Tuesday, November 30, 2010

பயணம்

பேரிரைச்சலுடன்
மூச்சிறைத்தபடி
சென்று கொண்டிருக்கிறது
ரயில் வண்டி
கடக்கும் இடங்களின்
வாசனையைத்
தன்னுள் நிரைத்தபடி

கட்டணத்திற்கேற்ப
வகுப்புகளும்
வகுப்புகளுக்கேற்ற
வசதிகளும் உண்டு

முன்பதிவு
செய்யப்படாத பெட்டியில்
வாசற்படியில் அமர்ந்தபடி
வந்து விழும்
ஜன்னல் வழி
எச்சில்களை குப்பைகளை
பொருட்படுத்தாமல்
வண்டிச்சக்கரத்தின்
தண்டவாள பதிப்புகளை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
கணக்கின் பயனறிந்த
ஒருவன்

ஒரு கணம்

கவண் குறிகளுக்கோ
எய்த அம்புகளுக்கோ
முறிந்த விற்களுக்கோ
தப்பித்த ஆப்பிள் நீ

உன் கண் சிமிட்டலில்
கிறங்கிய விழிகளில்
பிதுங்கிய இதழ்களில்
முனகல் மொழிகளில்
ஒரு துளியென தான்
உன்னில் புதைகிறேன்
உன்னை நிரைக்க

பிறக்கக் கூடும்
ஒரு ஆதாமோ, ஏவாளோ
அல்லது
ஒரு ஆப்பிளோ

Tuesday, November 02, 2010

கைகள்

என் தோள்களில் பதித்து
கழுத்திறுக
கைகளைக் கட்டிக்கொள்கிறது
குழந்தை

இணைந்த அதன்
கைகளைப் பிரிக்கிறேன்.
என் செயலில்
கழுத்திறுக்கினால் வலி
என்பதுவோ
வலிக்க இறுக்கக் கூடாதென்னும்
நேர்த்தியோ
சென்றடையலாம் குழந்தைக்கு

அடுத்த முறை
தோள்களில் பதிகையில்
குழந்தையின் கைகளாக
தெரிவதில்லை அவை.

Tuesday, October 19, 2010

தனிமை

ஆளுயரக் கண்ணாடி
என் தனிமை.
வளைந்த நெளிந்த
குனிந்த நிமிர்ந்த
என்னை நான்
பார்த்தாகி விட்டது.

உங்களால் முன் வந்து
நிற்க முடியாதென்பதும்
எனக்குத் தெரியும்.
இருந்தும்
ஒரேயொரு கோரிக்கை!
கண்ணாடியை உடைக்கும்
சூக்குமத்தையாவது கற்றுத்தாருங்கள்.
சிதறல்களின் பிம்பங்களில்
எனது பன்மையைப்
பார்த்துக் கொள்கிறேன் நான்.

Monday, October 11, 2010

விக்கி என்கிற விக்னேஷ்

விக்கி என்கிற விக்னேஷ்ஷை அவனின் பத்தாவது வயதிலிருந்து எனக்குத் தெரியும். அது நான் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி சென்ற முதல் வருடம். வயது வசத்தில் கல்லிகாஸ்கின்ஸ் காற்சட்டைகளுக்கு மாறி, முதன் முதலாக அதை அணிந்து வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்ற பொழுது “அண்ணே! பாகி பாண்ட் புதுசா இருக்கு” என்று என்னிடம் கேட்டுவிட்டு அவன் அப்பாவிடம் “அப்பா கணேஷ் அண்ணன் பாண்ட்ட பாருங்க” என்று என்னை நடுத்தெருவிலேயே நெளிய வைத்த துடுக்கு பையன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் என நினைக்கிறேன். எங்கள் வீடிருந்த தெருவின் முனையில் தான் அவனின் வீடிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து படிப்பு, பயணம், நுகர்வு, வழிபாடு என எல்லாவிதமான தன்னார்வ-சமூக நடவடிக்கைகளுக்கும் அவனது வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். பெரும்பாலும் எந்நேரமும் விக்கி தெருவில் விளையாடிக்கொண்டு தான் இருப்பான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில சொன்னது போல அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பால்யத்து என்னை நினைவு படுத்துவான். வெவ்வேறு நிலைகளில் என்னுடையதும் அவனுடையதுமான பரிணாமம் ஒரே தெருவில் நிகழ்ந்து கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்.

விக்கியின் அப்பா இன்முகத்துடன் நன்றாக பேசுவார். ஹைபர் டென்ஷன் என்னும் இரத்த அழுத்தம் பரம்பரை வியாதி என்பதற்கு மருத்துவர்கள் இரு காரணம் கூறுவர் ஒன்று மரபியல் சார்ந்தது இன்னொன்று வாழ்வு முறை சார்ந்தது. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரனான விக்கியின் அப்பாவிற்கு இன்முகமும், பேச்சு சாதுர்யமும், விருந்தோம்பலும் வாழ்வு முறையாலும் மரபியல் வழியாகவும் அவரின் தாத்தாவிடமிருந்து வாய்த்திருக்கலாம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதாலும் எனக்கும் அவரின் மேல் மரியாதை அதிகம். விக்கியின் அம்மா எனது அப்பாவுடன் பணி புரிந்தவர் என்பதாலும், ஒரே தெருவில் வசித்து வந்தோம் என்பதாலும் அடிக்கடி அவருடன் பேச நேர்ந்ததும் உண்டு. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் வெற்றிகரமாக இடம் வாங்கிவிட்ட என்னிடம் விக்கியின் அப்பா அடிக்கடி பேசியது அவனுடைய கல்வி சார்ந்த விஷயங்களுக்காகத்தான். மகனின் படிப்பு பற்றிய பேச்சுக்களில் மட்டும் அவரின் முகத்தில் ஒருவித கவலை ரேகை படியும். இயல்பாகவே இன்முகத்துடன் இருக்கும் அவரின் இந்த பேச்சுக்கள் மட்டும் என்னை மிகவும் நெருடவே செய்தன. ”கவலைப்படாதீங்க சார், விளையாட்டுத்தனம் குறைஞ்சா தன்னால படிக்க ஆரம்பிச்சுடுவான்” என நானும் எனக்குத் தெரிந்த பக்குவ ஆறுதல்களித்ததுண்டு. எந்நேரமும் தெருவில் விளையாடும் சிறுவனிடம் அப்பொழுது நல்லுரை வழங்கும் அளவிற்கு நான் வளரவில்லை. அதனால் விக்கியிடம் அவனது அப்பாவின் கவலைகளைப் பற்றி நான் பேசியது கிடையாது.

