Tuesday, March 22, 2005

தேர்வு நேரம் - வித்தியாசத் திருவிழா

சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட வாசலில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியைக் கண்டேன். ஒரு அழகிய காலைப் பொழுது அது. சுமார் ஒரு 8 மணி இருக்கும். ஒரு அம்மா அவளது மகனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்தாள், மகன் ஒரு கையில் புத்தகத்துடனும் மற்றொரு கையில் பேனாவுடன் எதையோ அம்மாவிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தான். ஒரே நேரத்தில் இருவரும் ஒரு ஐந்து கவனகங்களை தனித்தனியே பக்கத்தில் இருந்து கொண்டே நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் இருந்த பாசமும் பரிவும் பார்ப்பதற்கு பரவசமூட்டுவதாக இருந்தாலும் அவர்களின் நிலை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

படிப்பென்பது வாழ்க்கையில் இன்றியமையாதது தான் அதற்காக வாழ்க்கையின் மீதமுள்ள மற்ற பழக்க வழக்கங்களை விட்டு விடுகிறோமோ என்று தோன்றியது. உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் மதிய சாப்பாடு தான் பள்ளியில் ஊட்டப்பட்டு வந்தது ஆனால் இப்பொழுதோ காலை சாப்பாடும் பள்ளியில் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. சில பள்ளிகள் காலை 7.30க்கே துவங்கிவிடுகின்றன. அது மாணவர்களின் காலை உணவு நேரத்திற்கு ஏற்றதாக இல்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் பெண்களுக்கும் காலை நேரத்தில் வேலைப் பளு அதிகமாகிறது.

முதலில் மகன், பின்பு கணவன், வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் பின்பு தானும் தயாராக வேண்டும். பெண்கள் புரட்சி, சமதர்மம், சமஉரிமை என பேசும் ஆண்களே கூட வீட்டில் பெண்களுக்கு உதவுவது மிக மிக குறைவே. இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் குழந்தைகளுக்கு தேர்வு நேரம் வந்து விட்டால், அது வீட்டில் இருக்கும் பெரியோர்களுக்கும் வைக்கப்படும் தேர்வாகத் தான் தெரிகிறது. மகன்/மகளின் உடல்நலன், அவளது கவனக்குறை என்று பல்வேறு கவலைகளிலேயே பெரியவர்களும் கஷ்டப்படுகிறார்கள். இது ஒரு நிலை என்றால் மாணவர்களின் பாடு திண்ட்டாட்டமாக இருகிறது.

முன்னெல்லாம் தெருவோரங்களில் சாயங்கால நேரங்களில் சிறுவர் பட்டாளங்களைப் பார்க்கலாம், இப்பொழுது மொத்தமாக ஒரு பத்து சிறுவர்களைப் பார்ப்பதே அரிது. விளையாட்டில் ஆர்வத்தை குறைக்கும் விதமாகவே இன்றைய கல்வி நிலை இருக்கிறது. பெற்றோர்களும் வேறு வழியின்றி அதட்டி உருட்டி பிள்ளைகளை வீட்டிலேயே பூட்டி வைத்து விடுகிறார்கள். சரி அது போதாதென்று தொலைக்காட்சியில் அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. இப்படியாக பிள்ளைகளுக்கு படிப்பின் மேல் மட்டுமல்லாமல் பெற்றோரின் மேலும் வெறுப்பு அதிகமாகிறது விளைவு அவர்களின் அனைத்து திறன்களும் முடக்கப்படுகின்றன்.

விளையாட்டில் கவமிருந்தால் படிக்கும் திறன் குறையும் என்பது இக்கால பெற்றோர்களில் பரவலாக காணப்படும் கருத்து. அது மிகவும் தவறானது. உடல்நலன் மட்டுமல்லாமல் மனநலனுக்கும் விளையாட்டு தான் அருமருந்தாகிறது. அதை கவனத்திற்கொள்ளாமல் பிள்ளைகளை படி படி என்று சொல்லிக்கொண்டேயிருந்தால் அது அவர்களின் ஆசையையும் திறமைகளையும் முளையிலேயே கிள்ளி வைப்பதாய்த்தான் இருக்கும். இந்த நிலை மாற கல்விமுறையில் மாற்றம் என்பது மிகவும் அவசியம், அதுவும் விரைவிலேயே செய்தாக வேண்டும்.

தேர்வுத் திருவிழா என்பது இப்பொழுது வருடத்திற்கு மூன்று முறை வரும் திருவிழாவாகிவிட்டது. என்ன! இந்த திருவிழா கலந்து கொள்பவருக்கு இன்பத்தினை தருவதாக இல்லை. மகனுக்கு ஊட்டப்படும் சோறு வயிற்றுப்பசியை மட்டும் தீர்ப்பதாக இருக்கக் கூடாது, அவனக்கு பாசத்தையும் பரிவையும் சேர்த்து தருவதாக இருக்க வேண்டும். கையில் புத்தகத்துடன் எதையாவது ஒப்புவித்துக் கொண்டே கண்டிப்பாக பாசத்தையும் பரிவையும் அவனால் உணர முடியாது, இதை உணர வேண்டியவர்கள் கண்டிப்பாக உணர வேண்டும்.

மேலும், பள்ளிப் பருவத்தில் தான் பிள்ளைகள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முடியும். அந்த நேரத்தையும் அவனுடன் இன்பமாக செலவழிக்காமல் படிப்பு ஒன்றுக்கு மட்டுமே செலவழிக்கச் செய்வது நியாயமாகாது. அப்படிச் செய்வதால் தான் பெற்றோர்களின் அருமையும் அவர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. பின்னாளில் முதியோர் இல்லத்தைத் தேடும் அளவிற்க்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்தில் தெரியாதது ஐம்பதில் தெரியுமா? தவறைத் தன் மீது வைத்துக் கொண்டு பின்னர் பிள்ளைகளை நாமே குறை சொல்கிறோம். இந்நிலையை மாற வேண்டும் (மன்னிக்கவும் மாற்ற வேண்டும்)

No comments: