லாமல்

மஞ்சள் தாலி மறுபடி
கட்டப்படுகிறது
வேறொருவன் கையால்
இவள் கழுத்துக்கும் கணக்கிற்க்கும்
ஆறாவது முடிச்சாக

இப்படியாக முடிக்கப்படுகிறது
"முருகன்"களின்
கனவுகளூம் வாழ்க்கையும்
"ஐஸ்வர்யா"க்களால்
"காதல்" காவியமாக

Tuesday, September 13, 2005

பிரச்சனைகள்

ரம்யா அவர்கள் பதிவையும் பத்மா அரவிந்த் அவர்களின் பதிவையும் படித்த பிறகு பெண்களின் அன்றாட பிரச்சனைகளைப் பற்றி ஒரு பதிவெழுத வேண்டும் என்பது ஆவலாக இருக்கிறது(சத்தியமா நான் சேடிஸ்ட் இல்லைங்க..). எழுதலாம் என்று நினைத்தால் எழுதும் அளவிற்கு எந்த பிரச்சனையையும் நான் மனதிலிருத்தியிருக்கவில்லை (தனக்கு வந்தாதானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும்). ரம்யா அவர்களின் நிஜ பூதங்கள் பதிவைப் படித்த பிறகு வெளியுலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை, அதுவும் பெண்களுடன் பழக கிடைக்கும் நிகழ்வுகளை சேமிக்கலானேன். ஒவ்வொரு பிரச்சனையையும் அதை அவர்கள் கையாளும் விதமும் அநேக விஷயங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.

அலுவலக கோப்பு வாங்குவது போல் கையை உரசும் மேலதிகாரி, ஏடிஎம் சென்டரில் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல நினைக்கும் இந்திய குடிமகன், தொலைபேசி பில்லிற்கு வைத்திருந்த பணத்தைத் திருடிச் செல்லும் திருடன், மேல்மாடியிலிருந்து நோட்டம் விடும் இந்திய நாட்டின் நாளைய தலைமுறை, முதுகு சொறிந்தால் முகம் சுழிக்கும் சக ஊழியர் என ஒரு நான்கு நாட்களிலேயே தெளிவாக தெரிந்து விட்டது பெண்களின் பாடு. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆண்களால் வரும் பிரச்சனைகள். இவற்றைத் தவிர்த்து பெண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளும் பல.

கையை உரசும் மேலதிகாரிக்கு காலில் மிதி !! கூடவே "நீங்களும் இனிமே இங்க தான் வேலை பார்க்கணும் நானும் இங்க தான் வேலை பார்க்கணும் அதை தெரிஞ்சு நடந்துக்கோங்க" என்ற எச்சிரிக்கை மொழி, இந்திய குடிமகனிடம் "முதல்ல நிற்கப் பழகுங்க சார் அப்புறம் முன்னாடி போகறதப் பத்தி யோசிக்கலாம்" என்ற நையாண்டி என பெண்களின் சாமர்த்தியம் வெளிப்பட்டாலும் சில சமயங்களில் அவர்களுக்கு இயலாமையே மிஞ்சுகின்றன.
பணத்தைத் திருடிவிட்டு ஓடும் திருடனை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. முதுகு சொறிந்தால் முகம் சுழிக்கும் சக ஊழியரைக் கண்டால் ஒதுங்கிப் போனாலும் அவரிடம் மட்டுமே கிடைக்கும் அலுவலகக் குறிப்புகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கும் இவர்கள் ஆளாகிறார்கள். இந்திய நாட்டின் நாளையத் தலைமுறையை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை கண்டித்தாலோ முறைத்தாலோ அது "நாயை அடிப்பானேன்....... சுமப்பானேன்" கதை தான்.

இந்த பிரச்சனைகள் போதாதென்று மனரீதியானப் பிரச்சனைகளும் பல. அவற்றை அவர்களைத் தவிர வேறு எவராலும் இயல்பாக எடுத்துக்கூற முடியாது.

மதுரமல்லி என்பவர் இரு மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சனைகளை மிக நேர்த்தியாக அதே சமயம் படு ஆக்ரோஷமாக வலைப்பதிவில் எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தார். ஏனோ இப்பொழுது அவர் அதிகமாக பதிவிடுவதில்லை. கறுப்பியும் முன்பு அடிக்கடி பெண்ணாய்ப் பிறந்ததால் அதிகப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பார். அவரது படைப்புகளையும் இப்பொழுது அலுவலக வேலைத் தின்று விட்டது. இப்படியாக நிறைய எழுத்தாளர்கள் வெளிவந்தாலும் ஏனோ இவர்களால் தொடர முடிவதில்லை.

எதிர்பார்க்கிறேன் துளசி, தாணு, உஷா, மதுமிதா, விழி, கலை (யார் பெயரையாவது விட்டிருந்தேனா மன்னிச்சுக்கோங்க!!!) போன்ற பெண் எழுத்தாளர்கள் தொடர வேண்டுமென்று.

Thursday, September 08, 2005

பிள்ளையார் அருள் பாலித்தார் !!

நேற்று பிள்ளையார் சதுர்த்தி!! கோவில்பட்டியில் இருந்தவரை சும்மா வருடா வருடம் கொழுக்கட்டையை முழுசு முழுசா முழுங்குவேன். எப்படியானாலும் ஒரு பதினைந்து கொழுக்கட்டைகளாவது உள்ளே போவது உறுதி. பாருங்க வேலை கிடைச்சாலும் கிடைச்சது கொழுக்கட்டைக்கும் துண்டு விழுந்து போச்சு. போன வருஷம் வரைக்கும் ஏதோ நான் சாப்பிடுகின்ற மெஸ்ஸிலிருந்து கொழுக்கட்டைகள் கிடைத்து வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் அந்த மெஸ் உரிமையாளரும் தமிழ்நாட்டுக்கு சொந்த ஊருக்கு குடிபெயர்ந்து விட்டார். அதனால் இந்த வருஷம் கொழுக்கட்டை கிடைக்காதென்பது கிட்டதட்ட போன வாரமே தெரிஞ்சு போச்சு. சரி அம்மாகிட்ட ஃபோன்ல கேட்டு செஞ்சுரலாம்னு நினைச்சா அம்மா அது ரொம்ப கஷ்டம் உன்னால முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற என்ன செய்ய தமிழ்க் கோயிலா போய் உண்டகட்டி வாங்கித் திங்க வேண்டியதுன்னு நினைச்சேன். ஞாயிற்றுக் கிழமை மலை மந்திர் போன சமயம் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை உண்டா என்று நிர்வாகியிடம் கேட்டேன். கோயில் நிர்வாகியும் என்னுடைய ஏக்கத்தை புரிந்தவராய் அன்பாய் இல்லையென்று சொல்லி விட்டார் :-(.

சரி இந்த வருஷம் கொழுக்கட்டைக்கு அல்வா தான்னு நினைச்சுக்கிட்டேன். நல்ல நாள் அதுவுமா கோயிலுக்கு போறது வழக்கம். கொழுக்கட்டை கிடைக்கலேயேன்னு வருத்தமிருந்தாலும் பிள்ளையார்கிட்ட கோபிச்சுக்கிறது முறையில்லையே அதனால நேத்தும் மலை மந்திர் போனேன். என் கூட வருத்தப்படறதுக்கு ஒரு நண்பனையும் கூட்டிகிட்டு போனேன்!!. எல்லா சன்னதிக்கும் போய்விட்டு திரும்பும் பொழுது கோயில் வாசலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தயிர்சாதம் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏன் விடுவானேன்னு நானும் என் நண்பனும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கினோம். என் நண்பன் கொழுக்கட்டை சாப்பிடலையேன்னு திருப்பி புலம்ப ஆரம்பித்தான். அதைக் கேட்டு எங்கள் முன் நின்று அம்மாள் சிரித்தார். பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை பின்னாடி திரும்பி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் என் நண்பரிடம் பேசலானார். எனக்கு ஒரே ஆச்சர்யம் என்னடா இது என்னைக்கு இல்லாத திருநாளா இன்னைக்கு ஒருத்தர் நம் புலம்பலைக் கேட்டு ஏளனம் செய்யாமல் நம்மிடம் சிரித்து பேசுகிறாரே என்று. விசாரித்ததில் என் நண்பனின் சொந்த ஊரில் (சென்னை பக்கம் ஏதோ கிராமம்) அவர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் அந்த அம்மாள் (முன்பு அக்கா) வசித்து வந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு டெல்லிக்கு குடியேறியிருக்கிறார்.

பக்கத்து வீட்டு அக்காவிற்கு நல்லவேளையாக டெல்லியிலும் கோயிலுக்கு பக்கத்திலேயே வீடிருந்தது. பிறகென்ன அவர் வீட்டிற்கு போய் கொழுக்கட்டையாக முழுங்கினோம். அப்போ மணி இரவு 7.30லிருந்து 8.00 க்குள் இருக்கும். பிள்ளையார், பிள்ளையார் சதுர்த்தி அதுவுமாக எங்களை கொழுக்கட்டைக்காக இவ்வளவு நேரம் தவிக்க விட்டிருக்கக்கூடாது.

முடிவு செய்து கொண்டேன் அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குள் கொழுக்கட்டை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். உதவுபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு :-)

Monday, September 05, 2005

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

நெற்று டெல்லியிலிருக்கும் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். டெல்லியில் R.K.புரத்தில் உத்தரசுவாமி மலையில் சுவாமிநாதசுவாமி எழுந்தருளியிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜூன் 13ம் நாள் இந்த கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அழகான கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டமைப்பு பக்தர்களை வெகுவாக கவரக்கூடியது.

நேற்று நான் சென்ற நேரத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தேறின. முதலில் கற்பக விநாயகரை வணங்கி விட்டு மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை கும்பிட போனேன். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஆண்கள் வலதுபுறமும் (சன்னதிக்கு வலதுபுறம்) பெண்கள் இடது புறமுமிருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும். வலதுபுறம் ஆங்கிலத்தில் GENTS என்றும் இடதுபுறத்தில் LADIES என்றும் எழுதி வைத்திருப்பது இது கட்டாயமாக்கப்பட்ட விதி என்றே எண்ண வைத்தது. மற்ற கோயில்களில் பொதுவாக இது நடைமுறையிலிருந்தாலும் இப்படி எழுதி வைத்திருக்க மாட்டார்கள்.

ஒரு சிறுமி GENTS பகுதியில் நின்று கொண்டிருந்தாள். வயது ஒரு பத்திலிருந்து பதினைந்திற்க்குள் இருக்கலாம். திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள். நான் சீக்கிரமே சென்று விட்டதால் (சுமார் ஒரு நாலே முக்கால் மணியிருக்கும்) அர்ச்சகர் வந்திருக்கவில்லை. அதனால் தரிசனம் முடித்து சன்னதியைச் சுற்றி வரலானேன். சுற்றி வரும் இடத்தில் தான் திருக்கோயிலைப் பற்றின செய்திகள் அடங்கிய கல் இருந்தது. அதனால் அதனைப் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சத்தம். அர்ச்சகர் அந்த சிறுமியை அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தார். என்னவென்று போய் விசாரித்ததில் அந்த சிறுமி கையிலிருந்து 500ரூபாய் நோட்டை அர்ச்சகர் பறிமுதல் செய்திருக்கிறார். சீக்கிரமே வந்த யாரோ உண்டியலில் போடாமல் சன்னதிக்கு முன் இருந்த தாம்பாளத்தில் 500ரூபாயை வைத்து விட்டு போயிருக்கின்றனர். அதை இந்த சிறுமி கவனித்திருக்கிறாள். யாருமில்லாத நேரம் அதனை எடுத்து செல்லப் பார்த்திருக்கிறாள். அப்பொழுதுதான் புரிந்தது அவள் திருதிருவென்று முழித்ததன் ரகசியம். பின்பு அர்ச்சகரிடம் பேசி அவளை விட்டுவிட சொன்னேன்.

பின்பு மலையிலிருக்கும் சுவாமிநாதசுவாமி சன்னதிக்கு சென்றேன். போகும் வழியில் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது வயதான பெரியவர் ஒருவர் சிவன் சிலையை கழுவிக் கொண்டிருந்தார். அந்த இடமே நல்ல சுத்தமாக காட்சியளித்தது. அவரின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும். போய் சுவாமிநாதசுவாமியைத் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் அந்த பெரியவர் கீழேயிருக்கும் மண்டபத்தின் வாசலைத் துடைத்துக் கொண்டிருந்தார். மண்டபத்தினுள் சென்றேன். ஒரு 60, 70 பேர் ஏதோ பாட்டுக் கச்சேரிக்கு ரெடியாகிக்கொண்டிருந்தார்கள். ஒரு இரண்டு நிமிடத்தில் கச்சேரி ஆரம்பமானது. நினதுதிருவடி என்ற ஒரு முருகன் பாடலை பாடினர்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்களுள் சிலருக்கு மின்விசிறி பற்றின கவலை. விளக்கணைந்தாலும் பரவாயில்லை என்று சிலர் மின்விசிறியை சுழற்றி விட்டனர். சில பெண்மணிகளுக்கு அடுத்தவர்களின் ஆடை அலங்காரத்தில் நாட்டம். அதென்னவோ எனக்கு இன்னும் புரியவில்லை கோயிலுக்கு வரும் பொழுது ஏன் சாரை சாரையாக நகை அணிந்து வருகிறார்களென்று. அவர்கள் ஒரு ஐந்தாறு பாடலைப் பாடிமுடித்திருப்பார்கள், ஒரு புறா மண்டபத்திலுள்ள மின்விசிறியில் அடிபட்டு கீழே விழுந்தது. (புறாக்கள் இந்த கோயிலில் அதிகமாக காணப்படுகின்றன). உடனே ஒருவர் அங்கு வேலை பார்க்கும் ஒருவரை கூட்டி வந்து அடிபட்ட புறாவை வெளியேற்றச் சொன்னார். அவரும் கருணையுடன் புறாவை மெல்லப் பற்றி வெளியேற்றினார்.

எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாள் தன் மகள் தண்ணீர் பாட்டிலை எச்சில் வைத்துக் குடித்ததற்காய் கடிந்து கொண்டிருந்தார். அவரருகில் இருந்த அம்மாள் மணிபர்ஸில் வைத்திருந்த கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பதினைந்து பேர் பாடிக்கொண்டிருக்க மற்றவர் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். பார்த்தவுடனேயே நம்ம சிந்து பைரவி சுஹாசினி மாதிரி பாடறவங்கள நிறுத்திவிட்டு நாம கச்சேரியை ஆரம்பிச்சுரலாமா என்று யோசித்தேன். ஆண்டவன் அந்த அளவிற்கு எனக்கு சங்கீத ஞானத்தைக் கொடுக்காதலால் நினைப்போடு அது நின்றுவிட்டது. ஒரு வழியாக கச்சேரி முடிந்து விட்டிருந்தது. வெளியில் வந்தேன். அந்த பெரியவர் இப்பொழுது குடிநீர் வைத்திருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

இப்பொழுது தான் ஒன்று புரிந்தது. எதற்க்காக பாடுகிறோம் எதற்க்காக உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உள்ளே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அடிபட்ட புறாவிற்கு இவர்களால் உதவ முடிவதில்லை. இவர்களின் மேக் அப்பும், எச்சிலும் தான் இவர்கள் கண் முன் தெரிகிறது. மனமுருகி பாடினவர்களும் புறாவிற்கு உதவ முன்வரவில்லை. இவர்கள் முருகனைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் அந்த வயதான பெரியவர் இவர்களுக்கான இடங்களை மட்டுமில்லாமல் ஆண்டவனையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். புரிந்து விட்டது எனக்கு புறாவிற்கு உதவியவருக்கும் பெரியவருக்கும் கிடைக்காத கடவுள் பாடியவர்களுக்கும் கிடைக்கப்போவதில்லை. என்ன செய்ய "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே". எங்க அம்மா சொன்னது ஞாபகம் வந்தது, "கோவிலுக்கு அடிக்கடி போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வாய்!!". சரி தானே.

Friday, September 02, 2005

டிவியும் அலுவலக நண்பரும்

நேற்று என் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பரென்றால் சமவயதுக்காரர் அல்ல. இரண்டு குழந்தைகளின் அப்பா. நன்கு பழகக்கூடியவர். ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். அவருடன் பேசினாலே ஒருவித பரவசமும் ஆர்வமும் நமக்கும் தொற்றிக்கொள்ளும். அலுவலகத்திலும் சரி வெளியிலும் சரி அவருக்கு நல்ல பெயர். எப்பொழுதும் யாராவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். நேற்று அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் டிவி தேவையா இல்லையா என்பது பற்றிய ஒரு பேச்சு எழுந்தது. மகளிர் சமாச்சாரமாதலால் (என்னங்க !! யாரும் அடிக்க வந்திராதீங்க.. டிவில இப்ப எல்லாமே தாய்க்குலங்கள்தான்) அவங்க மனைவியும் சேர்ந்துகிட்டாங்க.

பேச்சு சுவாரஸ்யமாக போச்சு. அவர் வீட்டில் டிவி கிடையாது. தினமும் ஒரு ரஜினி படம் போட்டாலும் டிவி வாங்கக் கூடாதுங்கிறதுல அவர் ரொம்ப கண்டிப்பாகவே இருந்தார். மனுஷன் இருந்தாலும் இவ்வளவு கராறாக இருக்கக்கூடாதுன்னு நானும் அப்பப்போ நினைத்துக் கொள்வேன். சில சமயம் அவரிடமும் சொன்னதுண்டு. ஆனா இதுவரையிலும் அவரிடமும் அவர் கண்ணொட்டத்திலும் மாற்றம் வந்ததாக தெரியவில்லை. அவர் மனைவியும் வேரொரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அதனால் மனைவியிடமிருந்தும் பெரிய அளவில் ஒன்றும் வற்புறுத்தல் இருந்ததாக தெரியவில்லை.

டிவி இல்லாம ஒரு வீட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதெப்படிங்க ஒரு சீரியல் பார்க்காம, ஒரு திரைவிமர்சனம் கேட்காம இவங்களால இருக்க முடியும்? உலக நடப்புல ஏதாச்சும் ஒரு விஷயம் என் மண்டைல ஏறுதுன்னா அதுக்கு டிவி தான் முழுமுதற் காரணம். ரசனை சார்ந்த புத்தகங்களைத் தவிர்த்துப் பார்த்தால் என்னிடமிருப்பது மிகச்சொற்பமே. புத்தகங்கள் மூலம் படிக்கிறத விட டிவி மூலம் பார்க்கிறது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம். பிபிசி, டிஸ்கவரின்னு புதுப்புது விஷயங்கள் தெரிஞ்சுக்கறது டிவினால தான். சரி சரி போது டிவி புராணம்... விஷயத்துக்கு வர்றேன்.

நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் அவரிடம் விவாதித்தேன். நாங்க பேசும் பொழுதெல்லாம் டிவி பத்தின விவாதங்கள் வருவதுண்டு அவை எல்லாம் சும்மா பத்தோட பதிணொன்னு அத்தோட இதுவொண்ணுன்னு தான் வந்து போகும். அப்படியில்லாமல் நேற்றுதான் டிவியைப் பற்றி மட்டுமே பேசினோம். நான் அவர்முன் வைத்த முக்கியமான வாதங்கள்

டிவி இல்லாமல் உலக செய்திகளும் பொது அறிவும் கிடைப்பதில்லை
டிவி என்பது நம்முடைய பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று

பட்டிமன்றத்தில பேசற மாதிரி பாயிண்டுகள அள்ளி வீசிட்டு அவர் பதிலுக்காக காத்திருந்தேன். ரொம்ப ஆழமாக யோசித்தவர் பதிலளிக்களானார்.

"எவ்வளவு நேரம் நீங்க உலக செய்திகளும் பொது அறிவு நிகழ்ச்சிகளையும் பாப்பீங்க?", "தினமும் ஒரு மணி நேரம்". இது நான்.

"ஒரு நாளில் எவ்வளவு நேரம் வெட்டியா பொழுது போக்கலாம்நு நினைக்கிறீங்க?".
வெட்டியான்னு கேட்டதுமே கொஞ்சம் நெருடலாத்தான் இருந்தது. உண்மை கசக்கத்தான செய்யும். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு "அதுவும் ஒரு மணி நேரம்" என்றேன்.

"வார விடுமுறைகளைத் தவிர்த்து, இப்போ தினசரி எவ்வளவு நேரம் டிவி பார்க்கறீங்க?", நம்ம திருவிளையாடல் தருமிக்கு அண்ணன் மாதிரி கேள்விகளா கேட்டிக்கிட்டே போறாரு.

"ஒரு இரண்டரை மணி நேரம்".

"இது போக பாட்டு கேட்பது, ஊர் சுத்துவது, என் போல நண்பர் கூட அரட்டைன்னு எவ்வளவு நேரம் செலவழிப்பீங்க?"

வந்த கடுப்பில எந்திருச்சு போயிரலாம்னு நினைச்சேன். ஏண்டா இவன்கூடவெல்லாம் பேசினோம்னு அப்ப தோணிச்சு. என்னால் இந்த முறை பதிலளிக்க முடியவில்லை.

என்னுடைய மெளனத்தைப் புரிந்துகொண்டவராக "என்னடா இப்படியெல்லாம் கேட்கிறான்னு தப்பா நினைக்காதீங்க, இப்ப சொல்லுங்க டிவி மட்டும் தான் பொது அறிவு வளர காரணமா? என் கூட பேசிட்டிருக்கீங்க உங்களுக்கு ஏதாச்சும் விஷயம் கிடைக்கலையா? டிவி மூலம் கிடைப்பது கொஞ்சம் தான். நாமா வெளியுலகத்துல தெரிஞ்சுக்கற விஷயம் தான் மீதி. வெளியுலகத்தில இல்லாத விஷயங்களும் இல்லை. செய்தித்தாள் தராத உலக அறிவும் இல்லை. செய்தித்தாள்கள் பாருங்க. படிக்கிற பழக்கமும் கூடும் நீங்க தேடுற விஷயங்களும் கிடைக்கும். அத விட்டுட்டு டிவில ஏங்க நேரத்த விரயமாக்கணும். உங்க டைட் செட்யூலிலேயே நீங்க இரண்டரை மணி நேரம் டிவில செலவழிக்கறீங்க, சின்ன பசங்களுக்கு கட்டுப்பாடுகள் கம்மி அவங்க எவ்வளவு நேரம் செலவழிப்பாங்க? அவங்களுக்கு இந்த வயசில தேவைப்படற விஷயங்கள சொல்றத விட தேவையில்லாத விஷயங்களத்தான் டிவி நிறைய தருது. இப்ப சொல்லுங்க டிவி வேணுமா வேண்டாமா?"

அது வரை என் சார்பில அவருகூட விவாதம் பண்ணிட்டு இருந்த அவரோட மனைவியைக் காணும். இனிமே சத்தியமா வீட்டில டிவி வேணும்னு கேட்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப மறுபடியும் முதல் பத்திய படிங்க.

நம்ம இப்னு எழுதிய கவிதையும் ஞாபகம் வந்தது. சுட்டி இங்கே

பதிவு போடும் போது ஏதாச்சும் துணுக்கு எழுதினா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். எப்போதோ படித்த ஒன்று.

மூணாம் வகுப்பு கணக்கு வாத்தியார் நம்ம கணேஷ்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறாரு (கணேஷா!! அட துணுக்குல கூட நான் ஹீரோவா இருக்கக்கூடாதா??)
கணேஷ்!! 2,4,9,16 எண்கள் எல்லாம் என்ன?
"ஜெயா டிவி, விஜய் டிவி, கார்டூன் நெட்வொர்க், டென் ஸ்போர்ட்ஸ்." (சன் டிவிய கழட்டி விட்டுடோம்ல.... ஏன்னா சன் நம்பர் ஒன்னுங்க)

Wednesday, August 31, 2005

வெட்டிக்கத - வித்தியாச யோசனைகள்

  • திடீரென்று குள்ளராகிவிட்டால் என்ன நடக்கும்?
  • வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் தான் என்று மாறிவிட்டால்?
  • பூமி என்பது மண்ணால் ஆகாமல் உடைபடாத இரும்பால் ஆகியிருந்தால்?
  • ரஜினி என்பவர் கண்டெக்டராகவே இருந்திருந்தால்? (இது கொஞ்சம் ஓவர்.... இருந்தாலும் இது ரஜினி சீஸன் என்பதால் இந்த கேள்வி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது)

மேலே உள்ள விஷயங்கள் எல்லாம் நடந்தால் !! நினைச்சுப் பாருங்க. ஒரு வித்தியாசமான உலகத்தில உலாவுறத போல இருக்குதுல்ல. கீழயிருக்கிற படங்கள பாருங்க இன்னும் விசேஷமா நிறைய விஷயங்கள் தோணும்.

சும்மாவாவது எதையாச்சும் யோசிக்கறது ரொம்ப நல்ல விஷயம். அதுவும் சம்பந்தமில்லாத நடக்கமுடியாத விஷயமாக இருந்தா அந்த யோசனைகள் சில சமயம் சந்தோஷத்தைத் தருவதுண்டு.

அந்நியன் படத்தில வர்ற சார்லி மாதிரி தூங்கறதும், தூங்கியதனால களைப்பாவதும், பின்பு தூங்குவதும் ஒரு வகையில் இந்த மாதிரி யோசனையால் தான் (அடிக்க வராதீங்க....சில சமயம்தான் இந்த மாதிரியான யோசனைகள் இன்பம் தருவதுண்டு). மத்தவங்களுக்கு துன்பம் தராதவரை நம்ம யோசனைகளெல்லாம் நல்லவைதான் (அட!! இன்பம் தர முடியலேன்னா கூட). "லூசாப்பா நீ?"ன்னு பிதாமகன் படத்தில லைலா மேடம் கேட்கிற மாதிரி நீங்களும் கேட்கனும்னு நினைக்கிறீங்களா? சரி சரி விடுங்க சொல்ல வந்ததை சொல்றேன்.