விக்கியிடம் பேசுவதற்கு நிறைய இருந்தது. எங்கள் தெரு சிறுவர்கள் கண்ணாமூச்சி ஆட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கார்டூன் நெட்வொர்க் பக்கமும், கணினி விளையாட்டுக்களின் பக்கமும் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்த காலமது. விக்கியிடம் அடிக்கடி நான் கேட்கும் கேள்வி “டிவி பார்க்கலையா விக்கி?”. ”கார்டூன் நெட்வொர்க் சூப்பரா இருக்குன்னு எல்லாரும் பார்க்கறாங்க நீ பார்க்கலையா?”ன்னு கேட்டா, “ஒரு ப்ரோக்ராம் முடிஞ்சதும் அம்மா படிக்க சொல்லிருவாங்க. அரை மணி நேரம் தான் பார்க்க முடியும்”னு அந்த வயதில் ”ப்ரோக்ராம்” என்பதற்கான சரியான அர்த்தத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவன். ஒரு முறை டிவிஎஸ் சாம்ப்பில் (TVS Champ) சென்று கொண்டிருந்த என்னை அவனது மிதிவண்டியில் போட்டியிட்டு வெற்றி பெற முயன்றவன். ஒல்லியான தேகமாதலால் அவனிடமிருந்த சுறுசுறுப்பு வியப்பிற்குரியது. ”பால்யத்து என்னை” என நான் சொல்வதும் கூட அவனிடம் நான் கவனித்த அந்த சுறுசுறுப்பை எனக்கான அடையாளமாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியாகக் கூட இருக்கலாம். விக்கியிடம் பேசுவதில் கிடைக்கும் விஷயங்களுக்கும் அவனுடைய பெற்றோர்களிடம் அவனைப் பற்றி பேசுவதில் கிடைக்கும் விஷயங்களுக்கும் இருந்த வித்தியாசம் ”தலைமுறை இடைவெளி” என்பதற்கான அர்த்தமாக நான் கருதினேன். இப்படி அவனிடமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் பல.

நான் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பு முடித்த தருணம் விக்கியின் குடும்பம் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தது. விக்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் வாரயிறுதி வகுப்புக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் பார்த்து பேசியிருக்கிறேன். அவ்வப்பொழுது அவனது அப்பாவையோ அம்மாவையோ பார்க்க நேரிடுகையில் அவனைப் பற்றிய விசாரணைகளில் விக்கி வளர்ந்து கொண்டிருந்தான். இரு மாதங்களுக்கு முன்பு அவன் அப்பாவை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். நான்கைந்து வருடம் கழித்து அவரைப் பார்த்தேன். தலை நரைத்து கொஞ்சம் வயதானவராக தோன்றினார். அவருடைய விக்கி பற்றி கவலைகளும் வயோதிகம் அடைந்திருந்தது. இப்பொழுது விக்கி இரண்டாமாண்டு பொறியியல் படிப்பதாக கூறினார். விக்கியின் நண்பர்களுடனான ஊர் சுற்றல் பற்றியும், அவனுடைய பேராசிரியர்களின் புகார்களைப் பற்றியும் குறைபட்டு கொண்டிருந்தார். ”பத்தாவது பாசாவானான்னு யோசிச்சோம். எப்படியோ பாசாகிட்டான். பண்ணிரெண்டாவதுல நல்ல மார்க் வாங்குவானான்னு கவலைப் பட்டோம். ஓரளவிற்கு நல்ல மார்க் வாங்கி காலேஜ்ஜும் சேர்ந்திட்டான்” என சொன்னார். இடையிடையே அவனுடைய சாதனைகளையும் அவர் பட்டியலிட்டது விக்கியை அவர் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதனைத் தெளிவு படுத்தியது. விக்கியின் அப்பா பேசிய விதத்திலிருந்து அவரிடம் அவனது எதிர்காலம் பற்றிய நம்பிக்கை முளைத்திருப்பதாக நினைத்துக் கொண்டேன். என்னுடைய அவதானிப்பில் விக்கி கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை அவ்வளவே. பெற்றோர்கள் எப்பொழுதும் கவலைப் பட்டுகொண்டிருக்கும் விதத்தில் பிழைகள் செய்யும் சீரழிந்த சிறுவனல்ல. அவனின் முழு கவனமும் விளையாட்டிலிருந்ததனால் நல்ல மதிப்பெண் பெறாத மாணவனாக அவன் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

இந்த வாரம், வாரயிறுதி விடுமுறைகளில் நவராத்திரி கொண்டாட கோவில்பட்டி சென்றிருந்தேன். அதிகாலை நான்கு மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் சென்றிறங்கினேன். அப்பாவை அந்த நேரத்தில் எழுப்ப வேண்டாம் என நினைத்து அருகிலிருந்த ஆட்டோக்காரரிடம் விசாரிக்கலானேன். அவர் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நூற்றைம்பது ரூபாய் கேட்கவே பழைய பேருந்து நிலையம் வரை நடக்கலானேன். புதிய பேருந்து நிலையத்திலிருந்து இளையரசநேந்தல் ரோடு வழியாக நடக்கையில் சாலை எங்கும் விளம்பரத் தட்டிகள். ”கவிஞர் கனிமொழியே, எதிர்காலமே, அஞ்சா நெஞ்சனின் சகோதரியே, நாளைய இந்தியாவே” என விதவிதமாக வாசகங்களைத் தாங்கி நின்று கொண்டிருந்தன. வேலை வாய்ப்பு பயிற்சி முகாமுக்காக கனிமொழி அன்று கோவில்பட்டி வருகிறார் என அறிந்து கொண்டேன். ஒருவாறு ஐந்து மணிக்கு வீட்டை சென்றடைந்தேன். எங்கள் வீடிருந்த பகுதி சண்முக சிகாமணி நகர். அங்கிருக்கும் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தான் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாம் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாயிற்று. ஒலிபெருக்கிகளின் தயவில் முகாமில் கனிமொழி பேசியதை எங்கள் வீட்டிலிருந்தபடியே நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். மேற்கோள்களுடனும் இந்த முறை உத்வேகமிக்க பாடல்களுடன் கனிமொழி நன்றாக உறையாற்றினார். முகாம் மதியம் ஒரு மணியளவில் முடிவுற்றது.

மாலை ஐந்து மணியளவில் எதிர் வீட்டு சிறுவன் செல்வம், முகாமிற்கு வந்த யாரோ ஒருவன் சாலை விபத்தில் இறந்து விட்டதாக தகவல் சொன்னான். என்னால் முடிந்த பச்சாதாப வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு அம்மாவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றேன். வீட்டிற்கு வரும் பொழுது எங்கள் தெரு முனைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் தான் தெரிந்தது இறந்த அந்த மாணவன் விக்கி என்று. அவனும் அவனுடைய நண்பர்கள் இருவரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது வாகனமொன்று மோதி தலையில் அடிபட்டு சாலையிலேயே விக்கியின் உயிர் பிரிந்திருக்கிறது. மூன்று நபர்கள் ஒரே வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். அதில் மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு தலையில் அடிபட்டதனால் விக்கியின் உயிர் பிரிந்திருக்கிறது. தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்தவன் இன்று அதே தெரு முனையின் பேசு பொருளாக ஆகியிருந்தான். என்னை அறியாமல் அவனிடம் பேசிய விஷயங்களின் நினைவுகளுடனும் சில கண்ணீர்த்துளிகளுடனும் அன்றைய இரவு கழிந்தது.

விக்கிக்கு இப்பொழுது இருபது வயதிருக்கும். ஒன்பதாவது வகுப்பிலேயே இரு சக்கர வாகனம் ஓட்ட ஆரம்பித்திருந்தவன், கல்லூரி மூன்றாமாண்டு படிக்கையில் வாகனத்தில் சென்றதொன்றும் வியப்பான விஷயமில்லை. ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் ஒன்பதாம் வகுப்பில் லைசன்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிச் சென்றான். இன்று சாலை விதிகளை மீறி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். நான் பார்த்த வரையில் கோவில்பட்டியில் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருவதும், டியூசன் செல்வதும் வழக்கமான விஷயமாகி விட்டது. இந்த வழக்கம் ஒரு துடுக்கான இளைஞனின் உயிரைப் பறித்து விட்டிருக்கிறது. இதில் பள்ளிகளின் கவனமும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. மாணவர்களும் தினம் மூன்றோ அல்லது நான்கோ டியூசன் செல்கிறார்கள். அவர்களின் உடல் அயர்ச்சியைக் கருதி பெற்றோர்களும் வாகனங்களை வாங்கி கொடுக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை.

மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் பள்ளியிலேயே கற்பிக்கப் படல் வேண்டும், பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் வகுப்புகள் எடுக்கக் கூடாது, மாணவர்கள் பள்ளிகளுக்கு இரு சக்கர-நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லக் கூடாது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும். இல்லையெனில் எண்ணற்ற விக்கிகளை இழக்க நேரிடும்.

கோவில்பட்டி திமிர்

கோவில்பட்டி சிறிய கரிசல் நகரம். அங்கேயிருந்து நெறைய படைப்பாளிகள் வந்திருக்காங்க. 1980களின் தொடக்கத்திலேயே அந்தச் சிறிய நகரத்தில் பேர் சொல்லக்கூடிய 20 படைப்பாளிகள் இருந்தனர். கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலர் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தனர். தேவதச்சன், பிரதீபன், கௌரிசங்கர், க்ருஷி வாத்தியார், அப்பாசாமி, வித்யாசங்கர் போன்றவர்கள் இருந்தனர். பின்னர் சமயவேல், ஜோதிவிநாயகம் போன்றவர்கள் அங்கு வந்தனர்.

இவர்களோடு என்னைப் போன்றவர்கள் எழுத வந்தோம். அது நான் பட்டாளத்திலிருந்து திரும்பிய நேரம். என்மனம் போல கோவில்பட்டி பலவிதமான சிந்தனையோட்டங்களுடன் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு தெருமுனையிலும் ஒரு சிந்தனைப்போக்கு நின்று அழைத்துக் கொண்டிருந்தது. பிரான்சு நாட்டில்கூட இப்படி இருந்திருக்குமா என்று தெரியாது. `ஜோதிபாசு சலூன்' வாசலில் பால்வண்ணம் போன்றவர்களுடன் ஒரு கூட்டம் இடதுசாரி இலக்கியம் பேசிக்கொண்டிருக்கும். அங்கிருந்து தெற்கு பஜார் முனையில் ஒரு நகைக்கடை வாசலில் தேவதச்சனுடன் ஒரு கூட்டம் ஜி. கிருஷ்ணமூர்த்தியின் உரைகளை அலசிக் கொண்டிருக்கும். அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு தெற்கு பஜாருக்குள் நடந்தால் ஒரு முழு நேர இளம் காதலர் குழு அன்றன்று நடந்த சந்திப்புகள், கடிதப் போக்குவரத்துகள் குறித்து மனம் நடுங்கப் பேசிக்கொண்டிருக்கும். தாஸ்தாயெவ்ஸ்கியின் `வெண்ணிற இரவுகளை' விட்டு ஒருபோதும் வெளிவரத் தயாராக இல்லாத குழு. இவர்களைத் தாண்டி சில தப்படிகள் உள்ள படிக்கட்டுகளில் ஏறி காந்தி மைதானம் வந்தால் அது திறந்தவெளி விவாதக் கூடமாக மாறியிருக்கும். இரவு முழுவதும் அங்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல சிந்தனையுள்ளவர்களும் அங்கு கலந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கோவில்பட்டியில் நான் பழகி வந்த மனிதர்களின் மனநிலை காசு,பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்காரியங்களுக்குச் செலவிடுபவர்களாக இருந்தது.

- ச.தமிழ்செல்வன் (http://groups.google.co.in/group/keetru/msg/c4c66bb6cd8cc744)

Friday, October 01, 2010

எந்திரன் - விமர்சனம்

முதல் நாள் முதல் ஷோ பாத்திட்டு வந்து விமர்சனம் எழுதலேனா அதுவும் தலைவர் படத்துக்கு எழுதலேனா நானெல்லாம் சுத்த வேஸ்ட். தலைவர்னு சொல்லிட்டதாலேயே இந்த விமர்சனத்துக்கு ஒருவித சாயல் வந்திருக்கும். அது கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். ராவோட ராவா 500 கி.மீ பஸ்ல வந்து, ஊர்ல காலடி வச்சது காலை 0230 மணிக்கு. 0700 மணிக்கு முதல் ஷோ. இவ்வளவு மெனக்கெட்டது எல்லாம் அந்த தலைவர்ங்கிற சங்கதிக்காகத்தான். அந்த சாயல் இல்லாம என்னால விமர்சனம் எழுத முடியாது. ஒண்ணு மட்டும் சொல்ல முடியும் தலைவருக்காக மட்டுமே இந்த விமர்சனம் இல்லை.

ஒரு எந்திரத்துக்கு மனித உணர்ச்சிகள் இருக்கலாமா? இருந்தால் என்ன ஆகும்? அப்படின்னெல்லாம் ஒரு வரில படத்தோட கருவ  எழுத முடியாது. படத்தில விஷயம் நிறைய இருக்கு. விஷயமேயில்லாம நிறைய காட்சிகள் இருக்கு. இந்த படத்தை தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான முயற்சியா நான் கருதியதற்கு காரணம் கதைக்களம், அதிலிருக்கும் அறிவியல் பின்புலம், பெரிய பெயர்கள், மற்றும் உலகளவில் இது ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பு. அதனால் தமிழ் சினிமாவின் உலகளாவிய கனவுகளுக்கான முதல் படியாக இந்த படம் இருக்கப்போகிறதென்ற கருத்து வேறு இருந்தது. இப்படி எந்திரன் மூலம் தமிழ் சினிமாவின் எதிர்கால சாத்தியக்கூறுகள் ஏகப்பட்டவை. அறிவியலின் நன்மை தீமை பற்றி மூன்றாம் வகுப்பு முதல் படித்தும் எழுதியும் வருகிறோம். அதி நவீன அறிவியல் படைப்புகளின் சாத்தியங்கள், தேவைகள், வரம்பெல்லைகள், நன்மை தீமைகள், போன்றவற்றை  பாமரனுக்கும் கொண்டு செல்லும் விதமாக எந்திரன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் இருந்தது. எதிர்பார்ப்புகள் ஒரு 60% பூர்த்தியாகியிருக்கின்றன.

விஞ்ஞானி வசீகரன் ஒரு எந்திரனை உருவாக்குகின்றார். இராணுவத்தில் மனிதர்களுக்கு பதில் எந்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பது வசீகரனின் ஆசை. எந்திரனின் ஆக்கம், தோற்றம் இவையெல்லாம் ஒரு பாடலில் முடிகிறது. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கிறது. வசீகரனைப் போலவே இருக்கிறார் எந்திரன். எந்திரனின் ஞானம், குணநலன்கள் பறைசாற்றப் படுகின்றன காட்சிகளில் மசாலாவுடன்.

