Friday, March 25, 2005

புதுக்கவிதை உணர்வுகள்

நேற்று ஒரு ஆழ்ந்த யோசனை. எப்படி என்னாலும் கவிதை எழுத முடிகிறது? மிகப் பிரபலமாக இல்லாவிட்டாலும், என்னைத் தெரிந்தவரால் ஒரு கவிஞன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளேன். எப்படி இது சாத்தியமாயிற்று?. கண்டிப்பாக எனக்கு யாப்பிலக்கணமும் மரபிலக்கணமும் இம்மியளவும் தெரியாது. கம்பனையும், இளங்கோவையும் அதிகமாய் வாசித்ததில்லை. வள்ளுவனும் எனக்கு பள்ளிப் புத்தகங்கள் வரையிலேயே பழக்கம். மாணிக்கவாசகரையும் ஆண்டாளையும் கோயிலுக்கு செல்லும் போது துணைக்கு மட்டுமே அழைத்துச் சென்றுள்ளேன். அப்படி இருந்தும் எப்படி இப்படி?

நான் எழுதும் கவிதைகளுக்கு புதுக்கவிதை என்று பெயர், என்பது தெரியவந்தது. இது சரியா? எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றா? இதைத் தொடரலாமா? இதற்கான வரையறை என்ன? என்று படிபடிப்படியான கேள்விகள். விடைகளும் சாதகமாகவே தோன்றின. ஆனால் ஒரு பத்துக் கவிதைகளை எழுதியதுமே, இந்த முயற்சி நினைத்த அளவிற்கு எளிதான ஒன்று அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் மரபுக்கவிதையின் ஆதாரங்களை தேடலானேன். சமீபத்தில் தூர்தர்ஷன் ஒரு கவனக நிகழ்ச்சியினை ஒளிபரப்பியது. அதில் சென்னைக் கல்லூரி மாணவர் ஒருவர் மரபுக்கவிதை இயற்றுவதை ஒரு கவனகமாக செய்தார். பயிற்சியும் புலமையும் இருந்தால் மரபுக்கவிதைகள் எழுதுவதில் எந்த சிரமும் இருக்காது என்ற உண்மையும் விளங்கியது.

ஆனால் புதுக்கவிதை எழுதுவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. கவிஞன் கற்பனைக் கற்பூரத்தைப் பற்ற வைக்க வேண்டும், ஆனால் அதற்கு தீக்குச்சியைத் துணைக்கு அழைக்கக்கூடாது. சொற்சிக்கனம் என்பது புதுக்கவிதையில் நீக்க முடியாத அங்கம். கற்பனை என்பது புதுக்கவிதையின் ஆதாரம். இப்படி புதுக்கவிதைக்குத் தேவையான தகுதிகள் அதிகம். இதை எல்லாவற்றையும் விட, வாசிப்பவனின் நாடித் துடிப்பை, கவிஞன் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும். மனிதன் தமக்கு கிடைக்கும் சிறிய கால அவகாசங்களில், அவசரமாக வாழ்க்கையை வாழ்ந்து விட துடிக்கிறான். சுயவளர்ச்சி அதில் அவனுக்கு தலையாய கவலையாகிவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் அவனுக்கு கவிதையினைக் கொண்டு செல்ல வேண்டுமாயின், அக்கவிதைகள் நெற்றிப் பொட்டில் குண்டு துளைக்க வேண்டும், நடைமுறை வாழ்க்கையின் கண்ணாடியாக வேண்டும். இப்படி புதுக்கவிதை எழுதுபவனின் கடமை கடினமானது. இதில் எதையும் அவனால் விடுக்க முடியாது.

இப்படி தேர்ந்த வித்தையை பலர் இக்காலத்தில் மிக இலகுவாக கையாளூகின்றனர். இது தான் ஆச்சரியப்பட வைக்கிறது. புதுக்கவிதை எழுதுபவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அதன் எளிமையும், சமூகவியலோடு அதற்கு இருக்கும் நெருங்கிய தொடர்பும்தான். பாரதிதான் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப் படுகிறான். அவனைப்பற்றி எழுத எனக்கு தகுதி கிடையாது. ஆனால் என்னைக் கவர்ந்த தற்கால கவிஞர் மூவர் மேத்தா, அப்துல் ரகுமான் & வைரமுத்து. சொற்களையும் தங்கள் கற்பனையையும் இவர்கள்கையாளும் விதம் அற்புதம்.

மரக்கொலையை பற்றி மேத்தா இவ்வாறு எழுதுகிறான்
"இலைச் சிறகுகள் இருந்து மரமாகிய
உங்களால் பறக்க முடியவில்லையே - ஏன்
வேர்களே உங்களுக்கு விலங்காகி விட்டனவா?"

புன்னைகையைப் பற்றியும் கண்ணீரைப் பற்றியும் அப்துல் ரகுமான் பின்வருமாறு கூறுகிறான்
"புன்னகை இதழ்களின் கண்ணீர்
கண்ணீர் கண்களின் புன்னகை"

வைரமுத்து
"எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைதட்டும்
தடையொன்றுமில்லை மழை வந்து கேட்கட்டும்"
என்கிறான்.

கற்பனையையும் சொல்வளத்தையும் தாண்டி இவர்களுக்கு புதுக்கவிதையின் நோக்கம் தெளிவாக புரிந்திருக்கிறது என்றே நான் உணர்கிறேன். இப்படியாக கவிஞர்கள் கற்பனையை முதலீடாக வைத்துக் கொண்டு வாசிப்பவனை சொற்களால் விலைக்கு வாங்குகிறார்கள். புதுக்கவிதை கண்டிப்பாக படைப்பாளிகளை வெளிக்கொணர்கிறது. உணர்வுகளும் படைப்புகளாகின்றன.

12 comments:

vanishri said...

இந்த கானாப் பாட்டு, ஹைக்கூ இதப்பத்தி ஏதாச்சும் தெரியுமா??
புதுக்கவிதைங்கிற பேர்ல ஆடிக்குப் பின் ஆவணி, தாடிக்குப் பின் தாவணின்னு எழுதறவங்களை என்ன சொல்றீங்க....
கிடைச்சதை கிறுக்கிறவங்க தான் ஜாஸ்தியா இருக்காங்க...

Go.Ganesh said...

ஹைக்கூவைப் பத்தி எழுதறதுக்கு எனக்கு அனுபவம் போதாது.
ஆனா நீங்க சொல்ற மாதிரி புதுக்கவிதைங்கிற பேர்ல எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க..
யாரையும் வருத்தப்பட செய்யாதவரைக்கும் எந்தப் படைப்பையும் உதாசீனப் படுத்தக் கூடாதுங்கிறது என்னோட கருத்து.
நீங்க சொன்ன கவிதையிலும் ஒரு கவித்துவம் இருக்குன்னு எனக்கு படுது. அது கவிஞனோட வேதனையா இருக்கு.... இதில நாம சங்கடப்பட ஒரு விஷயமுமில்லை.
மன்னிக்கவும் என்னால் உங்களுடன் ஒப்ப முடியவில்லை

Vaa.Manikandan said...

இல்லை கணேஷ்,
கவிதை என்னும் பெயரில் சில குப்பைகளை முன்வைக்கும் போது நிச்சயமாக விமர்சிக்கவேண்டும் என்பது என் கருத்து.அது கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர்களின் கடமையும் கூட.விமர்சனத்தால் ஒரு படைப்பாளியும் அவனது படைப்பும் கூர் தீட்டப்படலாம்.
ஆனால் இன்றைய கவிதைச்சூழலில் விமர்சனத்தை ஏற்க யாரும் தயாரில்லை என்றே தோன்றுகிறது.குறிப்பாக இணைய உலகில்.
விமர்சனத்தை ஏற்காதவன் படைப்பளியாகவே இருக்க முடியாது.

வா.மணிகண்டன்.

இளவஞ்சி said...

எல்லாமே ஒரு முயற்சிதான் நண்பரே... இணையத்தில் ஏன் எழுதுகிறோம்?

முழுசுதந்திரம்!

ஒர் வலைப்பதிவு தொடங்க வைரமுத்தாகவோ இல்லை வாலியாகவோ இருக்கவேண்டுமா என்ன? நமக்கு நாமே எடிட்டர்! இதைதான் இப்படித்தான் எழுதவேண்டும் என்று இங்கு யாரும் சொல்லமுடியாது. மேலும் வலைப்பது வைத்துள்ள மாலன், மனுஸ்யபுத்திரன், நாம் என எல்லோருமே ஒரே ரகம் தான் இங்கே!

The rule of this game is very simple! "சரக்குள்ளது கவனம் பெறும்".

எனவே கவலைப்பட ஒன்றுமில்லை!

Vaa.Manikandan said...