இப்படியாக தேவையில்லாததைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் பொழுது திடீரென உலகம் அழிஞ்சு போச்சினா அடுத்து வர்ற ஜெனரேஷனுக்கு என்னத்த விட்டுட்டுப் போறோம்னு யோசிச்சிட்டிருந்தேன். (இப்போ தெரிஞ்சு போச்சு, கேட்டு புண்ணியமில்ல நீ சரியான லூசு தான்!) முன் காலத்தில அத உபயோகிச்சாங்க இத உபயோகிச்சாங்கன்னு நிறைய சொல்றாங்க. எல்லாத்துக்கும் அகழ்வாராய்ச்சி, வரலாற்று சுவடுகள் அது இதுன்னு சாட்சிகள் இருக்கின்றன. இப்போ ஒருவேளை நாம இருக்கிற உலகம் அழிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க அப்போ நாம உபயோகப்படுத்துக்கிட்டிருந்த (உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிற) இந்த செல்போன், டிவி, விமானங்கள், நாம வானத்தில நிறுவியிருக்கிற அந்த செயற்கைக்கோள்கள் என நம்முடைய கண்டுபிடிப்புகள் எல்லாமே அடுத்து இந்த உலகத்தில வாழப்போறவங்களுக்கு தெரியாமப் போயிரும்ல... (வந்துட்டாருல்ல லார்டு லபக்கு தாஸூ)

அப்ப நாம உபயோகப்படுத்திக்கிட்டிருக்கிற இந்த அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் எப்படி கட்டி காக்க முடியும்? எல்லாத்தையும் மண்ணுல போட்டு புதைச்சிரலாமா? (ஏண்டா ! அதுக்கா செயற்கைக்கோள்கள கண்டுபிடிச்சோம்னு நம்ம சயிண்டிஸ்டுங்க எல்லாம் சண்டை பிடிச்சிராம...) வேற என்னவெல்லாம் செய்யலாம்? (அவரவர் ஐடியாக்களைப் பின்னூட்டமிடலாம். நல்ல தரமான ஐடியாவுக்கு நம்ம முகமூடி சார் பரிசு வழங்குவார்...). அவற்றையெல்லாம் வருங்காலத்துக்கு எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தோணவே மாட்டேங்குது. (எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் ஹி ஹி ஹி!!! ) நீங்களும் முடிஞ்சா முயற்சி செஞ்சு மன்னிக்கவும் யோசிச்சுப் பாருங்க. கேட்க வந்தத கேட்டாச்சு இப்பத்தான் ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு.

இந்த பதிவ எழுதிக்கிட்டிருக்கும்பொழுது மின்னஞ்சலில் வந்த துணுக்கு !!

ஒரு தடவ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் & இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில சண்டை வந்ததாம்.

அப்போ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 50 அடி தோண்டுறாங்க. செம்பு கம்பி ஒண்ணு கிடைக்குது. இத சாக்காய் வச்சுகிட்டு 25,000 ஆண்டு முன்னரே தங்கள் நாட்டில் தொலைபேசிகள் இருந்ததாக அறிவிக்கிறாங்க.

இதைக்கேட்டுட்டு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 100 அடி தோண்டுறாங்க. சின்ன கண்ணாடி துண்டு கிடைக்குது. உடனே தங்கள் நாட்டில் 35,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒளி இழை (fibre optic) உபயோகத்தில் இருந்ததாக அறிவிக்கிறாங்க.

நம்ம இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கோபம். உடனே பூமியில் 150 அடி தோண்டுறாங்க. எதுவும் கிடைக்கல. விடாம இன்னும் ஒரு 50 அடி தோண்டுறாங்க அப்பவும் எதுவுமே கிடைக்கல. உடனே இந்தியாவுல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கம்பியில்லா இணைப்புகள் (wireless connections) இருந்ததாக அறிவிக்கிறாங்க.... எப்படி ??

படங்கள்



Tuesday, August 30, 2005

சிற்றன்பங்கள்

சென்ற மாதம் ஊருக்கு விடுமுறையில் சென்று வந்த பொழுது பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்தேறின. பணத்தைச் சுற்றி உலகம் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். ஆனா பாருங்க சின்ன சின்ன விஷயங்கள் கூட அவ்வப்போது நமக்கு இன்பம் தருவதுண்டு. அப்படி நிறைய விஷயங்கள் எனக்கு தோன்றின.

சாலையில் போகும் போது வெகு அருகில் பறக்கும் சிட்டுக்குருவி. ஷூ பாலிஷ் செய்து விட்டு அதிகம் கொடுத்தாலும் வேண்டாமென்று நேர்மையுடன் அந்த சாலையோர தொழிலாளி வாங்கும் இரண்டு ரூபாய். "எப்படி சார் இருக்கீங்க?" ஒரு தடவை நின்று பேசியதற்க்காக தினமும் கடந்து செல்லும் பொழுது விசாரிக்கும் டீக்கடைக்காரன். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் இன்பங்கள் பல. நாம் இப்படி யாருக்காவது இன்பம் தருவதுண்டா என்று எனக்கும் அடிக்கடி தோன்றும். சந்தேகத்துடன் இதைப் போய் யாரிடம் கேட்பது என்று எனக்குள் நானே மறைத்துக் கொள்வேன். ஆனால் இவை போல சின்ன சின்ன விஷயங்கள் தான் நமது அன்றாட பழக்க வழக்கங்களைத் தீர்மானம் செய்கின்றன. பணத்தை உதாசீனப்படுத்திவிட்டு கொஞ்சம் பாசத்தையும் கொஞ்சம் பழக்கத்தையும் முதலீடாக கொண்டு நடைபோடுவது தான் இத்தகைய உறவுகள்.

ஜார்ஜ் லோரிமெர் என்னும் ஒரு ஆங்கில பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

It's good to have money and the things that money can buy, but it's good, too, to check up once in a while and make sure that you haven't lost the things that money can't buy.
மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு பணம் தான். ஆனால் அது வெறும் கண்டுபிடிப்பே. மனிதன் மனிதனாக இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனா இன்றைய தேதியில் ஒவ்வொரு மனிதனின் மற்ற குணாதிசயங்களை நிர்ணயிப்பது இந்த பணம் தான். எப்பொழுது பணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அல்லது உதாசீனப்படுத்தப்பட்டு மனிதனின் மற்ற குணநலன்கள் வெளிப்படுகிறதோ, அது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும் பொழுது அதில் நெகிழ்வும் அன்புமே மேலோங்கி நிற்கிறது.