உதாரணத்திற்கு மொழிக் கணிணியியல் (language processing) என்பது எந்த ஒரு எந்திரனுக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம். எந்திரனில் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் முகம் சுழிக்க வைக்கிறது. ”டிவியைப் போடு” என்று சொன்னதற்கு எந்திரன் டிவியை அலேக்காக தூக்கி கீழே போடுகிறார். ”கீழே போடு” என்பதற்கும் ”போடு” என்பதற்கும் ”வீசு”, ”எறி” என்பனவற்றுக்கும் இருக்கும் வேற்றுமையை எந்திரன் எப்படி விளங்கிக் கொள்கிறான் என்பது ஷங்கருக்கே வெளிச்சம். அதில் “கீழே” என்னும் வார்த்தை உபயோகப்படுத்தப்படவுமில்லை. ஆனால் டிவியைக் கீழே போடுகிறார். அது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நகைச்சுவை என்பதால் இந்த மசாலா.  நம் பேச்சு வழக்கில் இருக்கும் மொழிக்கும் இலக்கண மொழிக்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரியவைப்பது கூட ஷங்கரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் நன்கு படமாக்கியிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மசாலா தூவி கெடுத்து விட்டார் ஷங்கர். பின்னர் ஒரு உரையாடலில் ”குத்துன்னா குத்திர்றதா” என்று வசீகரன் கேட்க எந்திரன் “அதுக்கு அது தானே அர்த்தம்” என்று பதிலளிப்பது ரசிக்கும் படியாகவும் இருந்தது நம்பும் படியாகவும் இருந்தது. சந்தானம், கருணாஸ் பேசும் சென்னைத் தமிழ் புரியாமல் விழிக்கும் எந்திரனின் குழப்பமும் இதில் அடங்கும். ஆனால் இந்தக் காட்சிகள் சொல்லும் முக்கியமான அறிவியல் விஷயம் மனித-எந்திர இடைவிளைவு (human-robot interaction). அதன் அறிவியல் விஷயங்கள் சொல்லப்படாமலே விடப்பட்டிருக்கின்றன.

அதே போல் பொருத்தியறிதல் (rule of inference) எந்திரத்தில் எப்படி நடக்கும் என்பது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயம். ”கடவுள் இருக்கிறாரா இல்லையா?” என ஒரு விஞ்ஞானி எந்திரனிடம் கேள்வி கேட்கிறார். எந்திரன் “கடவுள் என்பவர் யார்?” என்று அவரிடம் மறு கேள்வி கேட்கிறான். “நம்மை எல்லாம் படைத்தவர் தான் கடவுள்” என்கிறார் விஞ்ஞானி. “என்னைப் படைத்தவர் வசீகரன். கடவுள் இருக்கிறார்” என்கிறான் எந்திரன். நன்றாக படமாக்கப்பட்ட விஷயமிது. நம்மைப் படைத்தவன் என்று பொருள் கொண்டால் கடவுள் இருக்கிறார் என்பது நல்ல வரையறை. இடையிடையே வசீகரன் சனா காதல். ரெண்டு பாட்டு. வில்லன் விஞ்ஞானி எந்திரனின் “neural schema"வைத் தேடி அலைகிறார். பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த நபர் ”அப்படின்னா என்னது அத மட்டும் கழட்டி கொடுக்க முடியாதா என்ன” என்று புலம்பிக்கொண்டிருந்தார். அதன் பயன்பாடு என்ன ஏன் அதனை வில்லன் தேடும் மூலப்பொருளாக இருக்கிறது என்பது படமாக்கப்படவில்லை. (Neural schemaன்னா ”நரம்பியல் வலையமைப்புத் திட்டம்” என்று சொல்லலாமா? #டவுட்டு). புத்தகங்களைப் பார்த்தவுடனே அதிலிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் மனனம் செய்து கொள்வது படமாக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம். அதை டெலிஃபோன் டைரக்ட்ரியை மனனம் செய்வதாக காட்டி நன்றாக படமாக்கியுமிருந்தார் ஷங்கர். ஆனால் பரீட்சைக்கு பிட் அடிக்கவும் அதை பயன் படுத்துவதாக படமாக்கப்பட்டது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட மசாலா. நல்ல விஷயங்கள் மட்டும் ஊட்டப்பட்ட எந்திரன், ஐஸ்வர்யா காப்பியடித்து பரீட்சை எழுத ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?

எந்திரவியலின் விதிகள் என்று ஐசக் அசிமோவ் சொல்லியிருப்பது மூன்று
  1. எந்திரன் மனிதர்களை காயப்படுத்தக்கூடாது. தமது செயலின்மையாலும் மனிதர்களை காயப்படுத்தக்கூடாது.
  2. எந்திரன் மனிதர்களின் கட்டளையைச் செய்ய வேண்டும். அந்த கட்டளைகள் முதல் விதியை மீறாதிருக்க வேண்டும்.
  3. முதல் விதியையும் இரண்டாம் விதியையும் மீறாமல் எந்திரன் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளலாம்.
தனது எந்திரனை நாட்டின் சேவைக்காக இராணுவத்திற்கு அனுப்புவதற்காக திட்டமிடுகிறார் வசீகரன். எதிரிகளை அழிக்க பயன்படும் என்பதால் அது முதல் விதியை மீறும்படியாக வடிவமைத்திருக்கிறார். உணர்ச்சி இல்லாத எந்திரனால் மனித குலத்துக்கு ஆபத்து. அதனால் உணர்ச்சியூட்ட முனைகிறார்
வசீகரன். #முதல் பாதி

இரண்டாம் பாதியில் சில சுவாரசியமான விஷயங்களுக்கு ஷங்கர் நம்மை இட்டுச் செல்கிறார். உணர்ச்சியூட்டினால் எந்திரனுக்கு என்னவாகும்? நாலு டூயட், ஐஸ்வர்யா ராய், ரஹ்மானின் பாடல்கள் இவற்றைக் காட்ட கண்டிப்பாக காதல் தேவைப்படுகிறது. அதனால் சேர்க்கப்படுவது மசாலா. எந்திரனும் ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறார். பாக்யராஜ் ஒரு படத்தில ஒரு காள மாட்ட அடக்கிறதுக்கு பசு மாட்ட முன்னால கொண்டு வந்து நிறுத்துவாரு. இவ்வளவு தான் விஷயம். வசீகரனும் இதையே செய்திருக்கலாம் ஆனால் அங்கு தான் ஆரம்பிக்கிறது ஷங்கரின் கரம் மசாலா காரம். எந்திரனை ஐஸ்வர்யா விரும்பாமல் போவதும், அவர் இராணுவத்திற்கு உதவாமல் போவதும், அதனால் அழிக்கப்படுவதும், வில்லன் கையில் சிக்கி அழிக்கும் விஷயங்கள் சேர்க்கப்படுவதெல்லாம் கதை பில்டப். ஆனால்  எல்லாவற்றுக்கும் தலையாயது எந்திரனே எந்திரனைப் படைக்க ஆரம்பித்தால் என்னவாகும்? ஷங்கர் பிரகாசிப்பது இங்கு தான். அவருக்கும் அதுதான் அவருடைய ஸ்கோரிங் பாயிண்ட் என்று தெரிந்திருக்கிறது. கிராஃபிக்ஸ் உதவியுடன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அந்த அரை மணி நேரம் படத்திற்கு பெரிய பலம். இந்த கிராஃபிக்ஸ் விஷயங்களுக்காகவே சன் டிவி செய்த மார்க்கெட்டிங் டார்ச்சர்களை மன்னிக்கலாம்.