சரிதான் இளவஞ்சி,
சரக்குள்ளது கவனம் பெறும் தான்.ஆனால் மோசமானவற்றை பார்க்கநேரும் போது அமைதியாக இருந்து விடலாமா?
ஒரு நல்ல படைப்பு திறன் உள்ளவன் கூட நல்ல் விமர்சனம் இல்லததால் மோசமான படைப்பை அவனும் அறியாமல் தந்து கொண்டிருக்க கூடும் அல்லவா?
மனுஷ்ய புத்திரன்,மாலன் எல்லாம் வலைப்பதிவில் எழுதும் எல்லோருடனும் சரிசமம் என்று எப்படி சொல்ல முடியும்?அவர்கள் நவீன தொழில்நுட்ப்பத்தின் ஈர்ப்பின் காரணமாக வந்திருக்க கூடும் அல்லவா?

அவர்களின் படைப்பில் நிச்சயமாக ஒரு தரம் இருப்பதனை எற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

வா.மணிகண்டன்

Go.Ganesh said...

அன்பின் மணிகண்டன் தங்களின் வரிகளுக்கு நன்றி

நீங்கள் சொல்வது போல் விமர்சனத்தை ஏற்காதவன் படைப்பாளியாகவே இருக்க முடியாது என்பது 100% உண்மை. ஆனால் விமர்சனம், வதந்தி, விருது இதெல்லாம் பாராட்டின் மறுவடிவம் என்பது அனுபவத்தில் மட்டுமே பெற முடிந்த உண்மை. அனுபவம் என்பது ஊக்கத்தில் மட்டுமே கிடைக்கப்படும் பொக்கிஷம். துவக்க காலத்திலேயே படைப்பாளியை விமர்சனம் செய்தால் அது அவனை முடக்கி விடுமே தவிர ஊக்கப் படுத்தாது. அதனால் தான் நான் சொன்னேன் யாரையும் வருத்தப்பட செய்யாதவரைக்கும் எந்தப் படைப்பையும் உதாசீனப் படுத்தக் கூடாதென்று. கவிஞனின் துவக்க கால படைப்புகள் நேர்த்தியாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை அது யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதியாக இருக்க வேண்டும். இளவஞ்சி சொல்வது போல அவனுக்கு முதற்தேவை சுதந்திரம், அதன் பின்பு வழிகாட்டல். இவ்விரண்டையும் தராமல் தேர்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்றே எனக்குத் தோன்றுகிறது.

உங்கள் மறுமொழியைக் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்.

vanishri said...

நான் எழுதினதில இவ்வளவு விவாதமா?
கணேஷ் ! நீங்கள் என்னுடைய விமர்சனத்துக்கு தந்த விளக்கம் நன்றாக இருந்தது.
விமர்சனம் என்பது ஆக்கப்பூர்வமாகவும் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்பது நல்ல கருத்து.
"விமர்சனம், வதந்தி, விருது இதெல்லாம் பாராட்டின் மறுவடிவம்" என்பதும் அதை அறியும் மனம் அனுபவத்தினால் மட்டுமே வரும் என்பதும் அழகான அறிவுப்பூர்வமான கருத்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்

Vaa.Manikandan said...

கணேஷ்,
கடுமையான விமர்சனங்கள் வைப்பதை தவிர்க்கலாம் தான்.ஆனால் விமர்சனம் தேவை என்பது என் கருத்து.
நல்ல படைப்பாளி விமர்சனங்களிலிருந்து பீனிக்ஸ் போல எழுவான்.நல்ல புத்தகங்களை படிப்பதன் மூலம் தன்னை தரப்படுத்திக்கொள்ள விரும்புவான்.

இளவஞ்சி said...

//மனுஷ்ய புத்திரன்,மாலன் எல்லாம் வலைப்பதிவில் எழுதும் எல்லோருடனும் சரிசமம் என்று எப்படி சொல்ல முடியும்? //

நான் சொல்லவந்தது தரத்தை அல்ல. நம் அனைவருக்கும் இங்கே முழுசுதத்திரம் என்பதை! இங்கே மாலன் எழுதினாலும் பிரசுரமாகும். நான் எழுதினாலும் பிரசுரமாகும் :) இங்கே தரமான(எது தரம் என்பதில் ஆளாளுக்கு ஒரு அளவுகோல் உண்டு! ) படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்படுவதில்லை. தரமான படைப்புகள் தாமாகவே கவனம் பெறுகின்றன. படிப்பதும் ஒதுக்குவதும் நமது விருப்பம். எதை எழுத வேண்டும் என்பது எழுதுபவரின் விருப்பம் அல்லவா?