அப்பாவிடம் பணம் வாங்கிச் செல்லும் மகன், மகன் கேட்பதற்கு முன்னரே அவனது சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைக்கும் அப்பா, உடன் வசிக்கும் நண்பனை விட்டுவிட்டு சாப்பிடாமல் இருக்கும் கல்லூரி மாணவன் என நமக்கு இன்பம் அளித்த அளித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு விஷயமும் பணத்தை தவிர்த்து நமது குணநலன்களை வெளிப்படுத்திய ஒன்றாகவே இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையோடு இத்தகைய நல்ல விஷயங்களும் முடிந்து போவதும் பணத்தாலே தான்.

மகனிடம் பணம் கேட்க தயங்கும் அப்பா, பணம் கொடுத்தால் அப்பா வாங்குவாரோ மாட்டாரோ என தவிக்கும் மகன், நண்பனிடம் பணம் கேட்கலாமா கூடாதா என யோசிக்கும் அதே கல்லூரி தோழன் என நாட்கள் செல்ல செல்ல பணத்தின் வலிமை கூடி விடுகிறது. அதனால் எது நடக்க வேண்டுமோ அது நடக்காமல் போய் விடுகிறது. விளைவு விரிசல் சிக்கல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து சேர்கின்றன.

Henry van Dyke என்னும் ஆங்கில கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்

There is a loftier ambition than merely to stand high in the world. It is to stoop down and lift mankind a little higher.
உண்மை தானே. சிற்றன்பங்கள் மிக முக்கியமானவை அவை பணத்தை ஒதுக்குவதால் !!

Wednesday, August 24, 2005

தமிழக கல்வி முறை மாற்றம் - ஒரு அலசல்

இன்றைய இந்து நாளிதழில் +2 தேர்வின் மதிப்பீட்டு முறை மாற்றத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. (சுட்டுக)

நடிகர் ரஜினிகாந்தின் "சிவாஜி" பட உரிமைகள் 50 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி பரவிய அளவு இந்த செய்தி அதிவேகமாக பரவவில்லை. இந்து நாளிதழில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் மாணவர்களின் அறிவுத்திறன், புரிதல், கற்றதை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பொருத்தே அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். (Different weightages for knowledge, understanding and applications)

'தி இந்து' வினாக்களின் தன்மையைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது...

  • Questions to be a mix of problems with different difficulty levels
  • Learning objectives to be evaluated using different types of questions across each chapter of the textbook and syllabus
  • Science and mathematics to have 60 % easy questions, 30 % with average level of difficulty and 10% will be very difficult

பாடத்திட்ட மாற்றத்தோடு (syllabus change) தமிழக அரசு தேர்வு மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வர முனைந்திருக்கிறது. இம்முறையில் மாணவர்களின் கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே முறை தான் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி தேர்வு மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.சி தேர்வு முறையும் அதன் மதிப்பீட்டு முறையும் பிரபலமான ஒன்று ! கடினமான ஒன்று !. அதன் கடுமையைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு இவ்வளவு நாள் அந்த மதிப்பீட்டு முறை ஒத்திப்போட்டு வந்திருக்க வேண்டும். இன்று பாடத்திட்ட மாற்றம் என்பது கட்டயாகமாகிவிட்ட பிறகு மதிப்பீட்டு முறையும் கட்டாயமாகிவிட்டது. கட்டாயத்தின் பேரில் வந்தாலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

இவ்வளவு நாள் இருந்த தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும் மாணவர்களின் மனப்பாடத் திறனுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த மாற்றம் அதை உடைத்தெறியும் என்பது உறுதி. வினாக்களும் அவற்றின் கடின நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சராசரி மாணவன் தனது மனப்பாடத்திறனின் மூலம் 60% மதிப்பெண்களை எளிதாக வாங்கலாம் ஆனால் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட மீதமுள்ள 40% மதிப்பெண்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தமுள்ள 150 மதிப்பெண்களில் வேதியியலிலும் இயற்பியலிலும் 50 மதிப்பெண்கள் ஒரு வரி வினாக்களுக்குரியதாக இருக்கும். மேலும் ஒளிவழிக் குறி உணர்வி (optical mark reader (OMR)) விடைத்தாள்களும் முன்மொழியப்பட்டிருக்கின்றன.

இத்தகைய தேர்வு முறை, பாடமுறை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றங்கள் மாணவர்களின் ஆளுமையையும் அறிவு திறனையும் வளர்க்க பெரிதும் உதவும். தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்த அந்த "அடிப்படை அறிவும்" அந்த அறிவு சார்ந்த கல்வி முறை மாற்றத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமையும். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம் அப்படியிருப்பின் அடுத்த வருட தேர்வில் இந்த குறை களையப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த மாற்றம் முக்கியமான ஒன்று. ஏற்கனவே தமிழகம் இடஒதுக்கீட்டு முறையில் இந்திய அளவில் புரட்சி செய்து வரும் வேளையில் இது தமிழக கல்வி முறையில் மேலும் ஒரு மைல்கல்லாகவே வருங்காலத்தில் உணரப்படும்.

Tuesday, August 23, 2005

மோகன் பாடல்கள்

கோவில்பட்டியில் எங்கள் தெரு கொஞ்சம் ரசனையானது என்று தான் கூற வேண்டும். காலையில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் டேப்ரிக்கார்டர் தான் முதலில் முழித்துக்கொள்ளும். எங்கள் வீட்டிலிருந்து இடதுபுறம் மூன்று வீடு தள்ளி லாரி டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். எங்கள் வீட்டின் எதிர்புறம் ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வசித்து வந்தார். ஒரு பத்து வீடு வலதுபுறம் தாண்டினால் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை (கோவில்பட்டி தீப்பட்டி தொழிற்சாலைகளாலும் பிரபலமான ஊர்). இப்படியாக விடுமுறை நாட்களிலும் காலை வேளைகளிலும் சினிமா பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும்.

ஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களைக் கவர்ந்த அளவு இவர்களைப் போன்ற சினிமா பாடல் ரசிகர்களைக் கவரவில்லை என்று தான் கூற வேண்டும். அதனாலேயே எப்பொழுதும் இவர்களிடங்களிலிருந்து 70 80களின் பாடல்கள்தான் அநேகமாக கேட்கும். எண்பதுகளின் பாடல்கள் என்றால் அவை முற்றிலுமாக திரு.இளையராஜா அவர்களின் பாடல்களாகத்தான் இருக்கும். அதிலும் மோகன் அவர்கள் நடித்த திரைப்படப் பாடல்கள் அதிகமாக இருக்கும். எனக்குப் பிடித்தவை ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் ஆனாலும் தூக்கம் வரும் நேரங்களில் இளையராஜாவைக் கேட்பது போல ஏ.ஆர்.ரகுமானைக் கேட்க முடிவதில்லை.

இன்றைய இளைஞர்களின் ஒரு ஆச்சர்யமான மனோநிலையை அவர்களின் சினிமா பாடல் விருப்பங்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஜாலியான நேரங்களில் ஏ.ஆர்.ரகுமானையும் சோகமான நேரங்களிலும் தனிமையான நேரங்களிலும் இளையராஜாவையும் கேட்கிறார்கள். சொகமான நேரங்களில் மோகன் பாடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஏன் இந்த முரண்பாடு? அப்படியென்ன இருக்கின்றது அந்த "மோகன்" பாடல்களில்? அடிக்கடி நான் இப்படி நினைப்பதுண்டு அதனாலேயே மோகன் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். இன்று நானும் அந்த பாடல்களுக்கு அடிமை.

தனிமையான நேரங்களிலும் சோகமான நேரங்களிலும் ஒருவித பரிவை அந்த பாடல்கள் தாங்கி நிற்கின்றன. இதனாலேயே பல சமயங்களில் நான் இந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்கியிருக்கிறேன். என்னையும் அறியாமல் நடந்தது இது. ஒரு வேளை அந்த மனதை வருடும் இசையை இளையராஜா எளிதாக தருகிறார் போல. ஒரு "சங்கீத மேகம்", ஒரு "நிலாவே வா", ஒரு "தேனே தென்பாண்டி மீனே" கேட்கும் போது உணரும் அந்த பரிவு "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு" கேட்கும் போது எனக்கு கிடைப்பதில்லை. (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)

பலரிடம் இதைப் பற்றி நான் விவாதிப்பதுண்டு. மோகன் பாடல்களில் ஒருவித காதல் உணர்வு இளையோடும் அதுவும் இந்த கால இளைஞர்களின் உணர்வும் ஒத்துப்போகிறது அதனாலேயே அந்த பாடல்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில விவாதங்களில் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காதலிப்பவர்கள் மட்டுமல்ல காதலில் விழாதவர்கள் கூட மோகன் பாடல்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். என்ன காரணமென்று கேட்டால் எனக்கு ஏற்பட்ட அதே பரிவும் ஆறுதலும் அவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அதே நண்பர்கள் சந்தோஷமான நேரங்களில் "ஒரு அரபிக்கடலோரம்" "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு" என வித்தியாசப்படுவதுமுண்டு.

முடிவாக எனக்கு கிடைத்ததெல்லாம் மோகன் பாடல்கள் பொதுவாகவே நெஞ்சை வருடும் பாடல்களாக இருக்கின்றன. ஒருவித பரிவும் பாசமும் அவைகளில் உணரப்படுகின்றது. இதுவே அந்த பாடல்கள் இன்றளவும் நிலைத்திருக்கக் காரணம். அவற்றை காதல் உணர்வு மிகுந்தவை என்று கூறி ஒதுக்க முடிவதில்லை இனியும் ஒதுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

Tuesday, August 16, 2005

பட்டம்

பாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்னு சூப்பர் ஸ்டாரூ பாடினாரோ (SPBதான் பாடினாருன்னு யாராவது சொன்னா சாரி மன்னிச்சிருங்க) இல்லையோ ஆரம்பிச்சது வினை.

பட்டம் விடறது என்பது எனக்கு ஒரு நெடுநாளைய கனவு. மிக உயரத்தில் பறக்கும் வண்ண வண்ண பட்டங்கள் வானத்தில் ஒரு கலர் காக்கையைப் போல தெரியும். சின்ன வயதில் பட்டங்களையும், பட்டம் விடுபவரையும் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் பட்டம் விடும் 'தொழில்நுட்ப' அறிவை அந்த வயதில் பெற முனைந்ததில்லை. பத்தாம் வகுப்பு வந்ததுமே எல்லோருக்கும் வருவது போல எனக்கும் "பட்டக்" கனவு வந்து விட்டது. பிறகென்ன லேட்டஸ்ட் பட்டக்கனவில் அந்த காகித தொழில்நுட்ப தேடல் முற்றிலுமாக மறந்துவிட்டது. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் பட்டங்கள் பிரபலம். வட இந்தியாவில் (டெல்லி அருகே நொய்டா) வேலை கிடைத்ததனாலோ என்னவோ மீண்டும் அந்த தேடல் ஆட்கொண்டது. எனினும் வேலை கிடைத்து இரண்டு வருமாகியும் நேற்று வரை அந்த முயற்சியில் ஈடுபடாமலே இருந்தேன். சுதந்திர தினத்தன்று பட்டம் விடுவதென்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வழக்கம். பழைய பழக்கமாக இருந்தாலும் இப்பொழுதெல்லாம் வட இந்தியாவில் காற்றடி காலங்களில் பட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் எனக்கு ஒரு தெம்பும் நம்பிக்கையும் பிறந்தது. மேலும் இந்த சீஸனில் நமக்கு மேலும் ஒரு நன்மையும் இருக்கிறது, பட்டங்கள் செய்யும் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுவதில்லை ஏனெனில் அவை ரெடிமேடாக இங்கு கிடைக்கின்றன.

சரி முயற்சி திருவினையாக்கும் என நினைத்துக்கொண்டே ஒரு ஐந்து பட்டங்களும் இரண்டு நூல்கண்டுகளையும் ஞாயிறன்றே வாங்கிக் கொண்டேன். முதல் முறையாகையால் ஐந்து பட்டங்கள் வாங்கினேன். சின்ன சின்ன பொடுசுகளே விடுது நாம விடறதுக்கென்ன என ஒருவித செருக்கும் கூடவே இருந்தது. மாலை நான்கு மணியளவில் எங்கள் (நானும் என்னுடன் வசிக்கும் நண்பர்களும்) பட்டப் போராட்டம் துவங்கியது. பட்டத்தில் எங்கெங்கு நூல் கோர்க்க வேண்டும் எவ்வாறு முடிச்சிட வேண்டும் என்பது தெரியாமலேயே முழித்துக்கொண்டிருந்தோம். மாடியில் வைத்து ஆராய்ச்சி செய்ததன் பலன் எங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகியது. பக்கத்து வீட்டுக்காரர் பட்டப்படிப்பிலும் மனிதவியலிலும் Phd வாங்கியிருக்க வேண்டும். எங்கள் பிரச்சனையைப் புரிந்து கொண்டவராக எங்களுக்கு உதவ முன்வந்தார். மாடி விட்டு மாடி தாவி வந்து (குரங்கியலிலும் Phd முடித்திருப்பார் போல) நாங்கள் முடிச்சிட்டு வைத்திருந்த பட்டத்தை வாங்கி பார்த்தார். பார்த்ததும் ஒரு சிரிப்பு சிரித்தாரே அதிலேயே எங்களுக்கும் அவருக்கும் தெரிந்து விட்டது எங்களின் பண் "பட்ட" அறிவு. பின்னர் எங்களின் முடிச்சுக்களை வெட்டியெறிந்து அவரது கைத்திறனைக் காட்ட ஆரம்பித்தார். முதல் பட்டம் ரெடி.