எந்திரன் என்ன ஆனான். அவனால் வந்த நன்மை தீமைகள் என்ன? #இரண்டாம் பாதி

மேற்சொன்ன இவ்வளவு விஷயங்களும் ஷங்கரின் வழக்கமான தமிழ் சினிமா சுவாரஸ்யங்கள். இவற்றுடன் சேர்ந்திருப்பது ரஜினிகாந்த் என்னும் ஒரு பெரும் புள்ளி. படத்தைக் கொண்டாட வைக்கும் விஷயமும் அதுவே. இது வரை ரஜினிகாந்த் என்னும் ஆளுமை செய்யும் மேனரிசங்கள் எல்லாம் எப்படி ஒருவித கமர்ஷியல் ஹீரோயிசமாக இருந்ததோ எந்திரனுக்குப் பிறகு அவற்றுக்கு ஒரு அறிவியல் பின்புலம் வந்து சேர்கிறது. தலைவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது என்று சொன்னவர்களுக்கு எந்திரனில் கிராஃபிக்ஸ் பதிலடி காத்திருக்கிறது. மற்ற ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்த பிறகு தலைவர் பஞ்ச் டயலாக் பேசுவதைக் குறைத்துவிட்டார். ஆனால் அவரது மேனரிசங்கள் லாஜிக் வழுக்கல்களாக இருந்த காலம் போய் இப்பொழுது அவற்றுக்கு நம்பத்தகுந்த பின்புலன்கள் சேர்க்கப்படுகின்றன. கவனிக்கப்பட வேண்டிய நிராகரிக்க முடியாத முன்னேற்றம் இது. விஜயகாந்த் செய்தால் காமெடி ரஜினிகாந்த் செய்தால் ஹீரோயிசமா என்று நிறைய பேர் கேட்கின்றனர். எந்திரன் தான் பதில் என்று அவர்களுக்கெல்லாம் தைரியமாகச் சொல்லலாம். வசீகரன் சனாவைக் காப்பாற்ற மண் தூவி விட்டு ஓடுவதும், சிட்டி எந்திரன் அடித்து தூள் பண்ணுவதும் இதற்கு சாட்சி. சனாவின் முத்தம் பெற்ற சிட்டியின் ரியாக்‌ஷன், சிட்டியிடம் பொறாமை கொள்ளும் வசீகரனின் ரியாக்‌ஷன், குழந்தையைக் கொஞ்சும் சிட்டி என தலைவரின் எமோஷனல் முகங்கள் படமெங்கும். தலைவர் நடித்திருக்கிறார். இரயில் வண்டியின் பக்கவாட்டில் ஓடுவதும், சண்டையின் போது ஒரு வாசல் வழியாக தாவி மறு வாசல் வழியாக வந்து அடிப்பதும், அனகோண்டா, கோளம், ட்ரில்லர், டவர் என்று வேறு வேறு தோற்றங்களில் தன்னை மாற்றி சுடுவதும் விஷுவல் ட்ரீட். அதிலும் எந்திரன் உருவம் பெற்றதும், ஸ்டைலாக நடப்பது, வசீகரன் கண்ணாடியை வழக்கம் போல் ஸ்டைலாக சுழற்றி எந்திரன் கண்ணில் மாட்ட முடியாமல் திணறுவது, எல்லாவற்றுக்கும் மேல் எந்திரன் சிரிக்கும் அந்த ட்ரேட்மார்க் வில்லத்தன சிரிப்பு.... போய் படத்த பாருங்கப்பா... ரஜினி அன்லிமிடட். ரஜினி ரசிகனுக்கு தேவையான ஒவ்வொரு விஷயமும் அழகாகத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் கண்டிப்பாக குறைந்தது மூணு தடவை படத்தைப் பார்க்கலாம். நான் பார்த்ததும் இந்த ஒரு பத்திக்காகவே தான் ;)

ஐஸ்வர்யா பாடல் காட்சிகளில் நன்றாக ஆடியிருக்கிறார். மத்தபடி அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு. சிட்டியிடம் காதல் பற்றி விளக்கம் கூறும் காட்சிகளில் கொஞ்சம் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானத்தை இதில் தேடினாலும் கிடைக்கமாட்டார். கருணாஸுக்கும் அதே நிலைமை. டானி டெங்சோம்ப்பா நல்ல தேர்வு. அலட்டாமல் வந்து போயிருக்கிறார். ரஹ்மானின் இசையை பாடல்களிலும் கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் ரசிக்கலாம். ஆனால் ரஜினிகாந்த், கிராஃபிக்ஸ் இவற்றைத் தாண்டி ரஹ்மானைக் கொஞ்சம் தேடித் தேடித்தான் கேட்க வேண்டியிருக்கிறது. விடுபட்ட விஷயங்களும் எந்திரனில் அதிகம். எப்படி உணர்ச்சிகள் எந்திரனில் சென்று சேர்கின்றன? (harmone simulations package மட்டும் போதுமா?), தொடு உணர்வியல் (haptic technology) போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர் போன்றவற்றை படமாக்கியிருக்கலாம்.

எந்திரவியல் என்பது நவீன அறிவியலின் மகத்தான விஷயம். அதன் வரம்பெல்லைகளும், நன்மை தீமைகளும் மசாலாவோடு படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் தேவைகளையும், சாத்தியங்களையும் ஷங்கர் நன்கு கையாளாமல் விட்டுவிட்டார். அல்லது அவை படமாக்கப்படவில்லை. படத்தில் சொல்லியிருக்கும் அறிவியல் விஷயங்களை விடவும் படத்துக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் விஷயங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியவை. ஆங்கில ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே பார்த்திருந்த கிராஃபிக்ஸ் தமிழ் சினிமாவுக்கு முதன் முறையாக வாய்த்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். எங்கெல்லாம் மசாலா வாசம் நமக்கு தெரிகிறதோ அங்கெல்லாம் படம் வெறுமையாக இருக்கிறது. அறிவியல் விஷயங்களைச் சொல்வதால் நம்புவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தலைவர் என்னும் ஒற்றை வார்த்தையில் படம் நகர்கிறது. கதை நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. அதன் அறிவியல் பின்புலத்தில் தான் ஷங்கர் தமது மசாலாவை அதிகமாக தூவியிருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த பெரும் பெயர்கள் அவரை காப்பாற்றியிருக்கின்றன. நல்ல தரமான படம் என்று எந்திரனைக் கண்டிப்பாகச் சொல்ல முடியாது. மசாலாவுடன் கூடிய ஒரு நல்ல அறிவியல் பின்புலம் அதற்கிருக்கிறது.

படம் பாத்திட்டு வந்ததும் அம்மா சொன்னது ”எந்திரன் புண்ணியத்தில காலைல வீட்ல எல்லாருமே சீக்கிரம் எந்திச்சு குளியல் போட்டாச்சு”.

பண்டிகை நேரம்ல அப்படித்தான் இருக்கும்.

Thursday, September 09, 2010

நிர்வாணம்

முகத்தை
வியர்வையில்
நனைத்திருக்கிறேன்

கால்கள்
நடந்த பாதையின்
சுவடுகளை
கொண்டிருக்கின்றன

கைவிரல்களில்
இருக்கிறது
எண்ணிக் களைத்த
கதைகளின் கதை

நிர்வாணம் மறைக்கும்
ஆடைகளில் இருக்கிறது
போலிகளின் கர்ப்பப் பை.

உடை மாற்றுகையிலும்
உடல் கழுவுகையிலும்
சிறிது நேரம்
மீறி வெளிப்படலாம்
நிர்வாணம்.

நிர்வாணப்படாமல்
கலக்கமுடியாது
பிறப்பு நிகழாது.

Monday, September 06, 2010

ஒரு கூடு

பார்வை குறுக்கும்
ஜன்னல் சட்டகங்களிலோ
அறை மூடும் கதவின்
அடர்த்தியிலோ
இருந்திருக்கலாம் ஒரு கூடு!

இல்லை,

அத்துவானக் காட்டின்
கிளைகளில்
முட்டையொன்றின்
சஞ்சாரத்திற்க்காய்
எழுப்பப்படலாம் ஒரு கூடு!

Friday, June 25, 2010

மழைக்காதல்

அந்த மழைநாளின் 
மின்னலின் வெளிச்சத்தில்
மழையின் விரல்களின் நடுவே தான் 
உன்னைப் பார்த்தேன்.