நல்ல விமர்சனங்களே படைப்பாளிகளை பட்டை தீட்டுகிறது. உண்மை. இங்கே எந்த தகுதியில் நீ எழுதுகிறாய் என்பதை விட, எழுதப்பட்டது பற்றிய எந்த விமர்சனங்களுக்கும் தடை இல்லை.


என்னைப்பொருத்தவரை டீ கடையில் தினத்தத்தி படிப்பவனும் வாசகன் தான். ஓஷோவின் தம்மபதத்தை பிரித்து மேய்பவனும் வாசகன் தான். அவரவர் தளத்தில் அவரவர் ரசனை. அதனால்தான் ஆடிக்குபின் ஆவனி என்பதை என்னால் புறக்கனிக்கமுடிவதில்லை! அதையும் ரசிக்க மக்கள் உண்டு.இந்த கவிதை உயிர்மையில் வந்திருந்தால் நாம் கேட்கலாம். தினத்தந்தியில் வந்தால் தப்பா என்ன? இங்கெ இனையத்தில் அந்த அளவுகோலும் கிடையாது. அதனால்தான் தகுதி உள்ளது தானாககே கவனம் பெறும் என்றேன்.

Vaa.Manikandan said...

நன்றி இளவஞ்சி

இப்னு ஹம்துன். said...

அன்புள்ள கணேஷ்,
கவிதை உணர்வுள்ள உங்களைக் கண்டுக்கொண்டதில் மகிழ்கிறேன்.
எனக்கும் பிடித்தக் கவிஞர் 'அப்துல் ரகுமான்'.

'என்னைக் கண்டதும்
கவிழும் உன் இமைகள்
கொசுவலையா? மீன்வலையா?'

என்று நுட்பமாக எழுதக்கூடிய அற்புதமான கவி அவர்.

படிமங்களாலேயே பெயர் வாங்கிவிடுகிற இன்றைய நவீனக் கவிஞர்களிடையே படிமங்களை சரியாகவும் திறமையாகவும் பயன்படுத்திய முதல் கவிஞர். (அவரைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன-என் எழுத்துக்களைப் படிக்காதீர்கள் என்று அவராலேயே கேட்டுக்கொள்ளப்பட்டது வரை). சரி அதை விடுவோம், இன்றைய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் குழாயடிச் சண்டையை விட மோசமாக குழு பிரிந்து சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.இந்த இழிநிலை தமிழில் தான் உள்ளது. அவர் எழுதுவது இலக்கியமில்லை-இவர் எழுதுவது தான் இலக்கியம் என்று தாங்களாகவே தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

'எது கவிதை என்பதை காலம் தீர்மானிக்கும்' - வைரமுத்து.

தொடர்ந்து உங்கள் கவிதைகளை கருத்துக்களை வையுங்கள்.

இப்னு ஹம்துன். said...

அன்புள்ள கணேஷ்,
கவிதை உணர்வுள்ள உங்களைக் கண்டுக்கொண்டதில் மகிழ்கிறேன்.
எனக்கும் பிடித்தக் கவிஞர் 'அப்துல் ரகுமான்'.

'என்னைக் கண்டதும்
கவிழும் உன் இமைகள்
கொசுவலையா? மீன்வலையா?'

என்று நுட்பமாக எழுதக்கூடிய அற்புதமான கவி அவர்.

படிமங்களாலேயே பெயர் வாங்கிவிடுகிற இன்றைய நவீனக் கவிஞர்களிடையே படிமங்களை சரியாகவும் திறமையாகவும் பயன்படுத்திய முதல் கவிஞர். (அவரைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன-என் எழுத்துக்களைப் படிக்காதீர்கள் என்று அவராலேயே கேட்டுக்கொள்ளப்பட்டது வரை). சரி அதை விடுவோம், இன்றைய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் குழாயடிச் சண்டையை விட மோசமாக குழு பிரிந்து சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.இந்த இழிநிலை தமிழில் தான் உள்ளது. அவர் எழுதுவது இலக்கியமில்லை-இவர் எழுதுவது தான் இலக்கியம் என்று தாங்களாகவே தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

'எது கவிதை என்பதை காலம் தீர்மானிக்கும்' - வைரமுத்து.

தொடர்ந்து உங்கள் கவிதைகளை கருத்துக்களை வையுங்கள்.