Sunday, March 27, 2005

பசுமை நிறைந்த நினைவுகளே

எனக்கு நீண்ட நாளாய் ஒரு சந்தேகம். ஏன் எல்லோருக்கும் கடந்த கால ஞாபகங்கள் முக்கியமாக பள்ளிப் பருவ ஞாபகங்கள் மட்டும் மிகுந்த இன்பம் தருவதாய் இருக்கிறது. நிகழ்காலத்தில் ஒரு பெரிய செல்வந்தராய் இருப்பினும், அவர்களுக்கு கடந்த காலம் தான் இலைப் பசுமையாய் தெரிகிறது. பில்கேட்ஸ் முதல் நம்மூர் பிச்சைக்காரன் வரை (அது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்காதீர்கள்) யாரை கேட்டாலும் இதையே வழிமொழிகின்றனர். ஏன்?

பள்ளிப் பருவத்தில் நாம் தாய் தந்தையரின் நிழலில் இருந்து வாழ்க்கையை அனுபவித்ததாலா? கவலைகள் நம்மைக் காட்டிலும் அவர்களை அதிகமாக பாதித்தது என்பதாலா? அல்லது நமது பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் கண்டிப்பாக ஒரு தீர்வு யாரோ ஒருவரால் காணப்படும் என்ற நம்பிக்கையினாலா? இப்படி எண்ணற்றக் கேள்விகள் போர் அம்புகளாய் பாய்ந்தாலும் இவை யாவும் இலக்கினை அடைந்ததாய் எனக்கு தெரியவில்லை. அதாவது எனக்கு சரியான விடையை தெரியப்படுத்தவில்லை.

விடை கிடைக்காதவரை விடப்போவதில்லை என்ற உந்துதலுடன் தேடலானேன். ஆனால் நிதர்சனத்தையும் உண்மையையும் என்னால் தனி ஆளாக சரியாக உணரமுடியவில்லை. ஆதலால் மற்றவரின் அபிப்பிரயாங்களையும் கேட்கலானேன். அதிலும் எனக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. என்னால் ஒரு சரியான முடிவுக்கு இன்றுவரை வர முடியவில்லை. விவாதிக்கப் படுவது பள்ளிப் பருவத்தைப் பற்றியது என்பதால் சில பள்ளி செல்லும் தம்பிகளைக் (நண்பர்களைக்) கேட்டேன். உங்களுக்கு இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா? அவர்கள் வரையில் அந்தக் கேள்வி மிகப்பெரியது என்றே நினைக்கிறேன். ஆதலால் அங்கும் எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை.

இறுதியாக என்னை நானே கேட்டு, எனக்கு தோன்றியவற்றை இங்கு விடையாக இடுகிறேன். முதலாவதாக அறிவு, மனிதனை உயர்திணை ஆக்கிய உயர் திணை. பள்ளிப் பருவத்தில் அறிவு உள்வாங்கப் படுகிறது. வளர்ந்த பிறகு அது சோதனைக்கு ஆட்படுத்தப் படுகிறது, அதில் தோல்வி நேர்கையில் கோபம் வருகிறது. தோல்வி அடையும் இடத்தில் கோபம் என்பது இயல்பு. இக்கோபங்களே மனிதனின் ஆற்றாமைக்கு காரணமாகின்றன. சோதிக்கப் படுவதை மனிதன் விரும்பவில்லை. பில்கேட்ஸ் முதல் பிச்சைக்காரன் வரை, வெற்றியைப் பெறவும் அதை தக்க வைக்கும் சோதனைகளிலேயே வாழ்க்கையைச் செலவிட வேண்டியிருக்கிறது. மனிதன் எப்பொழுதெல்லாம் தமது ஆறாவதறிவாகிய பகுத்தறிவின் சோதனையை எதிர்கொள்கிறானோ அப்பொழுதெல்லாம் அவன் நடைமுறையை வெறுக்கிறான். ஆதலால் பகுத்தறிவின் தொடக்ககாலம் (பள்ளிப் பருவம்) அவனுக்கு இனிமை தருவதாய் இருக்கிறது.

இரண்டாவது ஆசை, புத்தன் வழியில் யோசித்து பார்த்தால் முதல் பதிலிலும் ஒரு வகை ஆசை இருக்கிறது. இருந்தாலும் மனிதனுக்கு அறிவு என்பது பிறப்பியல்பு என்பதால் ஆசை எனக்கு இரண்டாவதாகிறது. மனிதனுக்கு ஆசை என்பது பகுத்தறிவின் பயனால் தான் வருகிறது. ஆனால் ஒருமுறை மனிதன் ஆசைப் பட ஆரம்பித்து விட்டால் அவனால் அதன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. இதுவே அவனது ஆசைகள் நிறைவேறிய காலமாகிய பள்ளிப் பருவத்தில் அவனது கவனத்தை திசைதிருப்புகிறது. அது அவனுக்கு இனிமை தருவதாகிறது.

எனக்கு தோன்றியவரை இவை இரண்டும் விடையாக கிடைத்திருக்கின்றன. முழுவதுமாக உடன்பட முடியாவிட்டாலும் ஒரு எண்பது சதவிகிதம் என் கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கவே செய்கிறது. உங்கள் கருத்துக்களையும் தெரியப் படுத்தவும்.

2 comments:

rajan said...

ஆசைக்கும் முன்னால் அறிவா??? ரொம்ப அபத்தமாக இருக்கிறது.
அறிவு இல்லாத மனிதன் விலங்கிற்கு சமம் என்பார்கள். அப்படியானால் விலங்கு நிலையிலிருந்தால் தான் கவலைகளும் கலக்கங்களும் வராது என்கிறீர்களா?

Go.Ganesh said...

நான் சொல்ல வந்தது மனிதனின் கடந்த கால நினைவுகளின் இன்பத்தைப் பற்றி மட்டுமே. மற்றபடி மனிதனின் அன்றாட கவலைகளைப் பற்றியும் கலக்கங்களைப் பற்றியும் எழுதுவதற்கு எனக்கு அனுபவம் போதாது. மன்னிக்கவும்.. எனக்கு தெரிந்த வரையில் இதனைச் சொல்லியிருக்கிறேன்.
அது சரி உங்களுக்கு கடந்த கால நினைவுகள் இன்பமாய் தெரிவதன் காரணமென்ன?