உன்னைக் காணாமல்
மின்னல் என்னும் விக்கலுடன்
அழுகிறது வானம்
தூறலைப் பெருமழையாக மாற்றி.
சீக்கிரம் வெளியே வா!

பாதணிகளின்றி நடந்து செல்கிறாய் நீ
கால்தடங்களாகவும் கொலுசொலிகளாகவும்
உடன் வருகிறது காதல்.

மழையில் நீட்டியபடி உள்ளங்கை நனைக்கிறாய்
கைகளில் நெளியும் ரேகைகளென
காதலும் நனைந்து கோண்டிருக்கிறது.

உன்னைப் பார்த்தபடி 
வானில் நடக்கும் மேகங்கள்
வழிமாறி மோதுகின்றன
மழையென தம் காதலுதிர்த்து.

அடிக்கடி கண்சிமிட்டுகிறாய் நீ
அதில் துவங்கும் மின்னலுடன்
பொழியும் மழைநீர் தான் 
என்னை நனைக்கிறது.

உன்மீது காதல் கொண்ட 
மர இலைகள் 
நீ வந்த பின்பு தூவுகின்றன
சேமித்து வைத்த மழைத்துளிகளை!

உன் பாதம் தொட்ட மழைத்துளி
பரிகசிக்கிறது உன் தலையில் முடிந்த
மழைத்துளியைப் பார்த்து!
உன்னைக் கடந்த தொலைவிற்காக

எல்லாவற்றையும் கண்டு
கண்மை கரைசல் நீங்கலாக
உன்னைக் கரைத்துப் பார்த்து முடியாமல் 
விழுந்து கொண்டிருக்கிறது மழைநீர்!

Thursday, June 24, 2010

நான் நீயாய்

எப்பொழுதோ
கவனம்
என்ற சொல்தாங்கிய
கடிதத்தில்
அக்கறையாய் இருந்தேன்

நேற்று எதிர்பார்ப்பின்
துகள்கள் பதுங்கிய
சாலையில்
மின்விளக்கின் ஆறுதலாய்

பின்
இறுதி வடிவமென்று
காதணி அலைதலிலும்
கைக்குட்டை ஈரத்திலும்
வெறுப்பாய்

எப்பொழுதேனும்
பின்புறம் தெரியாத
மேகத்தின்
அக்கறை தெரியாத
கடற்காலத்தில்
நான் நீயாய்.

Wednesday, June 23, 2010

கதவு

பிரிவின் சட்டங்களைக் கொண்ட
கதவொன்று வீட்டிலிருக்கிறது
நீ நான் என்பவர்களுக்கெல்லாம்
அடைத்துக் கொள்ளும் கதவு

எல்லைகள் இல்லையென்றறிந்து
தேடித் திறக்கையில்
’தள்ளு’, ’இழு’ என்னும்
ஒட்டிகள் இல்லாமல்
ஒருபக்கமாகவே
திறந்து கொள்ளும் கதவு

Tuesday, June 08, 2010

தொலைதூரக் கவிதைகள்

இரவின் துளிகள் வழியும்
நினைவின் சட்டங்களில்
உன் அசைவுகளின்
பலுக்கல்களாக சேர்ந்திருக்கின்றன
சொற்கள்

வரி உருப்பெறும்
ஒவ்வொரு முறையும்
உன் அசைவுகளின்
வாசிப்புகளிலும்
உன் அருகாமையின்
வடிவங்களிலும்
தங்களைத் தாங்களே
திருத்திக்கொண்டு
தீர்ந்து போகின்ற
சொற்கள்

மலட்டு முயற்சிகளில்
தூர்ந்து போய்
தொலைதூரக் கவிதைகளை
மட்டுமே
எழுதிப்போகின்றன
உன் அசைவுகளின்
பலுக்கல்களாக சேர்ந்திருக்கும்
சொற்கள்

Friday, June 04, 2010

பத்து பத்து

ஏக்கப் பார்வையுடன் கூடிய
பதற்ற அசைவுகளுடன்
பிரிவின் கணங்கள் பொருந்திய
வார்த்தைத் தெறிப்புக்களை
இருவருக்கான இடைவெளியெங்கும்
இட்டுச் செல்கிறாய் நீ

விழித்திரை விலகும்
காட்சிகளின் இழப்பு
தீர்க்கவியலா புதிரொன்றை
ஒப்புமைக்கான தலையசைவாகவும்
வியப்பு, இயலாமை, புரிதலுக்கான
உதடு குவிப்புகளாகவும்
நீட்டித்துச் செல்கிறது

கணங்களைக் கைப்பற்ற
முடியாத கடிகாரமொன்று
பத்து பத்திலேயே
நின்று கொண்டிருக்கிறது.

Thursday, June 03, 2010

ஒரு கண்ணீர்த்துளியும்

பொய்சொன்ன பொழுதுகளின்
உறுத்தும் நீட்சிக்காய்
ஒரு கண்ணீர்த்துளியும்
பொய்யாகவே பிறந்து விடுகிறது

நனைதல்

துணைக்கரம் பிடித்து
கால் நனைத்திருக்கிறேன்
மணல் சேகரிப்பின்
புறக்கணிப்பிற்கு
அரைக்கால் சட்டையைத்
தீர்வாக்கியிருக்கிறேன்
கால் நனைத்தவரை
ஈரம் மட்டுமே
மீண்டிருந்தது.
வளர்ச்சி விகிதங்களால்
நீந்தத் தெரியுமென்பதால்
முழுவதும் நனையலாம்.
ஆனாலும்
கடலின் ஆழமும்
நீரின் உவர்ப்பும்
உவப்பானதாயில்லை.

யாருமற்ற

உனக்கான யாருமற்ற
பொழுதுகளில் என்னை
நிரப்பி பயணிக்கிறேன்
தனிமை துடைத்து
மௌன வெளிகளைப்
பங்கிட்டுக் கொண்டாலும்
உன்னுலகத்தின் யாதுமாக
விழையும் முயற்சிகளில்
தோற்று யாருமற்ற
ஒருவனாகவே திரும்புகிறேன்.

Wednesday, June 02, 2010

புகைப்படப் பெண்

முந்தானைத் தூசியைத்
தட்டி விட்டேன்
புருவ வளைவினைத்
தடவிப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
இடைவரை இறங்கிய
பார்வையில் காமமில்லை
அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்
புகைப்படப் பெண்
சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

Monday, May 31, 2010

ஆழம்

கருத்த நதிதன்னில் வெளிச்சம் பரப்பி
மிதந்து கோண்டிருந்த நிலவினை
மறைத்துக் கொண்டிருந்தது
கரைமரமுதிர்த்த சருகு.
கல்லெறிந்து சருகுநகர்த்தேன்
நிலவும் கலங்கியது.
மூழ்கிய கல்லது
ஆழம் உணர்த்தவே
இடம் பெயர்ந்தேன்.
நிலவு சருகினை
மறைக்கலாயிற்று.