சரி எப்படியும் LIC பில்டிங் உயரத்திற்க்காவது பட்டம் விட்டுவிட வேண்டும் என்ற தீராத ஆவலில் வேகமாக விளையாட்டை ஆரம்பித்தோம். பட்டம் சும்மா நாலு சுற்றுக்கள் காற்றில் சுற்றி எங்கள் வாட்டர் டேங்க் உயரத்திற்கு பறந்து விட்டு பிறந்த இடத்திற்கே திரும்பி வந்து விழுந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் சிரிப்பு இப்பொழுது கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது. வந்தார் நூலை ரெண்டு சுண்டு சுண்டினார் ஆட்டினார் இழுத்தார் பட்டம் பறக்க ஆரம்பித்தது. முதன் முறையாக எங்கள் தொழில்நுட்பம் வெற்றி பெற்றதில் எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால் எங்கள் முயற்சியில் அது நடைபெறவில்லை என்பது ஒரு சிறு குறையாகவே பட்டது. அதனால் ஒரு திமிருடன் அவர் கையிலிருந்த நூலை வாங்கி நான் ரெண்டு சுண்டு சுண்டினேன். பட்டத்திற்கு திமிர் பிடித்தவர்களைப் பிடிக்காது போலும் உடனே அது கீழே இறங்க ஆரம்பித்தது. திமிர் இருந்தாலும் பட்ட அறிவு இல்லாமலிருந்தாலும் முயற்சிகளில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம் என்பது அப்பொழுது தெளிவாக புரிந்தது. மீண்டும் மிஷன் பக்கத்து மாடிக்காரர் கைக்கு மாறியது. மீண்டும் அவர் அவரது ஆளுமையை நிலைநாட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இந்த முறை கொஞ்சம் தெளிவாக அவரது செயல்திறனை கவனித்தேன். அவரும் எங்கள் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவராக எங்களிடம் நூலை ஒப்படைத்தார். இந்த முறை சிறிது நேரம் என்னால் தாக்கு பிடிக்க முடிந்தது.

இரண்டு நிமிடம் என் கை வன்மை தெரிந்தது (கண்டிப்பாக LIC பில்டிங் உயரம் பறந்திருக்கும் என்பது என் நம்பிக்கை). அதற்குள்ளாக எங்கிருந்தோ ஒருவன் எங்கள் பட்டத்துடன் வந்த மோதலானான். விளைவு நூல் மட்டும் எங்கள் கையில் இருந்தது பட்டம் அறுபட்ட நூலுடன் எங்கள் கண் முன்னே கீழிறங்கிக் கொண்டிருந்தது. முதல் முயற்சியின் பலன் புஸ்வானமானது வருத்தமாக இருந்தது. அப்பொழுதுதான் பட்டம் விடுவதற்கு சில திட்டங்களையும் வகுக்க வேண்டும் எப்பொழுது அடுத்தவரை சீண்டலாம் எப்பொழுது ஜகா வாங்க வேண்டும் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கைவசம் ஐந்து ஆராய்ச்சிகளுக்கு உபகரணங்களிருந்ததால் வருத்தம் அவ்வளவாக எங்களை ஆட்கொள்ளவில்லை. அடுத்த முயற்சி ஆரம்பமானது. இந்த முறை வாட்டர் டேங்கைத் தாண்டி என்னாலேயே பட்டத்தைப் பறக்க விட முடிந்தது. ஆனாலும் LIC பில்டிங் உயரம் எட்டாததாகவே இருந்தது. எப்பொழுது நூல் விட வேண்டும் எப்பொழுது நூலை இழுக்க வேண்டும் என்பது விளங்காததாகவே இருந்தது. மணி ஆறை நெருங்கி விட்டிருக்கவே நாங்களும் எங்கள் முயற்சியைப் பின்பொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என கீழிறங்கி வந்து விட்டோம்.

இன்னும் மெஸேஜ் சர்வீஸ், மாஞ்சா போடுவது போன்ற விஷயங்கள் இருக்கின்றனவாம். இன்று முயன்று பார்க்க வேண்டும். இன்று முழித்ததுமே பட்ட ஆவல் வந்து தொற்றிக் கொண்டது. எப்படியும் எல்லாரையும் விட சிறப்பாக பட்டம் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். தென்கச்சி கோ.சுவாமிநாதனும் சொல்லிக்கொண்டிருந்தார் "என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை ! என்னால் மட்டுமே முடியுமென்பது ஆணவம்". நேற்று வரை எனக்கிருந்தது ஆணவம் இன்று எனக்குள்ளிருப்பது தன்னம்பிக்கை. எப்படியும் ஜெயித்து விடலாம் பின்பு நானும் பாடலாம் "பாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்".

பட்டப்படிப்பில் தெரிந்து கொண்டவை

  • தெரியாத காரியத்தை தெரிந்து கொள்ள நினைப்பது சிறந்தது.
  • தெரியாத காரியத்தை செய்யும் முன்பு முழு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
  • சின்ன சின்ன பொடுசுகளே சில சமயம் பெரியவர்கள் செய்ய முடியாத காரியங்களைச் சுலபமாக செய்து விடுவார்கள். மூர்த்திதான் சிறியது.
  • திட்டங்கள் வகுப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. இல்லையென்றால் வெற்றியின் முழு சுவையை அனுபவிக்க முடியாது.
  • வெற்றிக்கென ஒரு எல்லையை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். ("Everyone can't reach moon and everyone shouldn't rely on simple accomplishments")
  • காலை நேரத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதனை கேட்பது ஒரு நல்ல விஷயம். தாத்தா கதை சொல்வது போல் அழகான கதைகளை சொல்கிறார்.
  • குரங்கியலிலும் Phd முடித்தால் நமக்கு என்றைக்கேனும் உதவப் போவது உறுதி