வெங்காயம்

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை
’வெங்காயம்’ என்றார்கள்
உரித்தவனுக்கு மட்டுமாவது
தெரிந்திருக்க வேண்டும்
வெங்காயமும் கண்ணீரும்

Wednesday, May 26, 2010

ஓடமொன்று

ஓடமொன்று ஓடிக்கொண்டிருந்தது
தவறு மிதந்துகொண்டிருந்தது
தவறுக்கு எள்ளி நகையாடினார்கள்
தவறு தவறாகவே இருந்ததனால்
ஓடமொன்று ஓடிக்கொண்டேயிருந்தது

Thursday, May 20, 2010

மொழியுணர்வு

’அ’, ‘ஆ’
கைபிடித்து எழுத்துப்பழக்கிய
அம்மாவிடம்
F1 அழுத்தினால் help
என்று தொலைபேசியில்
சொல்லும்பொழுது
F1ம் helpம் புரியாததற்கு
மொழியுணர்வையும் காரணமாக்கலாம்

பூதங்கள்

ஏழு கடல் எட்டிச் சென்று
நிலம் மிதித்து, காற்றுடைத்து
வெளி நிறைத்த பொழுதினில்
கடல், நிலம், காற்று, வெளி
அனைத்தும் நெருப்பாக இருந்தது

மகரந்தம் மறைத்த பூ

மகரந்தம் மறைத்த பூவிற்காக
குருவி ஒன்று
உமிழ்ந்து விட்டுச்சென்ற
இரட்டை அர்த்த வசனத்தில்
என்னை உணர்கிறேன்

Tuesday, May 18, 2010

பூசாரி

50 வயதுக்கு மேற்பட்ட
ஆட்களுக்கான தனி
இலைகளில் கூடுதல்
பிரசாதமிடும்
வரம் தராத
பூசாரிக்காகவும்
தினமும் கோயிலுக்குச்
செல்கிறேன்.

வளர்ந்த கதை

ஒரெழுத்தில் புத்தகமொன்றில்
எழுதி வைத்த வார்த்தையொன்று
வளர்ந்து நிற்கிறது கவிதையாக

அவன் அவள் அது
யார் வேண்டுமானாலும்
படிக்கலாம் அந்த வார்த்தையை

வளர்ந்த கதை தெரியும்
வரை கவிதை
தன்னைத் தானே படித்துக்
கொண்டிருக்கும்

Tuesday, April 20, 2010

ஆசை

அவன் அப்படி இருந்திருக்கக்கூடாதென்று
வருத்தப்படுகிறேன்
அவன் இப்படி இருக்க வேண்டுமென்ற
ஆசை உடன் சேர.
என் வருத்தங்களுமாகவும் ஆசைகளாகவும்
கழிகிறது அவன் வாழ்க்கை


கடிதமொன்று

நாளை வருவதாக அவன்
எழுதியிருந்த கடிதம்
நேற்று தான் கிடைத்தது.

கடிதமும் நாளையும்
அப்படியே இருந்தன.
நேற்றும் அவனும்
நேற்றோடு போயிருந்தார்கள்.

அருஞ்சொற்பொருள்

நண்பன்,
நல்லவன்,
வல்லவன்,
கெட்டவன்,
வயதானவன்,
மனம் பிறழ்ந்தவன்,
மூடன்,
கோபக்காரன்
என அந்தச் சொல்லுக்கான பொருளாக
நான் குழந்தையிடம் சொல்பவற்றுள்
சில, பல அல்லது அனைத்தும்
உங்களையும் சில சமயம்
குறிக்கலாம்.

சொற்களாலான கடிதம்

நிறையவே நினைத்தும்
சேர்த்தும் மடித்தும்
ஒட்டியும்
வந்து சேர்வனவற்றுள்
கிழிக்கப்படும் முன்
கிஞ்சித்து அர்த்தமுணர்த்தினாலும்
ஒட்டியதும் மடித்ததும்
சேர்த்ததும் நினைத்ததும்
நிறையவே
இருந்து விடுகின்றன.

ஈரம்

முன்னெப்போதோ புனித நீர் என்று
குடுவையில் அடைத்துக்
கொண்டுவந்த ஞாபகமிருக்கிறது.
குடுவையைக் காணவில்லை.
ஈரம் மட்டும்
முற்றத்து நீர் தேக்கத்தில்.

ஆயிரம் காலத்து பயிர்

ஆயிரம் காலத்துப் பயிர்
என்று நன்றாகத் தெரியும்
இன்னும் எத்தனை அறுவடைக்குத்
தாங்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

காடு தன் வரலாறு

இரு நதிக்கண்களுக்கிடையேயான
நெற்றிப்பரப்பில்
ஒரு பொட்டாய்
இடப்பட்டிருக்கிறேன்
நான்.

பொழிதல், சதுப்பு,
ஊசியிலை எனப்படுவனவற்றுள்
நான் பொழிதல்.
விலங்கினங்களுக்கான
வசதியானதொரு
புகலிடம்.

இலையுதிரென்றால் இலையுதிர்த்து,
கோடையென்றால் சூடடைந்து,
காரென்றால் இலைக் குடைபிடித்து
குளிரென்றால் பனிப் போர்வையாகி,
கால நிர்ணயம்
செய்து கொண்டே வாழ்கிறேன்.

என் மரவிரல்களின்
இலைநகங்களில்
சில சமயம்
ஈரச்சாயம்
பூசிச்செல்லும்
பெருமழை.

வெட்டப்பட்ட
சந்தன விரல்களின்
காயத்தழும்புகளில்
நுகர்கிறேன்
வாசனையை!

பறவைகளின் எச்சங்கள்
நெருஞ்சி முற்விதைகளுடன்
விழுவதறியாது
பசுமையுணர்த்துவேன்
நான்.

என் தோல்களின்
சில மயிர்களை
கால்களால் சவரம் செய்து
பாதைக் கீறல்களை
விட்டுச் செல்கின்றனர்
சிலர்.

ஆடையணியா என்னிடம்
அடைக்கலம்
புகுகின்றார்கள்
துறவிகள் சிலர்
காவி வேட்டியுடன்.

காடு தன் வரலாறு
கூறுகையில் ஒரு
பட்டமரம், அதன்
மேலிருந்த ஒற்றைப் பறவை
நீங்கலாக நான் மட்டுமே
இருந்தேன்.

தேடல்

தொலைந்தவற்றுக்கும் தொலைப்பதற்கும்
சேர்த்து நிகழ்கிறது தேடல்.
தேடல் மட்டுமே சொந்தமென்று
சொல்லிவிட்டதால்.

ஊரெங்கும் தேடல்கள்
மண் போல் இருந்தும்
இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு நிலச்சரிவோ
பூகம்பமோ
மணல் லாரியோ
வரும் வரை.

Saturday, January 30, 2010

முடியவில்லை

முடியவில்லையென்று
சொன்ன பொழுதெல்லாம்
உண்மையில் ஒன்றுமே
முடிந்திருக்கவில்லை

Monday, January 25, 2010

விதவைகள்

நெருஞ்சிப்பூக்கள்
பறித்து ஒரு விதவை
சுமங்கலியாகிறாள்.

காட்டில் இப்படியாக
எண்ணற்ற விதவை
நெருஞ்சிச்செடிகள்
முற்களுடன்.

Thursday, January 21, 2010

பல்சர் பின்சீட்

எட்டாம் வகுப்பு காயத்ரியும்
கல்லூரி கவிதாவும்
அடிக்கடி காலியாயிருக்கும்
பல்சர் பின்சீட்டை
நிரப்பிவிட்டு போகிறார்கள்!

Wednesday, January 20, 2010

கிழித்தெரிந்த கவிதைகள்

ஒரு கவிதை எழுத நினைத்து
வார்த்தைச் சேகரிப்பில்
திளைத்திருந்தேன்.

துளிகள் பெருமழையாகவும்
பெருமழை கடலாகவும்
மாறிக்கொண்டேயிருந்தன.

சரிப்பட்டு வராதென
தாள்களில்
சேமிக்கலானேன்.

சாக்கடை நீர்
நனைத்த தாள்களைக்
கிழித்தெரிந்தேன்.

கிழித்தெரிந்த தாள்களில்
மட்டும் எண்ணற்ற
கவிதைகள் கொட்டிக்
கிடந்தன.

எழுத்து

முதன் முதலில் எழுதியது
பல்ப்பத்தால்.
கருப்பு பலகையில்
வெள்ளைச் சுண்ணாம்பு
தெரியும் என்பது மட்டுமே
அறிந்து கொண்டது.
என்ன எழுதினேன்
எனத் தெரியாது.

பிறகு பென்சிலால்.
எழுத்து திருத்தமடைந்ததாக
நம்பியதுண்டு.
எழுத்துப்பிழைகளுக்கு
அடி வாங்கிய ஞாபகமும்
இருக்கிறது.

பேனாவில் விரல் கோர்த்து
எழுதத்துவங்கிய நாட்களில்
முதல் ரேங்க் வாங்கியிருக்கிறேன்.
நண்பர்களுடன் பகிர்ந்து
கொண்டதும்
நினைவிலிருக்கிறது.

இப்பொழுது தட்டச்சும்
காலம்.
எழுதினேன் என
இனி கூற
முடியாதோ?

Monday, January 18, 2010

கடிகாரங்கள்

சுவரில் மாட்டப்பட்டும்
கைகளில் சுற்றப்பட்டும்
எண்ணற்ற கடிகாரங்கள்
காலம் காட்டுகின்றன.
குழந்தைகளுக்கான கடிகாரங்கள்
மட்டும் ஓடுவதேயில்லை.

இருளின் ஜ்வாலைகள்

இருட்டின் அடியாளாய்
நுழைகிறது புயல் காற்று
மின்வெட்டின் நீளம்
படர்ந்த இரவில்.

புயல்காற்றின் தீக்குச்சி ஒன்று
வெற்று அறையில்
ஒளி நிறைக்கும்
மெழுகுவர்த்தியைத் தீண்ட,
குச்சியின் வீச்சு ஓங்கிய
நொடிப்பொழுதுகளில்
மெல்ல அணைந்து
இருளுக்குள் நுழைகிறது
மெழுகுவர்த்தி.

பின் அணைத்த தீக்குச்சியும்
எரியும் மெழுகுவர்த்தியும்
இருளின் ஜ்வாலைகளில்
தெரிகின்றன.

Monday, January 11, 2010

கொலை

நான் செய்யும் காலக் கொலைகளை
என் எதிர்காலம் விசாரித்துக்கொண்டிருக்கிறது

ஒரு பழம்

அம்மா அப்பாவைச்
சுற்றிய விநாயகனும்
மயிலில் உலகு
சுற்றிய முருகனும்
ஏழை அனாதைக்குச்
சொல்லவில்லை
என்ன செய்தால்
ஒரு பழம்
கிடைக்குமென்று.
நாரதர்கள் மட்டும் பழங்களுடன்
அலைந்துகொண்டிருக்கிறார்கள்!

நிலவு

நேற்றிரவு நிதர்சனம்
தொலைக்க வேண்டி
நிலவைப் பார்க்கலானேன்.

உற்று நோக்கையில் தெரிந்தது
நிதர்சனம் உறங்கிக்கொண்டிருந்தது.

நின்று போன கடிகாரம்

நின்று போன கடிகாரமொன்றுக்கு
உயிரூட்டப்படுகிறது
நொடிப்பொழுதுகளின்
செலவறியாமல்!

Friday, January 08, 2010

பொங்கல்

ஒரு கெடா
இரண்டு கோழிகள்
கொல்லப்பட
ரத்தச்சிவப்பு பானையில்
அவைகளுக்கிடப்பட்ட
வாய்க்கரிசியில்
பொங்குகிறது
எங்கள் குடும்பத்திற்கான
பொங்கல்!

Wednesday, January 06, 2010

வேற்று மொழிக் கவிதையொன்று...

அந்தப் புத்தகத்திலிருக்கும் கவிதையை
நீ படித்திருக்க வாய்ப்பில்லை

நீ
மரபுக்கவிதைகளின் வித்தகன்
அமாவாசை இரவின்
நிலவு ரசிகன்
மௌன மொழியில் தேர்ந்த
மேடைப்பேச்சுக்காரன்
சொல்லியல் பொருளியலில்
முதுகலை வரை பயின்றவன்
இருந்தும் அந்தக் கவிதையை
நீ படித்திருக்க வாய்ப்பில்லை

வேற்று மொழிக் கவிதையைப்
புரிந்துகொள்வதற்கான
சாத்தியக்கூறுகளை
உன் மொழிக்கான
இலக்கணம் இல்லாததாக்கியிருக்கிறது
அவ்வளவே!

Saturday, January 02, 2010

கவிதை எழுதுவது எளிதல்ல

ஒரு நாவல் எழுதுவது போல
கவிதை எழுதுவது எளிதல்ல.

கவிதை எழுதவதற்கான
குறிப்புகளைச் சொல்கிறேன் கேள்.

குறிப்பு #1: உன்னைத் தெரிந்தவர்களுக்கு நீ
தெரியாமல் இருக்க வேண்டும்.

குறிப்பு #2: தலையில் பாகையுடனும்
முறுக்கு மீசையுடன்
எதிர்படுபவனைக் கவனமாக தவிர்க்க வேண்டும்.

குறிப்பு #3: இரு கைகளிலும் எழுதத் தெரிந்திருந்தால்
நிறைய எழுதலாம்.

நானிப்படி சொல்லிக்கொண்டிருக்கும் சமயத்தில்
அகந்தை அல்லது அனுபவம்
தெரிகிறதாவெனப்பார்.

இப்பொழுது நீ நினைத்தது
எனக்கு எப்படி தெரிந்தது என்னும்
கேள்வி எழவேண்டும்.

இனிமேல் தெரியாமலிருக்க
உத்திகளை வளர்த்துக் கொள்.

ஒரே ஒரு எச்சரிக்கை!
சிவப்பு விளக்கு
கவிதைகள் மட்டும்
விரும்பத்தகாததாகவே இருக்கின்றன.

புதுப்போர்வை

சென்ற புத்தாண்டுக்கு
வாங்கிய போர்வையில்
நிறைய மாற்றமிருந்தது.
முதல் மடிப்பிற்கான
தடம் தெரியாமல்
உபயோகப்படுத்தலின்
தடயமாக மிகக்
கசங்கியிருந்தது.
பத்துமுறையாவது
அடித்து துவைக்கப்பட்டிருந்ததில்
மணமிழந்து, சாயமிழந்து
கொஞ்சம் கந்தலாகியிருந்தது.
”புதுசு” என்று
இனி அதனை
கூறமுடியாதெனினும்
முதல் முறை
கை கால் போர்த்துகையில்
இருந்த அந்நியம் இல்லாமல்
நிறையவே பழகியிருந்தது.

Friday, January 01, 2010

நேர்கோடு

திட்டமிடாமல் நிகழ்ந்ததொரு
தேடலில்
வேண்டியதை அடைந்துவிட்டப்பின்
எப்படி என்பதாய்
நீள்கிறது அந்த நேர்கோடு.
நீளமிகுதியில்
கூட்டல், கழித்தல்
அல்லது பெருக்கல்
போன்றவற்றுள்
கணத்திற்கேற்ற ஒன்றால்
என்றேனும் ஒருநாள்
வளையமாக்கப்பட்டும்
பின் ஒரு குழியில் இட்டும்
புதைக்கப்பட்டிருக்கும்.